Thursday 31 March 2016

மெழுகுச்சிலை அரங்கில்..

லூயிஸ் துசாட் பேலஸ் மெழுகுச்சிலை மியூசியம் இங்க இருக்குன்னு நண்பர் நந்தா சொல்ல, கிடைத்த கட்சியைக் கூட்டணியில் சேர்க்கும் திமுக போல ஆவலுடன் கிளம்பினோம்.அமெரிக்காவின் டாலஸ் நகரிலிருந்து 20 நிமிடக் கார் பயணத்தில் இருந்தது அந்த மியூசியம். பெரிய மசூதி போல முகலாய பாணி அமைப்பில் இருந்தது அந்தக் கட்டிடம்.! வாசலில் நமது மூதாதையர் ஒருவர் 40 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நின்று வரவேற்றார்.! 

கொரில்லா குரங்கார் தான் அவர்..அமெரிக்கர்களுக்கு அவர் கிங்காங்கார் அதன் பக்கத்திலேயே பிஸ்கெட்டுக்கு இரு கால் உயர்த்தி நிற்கும் நாய் போல நின்றார் நமக்கும் அமெரிக்கர்களும் அவர் டைனோசார் பெருமான். குரங்கார் உபயோகமில்லாத பழைய இரும்பு பல்சக்கரங்கள் மற்றும் பேரிங்குகளாலும் டைனோசரார் பழைய கார் உதிரி பாகங்களாலும் தயாரிக்கப்பட்டு நெடித்துயர்ந்து நின்றார்கள். மிக தத்ரூபமாக இருந்தது.

மியூசியத்தில் நுழைந்தோம் வாசலின் இடது புறத்தில் மியூசியம் செல்லும் வழியும் வலது புறத்தில் ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட் கண்காட்சியும் இருந்தது.. இந்த ரிப்ளீஸ் கண்காட்சியை ஏற்கனவே சில நாடுகளில் பார்த்து இருந்தபடியால் அதை லீவிட் என்று சொல்லிவிட்டு நுழைவுக் கட்டணம் வாங்கப் போனோம்.. அந்தரத்தில் தொங்கிய பீப்பாயில் இருந்து ஒரு துளையில் தண்ணீர் கீழே உள்ள தொட்டியில் விழுந்து கொண்டிருந்தது.!

இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? அந்த துளையின் விட்டம் எவ்வளவு சுற்றளவோ அதே அளவில் மேலிருந்து கீழாக தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது அதாவது ஒரு தூண் போல..! எப்படி இது சாத்தியம் என்பது கொஞ்சம் உற்றுப் பார்த்ததும் தெரிந்தது.. அந்த சுற்றளவின் கனத்திலேயே ஒரு டிராஸ்பரண்ட் பைபர் கிளாஸ் பைப் இணைக்கப்பட்டு அந்த பைப்பின் மீது தான் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.! வழிந்துவிட்டு திரும்பினோம்.

மியூசியத்தின் நுழைவாயிலில் எகிப்திய கடவுள் போல ஒரு நெடிய இரும்புச் சிலை.. உள்ளே முதலில் வரவேற்றார் ஓபாமா, அடுத்து ஜானி டெஃப், சில்வர்ஸ்டர் ஸ்டாலென், மைக்கேல் ஜாக்ஸன்,ஒபரா வின்ப்ரே, ஜெசிக்கா, வில் ஸ்மித், மர்லின் மன்றோ போன்ற அமெரிக்க வி.வி.ஐ.பி.கள் நின்றனர். அடுத்ததாக ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஒபாமா வரை அத்தனை அதிபர்களின் சிலைகளும் ஒரே இடத்தில் பிரம்மாண்ட அணிவகுப்பாய் நின்றன.

ஒவ்வொரு சிலைகளுடனும் நின்று போட்டோ எடுத்துக் கொண்டும்... அதிபர்கள் அணிவகுப்பு போல நீண்ட பகுதியில் மொத்த பிரேமுக்குள் அதனை சிறை பிடிக்க முடியாமல் திணறி கீழே அமர்ந்து, ஒருபக்கம் படுத்து, கொஞ்சம் உருண்டு பாலு மகேந்திராவாகவும் பி.சி.ஶ்ரீராமாகவும் மாறினோம். அடுத்த பகுதி குழந்தைகளுக்கானது ஸ்பைடர்மேன், பேட்மேன் ஹாரிபாட்டர் என அவர்களுக்கான உலகம் அது. இருப்பினும் ரசித்தோம்.

இயேசுநாதர் சிலுவையில் அறையப் பட்டது அவர் உயிர்தெழுந்து வந்தது எல்லாம் ரசனையோடு சிலைகளாக்கி இருந்தனர். அந்த சிற்பிகளின் கைகளுக்கு தலா 25 பவுன் தங்கக்காப்பினை மானசீகமாக பரிசளித்தோம். அமெரிக்கா உருவான வரலாறு, கெளபாய்கள் பற்றி எல்லாம் தனித்தனி சிலைகளாக இருந்தது.. லிங்கன் பற்றியும் இருந்தது.. ஆல்ரெடி லிங்கன் மியூசியத்தில் பலாப்பழமே சாப்பிட்டு விட்டதால் இது எலந்தப்பழமானது.

முழுவதும் சுற்றிப்பார்க்க 45 நிமிடங்கள் தான் ஆனால் போட்டோ எடுக்கும் வைபவங்கள் முடிந்து திரும்ப குறைந்தது 2 மணிநேரமாகும். எங்களுக்கு 3 மணிநேரம் ஆனது.! ஒபாமா மூக்கு சரியில்லை வில் ஸ்மித் தாடி சரியில்லை சில சிலைகளில் முக அமைப்பு பர்பெக்ஷனாக இல்லை என்றெல்லாம் மருமகள்களைக் குறை கூறும் மாமியார்கள் போல் இல்லாத மனநிலை இருப்பவர்கள் நிச்சயம் ரசிக்கும் இடம் லூயிஸ் துசாட் மெழுகு மியூசியம்.

Wednesday 30 March 2016

உறைபனியில் ஓர் குளியல் 2

பார்ட் - 2

தீம் பார்க் போய் இறங்கும் போதும் காற்று எங்களைப் பாடாய்ப் படுத்தியது. உள்ளேறினோம் மிகப் பெரிய  ஐந்து நட்சத்திர ஓட்டல் போல ரிசப்ஷன்.. டிக்கெட் கவுண்டர் ஆங்காங்கே காட்டு விலங்குகளின் அழகிய சிலைகள், கண்ணை உறுத்தாத லைட்டிங், மிதமான வெப்பம், மெல்லிய இசை, காற்றில் வீசிய நறுமணம் என அச்சூழலே மிக ரம்மியமாக இருந்தது.

திமுக தலைவரிடம் சிறிய கட்சிகள் பெற்ற சீட்டுகள் போல வெற்றிகரமாக
இளங்கோ டிக்கெட்டுகளைப் பெற்றுவந்தார்.. லாக்கர் ரூமில் உடை மாற்றி குளிப்பதற்கான ஆடைகள் அணிந்து கிளம்பினோம். ஆஹா முற்றிலும் மூடப்பட்டு இருந்த அரங்கு அது அதற்குள் அவ்வளவு விதவிதமான விளையாட்டுகள்.. ரப்பர் போட் ஓடத்தில் ஒரு நீண்ட சுற்று சுற்றி உடலை ஊறவைத்தோம் தண்ணீர் மிதமாக இருந்ததே ஒழிய சூடாக இல்லை.

ஆனால் அடுத்து சுடுநீரை நாலாபுறமும் பீய்ச்சியடித்து மசாஜ் செய்யும் ஒரு சிறு அருவிக்கு போனோம் ஒரே நேரத்தில் பத்து பேர் குளிக்கும் அளவிற்கு ஒரு குலம் அதை ஓட்டி நான்கடி உயரத்தில் இருந்து விழும் நீர்.. அமரும் இடத்தில் முதுகுக்கு பின்னேயும்... கீழே குளத்தில் நம் பாதம் வைக்கும் இடத்திற்கு பின்னேயும் சுவரில் துளைகள் இட்டு அதன் மூலம் வெந்நீர் வேகமாக பாய்ச்சி குளிப்பவருக்கு அருமையான வாட்டர் மசாஜ் கிடைத்தது.

அதன்பிறகு உச்சியில் இருந்து பலூன் ராஃப்டரில் இருந்து சறுக்கி கீழே வருவது என  பல நீர் விளையாட்டுகள் வித்யாசமாக இருந்தாலும்.. எங்களை மிகக் கவர்ந்தது ஓபன் ஹாட் ஸ்விம்மிங் ஃபூல் இடுப்பளவு சூடான நீரில் உடலை நனைத்துக் கொண்டே அப்படியே முன்னேறி ஒரு தடுப்பை தாண்டினால் பார்க்குக்கு வெளிப்புறம் வந்துவிடுவோம்.. வெளியே மைனஸ் 18 டிகிரி குளிர் ஆனால் உடல் முழுவதும் வெந்நீரில்.. ஆஹா..ஆஹா..

மிகமிகப் புதிய அனுபவமாக இருந்தது இன்னும் சொல்லப் போனால் இதைத் தான் ஜலக்கிரீடை எனச் சொல்லியிருப்பார்கள் போலும் அந்த குளத்தில் ஒரு உணவகமும் இருந்தது.. எங்களுக்கு துணை வர ஹென்னிசே, ஜாக் டேனியல் போன்ற அறிஞர்கள் தயாராக இருந்தும் ஹாட் சாக்லேட்டை கைப்பற்றிக் கொண்டு மீன்கள் ஆனோம்.. கிட்டத்தட்ட 2 மணிநேரம் அங்கு கிடந்தும் வெளியேற மனது இல்லை. அதற்குக்காரணம் வெந்நீர்மட்டுமல்ல

டூபீஸ்களில் வந்து எங்களை பீஸ் பீஸாக்கிய அமெரிக்கப் பெண்களும் தான். அங்கிருந்து வெளியேறி ஒரு பெரிய குளத்தில் வாட்டர் பேஸ்கட் பால் ஆடினோம்.. எங்கள் ஃபேஸ்கட்டை விட நாங்கள் ஆடிய பேஸ்கட் ஆட்டம் பிடித்துப் போக சில யுவதிகளும் எங்களோடு வந்து விளையாட ஆரம்பித்தனர்.. சிலருக்கு பொறாமையிலேயே தண்ணீர் வெந்நீராய்ச் சுட்டது.. மணி 2:30 ஆகிவிட பசி வென்றது விடைபெற்றோம் அவர்களிடம்.

மதியம் மெகா பீட்ஸாவை சாப்பிட்டது.. மீண்டும் மசாஜ் ஸ்விம்மிங் ஃபூல் போனது மீண்டும் ஓபன் ஹாட் போனது எல்லாம் ரீபீட்டு தான்.. மாலை 5 மணியாகிவிட கண்கள் சிவக்க கொஞ்சம் எரிய ஷவரில் நல்ல தண்ணீரில் குளித்துவிட்டு உடை மாற்றிக் கிளம்பினோம்.. ஏராளமான புதிய துண்டுகள் மலை போல குவிந்திருந்தது எத்தனை முறை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.. அது மட்டுமின்றி ஆடைகளைப் பிழிய மெஷின் வேறு.!

நன்கு டிரையர் போலப் பிழிந்து தருகிறது கூடவே ஒரு பாலிதீன் பையும் அதில் பேக் செய்து கொண்டு கிளம்பலாம்.. வசதிகள்.. வசதிகள்.. ஒரு குழந்தை போல உடலும் மனமும் மாறியிருக்க உடல் வலி பறந்து போய் இருந்தது.. இருப்பினும் விளையாடிய அசதி கொஞ்சம் இருந்தது.. ஆனால் இப்போது அறிஞர் ஜாக் டேனியல் நம்முடன் வந்துவிட்டார்.. வெளியே குளிர் கடுமையாக இருந்தது காரின் ஹீட்டர் போடப்பட்டது.. வெப்பம் பரவியது....

அதென்னவோ இந்த வெப்பம் அந்த வெந்நீர் குளத்தில் கண்டது போல இல்லை.. இருப்பினும் நினைத்தவுடன் அந்த குளியல் உடலில் பரவ சிலிர்த்தேன்.. கூடைப்பந்து பெண்களும் கூடை மேல கூடை வச்சு கூடலூரு கூட்டிப் போனார்கள்... அடடா... மறக்கமுடியாத பயணம் மேடிசன் நகர் கலஹாரி பார்க்கில்.. நன்றி இளங்கோ & விஜய் மணிவேல் நண்பர்களே.

உறைபனியில் ஓர் குளியல் 1

பார்ட் - 1

வெளியே மைனஸ் 18 டிகிரியில் குளிர் அடித்துக் கொண்டிருக்க வாட்டர் தீம் பார்க் போயி குளிக்கலாமா.?! என நண்பர் இளங்கோ கேட்ட கேள்வி பாலிமர் டிவி கண்ணன் வை.கோவிடம் கேட்ட கேள்வி போல எங்களை நெளிய விட்டது. இந்தக் குளிரில் குளியலா எனத் தயங்கிய நாங்கள் இளங்கோ சொன்னதைக் கேட்டு சீமான் போலத் தனித்து நிற்கும் தைரிய முடிவுக்கு வந்தோம். நண்பர் இளங்கோ சொன்னது இது தான்..

