Tuesday 27 October 2015

லவ்லி லாகோஸ் - 1

#லவ்லி_லாகோஸ்

PART -1

இந்தப் பதிவில் நான் எழுதப் போகும் ஆப்பிரிக்க சிகை அலங்காரம் லாகோஸ் மட்டுமின்றி எல்லா ஆப்பிரிக்கர்களுக்கும் பொருந்தும். ஆப்பிரிக்கர்களின் கூந்தலை டெக்ஸ்டர்டு ஹேர் என்றழைப்பர். ஸ்பிரிங் வடிவம் கொண்டது அவர்கள் முடி..  சுருள் சுருளாக முடிச்சு போல சுருண்டிருக்கும். சீப்பால் தலைவாரவோ பிரஷ் செய்யவோ முடியாது..

மேலும் ஹேர் ஸ்டிரைட்டிங் செய்தாலும் நாய் வால் நிமிர்த்தும் கதை தான்... திரும்ப சுருண்டு கொள்ளும்.. Helix Shape என்னும் இந்தக் கூந்தல் அமைப்பு அவர்களுக்கு ஓர் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. நம் இந்தியப் பெண்களின் நீண்ட கூந்தல் மீது அவர்களுக்கு கொள்ளை ஆசை ஆனாலும் இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவில் சுருண்ட முடித் தலையர்களாக பிறந்து விட்டோமே என ஏங்கி தவித்தனர்.

வெகு காலம் நீடித்த இந்த சிக்கலுக்கு ஒரு புதிய சிகையலங்கார கண்டுபிடிப்புக்கு பின்பு தான் தீர்வு கண்டனர்.. இன்று உலகிலேயே சிகை அலங்காரத்துக்கு அதிகம் செலவழிப்பது ஆப்பிரிக்கர்களே. அதிலும் புகழ் பெற்ற ஹேர் ஸ்டைல் அலங்காரம் தான் கானா வீவிங் என்னும் அலங்காரம். Ghana Braids என்னும் பெயரில் கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான ஸ்டைல்கள். அதென்ன கானா வீவிங்..!

நம்ம ஊரு பெண்கள் போடும் ஜடையைப் போலவே குட்டிக் குட்டி ஜடைகள் தாம்.. மை டியர் மார்த்தாண்டன் படத்தில் பிரபு தலையில் இருக்கும் ஜடையை நினைவு படுத்திக் கொள்ளவும். இம்முடியை ஒரு வகையான சிந்தெடிக் இழைகளால் தயாரிக்கிறார்கள்.. பராமரிப்பதும் எளிது.. இதை ஒவ்வொரு ஆப்பிரிக்க சுருள் முடிச்சிலும் இணைத்து விட்டால் அது தான் கானா வீவிங்.. இமயமலைச் சாமியார்கள் போல ஜடா முடி போல இருக்கும்.

தலையிலேயே சுருண்டு கிடந்த தங்கள் முடி தோள் வழியாக அருவி போல நீண்டு தொங்குவது ஆப்பிரிக்க பெண்களுக்கு பேரானந்தத்தை அளித்தது.. Ghana cornrow, banana cornrow, Cherokee cornrow, invisible cornrow போன்ற ஸ்டைல்கள் அதிக பிரபலம் Pencil Braids என்னும் ஸ்டைல் இளைஞிகளுக்கு ரொம்பப் பிடித்த ஹாட் ஸ்டைல். கோல்டு, பிளாக், சில்வர், வயலட், க்ரே, பர்கண்டி என பல வண்ணங்கள் வேறு.

முடி பஞ்சத்தில் இருந்த ஆப்பிரிக்கர்கள் தற்போது பஞ்சவர்ணத் தலையர்களாகத் திரிகிறார்கள். கிட்டத்தட்ட 5 மணிநேரம் பச்சைக் குத்துவது போல தலையில் வலி இவையெல்லாம் இந்த அலங்காரத்திற்காக பொறுத்துக் கொள்கிறார்கள். அந்தளவிற்கு நீள முடியின் மீதான காதல் அவர்களுக்கு. ஒரு வேளை போய்யா மயிரு என்றால் கூட சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்வார்கள் போல... ஒரு வகையில் வாழும் கவரிமான்களாக வாழ்கிறார்கள் ஆப்பிரிக்க பெண் மான்கள்.

