Friday 30 December 2016

காட்டுக்குள் கரன்ஸி..

ஆப் கி பார் சிங்கம் சர்க்கார் என முழங்கி காட்டில் ஆட்சியைப் பிடித்து இருந்த சிங்கராஜாவின் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியிருந்தன.. இந்த 2 ஆண்டில் ராஜா செல்லாத வெளிகாடுகளே இல்லை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஏன் அண்டார்டிகா வரை எல்லா கண்டங்களிலும் உள்ள காடுகளுக்கு போய் விட்டு வந்திருந்தது.. அண்டார்டிகாவில் ஏது காடு? என மீடியாக்கள்...



கேள்வி கேட்ட போது காடில்லாத அங்கு பெங்குவின், சீல், வால்ரஸ், பனிக்கரடிகள் எப்படி வாழ்கின்றன என பார்த்து வரவே அங்கு சென்றேன் எனக்கூறி அனைவரது வாயையும் அடைத்தது. சிங்கத்தின் நெருங்கிய நண்பரான கஜேந்திர அதானியும் (யானை) சீட்டா அம்பானியும் எல்லா பயணங்களிலும் உடன் சென்று ஆதாயம் அடைந்தது காட்டில் மற்ற மிருகங்களுக்கு அறவே பிடிக்கவில்லை.

மேலும் "ஸ்வச் கானகா" திட்டத்தில் காட்டை சுத்தமாக்குவேன் என்று கூறியது.. மேக் இன் ஃபாரஸ்ட் என முழங்கியது எல்லாம் அதிருப்தியாளர்களை திருப்தி படுத்தவில்லை.! இந்நிலையில் பக்கத்து காடான பாகிஸ்ஃபாரஸ்ட்டில் இருந்து வரும் ஊடுருவலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் முறியடிக்க அதில் கொஞ்சம் பாராட்டுகள் கிடைக்க இனி அதிரடி தான் என்னும் முடிவுக்கு வந்தது சிங்கம்.!

தற்செயலாக நாட்டில் வரும் செய்தித்தாள்களை படிக்க நாட்டில் பழைய கரன்சிகள் செல்லாது என்றும் கேஷ்லெஸ் எகானாமி வரப்போகிறது என்றும் தெரிந்தது.. சட்டென சிங்கத்திற்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது .. மனிதர்களுக்கு கேஷ்லெஸ் என்னும் போது மிருகங்களுக்கு ஏன் கரன்சி வரக்கூடாது.. இதைச் சொன்னதும் கஜேந்திராவும், சீட்டாவும் ஆஹா பிரமாதம் ஜி என்று ஜிங்ஜாக்கின.

அடுத்த நாள் கானகத்தின் தேசிய நாளிதழான காட்டு முரசு பத்திரிக்கையின் தலைப்பு செய்தி.."காட்டுக்குள் கரன்சி வருகிறது" வரும் ஜனவரி 31 க்குள் எல்லா மிருகங்களும் இனி காட்டில் கரன்சி வைத்து தான் எல்லா காரியங்களும் செய்ய வேண்டும் இதற்காக கானகமெங்கும் கேஷ் வெண்டிங் மெஷின்கள் (ஏடிஎம் போல) அமைக்கப்படும் என அரசர் சிங்கம் அதிகார பூர்வ அறிவிப்பு.. இதை படித்ததும் காடெங்கும் மிருகங்கள் சல சலத்தன.

காட்டுக்குள் கரன்சி புழக்கத்தில் வரும் என சிங்கராஜா அறிவித்து விட்டது.. இதுவரை கரன்சியே வைத்து இருக்காத மிருகங்களுக்கு எந்த வகையில் கரன்சி அளிப்பது.. ஒரு மிருகத்துக்கு எவ்வளவு கரன்சி கொடுப்பது..  அதை வைத்து அவை என்னென்ன செய்யலாம் இதற்கு ஏதேனும் விதிகள்.. சட்டங்கள் உண்டா.? இது போன்ற டிரில்லியன் டாலர் கேள்விகள் எல்லா காட்டு மிருகங்களுக்குள் எழுந்தன.!

காட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களான கஜேந்திர அதானி, சீட்டா அம்பானி, நரி மல்லையா போன்றவர்களும் காட்டின் பொருளாதார மேதைகளும், நிதி அமைச்சர் புலி ஜேட்லி தலைமையில் ஓன்று கூடினர்.. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விதிகள் இதோ..



💵 காட்டுக் கரன்சியின் பெயர் ஜங்கிள் நோட் 💵

💵 ஒரு ஜங்கிள் நோட் இந்திய ரூபாய்க்கு 50 ரூபாய் மதிப்பு 💵

💵 ஒவ்வொரு விலங்கும் எவ்வளவு தாவர / மாமிச உணவுகள் ஒரு வேளைக்கு சாப்பிடுமோ அதன் எடைக்கு தகுந்தபடி 1கிலோ தாவர உணவுக்கு 5 ஜங்கிள் நோட் 1கிலோ மாமிச உணவுக்கு 10 ஜங்கிள் நோட் என விலை நிர்ணயித்து 3 வேளைக்கு எவ்வளவு வருகிறது என கணக்கிட்டு அந்தந்த மிருகங்களுக்கு ஏற்ப 1 மாதத்திற்கு தேவைப் படும் உணவுக்கான கரன்சி இலவசமாக  முதலில் வழங்கப்படும்.💵

💵 மிருகங்கள் மேய்ச்சலுக்கு போகும் இடங்களிலும் வேட்டையாடும் பகுதிகளிலும் நீர் அருந்தும் கரைகளிலும் டோல்கேட் அமைக்கப்படும்  அங்கு நுழையும் மிருகங்கள் உரிய கட்டணம் செலுத்திவிட்டுதான் நீர் அருந்தவோ,வேட்டைக்கோ மேய்ச்சலுக்கோ போக முடியும் 💵

💵 மாத பாஸ் செலுத்தியும் உணவு அருந்தலாம் ஒரே நாளில் மல்டி என்ட்ரி பாஸ் வசதியும் உண்டு 💵

💵 செலுத்தும் தொகைக்கு 20% சேவை வரி உண்டு.. இந்த வரி வசூலித்து அந்த வரிப்பணத்தில் கானகமெங்கும் புல் விளைச்சல் புரதம் மிகுந்த மாமிசத்திற்கான விலங்குகள் வளர்த்தல் ஆகிய பணிகளுக்கு அரசு செலவிடும் 💵

💵 மாமிசம் சாப்பிடும் விலங்குகள் புல் மரம் வளர்க்கும் பணியிலும் தாவரம் சாப்பிடும் விலங்குகள் மாமிசத்திற்கான விலங்குகள் வளர்க்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படும்.. இவை இரண்டும் அரசுப் பணிகளாகும் அதற்கேற்ற ஊதியமும் உண்டு 💵

💵 காடுகள் முழுவதும் டோல்கேட் மற்றும் கேஷ் வெண்டிங் மிஷின்கள் வைக்கும் காண்டிராக்ட் கஜேந்திர அதானிக்கும் புல் வளர்ப்பு மாமிச விலங்குகள் வளர்ப்பு காண்டிராக்ட் சீட்டா அம்பானிக்கும்.. நீர் சப்ளை காண்டிராக்ட்  நரி மல்லையாவுக்கும் வழங்கப்படும் 💵

💵 ஒழுங்காக வரி கட்டும் மிருகங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மற்றும் ஆஃபர் கூப்பன்கள் வழங்கப்படும். 💵

💵 கரன்சிகளை அச்சடிக்கும் உரிமை  ரிசர்வ் பேங்க் ஆப் பாரஸ்ட்டுக்கு வழங்கப்படும் 💵

💵 அந்நியக் காடுகளிலிருந்து வரும் கரன்சி முதலீட்டுக்கும் சலுகைகள் உண்டு 💵

💵 வங்கிகளில் அதானி, அம்பானி, மல்லையாக்களுக்கு மிக மிக மிக தாராளமாகவும் சாதாரண விலங்குகளுக்கு கடும் கெடுபிடியுடனும் லோன்கள் வழங்கப்படும் 💵

💵 மிருகங்கள் அனைத்திற்கும் "காடார்" கார்டு வழங்கப்படும்.. இதற்கான டெண்டரும் அதானி குழுமத்திற்கே 💵

💵 விலங்குகளின் கால் நகங்கள் தோலில் உள்ள புள்ளிகள் வரிகள் பயோ மெட்ரிக் முறையில் சேமிக்கும் டெண்டர் அம்பானிக்கு 💵

💵 மாதந்தோறும் கரன்சி அப்டேட்டுகளை சிங்க ராஜா ஃபாரஸ்ட் எஃப் எம் 456.8 இல் சிங்கி பாத்தில் உரையாடுவார் 💵

💵 ஜங்கிள் நோட் ரோஸ்மில்க் பிங்க் கலரில் அச்சிடப்படும் 1 ரூபாய் முதல் அதிகபட்சம்100 ரூபாய் மதிப்பு வரை ஜங்கிள் நோட் வரும் 💵

அப்போது கரன்சியில் யார் படம் போடுவது என குழப்பம் வந்தது இந்த கொரில்லாவின் படம் போடலாமே என்ற குரல் கூரையிலிருந்து ஒலித்தது.. எல்லாரும் மேலே பார்க்க ரிசர்வ் பேங்க் ஆஃப் பாரஸ்ட்டின் கவர்னர் உராங் படேல் ஒருகையால் தொங்கிக் கொண்டே சொன்னார்.. மீண்டும் மிருகங்கள் மத்தியில் சலசலப்பு.. கவர்னர் உராங் படேல் காட்டுக் கரன்சியான ஜங்கிள் நோட்டில் கொரில்லா படம் போட வேண்டும் என்றதற்கு பலத்த எதிர்ப்பு.. 