அது ஒரு இண்டோர் தீம் பார்க் உள்ளே குளிர் தெரியாது அருமையாக இருக்கும்.. இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிராதிக வருத்தப்படுவீக என்றார்.. இமான் அண்ணாச்சி போல.. வேறுவழியின்றி தென்னந்தோப்பு சின்னத்தை ஏற்றுக் கொண்ட வாஸன் போல் அவ்வார்த்தையை ஏற்றுக் கொண்டு கிளம்பினோம் நாங்கள் இருந்த ஊர் விஸ்கான்சின் மாகாணத்தில் மேடிசன் என்பதை நினைவு படுத்துகிறேன். 40கி.மீ பயணிக்க வேண்டும்.

காரில் கிளம்பினோம் எங்களோடு மிசவுரி தமிழ் மன்றத்தலைவர் நண்பர் விஜய்யும் சேர்ந்து கொள்ள இளங்கோ சாரதியானார். மின்னசோட்டா செல்லும் சாலையில் இருபுறமும் ஹைடெக் முறையில் மக்காச் சோளம் விவசாயம் செய்வதைப் பார்த்துக் கொண்டே பிரயாணித்தோம். அந்த தீம் பார்க்கின் பெயர் கலாஹரி (Kalahari) அல்லது கலஹாரி. குளிப்பதற்கு தேவையான ஷார்ர்ட்சுகள் வாங்க அங்கு ஒரு மார்க்கெட் இருந்தது.

கோவை துடியலூர் செல்லும் வழியில் இருப்பது போன்ற ஃபேக்டரி சேல் ஷாப்புகள்.. கோவையில் இருப்பது போல தனித்தனியாக இல்லாது ஒரு கி.மீ நீள அகலத்தில் பல கடைகள் ஒருங்கிணைந்து இருந்த வணிக வளாகம் அது. காரைவிட்டு இறங்கிய போது பலத்தக் காற்று அடித்தது.. ஏற்கனவே மைனஸ் 18 டிகிரி இதில் காற்று வேறு குளிர் எங்களை பதிவர்களிடம் சிக்கிய கேப்டன் போல கும்மி எடுத்தது.. வளாகத்திற்குள் ஓடினோம்.!

காற்றில் இருந்து மட்டுமே தப்பிக்க முடிந்தது நாங்கள் ஜெர்கின், தெர்மல் வேர் அணிந்திருந்தும் குளிர் எங்களை வாட்டியெடுத்தது.. கடைகளுக்குள் தான் குளிர் இல்லை. குளிர் தாங்காமல்அவசர அவசரமாக தென்பட்ட ஒரு கடைக்குள் நுழைந்தோம்.. பெண்களின் உள்ளாடைகள் எங்கும் நிறைந்திருந்த கடை அது.! அசடு வழிந்து கொஞ்சம் உடல் சூடானதும் வெளியேறினோம். உடல் சூட்டுக்கு அங்கிருந்த ஆடைகளும் ஓர் காரணம்.

வேன்ஹுசேன் முதல் லீவிஸ், நைக், போன்ற புகழ் பெற்ற பிராண்டுகள் 80% வரை தள்ளுபடியில் கிடைத்தது.. அங்கெல்லாம் அதிகபட்சம் ஸ்டாக் தயாரித்த தேதியில் இருந்து 120 நாட்கள் தான் MRP விலை... அதன் பின் அதிகரிக்கும் நாட்களுக்கு ஏற்ப தள்ளுபடி சதவீதம் கூடும்.. அடுத்த நாள் அங்கு என் மகளுக்கு வாங்கிய ஆடைகள் 30000 ஆயிரம் ரூபாய் ஆனால் வெறும் 6000 ரூபாய் மட்டுமே செலுத்தி வாங்கினேன்.அவ்வளவு தரம். நிற்க.

கடைகளில் ஏறி இறங்கியே கால் வலித்தது.. ஆண்ட்ராய்டில் பல வெரைட்டி இருந்தால் அது ஓகே... அண்ட்டிராயரிலுமா.!!! ஏகப்பட்ட வெரைட்டிகளில் குவிந்து கிடந்து உள்ளாடைகள்.. ஒரு வழியாக கடை பல சென்று தேர்ந்தெடுத்து திரும்பும் போது மணி 11 ஆகியிருந்தது. எங்க எல்லாருக்கும் ஷார்ட்ஸ் வாங்கியாச்சு.. இப்ப தீம் பார்க் போலாமா அந்த மார்க்கெட்டின் எதிர்புற சாலையில் இருந்தது தீம் பார்க். அது பற்றி நாளை... வரும்....

Friday 25 March 2016

கார் காலம் 2

#மோட்டார்_ராஜ்ஜியத்தில்

பார்ட் - 2

இந்திரலோகம், சொர்க்கலோகம், மயன் மாளிகை இதெல்லாம் பேரழகு மிக்கவை என படித்து இருக்கிறேன்.. ஆனால் முதன்முறையாக இது தான் அதெல்லாம் என யாராவது சொல்லி இருந்தால் அப்படியே நம்பியிருப்பேன்.. காரணம் அந்த கார் எக்ஸ்போ அவ்வளவு வண்ண மயமாக ஜொலித்தது.. சாதாரண ஜென் கார் முதல் ரோல்ஸ்ராய்ஸ்  வரை உலகின் முன்னணிக் கார் நிறுவனங்களின் கார்கள் அங்கு ஒவ்வொரு அரங்கிலும் நிறுத்தப் பட்டிருந்தது. ஆறடி உயர அமெரிக்க அழகுச் சுந்தரிகள் மாடலாக ஒவ்வொரு அரங்கிலும் நின்று வரவேற்றார்கள்.

ஒவ்வொரு அரங்கும் ஹாலிவுட் செட் டைரக்டர்கள் நிர்மாணித்தது போல அழகில் மிளிர்ந்தது.. இதில் Future Cars என்னும் பகுதியில் 2017 & 2018 ஆண்டுகளில் அறிமுகமாகும் கார்களை நிறுத்தி இருந்தார்கள் இங்கு தான் கூட்டம் அலை மோதியது. பொதுவாக அமெரிக்கர்களுக்கு கார் மோகம் அதிகம் எதிர்கால நவீன வசதிகள் என்ற பெயரில் அவர்களுக்கு விரிக்கப்பட்ட இவ்வலையில் ஏராளமான திமிங்கலங்களே மாட்டி 2018 க்கு முதல் காரை புக்கிங் செய்தனர். அங்குள்ள கார்களையும் பெண்களையும் ரசிக்கவே மேலும் இரு கண்கள் தேவைப்பட்டன.

ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இது போல கண்காட்சிகளில் காரைத் தொடாதே எனச் சொல்லுவார்கள்.. இங்கு அப்படியல்ல காரில் ஏறி அமரலாம், ஸ்டியரிங்கைத் பிடிக்கலாம் சொகுசாக சீட்டை சாய்த்து அமரலாம் கார் ஏசியை ஆன் செய்யலாம் பாடல் கேட்கலாம் அப்படியே நம் விருப்பப்படி நடந்து கொள்ளலாம். வண்டியை ஓட்ட விரும்பினால் அதற்கு தனிப் பகுதி இருக்கிறது அங்கு போய் ஓட்டலாம்.. இவ்வளவு வசதிகளை அங்குள்ள பெண்களுக்கும் தந்திருக்கலாமே என விஷம மனம் கேட்டது நம்மை சிரிப்பாலேயே கொன்றனர் அப்பெண்கள்.

அரங்கத்துக்கு வருபவர்களை பார்த்து உற்சாகமாக கையசைப்பது அவர்கள் உடன் புகைப் படத்துக்கு போஸ் தருவது.. வேண்டுமென்றெ உரசினாலும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது என தாராளமாய் நடந்து கொண்டதால் கூட்டம் தயங்கி தயங்கியே நகர்ந்தது. ஒருவழியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேற எடுத்த முடிவும் துன்பகரமானது தான். கண்களால் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம். அடுத்தப் பகுதி செல்வதற்குள் ஒரு மிகப் பெரிய ஊர்வலம் கார்னிவல் பரேட் என்னும் பெயரில் வந்து கொண்டிருந்தது.

ஒபாமா, கிளிண்ட்டன், ஒபராய், மைக்கேல் ஜாக்சன் இப்படி பிரபல அமெரிக்கர்களின் உருவ பொம்மைகள் நடந்து வர பின்னால் கார்களில் கால்பந்து வீரர்கள் சூழ தனித்தனி கார்களில் ஊர்வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. போஷ்க், ரோல்ஸ்ராய்ஸ், பெண்ட்லி, கார்களில் எல்லாம் ஏறி ஜென்ம சாபல்யம் அடைந்தோம்.. 3 கோடி ரூபாயில் பி.எம்.டபிள்யூ தயாரித்து இவ்வாண்டு சந்தையில் விட இருந்த மோட்டார் பைக்கை வாய் பிளந்து பார்த்தோம் டுகாட்டி மற்றும் பென்ஸ் நிறுவனங்களும் கோடிகளில் பைக் தயாரித்து நிறுத்தியிருந்தனர்.

ஆனால் எல்லாவற்றிலும் ஏறி அமர்ந்து போட்டோ எடுக்க மறக்கவில்லை.. டைட்டானியம் சர்ஜிக்கல் மெட்டல் பிளாட்டினம் கலந்து 85இலட்ச ரூபாய்க்கு தயாரித்திருந்த சைக்கிள் ஒன்றையும் பார்த்தோம். ஒவ்வொரு அரங்கிலும் வித்யாசமான போட்டிகள் கேளிக்கைகள் நடந்து கொண்டிருந்தன.. போர்டு கார் அரங்கம் தான் மிகபெரிது யானை சைசில் பெரும் ஜீப்புகள், ஆம்புலன்ஸ் வேன்கள், மெகா டெம்போக்கள் என அமர்க்களமாக இருந்தது. கார் படத்தை கருப்பு வெள்ளையில் தந்து கலர் படுத்தச் சொல்ல குழந்தைகள் குவிந்திருந்தனர்.

ஒரு அரங்கில் நம் முகத்தை அங்குள்ள கம்ப்யூட்டரில் படம் எடுத்து முகத்தில் அதிவேகமாக காற்று மோதினால் நம் முகம் எப்படி இருக்கும் என்பதை படமாக எடுத்துத் தந்தார்கள். வேடிக்கையாக இருந்தது. ஹென்றி ஃபோர்டு பற்றிய ஒரு சின்ன தகவல் மியூசியமும் அங்கு இருந்தது.. எங்கு திரும்பினும் கார்கள் கார்கள் கார்கள்.. வெறும் 21 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சிக்காகாக 2 மாதம் உழைத்து அழகு படுத்துகிறார்கள். அதன்பலன் இதன் 21 நாள் வணிகமே பல பில்லியன்களில் என்றார்கள். மிரட்சியாகத் தான் இருந்தது.

கார்களைப் பார்க்க நடந்து நடந்து சுற்றியதால் வந்த கால்வலி அங்குள்ள ஆடிட்டோரியத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளைப் பார்த்ததும் கலைந்தோடியது. நிச்சயம் இதுபோல ஒரு உலக அளவிலான ஒரு எக்ஸ்போவிற்கு செல்லும் வாய்ப்பு மிக அரிது தான் அதை எங்களுக்கு உரித்தாக்கிய மிச்சிகன் தமிழ்ச்சங்கத் தலைவர் அண்ணாதுரைக்கு இதயங்கனிந்த நன்றி. கார்களை விட அங்குள்ள அலங்காரிகளைப் பிரிவது கடினமாக இருந்தது. அவர்களைத் திரும்பிப் பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு வெளியேறி சாலைக்கு வந்தோம்.

அங்கு எங்கள் சார்பாக வானம் பனியாய் பெய்து அழுதுகொண்டிருந்தது. (நிறைந்தது)

Wednesday 23 March 2016

கார் காலம் 1

#மோட்டார்_ராஜ்ஜியத்தில்

ஒபாமா முந்தா நேத்து வந்துட்டு போனார் நீங்க இன்னிக்கு வர்றிங்க என கேஷுவலாக நண்பர் பிரகாஷ் சொன்னார்.. அமெரிக்க அதிபர் நேரில் வந்து பார்த்துச் செல்லும் அதே கண்காட்சிக்கு சாமானியர்களான நாங்களும் செல்ல வாய்ப்பு கிடைத்ததே பெரும் பாக்கியம். டெட்ராய்ட்... உலக மோட்டார் வண்டிகளின் மெக்கா.. உலகின் மோட்டார் சந்தையை தீர்மானிக்கும் மையப்புள்ளி.. இவர்கள் ஆண்டுதோறும் நடத்துவதே இந்த..

கார் எக்ஸ்போ.டெட்ராய்ட் ஆற்றங்கரையில் பிரம்மாண்டமாக எழும்பி இருக்கும் ஜெனரல் மோட்டார் தலைமையகம் அமைந்திருக்கும் சாலையில் தான் அந்த எக்ஸ்போ நடைபெறும் அரங்கமும் இருந்தது. மைனஸ் 13 டிகிரி குளிர் மதியம் 1மணிக்கு வீசிக்கொண்டிருக்க டெட்ராய்ட் ஆறு ஓடாமல் பனி விழுந்து உறைந்து நின்றது. ஆற்றின் அக்கரையில் கூப்பிடும் தொலைவில் கனடா நாட்டின் ஆண்ட்டாரியோ (ஆண்ட்ரியா அல்ல) நகரம் தெரிந்தது.