ஆப்பிரிக்க பெண்கள் தங்கள் காஸ்மெடிக், துணிகளுக்கு செலவிடுவதை விட முடிக்கு செலவிடுவது அதிகம் 18 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பாதிக்கும் பெண் கூட மாதம் 5 ஆயிரம் ரூபாயை இதற்கு சராசரியாக செலவழிக்கிறார்கள்... சுருக்கமாகச் சொன்னால் நம்ம ஊரு பெண்கள் நகைக்காவும் ஆப்பிரிக்க பெண்கள் சிகைக்காவும் அதிகம் செலவழிக்கிறார்கள்.

இந்த சிகை அலங்காரத்தால் தங்கள் தாழ்வு மனப்பான்மை மறைந்து தன்னம்பிக்கை பெருகுவதாக தற்போது அவர்கள் உணர்கிறார்களாம்.. அடுத்த முறை இது போல முடி அலங்காரம் செய்யப்பட்ட ஆப்பிரிக்கர்களை பார்த்தால் ஒரே ஒரு வார்த்தை அது அழகாக இருக்கிறது எனப் பாராட்டுங்கள் அவர்கள் முகத்தில் விரியும் மகிழ்ச்சி அழகாக பல தன்னம்பிக்கைக் கதைகளைச் சொல்லும்...

இனி அடுத்தப் பதிவில் லெபனான் உணவுகள்...

வரும்...

லவ்லி லாகோஸ் - 2

#லவ்லி_லாகோஸ்

PART -2

எங்கள் பயணத்தின் இரண்டாவது நாளில் ஒரு லெபனான் உணவகத்திற்கு சென்றோம். பொதுவாக வித விதமான உணவு வகைகளை ருசிப்பதில் எனக்கு அலாதிப் ப்ரியம் உண்டு (அதான் தெரியுமேங்குற உங்க மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டேன்) இதற்கு முன் சில வீர தீர விபரீத வரலாறுகள் நினைவுக்கு வந்தன.

செஷல்ஸ் தீவுகளில் ஆக்டோபஸ் கறி, மலேசிய நல்லி எலும்பு, தாய்லாந்தில் பூச்சிக் கறி, சீன பாம்பு நூடுல்ஸ், அரபு ஒட்டகம் என ருசித்தது உண்டு.. ஆனால் இங்கு அது போல இம்சைகள் இல்லை.. உலகின் பாரம்பரிய உணவு வகைகளில் லெபனான் உணவும் ஒன்று. ஆயிரக்கணக்கான வருடங்கள் பாரம்பரிய மிக்கது லெபனான் உணவு.

லெபனான் உணவுகளில் பெரும்பான்மையானவை ரோமானியர்கள் உணவு முறையிலிருந்து உருவானவை..எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் சிரியா உணவுக் கலாச்சாரமும் இதில் பின்னிப் பிணைந்திருக்கும்.. யார் கண்டது எகிப்திய பிரமிடுகளுக்குள் டம்மியாக கிடக்கும் பல மம்மிகள் கூட இதை சாப்பிட்டு இருக்கலாம்.!

பிரான்ஸ் ஆதிக்கத்திற்கு பிறகு அவர்கள் சில உணவு முறைகளை புகுத்தி இருந்தாலும் அது லெபனீஸ் உணவுக் கலாச்சாரத்தை ஏதும் பாதிக்கவில்லை. வாங்க இனி லெபனான் உணவுகளை ருசிக்கலாம்.. முதலில் ஃபலாஃபல் (Falafal) நம்ம ஊரு பணியாரம் கொஞ்சம் பெருசா பிரவுன் கலரில் இருந்தா எப்படியிருக்குமோ அப்படி இருந்தது.

இதனோடு அவித்த ஆலிவ்.. தக்காளி, புதினா மற்றும் க்ரீன் இலைகள் வந்தது.. இது 100% வெஜிடேரியன் உணவு சாப்பிடுங்க என்றனர்.. தயக்கமாக எடுத்து கடித்தேன்.... அட சூப்பர் இது நம்ம ஊரு மசால் வடையாச்சே! ஆமாங்க அப்படியே மசால் வடை தான் நம்ம வடைக்கு  அரைப்பது போலில்லாமல் மிக மிக நைசாக அரைத்திருந்தார்கள்.