உராங் படேல் ரிசர்வ் பேங்க் ஆஃப் ஃபாரஸ்ட்டின் கவர்னர் என்பதால் அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் உறவினர் படத்தை கரன்சியில் போட வேண்டும் எனச் சொல்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என பல மிருகங்கள் கண்டனக் குரல் எழுப்பின.அதற்கு பதில் நம் ராஜா படத்தையே கரன்சியில் போடலாமே என கொழுத்த காண்டிராக்ட் கிடைத்ததற்கு கூலியாய் பிளிறியது அதானி யானை.. கவர்னர் உராங் படேல் உட்பக்கமாக கையை வளைத்து விலாவை சொறிந்து கொண்டே சொன்னது..

நண்பர்களே நான் கரன்சியில் கொரில்லா படம் போடச்சொன்னது அவர் என் உறவினர் என்பதற்காக அல்ல மிருகங்களில் இருந்து பிறந்த மனித இனத்திற்கு
முன்னோடி என்பதாலும் நம் இனத்திலிருந்து உருவாகி ஆறாம் அறிவு பெற்றவன் மனிதன் என்பதை நினைவுறுத்தும் வகையிலும் தான் அதைச் சொன்னேன்.. என்றது.. புலி ஜெட்லி இப்போது பேசியது நண்பர்களே உராங்காரின் எண்ணத்தை சொல்லி விட்டார்., நான் என்ன நினைக்கிறேன் என்றால் மனிதர்கள் பல்வேறு நாடுகளில் உபயோகிக்கும் கரன்சியில் மிருகங்கள் படம் போட்டிருக்கிறார்கள்.

நாம் ஏன் நம் கரன்சியில் ஒரு மனிதனின் படத்தை போடக்கூடாது என்றது.. ஆஹா அற்புதமான யோசனை என கர்ஜித்தது சிங்கம்.. காட்டின் ராஜா சிங்கமே பாராட்டியபின் யாராவது மறுப்பு சொல்வார்களா என்ன.! அனைத்து மிருகங்களும் ராஜாவின் தேர்வு சூப்பர் என கோஷ்டி கானத்தில் ஒப்புதல் அளித்தது.. சரி யாருடைய படம் போடலாம் என கேட்க மகாத்மா காந்தி என்றது மான். ஆங்... ஏற்கனவே நாட்டுக்குள் போட்டாச்சு போட்டாச்சு என வடிவேலு பாணியில் புலி சொல்ல மண்டேலா என்றது கரடி சேகுவாரா என்றது சிறுத்தை நேதாஜி என்றது யானை இப்படி ஆளாளுக்கு ஒருவரின் பேர் சொல்ல கடைசியில் திருவுள சீட்டு போட்டுப் பார்க்க முடிவு செய்தன.. 

அனைவரும் சொன்ன பேர்களை எழுதி சீட்டுக் குலுக்கி.. ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து சீட்டெடுக்க..சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறது அதுவும் கானகத்தில் முதன் முதலில் வரப்போகும் கரன்சியில் இடம் பெறப் போகும் அந்த உன்னத மனிதர் யார் என அனைத்து மிருகங்களும் ஆவலுடனும் பரபரப்புடனும் காத்துக்கொண்டிருக்க சிங்கம் அந்த சீட்டை வாங்கி படித்துவிட்டு மெல்ல புன்னகைத்தபடி.. மாக்களே நம் காட்டுக் கரன்சியில் இடம் பெறப் போகும் அந்த நபர் யார் தெரியுமா.? 

சொல்லுங்கள் ராசாவே என அனைத்து மிருகங்களும் கோரஸாக கேட்க அந்த பெருமைக்குரிய நபர் மோடி தான் என்றது சிங்கம்.. காட்டு விலங்குகள் அனைத்தும் அதிர்ச்சியில் மூர்ச்சையாக கடைசியாக சிங்கமும் மூர்ச்சையடைந்தது.!



நிறைந்தது.


Tuesday 20 December 2016

புள்ளும் சிலம்பின 6

#எமை_ஆண்டாள்

பெருமாளுக்கு சங்கு ஓர் ஆயுதம் ஓர் அடையாளம். நமது நாஸ்டால்ஜியா நினைவுகளில் இளம் பிராயத்தில் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6மணி சங்கு என குறிப்பிட்ட நேரங்களில் சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்.. இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு.. சங்கொலி என்பது எந்த நல்லவை தொடங்கும் போதும் கெட்டவை முடியும் போதும் ஒலிக்கும் சப்தம்.! 

பிறப்பு, இறப்பு, ஆலயம், போர் என வாழ்வில் சங்கொலிக்காத இடமே இல்லை.. கண்ணனால் அது பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை இங்கு நினைவு கூர்வோம்.. அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலிலிருந்து பேரொலியாய் ஒலிக்கிறது.. அது அந்நாளின் நல்ல தொடக்கமாக அமைய ஒலிக்கிறதே அந்த சப்தம் உங்கள் காதுகளில் விழவில்லையா?எனக் கேட்டு ஆரம்பிக்கிறார் ஆண்டாள்..



அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார்.இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம்.. இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.ஒரு விஷயத்தில் இன்றைய தமிழக அமைச்சர்களுக்கு ஆண்டாள் முன்னோடி... அவர்களுக்கு சின்னம்மா புகழ்.. 

ஆண்டாளுக்கு ஶ்ரீகிருஷ்ணன் புகழ்.. அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது.. பறவைகள் சிலம்ப சங்கதிர ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா.. உங்களுக்கு தெரியுமா..? நம் பெருமான் பூதகியிடம் பால் குடித்து கொன்றது, சகடனை காலால் நிறுத்திக்கொன்றது, பாம்பின் மேல் உறங்கியது என.. அவர் காலத்து மாண்பு மிகு இதய தெய்வம் தங்கத்தாரகை போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்...

மனதில் நாரணனை நினைத்து முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம் அதை கேட்பதற்காக வாவது எழுந்து வாருங்கள் என்கிறார். பொதுவாக அதிகாலையில் அரி என உச்சரிப்பது நலம் விளைவிக்கும் என்பார்கள். ஆனால் அரி என்னும் சப்தம் நம் காதுகளில் விழுந்தாலே போதும் என்கிறார் 
கண்ணனின் மீது காதலில் விழுந்த ஆண்டாள்.!



மார்கழி 6ம் நாள் பாடல்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

Monday 19 December 2016

மாயனை மன்னு 5

இ#எமை_ஆண்டாள்

இன்றைய அரசியல்வாதிகள் படிக்கக் கூடாத பாசுரம் இந்த 5 ஆம் நாள் பாசுரம்.! ஏன் என்று கடைசியில் சொல்கிறேன்.. சீறும் புலியே, எங்கள் அன்னையே, அடுத்த நம்பிக்கையே  எங்கள் குலவிளக்கே, அஞ்சாநெஞ்சரே, இளைய சிங்கமே, புதிய புரட்சியே, என்று அரசியல் தலைவர்களுக்கு அவர்களின் தொண்டர்கள் அடைமொழி கொடுத்து பிளக்ஸ், போஸ்டர், பேனர்கள் வைப்பதை பார்த்து இருப்போம்.

இதன் முன்னோடி ஆண்டாள் தான்.. அவரது மனங்கவர்ந்த தலைவன் கண்ணனுக்கு அவர் தரும் அடை மொழிகளைப் பாருங்கள்.. மாயனே, வடமதுரை மைந்தனே, யமுனைத் துறைவனே, ஆயர்குல அணி விளக்கே, என்றெல்லாம் விளித்து விட்டு முத்தாய்ப்பாக கூறுகிறார்.. தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனே என்று அதாவது கண்ணனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்.! என்ன ஒரு அபாரமான கற்பனை பாருங்கள்.