டெட்ராய்ட் ஆறே பங்காளி சொத்து போல இரு நாடுகளுக்கும் சரிபாதியாக பிரிக்கப்பட்டு உள்ளது என்ன கோடு தான் போடலை ஒரு கட்டத்தில் அந்த ஆறே ஒரு இடத்தில் அட போங்கப்பான்னு லெப்டில் கனடாவிலும் ரைட்டில் அமெரிக்காவிலும் பிரிந்து விடுகிறது. அந்த ஆற்றின் அடியில் சுரங்கம் அமைத்து சுரங்கச் சாலை போக்குவரத்து உள்ளது. ஆம் இது தான் உலகின் இரு நாடுகளை இணைக்கும் ஒரே ஒரு சர்வதேச சுரங்கச் சாலை.!

அந்த சுரங்கச் சாலை வின்ட்ஸர் என்றழைக்கப்படுகிறது. டெட்ராய்ட்டில் இருந்து கனடா வெறும் 10 நிமிட கார்ப்பயணம் தான். ஆற்றின் மேலேயும் பாலம் கட்டப்பட்டுள்ளது அதன் பெயர் அம்பாசிடர். நாங்கள் காரில் இருந்து அழகிய அந்த ஆற்றைப் பார்த்தோம்.. வற்றிப்போய் ஆங்காங்கே வெங்காயத் தாமரை வளர்ந்து கிடக்கும் நம்ம ஊரு வைகை ஆற்றைப் பார்த்தே காய்ந்து போன கண்களுக்கு ததும்பி உறைந்து நிற்கும் அழகு குளிர்ச்சியாகத் தெரிய

சட்டென காரில் இருந்து இறங்கிவிட்டோம் இப்போ எங்களுக்கு குளிரே தெரிந்தது.. போட்டு இருந்த தெர்மல் வேர் அதன் மீது ஸ்வெட்டர் அதன் மீது ஜெர்கின் இதையெல்லாம் அநாசியமாக தாண்டி எங்கள் உடலிடம் வந்து ஹலோ என்றது குளிர்.. எங்கள் பற்களில் இருந்து நோட்டிபிகேஷன் சவுண்டுகள் கிளம்பின கை கிளவுசை கழட்டி 4 போட்டோ எடுப்பதற்குள் விரல்களில் தேள் கடித்தது போல வலித்து விறைக்க.. அப்பப்பா அவஸ்தை.

திடீரென காற்றடிக்க ஆரம்பித்தது புயல் காற்றெல்லாம் கிடையாது தென்றல் காற்றுக்கு கொஞ்சம் கடுப்பு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சிறுவேகம் பரந்த ஆற்றங்கரையில் நின்றதால் கட்டிட தடுப்பு ஏதுமின்றி அப்படியே எங்கள் மீது மோத அந்த வேகம் தாங்காது கண்களில் மூக்கில் எல்லாம் நீர் வடிய ஆரம்பித்தது.. கிளவுசை மாட்டிக்கொண்டு வேகமாக கார் ஏறினோம்.அப்படா கார் ஹீட்டர் வெப்பம் தான் அப்போது சொர்க்கம்.

அதிக பட்சம் 5 நிமிடம் அதற்குமேல் வெளியே நிற்க முடியவில்லை. கார் மெல்ல ஆற்றங்கரையின் அடுத்த சாலைக்கு திரும்பியது. ஜார்ஜ் வாஷிங்டன் சிலையாக நின்று வரவேற்றார்.. முந்தா நாள் வந்த ஓபாமா அவருக்கு மாலை ஏதும் அணிவிக்கவில்லை போலும் மூளியாக வெறும் கழுத்தில் நின்றார். சரி முந்தா நாள் தானே ஒபாமா வந்தார் ஒரு கொடி இல்லை ஒரு தோரணம் இல்லை ஒரு ஆர்ச் இல்ல பிளக்ஸ் பேனர் இல்ல அட ஒரு போஸ்டர் கூடவா!

ச்சே என்ன ஒரு அரசியல் அநாகரிகம்.. இப்படி இருந்தா அமெரிக்கா எப்படி வல்லரசாகும் என நம்மூர் அரசியல்வாதி போல யோசித்தேன்.. அந்த சாலை தான் உலகின் முதல் போர்டு கார் ஓடிய சாலையாம். இப்போது இறக்கி விட்டால் நாங்கள் அதைவிட வேகமாய் ஓடுவோம் அடித்த குளிர் அப்படி.
கார் எக்ஸ்போ வாஷிங்டன் சிலையில் இருந்து ஒரு 600 மீட்டர் தூரமே ஆனால் கார் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம் என்றார்கள்.

நடப்பது அதை விட கஷ்டம் இப்போது பனி பெய்ய ஆரம்பித்துவிட்டது.. ஆனது ஆகட்டும் என காரிலேயே கிளம்பினோம்.. சென்னையில் டேக் டைவர்ஷன் போர்டு போல பார்க்கிங் ஃபுல் போர்டுகள் எங்கள் காரை திருப்பிக் கொண்டே இருந்தது.. கடைசியில் ஒரு கார் பார்க்கிங் அபார்ட்மெண்ட் வந்தோம்.கார் கட்டிடத்தின் மாடிக்கு ஏற ஆரம்பித்தது.. சென்னை தி.நகரில் இருந்து மீனம்பாக்கம் செல்லும் தொலைவு..

அந்த கட்டித்திலேயே ஏறி மொட்டை மாடியில் போய் ஒரு வழியாகக் காரை நிறுத்தினோம். அழகான டெட்ராய்ட் ஆறும் கனடாவும் அழகாகத் தெரிந்தன. இப்போது குளிர் இல்லை இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என கவுண்டமணி சொல்வது போல குளிரிடம் சொல்லிவிட்டு கார் எக்ஸ்போ அரங்கத்திற்குள் நுழைந்தோம்.கூட்டம் கூட்டமாக சித்திரைத் திருவிழா போல மக்கள் நடந்து கொண்டு இருந்தார்கள். 

அமெரிக்க, கனடிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, சீன முகங்கள் கலவையாக தெரிந்தன.எங்கள் இந்திய முகமும் அதில் கலந்தது. எக்ஸ்போ டிக்கெட் கவுண்டர்கள் ஏராளமாக இருந்ததால் இவ்வளவு கூட்டத்திலும் 2 நிமிடத்தில் டிக்கெட் எடுக்க முடிந்தது. எங்களுடன் மிச்சிகன் தமிழ் மன்றத் தலைவர் அண்ணாதுரையும் நண்பர் பிரகாஷும் வந்திருந்தார்கள். கார் எக்ஸ்போ உள்ளே நுழைந்தோம் அப்படியே விழி விரிய நின்றோம் அங்கே நாங்கள் கண்ட காட்சி...ஆஹா.. அதுபற்றி நாளை..!

வரும்...

Tuesday 22 March 2016

ஷத்ரியன் 2016

ம.ந.கூ கோஆபரேட்டிவ் புரொடக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்கும்

கேப்டன் IN &AS

#சத்ரியன்_2016
(இவன் தூக்கியும் அடிப்பான் துப்பவும் செய்வான்) சப் - டைட்டில்

திருமா : அந்த அருமைநாயகமோ அவர் மகனோ முதலமைச்சரா வரக்கூடாதுங்க ஆனா எதிர்த்து நிக்க 234 பேருக்கு நாம எங்க போக?

முத் : அதே தான் ஆனா எல்லாரும் ஆளாளுக்கு தனித்தனியா நிக்குறாங்களே நமக்கு யாரு உதவுவா..?

ஜி.ரா : எப்படி நிலைமையை சமாளிக்கிறதுன்னே தெரியலை.. யாரு இதுக்கு பொறுப்பு ஏத்துக்குவா.?

வை.கோ : ஒருத்தரு இருக்காரு அவர் நினைச்சா முடியும்..

மூவரும் : யாரு.? யாரு அவரு?

வை.கோ : பன்னீர்செல்வம்..

மூவரும் : நம்ம ஓ.பி.எஸ்சா.??

வை.கோ : சீமான் மாதிரி கோபம் வர்றா மாதிரி காமெடி பண்ணாதிங்க .. இவரு டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் ஒருகாலத்துல ஆக்டிவா இருந்தவரு இப்ப எந்தப்பக்கம் போனா ஆதாயமுன்னு குழப்பத்துல இருக்காரு..

ஜி.ரா : ஓ.கேப்டனா..அவர் அந்த அருமைநாயகம் கூட சேரப்போறதா சொல்றாங்களே..

வை.கோ: அது அவங்களா பரப்புற வதந்தி.. அருமைநாயகம் அவரு மண்டபத்தை எப்ப இடிச்சாரோ அன்னிக்கு சிவந்த அவர் கண்ணு இன்னும் அதே கலர்ல தான் இருக்கு.. அதுக்கு வாய்ப்பு கம்மி..

ஜி.ரா : ஹை சிவப்பு எங்க கலரு அப்ப நாம கூப்பிட்டா வருவாரா அதிகம் சீட் கேட்டா.? முதலமைச்சர் பதவி கேட்டா

வை.கோ : என்ன பேசறிங்க தோழர்.?  நாம நாலு கட்சியிருந்தும் 110 இடத்துக்கு மேல போக முடிஞ்சுதா..? சத்ரியனை கூப்பிட்டு பதவி தருவோம் அவரு கேட்ட சீட்டைத் தருவோம் அருமைநாயகம் எண்ணத்துக்கு கேட்டைப் போட்டு மூடுவோம் என்ன சொல்றிங்கஇவரை விட்டுட்டா 234 தொகுதிக்கு நாம என்ன செய்ய?

மூவரும் : நீங்க சொன்னா சரி தான்.. ஆனா அவரு வருவாரா அந்தம்மா தான் நமக்கு மறைமுக சப்போர்ட்டுன்னு வேற புரளி இருக்கே அதை ஒத்துக்குவாரா.? ப்ளைட் வேற டேக் ஆஃப்ன்னு சொல்லிட்டிங்க..

வை.கோ : அட நாம நடந்து போற கட்சின்னு நாட்டுக்கே தெரியுமே அதெல்லாம் அவர்கிட்ட நான் பேசிட்டேன்.. ம்ம்ம் முத்தரசன் நீங்க தான் அவ்வளவா தெரியாத ஆளு அப்பப்ப அந்த அம்மையாரின் அராஜகம்ன்னு பொது கூட்டத்தில பிரஸ் மீட்டுல மட்டும் தம் கட்டி முழங்கணும் ஓ.கே 

முத் : ஓ.கே.. அண்ணே அதெல்லாம் சவுண்டு ஓவராவே கொடுத்துடலாம் ஒரே ஒரு கேள்வி.. நீங்க எப்ப முதல்வரா...

வை.கோ : சத்ரியனா இருக்குறத விட சாணக்கியனா இரு.. இப்போதைக்கு முதல்வர்ன்னா அது சத்ரியன் தான்.. அவர் பேரைத்தவிர யாரையும் ஜாடையா சொன்னாக் கூட போச்சு சனியன் ஜடை போட்டுடும் ஜாக்கிரதை. வாங்கஅவரை இன்வைட் பண்ண கிளம்புவோமா..

மூவரும் : ஓ.கேண்ணே..

இடைவேளை...

Monday 21 March 2016

கெளபாய் காலத்தில் 2

#கெளபாய்_சிட்டி

பார்ட் - 2

கிரிக்கெட்டில் வைடு பால் போட்டால் அம்பயர்கள் இரு கைவிரித்து வைடு என்பார்களே அதைவிட 2 மடங்கு நீளக்கொம்புகள்மாட்டுத் தலையின் இருபுறமும் ஹோண்டா பைக் சைலன்ஸர் தடிமனில் ஆரம்பித்து கடைசியில் கவிழ்த்த ஐஸ்க்ரீம் கோனின் முனை போல சிறிதான தடிமனில் கூர்மையாக முடியும். இதை டெக்ஸாஸ் நீளக்கொம்பு மாடுகள் (Texas Longhorns bull) என அழைப்பார்கள். வளர்ந்த ஒவ்வொரு மாடும் கிட்டத்தட்ட 2 டன் எடை.!

அந்த மாட்டின் மீது ஏற நம்ம ஊரு ஸ்டேஜ் பங்ஷனில் மேடையேற படி போட்டது போல் மரப் படிகள் போட்டிருந்தனர். இதிலிருந்தே அந்த மாடு எவ்வளவு உயரம் என்பது உங்களுக்குப் புரியும். நம்ம ஊரில் யானை மீது ஏற பணம் தருவது போல இதற்கும் தரவேண்டும், அதற்கு கட்டணம் 10 டாலர்கள் (680ரூபாய்) இடையில் அந்த மாடு தலையை சிலுப்பி ஒரு பெரு மூச்சை வேறு விட்டது... அதைப் பார்த்ததும் எங்கள் மூச்சு நின்றது. 

இத்தனைக்கும் நாங்கள் பார்த்தமாடு பெரிய மாடல்ல இளையது.. அதுவே அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. அந்த மாட்டின் உரிமையாளர் ஒரு கெளபாய் இளைஞன்.. அவரை மாட்டுக்கார நோலன் என வைத்துக் கொள்வோம் ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு மாட்டுக்கார நோலனிடம் 10 டாலர் நீட்டினேன்..பதிலுக்கு அவர் ஒரு படிவத்தை நீட்டினார் அதில் கையெழுத்து இட்டுவிட்டு மாட்டின் மீது அமரவேண்டுமாம்.

அந்த படிவத்தில் ஆரோக்கிய பார்வை உள்ளவர்களே சட்டென படித்துவிட முடியாத சைசில் இந்த மாட்டின் மீது ஏறுவது என் சுயவிருப்பமே, இதற்கும் இதன் முதலாளிக்கும் சம்பந்தமில்லை அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது.. இதை நான் சுயவிருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறேன் .. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் அதற்கு நானே பொறுப்பு என அச்சிட்டு இருந்தார்கள். அதற்குத் தாம் கையொப்பம்.!