சூடாக சாஃப்டாக இருந்ததால் அந்தத் தட்டு உடனே காலி அடுத்து "ஹம்மஸ்" இதுதான் புகழ் பெற்ற லெபனான் உணவு.. கொத்துக்கடலையில் எள் சேர்த்து மென்மையாக ஃபேர்னஸ் க்ரீம் போல அரைத்து பரிமாறப்படும் உணவு..லெபனான் உணவுகளில் பெரும்பாலும் ஆலிவ் ஆயில் தான்,மேலும் பூண்டு,எலுமிச்சை அதிகம் உபயோகிக்கிறார்கள்.

அதே போல் சிக்கன், மட்டன்,மீன்கள் எல்லாம் பெரும்பாலும் கிரில்டு முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும்.. மட்டன் லாம்ப் என்னும் வகை ஆட்டு இறைச்சி.. நம்ம ஊரில் பிரியாணியில் கறித்துண்டுகளை நீக்கி விட்டு குஸ்கா என்பது போல 100% சைவமான ஹம்மஸில் சிக்கன் துண்டுகளை போட்டு சிக்கன் ஹம்மஸ் என்கிறார்கள்.

இதற்கு மெயின் கோர்ஸ் கார்லிக் ரொட்டி... யெஸ் நம்ம ஊரு நான் போல ஆனால் குட்டி குட்டியாக முக்கோணமாய் மென்மையான சப்பாத்திகள்... ஒரு ஸ்பூன் ஹம்மசை ஆலிவ் எண்ணை விட்டு கலக்கி ஜாம் தடவுவது போல ரொட்டியில் தடவி சிக்கன் துண்டுகளை வைத்து அதேபோல இன்னொரு ரொட்டியிலும் தடவி ஒன்றாக்கி..

சாப்பிடவேண்டும்.. ஆகா எனக்கு அப்படியே நார்த் இண்டியா ஃபீல் வந்ததே தவிர வேறெதுவும் தெரியவில்லை.. அடுத்து வந்தது ஃபிஷ் ஃபில்லட் (Fish fillet) மீனிலிருந்து எலும்பெல்லாம் எடுத்துவிட்டு இளநீரில் இருக்கும் வழவழ தேங்காய் போல தோசையாக வந்தது.. ஆலிவ் காய்கள் தக்காளி க்ரீன் சாலட் என காம்பினேஷன் பக்கா.

கடைசியாக வந்தது பக்லவா (Baklava) இந்த உணவு இப்ப உலகப் பிரபலம் நம்ம வீட்டு கல்யாண விருந்தில் கூட இதை இப்ப மெனுவில் சொல்றோம்.. அது தாங்க டெசர்ட்ஸ்..! லெபனான் தான் இதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.. முக்கோணம் அல்லது டைமன்ட் வடிவ ஆரஞ்சு க்ரீம் கேக்குகள் உலர் பருப்புகள் தேன் கலந்து தந்தனர்.

ஏவ்வ்வ்... மொத்தத்தில் நம்ம இந்திய உணவு மாதிரி தான் இருந்தது அருமையான உணவு... வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட நம்ம ஆட்கள் கண்ணில் லெபனான் ரெஸ்ட்டாரண்ட் தெரிந்தால் தைரியமாகப் போய் சாப்பிடலாம்.. இதில் ஹம்மஸ் செய்வது எப்படின்னு சுமதி சிவக்குமார் மேடம் ரெசிபி அனுப்பறேன்னு சொன்னாங்க..!

மேடம் ஞாபகப் படுத்திட்டேன்... எனக்கு இன்பாக்சிலோ வாட்ஸ் அப்பிலோ அனுப்புங்க அதை பதிவிடுறேன்... முடிவா நம்ம சாப்பாடு சூப்பர் டென் ரேட்டிங் படி லெபனான் உணவுக்கு 100க்கு 85 மார்க் தருகிறேன்.

அடுத்த பதிவு லாகோஸ் நவக்கிரகம் மற்றும் முருகன் கோவில்கள்..

வரும்....

ஹம்மஸ் செய் முறை...

கொண்டை கடலை - 100 கிராம் (அரை டம்ளர்)
பூண்டு - இரண்டு பல்
லெமன் - ஒன்று
(தஹினா) வெள்ளை எள் - முன்று தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் -சிறிது
ஆலிவ் ஆயில் - முன்று மேசை கரண்டி

செய்முறை:

1.கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும்.