தற்போதைய தமிழகத்தில் ஆண்டாள் அரசியல்வாதியாக  இருந்து இருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைக்காக அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். அதனால் தான் ஆரம்பத்தில் சொன்னேன் இந்தப் பாசுரம் அரசியல்வாதிகள் கண்ணில் பட்டு விட்டால் தங்கள் தலைவனை/தலைவியை இதே போல தாயைக் குடல் விளக்கம் செய்த குலக்கொழுந்தே என அழைக்கும் அபாயம் இருக்கிறதல்லவா.

எவரும்  தூய மனதோடு மலர் தூவி கண்ணன் பேரைச் சொல்லி பூஜிப்பதே போதும் அப்படிச் செய்தாலே நாம் செய்த செய்ய நினைக்கிற கேடுகள் எல்லாம் தீயினால் தூசாகும் என்கிறார். இந்தத் தீயினால் தூசாகும் என்னும் தொனியில் தன் தலைவனால் நம் பாவங்கள் பஸ்பமாகி பொசுங்கும் என பிறருக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.. அவருக்கு அதுவே போதும் ஏனெனில்.. 

ஆண்டாள் எந்தப் பதவியையும் நலனையும் எதிர்பாராத திருமாலின் அப்பாவித் தொண்டர்.. அவருக்கு மாலவனின் மலரடிகளே போதும்.


மார்கழி 5 ஆம் நாள் பாடல் :

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

Sunday 18 December 2016

ஆழி மழைக்கண்ணா 4

#எமை_ஆண்டாள்

வில் வீரர்கள் படை என அக்காலத்தில் எல்லா அரசர்களிடமும் ஒரு படை இருந்தது.. துப்பாக்கிகள் பீரங்கிகள் இவை கண்டுபிடிக்கப்படும் முன் போர் வீரர்கள் அஞ்சியது யானைப் படைக்கு.. மதங் கொண்ட யானை போல அவை நிலம் அதிர ஓடி வரும் காட்சியை பார்த்தாலே பீதியில் ஓடிவிடுவார்களாம்.. அலெக்ஸாண்டர் முதல் ஆங்கிலேயர்கள் வரை அனைவரையும் நடுங்கவைத்தது  நம் நாட்டு யானைப்படை.!

இதெல்லாம் வெளிநாட்டு எதிரிகளுக்கு.. உள்நாட்டில் நமது மன்னர்களுக்குள் போர் நடக்கும் போது அந்த யானைப்படையையும் நடுங்க வைக்க உருவாக்கப்பட்டது தான் வில் வீரர்கள் படை தரையில் அமர்ந்த படி முதல் வரிசை அதன் பின் முழங்காலிட்ட படி 2வது வரிசை பிறகு சராசரி உயரத்தில் நிற்பவர்கள் 3வது வரிசை நெடு நெடுவென உயரம் உள்ளோர் 4 வது வரிசை என 4 நிலைகள்.

விளையாட்டரங்க கேலரி போல முன் நிற்கும் இந்தப் படை பொழியும் அம்பு மழை ஓடி வரும் யானைகளை பதம் பார்க்கும்.. காட்டில் வேட்டையாடும் போது துள்ளி ஓடும் மானின் வேகத்தையும் மீறி அதனை சரியாகப் போய் துளைக்கிறது என்றால் அந்த அம்பின் வேகத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். ஒரு அம்பே அப்படி என்றால் சரம் சரமாக நான்கு வித நிலைகளில் சீறி வரும் அம்புகள்.!!! 

ஆம்..அவை வில்லில் இருந்து விடுபடும் ஓசை ஆலைச் சங்கொலி போல எதிரொலிக்குமாம் அந்த நாண்கள் அதிரும் ஓசை கேட்டாலே யானைகளுக்கு கிலியாகிவிடுமாம்.. இனி பாசுரத்திற்கு வருவோம் இந்த அம்பு பொழிதலை ஆண்டாள் கண்ணனின் சாரங்கத்தை வைத்து வான் மழைக்கு உவமானம் தருகிறார். ரமணனாக அக்காலத்தில் ஆண்டாள் வாசித்த வானிலை அறிக்கை தான் இந்தப் பாசுரம்.



வருண பகவானை ஆழி மழைக் கண்ணா என விளித்து.. நீ கடலுக்குள் நுழைந்து நிறைய நீரை எடுத்துக் கொண்டு பெரும் ஒலியுடன் மேலெழுந்து மேகமாக மாறி மின்னல் ஒளிர அம்பு போல் சரம் சரமாய் மாலவன் அடியவர்களுக்கு  அருள்வது போல மழையை பொழிவாயாக என்கிறார். இதில் பெருமாளின் சங்கினை இடியாகவும் அவரது சக்கரத்தின் ஒளியை மின்னலாகவும் அவரது சாரங்கம் எனும் வில் அம்பை மழையாகவும் ரசனையோடு உவமைப் படுத்துகிறார்.

கடல் நீர் ஆவியாகி மேகத்தில் சேர்ந்து மழையாகப் பொழிகிறது என்பது இன்றைய அறிவியல் மனிதர்களான நமக்கெல்லாம் தெரியும்.. ஆனால் இது அக்காலத்திலேயே ஆண்டாளுக்கும் தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பான செய்தி. அவர் பக்தி மார்க்கத்தை பரப்பிய மெய்ஞானி மட்டுமல்ல இயற்கை அறிவியல் தெரிந்த விஞ்ஞானி. நம் பக்தி இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் ஆராயப்படவேண்டும்.!



மார்கழி 4 ஆம் நாள் பாடல்..

ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.







Saturday 17 December 2016

ஓங்கி உலகளந்த 3

#எமை_ஆண்டாள்

தேசம் சுபிட்சம் பெற என்ன செய்யவேண்டும்.? திடீரென கரன்சி செல்லாது என அறிவித்து கேஷ்லெஸ் எகானமி, டிஜிட்டல் பரிவர்த்தனை, கருப்புப்பணம் ஒழிப்பு, டிமோனிடேஷன் என்றெல்லாம் அறிவித்தால் சுபிட்சம் கிடைக்குமா? ஆண்டாள் இப்படிக் கண் "மோடி" த்தனமாக சிந்திக்காமல் ஒரு நாடு சுபிட்சம் பெற ஒரு பட்டியல் தருகிறார்.. எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளும்படி!

இதோ ஆண்டாளின் சுபிட்சப் பட்டியல்... நாட்டில் தீயவை அழிய வேண்டும், பின்பு மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டும், அதனால் நெல்கள் செழிப்பாக வளரவேண்டும் அந்த வயல்களின் ஊடே ஓடும் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாட வேண்டும் அந்த கரைகளில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களில் பொறி வண்டுகள் தேன் குடிக்க வேண்டும்.. இதெல்லாம் வெளியே.!

அடுத்து வீட்டின் உள்ளே.! வள்ளல்கள் மட்டுமே தன்னிடம் பொருள் பெற வந்திருப்பவரின் முகக்குறிப்பை வைத்தே அவரது தேவைகளை அறிந்து உதவுவார்களாம்.. அதே போல நாம் கறப்பதற்குள் தானாகவே மடியிலிருந்து பாலைப் பொழியும் பால் வளம்மிக்க வீட்டுப் பசுக்களை வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள் என்று வள்ளல்களுக்கு நிகராக கூறியிருக்கும் அவரது உவமை அழகியல் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

மாதம் மும்மாரி மழை, அதனால் செழிக்கும் வேளாண்மை, மீன் வளம் இருப்பதால் மீன்பிடி தொழில், வண்டுகள் தேன் உண்பதால் ஏற்படும் மகரந்த சேர்க்கை, விவசாயம் தொழில் என்பதால் அதற்குதவும் கால்நடைகள், அவற்றால் கிடைக்கும் பால் பொருட்கள் இவை அனைத்துமே செழிப்பாக இருந்தால் எந்நாடும் செழிக்கும். இவை எல்லாம் அடிப்படைத் தொழில்கள் என்பது தேசப் பொருளாதாரம்.

பக்தி பாசுரம் தான் என்றாலும் ஆண்டாளின் தொழில் சார்ந்த பொருளாதார அறிவு நம்மை வியக்கவைக்கிறது. இவை எல்லாம் ஒரு நாட்டில் நடந்திட பொருளாதார நிபுணர்கள் திட்ட அறிக்கை தருவார்கள்.. ஆண்டாள் என்ன அறிக்கை தருகிறார் தெரியுமா! இவையெல்லாம் நாம் பெற அதிகாலையில் எழுந்து குளித்து நோன்பிருந்து உலகளந்த பெருமாளின் பேரை பாடிக் கொண்டு இருந்தாலே போதுமாம்.. அதன்பிறகு எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் எழுந்து வாருங்கள் என்கிறார்...

 சி.எம் யார்.? சின்னம்மா யார்.? என ஆண்டாளுக்குத் தெரியாதா என்ன.!

மார்கழி 3 ஆம் நாள் பாடல்...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.

