Monday 31 March 2014

அட்டாக் - 4

அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5

எக்ஸ்பிரஸ் என்றால் முன்னாள் பத்திரிக்கை அல்ல...

கேட்வால்வு என்பது கதவின் வாழ்க்கை அல்ல...

பப்ளிசிட்டி என்பது கொழுக் மொழுக் ஊர் அல்ல...

துர்வாசர் என்றால் துரு பிடித்த வாசர் அல்ல...

எலாஸ்டிக் என்பது ஒரு குச்சி அல்ல...

தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

எந்த பெண் ஓய்வு என்பதை எவரெஸ்ட் என சொல்லக்கூடாது...

சிம்லா என்பது சிம்கார்டை பற்றிய சட்டம் அல்ல...

பூடான் என்றால் பூ வைத்த தலைவன் அல்ல...

ஜாடியை கண்டுபிடித்த இடம் ஜார்க்கண்ட் அல்ல...

தெலுங்கானா என்பது தெலுங்கு கானா பாட்டு அல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

இன்வெஸ்டிகேஷன் என்பது முதலீடு பற்றிய விசாரணை அல்ல...

இமிக்ரேஷனில் மண்ணெண்ணை வாங்க முடியாது...

டிரான்ஸ்போர்ட் என்றால் மாற்றலான கோட்டை அல்ல...

மெஸ்மரைஸ் என்பது மெஸ்ஸில் கிடைக்கும் சோறு அல்ல...

லாக்-அப் என்பது மேலே பூட்டுவது அல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

பார்"லிமெண்ட்டிற்குள் பார் இருக்காது...

சட்ட"சபைக்கு ஜிப்பா போட்டும் போகலாம்...

மேல் சபை மொட்டைமாடியில் இருக்காது...

சபாநாயகர் போல் சபாவில்லன் கிடையாது...

அரசுக் கொறடாவால் ஆணியை பிடுங்க முடியாது...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

"ஆப்"கானிஸ்தான் என்பது அரை நாடு அல்ல...

பா"கிஸ்"தான் என்பது முத்தம் தரும் நாடல்ல...

மாஸ்கோ என்றால் கூட்டமாக போவது அல்ல...

ஹா"லந்து" என்பது கிண்டலடிக்கும் நாடல்ல...

டெக்"ஸாஸ்" உண்ணக் கூடிய ஸாஸ் அல்ல...


தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

போராட்டம் என்றால் போரில் ஆடுவது அல்ல...

பெல்பாட்டம் என்றால் மணிக்கு அடிப்புறமல்ல...

கோலாட்டம் என்றால் குச்சி ஆடுவது அல்ல...

ஏரோட்டம் என்றால் காற்று ஓடுவது அல்ல...

பின்னூட்டம் என்றால் ஊட்டம் மிகுந்த ஊசியல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

வார்த்தை என்பது தை மாதம் நடந்த போர் அல்ல...

ரம்பை என்றால் ரம் இருக்கும் பை அல்ல...

குடுவை என்பது கொடுப்பதா வைப்பதா? ...

திருக்கை என்றால் மரியாதையான கை அல்ல...

கிழமை என்பது வயதான மை அல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


நம்பிக்"கை"யில் நகம் வளராது...

தும்பிக்"கை"யில் விரல்கள் இருக்காது...

வழுக்"கை"இளநீரிலும் இருக்கும்...

சேர்க்"கை"என்பது நாற்காலியின் கை அல்ல...

அறிக்"கை" என்பது சிரங்கு வந்த கை அல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

பெண்மை என்பதால் பேனாவில் ஊற்ற முடியுமா?

உண்மை என்றால் அது உனது மை ஆகுமா?

வாய்மை என்றால் அது லிப்ஸ்டிக்கை குறிக்குமா?

கடமை என்பது கடையில் விற்கும் மையா?

உரிமை என்றால் மையை உரித்து பார்ப்பதா?


தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

கழுத்தில் கட்ட முடியாத டை "ஓடை"

மூக்குடன் சம்பந்தப்பட்ட டை "வாடை"

நாம் உண்ணக்கூடிய டை  "சீடை"

உயிர் வாழ்பவர் அமர விரும்பாத டை "பாடை"

எப்போதும் நிற்காத டை "நடை"


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

வெஜிடேபிள் என்றால் சைவ மேஜை அல்ல...

கோல மாவில் தோசை ஊற்ற முடியாது...

சப்"பாத்தி"யில் கீரை வளர்க்க முடியாது...

நான் ரொட்டி சாப்பிடுபவர் நான் வெஜிடேரியன் அல்ல...

அதி"ரசத்தை" சோற்றில் ஊற்ற முடியாது...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

ரிஷிமூலம் என்றால் மூலம் வந்த முனிவர் அல்ல...

கனிமொழி என்றால் பழங்களின் பேச்சு அல்ல...

பைரவன் என்றால் பை வைத்திருப்பவர் அல்ல...

தங்கபாலு என்றால் தங்கத்தில் செய்த பந்தல்ல...

ஸ்டாலின் என்றால் ஸ்டாலுக்குள் இருப்பதல்ல...


தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


வீட்டு ஹாலில் மார்க் செய்வது ஹால்மார்க் ஆகாது...

சைபர் க்ரைம் என்றால் குற்றமே இல்லை என்பதல்ல...

பென்ச்மார்க் என்பது பென்ச்சில் கிறுக்குவதல்ல...

ஃபுல்ஸ்டாப் என்றால் முழுசா நிறுத்து என்ற அர்த்தமல்ல...

அக்மார்க் என்பது மார்க் மீது "ஃ" எழுதுவது அல்ல...


தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

மலை போல் விபூதி கொட்டியிருப்பது திருநீர்மலையல்ல...

தாண்டிக்குடி என்பது குடித்துவிடு தாண்டுவதில்லை...

முக்கொம்பு என்பது 3 கொம்பு உள்ள மிருகமல்ல...

பெரம்பலூர் என்பது பிரம்பு விளையும் ஊர் அல்ல...

டோர் டெலிவரி என்பது கதவின் பிரசவம் அல்ல...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


டேபிள் மேட் என்பது மேஜைப் பைத்தியமல்ல...

சீலிங்ஃபேன் என்பது சீல் வைக்கப்பட்ட ஃபேன் அல்ல...

சேத்துப்பட்டு என்பது சகதியில் உள்ள பட்டல்ல...

எலிபெண்ட் என்பது எலி போடும் பேண்ட் அல்ல...

பாமரேனியன் என்பது பாமரமான நாய் அல்ல...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


ஜன"வரி" என்பது மக்கள் கட்டும் வரி அல்ல...

பிப்ர"வரி"என்பது ஒரு கோடு அல்ல...

ஐஸ் (eyes) மேல் மாட்டுவதால் கூலிங்கிளாஸ் என்ற அர்த்தமல்ல...

அடையாறு என்பது 6 அடைகளை குறிக்காது...

பூந்தமல்லி என்பது எதற்குள்ளும் நுழையாது...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


லத்தி சார்ஜ்ஜுக்கு கரண்ட் தேவையில்லை...

புத்த"கம் என்பது புத்தர் ஒட்டும் பசையல்ல...

பென் டார்ச் என்பது பெண்ணை டார்ச்சர் செய்வதல்ல...

பிராய்லர் கோழி என்பது உள்ளாடை அணிந்த கோழியல்ல...

குரோம்பேட்டை என்பது காக்கா வசிக்கும் பேட்டையல்ல....


தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


சாக்கர் என்றால் சாக்கு விற்பவர் அல்ல...

கிக்கர் என்றால் போதைக்காரர் அல்ல...

லாக்கர் என்றால் பூட்டு விற்பவரில்லை...

வாக்கர் என்றால் ஓட்டு போடுபவரில்லை...

மார்க்கர் என்றால் மார்க் போடுபவரில்லை...


தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


கோக்கனட் என்றால் கோக்கை நட்டு வைப்பதல்ல...

வால்நட் என்பது சுவற்றில் நட்டு மாட்டுவது அல்ல...

கிரவுண்ட்நட் என்பது மைதானத்திலுள்ள நட்டு அல்ல...

சிக்னெட் என்பது நோய் வந்த நட்டு அல்ல...

கேஷ்யூநட் என்பது பணத்தை நட்டு வைப்பதல்ல...


தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


ஸ்கூல்பேக் என்றால் பள்ளியின் பின்புறம் அல்ல...

கிரவுண்ட் என்பது சதுரமாகவும் இருக்கும்...

கிளாஸ்ரூம் என்பது கண்ணாடி அறையல்ல...

சாக்பீஸ் என்றால் சாக்லெட் துண்டு அல்ல...

கண்ணாடி போடாதவரும் கிளாஸ் டீச்சரே...


தொடரும்.....



தீனா - ஏப்ரல்.

தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நீ இந்த எள்ளு பாத்துக்கிறாயா நைனா.? தம்மாத்தூண்டு தான் இருக்கும் அத்த ரெண்டா பொள்ந்தா எவ்வளவு சிறுசா இர்க்குமோ அந்தய அளவுக்கு கூட யாருமேலியும் நாம பகைய நெனிக்கக்கூடாத்து..அப்டி நெனைக்க சொல்லோ அந்தய தம்மாத்தூண்டு நெனப்பே ஒரு வம்சத்தியே அழ்ச்சிருமாம்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"எள்ளா நெனிக்கிற பகைதான் ஒரு வம்சத்துக்கு எள்ளு தெளிக்கிற பகை"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாம் கேடு.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

கைல கத்திய வச்சிகினு குத்தவர்ற விரோதிய கண்டா கூட நீ பயப்படாதே..ஆனா உன் கிட்ட கூடவே சொந்தக்காரன் கணக்கா இர்ந்து...  நல்லவனா ஆக்ட் குட்த்து உனுக்கு குழி பறிக்காறான் பாரு பேமானி அவுன கூடவே வச்சிக்கினு இர்ந்தா நீ பயந்தே ஆவணும்.! பிரிறா மேறி சொன்னா...  "எதிரிய நம்பு..துரோகிய நம்பாதே" 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வாள்போல பகைவரை அஞ்சற்க;அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உன்னிய மதிக்யாத ஆளோட பின்னாலியே போயி அவுன தாஜா பண்ணினு உசுர் வாழ்றத வுட செத்தாலும் அவுன் பின்யால போறதில்லன்னு வய்ராக்கியமா இர்ந்தேன்னு வய்யி.. அப்ப நீ அழிஞ்ச்சே போனாலும் அதான் நல்லது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"மதிக்காதவன் பின்னால போறதவுட மரிச்சே போய்டலாம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இத்த செஞ்சா நமக்கு கெட்ட பேரு வரும்ன்னு எத்த நெனிக்கிறியோ... அத்த செய்யாம மின்னாடியே உஸாரா இர்ந்து உன்னிய காப்பாத்திக்கணும்.. அப்டி செய்யாம போனா இன்னா ஆகும்.? நெர்ப்பாண்ட வச்ச வக்கப்பில்லு கணக்கா ஒன் வாழ்க்க எர்ஞ்சு கருகியேப்பூடும்...!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"உஸாராக படுற சோம்பலு...வாழ்க்கய ஆக்கிடும் சாம்பலு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உன்னிய பத்தி ஆருகிட்டகேட்டாலும் அல்லாரும்"ஆஹா..அவுரா..! அவுரு எப்பேர் பட்ட நல்ல மன்சன்" அப்டி பேசணும்.. இப்டி ஊரே புகழ்ந்து பேஸ்றா மேறி வாழாட்டா.. உன் உடம்பை சுமந்த பூமிய "தர்சா போன பூமின்னு"ஒலகம் திட்டிகினே இர்க்குமாம்..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"புகழோட வாழப் பாரு..இல்லாட்டி..உன் மண்ண பழிக்கும் ஊரு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா

யாக்கை பொறுத்த நிலம்.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உனுக்கு ஆராவது கெடுதியே செஞ்சாலும்.. அத்த பொறுக்காம அத்த உனுக்கு செஞ்சவுன நீ பேஜார் பண்ணேன்னு வை.. ஒலகம் உன்னை ஒரு பொருளாவே மதிக்யாத்து.. ஆனா அப்பயும் பொறுத்து போனா உன்னிய மன்சுக்குள்ள அல்லாரும் தங்கமா மதிப்பாங்கோ..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பொறுமை இல்லாதவன் மண்ணு.. பொறுத்துப் போறவன் தான் பொன்னு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உனுக்கு கய்யி,காலு,கண்ணு,வாயி,காது இத்து அல்லாமே நல்லா இர்ந்தாலும்..உள்ள  இர்க்குது பார் மன்சு அத்து நல்லா இர்க்கணும்,அப்டி இல்லாங் காட்டி வெளியே இர்க்குற உறுப்பல்லாம் சொம்மா ஓட்டினுகீறா மேறிதான் தான் அத்து இர்ந்து பிரியோஜன்மே இல்லை

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நல்ல மன்சு தான் ஞானம்.. அதில்லாட்டி நீ ஊனம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நீ எத்தாவது ஒரு பொய் சொல்லி அதுனால ஆருக்காச்சும் பிரியோஜன்மா இர்ந்தாலோ.. அப்டி நீ சொல்ற பொய்யி எந்த பெர்ய குத்தமும் இல்யாம இர்ந்தாலோ.. நீ சொன்னது பொய்யே கெடியாத்து அதுவும் உண்ம தான்பா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நல்லதுக்கு சொல்ற பொய்யி... அது எப்யுமே மெய்யி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த

நன்மை பயக்கும் எனின்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நீ இன்னாதான் நெரியா நல்லது செஞ்சு இர்ந்தாலும்.. வாயத் தொர்ந்து பேசக்கூடாத்த ஒரு  கெட்ய வார்த்த பேசினின்னா...அந்த ஒரு கெட்ய வார்த்தியினால வர்ற கெடுதி நீ செஞ்ச அல்லா நல்லதையும் கெட்த்து அழிச்சுடும்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா

"கெட்டத பேஸ்றது தப்பு...அது நல்லதுக்கு வச்ச ஆப்பு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றுஆகா தாகி விடும்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இந்த ஒலகத்ல ஒர்யே ஒரு விஸ்யத்துல மட்டும் பெர்மை கெடிக்காது..! அத்து இன்னான்னு கேக்குறியா? இந்த ஒல்கத்துலே ஆரா இர்ந்தாலும் பொறாம புட்ச்சு பெர்மை படவே முட்யாது.. அத்தே நேர்த்துல பொறாம இல்யாதவங்கோ வோணான்னு சொன்னாலும் அந்த பெர்மை அதுவாவே அவுங்களாண்ட போய் சேரும்.. அத்த ஒண்ணியும் பண்ண முடியாத்து..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பொறாம தராது பெர்மை.. நீ பொர்த்து இர்ந்தா அது அர்மை"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதிலார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

வாழ்க்கில உம்மேல எந்த பழியும் வராம வாழ்ற பார்.. அதான்பா நல்ய வாழ்க்கை..! பழி இல்யாம வாழ்றது தான் நீ உசுரோட இர்க்கறதுக்கு அர்த்தம்...! அந்த மேறி ஒரு புகழ் உனுக்கு இல்யாம போச்சின்னு வை நீ உயிரோட இர்ந்தும் செத்தா மேறி தான்..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"உன் மேல வுழுவுற பழி.. உனுக்கு வெட்டுன குழி"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

தப்பான விஸ்யத்த மன்சால நெனிச்சு பாக்குரதே தப்பு... அதுலயும் நென்ச்சே பாக்ககூடாத பெர்ய தப்பு இன்னா தெரிமா? அட்த்தவன் பொர்ளு மேல ஆசப்பட்டு அத்த அவனுக்கே தெரியாம லவட்டிக்கினு போலாம்ன்னு நெனிக்கிற நென்ப்பு இர்க்கவே கூடாத்து..