2.வெந்த கொண்டைகடலையை ஆறியதும் பூண்டு, வெள்ளை எள் எலுமிச்சை சாறு உப்பு தேவையான அளவு தண்ணீர் ( கடலை வெந்த தண்ணீரே கூட பயன் படுத்தலாம்) சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

3.ரொம்ப கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

4. கடைசியாக ஆலிவ் ஆயில் கலந்து பப்பரிக்கா பவுடர் கொண்டு அலங்கரிக்கவும்

5. சுவையான ஹமூஸ் ரெடி

குறிப்பு

1.இது நம் சுவைக்கேற்ப தயாரிக்கலாம், ஆனால் கலர் தான் சிறிது வித்தியாசப்படும்.

2. வெள்ளை மிளகு இல்லை என்றால் சிறிது மிளகாய் தூள், (அ) கருப்பு மிளகும் சேர்த்து கொள்ளலாம்.

3. இதையே சிறிது தயிர் வெங்காயம் சேர்த்து கொஞ்சம் நீர்க்க அரைத்தால் பிலாபில் சாண்ட்விச், சவர்மா சாண்ட்விச்சுக்கு பயன் படுத்தும் சாஸ் ஆகவும் பயன் படுத்தலாம்.

4. கைபடாமல் பிரிட்ஜில் வைத்து என்றால் நான்கு நாட்கள் பயன் படுத்தலாம்.

5. அடிக்கடி ஹமூஸ் சாப்பிடுபவர்கள் எள் பேஸ்ட் தனியாகவே விற்கிறது கடைகளில் அதை வாஙகி வைத்து சுலபமாக பூண்டு பொடி சேர்த்தும் தயாரிக்கலாம்.

6. வெளிநாடுகளில் கொண்டைகடலை கூட டின்னில் ரெடி மேட் கிடைக்கிறது.

7. புளிப்பு சுவை அதிகம் விரும்பதவர்கள் அரை பழம் பிழிந்து கொண்டால் போதுமானது.

8. இது குபூஸுக்கு என்றில்லை சப்பாத்தி ரொட்டி பூரிக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.

லவ்லி லாகோஸ் - 3

#லவ்லி_லாகோஸ்

PART - 3

லாகோசில் உள்ள இலுப்புஜு (Ilupeju) இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும் ஓர் அற்புத இடம்... அதற்கான முழுத் தகுதி பெற்ற இடம் என்பதில் மிகையில்லை.. ஏன் என்பதை இப்பதிவின் இறுதியில் சொல்கிறேன்.. ஓ.கே...!  இந்த இலுப்புஜு பகுதியில் தான் நைஜீரியத் தமிழ்ச் சங்கம் கட்டிய இரண்டு கோவில்கள் உள்ளன.

ஒன்று முருகன் கோவில் மற்றொன்று நவக்கிரகக் கோவில்... இதில் முதலில் கட்டப் பட்டது முருகன் கோவில் தான்... 1997 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் முருகன் சன்னதி புனரமைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது.. அதே போல 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நவக்கிரகக் கோவில் கட்டப்பட்டு  கும்பாபிஷேகமும் நடந்தது.

உலகிலேயே முதன் முதலாக  மேற்கு ஆப்பிரிக்காவில் நவக்கிரக கடவுளர்களுக்கு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் என்பதில் இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல எல்லாத் தமிழர்களுக்குமே பெருமை தானே... இங்குள்ள பக்தர்களும் இந்தியாவிலிருந்து சில கம்பெனிகளும் நைஜீரிய தமிழ்ச்சங்கமும் தந்த பொருளுதவியில்...

இக்கோவில்கள் கட்டப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.. தமிழர்களும் தங்கள் சொந்த ஊர் ஞாபகங்களை அவ்வப்போது இந்த சன்னதியில் வந்து மீட்டுக்கொள்கின்றனர்.. கிருத்திகை, சஷ்டி, தைப் பூசம், விசாகம் என முருகனுக்கு உகந்த விழாக்கள் மட்டுமின்றி தமிழர்கள் விழாக்கள் அனைத்தையும் இங்கு கொண்டாடுகின்றனர்.