Thursday 15 December 2016

வையத்து வாழ்வீர்காள்2

#எமை_ஆண்டாள்

உலகில் தன்னை அலங்கரித்துக் கொள்ளாத பெண் இருந்தால் அது எட்டாவது உலக அதிசயம்.. தன்னை அழகுப் படுத்திக் கொள்ள விரும்பாத பெண்கள் யாரேனும் உண்டா! அதுவும் அதிகாலை மார்கழி நீராடிய பின்பு கண்ணுக்கு மை எழுத மாட்டோம் கூந்தலில் பூச்சூட மாட்டோம் என்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் பாசுரங்களில் சில முரண்கள் இருக்கின்றன.. ஒரு பாசுரத்தில் பால் சோறில் முழங்கை வழியே நெய் வழிய சாப்பிடுவோம் எனச்சொல்லும் ஆண்டாள் ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல இந்த இரண்டாம் நாள் பாசுரத்தில் பாலுண்ணோம் நெய்யுண்ணோம் என்கிறார்.!

பால்,நெய் உண்ணாமல் இருந்து, தீயச் சொற்களை பேசாது, தான தருமங்கள் செய்து, செய்யக் கூடாததை செய்யாமல் இருந்து, இப்படி கடைபிடிக்கும் பாவை நோன்பில் பெண்ணின் இயல்பான உடன் பிறந்த குணமான அலங்கரிக்கும் குணத்தையும் மாதவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்கிறார் ஆண்டாள். 

மேக்கப் இல்லாத முகத்தை விட மேக்கப் இல்லாத மனமே முக்கியம் என்கிறார் அர்ப்பணிப்புக்கு இதை விட ஓர் நல்ல உதாரணம் இருக்க முடியுமா? கண்ணனின் அருளை மட்டுமே வேண்டும் ஆண்டாளின் அர்ப்பணிப்பு எல்லையில்லாதது. 

மார்கழி 2ஆம் நாள் பாடல்:

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே 
நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் 
முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் 
சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் 
ஆந்தனையும் கைகாட்டி
 உய்யுமாற் எண்ணி 
உகந்தேலோர் எம்பாவாய்.

மார்கழித் திங்கள்...1

#எமை_ஆண்டாள்

பொதுவாக ஆண்டாள் பாசுரங்களில் இயற்கை குறித்த அறிவியல் பார்வை இருப்பது பெரும் வியப்பு.!! அவர் வான சாஸ்திரம் தெரிந்தவரோ என்னும் பிரமிப்பை ஏற்படுத்தும். மார்கழி பிறக்கும் போது பெரும்பாலும் பவுர்ணமி தினமோ அல்லது பவுர்ணமி முடிந்து ஒரிரு தினங்களோ முடிந்திருக்கும் அதைத்தான் முதல் பாடலில் மதி நிறைந்த நன்னாள் எனத் துல்லியமாக குறிப்பிட்டு இருப்பார்..

இன்னொரு பாசுரத்தில் கடல் நீர் ஆவியாகி மழை பொழிவதை ஆண்டாள் எழுதிய விதம் ஆச்சரியம்..அதை அப்பாடல் வரும் நாளில் பிறகு பார்க்கலாம். ஆயர்பாடியின் தலைவனை கூர் வேல் கொடுந் தொழிலன் என விளித்திருக்கிறார்.. அவன் இடையர் குல தலைவன் மாடுகள் வைத்து தொழில் புரிகிறவன் அதே நேரத்தில் தன் இனத்திற்கு ஒரு துயர் வந்தால் வேலெடுத்து போர் புரிபவனும் கூட என்னும் அர்த்தத்தில் கூறியிருப்பது அழகு..

போகிற போக்கில் ஏரார்ந்த கண்ணி என யசோதையை அழகிய கண் உடையவள் என்கிறார்... ஒரு பெண்ணின் அழகை ஒரு பெண்ணே போற்றுதல் அரிது ஆண்டாள் அப்பெருமையையும் பெறுகிறார்... குளிர்மிகு மார்கழியில் அதிகாலைப் பனியில் நீராடச் செல்ல உடல் நடுநடுங்கும் ஆனால் ஆண்டாளின் தமிழ் ஒரு ஹீட்டர்.! அந்தத் தமிழ் வெப்பம் படிப்பவர்க்குள் பரவி ஆயர்குலச் சிறுமிகளோடு சில்லென்ற நீரில் மார்கழிக் குளியல் போட்ட ஒரு பேரானந்த அனுபவத்தை அனைவருக்கும் தந்துவிடுகிறது.. ஆம் அதுதான் ஆண்டாள்..! அவள் தமிழால் நமை ஆண்டாள்..!


மார்கழி 1ஆம் நாள் பாடல்..

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

Wednesday 26 October 2016

சேலத்து ஸ்வீட்டகம்


#சேலத்து_ஸ்வீட்டகம்

"சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்" என்று சிறுவயதில் படித்து இருப்போம்.. அதே சேலத்தில் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் தித்திக்கும் எங்கள் ஸ்வீட்டகம் பற்றிய பதிவு தான் இது.. அதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.. கொசுவர்த்தி சுருள ஸ்டார்ட் ... 1966 ஆம் ஆண்டில் என் தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ராஜகணபதி ஸ்வீட்ஸ் அப்போது சேலத்தில் மிகப் பிரபலம்..

என் அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டர்.. ஆரியபவன் க்ரூப் தான் அவரது குருகுலம்.. வட இந்தியர்களிடம் பயின்றதால் அப்பாவின் ஸ்வீட்டுகள் சேட்டுகளின் நற்குணங்களோடு தயாராகின.. அப்பா செய்யும் பால் அல்வா மிகப்பிரசித்தம்.. இன்றும் எமது பழைய வாடிக்கையாளர்கள் நினைவில் நீர் ஊற அதை வர்ணிப்பார்கள்.. மைசூர்பாக், சோன் அல்வா, பாதாம் அல்வா, குலாப்ஜாமூன், லட்டு, ஜாங்கிரி எல்லாம்..

எங்கள் கடையில் தனித்துவமாக இருக்கும்.. இன்றைய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா போல இல்லாது மேலும் கீழும் மஞ்சள் நடுவில் பொன்னிறத்தில் கடலை மாவும் நெய்யும் மணக்க வாயில் கரகர மொறு மொறுவெனக் கரையும் மைசூர்பாக்.. ஸ்பெஷல் ஜிலேபி பருப்பில் பக்குவமாக செய்து ஜீரா நன்கு ஊறிய ஜாங்கிரி.. மணக்க மணக்க பாதாம் அல்வா, கொழுக் மொழுக் குலாப்ஜாமூன்.. இப்படி..

எல்லா இனிப்புகள் மட்டுமல்ல வெங்காய பக்கோடா, பாம்பே மிக்சர், ஆந்திரா முறுக்கு, பட்டர் முறுக்கு, மோட்டா மிக்சர், அவல் மிக்சர், முந்திரி பக்கோடா, ரிப்பன் முறுக்கு என காரவகைகளும் தரமாக இருக்கும்.. அதுவும் அப்பா செய்யும் பக்கோடா எல்லாம் மன்னர் காலத்தில் செய்து கொடுத்திருந்தால் அந்த பக்கோடாகளுக்கு ஈடான பரிசாக 24 பர்கானாக்கள் அப்பாவுக்கு கிடைத்திருக்கலாம்.

தீபாவளிக்கு நீண்ட க்யூவில் நின்று ஸ்வீட் வாங்குவார்கள்.. அந்த இடமே பாலும் நெய்யும் மணக்க இனிய களேபரமாக இருக்கும்.. என் அம்மாவின் திடீர் மறைவு அப்பாவை புரட்டிப் போட காலம் எங்களை மதுரைக்கு விரட்டியது.. அப்பாவின் அந்த அற்புத கைப்பக்குவத்தை நான் கற்றுக் கொள்ளாமல் போனாலும்.. அந்தக்கலையை அவர் என் தம்பிக்கு தந்துவிட்டு போயிருக்கிறார் என்பதில் தான் பெருமிதமே.!

ப்ளாஷ் பேக் ஸ்டாப்... இன்று அக்டோபர் 2016...

தற்போது தம்பி அப்பா கோலோச்சிய அதே சேலத்தில் பட்டையை கிளப்பி வருகிறான்.. தம்பி செய்த பால் அல்வாவை சாப்பிட்ட ஒருவர் பழைய எம்.ஜி.ஆர் பட சகோதரர்கள் குடும்ப பாடலில் அடையாளம் தெரிந்து கொள்வதைப் போல தம்பி இது ராஜகணபதி ஸ்வீட் டேஸ்ட் ஆச்சே நீ அவரு மகனா என கண்டுபிடித்த விந்தையும் நடந்துருக்கு.. தற்போது சேலம் அப்ஸரா தியேட்டர் இறக்கம் யானை மண்டபத்தில் என் தம்பி தீபாவளி ஸ்வீட் காரங்கள் தயாரித்து விற்பனை செய்கிறார்.

கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளி சமயத்தில் அவர் இங்கு இந்த விற்பனையை நடத்துகிறார்.. சிறு அளவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய அவரது தயாரிப்பின் தரம் சுவை பெரிய நிறுவனங்களைக் கவர தங்கள் பணியாளர்களுக்கு தீபாவளி இனிப்புகள் தர இனிப்பை மொய்ப்பது போல் இவரை மொய்க்க நுற்றுக்கணக்கான பாக்கெட் ஆயிரக்கணக்கான பாக்கெட் என மெகா மெகா ஆர்டர்கள் பெற்றார்.

பெரிய அளவில் தயாரித்து நிறுவனங்களுக்கு வழங்கும் பிரத்யேக இனிப்புகளை  ஏன் பொது மக்களுக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற எண்ணம் உதிக்க கடந்த ஆண்டு முதல் அங்கேயே பொது மக்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.. மற்ற ஸ்வீட் கடைகளை விட விலையும் குறைவு.. அதிகமாக ஸ்வீட் காரங்கள் தயாரிப்பதால் தரமும் நியாயமான விலையும் சாத்தியமாகிறது.

அசார்ட்டட் சாதா ஸ்வீட்ஸ் கிலோ 200 ரூபாய்க்கும் ஸ்பெஷல் ஸ்வீட்டுகள் கிலோ 350 முதல் 700 ரூபாய் வரைக்கும் உள்ளது.. மிக்சர் மற்றும் கார வகைகள் கிலோ 200 முதல் 300 வரை உள்ளது.. அவரது ஸ்பெஷலாக ஃபைவ் டேஸ்ட் மைசூர்பாக் என ஐந்து சுவைகளில் மைசூர்பாக் சுவைக்கலாம் என்கிறார்... 

பாதாம் மைசூர்பாக், முந்திரி மைசூர்பாக், கேரட் மைசூர்பாக், மில்க் மைசூர்பாக், ஸ்பெஷல் மைசூர்பாக் என் பஞ்ச பாண்டவர்களாக மைசூர்பாக்குகளும் ஹார்லிக்ஸ்பர்பி பூஸ்ட் பர்பி போன்ற வகைகளும் இந்த தீபாவளிக்கு ஸ்பெஷல்.. தீபாவளி முன் தின இரவு வரை விற்பனை உண்டு.. எங்களது பாரம்பரிய சுவையை மீட்டெடுக்கும் இம் முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை..சேலம் மட்டுமல்ல அருகில்...

உள்ள ஊர்களிலும் உள்ளவர்களும் வந்து வாங்கலாம் பல்க் ஆர்டர்கள் என்றால் கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு ஆர்டர் தரலாம் எங்களது தரம் சுவை பற்றி ருசித்த நாவிலிருந்து வரும் அபிப்ராயங்கள் மிக முக்கியம் ப்ரீத்திக்கு எல்லாம் என்னால் காரண்டி தரமுடியாது ஆனால் என் தம்பி செய்யும் இனிப்புகளுக்கு நான் காரண்டி.. இன்றே வருக.. இனிமையைப் பெறுக.. இன்சொல் தருக.. நன்றி..

தொடர்புக்கு










Monday 24 October 2016

குலோப் ஜாமுன் புராணம்

குலோப் ஜாமுன் மிக்ஸ் என்பது வருவதற்கு முன்னால் ஸ்வீட் கடைகளில் மட்டுமே போய் வாங்க முடியும் இனிப்பு வகை குலோப் ஜாமூன்.. ஆனால் இன்று தீபாவளிக்கு பலர் வீடுகளில் இந்த இனிப்பை சர்வ சாதாரணமாக தயாரிக்கிறார்கள். ஆனால் இது இட்லின்னா சட்னியே நம்பாதுடா என்பது போல சில குலோப் ஜாமூன்களின் லட்சணத்தைப் பார்த்து நான் கண்ணீர் விட்டதுண்டு.

அதென்ன குலோப் ஜாமூன் லட்சணம்.? சொல்றேன்.. முதலில் குலோப் ஜாமூனுக்கு தேவை நிறம்.. பொன்னிற பிரவுன் கலர் பிறகு குஷ்புவுக்கும் ஹன்சிகா மோத்வானிக்கும் இடைப்பட்ட கொழுக் மொழுக் ஸ்பான்ஞ்ச் பதம்... ஸ்பூனில் கத்தி போல அறுத்தாலே இலகுவாக சிலைஸ் போல அறுபட வேண்டும் உள்ளே நெய் நிறத்தில் கொஞ்சம் மினு மினுப்பாக இருக்கவேண்டும்.. இதுதான் ஜாமூன்.!

சில ஜாமூன்களை விண்டால் உள்ளே வெள்ளை நிறம் தெரியும்.. சில வீடுகளில் சீடை போல கெட்டியாக செய்து விடுவார்கள் பாகில் ஊறினால் கூட சாஃப்ட் ஆக மாறாது.. சிலர் ஆப்பாயில் உடைந்தது போல ஜாமூனை சிதைத்து ஊற வைத்து இருப்பார்கள்.. இதெல்லாம் குலோப் ஜாமூனுக்கு நாம் செய்யும் பாவங்கள்.. சரியாக பிசைந்து ஜாமூன் செய்யத் தெரியாதவர்கள் அதை செய்யாமலிருப்பது நலம்.

அடுத்து சர்க்கரை பாகு... நன்னாரி சர்பத் பார்த்து இருக்கிறீர்களா அல்லது செக்கில் ஆட்டி வடிகட்டிய கடலை எண்ணை கலரில் தெளிவாக இருக்கவேண்டும்.. சில வீடுகளில் குலோப் ஜாமூன் மிக்ஸை சரியாக பிசையாததால் பொரித்த ஜாமூனை போட்டவுடன் அதன் பிசிறுகள் உதிர்ந்து துகள் துகளாக மிதக்கும்..ஆற்று நீரில் பாசி படர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி பாகில் பிசிறுகள் மிதக்கும்.

பாகின் நிறத்தை சிலர் அடர் பிரவுனுக்கு மாற்றி பாகை பலியாக்கி இருப்பார்கள்.. சில வீட்டு ஜாமூன்கள் கருகிப் போய் ஜீராவில் மிதப்பது குட்டையில் ஊறும் எருமைகளை நினைவூட்டும். குலோப் ஜாமூனை சாப்பிடுவதே ஒரு கலை  இதை ஸ்பூனால் நசித்து நசித்து ஜீராவில் குழப்பி உண்பது ஜாமூனை கற்பழிப்பதற்குச் சமம்.. இப்படி ஆட்களை கண்டால் எனக்கு அவர்களை ஓங்கி அறையலாம் போல தோன்றும். 

சிலர் இன்னும் பத்து விநாடியில் உலகமே அழிந்து விடும் என்பது போல ஜாமுனை அப்படியே முழுதாக முழுங்கிவிடுவார்கள். கொஞ்சம் இருங்கப்பா என்னா அவசரம்..! குலோப் ஜாமுனை சாப்பிடும் முறை இருக்கு... முதலில் இதை சூடான ஜீரா ஊற்றி சாப்பிட வேண்டும்.. கொதிக்க கொதிக்க சூடோ மிதமான சூடோ இன்றி நடுநிலையான சூடு.. கிண்ணத்தில் இஷ்டத்துக்கு நிறைய ஜீரா இருக்கக் கூடாது.!

இரண்டு குலோப் ஜாமூன்கள் உள்ள ஒரு கிண்ணம் என்றால் பாதி குலோப் ஜாமூன் மூழ்கி இருக்கும் அளவிற்கு ஜீரா இருப்பது நன்று.. ஜாமூனை சாப்பிடும் முன் ஸ்பூனின் பின் புறத்தை தட்டையாக ஜாமூன் மேல் வைத்து மென்மையாக மிக மென்மையாக அழுத்த வேண்டும் உடைத்து விடக் கூடாது.. கொழுக் மொழுக் குழந்தையைக் கண்டால் அதன் புஷ்டியான கன்னத்தை வலிக்காமல் கிள்ளுவோமே அதைப்போல.

இப்போது ஜாமூன் உடையாமல் அமுங்கினால் கடவுள் உங்களுக்கு நல்ல ஜாமூனை சாப்பிடும் பாக்கியத்தை தந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளவும்.. ஜீரா சூடாக இருந்தால் ஸ்பூனில் அதை அள்ளி அபிஷேகம் போல ஜாமூன் மேல் விடுவது சாலச் சிறந்தது.. மெதுவாக ஸ்பூனால் சிலைஸ் இடுங்கள் அத்தோடு கொஞ்சம் ஜீராவும் அள்ளி எடுங்கள் அப்படியே சூடு தணிய ஊதி ஊதி இதழ்களால் பற்றி...