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. 

"அடுத்தவனோட டப்பு...அத அடைய நெனிக்கிறது தப்பு"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

உள்ளத்தால் உள்ளலும் தீதே;பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஒதவின்னு கேட்டு வந்தவங்க ஆருக்குமே ஒதவி செய்யாத ஒர்த்தன்.. எவ்ளோ துட்டு வச்சி இர்ந்தாலும்..அந்த துட்ட ஊர்ல இர்க்க அல்லாரும் கொஞ்சயம் கூட மதிக்க மாட்டாங்கோ.!

ஏன்னா..! அப்டியாப்பட்ட துட்டு ஊரு நடுவுல இர்க்குற விஷ மரத்து காயி பழம் ஆனா மேறி..! அந்த துட்டு அப்டி தான் பிர்யோஜனமில்யாம போகும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"யாருக்கும் உதவாத துட்டு..விஷப்பழம் இர்க்குற தட்டு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

வாழ்க்கய்க்கு தேவயான கொணம் இன்னா தெரிமாபா?அல்லார் கிட்டயும் அன்பா பணிஞ்சு இர்க்குறது தான்... நீ எம்மாம் பெர்ய பண்க்கார்னா இர்ந்தாலும் நெறியா சொத்து... 

இர்ந்தாலும் உங்கைல இந்த பணிஞ்சி போற கொணம் இர்ந்தா அந்த கொணம் நீ சம்பார்ச்ச சொத்து மேறி இன்னொரு சொத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"பணிவு தான் கெத்து.. அது பண்கார்னுக்கும் சொத்து"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

யார் மேலியாச்சும் நீ அன்பா இர்க்க சொல்லோ அத்த மூடி வைக்க முடிமா..? இல்ல அத்த ஒரு ரூம்ல போட்டு கதவ அட்ச்சு தாழ்ப்பா போட முடியுமா.? நீ அன்பு வச்சிக்கிற ஆளுக்கு..

ஏதாவது கஸ்டம் வர் சொல்லோ உன் கண்ணு சட்டுன்னு கல்ங்குது பாரு அந்தஒரு சொட்டு கண்ணீரு சொல்லிடும் அந்த உண்மியான அன்பை..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..

"அன்புக்கு ஏது தாழ்ப்பா... உங்கண்ணு அழுவும் ஷார்ப்பா"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் 

புண்கண்நீர் பூசல் தரும்.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

புள்ளய பெத்து வளக்குற அல்லா நைனாவும் நல்யா கேட்டுக்கோங்கோ.! நீங்க உங்க மவனுக்கு செய்ற பெர்ய ஒதவி இன்னா தெரிமா?அவன பெர்ய படிப்பு படிக்க வெச்சி...

பெர்ய அறிவாளி ஆக்கி படிச்ச பெர்ய பெர்ய மன்சனுங்க இர்க்குற சபயில அல்லாரும் உங்க மவன பாத்து அறிவுல நீ தாம்ப்பா முந்தி அப்டின்னு மெச்சற மாதிரி சொல்ல வைக்கணும்..

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"மவனுக்கு அறிவாளி பதவி.. அதான் அப்பன் செய்ற உதவி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

உனுக்கு எதிரியே இல்லின்னாலும் ஒர்யே ஒரு எதிரி மட்யும் உனுக்குள்ளயே இருக்கிறான்.! அத்து யார்ன்னா? மத்தவங்கோ நல்லா இர்க்குறத பாத்து காண்டாகுற பொறாம தான்..!

பொறாம இர்க்குறவனுக்கு வேற பகயே தேவியில்லை.. உன் எதிரி கூட உன்னிய சும்மா உட்றுவான்..! ஆனா இந்த பொறாம உன்னை அழிக்காம வுடாது..! 

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பொறாம பட்ற குணம்.. உன்ன ஆக்கிடும் பொணம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடுஈன் பது.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

உன் கைல நெறியா துட்டு இர்ந்தாலும் பெர்ய பண்க்காரானாஇர்ந்தாலும் ஒர்யே ஒரு விஸ்யம் செய்யாம இர்ந்தா துட்டு இர்ந்தும் நீ ஏழை.! அது இன்னான்னு கேக்குறியா..?

ஒன்னிய தேடி உன் வூட்டாண்ட வர்ற விர்ந்தாளிங்களை மதிக்காம இர்க்க பாரு அதுதான் பெர்ய பிச்சக்காரத்தனம்.! அப்டி இர்க்குற அல்லாரும் மகா மடப்பசங்கோ..! 

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"விர்ந்தாளிய மதிக்காத கேசு... துட்டு இர்ந்தும் லூசு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

ஒரு யாபாரியா இர்க்க சொல்லோ அவுனுக்கு இன்னா மேறி கொணம் வோணும்? பொறத்தியார் பொருளையும் தன்யோடதா நென்ச்சி அதுக்கு நல்ல மர்வாத கொட்த்து..

யாபாரம் செய்றான் பார்..! அதான் யாபாரிக்கு ஏத்த மர்வாதயான கொணம்..! அதான் யாபார்த்திலியும் நேர்மியான மொறை.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"உன் பணம் என் பணம்.. அப்டின்னா அது யாபாரிக்கு நல்ல கொணம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தம்போல் செயின்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நீ உங்க நைனாவுக்கு செய்யிற பெர்ய மர்யாத இன்னா தெரிமா? நீ நல்லதயே நென்ச்சி நல்லதையே செஞ்சு நல்லவனாவே நடக்குறத பாத்து அடடா இப்டியாப்பட்டநல்ல புள்ளய...

பெத்ததுக்கு மவராசன் இன்னா தவொம் செஞ்சானோ அப்படின்னு நாலு பேரு பேசுறது உன் நைனா காதுல வுயணும்..அதான் மவனா பொர்ந்தவன் அப்பனுக்கு செய்யிற ஒதவி..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா

"நல்ல மவன்னு எடு பேரு... உன் அப்பனை பாராட்டும் ஊரு"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

சம்சாரத்த பத்தி ரெண்டே வார்த்தயில சொல்லிக்கிராருபா நம்ம வள்ளுபரு.! உனுக்கு அமயுற வூட்டம்மா நல்ய கொணவதியா அமஞ்சா உன் வாழ்க்கயில அல்லாம் கெடிக்கும்..!

அப்டி இல்லாம கெட்ட குணத்தோட அமஞ்சா உன் வாழ்க்கயில ஒன்யுமே கெடிக்காது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... நல்ல மனைவின்னா வாழ்க்கயில இல்லாதது இன்னா..! கெட்ட மனைவின்னா வாழ்க்கயில இருக்குறது இன்னா..! 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை?


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நாயமா ஒர்த்தன் வாழ்றதுன்னா எப்டி தெரிமா? மன்சுக்குள்ள குத்தம் கொற இல்யாம  வாழறது தான் அது.. குத்தமில்லாத நெஞ்சு தான் நாயம்...!

அழுக்கு புட்ச்ச மன்சால நல்லது எதுவும் நடக்காது அதெல்லாம் சும்மா உதார் காட்றதுக்கு கொரலு உட்ற மேறி சவுண்டு மட்யும் தான் கேக்கும்..... நாயமா இருக்காது..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"மன்சுக்குள்ள நல்லது சைலன்டா இர்க்கும்... கெட்டது சவுண்டா இர்க்கும்" 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற.


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நீ சம்பார்ச்சு சேக்குற சொத்து எப்டியாப்பட்டதா இர்க்கணும் தெரிமா? இன்னா இன்னா நல்ல வழி இர்க்குதோ அந்த வழியில நாயமா நேர்மியா சேத்ததா இர்க்கணும்..! 

யாருக்கும் எந்த கெடுதியும் செய்யாம துட்ட சேக்குறது தான் மிக்கியம்..அப்டி சம்பார்ச்சா தான் உனுக்கு நாயமானவன்ற பேரும் வரும்..! வாழ்க்கயில சந்தோஸ்மும் நிம்மதியும் வரும்..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"நேர்மியா சேத்த துட்டு...எப்பயும் இனிக்கிற லட்டு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.



தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இந்த ஆச இர்க்குதே அது படா பேஜாரானதுபா... அந்த ஆச தான் நம்ம அழிவுக்கு காரணம் இத்த புத்தரு மட்டும் சொல்லலை..! நம்ம தலயும் சொல்லிக்கிராரு எப்டின்னா...

இந்த ஆசய்க்கு பய்ந்து வாழ்ந்தா அது நாயமான வாழ்க்கையாம்..! அப்டி வாழாம அல்லாத்துக்கும் ஆசப்பட்டா..அந்த ஆச உன்னிய ஏமாத்தியே அழிச்சுர்மாம்..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....


"ஆசய்க்கு அஞ்சு... ஆசப்பட்டா நஞ்சு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை

வஞ்சிப்பது ஓரும் அவா.
 


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

மன்சனை எப்போ சாமியா பாக்குறது?இதுக்கு ஒரு பெர்ய லிஸ்ட்டே கொட்த்துக்கிறாரு நம்ம வள்ளுபரு.! "குறிப்பு அறிதல்"அப்டின்ற அதிகார்த்துல இன்னா சொல்லிக்கீரார்னா...

கொஞ்சயம் கூட டவுட் ஆகாம நம்ம மன்சுல நென்ச்சத அப்டியே கண்ணாடில பாத்தா மேறி கண்டுக்கிறான் பாரு அவன் தெய்வத்துக்கு சமானமாம்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நென்ச்சத கண்டுக்குற கண்ணு... அவனும் சாமியும் ஒண்ணு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல்.
 

Friday 28 March 2014

அரசியல் பைபிள்...!

பைபிள் வசனங்களும் - இன்றைய அரசியலும்...


என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் - ராமதாஸ்

கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் - தமிழருவி மணியன்

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடுவதும் இல்லை - கலைஞர்

நிச்சயமாகவே முடிவு உண்டு - காங்கிரஸ்

இடைவிடாமல் உன் தேவனை நம்பிக் கொண்டிரு - சரத்குமார்

ஒருவனை அவன் தாய் தேற்றுவது போலே நான் உங்களை தேற்றுவேன் - அம்மா

ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் செய்யாமற் போனால் அது அவனுக்கு பாவமாயிருக்கும் - சோனியா

பலவீனரை தாங்குங்கள் - வை.கோ.

கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையும் - கேப்டன்

நீ உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன் 
கண்ணிலுள்ள துரும்பை பார்ப்பது ஏன் - மு.க.அழகிரி

நான் உம்மை துதிப்பேன் - நாஞ்சில்,பரிதி

வலது புறம் இடது புறம் சாயாதிருப்பீர்களாக - கம்யூனிஸ்ட்டுகள்

எனக்கு சித்தமானவைகளை எல்லாம் செய்வேன் - மோடி

நான் பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் - அத்வானி

ஒருவரையொருவர் தேற்றுங்கள் - காங்கிரஸ் வேட்பாளர்கள்

நீ எறும்பினிடத்தில் போய் அதன் வழிகளைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக் கொள் - ஞானதேசிகன்

சத்தியத்திற்கு விரோதமாய் பொய் சொல்லாமலும் இருங்கள் - நாராயணசாமி

சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகி இரு - ஈ.வி.கே.எஸ்

மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார் - சுப்ரமணியசாமி

உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லக் கடவீர்கள் - ராகுல்

நான் விசுவாசித்து இருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் - மன்மோகன்

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாது இருங்கள் - இந்திய வாக்காளர்கள்










Wednesday 26 March 2014

பாரதத் தாய்...!


அம்மா பிரதமரானால்... (கற்பனை)

புது தில்லி மே 27 ( கூட்டுத் தொகை 9 ) விழாக் கோலம் பூண்டிருக்கிறது...! எங்கு பார்த்தாலும் அதிமுக கொடிகள்,பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள், அமைச்சர்கள் தண்ணீர்பந்தல் அமைத்து அம்மா குடிநீர் வினியோகித்து கொண்டிருந்தனர்..டெல்லி முழுவதும் ஆங்காங்கே நடமாடும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தன.. 

ஓ.பி.எஸ் ஏற்பாடு செய்த 10 சிறப்பு ரயில்களில் தமிழக மக்கள் அழைத்து வரப்பட்டனர் ரயில் நிலையத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ்..! புரட்சி தலைவி வாழ்க, பாரதத் தாய் வாழ்க கோஷம் டெல்லியை பிளந்தது..! அதிமுக பேனர்கள் தான் பட்டையை கிளப்பியது..! தப்பான தமிழிலும் தப்பு தப்பான இந்தியிலும் வாசகங்கள்..!

நேற்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ...! இன்று செங்கோட்டை..!  காவிரித் தாயே ...! இனி கங்கை நீயே...! இந்தியாவின் நிரந்தரப் பிரதமரே..! இதய தெய்வத்தின் காலடி... ! இனி இமயத்திலும் பறக்கும் இலைக்கொடி...! உன் பாதம் பட்டால் பாகிஸ்தான் பதை பதைக்கும்..! சீனா கிடுகிடுக்கும்..! டெல்லி வாசிகள் செங்கிஸ்கான் வந்த போது கூட இப்படி பயந்து இருப்பார்களா தெரியவில்லை..! அவ்வளவு பீதி அவர்கள் முகத்தில் தெரிந்தது...!