ஒரு கணம் வாலண்டியரா மாடு ஏற வந்துட்டமோன்னு ஒரு பயம் சூழ்ந்தது. ஏனெனில் முதுகில் அமர்ந்திருந்தாலும் அந்த மாடு தலையைச் சிலுப்பி இட வலமாக கொம்பை ஆட்டினால் அது முதுகில் அமர்ந்து இருக்கும் ஆளின் வயிற்றில் ஒரு பொத்தல் போட்டு விடுமாம். இவ்வளவும் கேட்டு விட்டு நான் ஏறு தழுவவா அல்லது நைசாக நழுவவா என்று யோசிப்பதற்குள் ஈரோடு மகேஷ், சசி போன்ற ஸ்லிம் பியூட்டிகள் வெற்றிகரமாக மாடேறினார்கள்.

அவர்கள் ஏறும் போதெல்லாம் அமைதியாகத் தான் இருந்தது அந்த நீளக் கொம்பன் அடுத்தது நான்.! அந்த மாடு நான் ஏறப்போவதை தன் சைடு கண்ணால் பார்த்தது அந்த வினாடியில் அம்மாட்டின் மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டேன்.. அடப்பாவிகளா மாடு மீது யானையை ஏத்துறீங்களே என அதன் குரல் என் காதில் விழுந்தது. அந்த மாட்டின் மீது அமரும் சேணத்தில் முன்புறம் ஒரு சிறிய குமிழ் போல இருந்தது அதை ஒட்டி அமரக்கூடாது என்பது இன்ஸ்ட்ரக்ஷன்.. அதற்குக் காரணம் உள்ளது.

மாடு இட வலமாக தலையைத் திருப்பினாலும் கொம்பு அந்த குமிழ் வரை வருமாம் அதனால் தள்ளி அமர்ந்து கொள்ளுதல் மிக நல்லது என்றார் நோலன். சூட்சுமம் தெரிந்ததால் சற்று அலட்சியமாக ஏறி அமர்ந்தேன். அமர்ந்த உடன் ஒரு குலுங்கு குலுங்கியது மாடு.. எனக்கு வயிறு கலங்கியது என் தொப்பையின் முன்னே ஒரு இஞ்ச் தூரத்தில் வாம்மா மின்னலு போல் அதன் கொம்பு நுனி இட வலமாக விஸ்க் விஸ்க் என கிராஸ் ஆகியது.

ஒரு சில அடிகள் முன்னாலும் பின்னாலும் நகர்ந்து உடலை குலுக்க ஆரம்பித்தது எனக்கு சற்றுமுன் சாப்பிட்ட மதிய உணவு சட்டென ஜீரணம் ஆகி இருந்தது. எல்லாம் சில வினாடிகள் தான் பிறகு என்ன நினைத்ததோ நம்ம ஓனருக்கு பத்து டாலர் வருமானம் இவனை ஏன் கீழே தள்ளணும்? பேசாம இருந்தா நம்ம ஓனர் புண்ணாக்கு பர்கர் வாங்கித் தருவார் என்ற நம்பிக்கையில் சாதுவாக நின்றது. வெற்றிக் களிப்பில் போட்டோ எடுத்துக் கொண்டு காளைச் சண்டை மைதானத்தை காணக் கிளம்பினோம். 

அது பெரிய இண்டோர் மைதானம்.ஐ.பி.எல் சீசன் போல குறிப்பிட்ட மாதத்தில் இந்த மைதானத்தில் சண்டை நடக்கும் என்றார்கள். நாங்கள் மைதானத்தின் காலரி, மாடு திறக்கப்படும் கெளபாய் வாடிவாசல், அந்த மைதானத்தில் உள்ள மண்தரை, எல்லாம் பார்த்துவிட்டு கிளம்பினோம். அடுத்து சாலையோரத்தில் பிரிந்து சென்ற கிளைச் சாலை ஒன்றில் பயிற்சி செய்து கொண்டிருந்த கெளபாய்குதிரை வீரர்களை சந்தித்தோம்.

அவர்கள் தாம் மாலை கெளபாய் ஷோவில் பங்குபெறும் வீரர்கள் அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு மாட்டு தொழுவத்திற்கு கிளம்பினோம் மாட்டுத் தொழுவமா அது இல்லை அது பெரும் யானைத் தொழுவம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது.. அது பற்றி... வரும்....

Sunday 20 March 2016

டிஜிட்டல் அயோத்தி.

அயோத்தி..

அதிகாலை பரபரப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தது தசரதனின் அரண்மனை.. தசரதன் துயில் நீங்கி தன் ஆப்பிள் மேக் ப்ரோ ஐ பேடை எடுத்து ஃபேஸ்புக்கில் இனிய காலை வணக்கம் என பதிவு போட்டதும் கடகடவென 64 ஆயிரம் லைக்குகள் விழுந்தன. மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டார் அவரது ஐ-போன் ராமனின் மோகனம் என ஒலிக்க டிஸ்ப்ளேவில் கைகேயி என ஒளிர்ந்தது. எடுத்து ஹாய் கை என்றார்.

மறுமுனையில் விசும்பல் வெடித்தது ஏன் ஏன் அழற என்றார் பதட்டமாக நீங்க என்னை ஏமாத்திட்டிங்க.. என்றது அழுகையின் ஊடே வந்த பதில் கொஞ்சம் எரிச்சலானார் இதோ பாரு டியர் ராமனுக்கு பட்டாபிஷேகம் ஏற்பாடு பண்ணியிருக்கேன் செட் போட தோட்டா தரணி இன்னிக்கு வர்றாரு ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி வேற இருக்கு அவரையும் மீட் பண்ணணும் சோ நான் ரொம்ப பிசி எதுவானாலும் இப்ப பேச முடியாது.

எல்லாம் பட்டாபிஷேகம் முடிஞ்சு பார்த்துகலாம் ஓ.கே என்றார்.. மறுமுனை இல்ல பிரச்சனையே பட்டாபிஷேகத்துல தான் நீங்க உங்க மெயிலை ஓப்பன் பண்ணி பாருங்க 2 பைல் டீடெயிலா அனுப்பியிருக்கேன் படிச்சிட்டு கூப்பிடுங்க என்று சொல்லி கட் செய்தாள் கைகேயி. அவசரமாக தன் மெயிலை திறந்தார் ராமர் பட்டாபிஷேக டிவிட்டர் பேஜிற்கு வந்த மெயில்கள் தான் குவிந்திருந்தன கைகேயி என டைப் செய்து சர்ச்சினார்.

முதல் மெயிலாக வந்தது கைகேயின் மெயில்.. திறந்தார் ஒன்று வேர்டு ஃபைலாகவும் மற்றொன்று போல்டராகவும் இருந்தன.. சுருக்கமாக இதுதான்...இதற்கு முன்பு நீங்கள் தருவதாக இருந்த ரெண்டு வரங்கள் தற்போது உடனே வேண்டும்.. என ஓ.பி.எஸ்சிடம் கறாராக நடந்து கொண்ட அம்மா போல் கேட்டிருந்தார்.. போல்டரில் அவர் வரம் தருவதாக சொன்ன வாய்ஸ் மற்றும் வீடியோ கிளிப்புகள் இருந்தன. தசரதர் யோசித்தார்.

திடீரென கைகேயி இப்படி நடந்து கொள்ள காரணம் என்ன தன் அறையில் இருந்த சிசிடிவி பிரிவுக்குப் போனார்.. மொத்த அயோத்தி அரண்மனையும் ஒருங்கிணைத்த சிசிடிவி கண்ட்ரோல் ரூம் அது எதிரே இஸ்ரோ விண்வெளி தரைக்கட்டுபாடு ரூம் போல ஏராளமான டிவிக்கள் இருந்தன.. கைகேயியின் மாளிகை கேமிராவின் மெமரியை தேடி க்ளிக்கினார்.. எல்லா இடத்திலும் வெளியே எல்லாருக்கும் தெரிந்த கேமிரா ஒன்று இருக்கும்..ஆனால்..

அதே இடத்தில் யாருக்கும் புலப்படாத ரகசிய இடத்தில் ஒரு காமிரா இருக்கும் இதை பிக்ஸ் செய்த கம்பெனிக்கும் தசரதருக்கும் மட்டுமே அந்த உண்மை தெரியும். நேற்றைய சம்பவங்கள் திரையில் ஓடின ஓன்றும் அகப்பட வில்லை அதற்கு முன் தினமும் அப்படியே இப்படி நான்கு நாட்கள் முன்பு வரை விடியோவில் ஒன்றும் தெரியவில்லை தசரதர் சலித்து 5 வது நாளுக்கு போனார் சட்டென்று நிமிர்ந்தார் இது கூனியல்லவா.. இவள் ஏன் இப்படி..

பதுங்கி வருகிறாள் அவள் கைகேயி அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.. அடுத்து மூன்று மணிநேரம் கழித்து தான் கூனி வெளியேறுவதைப் பார்த்தார். மெல்ல புன்முறுவல் பூத்தார். உடனடியாக தன் தகவல் தொழில் நுட்ப அதிகாரியை வரச் சொல்லி சில கட்டளைகள் இட்டார். வேகமாக குளித்து உணவை முடித்துவிட்டு கைகேயிக்கு உடனே வருகிறேன் என வாட்ஸ் அப் செய்தி அனுப்பினார். அவருக்குள் ஒரு திட்டம் ஓடிக் கொண்டிருந்தது.

கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தார் அவள் தலைவிரி கோலமாக அழுதபடி தரையில் கிடந்தாள்.இது அவர் எதிர்பார்த்தது தான் சொல் கைகேயி உன் மெயிலைப் படித்தேன் என்றார்.. நான் என்ன சொல்ல சொல்ல வேண்டியது நீங்கள் தானே என்றாள்.. என் முடிவை சொல்ல ஒரு அரைமணி நேரம் தருவாயா என்றார்.. தாராளமாக என்றாள் கைகேயி அதற்கு முன் ஒன்று கேட்கவேண்டும் இது உன் சுய முடிவு தானே..? 

தசரதர் இப்படிக் கேட்டதும் கைகேயி கொஞ்சம் தடுமாறினாள்.. ஆ..ஆ ஆம் இதில் வேறு யார் வந்து தலையிடப்போகிறார்கள் என்றாள் அவசரமாக. ஓகே அப்ப சரி வெயிட் ப்ளீஸ் என்றாள் அடுத்த 15 நிமிடத்தில் அயோத்தியே தேர்தல் கமிஷன் கெடுபிடியில் சிக்கிய கட்சிகளை போல பதறியது.. தசரதரைத் தேடி அவர் கைகேயி மாளிகையில் இருப்பதறிந்து அனைவரும் வாசலில் கூடிவிட்டனர் பிரபோ இதென்ன சோதனை வெளியே வாருங்கள்..

அவர்கள் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார் தசரதர்.. என்ன என்னப்பா பிரச்சனை.. பிரபோ ராமர் பட்டாபிஷேகத்திற்கு எதிராக பெரிய சதி நடக்கிறதே அதுவும் உங்கள் குடும்பத்துக்குள் இருந்தே இப்படியே விட்டால் திமுகவை மிஞ்சிவிடுவீர்கள் போலேயே என அழுதனர் எனக்கு எதுவும் புரிய வில்லை விவரமாக சொல்லுங்கள் என்றார் தசரதர்.. அதை எப்படிச் சொல்லுவோம் பிரபு சதி செய்தது யார் தெரியுமா? வேண்டாம் பிரபு...

இதோ பாருங்கள் நடந்ததை தைரியமாகக் கூறுங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம் என தசரதர் சொல்ல ஒருவர் மட்டும் தயங்கித் தயங்கி உங்கள் மனைவியா? துணைவியா? அந்த கைகேயி அம்மையார் தான் காரணம் எனச் சொல்ல உள்ளே இருந்த கைகேயி திடுக்கிட்டாள் அரச ரகசியங்கள் எப்படி கசிகின்றன உளவுத்துறை கண்காணித்து இருக்குமோ இல்லையே சிசிடிவி இணைப்பை கூட தெளிவாக துண்டித்தேனே குழம்பினால்.

வெளியே தசரதர் குரல் கேட்டது "அபாண்டமாக கைகேயி மீது பழி சுமத்தாதீர்கள் இதற்கு ஆதாரம் இருக்கா" என்றார் ரின் சோப் விளம்பர நடிகர் போல இதோ பாருங்கள் சற்றுமுன் அயோத்தி முழுவதும் வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ கூனியும் கைகேயியும் நடத்திய சதியாலோசனை ஒன் மினிட் 56 செகண்ட்சில் அட்டகாசமாக எடிட் செய்யப்பட்டு இருந்தது.. அதைக் கேட்ட கைகேயி வங்கிகளைக் கண்ட மல்லையா போல பயந்தாள்.

இல்லை இது பொய்யான வீடியோ அதிலிருப்பது நானே இல்லை என்ற அரதப் பழசான நித்தியானந்தா பாணியில் அவள் கத்த போதுண்டா ரீல் அந்து போச்சு எல்லாத்தையும் நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன் என சத்யராஜிடம் கவுண்டமணி சொன்னது போல ஒரு குரல் ஒலிக்க யார் எனப் பார்த்தாள் கூனி நிமிர்ந்து நின்றாள் (பெண்ட்டை நிமித்தியதால்) பிரபோ என்னை மன்னியுங்கள் என கைகேயி கதறி தசரதர் காலில் விழுந்தாள்.