உறிஞ்சுங்கள் நாவிற்குள் ஜீராவும் பற்களுக்கு இடையில் ஜாமூன் துண்டமும் அரைபட வேண்டும்..மெல்ல விழுங்குங்கள் ஒரு விள்ளலுக்கு 10 விநாடிகள் ரசித்து சாப்பிடுங்கள்.. ஆங்.. சொல்ல மறந்துட்டேன் ஜாமூனில் கொஞ்சம் பன்னீர் தெளித்து சாப்பிடுவது  இன்னும் சூப்பர் உங்கள் வாய்க்கு ஒரு மவுத் ஃபிரஷனர்..இதை சாப்பிட்ட பிறகு தரப்படும் முத்தங்கள் திரும்ப எதிர்பார்க்க வைக்கும்.

ஜாமூனை சிதைப்பது ஒரு பாவச்செயல் அதை இனி செய்யாதீர்கள் என் கவலை எல்லாம் குலோப் ஜாமூனை குளோப் ஜான், குலப்புஜான், என ஒழுங்காக அழைக்கத் தெரியாத இந்த சமூகத்தில் குலோப் ஜாமூனின் அருமை பெருமைகளை சொல்ல ஒரு மீட்பர் வேண்டும் அல்லவா.. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.. இதோ பன்னீர் தெளித்து ஜாமூன் சாப்பிடப் போகிறேன். வாங்களேன் என் கூட.. யார் கண்டா உங்கள் முத்தம் யாருக்கோ தேவைப்படலாம்.!

Sunday 23 October 2016

20

#உதடும்_உள்ளமும்

உதடு சொன்னது...

என் வாழ்க்கையில் வந்த ஃபிளவர் கார்டனே...
துன்பப் பனியை விலக்க வந்த வெயிலே
என்னில் ஒரு பாதியாய் இருக்கும்  வைஃப் நீதான்
என் இளைப்பாறுதலுக்கு நீதான் நாற்காலி
ஆண்டுகள் இருபதானாலும் அதே காதல்
நீயின்றி நானில்லை நம் காதலுக்கு வானமே எல்லை..

உள்ளம் சொல்வது...

என் வாழ்க்கைச் சிறையின் வார்டனே...
என் இன்பத்தை கைது செய்த ஜெயிலே
கண்ணில் என்னை ஆட்டி வைக்கும்  வைஃபை நீ தான்
உன்னை இளக்காரமாக நினைத்தால் நான் காலி
ஆண்டுகள் இருபதானாலும் அதே மோதல்
நீயின்றி நானில்லை.. வேற வழியில்லை தொடருதே தொல்லை..

20 ஆம் ஆண்டு திருமண தினம்..

Saturday 22 October 2016

வெண்மணற் கடற்கரை 3

அபாயச் சங்கொலி அதிர என்னவோ ஏதோ என பதறிப் போக நண்பர் சுந்தர் சொன்னார் பயப்படாதிங்க டிரைன் வரப்போகுது தூக்கி நிறுத்தி இருக்கும் பாலத்தை கீழே இறக்கப் போறாங்க அதுக்கு எச்சரிக்கை மணியாக தான் இந்த அபாயச்சங்கு என்றார். எங்கள் படகும் அந்தபாலத்தை நெருங்கி கரையை ஒட்டி இருந்த ஒரு பூங்கா அருகில் போய் நின்றது படகில் இருந்து இறங்கினோம்.

90 டிகிரியில் வான் நோக்கி செங்குத்தாக நிறுத்தியிருந்த கர்டர் பாலம் குறிப்பிட்ட இடைவெளியில் சைரன் ஒலிக்க ஒலிக்க கீழிறங்கிக் கொண்டிருந்தது.. பொதுவாக அமெரிக்காவில் இரயில் போக்குவரத்து என்பது சிட்டி ரயில் போக்குவரத்து மட்டுமே தவிர தொலைதூர போக்குவரத்து எல்லாம் கொஞ்சமே.. பாலம் மெல்ல மெல்ல இறங்கி தன் ரயில் பாதைக் காதலியை ஆசையுடன் அணைத்துக் கொண்டது.

ரயில் வருவதற்குள் எங்கள் படகு கிளம்ப அதை படம் எடுக்க முடியாமல் படகேறினோம்.. மீண்டும் படகுத் துறை அங்கிருந்த ரெஸ்டாரண்ட் ஒன்றில் மீன் பொரிக்கும் வாசனை நாசி வழியாக எங்களை தூண்டில் போட்டு இழுக்க கடைக்குள் நுழைந்தோம் ஆனால் அங்குள்ள கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கும் விலை சொன்னதால் ச்சீ..ச்சீ.. இந்த மீன் கசக்கும் என திரும்பினோம்.

இந்த இடத்தில் பெரும்பாலான கடைகள் மூடியே கிடந்தன.. காரணம் இது போல விலையினால் தான் என்றார்கள்.. இட வாடகையும் அதிகம் என்பதே முக்கிய காரணம் என்றார்கள்.. பெரும்பாலும் பூட்டிய கடைகளை தாண்டி மெயின் வீதிக்கு வந்தோம். பிரெஞ்சு அமைப்பிலான சாலைகள் கடைகள் விளக்கு கம்பங்கள் அனைவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பசி வயிற்றில் இருந்து நோட்டிபிகேஷன் அனுப்பியது.. நேரம் மாலை 6:40 மணி மதியம் 1 மணிக்கு சாப்பிட்டது ஏனெனில் இங்கு வருவதற்கு முன்பு தான் எவர் க்ளேட் முதலை ஆற்றுப் பயணம் சென்று திரும்பி இருந்தோம்.. கிட்டத்தட்ட 6 மணிநேரம்.. முன் பசிக்கு அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் இருக்கும் ஷாப்பிற்கு சென்று வாழைப் பழங்கள் கோக் மற்றும் கேக்குகள் வாங்கி பசியாறினோம்.

அந்த பங்கில் இருந்து வெளியேறும் போது மேற்கூரை திறக்கப்பட்ட ஆலிவ் பச்சை நிற போர்ஷ் கார் ஒன்று வந்தது அதில் நெடு நெடுவென ஒரு கறுப்பின வாலிபர் சுற்றிலும் 4 இளம் பெண்கள்.. அமெரிக்காவின் புகழ் பெற்ற பேஸ்பால் ப்ளேயராம்.. உல்லாச கப்பலுக்கு போகிறார் போலும்.. வாழ்க்கை வாழத்தான் அதிலும் இது போல சொகுசாக வாழ
வரம் வேண்டும் நாங்கள் விட்ட பெருமூச்சில் அந்தக் கார் மெல்ல 2 இஞ்ச் முன்னால் நகர்ந்தது.. கிளம்பினோம்.. பை பை லாடர்டேல்.!

வெண்மணற் கடற்கரை 2

வெண்மணல் கடற்கரையில் பந்தாடும் வெண்புறாக்களை பார்ப்பதை விட அந்த குடியிருப்பில் என்ன சுவாரஸ்யம் இருந்து விட முடியும் என்றதற்கு அது ஒரு தனி உலகம் பிரத்யேக வீடுகள், கப்பல்கள், ரெஸ்ட்டாரெண்டுகள், கடைகள், இராமேஸ்வரம் போல கப்பலுக்காக தூக்கி இறக்கும் இரயில் பாலம் முக்கியமாக கோடிஸ்வரர்களின் கேர்ள் ஃபிரெண்டுகளை பிகினியில் பார்க்கலாம் என்றார் நண்பர்.. 

அட இனி இங்கே நிற்போமா... கிளம்பி கடலோரம் இருக்கும் அந்த பணக்காரர்கள் குடியிருப்பை நெருங்கினோம் கடலிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு அதை நகருக்குள் திருப்பிவிட்டு அதில் பல சொகுசுக் கப்பல்கள் நின்று கொண்டிருந்தன.. அருகிலேயே பெரிய பெரிய கெஸ்ட் ஹவுஸ்கள்.! உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களும், ஹாலிவுட் பிரபலங்களும், கோடிகளில் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களும் இங்கு வீடும் கப்பலும் வாங்கிப் போட்டு இருக்கிறார்கள் என்றார் நண்பர்

மும்பை ஜூஹு பீச், ஹைதராபாதின் பஞ்சாரா ஹில்ஸ், சென்னை போட் கிளப் போல அமெரிக்காவில் பெரும் பணக்காரர்கள் வீடு கட்டி இருக்கும் இடம் தான் போர்ட் லாடர்டேல் கடற்கரைப் பகுதி.. கடலில் கப்பலை நிறுத்தி வைக்க முடியாது என்பதால் கடல் நீரை கட்டியிருக்கும் பங்களா வாசலுக்கு கால்வாய் அமைத்து கொண்டு வந்து அவரவர் வீடுகளின் முன் கப்பலை பார்க் செய்திருந்தனர்.