10 ஜன்பத் ரோடு இன்னும் விமரிசையாக இருந்தது..! நேற்றே ஹெலிகாப்டரில் வந்திறங்கி இருந்தார் அம்மா..! பதவி ஏற்க ஜனாதிபதி மாளிகை போக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..! அம்மாவை என் காரில் கொண்டு போய் தான் அங்கு இறக்கிவிடுவேன் என இன்னோவாவை பளபளப்பாக துடைத்து வைத்து காத்திருந்தார் சம்பத்..!

தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதல்வராக அம்மா இருக்கும் போது தான் அவர்கள் வரும் போது விழுந்து வணங்குவோம்... இப்போ அம்மா பிரதமர்..!  மரியாதை அதிகமாக தர வேண்டும் என்பதால் அம்மா வரும் வழியில் இரு புறமும் குப்புற படுத்தே கிடந்தார்கள்.. அவ்வப்போது அம்மா வருகிறார்களா என அவர்கள் தலையை தூக்கி பார்த்தது பீச்சில் சன்பாத் எடுப்பது போலவே இருந்தது..!

ஓபிஎஸ்,நத்தம் விஸ்வனாதன் போன்றோர் ஓடி ஒடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்..!சரியாக நல்ல நேரம் துவங்கியதும் அம்மா வீட்டு வாசலில் பச்சை புடவை தெரிய.. திருப்பதியில் திரை விலகியதும் பக்தர்கள் குரலெழுப்புவதைப் போல அமைச்சர்கள் அனைவரும் அம்மா தாயே பராசக்தி என கோஷமிட..உணர்ச்சிவசப்பட்ட பரிதி கைகளால் தன் கன்னத்தில் போட்டுக் கொண்டார்..!

வந்தது அம்மா அல்ல பச்சை சேலை கட்டிய வேறு ஒரு பெண்..! அனைவரும் அசடு வழிய அந்தப் பெண் அங்கு வழிய வழிய இருந்த நீர்க்குடத்தை தூக்கி நிற்க..இப்போது தான் அவர்களுக்கு புரிந்தது அம்மா வெளியே வரும் போது நிறை குடத்தோடு அந்தப் பெண் எதிரே போவார்..! நல்ல சகுனம்...! இந்த கேப்பில் கெடா வெட்ட நினைத்த சரத்குமார்..

இந்தியாவின் இரும்பு மங்கைக்கு நிறை குடம் கொண்டு வந்த நங்கையே வாழ்க வாழ்க..! என கோஷமிட அனைவரும் வாழ்க எனக்கத்த... இதோ நிறைகுடப் பெண் நடக்க வீட்டு வாசலில் பளீர் புன்னகையுடன் இரு விரல் காட்டி அம்மா வெளியே வர மீண்டும் திருப்பதி திரை..!

அம்மா நடக்க நடக்க இரு புறமும் அமைச்சர்கள் அங்கபிரதட்சணம் போல் உருண்டு வந்து கொண்டே இருந்தார்கள்..! பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி காரர்களிடம் பதவியேற்பு மண்டபத்தில் பேட்டி தருகிறேன் என சிரித்துக் கொண்டே அம்மா ஆங்கிலத்தில் சொன்னதும்..யாரோ ஒரு பாறை பன்மொழித் தாயே வாழ்க என எடுத்துவிட,வாழ்க..வாழ்க..

அம்மா கார் ஏறி புறப்பட்டுவிட கார் கிளம்பிபோனது தெரியாமல் ஜன்பத் ரோடில் இருந்து மெயின் ரோடு வரை அவர்கள் உருண்டு போய்க் கொண்டிருந்ததை டெல்லி மக்கள் அதிசயமாக பார்த்தனர்..! வழியெங்கும் டெல்லி வாசிகளுடன் தமிழக மக்கள் நின்று கையசைக்க அம்மாவும் கையசைத்து கொண்டே ஜனாதிபதி மாளிகை சென்றார்..!

Sunday 23 March 2014

இரவு...!

இரவு நீண்டு கொண்டிருக்கிறது... சில கொசுவர்த்திகளின் ஆயுள் முடிந்து பல கொசுக்களின் ஆயுளை காப்பாற்றிவிட்டது...

காமத்தில் மூழ்கிய நல்ல ஜோடி பரபரப்பில்லாமலும்  கள்ள ஜோடி பரபரப்பாகவும் செயலில் இருந்தார்கள்...

இரவுக்காவலர்கள் விளக்கணைக்கப்பட்ட தெருவோர டீக்கடையில் திருட்டுத் தனமாக தேனீர் அருந்தி கொண்டிருந்தனர்...

ரோந்து வந்த காவல் துறையினர் நல்லவர்களை துருவி துருவி விசாரித்துக் கொண்டு இருந்தனர், அந்த இடைவெளியில் தப்பித்து கொண்டிருந்தனர் திருடர்கள்...

நடைபாதை சாம்ராஜ்ய மன்னர்கள் விளம்பர பேனர் போர்வைகளில் தூங்கிக் கொண்டிருந்தனர்... அகாலவேளையில் வந்திறங்கிய பயணிகளை ஆட்டோ ஓட்டுனர்கள் அநியாய கட்டணம் கேட்டு அவர்கள் தூக்கத்தை போக்கிக் கொண்டிருந்தனர்..

பாலியல் தொழிலாளிகள் மிச்ச ஒப்பனைகளை கொட்டாவிகளில் உதிர்த்து கொண்டிருந்தனர்.. தெருவுக்குள் நுழையும் வாகனத்தை நாய் ஒன்று வீரமாக விரட்டி சென்று தோல்வியுடன் திரும்பி வெற்றிகரமாக குலைத்தது..

இனிப்பு வியாதி காரர்கள் சபித்து கொண்டே 4 வது முறையாக சிறுநீர் கழிக்கப்போனார்கள், அரசு மருத்துவமனைகளில் பிள்ளைகளை பெற்றவர்கள் திடுக்..திடுக்..என விழித்து பிள்ளை அங்கு தான் இருக்கிறதா என்று பார்த்து கொண்டனர்..

வெளி நாட்டில் வாழும் பிள்ளைகளிடமும் / கணவனிடமும் கண்ணில் நீர் வழிய பேசிக் கொண்டிருந்தனர் சிலர்.. சிறைச்சாலைகளில் நிம்மதியாக பல தண்டனை கைதிகள் உறங்க...உறக்கமில்லாமல் தவித்து கொண்டிருந்தனர் சில அரசியல் கைதிகள்....

நட்சத்திர ஓட்டலில் மது விருந்து முடித்தவர்களை அவர்களது டிரைவர்கள் கைத்தாங்கலாக அழைத்து செல்ல...வேறொரு புறத்தில் குடித்துவிட்டு போதையில் விழுந்து கிடந்த ஏழைக் குடிமகன்கள் எழுந்து வாந்தி எடுத்துவிட்டு மீண்டும் அதிலேயே படுத்து கொண்டனர்...

சினிமா கனவுகளில் சென்னை வந்த புது இயக்குனர்கள் பசிக்கு பானை தண்ணீர் குடித்துவிட்டு பாங்காக் படப்பிடிப்புக்கு காட்சி யோசித்து கொண்டிருந்தனர்..

அரசியல்வாதிகள் தூக்கத்தில் பிரச்சாரம் செய்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பது போல் கனவு கண்டு கொண்டிருந்தனர்...

இளையராஜாவின் பாடல்களில் லயித்து இரவு பயணத்திலிருந்தனர் ஓட்டுனர்கள் பலர்...

எங்காவது நகர்ப்புறத்தில் குழந்தைகளின் அழுகுரலும் கிராமப்புறத்தில் ஆந்தைகளின் குரலும். ஒலித்து கொண்டிருந்தன....

நான்கவது முறையாக மின்சாரம் தடைபட்ட எரிச்சலில் எழுந்து வந்து காற்றுக்காக ஜன்னல் திறந்தனர் பலர்...,

இரவுப் பணி முடித்த தொழிலாளர்கள் சோர்வுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்...திடீர் உடல் நலக்குறைவு பட்டோர் வீடுகளில் பரபரப்பாக எழுந்தது...

முகனூலில் நேரம் போவது தெரியாமல் உழைத்து கொண்டிருந்தனர் பலர்..

மீனவர் மீன் பிடிக்கவோ அல்லது தாங்கள் பிடிபடவோ ஆயுத்தமாகிக் கொண்டிருந்தனர்  மயானங்களில் மயான அமைதி..! வெட்டியானின் பீடியில் மட்டும் கொள்ளி தெ(எ)ரிந்தது...

நாளைக்கும் இது போல் தான் இரவா..? சொல்ல முடியாது..! ஒவ்வொரு நாளும் இரவு ஒவ்வொரு மாதிரி... இரவில் விழித்திருப்போருக்கு தான் அதன் அர்த்தம் புரியும்...

#ஏனெனில் இரவுகள் நீளமானவை...!!

Saturday 22 March 2014

நாயும் தேங்காயும்..!

கவி காளமேகத்தின் சிலேடை வெள்ள(ல்ல)ம்....


நாய்க்கும்... தேங்காய்க்கும்..!


ஓடுமிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே

தீங்காய தில்லாத் திருமலைரா யன்வரையில்

தேங்காயு நாயுநேர் செப்பு.

தோழியே (சேடியே) தீமை இல்லாத திருமலைராயன் எல்லைக்குட்பட்ட நாட்டிலே தேங்காயும் நாயும் ஒன்று எனக் கூறு..! இது கடைசி இரு வரிகளின் அர்த்தம் இனி சிலேடை.!

தேங்காய் : ஓடுமிருக்கும் - ஓடுள்ளதாக இருக்கும்.. அதனுள் வாய் வெளுத்திருக்கும் - உட்புறம் வெண்மையாக இருக்கும்.. நாடும் குலை தனக்கு நாணாது - அனைவராலும் விரும்பப்படும் குலையாக தொங்குவதற்கும் அது கோணுவதில்லை.

நாய் : ஓடுமிருக்கும் - ஓடியும் திரியும் சில சமயம் இருந்த இடத்திலேயே இருக்கவும் செய்யும்.. அதன் உள் வாய் வெளுத்திருக்கும் - அதன் வாய் உட்புறம் வெளுத்திருக்கும்..
நாடும் குலை தனக்கு நாணாது - அதற்கு விருப்பமான குரைத்தலில் ஈடுபடுவதில்  அது வெட்கப்படுவதில்லை.

என்னுடைய பஞ்ச் : 

நல்ல தேங்காயை சோதிப்பது எப்படி? நாய் நன்றியை வாலில் தெரிவிப்பதெப்படி?

ஆட்டிப்பார்த்து..!

Thursday 20 March 2014

அச்சச்சோ செய்திகள்...!



 அய்யாசாமி வழங்கும்... "அச்சச்சோ செய்திகள்"

*பிரதமர் வேட்பாளராக நாராயணசாமி! காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு மனதாக தேர்வு...

* தேமுதிகவில் இணைகிறார் டி.இராஜேந்தர்...!

* பா.ஜ வெற்றி பெற்றால் சுப்பிரமணியசாமி வெளியுறவு அமைச்சர்...!

* காஷ்மீர் மக்களவையில் போட்டியிடுகிறார்  கேப்டன்...!

* பஞ்ச் டயலாக் இனி பேசவே மாட்டேன் விஜய் அறிவிப்பு...!

* ஆன்மிகத்தில் ஈடுபட அழகிரி முடிவு...!

* 40 தொகுதியிலும் தனித்து போட்டி நடிகர் கார்த்திக் பரபரப்பு அறிக்கை..!

* தமிழகத்தில் காங் ஜெயித்தால் விஜயதரணி தான் முதல்வர்..!

* கேப்டனின் வெற்றிக்காக இராமதாஸ் பிரசாரம்..!

* MH370 விமானத்தை கடத்தியது திமுகவே நாஞ்சில் பேட்டி..!

* அத்வானிக்கு விட்டுக் கொடுத்து திருப்பதி&பழனியில் மோடி பேட்டி..!

* தமிழகத்தில் விரைவில் விலை இல்லா அம்மா ஜெனரேட்டர்கள்..!

* சிவகங்கை நகராட்சி சேர்மனாகிறார் ப.சிதம்பரம்..!

* வை கோ பிரதமர் என்றால் நாங்கள் ஆதரிப்போம்- ஸ்டாலின்..!

* கலைஞர் - ஜெயலலிதா சந்திப்பு!! தமிழக நலன் குறித்து விவாதித்தனர்..!


பொது மக்கள் நலன் "கருதாது" வா(யோ)சித்தது அய்யாசாமி...!

அப்பாவி வாக்காளன்...!

சூரியனைப் பார்த்து முகம் சுருங்குகிறது தாமரை..!

மாம்பழம் இலைகளை உதிர்த்துவிட்டு போகிறது..!

எழுச்சிக்கு கொட்டப்படும் போர் முரசு பார் முரசானது..!

பம்பரத்தின் மீது மதச் சாட்டை சுற்றப்படுகிறது..!

சிறுத்தை மண்டியிட்டு வாலாட்டுகிறது...!

அரிவாள் சுத்தியல் துருப்பிடித்து நட்சத்திரம் மறைகிறது..!

கதிர் அரிவாள் பதர்களையே அறுவடை செய்கிறது...!

67 ஆண்டு குப்பை மலைகளை துடைப்பம் கூட்ட நினைக்கிறது..!

கையோ வாதம் வந்து முடமாகி போய் கிடக்கிறது..!

ஆட்காட்டி விரல் நீட்ட காத்திருக்கிறார்கள் மக்கள்..!

இந்த விரல் பிடித்து புது உலகம் அழைத்துச் செல்ல வேண்டாம்..!

எங்கள் விரல் ஒடித்து போகாமல் இருப்பீர்களா தலைவர்களே..!!

#அப்பாவி வாக்காளன்..!

Wednesday 19 March 2014

பட்டணம்...!

ஒரு கிராமத்தானின் புலம்பல்...!


மானமா பொழைக்கத்தான் பஸ் ஏறி வந்தோம்... 

பட்டணத்து எல்லய்க்குள்ள பறி தவிச்சு நின்னோம்...

மோட்டாரு வண்டியில சனமெல்லாம் பறக்குது...

ஓடுகிற மிசினபோல வாழ்க்கையும் தான் இருக்குது.. 

நட்டு வச்ச மரமாட்டம் கட்டடங்க நிக்குது...

கடல் காத்தும் சூடாகி வெக்கையா அடிக்குது...