ஓ.கே.ஓ.கே..மன்னித்தேன் அமைச்சர்கள் பி.ஏக்களை நம்புவது போல இனி இது போல ஆட்களை எல்லாம் நம்பாதே உன் பேரை கெடுத்து விடுவார்கள். டெக்னாலஜி இருந்ததால் உண்மை தெரிந்தது இல்லாவிட்டால் ராமனை நான் காட்டிற்கல்லவா அனுப்பி இருப்பேன் இந்த அயோத்தியில் எனக்குத் தெரியாது எதுவும் நடக்காது ஏனெனில் இது டிஜிட்டல் அயோத்தி என்றார் தசரதர் எல்லாரும் அதை ஆமோதித்து கைகளைத் தட்டினார்கள்.

அதே நேரத்தில் இலங்கையில் ஃபேஸ்புக்கில் இருந்த இராவணன் People you may Know வில் சீதையின் படத்தை பார்த்து மயங்கி தன் ஃபேக் ஐடியில் இருந்து Friend Request அனுப்பினான்.. பின்னே ராமாயணம் நடக்க வேணாமா..! 

டிஸ்கி: இது புராணத்தையோ அவதாரத்தையோ கிண்டல் அடிக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.. இராமாயண காலத்தில் டெக்னாலஜி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே..போராளிகள் தங்கள் கோஷங்களையும் கொடிகளையும் சுருட்டிக் கொண்டு மாற்றுப்பாதையில் செல்லவும்.

Friday 18 March 2016

கெளபாய் காலத்தில் 1

#கெளபாய்_சிட்டி

பார்ட் - 1

டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஃபோர்ட் வொர்த்தில் இருக்கிறது கெளபாய் சிட்டி நாங்கள் தங்கியிருந்த டாலஸில் இருந்து அங்கு செல்ல 40 நிமிட கார்ப் பயணம். டாலஸ் மற்றும் ஃபோர்ட் வொர்த் இரண்டும் இரட்டை நகரங்களாகும். டாலஸில் நண்பர் நந்தா வீட்டில் காலை உணவாக சூடான இட்லி,பொங்கல்,சாம்பார் வடை, அப்புறம் உப்புமா தி கிரேட்  ரெடியாக இருந்தது இதையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டு காரில் ஏறினோம்.

முகநூலில் என்னுடன் நண்பராக இருக்கும் நந்தா நான் உப்புமாவை ரசித்து சாப்பிடுவதை மிகமிக ஆச்சரியமாக பார்த்தார்.. அவர் மைண்ட் வாய்ஸ் அப்ப அத்தனையும் நடிப்பா கோப்பால் என்றது டெக்ஸாசுக்கே கேட்டது. காலை நேர டிராபிக்கால் கெளபாய் சிட்டி செல்ல ஒருமணி நேரம் ஆகிவிட்டது. நெடுஞ்சாலையில் இருந்து பிடிவாதம் பிடித்து ஓடிப்போகும் குழந்தை போல பிரிந்து சென்ற பக்கவாட்டுச் சாலையில் இறங்கியது எங்கள் கார்.

சில மீட்டர்களிலேயே அமெரிக்க கெளபாய் கிராமம் போன்ற அமைப்புகள் தென்பட்டன. முக்காலா முக்காபுலா பாடலில் சென்னை ரெட்ஹில்சை அங்கு சில செட் போட்டு டெக்ஸாஸ் என டைரக்டர் ஷங்கர் நம்மை நம்ப வைத்த கெளபாய் சிட்டி இப்போது ரியலாக எங்கள் கண்முன்.. அப்படியே ஒரு 10 நிமிடப் பயணத்தில் கெளபாய் நகரம் வந்தது. மஸ்கிடோ காயல்கள் முகத்துக்கு முன் சுழலாமலேயே நினைவுகள் அப்படியே பின் சுழன்றது.

பால்யத்தில் முத்து காமிக்ஸ் டெக்ஸ்வில்லர் கதைகளில் பார்த்த கருப்பு வெள்ளையில் வரும் இடங்கள் எல்லாம் எங்கள் எதிரே வண்ணமயமாக.. வாழ்க்கையில் இந்த வாய்ப்பினை அளித்த இறைவனுக்கு நன்றியை சொல்லிக் கொண்டேன். கெளபாய் ஷோ நடைபெறும் சாலைக்குள் நுழைந்தோம் திருமலை நாயக்கர் அரண்மனை போல பழங்காலக் கட்டிடங்கள் சாலையின் இருபுறம் அமைந்திருந்தன காரை நிறுத்தினோம்.

சாலையில் கெளபாய் தொப்பிகளுடன் பலர் தென்பட்டனர் ஆங்காங்கே குதிரைகளில் அமர்ந்தும் சென்று கொண்டிருந்தனர்.. நீள கோச் வண்டி பெரிய மீசைக்காரர்கள்.. ஆஹா கெளபாய் கதைகளுக்குள் நாங்கள் குதித்து அவர்களோடு உலாவினோம். மதியம் 12:30 மணி ஆகியிருந்தது. மாலை நான்கு மணிக்குத் தான் கெளபாய் ஷோ.. மற்ற இடங்களை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். முதலில் கெளபாய் கால பொருட்கள் மார்க்கெட்.

நம்ம ஊரு கோவில் கடைகள் போல ஒரு பெரிய கூரை ஷெட்டுக்குள் இரு புறமும் கடைகள் வரிசையாக இருந்தன.. கெளபாய் தொப்பிகள்,ஷுக்கள், பீப்பாய்கள், சிலுவைகள், கொடிகள், துப்பாக்கிகள், சாட்டைகள், சவுக்கு, இப்படி பலவிதமான அலங்காரப் பொருட்கள் இவையெல்லாம் வாங்க நாம் கெளபாயாக இருப்பதைவிட திருபாயாக (அம்பானி) இருந்தால்தான் வாங்க முடியும் என்பது தெரிந்தவுடன் அவற்றுடன் புகைப்படம் மட்டும் எடுத்தோம்.

ஒருமணிநேரம் கடந்தது காலையில் சாப்பிட்ட ரவை (உப்புமா) வயிற்றை சுட்டது. வெளியே மெக்சிகன் & அமெரிக்க உணவகங்களில் கன்றோடு சேர்ந்த பன்றியும் பல தினுசுகளில் உணவாக கிடைத்தது.. அவற்றைச் சாப்பிடத் தயங்கி வேறு உணவு தேடினோம் வெஜ் சாண்ட்விச் விற்ற ஒரு தெய்வத்தை பார்த்தோம் பிறகு ரெட்புல் பானமும் கிடைத்தது.. அதை வாங்கிச் சாப்பிட்டு விட்டு பசியைத் தற்காலிகமாக போக்கினோம்.

மணி 2:30 சாலையில் இப்போது சில மாடுகளைப் பார்த்தோம் நம்ம கிராம சந்தைகளில் எம்.ஜி.ஆர், ரஜினி, சிவாஜி கட் அவுட்டுகளோடு நின்று புகைப் படம் எடுப்பது போல் அந்த மாடுகள் மீது அமர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாடும் நாஞ்சில் சம்பத்தின் இன்னோவா சைசில் இருந்தது.. அவை அம்மா அம்மா என்று வேறு கத்தியது. அந்த ஆஜானுபாகு கொண்ட மாட்டின் கொம்புகள் தான் எங்கள் அடிவயிற்றைக் கலக்கியது.. 

அதுபற்றி நாளை... (வரும்...)





கெளபாய் காலத்தில் 3

#கெளபாய்_சிட்டி

பார்ட் - 3

சில கிலோமீட்டர்கள் தூரம் நீண்டு இருந்தது அந்த மாட்டுத் தொழுவம் அதை மேலிருந்து பார்க்கும் படி நீளமான மரப்பாலம் அமைத்திருந்தார்கள். ஓரத்தில் வைக்கோலை க்யூப் க்யூபாக அடுக்கி வைத்து இருந்தார்கள் வைக்கோலின் மணம் & மாட்டின் மீது வீசும் மணம் இவை இரண்டும் கலவையாய் அங்கு காற்றில் அமர்ந்திருந்தன. ஆனால் தொழுவத்திற்கே உரிய சாணி வாடையோ மூத்திர வாடையோ கொஞ்சமும் இல்லை.

தொழுவம் அவ்வளவு தூய்மையாக இருந்தது பெரிய பெரிய தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு இருந்தது இதை எல்லாம் பார்த்தபடி அந்த பாலத்தின் மேல் நடந்து கொண்டிருந்தபோது தெரிந்த காட்சி.. ஆங்காங்கே தனித்தனியாக நின்று கொண்டிருந்த டூரிஸ்ட்டுகள் எல்லாம் வெள்ளைச்சாமி பாட்டை கேட்க ஒன்று கூடிய கிராமவாசிகள் போல கெளபாய் ஷோ நடக்கும் சாலையின் ஓரங்களில் குவியத்தொடங்கி இருந்தனர்.

அதென்ன கெளபாய் ஷோ.! நம்ம ஊருல திட்டுகிற "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்னும் சொல் அங்கு உயரிய பாராட்டாகும். மாடு மேய்ப்பதையே ஒரு கலையாகப் பார்க்கிறார்கள். கெளபாய்களின் வாழ்க்கையே மாடுகள் தான். எம்.ஜி.ஆர் தாயில்லாமல் நானில்லை எனப்பாடுவது போல இவர்கள் கவ் இல்லாமல் நானில்லை எனப்பாடலாம். இந்த மாடுகளை எல்லாம் ஒழுங்காக மேய்க்க ஒரு பெரிய குழுவே இருக்கிறார்கள்.

கெளபாய்கள் மாடு மேய்க்க ஒரு குரூப்பாத் தான் கிளம்பணும். ஒரு மந்தை என்றால் அதற்கு டிரையல் பாஸ் என்பவர் தான் மந்தைக்கு முன்னால் குதிரையில் வழி நடத்திச் செல்வார் அவர் தான் மந்தையின் தலைவர் அவரது இடப்பக்கம் சக் வேகன் என்னும் ஒரு குதிரை பூட்டிய சாரட் வரும்..டிரையல் பாஸிற்கு பின்னால் வரும் மாடுகள் வரிசையின் வலப்பக்கம் இடப்பக்கம் இரு குதிரை வீரர்கள் வருவார்கள்.. அவர்கள் பெயர் பாயிண்ட்.

பாயிண்ட் வீரர்களுக்கு பின் போதிய இடைவெளியில் இட வலப் பக்கங்களில் வரும் குதிரை வீரர்கள் ஸ்விங் எனப்படுவார்கள்.. அப்படியே அவர்களின் பின்னால் ஒரு இடைவெளி விட்டு இரு பக்கமும் வரும் குதிரை வீரர்கள் ஃபிளாங் எனப்படுவார்கள் மந்தையின் கடைசியில் திருப்பி போட்ட யூ வடிவில் மூன்று குதிரை வீரர்கள் வருவார்கள் இவர்கள் டிராக் எனப் படுவார்கள். மந்தைக்கு கடைசியில் இடப்புறம் ரெமுடா என்னும் குதிரைகள்

இந்தக் குதிரைகள் மாடுகளை விரட்டி மந்தையில் சேர்க்கும்.. இருப்பினும் இதை கவனிக்க ராங்குலர் என்னும் குதிரைவீரர். இப்படி கட்சித் தாவக் கூடிய எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்வது போல பாதுகாப்பாக அழைத்துச் செல்லவேண்டும். இந்த பாரம்பரிய மேய்ச்சல் முறையைத் தான் ஒரு அணிவகுப்பு போல சாலையில் இன்றும் நடத்துகிறார்கள் இதைத்தான் கெளபாய் ஷோ என்கிறார்கள் அதுதான் இப்போது நடக்கவுள்ளது.

இந்த Swing, Point, Flank, Drag , Remuda, Wrangler இந்தப் பெயர்களில் எல்லாம் ஜீன்ஸ் பேண்ட்டுகள் வந்திருப்பதை இங்கு நினைவூட்டுகிறேன். சரியாக நான்கு மணிக்கு மிலிடரியில் ஊதப்படுவது போல டிரம்பட் ஒலிக்கத் துவங்க தளபதி படத்தில் வருவது போல வீதியின் முடிவில் இடது புறத்து சரிவின் கீழிருந்து ஒரு போர்க்களத்தின் அணிவகுப்பு அப்படியே அலை அலையாய் மேலெழுவது போல மாட்டு மந்தை வர ஆரம்பித்தது.

நான் இதில் குறிப்பிட்டுள்ளது போல முன்னால் டிரையல் பாஸாக பெரும் முறுக்கு மீசை வைத்த கெளபாய் மிடுக்குடன் வர டெக்ஸாசின் எருதுகள் கொம்பு முளைத்த யானைகளாக அசைந்தாடி கொண்டு வந்தன அம்மாடி எவ்வளவு நீளக் கொம்புகள்.! ஒரு கொம்பின் நுனி முதல் அடுத்த கொம்பின் நுனி வரை2 மீட்டர் நீளம் அப்படின்னா ஒரு அஞ்சாறு மாடுகள் இடிச்சுக்காம ஒண்ணா வந்தா.!! அந்தக் காட்சியே அவ்வளவு ஆச்சர்யத்தை தந்தது

அதிலும் சில மாடுகள் முரண்டு பிடித்து அணிவகுப்பில் இருந்து விலக அதை குதிரை வீரர்கள் ஹேஹோ பா ஹு என விநோத ஒலி எழுப்பி அணி வகுப்பு மந்தையில் மீண்டும் இணைத்தார்கள். அதையும் மீறும் சண்டி மாடு சமுதாயத்திற்கு சாட்டையடியும் உண்டு அதிகபட்சம் 15நிமிடத்தில் இந்தப் பாரம்பரிய  அணிவகுப்பு நிறைவுற்றது. கல்லெறிந்த காக்கை கூட்டம் போல அனைவரும் கலைய.. எங்கள் மனம் மகிழ்வில் அலைய.. காருக்குத் திரும்பினோம்.