நல்லதொரு பண்டிகை நாளில் நம் மக்கள் கோவிலில் கூடி மகிழ்வது.. அதுவும் இன்னொரு கண்டத்தில் எவ்வளவு நிம்மதியானது... அந்த நிம்மதி இங்கு கூடும் போது கிடைக்கிறது என்றனர் ஒருவர் பாக்கியில்லாது.. திரை கடலோடி திரவியம் தேடுவதும் கோவில்கள் கட்டுவதும் பண்டைய தமிழர்களின் கலாச்சாரம்...அந்தக் கலாச்சாரம்

இன்றும் லாகோஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் மறவாது இருப்பது இந்த கலாச்சாரம் என்றுமே அழியாது என்ற நம்பிக்கையை உலகிற்கு அளிக்கிறது. மேலும் இலுப்புஜு பகுதியில் தெலுங்கு அசோசியேஷன் மக்களால் ஸ்ரீ பாலாஜி திருக்கோவிலும் கேரளா சமாஜத்தினரால் அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலும் கட்டப்பட்டுள்ளது.

இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும் இடம் என்று இப்பதிவின் ஆரம்பத்தில் நான் கூறி இருந்ததற்கு பதில் சொல்லும் வேளை இது... ஆம் இந்தப் பதிவில் நான் சொன்ன அனைத்துக் கோவில்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது தான் லாகோசில் சிறப்பு.. இப்போது சொல்லுங்க இலுப்புஜு இந்திய ஒருமைப்பாட்டுத் தலம் என்பது சரிதானே..!

பாவ மன்னிப்பு : இக் கட்டுரையில் குறிப்பிட்ட கோவில்களை நாங்கள் நேரில் போய்ப் பார்க்கவில்லை அதே இலுப்புஜுவில் தான் தங்கியிருந்தோம்.. நேர மாற்றம், களைப்பு, குறைந்த நாட்கள் (இருந்தது 4 நாட்கள் அதில் 1 நாள் நிகழ்ச்சி 1 நாள் தூக்கம்) ஆகிய காரணங்களால் எங்களால் கோவிலுக்கு போக முடியவில்லை..

அருள்மிகு முருகன், பாலாஜி, ஐயப்பன், நவக்கிரக நாயகர்கள் அனைவரிடமும் எங்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கும் படி மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்..

நாளை நைஜீரிய இரவு அனுபவங்கள்...

(ஆல் காட்ஸ் பாவ மன்னிப்பு ஆல்சோ ஃபார் திஸ் எக்ஸ்பீரியன்ஸ் டூ)

வரும்...

லவ்லி லாகோஸ் - 4

#லவ்லி_லாகோஸ்

PART - 4

சிவா சார் வீட்டில் அன்றொரு நாள் பேசிவிட்டு...  உப்புமா சாப்பிட்டு விட்டு கிளம்பிய தினம்.. கிளம்பும் போதே இரவு 12:30 மணி.! நைஜீரிய இரவு வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என கமல்நாத் சாரிடம் சொன்னோம். கார் நேராக எங்கள் ஹோட்டலுக்குச் சென்றது... அறைக்குப் போய் குளித்து ஆடை மாற்றி கிளம்பினோம்.

இரவில் நைஜீரிய டிராபிக் என்பது சுத்தமாக இல்லை கேங்ஸ்டர்களை நினைத்தோ அல்லது துணிவு இன்றியோ பலர் அடைந்து கிடந்தனர்.. மூலைக்கு மூலை நைஜீரிய காவல் துறையினர் நம்ம ஊரு போலீஸ் எல்லாம் கடவுள்கள்... ஆனால் அங்கு அநியாயமாக வண்டியை நிறுத்தி அசால்ட்டாக லஞ்சம் கேட்டார்கள்.. அதைக் கொடுத்தோம்..

ஏதோ சுண்டல் வாங்குவது போல வாங்கிக் கொண்டார்கள்,மறைப்பது, நைசாக பாக்கெட்டில் வைப்பது, ஏட்டையாவை விட்டு வாங்கச் சொல்வது, என்றில்லாமல் ஏ.சி யே வாங்கிக் கொண்டு இருந்தார்.. எங்கும் இருள்.. பவர் கட்டினால்... ATM இயந்திரங்கள் இருக்கும் இடத்தில் மட்டும் ஒளியிருந்தது.. ஆனால் இங்கும் பெரிய சிக்கல்..!