குடுவையில அடச்ச தண்ணி வியாவாரம் ஆகுது... 

குளிர்பானம் பேருல தான் பூச்சி மருந்து கிடைக்குது...

பக்தி அதை ஒரு கூட்டம் பணங்காசா மாத்துது...

டாஸ்மாகில் ஒரு கூட் டம் நாளெல்லாம் சொக்குது...

விவசாய நிலமெல்லாம் வீடாக நிக்குது... 

வெளஞ்ச காய்கறியும் ஆன வெல விக்குது...

ஆணும் பொண்ணும் சமமுன்னு கோஷங்கள் கேக்குது... 

கோர்ட்டுல விவாகரத்து பஞ்சாயத்து நடக்குது... 

காசு கொடுத்து வாங்குறது ஒசியில கிடைக்குது...

ஒசியில கிடைக்கறது காசுக்கு தான் விக்குது... 

நகை கடயில் துணிக் கடயில் கூட்டம் அல மோதுது... 

தேவையோ இல்லையோ கண்டதயும் வாங்குது... 

தின்னு பெருத்ததெல்லாம் மூச்சிரைக்க ஓடுது...

வட பாயாச சோறெல்லாம் குப்ப தொட்டி திங்குது... 

சாக்கடயில் குடிச போட்டு பல குடும்பம் வாழுது...

பங்களா நாய் கூ ட கார் ஏறி போகுது... 

மனுச பய பொழப்பு நாய் பொழப்பு ஆகுது...

நாயா பொறந்தாலும் அது மதிப்பு ஏறுது...
 
காசு பணமிருந்தா தான் கோவில் கூட தொறக்குது...

குடிக்க தண்ணீ இல்ல..குடியிருக்க வீடில்ல..பசிக்கு சோறில்ல 

கெட்டா தான் பட்டணமுன்னு சொன்னதெல்லாம் பொய்யிங்க.. 

பட்டணமே கெட்டுடுச்சு இது நான் கண்ட உண்மைங்க....

Monday 10 March 2014

இமயம் கண்டேன்...!

காஷ்மீர் கலாட்டா.!

புதிய திரைப்படம் ஒன்றில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துக் கொண்டிருக்கிறேன் (தொப்பை இருப்பதால் ரியாலிட்டி) அந்த பட பிடிப்பிற்காக தான்  காஷ்மீர் சென்றேன், இந்த கட்டுரையில் அப்படத்தை பற்றியோ கதையைப் பற்றியோ சொல்லப்போவதில்லை..! முழுக்க முழுக்க என் அனுபவங்களே....!

 சில இடங்களில் தவிர்க்க முடியாத இடங்களில் மட்டும் படத்தின் பட பிடிப்பு காட்சிகளை விவரித்து இருக்கிறேன் அதனால் அந்த கதைக்கு ஏதும் பாதிப்பில்லை என்பதால்...வாங்க போகலாம் காஷ்மீருக்கு....நீங்க ரெடியா?அப்படின்னா  எங்கே உங்கள் ஸ்வெட்டர் மற்றும் கம்பளி..! வெல்கம் டூ காஷ்மீர்...!

சென்னை to டெல்லி ரயில் பயணம் அங்கு 4 நாட்கள் டெல்லியில் பட பிடிப்பு, (இதை தனியாக எழுத உள்ளேன்) பிறகு அங்கிருந்து பேருந்தில் காஷ்மீர் செல்வதாக ஏற்பாடு.. நான் டெல்லியில் இருந்து காஷ்மீர் என்பது வெகு அருகில் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.! ஆனால் மதியம் 3 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பி முழு அரியானா பஞ்சாப் மாநிலங்களை கடந்து அடுத்த நாள் காலை 8 மணிக்கு தான் ஜம்முவை அடைந்தோம்..! 

இந்த இடத்தில் ஒரு கொசுவர்த்தி சுருளை என் முகத்தின் முன் சுழலவிட்டு டெல்லியில் கிளம்பிய இடத்துக்கு போய் வரலாமா...! நாங்கள் டெல்லியை தாண்டும் போது பானிபட் 40 கிமீ என்று போர்டு தென்பட்டது, இயல்பிலேயே வரலாற்று பிரியனான என் கண்களின் முன்னால் இப்ராஹிம் லோடியும், பாபரும், பைராம்கானும்,அக்பரும் வந்து போயினர்...!

அந்த ஊரை காண ஆவலுடன் இருந்தேன் பானிபட் நெருங்கியவுடன் கண்ணில் பட்டது ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம்...! தாடி வைத்த ஒருவர் உள்ளே நின்றிருந்தார்..! (ஒரு வேளை அவர் பெயர் பாபரோ) தெரு நாய்கள் கூட்டம், வாகன நெரிசல், பரபரப்பாக திரிந்த மனிதர்கள் ஊரெங்கும் இன்றைய நகரச்சூழல்...! பானிபட் என்ற இடத்தின் மீது இருந்த வரலாற்று மரியாதை பட்டென்று அறுந்து போனது..!

கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து டெல்லி மீது போர் தொடுக்க வந்தவர்களை பானிபட்டில் தான் தடுத்து நிறுத்த முடிந்தது என்றால் அன்றே இந்தியாவின் பாதுகாப்பு லட்சணங்கள் கண் முன் வந்து போயிற்று.. ஏனெனில் கைபர் போலன் கணவாய் அங்கிருந்து 2500 கி.மீ...! அடுத்து வரலாற்று சிறப்பு மிக்க பல ஊர்கள் வந்தாலும் பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ஊர்! குருஷேத்திரம்..!!! 

மகாபாரதப் போர் நடந்த ஊர் அல்லவா, அதை நெருங்க நெருங்க ஒரு விதமான சிலிர்ப்பு ஏற்பட்டது...குருஷேத்திராவில்  ஐடியா மொபைல் ஹோர்டிங் எங்களை வரவேற்றது, செல்போன் டவர்களும் திரும்பிய பக்கமெல்லாம் ஏர்டெல், வோடபோன், டொகோமோ விளம்பரங்களும் ஒரு வேளை கிருஷ்ணர் இப்போது வந்தால் பாஞ்சஜன்யத்துக்கு பதில் ஒரு மிஸ்டு கால் கொடுத்து போரை ஆரம்பித்து வைத்திருப்பார் என்று தோன்றியது...! 

நல்லவேளை கீதோபதேச நினைவுச் சிலை வைத்திருந்தார்கள்... கீதை தந்த ஊரில் போதையோடும் சிலர் தென்பட்டனர்...!இனி அடுத்த ஊர்கள் எப்படி இருந்தாலும் பார்க்கபோவதில்லை என எண்ணமும் உறுதியும் குருஷேத்திரத்தில் உதிக்க பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்தேன்..! அதாவது தூங்கினேன்...!

கொசுவர்த்தி சுழல் ஸ்டாப்.. ஜம்முவில் உள்ள பஞ்சாபி தாபா ஒன்றில் பிரமாதமான நான் மற்றும் சப்ஜியுடன் மிகப் பிரமாதமான மலாய் லஸ்ஸியுடன் காலை உணவு முடிந்து சரியாக 9:30க்கு காஷ்மீர் கிளம்பினோம்...! ஜம்மு காஷ்மீர் ஒரே மாநிலம் என்றாலும் ஜம்முவில் இருந்து காஷ்மீர் மலை வழியாக 300 கி.மீ. அடிவாரம் தான் ஜம்மு இரு இடங்களிலும் அரசு செயலகங்கள் அமைந்த இடம்.. சரி வாங்க மலைப்பயணம் போகலாம்...!

54 கிமீ தூரம் உள்ள கொடைக்கானலே 3 மணிநேரம் எனும்போது 300 கி,மீ மலைப்பயணம் எவ்வளவு நேரம் என்பதை ஊகித்து கொள்ளவும்..! முதலில் நம் கொடைக்கானல் போலத்தான் அந்த பயணம் இருந்தது போகப்போகதான் இமயத்தின் பிரமாண்டம் புரிந்தது சாலை விளிம்பு பள்ளங்கள் 2000 அடி 5000 அடி என சரேல் சரேல் என செங்குத்தாக இறங்கி வைகுந்தத்தில் முடிந்தன, அருகில் வைஷ்ணவி கோவில் மலையை டூவீலர் ஓட்டும் போது சாமி கும்பிடும் ஸ்டைலில் வணங்கி உயிர் பிச்சை கேட்டுக் கொண்டோம்..! 

வட இந்திய டிரைவர்கள் மிக மிக அவசரமானவர்கள் போலும் இந்த அபாயகரமான சாலையில் 100 கி.மீ வேகத்திற்கு குறையாது மலை ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர்...! மலைப்பாதையில் கடை பிடிக்கும் எந்த ஒரு விதிமுறையும் அங்கு இல்லை ஒரு வேளை அந்த அதல பாதாளத்தில் அதை தள்ளிவிட்டு விட்டார்கள் போல..! திரும்பிய இடமெல்லாம் ராணுவம்..! 

ராணுவத்தில் இத்தனை சீருடையா,எண்ணி எண்ணி வியக்கலாம்...! ஏராளமான செக்போஸ்ட்டுகள் டீக்கடையில் நின்று டீ சாப்பிடும் போது சர்வ சாதாரணமாக  AK 47 AK56, ராக்கெட் லாஞ்சர், எல்லாம் சுவற்றில் சாய்த்து வைத்து விட்டு எங்களோடு டீ சாப்பிட்டு கொண்டிருந்தனர் ராணுவர்கள்...! நேற்று கூட பக்கத்து கிராமத்தில் துப்பாக்கி சண்டை நடந்தது என்ற போது மிச்ச டீயை கீழே ஊற்றிவிட்டு அவசரமாக கிளம்பினோம்..!

அதிலும் நீங்கள் எதாவது ஒரு இடத்தில் இறங்கி புகைப்படம் எடுத்தாலோ 5 நிமிடத்திற்கு மேல் நின்றாலோ மலைகளில் இருந்து ராணுவத் தலைகள் முளைக்கும்...! ஆனால் அவ்வளவு சினேகமாக பழகுகிறார்கள்...என்னை ஒரு ராணுவர் நீங்கள் எந்த ஊர் என்ற போது மதராஸ் என்றேன்...!ஓ சென்னை சூப்பர் கிங்ஸ் என்றார்...!இதுவரை மதராஸ் மதராஸி என்று அழைத்தவர்கள் ஐபிஎல் மூலம் நம்மை சென்னை என்று ஒப்புக்கொண்டது மகிழ்வாக இருந்தது...!

மலைப்பயணம் அருமையாக இருந்தது ஒரு 100 கி.மீ மலை ஏறியதும் எல்லாம் விமான காட்சி தான் அதிலும் கரை புரண்டு ஓடும் நதி ஒன்று 1500 அடி பள்ளத்தில் நம்மோடு பயணித்து வரும் அனுபவம் அடடா... திடீர் வளைவுகள், பாறைகள் உருண்டு வரும் பகுதி, அபாயகரமான பள்ளம் என்ற அறிவிப்புகள் வயிற்றுக்குள் லஸ்ஸியை கரைத்து கொண்டிருந்தது...! 

இங்கே நமது டிரைவர் பற்றி... பெயர் சந்திரகாந்த் பண்டிட்.! காஷ்மீரி பண்டிட் அரசியலால் காஷ்மீரில் இருந்து வெளியேறிய பல லட்சம் குடும்பங்களில் இவர் குடும்பமும் ஒன்று ஜம்முவில் இருக்கிறார் வாய் நிறைய பாண் மணக்க ஒரு இடத்தில் கூட அவர் ஹார்ன்  அடிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது 15 வருடங்களாக இந்த பாதையில் வண்டி ஓட்டுகிறாராம்..! 

இதெல்லாம் என்ன பள்ளம் இனி ஒரு 50 கி.மீக்கு அப்புறம் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரம் மிக மிக அபாயகரமான பள்ளம் தான் அதை ஜாக்கிரதையாக கடப்பது தான் சவால் என்றார்..! இதற்கிடையே இந்திய ரயில்வே மலையை குடைந்து ரயில் பாதைகளை அமைத்துக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது ...! ( தற்போது வேலை முடிந்து திறந்து வைக்கப்பட்டுவிட்டது) டிரைவர் சொன்ன இடம் வர வர ஆங்காங்கே மலைச்சரிவில் உருண்டு கரப்பான் பூச்சிகளாய் கிடந்த லாரிகளை பார்த்து கண்ணில் பூச்சி பறந்தது...!

 நீங்க சொன்ன இடம் இது தானா என்றேன் ஆமா இது தான் ஆரம்பபகுதி இன்னும் கொஞ்ச நேரம் போனால் தான் அந்த அபாயகரமான பாதை என்றவர் மலையில் ஓரமாக ஒரு தாபாவில் நிறுத்தினார்..! நாங்களும் சிரம பரிகாரங்களை முடித்து விட்டு வண்டி ஏற வந்தோம் நம்ம பண்டிட் அண்ணனை காணோம்...15 நிமிடங்கள் ஆயிற்று....!

அட அபாயகரமான பாதையை கடக்க வேண்டும் என்று சொன்னாரே அதற்கு முன்பு ஏதும் ஓய்வெடுக்கிறாரா என்ற சந்தேகம் வந்தது..! எங்களுக்கும் அதை தாண்டிப்போய் தான் மதிய உணவே மணி மதியம் ஒன்று.... சரி தேடிப்பார்ப்போம் என பின் புறம் டிரைவர்கள் தங்குமிடம் இருந்தது..! அங்கு சென்று பார்த்தோம்...!

சக டிரைவர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் அண்ணன் பண்டிட்...!


தொடரும்...!

காஷ்மீர் கலாட்டா..! பார்ட் - 2

எங்களைப் பார்த்ததும் பண்டிட்...! தோ மினிட் பய்யா என்றபடி மிச்ச சரக்கை (கிட்டத்தட்ட 100மிலி) படாரென க்ளாசில் கவிழ்த்து தண்ணீர் ஊற்றி சகாக்களிடம் பாட்டம் அப் சொல்லி சரேலேன வாய்க்குள் கவிழ்த்துக் கொண்ட போது எங்கள் வயிறு எரிந்தது..! 

வெளியே வந்ததும் 4 பொட்டலங்களை பிரித்து வேறு வாயில் போட்டும் கொண்டார் (மாவா)  இப்போது அவரிடம் இருந்து மதுவும் மாவாவும் கலந்து ஒரு மணம் வீசியது..! இந்த ப்ளேவரில்  AXE ஸ்பிரே தயாரித்தால் ஒரே நாளில் அந்த கம்பெனி திவாலாகிவிடும் என்று என்னால் அடித்து சொல்லமுடியும்...! வண்டியில் வந்தவர்கள் அனைவரும் பீதியில் இருந்தோம்..! 