பால்யத்தில் நமக்கு பிடித்த.. கதைகளில் மட்டுமே படித்த.. ஒரு கலாச்சாரத்தை நேரடியாக பார்த்த அனுபவம் மறையாது அந்த சண்டி மாடுகள் போல மனதில் அடங்க மறுத்து திமிறியது..அதையடக்க களைப்பு சாட்டையை எடுத்தோம் கார் கிளம்பிய ஆறாவது நிமிடம் நாங்கள் அனைவரும் உறங்கி விட்டோம் என நண்பர் நந்தா பின்னர் சொன்னார். யார் தூங்கினா நாங்கள் கனவில் டிரையல் பாஸாகி கெளபாய் உடையில் மாடு மேய்த்துக்கொண்டல்லவா இருந்தோம்.

நிறைந்தது.






Thursday 17 March 2016

லிங்கனுடன் வாழ்ந்தோம் 3

#லிங்கன்_வளர்ந்த_பூமியில்

பார்ட் - 3

மெழுகுச்சிலை மியூசியத்திற்குள் நுழைந்தோம் லிங்கனின் கார், கைத்தடி, அவரது அறை, அவர் ஆடைகள் & உபயோகித்த பொருட்கள், அத்தனையும் ஒரு பக்கம் அழகிய கண்ணாடி பேழைகளில் காட்சிக்கு வைத்து அதற்கு பளிச்சென நல்ல ஒளி அலங்காரமும் செய்திருந்தனர். அடுத்த பகுதிக்கு சென்றோம்.அங்கு லிங்கனின் வெள்ளை மாளிகை வாழ்க்கை, அவரது குடும்ப துயர நிகழ்வுகள் கடைசியில் அவர் கொல்லப்பட்ட தியேட்டர் என அத்தனை தத்ரூபமாக மெழுகுச் சிலைகளில் வடித்து இருந்தார்கள்.

நேரடியாக பார்ப்பவருக்கு வரலாற்றை உள்ளவாறே உணர்த்தும் படி அவ்வளவு நேர்த்தியான ஆவணங்கள். மியூசியம் நீண்டு கொண்டே போக 30 ஆவது நிமிடத்திலேயே பசிக்கத் தொடங்கியது. ஒரு வழியாக கையில் இருந்த வாட்டர் பாட்டில்களை வைத்துச் சமாளித்து நடந்தோம் அந்தக் குளிரிலும் வியர்த்தது எனக்கு கால் வலிக்க வலிக்க நடந்து ஒருவழியாக அங்கிருந்து வெளியேறி அங்குள்ள உணவகத்திற்குள் சென்றோம்.

வெஜ் சாண்ட்விட்ச் & ஹாட் சாக்லேட் சாப்பிட்டு பசியை விரட்டினோம். இப்போது சாலையின் வெளியே உள்ள லிங்கன் ஹவுஸ்..! லிங்கனைப் பற்றி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த லிங்கன் திரைப்பட மியூசியம் இங்கு அமைந்து இருந்தது.அந்தப்படத்தில் போடப்பட்ட செட்டுகள், நடிகர்களின் உடைகள், பொருட்கள் எல்லாம் மிக அழகாக காட்சிக்கு வைத்திருந்தார்கள். 10 நிமிடத்தில் சுற்றிப்பார்க்க முடிந்தது மணி பார்த்தோம் மாலை 4:30.

இப்போது லிங்கனின் நூலகம் போகவேண்டும் ஆனால் 5 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிகிறது லிங்கனின் நூலகம் பிரம்மாண்டமானது அங்குள்ள புத்தகங்களை எல்லாம் வரிசையாக அடுக்கினால் அது 8 மைல் நீளம் வரும் என அங்கிருக்கும் போஸ்டர்கள் சொன்னது. நிச்சயம் அதை பார்த்து முடிக்க முடியாது. ஆகவே வாசல் வரை சென்று பார்த்து விட்டு மியூசிய வாசலுக்கு வந்தோம்.லிங்கன் நினைவு தபால் தலைகள்...

கொடிகள், நாணயங்கள், போஸ்டர்கள்,  சாவிக் கொத்துகள், தொப்பிகள், ஷீல்டுகள், புகைபடங்கள், டி-சர்ட்டுகள், இப்படி ஏராளமானவை இருந்தன.. எனது கனவான லிங்கன் தொப்பி ஒன்றை வாங்கிக்கொண்டேன். வெளியேறி சாலையோரப் பூங்காவிற்கு வந்தோம்.கடுங்குளிர் எங்களை வாட்டினாலும்.. சளைக்காமல் போட்டோ எடுத்தே டயர்டு ஆனோம். மெல்ல மெல்ல இருட்டியது வானமும் எங்கள் கண்களும்.. குளிரும் அதிகரிக்க...

அத்தோடு அசதியும் வந்து கைகோர்த்துக் கொள்ள அதையும் அழைத்துக் கொண்டு கார் ஏறினோம் மீண்டும் கார் அந்த மெமோரியலைச் சுற்றி சாலையில் கலந்தது வரலாற்று நாயகன் ஒருவர் வாழ்வினை அருகிருந்து பார்த்த பரவசம் உடலெங்கும் ஓட அசதி கண்களை மூட மூடுவதற்குள் விழிகளில் பட்ட காட்சி சாலையோரம் இருந்த பெரிய லிங்கனின் சிலை. 

இப்போது அவர் மெல்லக் கையசைப்பது போல தெரிய இதழ்களில் புன்முறுவல் விரிய கண்ணயர்ந்தோம். பை..பை..லிங்கன்.

நிறைந்தது...

லிங்கனுடன் வாழ்ந்தோம் 2

#லிங்கன்_வளர்ந்த_பூமியில்

பார்ட் - 2

மியூசியத்தின் வாசலில் நின்றிருந்து எங்களை வரவேற்ற லிங்கனின் குடும்பம் தத்ரூபமாக வடிக்கப்பட்ட மெழுகுச் சிலைகளாகும் அவ்வளவு உயிரூட்டம் மிகுந்த சிலைகள்.. அதன் பின்னால் வெள்ளைமாளிகையும் அதே போல வடிவமைக்கப் பட்டிருந்தது. பிறகு லிங்கன் பற்றிய ஒரு நேரடி நாடகப் படக் காட்சி நடைபெறும் இடத்திற்கு போனோம் 40 நிமிடங்கள் கழித்து தான் ஷோவை காண முடியும் என்றார்கள். அதற்குள் லிங்கன் மெழுகுச் சிலை மியூசியம் சுற்றிவர தீர்மானித்தோம்.இதில் இரண்டு மியூசியங்கள் உண்டு.

ஒன்று அவர் ஸ்பிரிங்ஃபீல்டில் வாழ்ந்த வாழ்க்கை மற்றொன்று அவர் வாஷிங்டனின் ஜனாதிபதியானதும் வாழ்ந்தது. முதலில் ஸ்பிரிங்ஃபீல்டு வாழ்க்கை மியூசியம்.. வாசலில் சிறுவனாக லிங்கனின் மெழுகுச் சிலை அவர் சிறு வயதில் வாழ்ந்த வீடு,சமையலறை, வக்கீல் ஆபிஸ், கட்சி ஆபிஸ், அவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டது, அவரது சொற்பொழிவு, பட்டம் பெற்றது இப்படி எல்லா நிகழ்வுகளுக்கும் அதற்கேற்ற பின்னணி இசையை அந்த இடத்தில் மட்டும் கேட்கும்படி மெலிதாக ஒலிக்க விட்டு இருந்தார்கள்.

அந்த இசையொலி மெழுகுச் சிலைகளுக்கு மிகப்பொருத்தமாக இருந்தது மட்டுமின்றி எல்லா சம்பவங்களிலும் நாம் அந்த காலத்தில் நேரில் அவருடன் இருப்பது போல உணர்வை தந்தது. அவர் பயன்படுத்திய பேனா, நோட்டு, கடிகாரம், தொப்பி எல்லாம் ஆவணப் படுத்தப்பட்டு இருந்தன. சரியாக 35 நிமிடம் அங்கிருந்து வெளியேறி நாடகக் காட்சிக்கு சென்றோம் அது இன்னொரு அற்புத அனுபவம். சினிமா தியேட்டரின் திரைக்கு பதிலாக ஆனால் அதே அளவிற்கு ஒரு கண்ணாடித் திரை..ஒரு கூண்டு போல.

ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மீன் தொட்டி போல தெரிந்த அதன் உள் புறத்தில் லிங்கனின் ஜனாதிபதி அறை மற்றும் நூலகத்தை தத்ரூபமாக செட் போட்டு இருந்தார்கள்அது லிங்கன் பற்றிய 15 நிமிட நாடகப் படகாட்சி ஆம்.. மணி ஒலித்ததும் அரங்கத்தின் விளக்குகள் அணைய ஒலி ஒளியுடன் கிராபிக்ஸ் விர்ச்சுவல் உத்திகளுடன் நேரடியாக ஒரு இளைஞரும் நடித்தார் அத்தனை துல்லியம் அத்தனை அழகான ஒலி ஒளி அமைப்பு அருமையான ஸ்பீக்கர்களால் சவுண்ட் எஃபெக்ட் மிக மிகத் துல்லியமாக இருந்தது. 

லிங்கனின் ஆவி மெல்ல தேசியக் கொடியில் மறைய உணர்ச்சி பொங்க அந்த இளைஞர் பேசி சல்யூட் அடிக்க அக்காட்சி முடிந்தது. ஏதோ ஒரு பரவச உணர்வு உடல் முழுவதும் ஓடியது. அடுத்து நாங்கள் சென்றது ஒரு சிறிய தியேட்டருக்கு அந்த தியேட்டர் நவீன ஒலியமைப்பில் கட்டப்பட்ட 3D தியேட்டர் அங்கு லிங்கன் பற்றிய டாகுமெண்ட்ரி திரைப்படம் அவர் அதிபர் ஆனது, அவரின் சாதனைகள், அவருக்கு சவாலாக இருந்த பிரச்சனைகள், அவர் உள்நாட்டு போரை முறியடித்தது இதெல்லாம் திரைக் காட்சியாக.. 

திரையில் துப்பாக்கி ஒலித்தால் நமக்கு சீட் அதிரும்! திரையில் குண்டு விழுந்தால் நமக்கு வெப்பம் வரும் இதுவும் ஒரு 15 நிமிடக் காட்சி. இதுவும் ஒரு நல்ல அனுபவமாக உணர முடிந்தது. இந்த ஹாலில் அடுத்து நாம் பார்க்க இருக்கும் மெழுகுச்சிலை மியூசியம் தான் மிகப் பெரியது அங்கு தான் லிங்கனின் வாஷிங்டன் வாழ்க்கை ஆவணப்படுத்தப் பட்டு இருக்கிறது.. உள்ளே போய் வெளியேற குறைந்தது 1 மணிநேரம் ஆகும் என்றார்கள். பசிக்காததால் உள்ளே போய் விட்டு வந்து சாப்பிடலாம் என நினைத்தோம்.

அது எவ்வளவு பெரிய தவறு என்று பின்னால் தான் தெரிந்தது. அது பற்றி நாளை... வரும்....

Thursday 10 March 2016

லிங்கனுடன் வாழ்ந்தோம் 1


#லிங்கன்_வளர்ந்த_பூமியில்

பார்ட் - 1

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் நினைவிடம்..! அமெரிக்காவில் வாஷிங்டன்  ஸ்பிரிங்ஃபீல்ட் ஆகிய இரண்டு இடங்களில் இருக்கிறது. இருப்பினும் இலினாய்ஸ் (ஸ்" சைலண்ட்) மாகாணத்திலுள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் நினைவிடம் தான் ரொம்ப ஸ்பெஷல்.. கிருஷ்ண ஜெயந்தி எங்கு கொண்டாடப்பட்டாலும் அவர் வளர்ந்த கோகுலத்தில் கொண்டாடப் படுவது எவ்வளவு சிறப்போ அதே சிறப்பு ஸ்பிரிங்ஃபீல்ட் நினைவிடத்திற்கு.

கே.எஃப்.சி என்னும் புகழ் பெற்ற சிக்கன் உருவான கெண்ட்டகி தான் லிங்கன் பிறந்த ஊர் என்றாலும் அவரது பால்யம், படிப்பு, அவர் வக்கீலாகப் புகழ் பெற்றது, கட்சியில் உயர்ந்தது, ஜனாதிபதியானது எல்லாமே இந்த ஸ்பிரிங்ஃபீல்டில் இருந்து தான்.. நம் மோடிக்கு குஜராத் போல லிங்கனுக்கு ஸ்பிரிங்ஃபீல்டு.. இந்த ஊரின் நடுவே கம்பீரமாக காட்சி தருகிறது லிங்கன் மெமோரியல் கட்டிடங்கள். ஸ்பிரிங்ஃபீல்ட் நகரைப் பற்றி முதலில்..