இங்கெல்லாம் வீடுகள் 50 கோடியில் இருந்து தான் ஆரம்பம்.. இங்கு வீடு இருந்தால் கப்பல் நிச்சயம் இருக்கவேண்டும் ஒவ்வொரு கப்பலும் 10 கோடி முதல் என்றபோது நம்மால் பொறாமை தான் படமுடிந்தது. அங்கு இருக்கும் படகு சவாரிக்கு கட்டணம் இல்லை.. விலையில்லா பயணத்தை அந்த ஊர் அம்மாவாக வழங்கிய கோடீஸ்வரர்களுக்கு இந்நேரத்தில் அவர்கள் பொற்பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன். 

படகு கிளம்பியது சுற்றிலும் வானுயர்ந்த கட்டிடங்கள், உணவகங்கள், கடைகள் மெல்ல குடியிருப்பு பகுதிக்கு திரும்பியது படகு... ஆஹா.. அழகிய பூந்தோட்டம் முகப்பில் இருக்க பின்னணியில் சொகுசாக சிரித்துக் கொண்டிருந்தது பங்களாக்கள் சில பங்களாக்கள் பூட்டியிருக்க அதன் வாசலில் கப்பல்கள் அசைந்தாடி நின்று கொண்டிருந்தன... ஒரு நீல நிறகப்பல் விலை 15 கோடிகளாம்..!

அநேக வீட்டு கப்பல்கள் கடலுக்குள் சவாரி கிளம்பி இருந்தன.. ஒரு கப்பலின் மாடியில் அரை டிராயர் அணிந்து தன் பிகினி அணிந்த 5 காதலிகள் புடை சூழ அந்தவூர் மல்லையா ஒருவர் அமர்ந்து பியரை சீப்பிக் கொண்டிருந்தார்.. அவர்கள் எங்களைப் பார்த்து கையசைக்க பதிலுக்கு அசைத்தும் மனதிற்குள் அவரை வசைத்தும் மகிழ்ந்தோம். அப்போது திடீரென அபாயச் சங்கொலி  ஒன்று ஒலித்தது... அது..

(வரும்)

Friday 21 October 2016

வெண்மணற் கடற்கரை 1

ரின் சோப் விளம்பரத்தில் வருவது போல பளிச்சிடும் வெண்மையில் ஒரு கடற்கரை! அதென்ன வெண்மை? அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மியாமி போர்ட் லாடர்டேல் பீச் தான் அது.. இந்த பீச்சின் மணல் வெண்ணிறத்தில் இருக்கும் என்றார்கள்.. பீச் என்பதால் ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து ஆவலுடன்  கிளம்பினோம்.. நண்பர் சுந்தர் தான் எங்களைக் காரில் அங்கு அழைத்துப் போனார். மாலை 3 மணி..

போர்ட் லாடர்டேல் என்னும் வரவேற்பு முகப்பை அடைந்தோம்.. மதிய நேரம் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.. பீச் மணல் பகுதியில்
இறங்கினோம்.. ஆஹா.. வெண்ணிற மணல் சுத்தம் என்றால் படு சுத்தம் ஒரு குப்பை கூட இல்லை.. கால்கள் புதைய புதைய அதில் நடந்தோம்.. கரையெங்கும் சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்த கால்,அரை, முக்கால், முழு நிர்வாண ஆண் பெண்களைக் கடந்தோம்.

ஏற்கனவே கலிஃபோர்னியாவின் சாண்ட்டா க்ரூசில் இதையெல்லாம் பார்த்து பழகியிருந்ததால் கிளர்ச்சிகள் ஏதுமின்றி அவர்களைக் கடக்க முடிந்தது. எதிரே அலையடித்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது அட்லாண்டிக் கடல்.. பீச் மணல் வாக்கிங் என ஒரு பயிற்சி இருக்கிறது கரையில் கால்களை அலைகள் நனைக்கும் மணற்பரப்பில் நடக்கும் பயிற்சி அது.. அந்த பயிற்சியைப் பலர் மேற் கொண்டு இருந்தனர்.

கடல் நீர் காலை நனைத்ததும் சிலிர்த்தேன்.. அந்த மதிய நேரத்திலும் சில்லென்ற ஐஸ்வாட்டர் போல் அட்லாண்டிக் குளிர்ந்து கிடந்தது. முழுவதும் நனைந்ததும் அடித்த காற்றில் உடல் நடுங்கியது ஆனால் பீச் மணலில் அடித்த வெயிலில் வந்து அமர்ந்தால் 5 நிமிடத்தில் ஆடைகள் உலர்ந்தன குளிரும் வெப்பமும் கலந்த சுகமான அனுபவம். இதுபோல பல முறை குளித்து கரையேறி ஆனந்த மடைந்தோம்.

நான்கு மணியை நெருங்க மெல்ல அங்கிருந்து நடக்க இப்போது நிறைய பேர் கூட்டம் கூட்டமாக பீச் நோக்கி வந்து கொண்டிருந்தனர் ஆங்காங்கே பீச் வாலிபால் ஆடத்துவங்கியிருந்தனர்..சுற்றுப் புறம் முழுக்க கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள்.. ஆனால் நாங்கள் அங்கிருக்கும் ஒரு பணக்காரர்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்ல வேண்டியது இருந்தது.. அதென்ன பணக்கார குடியிருப்பு.! இருங்க...

(வரும்)

Wednesday 7 September 2016

3 🐊🐊 முதலைகள் உலகில் சாகசப்பயணம் 🐊🐊 3

எங்கள் படகை உரசி நெளிந்த அந்த முதலை ஒரு அலிகேட்டர் என்பது அதன் அகண்ட தாடையை வைத்து கணிக்க முடிந்தது.. அதன் ரம்பப் பற்களின் இடையில் கொழுத்த மீன் ஒன்றை கவ்வியிருந்தது.. சரேலென மீண்டும் நீருக்குள் அமிழ்ந்து மறைந்தது எங்கள் பயமும் பறந்தது முதலைகள்  பொதுவாகவே கூச்சசுபாவிகள் அதனிடம் நாம் வாலாட்டினால் மட்டுமே அது வாயாட்டும் வேறு தொந்தரவுகள் தராது என்றார் கைடு / படகோட்டி.



இந்த எவர்க்ளேட் ஆற்றைப்பற்றி சில தகவல்கள் 100 சதுர மைல் பரப்பளவு நீளமும் 150 சதுர மைல் அகலமும் கொண்ட பெரும் நீர்ப்பகுதி ஆறெங்கும் கோரைப்புற்களும் எர்வாமேட்டின் கம்பெனி சொல்வது போல அரிய வகை நீர்த் தாவரங்களும் நிறைந்த ஏரியாகும்.. சதுப்பு நில திட்டுகளும் தாவரக் காடுகளும் ஆங்காங்கே குட்டித் தீவுகள் போல அமைந்திருக்கும்.. இந்தச் சூழல் தான் முதலைகள் வாழ்வதற்கு மிக மிகப் பொருத்தமானவை.



முதலைகள் சதுப்பு காடுகளில் தாங்கள் இட்ட முட்டையை அழகாக கூடு கட்டி பாதுகாக்கின்றன. குட்டி வைக்கோல் போர் போன்ற  கோரைப்புல்லில் ஆன முதலை கூடுகளை ஆங்காங்கே கண்டோம்.. பச்சைப் புல்வெளியில் அது மட்டும் தவிட்டு நிறத்தில் தனித்து தெரிந்தது. அங்குள்ள ஒரு வகை கோரைப்புல்லை கைடு கத்தியால் அறுத்துத் தந்தார் கீழிருந்து மேலாக அந்த புல்லை உருவுவது போல தடவினால் வெல்வெட் போலிருந்தது.



இப்போது அதையே மேலிருந்து கீழாக தடவுங்கள் மிக மிக மெதுவாக என்றார் நானும் அதை மேலிருந்து கீழாக தடவிய அடுத்த விநாடியே சுருக்கென்று என் விரலை துளைத்தது அந்த புல்.. துணி தைக்கும் ஊசியால் கையைக் குத்திக் கொண்டால் எப்படி இருக்குமோ அது போல என் விரலில் ஒரு ரத்த முத்து துளிர்த்திருந்தது.. அந்தப்புல் கீழிருந்து மேலாக வெல்வெட் போலவும் மேலிருந்து கீழாக முட்களையும் இருமுகம் கொண்டது.

பிறகு அங்கிருந்த மூங்கில் தண்டு போன்ற ஒரு தாவரத்தின் தலையில் ஒரு பூ மஞ்சளில் சிரித்தது.. அதை உடைத்து  உடைத்து ஒரு நெக்லெசாக மாற்றி ஒரு சின்னப்பெண்ணுக்கு பரிசளித்தார் படகோட்டி.. அந்த இலையில் இருந்த ஒரு புழுவை தின்னப் போவதாக போக்கு காட்டி அனைவரையும் சிரிக்கவும் வைத்தார்.. மீண்டும் ஏர் போட் புறப்பட அங்காங்கே டைவ் அடிக்கும் முதலைகளை பார்த்துக் கொண்டே கரைக்கு திரும்பினோம். 