இவரை ஏற்பாடு செய்த ஆளிடம் எங்கள்  டைரக்டர் போனில் தொடர்பு கொண்டு புகார் செய்தார்..! எங்களுடன் வந்திருந்த பெண்கள் (ஹீரோயின் மற்றும் அவரது அம்மா) வண்டியில் இருந்து இறங்கிவிட்டார்கள்..! இத்தனைக்கும் எங்கள் வண்டியில் வந்த மூவருக்கு அருமையாக டிரைவிங் தெரியும் என்ற போதும் அந்த அபாயகரமான பகுதியை கடக்க தயங்கினார்கள்..!

பண்டிட் கொஞ்சமும் அசரவில்லை அந்த இடத்தை நான் கடக்கிறேன் இதை சாப்பிட்டால் மட்டுமே இதை கடக்க முடியும் எனது 15 வருட அனுபவம் என்றார்..! இதற்குள் அனைத்து டிரைவர்களும் அவருக்கு ஆதரவாக வர வேறு வழியின்றி பயணத்தை தொடர சம்மதித்தோம்..! படாரென்று கூலிங் வாட்டர் பாக்கெட்டை கடித்து முகத்தில் தெளித்து கொண்டார் பண்டிட்...! முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு வாய் கொப்பளித்து வண்டியை கிளப்பினார்...! 

அவர் இது வரை வண்டி ஓட்டியதற்கும் இதற்கும் நிறைய வித்யாசம் இருந்தது ஒரு குலுங்கல் கூட இல்லாமல் வெண்ணெய்க்குள் இறங்கிய கத்தி போல் வண்டி கிளம்பியது..! நான் முன் சீட்டில் அவருடன்..! என் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது..! ஒரு சிறுத்தை இரையை பார்ப்பது போல் இருந்தது அவர் பார்வை..! 5 நிமிடம் அந்த பாதைக்குள் வந்தோம்.!

கிறுக்கு பிடித்தது போல் இருந்தது சத்தியமாக 2000 அடி ஆழம் கண்ணுக்கு எட்டியவரை எங்களுக்கு இடது புறம் பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்கு, பள்ளதாக்கு, பள்ளதாக்கு... போட்டு தாக்கியது அடுத்த மலை என்பது தென்படவே இல்லை 25 கிலோ மீட்டர்கள் இது தான் ஹீரோயின் மயங்கி விட்டார்.. பண்டிட்டின் சிறுத்தை கண்கள் சாலையில் மட்டுமே இருந்தது!

20 நிமிட பயணம் அது ஆனால் இன்று நினைத்தாலும் என் முதுகு தண்டில் அண்டார்டிகா தெரியும்..! பாதி நேரம் கண்களை மூடியபடி தான் பயணித்தேன்..! திடீரென்று வண்டி குலுங்கியது அனைவரும் அலறினோம்..! நீங்க சாப்பிடுற இடம் வந்தாச்சு என்றார் பண்டிட்..!

ஆம்..! அந்த அபாயகரமான இடத்தை கடந்து நாங்கள் சாப்பிடும் இடத்தை அடைந்திருந்தோம்.. எங்கள் இயக்குனர் ஓடிப்போய் பண்டிட்டை கட்டிக் கொண்டார்..! நீ பெரிய ஓட்டுனண்டா என்ற போது சிரித்துக் கொண்டே பண்டிட் சொன்னது.. ஸார் நான் காலையிலேயே சரக்கு அடிச்சுட்டேன் இப்ப நீங்க பாத்ததால இது பெருசாயிடுச்சு என்றார்!

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது எவ்வளவு தவறு என்றாலும் இது போல பயணங்களில் அவர்களது நம்பிக்கை கிறுக்குத்தனமானது என்று தான் தோன்றியது.. ஆனால் இது தான் இன்றைய ஓட்டுனர்களின் நிலை... அதுவும் வட இந்திய டிரைவர்கள் யோக நிலையில் தான் வண்டி ஓட்டுகிறார்கள்..! இது சரியா என ஓட்டுனர்கள் தான் சொல்ல வேண்டும்..!

பிறகு ஒரு மணிநேரம்... நாங்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்ப எங்கள் கைடே வண்டி ஓட்ட ஆரம்பித்தார்...! பின் சீட்டில் காஷ்மீரி உளறல்களுடன் தூங்கிக்கொண்டிருந்தார் பண்டிட்..! அவர் வண்டி ஓட்டுவேன் என்றுதான் சொன்னார் ஆனால் இனி ரிஸ்க் எனும் ரஸ்க் சாப்பிட விரும்பததால் நம்ம கைடே வண்டி ஓட்டினார்..!

150 கி.மீ தாண்டியதும் காஷ்மீரிகளின் கிராம வாழ்க்கை தெரிய ஆரம்பித்தது..! ஆடு வளர்ப்பது மிக முக்கியம்..! நம்ம ஊர் ஆடுகள் போல அல்ல அங்கு, அத்தனையும் கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகள் குறிப்பிட்ட காலத்தில் அவற்றை கீழிருந்து மேலே குளிருக்கு அழைத்து செல்ல வேண்டும்..! அப்போது தான் அந்த உரோமம் வளருமாம்..!
நீங்கள் கூட்டமாக எவ்வளவு ஆடுகள் பார்த்து இருப்பீர்கள்? 100, 200,500, 1000,2000? 

கிட்டத்தட்ட அந்த பயணத்தில் 2 இலட்சம் ஆடுகள் நான் பார்த்து இருப்பேன்..! ஒவ்வொரு ஆட்டுமந்தையிலும் குறைந்தது 5000 ஆடுகள் இருக்கும்..! அதற்கு நம்ம ஊரு கீதாரி போல ஒருவர், அவரது உதவியாளர் இருவர் இவர்களுக்கு சமைக்க 3 பேர் மொத்தம் 6 பேர் குழு! கட்சி மாறக்கூடிய எம் எல் ஏக்களை அழைத்து செல்வது போல் அதை பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்..! அப்படியும் சில ஆடுகள் பள்ளத்தில் தாவி ஓடிவிடுமாம்..! (கேப்டன் கவனத்திற்கு)

வெறும் விசில் சப்தத்திலேயே அத்தனை ஆடுகளையும் வழி நடத்தி செல்கிறார்கள்..! 2000 ஆடுகள் சாலை நடுவே சென்று கொண்டு இருக்க எங்கள் வண்டி வழி கேட்டு ஹாரன் அடிக்க அந்த கீதாரி ஒரு விசில் கிக்கிக்கிக்கிக்கி என்று அடித்தவுடன் 5 வினாடிகளில் அத்தனை ஆடுகளும் வண்டிக்கு வழி விட்டு ஒதுங்கியது ஆச்சர்யம்...! அதிமுகவினரைப் போல் அவ்வளவு பணிவு, பயம்..!

அடுத்து மலைக்குகை பயணங்கள்..! நீளமான இருள் குகைக்குள் பயணம் சிலிர்ப்பூட்டும் பயணங்கள்..! இந்த குகை வாசலில் ராணுவத்தினரின் செக்போஸ்ட் உள்ளது, இங்குதான் அந்த ஆட்டு மந்தைகள் காத்திருப்பில் வைக்கப்படுகிறது..! கூட்டணிக்கு காத்திருப்பது போல...! ஆனால் ரொம்ப காக்க வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்த மந்தைகளை அந்த கணவாயில் அனுமதிக்கிறார்கள்..!

திடீரென்று சூழும் இருள் பிறகு வெளிச்சம் என அற்புதமான பயணம் அது..! கார்கில், லே, லடாக், போன்ற ஊர்களின் தூரத்தை குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளை பார்க்கும் போது நாம் எல்லையில் இருக்கிறோம் என்பது பெருமிதமாக இருந்தது... சாலையோரம் எல்லா கடைகளிலும் கிரிக்கெட் பேட்டுகள் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்..!

காஷ்மீர் வில்லோ என்ற மரத்தில் செய்யப்படுபவை கிரிக்கெட் பேட்டுகள் என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன்..!காஷ்மீரை நெருங்க நெருங்க நம்ம சென்னை ரோடுகளில் உள்ள கும்பகோணம் காபி கடை போல குங்குமப்பூ கடைகள் தென்படுகின்றன..! இடையில் சாப்பிட நிறுத்தும் கடைகளில் தந்தூரி ரொட்டிகளும் தட்டைப்பயிர் க்ரேவியும் அற்புதம்..!

எல்லா கடைகளிலும் ப்ரெட் ஆம்லெட் கிடைப்பது ஆறுதல்...! இத்தனை தூரத்திலும் தொடர்ந்து கூட வரும் நெட் வொர்க் BSNL மட்டுமே...! ஹட்ச் நாய் விளம்பரம்  BSNL க்கு தான் பொருந்தும்..! காஷ்மீர் செல்பவர்களுக்கு இந்த நெட் வொர்க்கை பரிந்துரைக்கிறேன்...! இது இருந்தால் நீங்கள் நாராயணசாமி போல் பேசலாம் வேறு நெட்வொர்க் எனில் நீங்கள் மன்மோகன் தான்...!

ஒரு வழியாக ஶ்ரீநகர் அடையும் போது மணி 7..! எங்களுக்கு தங்க ஒதுக்கப்பட்ட படகு வீடு மெஜஸ்டிக்..! தால் ஏரிக்குள் இருந்தது...! தால் ஏரி ஒரு ஏரி மட்டுமல்ல அது மிதக்கும் சிறு ஊர் அங்கு தனி உலகமே இருக்கிறது..! இரவில் வெளிச்ச புள்ளிகளில் ஏராளமான படகு வீடுகள் அசைந்து கொண்டிருப்பது தெரிய நதியில் படகுப் பயணம்...! இரவில் அதன் அழகு தெரியவில்லை..! போட் நிறுத்தம் 9 தான் எங்கள் படகு வீட்டுக்கு அருகில்..! ஒரு வழியாக அந்த படகு வீட்டிற்கு வந்தோம்..! 

5 இரட்டை படுக்கை அறைகள், சமையலறை, பணியாள், வரவேற்பறை, நீண்ட லாபி, டிஸ்கஷன் அறை, பெரிய டைனிங் ஹால், ஜிம், என சகல வசதிகளும் கொண்ட படகு வீடு அது..! மிதமான குளிர் அடித்து கொண்டு இருந்தது, இரண்டு நாள் பயணக்களைப்பு வேறு..! ஓடிப்போய் வெந்நீரில் சுகமாக குளித்து விட்டு வந்த போது அடுத்த ஆச்சர்யம்..!ஆவிபறக்க டைனிங் ஹாலில் ஏராளமான உணவு வகைகள்..! ஏன்னா எல்லாம் நம்ம ஊரு சாப்பாடு..!

வெஜிடபிள் சூப்,பூப்போல பாசுமதி அரிசிச்சாதம், பருப்பு நெய், பூண்டுப்பொடி, பூசணிக்காய் சாம்பார், அப்பளம், உருளைக்கிழங்கு காரக்கறி, பீன்ஸ் அவரைக்காய் பொரியல், சுண்டைவத்தல் புளிக்குழம்பு, மிளகு ரசம், தயிர், ஆவக்காய் ஊறுகாய்,கேட்க கேட்க சூடாக மிளகு வெங்காயம் போட்ட ஆம்லெட் என அமர்க்களப் படுத்தி இருந்தார்கள்..! திவ்யம்..!

அடுத்த நாள் படப்பிடிப்பு இல்லை ஆகவே நன்கு ஓய்வெடுக்க சொன்னார்கள்.. நிம்மதியான உறக்கம்.. காலை 8 மணிக்கு தான் எழுந்தேன்.. வெளியே எழுந்து வந்த போது சூடான டீயும் ரஸ்க்கும் தயாராக இருந்தது...! வெளியே டீக்கோப்பையுடன் வந்தேன்... உலகை மறந்தேன்...! இயற்கை எவ்வளவு அழகு என்று தால் ஏரி எனக்கு சொன்னது..! ஆஹா அது..!

தொடரும்...



காஷ்மீர் கலாட்டா..! பார்ட் - 3


கண் முன்னே கடல் போல தால் ஏரி... வண்ண வண்ணப் படகுகள் பின்னணியில் பனியையே குல்லாய் போட்டது போன்ற இமயமலைத்தொடர்...அதிகாலை பட்டர் பேப்பர் புகைப்பனிப் படலம்..! செல்லமான சூரிய ஒளி, என அந்த சூழலே ரம்மியம்.. இந்தப்பகுதி முழுவதும் தால் ஏரிக்குள் தான் இருக்கப் போகிறோம்.! கவனம்  100 மீட்டர் வரை ஆழம் உள்ள ஏரி..!


தால் ஏரி 8 கிலோ மீட்டர் நீளம் 4 கிலோ மீட்டர் அகலம் கிட்டதட்ட 26 சதுர கி.மீ பரப்பளவுள்ள பிரம்மாண்ட ஏரி, சில இடங்களில் அம்மாவை கண்ட அமைச்சர்கள் போல கூனிக் குறுகியும்,சில இடங்களில் திமுக மாநாடு போல் பிரம்மாண்டமாகவும் விரிந்திருக்கும் நீர்அழகி..! இந்த ஏரிக்குள் 4 வார்டுகளும் அதற்கு கவுன்சிலர்களும் இருக்கிறார்கள்...!


காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள், இறைச்சி, ஆடைகள், அணிகலன்கள், குங்குமப்பூ, தையற்கடைகள், ரீசார்ஜ் கூப்பன்கள், ப்யூட்டி பார்லர்கள்,பெட்ரோல் பங்குகள், பூங்கொத்து கடைகள், கைவினைப் பொருட்கள், பலசரக்கு கடை, பால் விற்பனை, ஓட்டல்கள், டீக்கடைகள் போன அனைத்தும் ஏரிக்குள் உள்ள மார்க்கெட்டில் உள்ளது..!


கரையை விட விலை அதிகம்..! தி.நகரில் பெரிய கடைகளுக்கு போகும் முன் வழிமறிக்கும் நடை பாதை கடைக்காரர்கள் போல இங்கும் நடமாடும் படகுக் கடைகள் உள்ளன..! நாம் படகில் பயணிக்கும் போதே நம் படகை நெருங்கி வந்து லாவகமாக நம்மோடு இணைந்து துடுப்பு செலுத்தி வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.. !அவருக்கு தமிழருவி மணியன் போல நம் படகோட்டியும் உதவுகிறார்..!