மிசவுரியில் இருந்து 140 மைல் (250கி.மீ) தூரம்.. காரில் 80களின் ராஜா ஹிட்ஸ் கலெக்ஷனில் முதல் பாடலாக பேரைச்சொல்ல வா என எஸ்.பி.பி ஜானகி இணை ஆரம்பித்து 34 வது பாடலில் பேசக்கூடாது என்று அவர் பி.சுசீலாவுடன் பாடத் துவங்குகையில் ஊர் வந்துவிட்டது. ராஜாவிற்கு ஓய்வளித்துவிட்டு காரில் இருந்தே ஊரை நோட்டம் விட்டேன். புரதானமும் நவீனமும் கலந்த ஊர் ஸ்பிரிங்ஃபீல்ட். சில இடங்கள் பழமையாக இருந்தது.இன்னும் புரதானம் மாறாது ஒரு 100 வருடத்திற்கு முன்புள்ள அமெரிக்கா போலவே இப்போதும் இருக்கிறது. 

வாழை இலையில் பரிமாறப் பட்ட விருந்தில் பீட்ஸா இருப்பது போல பழமையான மாளிகைகள், புரதான கட்டிடங்கள், நினைவு ஸ்தூபிக்கள் இவற்றிற்கு நடுவே நவீன பில்டிங்குகளும் தென்படுகின்றன. லிங்கன் மியூசியம் ஹால் இருக்கும் சாலையில் நாம் நுழைந்ததும் நமது வலப் புறத்தில் லிங்கன் நினைவு அரங்கும், லிங்கன் நூலகமும், இடது புறத்தில் லிங்கன் ஹவுஸ் எனப்படும் மாளிகையும் அதன் எதிரில் பரந்த புல்வெளியும் புகழ் பெற்ற லிங்கனின் அலுவலகமான லிங்கன் ஹெர்ண்டன் வழக்கறிஞர்  அலுவலகமும் அமைந்துள்ளது. 

புல்வெளியின் மையத்தில் லிங்கனின் வெண்கலச்சிலை நெடித்துயர்ந்து நிற்கிறது அதுமட்டுமின்றி சாலை நடைபாதையிலும் லிங்கன் குடும்பத்தினர் வெண்கலச் சிலை உருவில் இன்னும் வாழ்கிறார்கள். லிங்கனின் அந்த காலத்து வாழ்க்கையை பாரதிராஜா படங்களில் வருவது போல அவ்வூரில் ஃபிரீஸ் செய்து வைத்து இருக்கிறார்கள். அவ்வளவு அபிமானம் அவர்மேல் நாங்கள் போன அன்று எங்களையும் ஃபீரீஸ் ஆக்கும் குளிர் அடித்துக் கொண்டு இருந்தது. 

இலவச பார்க்கிங்கை தேடித்தேடி செக்கு மாடு போல ஒரே தெருவை ஐந்துமுறை வலம் வந்து காரை நிறுத்தினோம். சாலை ஓரத்தில் கட்டண பார்க்கிங் இருந்தது. கட்டணத்தை அங்குள்ள போஸ்ட்டில் திணித்துவிட்டு கிளம்பி 60 அடி தூரத்தில் வந்தது இலவச கார் பார்க்கிங் போகும் வழி என்ற போர்டு கொஞ்சம் யோசித்தோம் இனி காரை எடுத்தாலும் கட்டணம் திரும்பக் கிடைக்காது என்பதாலும் இந்த 60 அடி நடப்பதற்கு உள்ளேயே விரல்கள் விறைக்கும் அளவிற்கு  குளிர்இருந்ததாலும்.. வேகமாக லிங்கன் மியூசியத்திற்குள் நுழைந்தோம்.

அழகான வரவேற்பறை ஹால்.புன்னகைத்த முகத்துடன் ஒரு பெண், ஒரு ஆண் உட்கார்ந்து இருந்தனர். அந்த இடமே ஒரு அழகிய ஷாப்பிங் மால் போல இருந்தது. லிங்கன் மியூசிய டூருக்கு பலவிதக் கட்டணங்கள் உள்ளது நம் விருப்பம் போல தேர்ந்தெடுக்கலாம். அது பற்றி உயர்ரக ஆர்ட் பேப்பரில் அழகிய பிரவுஷர்கள் அவ்விடத்தின் வரைபடம் எல்லாம் இலவசமாகத் தந்தார்கள். நாங்கள் லிங்கன் மியூசியம், லைப்ரரி, சாலையின் எதிரிலுள்ள லிங்கன் ஹவுஸ் என மூன்று இடங்களைத் தேர்ந்து எடுத்தோம் கட்டணம் ஒருவருக்கு 15 டாலர்கள்.

அதோடு தீம்பார்க் உள்ளே செல்ல தருவது போல பிளாஸ்டிக் ஸ்டிக்கர் பட்டியை கையில் கட்டி விட்டார்கள். லிங்கன் டிரஸ்ட்டிற்கு உதவி செய்ய முடியுமா.?என இரு இளைஞிகள் படு சுத்தமான அமெரிக்க உச்சரிப்பில் என்னிடம் கேட்க நான் முழித்த முழி பார்த்து ஓ.கே என்ஜாய் த டூர் எனக் கூறி வழிவிட்டார்கள். சுழல் இரும்புக் கைப்பிடியை இடுப்பால் தள்ளி லிங்கன் ஹாலுக்குள் நுழைந்தோம். கண்ட காட்சியில் அப்படியே மெய் மறந்தோம்! ஆம் அங்கே..! லிங்கன் தன் குடும்பத்துடன் எங்கள் எதிரில் நின்று வரவேற்றார்...!!!!

வரும்..

Saturday 5 March 2016

இதுதான் அமெரிக்கா 3

#நாங்க_வேற_மாதிரி_அமெரிக்கா

பார்ட் - 3

அமெரிக்காவில் குளிர் காலத்தில் காலை 7 மணிக்கு மேல் விடிந்து மாலை 6 மணிக்குள் இருட்டி விடும். கோடையில் உல்டா 5 மணிக்கே விடிந்து இரவு 9 மணிவரை வெளிச்சம் இருக்கும். ஒரு மணிநேரத்தை முன்னராக மாற்றுவதால் எழுந்து குளித்து ஆபிஸ் போய் வீடு வந்து சாப்பிட்டு படுக்கும் வரை வெளிச்சம் இருக்கும். வீட்டில் விளக்கு எரியும் அவசியமே இல்லை. இதை Day Light Save Time என்கிறார்கள். மின்சக்தி மிச்சமாகிறது.

உலக நேரங்களை நெட்டிலோ மொபைலிலோ பார்க்கும் போது 9:30 am (DST) என்று பார்த்து இருப்பீர்கள்.. அந்த DSTக்கு அர்த்தம் இது தான். அமெரிக்கா நிலவளம் நீர்வளம் மிக்க நாடு. கோதுமை, சோளம், மக்காச்சோளம் காய்கறிகள் பழங்கள் என என்ன போட்டாலும் விளையும் பொன்னான பூமி. அதிலும் கலிஃபோர்னியாவில் உள்ள நாபாவேலி திராட்சைத் தோட்டங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. உலகில் விளையும் முதல் தரமான திராட்சைகளில் நாபாவேலி திராட்சையும் ஒன்று.

அதற்கு காரணம் பசிபிக் பெருங்கடலில் எழும் பனி மூட்டம் இவர்கள் fog என்கிறார்கள் மேகத்தில் இருந்து வரும் பனிமூட்டம் போல தரையில் இருந்து பாலுமகேந்திரா படம் போல வெண்புகை கிளம்பும் அந்த மூட்டத்தின் உள்ள ஈரப்பதம் தான் நாபாவேலி திராட்சைக்கு சுவை சேர்க்கிறது என்பார்கள். உலகே அமெரிக்காவிடம் பொறாமை கொள்ளும் இயற்கை சொத்து அவர்களது அபரிமிதமான ஆற்று நீர்வளம் தான்.

அமெரிக்காவில் உள்ள ஆறுகளை ஆறு என்றால் கடலே கோபம் கொள்ளும் அவை நன்னீர்க் கடல்கள்  லூசியானா மாநிலத்திலுள்ள நியூ ஆர்லின்ஸ் நகருக்கு காரில் சென்ற போது 4 மைல் நீளத்தில் ஒரு பாலம் கடல் மீது இருந்தது.. அப்புறம் தான் சொன்னார்கள் அது Ponchatran என்னும் ஏரி எஇருபுறமும் அலையடிக்க அந்த ஏரியில் கப்பல் அசைந்தாடிக் கொண்டு இருந்தது.அமெரிக்கா நீர் வழிகளை அற்புதமாக இணைத்த நாடாகும்.

நதிக்கரை நாகரீகங்களில் ஒன்றான மிசிசிபி நாகரீகம் வளர்ந்த இடம் மிசிசிபி ஆற்றங்கரை. இது உலகின் நான்காவது மிகப்பெரியஆறு அமெரிக்காவை கிழக்கு மேற்கு தெற்காக பிரிக்கிறது 6,275 கி.மீ நீளம் கொண்ட ஆறு இது. மின்னசோட்டாவில் உருவாகி லூசியானா வரை பல மாநிலங்களில் ஓடி மெக்ஸிகோ வளைகுடாவில் கலக்கும் இந்த ஆறு அவ்வளவு பிரம்மாண்டமானது மிசவுரி ஆறு இதன் கிளை ஆறாகும்.

மின்னசோட்டா ஒரு மாநிலத்திலேயே 20ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன இது மட்டுமிமின்றி. ஹட்சன், கொலராடோ, டெட்ராயிட், நயாகரா, உட்டா (பச்சை ஆறு) ரியோ கிராண்டே போன்றவை அமெரிக்காவில் ஓடும் மற்ற பிரம்மாண்ட ஆறுகளாகும். நீர் பற்றாக்குறையில் அமெரிக்கா தத்தளிக்க வாய்ப்பே இல்லை. அத்தனை வளம் அத்தனை ஆறுகளையும் அவ்வளவு சீரிய முறையில் பராமரிக்கிறார்கள். நீர்த்தடங்களும் முறையாக உள்ளன.

அடுத்தது சாலைப் போக்குவரத்து.. அமெரிக்கா முழுமைக்கும் இரயில் போக்குவரத்து சாலைகள் அளவிற்கு அவ்வளவு பெரிய கட்டமைப்பில் இல்லை. முக்கிய போக்குவரத்து டிரக்குகள் தான்.. கூரியர் முதல் அத்தனை அத்யாவசிய தேவைகளும் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு செல்ல டிரக் போக்குவரத்து முக்கியம் நமது ஊர் லாரி ஸ்டிரைக் மாதிரி ஒரு நாள் நடந்தாலும் மொத்த அமெரிக்காவும் அப்படியே உறைந்து நின்றுவிடும்.

டிரக் ஓட்டுநர்களின் மிகக் குறைந்த வருமானமே ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பல லட்சாதிபதி ஓட்டுநர்கள் நிறைந்த நாடு அது. அமெரிக்கர்களுக்கு கார் இன்றியமையாதது. அதற்கு செலவழிக்க அவர்கள் தயங்குவதில்லை.. கடின உழைப்பு, நேரம் தவறாமை, உடல் ஆரோக்கியத்தில் கவனம், வாரத்தில் 5 நாட்கள் வேலை 2 நாட்கள் ஓய்வு என வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். கொடுத்து வைத்தவர்கள்.

நிறைந்தது..

இதுதான் அமெரிக்கா 2

#நாங்க_வேற_மாதிரி_அமெரிக்கா

பார்ட் - 2

கணவனின் காலத்துக்கு பிறகு மனைவி மனைவியும் இறந்துவிட்டால் அந்த வீடு அரசாங்கத்துக்கு.. அப்ப பிள்ளைகளுக்கு.? இது அநியாயம் அல்லவா இல்லை அமெரிக்காவில் எல்லா தலைமுறையும் உழைக்க வேண்டும் என்பதற்கான சட்டம் இது.. உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தை எழுதித் தர வேண்டும் என்றால் உங்கள் சொத்து மதிப்பில் 40 சதவீதத்தை வரியாக அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டும். அய்யே வேற ஏதும் வழி இருக்கிறதா?

இருக்கிறது உங்கள் சொத்தை டிரஸ்ட்டுக்கு எழுதி உங்கள் பிள்ளையை ஒரு டிரஸ்ட்டியாக்கிவிட்டால் சொத்தை பாதுகாக்கலாம் வரியும் குறைவு. அட இந்த ஐடியா நல்லா இருக்கே அப்ப அங்க நிறைய டிரஸ்ட் இருக்குமே எனக் கேட்பீர்கள்..தவறு நிறைய எல்லாம் அல்ல எக்கச்ச்ச்சச்க்க்கமாக இருக்கிறது. டிரஸ்ட் அமைப்பதன் மூலம் தான் சொத்து அந்தக் குடும்பத்தின் வசம் இருக்கும். ஆனால் அதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கிறது டிரஸ்ட்டுக்கு ஒரு நல்ல டிரஸ்ட்டி தலைமை ஏற்கவேண்டும்.

அதற்கு நல்ல வக்கீல் மற்றும் ஆடிட்டர் இருத்தல் அவசியம்.மிகமுக்கியமான ஒன்று எது தெரியுமா? நியமிக்கும் பிற டிரஸ்ட் உறுப்பினர்கள் பிரச்சனை செய்யாதவர்களாக இருக்க வேண்டும். டிரஸ்ட்டின் கணக்குகள் முறையாக தணிக்கை செய்து பராமரிக்கப்பட வேண்டும் இல்லையெனில் சொத்து எந்நேரமும் அரசால் பறிமுதல் செய்யப்படும்.இப்படி  நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து கட்டிய வீடாக இருந்தாலும் அதைக் கட்டிக்காக்க போராட வேண்டும். 