40 நிமிடப் பயணம் திரில்லிங்காக முடிந்தது.. இந்த நதியில் ஏன் பறக்கும் ஏர்போட்டுகள் என்றால் தாவரங்கள் சேதமாகாமல் பயணம் செய்யவே என்பதும் பிறகு புரிந்தது.. நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெற்றுக் கொண்டோம்.. அடுத்து அங்கு டிஸ்கவரி சானலில் நாம் பார்த்து ரசித்த உலகப் புகழ் கேட்டர் பாய்ஸ் வழங்கும் அலிகேட்டர் ரெஸ்க்யூ என்னும் ஷோவிற்கு சென்றோம்.. அதென்ன அலிகேட்டர் ரெஸ்க்யூ..?



50லிருந்து 60 இராட்சத முதலைகள் இருக்கும் ஒரு கூண்டு வேலி தெரிந்தது.. கரும் பாறைகளாக முதலைகள் அசைவின்றி குவிந்து கிடந்தன 8 அடி நீளம் முதல் 15 அடிவரை வித விதமான முதலைகள்.. கூண்டைச் சுற்றி நாங்கள் எல்லாரும் நிற்க சினிமா காட்சிக்கு பெல் அடிப்பது போல மணி ஒலிக்க அந்த கூண்டுவேலியின் பக்கவாட்டு கதவை திறந்து கொண்டு கெளபாய் தொப்பியணிந்த இளைஞன் தனியாளாக கொஞ்சமும் அச்சமின்றி படுத்திருந்த முதலைகளை கடந்து உள்ளே நுழைந்தான்...



அந்த கூண்டு அரங்கில் 60க்கும் மேற்பட்ட ராட்சத முதலைகள் அவை அனைத்தையும் பொருட்படுத்தாது அவற்றிற்கு நடுவே அவன் நடந்து வந்ததே ஒரு சாதனையாக தெரிந்தது.. ஆனால் முதலைகள் அசைவின்றி அப்படியே கிடந்தன.. முதலைகளை எல்லாம் அவ்வளவு எளிதில் பழக்க முடியாது அவற்றின் குணம் அப்படி மிகச் சிறந்த பயிற்சியும் துணிவும் முதலைகளின் உடல்மொழியும் தெரிந்து இருந்தால் தான் இது முடியும்.

அரங்கின் நடுப்பகுதிக்கு வந்து நின்ற அந்த இளைஞனுக்கு கேட்டர் பாய்ஸ் எனப்பெயர்.. அனைவருக்கும் அமெரிக்க ஆங்கிலத்தில் வந்தனம் சொல்லிவிட்டு காலடியில் கிடந்த முதலைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓரத்தில் குவிந்து கிடந்த பெரிய முதலைகள் பக்கம் சென்றான் அது வரை அசைவற்று கிடந்த முதலைகள் இப்போது கலைந்தன அதில் சில அவனைக் கடிக்கப் பாய்ந்தன..அவன் மிக மிக அழகாக அதை சமாளித்தான்.



பயப்படாமல் தன் கால் கை அசைவுகளிலேயே அவற்றின் கவனத்தை திசை திருப்பினான்.. ரவுடித்தனம் செய்த முதலைகள் பாய்ந்து அங்கிருந்த தொட்டிக்குள் இறங்கி மீண்டும் அசைவற்ற நிலைக்கு திரும்பின.. சாதுவாக படுத்திருந்த முதலைகளில் ஒன்றை ஏதோ ஒரு துணி மூட்டையை தூக்குவது போல தூக்கினான்.. அதன் எடை எப்படியும் 300 கிலோ இருக்கும் அப்படியென்றால் அந்த இளைஞனின் வலிமையை பாருங்கள்.!

அதை அரங்கின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து போட்டான் முதலை அவ்வளவாக மனிதர்களுக்கு நட்பான பிராணி அல்ல அதற்கு கோபம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. ஒரு முதலை தாக்க ஆரம்பித்தால் அனைத்தும் ஒன்றும் சேர்ந்துவிடும்.. இப்படியெல்லாம் அவன் சொல்ல சொல்ல அவனது பணி எவ்வளவு அபாயகரமானது எனப்புரிந்தது.. இப்போது என்ன செய்யப்போகிறான் அவன் சொன்னதை கேட்டு உறைந்து போனோம்.

முதலையின் வாயை நன்கு திறந்து அதன் முனையில் தனது தாடை நாடியை வைக்கப் போகிறேன் அதுவும் என்இரு கைகளையும் விரித்துக் கொண்டே என்றான்.. இங்கு ஒரு செய்தி முதலை வாயை அதுவாக திறந்து மூடும் போது எந்தப் பிரச்சனையுமில்லை.. அதை வேறு ஒருவர் வலுக்கட்டாயமாகத் திறந்தால் லாக் செய்தது போல ஒரு க்ளிக் கேட்கும்.. அந்த கிளிக்கை ரீலிஸ் செய்ய முதலையின் வாயை அதிவேகத்தில் அறைந்து மூடுமாம்.

இந்த அதிவேக மூடலின் எடை என்ன தெரியுமா நண்பர்களே..அதிகமில்லை 5 டன் எடை மோதும் வேகம்.. அதாவது தானாக முதலை வாய் மூடும் நேரத்தில் அதன் வாய்க்குள் நமது கையோ காலோ இருந்தால் அது அப்படியே துண்டாகி பத்தடி தூரம் அந்தத் துண்டம் சுழற்றி வீசப்படுமாம். அவன் செய்யப்போகும் சாகசம் எவ்வளவு ரிஸ்க்கானது என்பதை அங்கிருந்த  அனைவரும் உணர்ந்தோம்.. அவன் முதலையின் மீது நன்கு அமர்ந்தான்.



அதன் தாடையை விரித்து மெல்ல மெல்ல பேசிக்கொண்டே தன் நாடியை அதன் பிளந்த வாய் நோக்கி வைத்தான்.. இதில் புத்திசாலித்தனம் முதலையின் தலையை 90 டிகிரி செங்குத்தாக பிடித்தது இந்த கோணத்தில் முதலைக்கு தன் மூக்கு கண்களுக்கு தெரியாதாம்.. வெறும் பக்கவாட்டு பார்வை தான் அவன் நாடியை வைத்தது முதலைக்குத் தெரியாது.. மெல்ல தன் இரு கைகளையும் விரித்தான்.. கூட்டம் மெய்மறந்து நின்றது.



அண்ணாந்திருக்கும் முதலை அதன் மீது யேசுநாதர் போல கைவிரித்து தன் தாடையை பிளந்த முதலை வாயில் வைத்த காட்சி அங்கே உறைந்து நிறைந்து இருந்தது.. 20 விநாடிகள் ஆனதும் அவன் செய்தான் பாருங்கள் ஒரு ரிஸ்க்கான செயல்.. ஆம் விரித்த இரு கைகளை மடக்கி அதில் ஒருகையை முதலை வாய்க்கு நடுவில் சடாரென கொண்டு சென்றான் சென்ற வேகத்திலேயே கையை வெளியே எடுத்து அதன் வாயை மூடினான்.



ஆம் அவன் கையை விட்ட விநாடி முதலை தன் தாடை லாக்கை ரிலீஸ் செய்திருந்தால் அவன் கை இரண்டு துண்டாகி இருக்கும்.. திரில்லான ஷோ அனைவரும் கைதட்டி ரசிக்க அனைவருக்கும் வணக்கம் கூறி அந்த அரங்கிலிருந்து வெளியேறினான்.. வெளியே அவனுக்கு பணம் தருவதற்கு ஒரு பெட்டி வைத்திருந்தார்கள் நம் விருப்பப்படி கொடுக்கலாம் நாங்கள் மனமுவந்து 50 டாலர்கள் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தோம்.



வாசலில் 5 டாலருக்கு உயிருள்ள முதலையோடு போட்டோ எடுக்கலாம் என்றார்கள்.. ஆவலாக போய் பார்த்தால் ஒரு புடலங்காய் சைசில் குட்டியூண்டு முதலை வைத்து இருந்தார்கள்.. அதற்கே வாய் டேப் போடப் பட்டு இருந்தது.. இதுவே நம் விரலை துண்டாக்கும் அளவில் கடிக்கும் என்றதும் அங்கிருந்து வேகமாக கிளம்பி காருக்கு வந்தோம்.. தூரத்தில் ஏர் போட் கிளம்பும் ஓசை கேட்க மனம் மீண்டும் எவர்க்ளேட் நதியில் படகேறியது ஆம் மறக்க இயலாது இந்த திரு முதலையாற்று பயணத்தை.!

🐊 நிறைந்தது 🙏