நான் மேலே சொன்ன அத்தனையும் படகுக் கடையிலும் கிடைக்கும்..! பேரம் பேசும் நம் ஊர் பெண்கள் தான் இந்த வணிகத்திற்கு லாயக்கு...! ஏனெனில் 1 கிராம் குங்குமப்பூ 100 ரூபாய் 10 கிராம் ஆயிரம் ரூபாய், நான் பேரம் பேசி 500 ரூபாய்க்கு வாங்கினேன்.! மறுநாள் அதே 10 கிராமை 200ரூபாய்க்கு வாங்கி என் முகத்தில் குங்குமத்தை பூசினார் ஹீரோயின் அம்மா..!


பொருட்களுக்கு வாய்க்கு வந்தபடி விலை வைத்து இருக்கிறார்கள்..! காஷ்மீர் செல்பவர்கள் முதலில் வாங்க வேண்டிய பொருட்களை நோட்டம் விட்டு  பல இடங்களில் விலை விசாரித்து பிறகு ஷாப்பிங் செய்வது நலம்.! படகில் வரும் குங்குமப்பூ வாங்கவே கூடாதாம்.!


எங்கள் ஓட்டல் பணியாள் விக்ரம் சிங் சொன்னார்...! ஏன் என்றோம்.. ?அது மலிவான தரம் 10 கிராம் 50 ரூபாய் தான் என்ற போது ஹீரோயின் அம்மா முகத்தில் சேம் கும் கும்...! எனக்கும் குபீரென மகிழ்ச்சி பொங்கி பெருக்கெடுத்து ஓடி தால் ஏரியில் கலந்தது..!


இந்த ஏரியிலும் ராணுவத்தின் அதிநவீன ஆயுதம் தாங்கிய படகுப் பிரிவு ரோந்து வருகிறது ஏரியின் நடுவில் பிரம்மாண்டமான ராணுவப் படகுத்துறை உள்ளது.. விபத்துகள் ஏற்பட்டாலும்  விரைந்து வந்து உதவுகிறார்கள் ராணுவர்கள்..!


அங்குள்ள போக்குவரத்து படகுகள் ஷிகாரா என்று அழைக்கப்படுகிறது இதற்கு நீர்ப்பறவை என அர்த்தமாம்.!அங்குள்ள வீடுகளில் கட்டாயம் 2 படகுகள் இருக்கின்றன.! அனைவருக்கும் அந்த தால் ஏரி தாய் போல அங்குள்ள குழந்தைகள் சர்வ சாதாரணமாக அதில் குதித்து நீச்சலடிக்கிறார்கள்..! இவ்வளவு பெரிய ஸ்விம்மிங் பூலை அம்பானி கூட கட்டமுடியாது..! பொறாமையாக இருந்தது..!  


பெண்கள் தங்கள் பிள்ளைகளை படகில் அழைத்து சென்று பள்ளியில் விட்டு வருகிறார்கள் தரையோ தண்ணீரோ இந்த வழக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயல்பு போலும்...! மாலை ஆண்கள் அழைத்து வருகிறார்கள் அவருக்கு இறைவன் கொடுத்த வரம் போலும்..!


இவ்வளவு சிறப்புள்ள தால் ஏரி பாசி பிடித்து பாழ்பட்டு கிடக்கிறது...! அதன் பழைய அழகு போய் மார்கெட் இழந்த கதாநாயகி போல பொலிவின்றி கிடக்கிறது... திரும்பிய பக்கமெல்லாம் பாசி ஒருபக்கம் அழித்துக் கொண்டு வருவதற்குள் மறு பக்கம் வளர்ந்து விடுகிறது காஷ்மீர் அரசின் பெருங்கவலையே இதை தூய்மை படுத்துவது தான்..!


இப்போது ஒரு கிலோவுக்கு 1 ரூபாய் திட்டம் போட்டுள்ளார்கள்... அதாவது ஒரு கிலோ பாசிகுப்பையை நகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தால் 1 ரூபாய் கிடைக்கும்..! சராசரியாக 10 மணி நேரம் படகில் போய் 10 டிரிப் அடித்தால் 1000கிலோ குப்பையை அள்ளி தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்..!


இந்த திட்டம் நன்கு பயனளிப்பதாக சொன்னார்கள்..! தால் ஏரி மார்க்கெட்டுக்குள் ஒரு விசிட் அடித்து பார்க்காமல் திரும்பாதீர்கள்..! படகில் ஏறும் போதும் இறங்கும் போதும் ஜாக்கிரதை  ஏனெனில் நாங்கள் போன 3 வது நாளில் படகில் இருந்து இறங்கிய பெரியவர் கால் தவறி ஏரிக்குள் விழுந்து விட்டார்..! உடனடியாக காப்பாற்றினர்..! பிறகு தான் தெரிந்தது தினசரி இது போல 100 பேர் விழுகிறார்களாம் ஜாக்கிரதை...!


நானும் விழுந்தேன் ஏரியில் அல்ல குதிரை மீது இருந்து...! அது...!


தொடரும்.... 


காஷ்மீர் கலாட்டா...! பார்ட் - 4


குல்மார்க் (குல்மாக்)...!


குல்மாக் ஶ்ரீநகரில் இருந்து 52 கி.மீ தூரம்..! கிட்டத்தட்ட சென்னை-செங்கல்பட்டு தொலைவு இதில் மலைப்பயணம் 30 கிலோமீட்டர்கள் நம் ஊட்டி போல இருக்கும்..! குல்மாக் வந்தவுடன் ஒரு கணம் விசிலடிப்பீர்கள்..! எதிரே பிரும்மாண்டமான பனிமூடிய இரு சிகரங்கள் வரவேற்கும்..! ஒன்று அபஃர்வாட் சிகரம் மற்றொன்று கோங்தாரி சிகரம்..!


அபஃர்வாட் 4200 மீட்டர் உயரமும் (13,780 அடி) கோங்தாரி 3,747 மீட்டர் உயரமும் (12,293அடி) கொண்டவை கிட்டத்தட்ட பாதி எவரெஸ்ட் உயரம்..! அது மட்டுமின்றி இங்குள்ள மிகப் பெரிய அட் ராக்ஷன் ஆசியாவின் மிக உயர்ந்த கேபிள் கார் சுற்றுலா..! உலகின் இரண்டாவது மிக உயரமான கேபிள் ஸ்டேஷன் அமைந்துள்ளது..!


குல்மாக் முற்கால மன்னர்கள் யூசுப்ஷா மற்றும் ஜஹாங்கீரின் கோடை வாசஸ்தலமாக இருந்தது..! அவர்கள் ஓய்வெடுக்க விடுமுறையை கழிக்க இங்கு அடிக்கடி வருவார்களாம்.!

குல்மாக்கின் பழைய பெயர் கெளரிமாக்..! சிவ பெருமானின் மனைவி பெயர்...! இதை குல்மாக் என மாற்றியவர் யூசுப் ஷா தான்..! இதற்கு அர்த்தம் ரோஜாக்களின் பிரதேசம்..!


கெளரிமாக் குல்மாக் ஆனதை நல்லவேளை யாரும் கண் "மோடி"த்தனமாக இதுவரை எதிர்க்கவில்லை என்பது ஆறுதல்..! கோங்தாரியில் கேபிள் கார் செல்லும் இடம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது..! முதல் நிறுத்தம் காண்ட்லா இது 2,600 மீட்டர் உயரம் 8,530 அடி..! இரண்டாவது நிறுத்தம் கோங்தாரி வேலி 3,747மீட்டர் உயரம் 12,293 அடி..!


கேபிளில் 6 பேர் ஏறலாம் மெதுவாக தரையோடு கிளம்பி ஜிவ்வென்று மேலே ஏறும்...! வயிற்றுக்குள் லட்சம் பிள்ளையர் எறும்புகள் ஊறும், காதை அடைக்காவிட்டால் கிர்ரென்று இருக்கும்..! ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் சுற்றிலும் பனிமலைக்கு நடுவே நாம் இருப்போம்...! நான் அப்போது என்னை ஒரு பருந்து போல நினைத்துக் கொண்டேன்...!சாகசப் பிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது திகில் சிலிர்ப்பு அனுபவம்..!


காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் இதில் மதியம் 3மணிக்குள் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள்...!பெரியவர்களுக்கு 500 ரூபாயும் சிறுவர்களுக்கு 250 ரூபாயும் கட்டணம் ராணுவத்தினருக்கு சிறப்பு சலுகை உண்டு.. முதல் நிறுத்தம் 9 நிமிடப்பயணம், இரண்டாவது 12 நிமிடப்பயணம்..! 


இதய நோய், ஆஸ்த்துமா உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை..! திங்கள் அன்று விடுமுறை...! வானிலை சரியில்லாத அன்றும்  இயங்காது..! 12000 அடியில் பெரிய பனிச்சறுக்கு மைதானத்தில் உங்களை இறக்கி விடுவார்கள்..! அங்கே விளையாட ஆரம்பிக்கும் உங்கள் பிள்ளைகள் திரும்பி போகலாம் என்று சொன்னால் இலவசமாக நான் கூட்டிச்செல்கிறேன்..!


இதற்கு அடுத்தபடியாக நிறுத்தம் 3 ஒன்று உள்ளது..! அதற்கு கேபிள் கார் இல்லை அது சாகசமோ சாகசம் நிறைந்த பாதை...! குதிரை மூலம் தான் மலை ஏற முடியும் அதுவும் கரடுமுரடான பாதை..! அந்த இடத்திலிருந்து மேலே செல்ல நூற்றுக்கணக்கான குதிரைகளும் அதன் கைடுகளும் இருந்தனர் ஒரு ஆள் மேலே போய் வர 2200 ரூபாய்..! 


மேலே உச்சி என்பது நான்சொன்ன 12ஆயிரம் அடி பனிசறுக்கு மைதானம் பக்கத்து வீடு...! அதாவது அடுத்த மலை அதை விட இது 1000 அடி உயரம் அதிகம்..! காட்டாறுகள், பனிச்சகதி, வழுக்கும் பனி,இது கண்ணாடி மாதிரி இருக்கும் கால் வச்சா அவ்ளோ தான் சர்ருன்னு இழுத்து விட்டுடும் இத்தனையும் சொல்லி விட்டு போகலாமா என்றார்கள்..! 


நானும் கைப்புள்ள கணக்கா வாண்ட்டா வண்டி (குதிரை) ஏறிட்டேன்..! இந்த வழியில் மேலே போகாதீர்கள், இந்த பயணம் சட்டப்பூர்வமானதல்ல, உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை போன்ற அறிவிப்பு பலகைகளை அலட்சியம் செய்துவிட்டு பலர் மலை ஏறிக் கொண்டிருந்தனர்..! அதில் அதிகம் பயமுறுத்தியது கைடு சொன்ன ஒரு வார்த்தை...!


பாகிஸ்தான் இங்கிருந்து 55 கிலோமீட்டர்தான் என்று ஏதோ உசிலம்பட்டிக்கு போற மாதிரி சொன்னார்..! ஒரு கணம் அனைவரும் தயங்க, அட அது அந்த மலைக்கு அந்த பக்கங்க என்றார்.! திரும்பி வரும் வரை நான் மலை உச்சியை பாத்துகிட்டே வந்தேன் யாராவது பாகிஸ்தான் காரங்க வர்றாங்களானு.! ஒரு வேளை தூரத்தில் பைனாகுலர் வழியாக என்னை அவங்க பார்திருந்தா நம்ம கேப்டன் தான் வர்றாருன்னு நினைச்சு பயந்துருப்பாங்க போல..!


குதிரைப்பயணம் பற்றி சொல்வதற்குள் இந்த கட்டுரை பெருசா ஆனதால அடுத்த பார்ட்டுல நான் விழுந்த கதை..!


தொடரும்...


காஷ்மீர் கலாட்டா...! பார்ட் - 5

முதலில் குதிரைச் சவாரி என்பது பற்றி பார்க்கலாம்..! குதிரைமீது அமர்ந்து சமதளத்தில் நிலத்தில் ஓட்டுவது வேறு, மலையேறுவது என்பது வேறு..! அதற்கு முன் குதிரை ஏறி அமர்ந்து பார்க்கவும்... பஸ்ஸின் கடைசி சீட்டில் அமர்ந்து குண்டும் குழியுமான சாலையில் பிரயாணம் செய்வது போலவே இருக்கும்..! இதுவரை ஓரிரு முறை கொடைக்கானலிலும், மெரினா பீச்சிலும், குதிரை ஓட்டிய அனுபவத்தை தவிர எனக்கு பெரிய அனுபவம் ஏதுமில்லை..! 

நான் குதிரையில் அமர்ந்திருந்ததே பைல்ஸ் வந்தவன் போல பரிதாபமாக இருந்தது..! ஒரு புறம் சாய்ந்தே சைக்கிள் பழகுபவன் போல அமர்ந்திருந்தேன்...! மற்றவர்களுக்கு எல்லாம் மட்டக் குதிரை தந்து விட்டு எனக்கு மட்டும் ஜாதிக்குதிரை தந்தார்கள்...! அதுதான் என் வெயிட் தாங்குமாம், (பின்னே குதிரை மேல யானையை ஏத்துனா) அது நல்ல உயரம்...!

குதிரையின் முதுகு விளிம்பே என் தோள்களுக்கு ஈடாக இருந்தது அதன் மீது ஏறி அமர்ந்த போது மொட்டைமாடி கைப்பிடி சுவர்மீது அமர்ந்தது போல் இருந்தது.. இதில் அது ஆடி அசைந்து நடக்கும் போது நானும் அதற்கு எதிர்த் திசையில் அசைந்து அதன் சேணத்தை சரித்து விட்டேன்...! காஷ்மீரியிலோ அல்லது உருதிலோ அந்த கைடு என்னை பார்த்து சொன்னது சத்தியமாக நல்ல வார்த்தை கிடையாது என்பது அப்பட்டமாக தெரிந்தது..!

முதலில் சில கிலோ மீட்டர் தூரம் சம தளம் அதிலியே இந்த ஆட்டம்..! அடுத்து மலைப்பாதை ஏற ஆரம்பித்ததும் என் குலை நடுங்கலாயிற்று..!மேடு பள்ளங்கள் பாறைகள் குதிரையே தடுமாறி தான் ஏறுகிறது..! முன்பை விட குலுங்கல் அதிகம்..! என்னால் உட்காரவே முடியவில்லை..! உடன் வந்த கைடுக்கு குதிரையை வழி நடத்தி செல்வதை விட அடிக்கடி சரிந்து கொண்டிருக்கும் என்னை தாங்கிப்பிடிப்பது தான் வெறுப்பு போலும்..!