ஆம்.. இந்தATM அருகில்தான் தாக்கும் நைஜீரியர்கள்  பதுங்கி இருப்பார்கள்.. இரவு நேரத்தில் பணம் எடுப்போரைத் தாக்க... கமல் சார் பாதுகாப்பான  இரண்டு இடங்களில் வண்டியை நிறுத்தினார்.. அங்கு பணம் எடுக்க முடியவில்லை.. கடைசியில் பாதுகாப்பற்ற ஒரு இடத்தில் நின்று தான் பணம் எடுத்தார்..  திக் திக் நிமிடங்கள் அவை..!

அவர் பணம் எடுத்துவரும் வரை என் உயிர் என்னிடம் இல்லை.. கிறிஸ்டோபரைப் பார்த்தேன்.... அவர் உறங்கிவிட்டார்.. எங்களுக்குக்  காவல் இப்போது டிரைவர் ஜும்போ மட்டுமே.. ஒரு வழியாக கமல் சார் வண்டி ஏறியதும் தான் உயிர் வந்தது.. எங்கள் வண்டி புகழ் பெற்ற நைஜீரிய இரவு கிளப்புகள் இருக்கும் இடத்தில் நுழைந்தது.

அந்தச் சாலையின்  வாயிலிலேயே மீண்டும் நைஜீரிய போலீஸ்... பொதுவாக இந்தியர்களை மாஸ்டர் என்றும் வயதானவர்களை பாபா என்றும் அழைக்கும் நைஜீரியர்கள்.. தேவையான பணத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள்.. இரவு கிளப் ஒன்றின் வாசலில் எங்கள் வண்டி நின்றதும் அந்தக் கிளப்பில் இருந்து ஒரு ராட்சசர் வந்தார்..!

கிட்டத்தட்ட7 அடி உயரம் அர்னால்டு பாடி..  கருப்பு ஸ்கின் டைட் உடை... எங்களை கைகளால் ஸ்கேன் செய்தார்.... பிறகு திருப்தி வந்ததும் அனுமதித்தார்... ஒரு வழியாக உள்ளே சென்றோம்.. திடுக்கிட்டு நின்றோம்.. அங்கே ஆப்பிரிக்காவின் வறுமையைக் கண்டோம்.. அந்த கிளப்பில் எந்தப் பெண்ணுக்குமே ஆடைகள் இல்லை.. அவ்வளவு கொடூர வறுமை... பாவம்..

இங்குதான் ஒரு ஆச்சரியமும் நடந்தது! அந்தப் பெண்கள் அனைவரும் ஒரு கம்பிக்குப் பின் நின்று தங்கள் அங்கங்களை மறைக்கப் பார்த்தனர் அது முடியாத வேதனையில் நம் டேபிளுக்கே வந்து ஆடினர்.. ஒரு லெமன் ஜுசைக் குடித்துக் கொண்டே நடப்பதை கவனித்தேன்.. அங்கு நான் பார்த்த ஒரு திடுக்கிடும் சம்பவம்..... அதுபற்றி நாளை..

லவ்லி லாகோஸ் - 5

#லவ்லி_லாகோஸ்

PART - 5

நானெல்லாம் குண்டு எனச் சொல்பவர்கள் அங்கு வந்திருந்தால் அதை மறுத்து இருப்பீர்கள்... நைஜீரிய பணக்காரர்கள், வாலிபர்கள் அங்குள்ள சோபாக்களில் நிரம்பி "வழிந்து" கொண்டு இருந்தனர் அவர்கள் முன் நடிகர் குண்டு கல்யாணம் கூட சாதா தான் அவர்கள் குண்டு அறுபதாம் கல்யாணம்.! அதில் ஒரு குண்டர் மீது 4 பெண்கள் புதைந்திருந்தனர்.!

அப்பட்டமாக டிவிக்களில் ஊதா நிற படங்கள் ஓடிக் கொண்டிருந்தன அதிரும் ஜாஸ் இசை, கிளிங்கும் மது டம்ளர்கள், குலுங்கும் நடனம், சிணுங்கும் அழகிகள் என கதம்பமாக சிற்றின்ப அலை அடித்துக் கொண்டிருந்தது.. அதிலும் நமக்கு முன் வந்து நின்று நடனம்  ஆடிக் காட்டி கன்னத்தை தட்டி சபலத்தை தூண்டிக் கொண்டு இருந்தார்கள்.