ஏற்கனவே வாங்கிய சொத்தாக இருந்தாலும்நிச்சயம் அதன் மூலம் 1 பங்கு அரசாங்கத்திற்கு போகிறது.. இந்த வருமானம் அவர்களது அரசு கஜானாவில் சேர்கிறது.இந்தக் கொள்கைதான் பின்னாளில் பங்குசந்தை உருவாக ஒரு காரணமாக இருந்தது. பெரும் முதலாளிகளின் சொத்தை அவர்களுக்குப் பின் அவர்கள் குடும்பத்தினர் கட்டிக் காக்கவே பங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிள்ளைகளுக்கு பெரும் ஷேர்களை கொடுத்து அவர்களை ஷேர் ஹோல்டர்கள் ஆக்கி...

அடுத்த தலைமுறைக்கும் அந்தத் தொழிலை வசப்படுத்தினர். பொது மக்களை ஷேர் வாங்க வைத்த உத்தியும் சிறந்த ஒரு ஐடியா. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கு போவது போல வாரிசுகளுக்கு போகும் லாபம் பொது மக்களுக்கும் போனது.. போகட்டுமே 40% வரிக்கு முன்னால் இது ஜுஜுபி.. ஆனால் ரயிலில் பேப்பர் விற்று பிழைப்பு நடத்திய ஒரு சிறுவன் பின்னாளில் மொத்த பங்குச் சந்தை வணிகத்தையும் மாற்றி பல ஷேர்களை வாங்கி அதன்மூலம் பெரும் நிறுவனங்களை வாங்கி அதை வெற்றிப் பாதையில் திருப்பி உலக கோடீஸ்வரன் ஆவான் என்பது அப்போது தெரியாது.

அந்த சிறுவன் தான் வாரன் பப்பெட்.. இன்று இவரது சொத்துக்கு டிரஸ்ட்டி யார் தெரியுமா நம்ம பில்கேட்ஸ் தான்.. ஏன் பில்கேட்ஸ்.? சிம்பிள் லாஜிக் அவருகிட்ட இருக்குற காசுக்கு இவர் காசுக்கு ஆசைப்படுவாரா என்ன.? இப்படி டிரஸ்ட்டில் காக்கப்படுகிறது அமெரிக்கர்களின் சொத்துகள். இதனால் தான் அங்கு ரியல் எஸ்டேட் விலை கட்டுக்குள் இருக்கிறது. இடம் வாங்குவது எல்லாம் நம்ம ஊரில் சொத்து ஆனால் அங்கு சோதனை.

ஏதாவது ஒரு வகையில் வரி கட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அதை தக்க வைக்க போராடவேண்டும்.. ரொம்ப நேரமாயிடுச்சா..? ஆமா இப்ப மணி என்ன.? இப்படி கேட்டால் நாம் நேரத்தை சொல்லுவோம் இல்லையா. ஒரு அமெரிக்க நாட்டாமை ஏம்ப்பா அல்லாரும் கேட்டுக் கோங்க வர்ற ஜூன் மாசம் 1ஆம் தேதியிலிருந்து காலை 7:30 மணி காலை 6:30 மணியா மாறுது இது இந்த 50 பட்டி அமெரிக்கப் பஞ்சாயத்தோட தீர்ப்புடா..

இப்படி சொன்னா எப்படி இருக்கும். ஆமா அமெரிக்காவில் இன்னிக்கு காலையில் 7 மணி அடுத்த மாசத்துல இருந்து காலையில் 6 மணி.. இதென்னய்யா புது பொரளியா இருக்கு..! நாளைக்கு தெரிஞ்சுக்குவோம்.

வரும்...

இதுதான் அமெரிக்கா 1

#நாங்க_வேற_மாதிரி_நாடு

பார்ட் - 1

அமெரிக்கா.. உலகில் தனித்துவம் வாய்ந்த நாடு.. இவர்களது பழக்க வழக்கங்கள் பயன்படுத்தும் சொற்கள் எல்லாமே வேறு மாதிரி இருக்கும். அதிலும் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயங்கள் இங்கு மாறி இருக்கும்.. முக்கியமாக பிரிட்டிஷ்காரர்கள் வடக்கு என்றால் இவர்கள் தெற்கு.! எல்லாமே நேரெதிர் தான். பிரிட்டிஷாரை விட நாங்கள் தனித் துவமானவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த மனப்பாங்கு.

கீப் ரைட் என கார் ஓட்டுவதில் ஆரம்பித்து... உலகெங்கும் தூரம் கிலோ மீட்டரில் ஆனால் அமெரிக்காவில் அது மைல்களில், எடை அளவு கிலோ கிராம் அமெரிக்காவில் அது பவுண்ட், வெப்பநிலை செல்சியஸ், அங்கு அது ஃபாரன்ஹீட், நமக்கு பெட்ரோல், அமெரிக்காவில் அது கேஸ்ரோல், திரவ அளவு லிட்டர், அமெரிக்காவில் அது கேலன், இவ்வளவு ஏன் எலக்ட்ரிக் சுவிட்ச் போர்டில் நாம் offதான் அங்கு on இப்படி எல்லாமே தலைகீழ்.

நல்லவேளை வாய் வழியாகத்தான் சாப்பிடுகிறார்கள். வாடகைக் காரும் டாக்ஸி விமானமும் டாக்ஸி தான். கார்ட் எனப்படும் தயிர் அங்கு யோகர்ட், டாய்லெட்டுகள் அங்கு ரெஸ்ட் ரூம்கள், டாக்டரின் க்ளினிக் அங்கு டாக்டர் ஆஃபீஸ், நமக்கு போஸ்ட் அவர்களுக்கு மெயில், நமக்கு பார்சல் சர்வீஸ் அங்கு அது கார்கோ, நாம் தேதி மாதம் வருடம் என DD/MM/YY எழுதினால் அவர்கள் மாதம் தேதி வருடம் MM/DD/YY என்று எழுதுகிறார்கள்.

ஆனால் அமெரிக்க மக்கள் மிகவும் ரசனையானவர்கள்.. நகைச்சுவை உணர்ச்சி அதிகம் குறும்புத்தனமும் மிளிரும்.. முதலில் அமெரிக்காவில் யாரை நீங்கள் முகத்துக்கு நேரே பார்த்தாலும் ஒரு ஹாய் ஹலோ அட்லீஸ்ட் ஒரு நல்ல சிநேகப் புன்னகையாவது கிடைக்கும். நம்ம ஊரா இருந்தா யாருடா இவன் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை சிரிச்சிட்டு போறான் இவன் லுசா இருப்பானோ என சீமான் போல நம்மை திட்டிவிடுவார்கள்.

நாம் தெருவில் நின்று போட்டோ எடுத்தால் பின்னாடி வந்து எட்டிப்பார்ப்பது தலைக்கு மேல் கொம்பு வைப்பது என உற்சாகமாக இருப்பார்கள். அமெரிக்கப் பெண்களிடம் போய் யூ ஆர் பியூட்டிஃபுல் என்று சொன்னாலும்.. ஓ தேங்யூ பதிலாக கிடைக்குமே ஒழிய நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட.. வசனமெல்லாம் வராது.அதே நேரத்தில் அத்துமீறினாலும் அதோ கதி தான் புரட்டி எடுத்துவிடுவார்கள் அமெரிக்கப் பெண்கள் WWE அதற்கு சான்று.

வேலை என்று வந்துவிட்டால் அதனை ரசித்து செய்வார்கள்.ஒரு சிடுசிடுப்பு முகம் சுளிப்பு இதெல்லாம் பார்க்க முடியாது. கடினமாக ஈடுபாட்டுடன் பொறுப்புணர்ச்சியுடன் உழைக்கிறார்கள் ஓ.பி அடிப்பது இல்லை. அதே போல வேலை நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நொடி விட்டலாச்சார்யா பட மந்திரவாதி போல மறைந்து விடுவார்கள். நேரம் தவறாமை ரொம்ப முக்கியம். சொன்ன நேரத்தில் வேலை  நடக்காவிட்டால் அது குற்றம்.

அந்தளவிற்கு பங்ச்சுவாலிட்டி அமெரிக்கர்கள் ரத்தம்,நாடி,நரம்பு, குடல் குந்தாணி அனைத்திலும் ஊறியிருக்கிறது. லிவிங் டுகெதர் பல திருமணங்கள் என்பது அவர்கள் கலாச்சாரமாக இருந்தாலும் அன்பாக அந்நியோன்யமாக நீண்ட நாள் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். பிரிந்து போய் பிள்ளைகளுக்காக மீண்டும் முதல் புரோட்டாவில் இருந்து ஆரம்பிப்பது போல அதே துணையுடன் வாழ்வை துவக்குபவர்களும் உண்டு.

அமெரிக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மிகுந்த பாசத்துடன் வளர்த்துகிறார்கள் அவர்களை அவர்கள் போக்கில் கருத்து சுதந்திரத்தோடு வாழவிடுகிறார்கள். அதே போல அவர்கள் சம்பாதித்து கட்டிய வீடு... அவர்கள் காலத்திற்கு பின் அந்த சொத்து அவர்கள் பிள்ளைகளுக்கு தானே போகவேண்டும்.? ஆனால் அமெரிக்காவில் அது அரசாங்கத்துக்கு போய்விடும்.! அய்யய்யோ இது என்ன கூத்து என்கிறீர்களா! அதுபற்றி அடுத்த பதிவில்..

வரும்...

Friday 4 March 2016

மெராமெக் அதிசயகுகை 3

#திரில்_குகைப்பயணம்

பார்ட் - 3

70 மில்லியன் ஆண்டுகள் பழமையான அந்தப் பாறை பல வண்ண வண்ண விளக்குகளால் நிறம் மாறிக் கொண்டே இருந்தது.. முதலில் இதை ஒரு லைட் ஷோ என்று தான் நினைத்தோம்.. சட்டென அங்கே திரைப்படம் ஒளிபரப்பானது! ஆம் அந்தப் பாறைதான் வெண்திரை.! மெராமெக் குகையின் பெருமைகளைப் பற்றி  10 நிமிடப் படம் இறுதியில் அமெரிக்க தேசியக் கொடியசைய பார்வையாளர்களின் கரவொலிக்க நிறைந்தது.

உடல் முழுவதும் சிலிர்ப்பு மனம் முழுவதும் பரவசம் என அந்தப் பயணம் நிறைவடைந்தது. இந்த குகைப்பயணம் ஆரம்பிக்கும் பொழுதே எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என அவர்களின் நிபந்தனைகளை சொல்லிவிடுகிறார்கள். எதையும் தொடக்கூடாது ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும் கைடு முன்னால் நடக்க நாம் பின்னால் வரவேண்டும் வழி மாறிவிடக்கூடாது பத்திரமாக வழுக்காமல் நடக்கவேண்டும் இப்படி.

இதே குகையில் 1950 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிரபல தொலைக் காட்சித் தொடரான நம்ம ஊரு சவால் நிகழ்ச்சி போன்ற People are funny என்னும் நிகழ்ச்சியில் இந்த குகையின் இரண்டாவது நிலையில் கணவன் மனைவி இருவரும் தனியாக 5 நாட்கள் தங்கவேண்டும் என்பது சவால். அந்த சவாலில் ஒரு ஜோடியினர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்களாம். அந்த இடம் இப்போது ஹனிமூன் ரூம் என அழைக்கப்படுகிறது.

குகையில் ஜெஸ்ஸி ஜேம்ஸ் பயன்படுத்திய பாத்திரங்கள் துப்பாக்கிகள் போன்ற பொருட்களை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா முழுவதும் இதுபோல மொத்தம் 18 குகைகள் இருக்கிறது. அந்தக் குகைகளைப்  பற்றி இலவச கையேடுகள் அங்கு இருந்தன. இருப்பினும் மெராமெக் குகை தனித்துவம் வாய்ந்தது.. எத்தனை பெருமாள் கோவில் இருந்தாலும் திருப்பதி ஏழுமலையானுக்கு நிகர் இல்லை என்பது போல.

இதேபோல இந்தியாவில் மேகாலயாவிலும் விசாகப்பட்டினத்திலும் நீண்ட குகைகள் இருக்கின்றனவாம். இந்த விஷயம் இங்கு போய் வந்த பின்பு தான் எனக்குத் தெரியும். இதுபோல வசதிகள் செய்து அதை சுற்றுலா தலம் ஆக்கினால் நன்றாக இருக்குமே என நினைத்தேன். ஆனால் நம்ம ஆட்கள் குகையின் சுவர்களில் விஜி ஐலவ் யூ.. சுரேஷ் & மாலினி என ஹாட்டின் குறி வரைவார்களே என்பது நினைவில் வர அவ்வெண்ணத்தை கைவிட்டேன்.

மெராமெக் குகையிலிருந்து வெளியே வரும் இடத்தில் மெராமெக் கிஃப்ட் ஷாப் உள்ளது. அந்தக் கடையில் மெராமெக் குகையை நினைவு படுத்தும் பலவித டி சர்ட்டுகள், தொப்பிகள், துப்பாக்கிகள், குகைப் பாறை படிமத்தின் மினியேச்சர்கள் விற்கிறார்கள்... அதன் விலைகளைக் கேட்டோம்.. நாமும் ஜெஸ்ஸி ஜேம்ஸ் போல கொள்ளையடித்தால் தான் அதையெல்லாம் வாங்க முடியும் எனத் தெரிய சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.

மிசெளரி போக வாய்ப்புள்ளவர்களுக்கு மெராமெக் குகைஅவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடம்.. நம்ம குட்டி சுட்டீஸ் இமான் அண்ணாச்சி பாணியில் சொன்னால்.. ஏ.. மிஸ் பண்ணிராதிக அப்புறம் வருத்தப்படுவீக..!

நிறைந்தது..