அவ்வப்போது குதிரையை குச்சியால் குத்துவது போல என்னையும் குத்திக்கொண்டே வந்தான்..! வந்தது பாருங்கள் ஒரு பெரிய ஏற்றம் அதில் ஏறிய குதிரை ஒரு சிறு பள்ளத்தை ஜம்ப் செய்ய நான் கடிவாளத்தை விட்டு விட தூக்கி வீசப்பட்டேன்...! வலது புறம் பாறைகள் 20 அடி பள்ளம் இடது புறம் புல்வெளி எனக்கு கடன் தந்த நல்ல கடன்காரன் ஒருவன் வேண்டுதல் போல...!நான் புல்வெளியில் விழுந்தேன், லேசான சிராய்ப்பு தான்..! 

இது போல மூன்று முறை விழுந்தேன் ஒரு வழியாக 8000 அடி உயரத்தில் டீக்கடையில் சாப்பிட்டு விட்டு பயணத்தை துவக்குகையில் மூச்சு திணற ஆரம்பித்தது இடையில் காட்டாறு ஒன்று பெரும் வெள்ளப்பெருக்கோடு குறுக்கிட்டது.. மணி மதியம் 3 ஆகிவிட இனி உச்சிக்கு போய் திரும்புவது கடினம் என்று அன்று திரும்பி விட்டோம்,மீண்டும் மறு நாள் அதே பயணம்..!

என்னை பார்த்தவுடன் நேற்றைய கைடு எனக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு போய்விட..! ஒரு தெய்வம் வந்தது,அவன் பெயர் ரஹீம் இளைஞன்..! அவ்வளவு அழகாக என் பயம் போக்கினான்.! குதிரை மீது அமர்ந்து மேடு ஏறுவதை விட இறங்குவது அபாயமானது அது உச்சியில் நிற்பவனை பின்னால் இருந்து தள்ளியது போல வேகமாக இருக்கும்.!

வெறும் 15 அடி சரிவு என்றாலும் உயரமான குதிரை மீது அமர்ந்து அங்கிருந்து செங்குத்தாக இறங்குவது அடி வயிற்றில் கத்தி செருகியது போல இருக்கும் அதுவும் இரு புறமும் 200 அடி கிடு கிடு பள்ளம் எனும் போது நினைத்து பார்க்கவும்..! ரஹீம் தான் என் பயம் போக்கினான்..! குதிரை சவாரியின் சூட்சுமம் அதன் சேணத்தில் தான் இருக்கிறது என்றான்..! பாடம் அது..!

குதிரை சேணத்தில் இரு புறமும் கால்களை சரியாக பொருத்தி வைத்து கொள்ளுதல் முதல் படி ,இது சரியா என்பதை குதிரை நடக்கும் போது எழுந்து நின்று பார்க்க வேண்டும்..! கால்கள் சரியாக இருந்தால் தான் எழுந்து நிற்க முடியும்.. ! அதே போல அமரும் இடத்தில் சேணம் அசைய அசைய அதன் திசையிலேயே நமது பிருஷ்டங்களை அசைக்க வேண்டும்..!

நான் எதிர் திசையில் அசைத்து சேணம் அவிழ்ந்தது இப்போது ஞாபகம் வந்தது..! மேடு ஏறும் போது நம் உடலை முன்புறம் சாய்த்துக்கொள்ள வேண்டும் பள்ளத்தில் இறங்கும் போது உடலை பின் பக்கம் சாய்த்துக்கொள்ள வேண்டும்.!ஒரு சிறிய மைதானத்தில் பயண ஓய்வுக்கு நிறுத்தும் போது சொல்லிக்கொடுத்தான்.. இப்போது தொடங்கிய பயணத்தில் நான் புது மனிதனானேன்..! மீண்டும் பயணம் ஆரம்பித்த போது குதிரைச் சவாரியின் சுகம் அறிந்தேன்..!

அடுத்த 6000 அடிப்பயணம் இனிதானது..! மிக எளிதாக என்னால் குதிரை ஓட்ட முடிந்தது சொல்லிக் கொடுப்பவன் கலைஞனாக இருந்தால் எல்லா கலைகளும் மிகச்சுலபமே.! அந்த சூட்சமம் புரிந்து விட்டால் இன்பமே..! எனத் தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்களும் 13000 அடி உயரத்திற்கு கைடு உதவி இல்லாமல் நானே குதிரையை ஓட்டிச் சென்று வந்தேன்..!

மலைஉச்சியில் தான் எங்கள் படபிடிப்பு  அதில் சுவாரஸ்யம் ஏதுமில்லை.. காட்டாற்று வெள்ளமும் பனிபடர்ந்த உச்சியும் பனிச்சகதியும் பெரிய பிரமிப்பை தரவில்லை குதிரைச்சவாரியைப்போல..., இந்நிலையில் இந்த இடத்தில் எங்கள் படபிடிப்பு முடிந்தது..! திரும்பிச் செல்லும் போது மீண்டும் குதிரையில் இருந்து விழுந்தேன்.. !பலத்த அடியுடன்...

தொடரும்...


காஷ்மீர் கலாட்டா...! பார்ட் - 6

குதிரையில் இருந்து விழுவது மிகப்பெரிய வலி..! அதை அனுபவித்தேன் ஒரு சிறு தவறினால்.! அதுவும் நன்கு பழகிய பின்பு சிறிது அஜாக்ரதையாக இருந்தாலும் ஆபத்து என்பதை..! அதை பார்க்கும் முன் என்னை சுமந்த குதிரையை பற்றியும்.. குதிரைகளை பற்றியும் பார்க்கலாம்..!

குதிரைகளை பற்றி நான் படித்தது உண்டு மனிதன் பழக்கும் மிருகங்களிலேயே அன்பை அதிகம் எதிர்பார்க்கும் மிருகம் குதிரை..! குதிரைகளோடு தினமும் பேசவேண்டும் குறைந்தது அரைமணி நேரமாவது, அப்போது தான் அது ப்ரியமாக அதன் எஜமானனிடம் பழகுமாம்...!

மூர்க்கமாகி விட்டால் தன் மேலுள்ள மனிதனை யானையைப் போல் குதிரையும் தள்ளிவிட்டு விடும்.! அம்மா அமைச்சர்களை நீக்குவது போல.! ப்ரியமாக பேசுபவர்களை அப்படித் தள்ளாதாம்.! அதுவும் அதன் முகத்தை கைகளால் வருடிக் கொடுத்து கொண்டே பேசுவது அதற்கு ரொம்பப் பிடிக்குமாம்..! அடுத்து அதற்கு உணவு தருவது..! 

பெரும்பாலும் தன் எஜமானன் கையால் சாப்பிடும் குதிரைகள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்குமாம்..! ரேஸ் ஜாக்கிகள் கூட குதிரை உணவு அருந்தும் நேரத்தில் அங்கு தன் கையால் தான் உணவளிப்பார்கள்..! அடுத்து தண்ணீர் காட்டுவது..! 

குதிரைக்கு மிகவும் பிடித்தது நீர் அருந்துவது...! அதிலும் நாங்கள் மலையேறிய போது காட்டாற்று வெள்ளத்திற்குள் இறங்கி எங்களை அக்கரை சேர்த்த குதிரை மிரட்சியுடன் தான் நீரை பார்த்தது..! ஆனால் அதை கடந்து ஓடை போன்ற பகுதிக்குள் நுழைந்ததும் ஆவலாகப் போய் நீர் அருந்த துவங்கியது..! அதற்கு அது தான் டாஸ்மாக் போலும்..!

நீர் நிலைகளை கண்டதும் கடந்து செல்லாது இரண்டு ஸ்டெப் பின்னாடி நகர்ந்து வாலை தூக்கி மீண்டும் முன்னால் நகர்ந்து முன்னும் பின்னும் முரண்டு பிடித்தால் அதற்கு சரக்கு(நீர்) தேவைப்படுகிறது என அர்த்தம்..! இப்போது அதனை நீர் அருந்த அனுமதித்தால் எந்த சைட்டிஷ்ஷும் இல்லாமல் ஃபுல்லாக குடித்துவிட்டு ஒரு கனைப்பு..! விக்கல் மாதிரி..!

இப்படி அதை சந்தோஷப்படுத்த வேண்டும்..! எனக்கு முதல் நாள் வந்த குதிரையின் பெயர் கல்நாயக்..! கருப்பு குதிரை...! கல்நாயக் தொடர்பு முதல் நாளே முடிந்துவிட்டது..! அடுத்த 5 நாட்களும் என் செல்லம் பாதல்..! பிஸ்கெட் பழுப்பில் இருக்கும் என் அழகு தேவதை..!
இவ்வளவு வெயிட்டில் என்னை என் தாய் கூட சுமந்திருக்க மாட்டாள்...! பாதல் சுமந்தது..! 

பொதுவாக குதிரைகளின் மொழி அதன் கனைப்புச் சத்தம்..! அதிலும் பெண் குதிரைகள் தான் அதில் சிறந்தவை..! ரஹீம் போன்ற குதிரைக்காரர்கள் அதற்கு கனைப்பிலேயே பாஸ்வேர்டு வைத்திருந்தார்கள்..! நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி போல ப்ப்ப்ப்ர்ரூரூவா, ப்ர்ர்ர்ர்ர்ர்ரூவா என்றும் கேரள ஆட்டோ டிரைவர்கள் ஸ்டைலில் ச்ச்ச்ச்ச்ச் என்றும் ஒலி எழுப்புகிறார்கள்..!

இதில் முதல் ப்ப்ப்ப்ர்ரூரூவா வலது என்றும்.. அடுத்த ப்ர்ர்ர்ர்ர்ரூவா இடது என்றும் ச்ச்ச்ச்ச் என்பது மெதுவா போ இப்படி அர்த்தங்கள்..! மிமிக்ரி தெரிந்ததால் வெகு சுலபத்தில் இதை நான் கற்றுக் கொண்டேன்..! ரஹீமுக்கு தான் நான் அவர்கள் பாஸ்வேர்டு மொழியை கற்றது பெரிய ஆச்சர்யம்..! பஹூத் அச்சா பய்யா... என்று சொல்லிக்கொண்டே இருப்பான்..!

பாதலுக்கு காரட் மிகவும் பிடிக்கும் என்றான் ரஹீம்..! 2வது நாள் ஶ்ரீநகரில் இருந்து செல்லும் போதே ஒரு மூட்டை காரட் வாங்கிச் சென்றோம்..! பாதலுக்கு ஏகக் குஷி, உற்சாகமாக கனைத்தாள் எனக்கும் பாஷை இப்போது தெரியுமாதலால் பாதலுடன் காதல் மொழியில் கனைத்தேன்.!அண்ணனும் கனைத்தேன் அவளும் கனைத்தாள் கனைப்பில் கனெக்டானோம்.

தினமும் ஒரு அரை மணி நேரம் அதோடு பேசுவேன் எதாவது... ஏன் அந்த ஓடையிடம் வந்த போது தடுமாறுன, காரட் நல்லா இருந்துச்சா, தண்ணி குடிக்கிறியா இப்படித்தான் என் சம்பாஷணைகள் இருக்கும்..! சில நேரம் தலையாட்டுவாள் சில நேரம் கனைப்பாள்..! 

கடைசி நாள் மாலை குதிரையை நிறுத்திவிட்டு திரும்பும் போது முன்னங்கால்களை தூக்கி, தலையை சிலுப்பி அடம் பிடிக்கும் குழந்தையை போல உடலை உதறிக் கொண்டாள் பாதல் நாங்கள் ஊருக்கு போகிறோம் நாளை வர மாட்டோம் என்பதை எங்கள் பேச்சுக்களில் இருந்து தெரிந்து கொண்டாள் போலும்..! எப்படிப்பட்ட உள்ளுணர்வு..!

மிருகங்களுக்கு 5 அறிவு என்று இனி யாரும் சொல்லாதிர்கள்..! அவை நாம் காட்டும் அன்பை பிரதிபலிப்பவை..! எனக்கு சேகுவாராவின் சாண்ட்டா குதிரையும்,பிருதிவிராஜனின் சேதக் குதிரையும் நினைவுக்கு வந்து போனது..! ரஹீமிடமும் பாதலிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு திரும்பிய போது யாரும் அறியா வண்ணம் நான் லேசாக அழுதேன்...!

இங்கு தான் நான் விழுந்த கதை..! குதிரையை விட்டு விட்டு திரும்பிய நான் எப்படி குதிரையில் இருந்து விழுந்தேன்? நியாயமான கேள்வி..! நாங்கள் வேன் நிறுத்திய இடம் 3 கி.மீ தூரம்..! வேனுக்கு நடந்து தான் செல்லவேண்டும்.. நாங்கள் ஏறிய குதிரைக்காரர்களின் ஸ்டாண்டு கிழக்கில் வேன் நிற்பது மேற்கில் அங்கு வேறு ஸ்டாண்டு..!

கிழக்கு ஸ்டாண்ட் மேற்கு பக்கம் வராது மேற்கு ஸ்டாண்ட் கிழக்கு பக்கம் வராது யாரோ ஒரு காஷ்மீர் கைப்புள்ள கோடுபோட்டு வச்சுருக்கான் போல..! நடக்க ஆரம்பித்த போது எங்கள் வேன் அருகே செல்ல கொடுக்கிறதை கொடுங்க என்று சில குதிரைக்காரர்கள் வந்தார்கள்..! நாங்களும் களைப்பினால் குதிரையில் போக முடிவெடுத்தோம்..!

அனைவரும் குதிரை ஏறினார்கள்..! நானும் குதிரை ஏற கால்பிடியில் கால் வைத்து எழும்பி மறு காலை குதிரை மீது போட்டு தடால் என மறுபக்கம் விழுந்தேன்..! அதாவது குதிரையின் இந்தபக்கம் ஏறி அந்தப்பக்கம் விழுந்தேன்கடந்த 5 நாட்களாக தினமும் ஒரு 8 முறை என்ற கணக்குப்படி கிட்டத்தட்ட 40 முறை குதிரை ஏறி இருக்கிறேன்..! ஒரு தடவை கூட விழலை.