அந்த கிளுகிளுப்பான வேளையிலும் இங்கு சாரு நிவேதிதா வந்திருந்தால் இந்த பயணக்கட்டுரையை எப்படி எழுதியிருப்பார் என்னும் ரணகளமான சிந்தனை வந்து போனது..! அரை மணி நேரம் நின்று கொண்டிருந்தோம்.. பிறகு தான் அங்கு சீட் கிடைத்தது. பெரிய எம்.பி. சீட் தான்.. எம்பி தான் அமர வேண்டியது இருந்தது.

ஆயிரம் நைராக்கள் கொடுத்தால் நமக்கு முன் வந்து 10 நிமிடம் பப்பி ஷேம் நடனத்தை  பிரத்யேகமாக ஆடுகிறார்கள்.. இடையில் இயற்கை உந்துதலுக்கு டாய்லெட் போனால் உள்ளே  ஒரு ஆஜானுபாகர் மறித்து டிப்ஸ் கேட்டார்.. குலை நடுங்கியது அவசரமாக பையிலிருந்து எடுத்த நோட்டு 100 நைரா.. கம்மியோ என நினைத்த போதே தேங்யூ என்று...

பிடுங்கிக் கொண்டார்.. சில மில்லி அதிகமாக சிறுநீர் கழித்துவிட்டு வெளியேறினேன்.. அடுத்து மீண்டும் ஒரு லெமன் ஜுஸ்.. இப்போது கிறிஸ்டோபர் டாய்லெட் போனார்.. போனவர் என்னை விட வெளிறி திரும்பி வந்தார்... என்னாச்சு என்றேன் ஆயிரம் நைரா என்றார் புரிந்தது அவர்களுக்கு பணம் வேண்டும் இவ்வளவு என்றில்லை.

ஒரு வகையில் அங்குள்ள பெண்களின் மீது பரிதாபம் எழுந்தது இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்பது போல அவர்களின் வாழ்க்கை.. நிர்வாணம் என்பதே மரத்து போயிருக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கொடூரம்.. சிலர் துபாய் போன்ற நாடுகளில் இரவு கிளப்புகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் செல்கிறார்கள்.

ஆனால் அவர்களது ஆடை அலங்காரம் ஒப்பனை இவையெல்லாம் சாலைகளில் நிற்கும் பெண்களிடம் பார்த்தேன்.. இதற்கே அவர்கள் சம்பாத்தியத்தின் பெரும் பகுதி போய்விடும்.. ஆடம்பர வாழ்க்கைக்கு அடி பணிந்து புலி வால் பிடித்த கதையாக இத்தொழிலை தொடர்கிறார்கள்... ஏனெனில் இந்த வருமானம் மட்டும் நிலையானது

நாள் ஒன்றுக்கு பிரத்யேக நடனம் மூலம் 25 ஆயிரம் நைராக்களும் டிப்ஸ்மூலம் 10 ஆயிரம் நைராக்களும் சராசரியாக சம்பாதிக்கிறார்கள் வார இறுதியிலோ அல்லது வந்த குஜால் ஆண்களின் வள்ளல் தனத்திலோ பணம் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. 35 ஆயிரம் நைராக்கள் என்பது நம்ம ஊரு 12ஆயிரம் ரூபாய்.

இந்த கிளப்புக்குள் நுழைந்தபோது இருந்த சுவாரஸ்யம் இப்போது சுத்தமாக இல்லை.. எல்லாம் பழகி விட்டு இருந்தது.  அலுப்புத் தட்டிப் போன காட்சிகள் தான் மீண்டும் மீண்டும் அரங்கேறியது  தூக்கமும் கண்களைச் சுழற்ற மணி பார்த்தோம் அதிகாலை 4:30 கடைசியாக மீண்டும் ஒரு லெமன் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு கிளம்பினோம்.

ஆங்காங்கே நைஜீரிய தெருவோர அழகிகள்... சலுகை கட்டணத்தை அறிவித்து கார் ஏறிக் கொண்டிருந்தார்கள்.. எங்களது காரும் இரண்டு இடங்களில் நிறுத்தப்பட்டது.. அதையெல்லாம் தவிர்த்துவிட்டு அறை திரும்பி கட்டிலில் விழுந்தோம்.. மீண்டும் கனவில் அந்த கிளப்பில் நுழையும் காட்சி வந்தது..

#பின்_குறிப்பு

நான் குடித்தது லெமன் ஜுஸ் என நீங்கள் நம்பவிட்டால் எனக்கு கவலையில்லை...

நாளை நைஜீரிய நடிகை ஒருவரை சந்தித்தது பற்றி...

வரும்...

லவ்லி லாகோஸ் - 6

#லவ்லி_லாகோஸ்

PART - 6

நாங்கள் விளம்பர நிறுவனம் மற்றும் மீடியாக்கள் தொடர்பான தொழிலில் இருப்பது நிகழ்ச்சியின் தலைவர் கமல்நாத் சாருக்கு தெரியாது.. அது தெரிந்ததும் அவர் எங்களிடம் கேட்டது அங்கிருந்து சில சீரியல்கள் இங்கு நைஜீரிய மொழிக்கு உரிமைகள் வாங்கித் தர முடியுமா எனக் கேட்டார்.. நம்ம ஊரு கதைகள் ஆப்பிரிக்காவுக்கா..!

அந்தக் கதைகள் இங்கு எடுபடுமா சார் என ஆச்சரியத்தோடு கேட்டோம்.. அவர் சொன்ன பதில் மிகுந்த ஆச்சரியம் அளித்தது.. அங்கும் மாமியார் மருமகள் பிரச்சனை, குடும்ப உறவுகள் பிரச்சனை, நாத்தனார் கொழுந்தியா பிரச்சனை எல்லாம் உண்டாம்..! இருங்க இது சம்பந்தமா ஒரு பெண் தயாரிப்பாளர் இருக்கார் அவர் ஒரு நடிகையும் கூட என்றார்.

சந்திக்க நேரம் குறிக்கப்பட்டது.. மிகச் சரியாக சொன்ன நிமிடம் தவறாது ஹாய் எவ்ரி பதி (ஆப்பிரிக்கர்களுக்கு "ட" வராது) என கறுப்பு மின்னல் போல அந்த ஆறடி உயர நைஜீரிய நமீதா உள்ளே நுழைந்தார் அவரது கறுப்பு நிறத்திற்கு அவர் அணிந்திருந்த ஒயிட் மெட்டல் ஆபரணங்கள் டாலடித்தன.. கிறங்கும் செண்ட் பீய்ச்சியிருந்தார்.

வாசலிலேயே மணத்தது.. கிட்டத்தட்ட 125 வாரங்கள் நைஜீரிய தொலைக் காட்சியில் Talk Show நடத்திய அனுபவம் 60க்கும் மேற்பட்ட ஷார்ட் பிலிம்கள் தயாரிப்பு அதில் பல படங்களில் நடித்த அனுபவம் என பல்துறை வித்தகியாக மிளிர்ந்தார்.. மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார் அவரது பேச்சில் சாதிக்கும் வெறி இருந்தது.

இந்திய சினிமாக்கள் பற்றி தெரிந்து வைத்திருந்தார்.. ஷாரூக், சல்மான் போன்றவர்கள் பற்றி பேசினார்.. குயின் பிளசிங் என்பது அவரது பெயர்.. தனது பெயரில் நைஜீரிய பெண்களுக்காகவும் சமூக சேவைக்காகவும் ஒரு பவுண்டேஷனும் அமைத்து சேவை செய்து வருகிறார்.

மிக சகஜமாக தோளில் கை போட்டு புகைபடம் எடுத்துக் கொண்டார்... எங்களுக்கு தான் கூச்சமாக இருந்தது.. சில திட்டங்கள் பேசியிருக்கிறோம் காலமும் இறைவன் சித்தமும் கனிந்தால் இனி நம் தமிழ் சீரியல்கள் அல்லது புதிய நிகழ்ச்சிகள் நைஜீரியாவிலும் ஒளிபரப்பாகலாம். இனிய மனிதர் இனிமையான சந்திப்பு... குயின் பிளசிங்குடன்...

நாளை அட்லாண்டிக் பெருங்கடல் மேல் 14 கீ.மீ பாலத்தில் பயணித்தது பற்றி....