இப்ப மட்டும் என்னாச்சு..! செய்த சிறு தவறு இது தான், குதிரையில் இந்த 5 நாட்களாக அதன் இடப்பக்கம் நின்று என் இடது காலை கால் பிடியில் வைத்து வலது காலை தூக்கி ஏறியே பழகி விட்டேன்..இப்போது உல்டா வலப்பக்கம் கால் வைத்து இடது காலை தூக்கி ஏறினேன் உடல் எடையை பேலன்ஸ் பண்ண முடியவில்லை.!விழுந்த வேகத்தில் நல்ல அடி..

என் இடது பக்க தலை தரையில்  மோதியது இங்கும் புல் தரை தான் காப்பாற்றியது அந்த தலையில் பட்ட அடிதான் வேன் ஏறும் வரை வேதனையாக இருந்தது... பிறகு காஷ்மீர் திரும்புவதற்குள் வலி குறைந்து விட்டது.. படகு வீடு திரும்பினோம்.. இரவுக் குளியல் முடிந்து உடல் துவட்டும் போது இடது இடுப்பில் சுளீர் என வலித்தது..! உட்கார்ந்தால் வலி இல்லை..!

நின்றால் வலித்தது, சரி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சாப்பிட்டு படுத்தேன்..  மறு நாள் காலை எழுந்த போது என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை..! எவ்வளவு முயற்சித்தும் வலது கால் மட்டுமே அசைந்தது..! எனக்கு இடது கால் என்பது உடலிலேயே இல்லை என்பது போல மரத்துப் போய்கிடந்தது...!


தொடரும்...


காஷ்மீர் கலாட்டா - பார்ட் - 7

அசைவற்று கிடந்த என் கால் என்னை பயமுறுத்தியது..! முதுகு தண்டில் சுளீர் வலி! என் உயிர்த் தோழன் படத்தில் பாபு என்று ஒரு நடிகர் கதாநாயகனாக அறிமுகமானார் அவரது 4 வது படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் ரிஸ்க் எடுத்து முதுகு தண்டில் அடிபட்டு கடைசி வரை போராடி இறந்து போனது என் ஞாபகத்தில் வந்ததும் எனக்குள் பீதி பெருக்கெடுத்தது.!

ஏனென்றால் எனக்கும் இது 4 வது படம் காலை 7 மணி தான் ஆகிறது டாக்டர்கள் வர வேண்டும் என்றால் படகில் கரைக்கு போய் அழைத்து வரவேண்டும் அன்று பஸ் ஸ்டாண்டில் கதாநாயகனை விரட்டி செல்லும் காட்சி வேறு 8 மணிக்கு கிளம்பினால் தான் படபிடிப்புக்கு சரியாக இருக்கும் அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க நான் மட்டும் படுக்கையில்..!

இன்று வேறு காட்சி எடுக்கலாம் என்றால் மறு நாள் அங்கு பந்த் அதற்கு அடுத்த ஒரு நாள் தான் அன்று நாங்கள் கிளம்பவேண்டும்.. என்ன செய்வது என அனைவரும் யோசித்துக் கொண்டிருந்த போது எங்கள் பணியாள் விக்ரம் சிங் வந்தார்.. என்ன பிரச்சினை எனக் கேட்டார்... மீண்டும் முகத்தின் முன் கொசுவர்த்தி சுருள்... இது தாங்க நடந்தது...!

எல்லாவற்றையும் கேட்டவர்  என்னை கைத்தாங்கலாக படுக்கையில் இருந்து எழுப்பி என் இரு கால்களையும் தரையில் படுமாறு வைத்தார்..! வலது கால் தரையில் பட்ட உணர்வு தெரிந்தது இடது காலில் ஒன்றுமே தெரியவே இல்லை, விக்ரம் சிங் தன் வெறும் காலால் அவரது பின் பாதத்தை என் இடது கால் பெரு விரலில் மிதித்து ஓங்கி அழுத்தினார்...!!!

ஒரு தரம்.. இரு தரம்... மூன்றாவது அழுத்தத்தில் நீர் நிரம்பி இருக்கும் தண்ணீர் தொட்டியின் கீழ்ப்புறம் துணி வைத்து அடைத்து இருப்பார்களே..! அதை பிடுங்கி விட்டால் பாய்ந்து வரும் நீர் போல விர்ரென ரத்த ஓட்டம் என் காலில் பாய்வதை உணர்ந்தேன்..இப்போது காலில் உணர்வு தெரிந்தது..! வெறும் 40 வினாடிக்களில் விக்ரம்சிங் என்னை குணப்படுத்தினர்...!

எப்படி இந்த முறை பற்றி உங்களுக்கு தெரியும் என்ற போது, தால் ஏரியில்  நன்கு நீந்த தெரிந்தவர்கள் குளிக்கும் போது ஸ்விம் ஸ்ட்ரோக் ஏற்படுமாம் அல்லது நீண்ட நேரம் குளிர் நீரில் நீந்தும் போது இப்படி ரத்த ஓட்டம் தடைபடுமாம் அவர்களுக்கு செய்யும் வைத்தியம் தான் இது என்றார் விக்ரம் சிங்..! ஆனால் முதுகில் வலி இன்னும் இருந்தது...,

அதை சொன்னதும் யூகலிப்டஸ்  எண்ணை கலந்த சுடு நீரில் டவல் நனைத்து ஒரு 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்த பின்பு அந்த வலியும் பறந்தோடச் செய்தார்... விக்ரம் சிங்கை எங்கள் படக்குழுவினர் கட்டிக்கொண்டனர். 1000 ரூபாய் அன்பளிப்பு தந்த போது அன்போடு அதை மறுத்து என்னை அவருக்கு ஆயுள் கடன்காரன் ஆக்கி விட்டார் விக்ரம் சிங்...!

பிறகு படகில் கரைக்கு சென்று முன்னெச்சரிக்கையாக ஆஸ்பிடல் சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது முதுகு தண்டிற்கு சற்று அருகில் எலந்தைப் பழம் அளவு ரத்தக்கட்டு இருந்தது..!அதற்கும் மருந்துகள் வாங்கிக் கொண்டு படபிடிப்புக்கு கிளம்பினோம்.! காஷ்மீர் பேருந்து நிலையத்தில் தான் படபிடிப்பு..அந்த பஸ்ஸ்டாண்டில் நுழைந்ததும் பீதி கிளம்பியது.!

அது...

தொடரும்...


காஷ்மீர் கலாட்டா - பார்ட் - 8

கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுற்குள் நுழைந்தது போலிருந்தது ஶ்ரீநகர் பஸ் ஸ்டாண்டு..! மக்களின் நடை உடை உருவம் எல்லாம் அப்படி..! தொள தொள பைஜாமா ஓவர் கோட்டு பெண்கள் தவிர்த்து எல்லார் முகத்திலும் நீண்ட தாடி... கருப்பு பர்தாக்கள், சிவப்பு ஜர்தாக்கள், உருது இரைச்சல்கள், கண்ட இடமெல்லாம் ஈரானிய முகங்கள்..!

அந்த பேருந்து நிலையம் தான் காஷ்மீருக்கு வடக்கே உள்ள ஊர்களுக்கு போக இயங்கும் பேருந்து நிலையம்..! அத்தனையும் கிட்டத்தட்ட பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஊர்கள்..! அந்த கிராமத்து மக்கள் தொழில் நிமித்தமாக காஷ்மீர் வந்து போவதால் தான் இங்கு நான் பார்த்த மக்களின் உடையில் நடையில் ஆப்கன் கலாச்சாரம் என்பது தெரிந்தது..!

நாளிதழ்களில் அடிக்கடி காஷ்மீரில் துப்பாக்கி சூடு...ராணுவத்தினர் மீது தாக்குதல் என்று நாம் படிக்கும் கார்கில்,பாரமுல்லா ஆகிய ஊர்களின் பெயர்களை தாங்கிய பேருந்துகளை பார்த்தேன்.. அவற்றை பார்க்கையிலேயே எனக்கு அஸ்தியில் புளிய மரமே கரைந்தது..! 

அந்த பேருந்துகள் ஒவ்வொன்றிலும் டிரைவர் கண்டக்டர் இல்லாவிட்டாலும் கட்டாயம் துப்பாக்கி ஏந்திய இரண்டு எல்லைப் பாதுகாப்பு படையினர் இருக்கிறார்கள்.! முன்னால் ஒருவர் பின்னால் ஒருவர் என ஒரு பஸ்சிற்கு இருவர்! அவர்களுக்கு ஆயுள் பஸ் பாஸ் எடுத்து தந்து உள்ளார்கள் போல..!அவர்களுக்கும் பஸ் ஓட்டத் தெரியுமாம்..!

அவர்களும் சர்வ சாதாரணமாக தாடை அரித்தால் கைத்துப்பாக்கியாலும்.. முதுகு அரித்தால் AK47 துப்பாக்கியாலும் சொறிந்து கொண்டு, பான் மென்று கொண்டும் பால்வாடிக்கு போகும் கைக்குழந்தைகள் போல் தினமும் பஸ்ஸில் போய் வருகிறார்கள்.!பேருந்துகளில் ஏற்றும் மூட்டைகளை சோதித்து தான் ஏற்றுகின்றனர்..! பஸ் கிளம்பும் முன் கார்கில்.. கார்கில்.. கார்கிலோய்ய்ய்ய்ய் என கத்துவதை தவிர எல்லாம் செய்கிறார்கள்..!

அடுத்து அந்த பேருந்து நிலையத்தின் சுகாதாரம்...! ஒருமுறை அங்கு சென்றால் நீங்கள் நம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு கோவில் கட்டுவீர்கள்..! சர்ஃப் எக்ஸல் நிறுவனம் கறை நல்லது என்ற வார்த்தையை இங்கு இருந்து தான் எடுத்திருப்பார்கள் போல..!அந்தளவிற்கு சுத்தத்திலும் சுகாதாரத்திலும் படு படு படு மோசமாக இருந்தது...!

மொத்த பேருந்து நிலையமே திறந்த வெளி கழிப்பிடம்...! ஒரு பஸ்ஸிற்கும் இன்னொரு பஸ்ஸிற்கும் போதிய இடை வெளி விடுவதே சிறுநீர் கழிக்கத் தான்...! என்று எழுதித்தான் போடவில்லை..! எங்கும் பார்த்தாலும் வெட்டி துண்டாக்கப்பட்ட கோழிக்கால்கள் லட்சக் கணக்கில் சிதறிக்கிடந்தன, பான் எச்சில்கள், பஸ்சிலிருந்து வடிந்த ஆயில், குப்பைகள்..!

கீழே கால் வைக்க ஷுவே கூசியது..!அங்குள்ள பஸ் டயர்கள் கங்கையில் இறங்கினால் சொச்ச கங்கையும் அழுக்காகிவிடும்..!இங்கு தான் எங்கள் படபிடிப்பு..! அதிலும் ஒடி விரட்டி பிடிக்க வேண்டிய காட்சி அவ்வளவு அழுக்குக்குள் எப்படி ஓடுவது என்பதை யோசிப்பதற்கு முன்... அங்குள்ள பஸ் பற்றி பார்க்கலாம்..!

வட இந்தியா லாரிகளை பார்த்து இருப்பீர்கள்..! அதைப்போலவே பஸ்சும் இருக்கும்..! நம்ம ஊரு பஸ்சுக்கு ராஜஸ்தான் ஸ்டைலில் முண்டாசு கட்டிவிட்டது போல ஒரு தோற்றம்..! அந்த முண்டாசு பஞ்சவர்ண கலரில் இருக்கும்..! அய்யனார் சிலை போல 90 டிகிரியில் அமர்ந்து தான் பயணிக்க வேண்டும்.. பேருந்தின் பராமரிப்பு பரிதாபமரிப்பாக இருக்கிறது..! 

வெள்ளை சட்டையுடன் ஏறி அமர்ந்தால் செலவில்லாமல் அது பழுப்பாக மாறும் வசதியுள்ள பேருந்து..! ஒவ்வொரு அங்குலமும் அழுக்கு அழுக்கு ஆஆஆழுக்கு..! பொது மக்களை அந்த பஸ்ஸில் பயணம் செய்ய வைப்பதே ஒரு தீவிரவாதச் செயல் என்றால் ஒப்புக் கொள்வீர்கள்..!
இங்கு சற்று சுத்தமான இடம் இருக்கிறதா?என்று பலரிடம் கேட்டோம்..!

அதற்கு அவர்கள் எங்கள் படக் குழுவினரை பார்த்த பார்வையில் பரிதாபமே தெரிந்தது..! ஒரு வழியாக பேருந்து நிலையத்தின் கடைசி பிளாட்பாரத்திற்கு அருகில் ஒரு மெக்கானிக் ஷெட் இருந்தது பேருந்து நிலையமே இவ்வளவு அசுத்தமென்றால் அந்த மெக்கானிக் ஷெட்..!

ஆனால் ஆச்சரியப்படும் அளவிற்கு அது சுத்தமாக இருந்தது..! அல்லது பஸ் ஸ்டாண்டை விட சற்று குப்பை குறைவாக இருந்தது..! அந்த இடத்தில் அடுத்த 4 மணி நேரம் படபிடிப்பு முடிந்து படகு வீடு திரும்பினோம்..! காஷ்மீரில் வந்த இந்த 8 நாட்களும் மறக்க முடியாதவை.!

அடுத்த நாள் காலை மீண்டும் டெல்லி பயணம்..! வழக்கம் போல பண்டிட் குளித்து குங்குமம் பூசி பான் மணக்க சிரித்தார்..! குங்குமப்பூ காஷ்மீர் மரப்பெட்டி கிரிக்கெட் பேட்டுகள் போன்ற ஷாப்பிங்குகள் முடிந்து ஜம்முவுக்கு புறப்பட்டோம்..! இரவு ஜம்முவிலிருந்து டெல்லிக்கு பேருந்துப் பயணம் அது பற்றி தனியே எழுதும் அளவுக்கு கதை இருக்கிறது..!

அதை தனியாக டெல்லி அனுபவங்களோடு எழுத உத்தேசம்..! மீண்டும் இமயமலை சாலை, மலைக்குகைகள், ஆடுகள் என டிட்டோ பயணம்..! காஷ்மீரிலிருந்து வேன் கிளம்பியது வேனின் பின் புறம் பனி மூடிய இமயம்..! ஒரு வினாடி அதை திரும்பிப் பார்த்தேன் அது கை அசைத்தது போல ஒரு தோற்றம்..! என் கண்களில் சட்டென்று நீர் கோர்த்து கொண்டது..!

#பை..பை.. காஷ்மீர்...!

நிறைந்தது...