Friday 27 November 2015

கலிபோர்னியா..

#பேரரசு_இயக்கத்தில்_அர்னால்டு

( அர்னால்டு நடித்து எந்திரன் ஹிட் ஆனதும் தமிழ் இயக்குநர்கள் படையெடுத்து அர்னால்டின் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார்கள் முதலில் பேரரசு.. )

வாங்க மிஸ்டர் பேரரசு.. வணக்கம்ண்ணே நம்ம அர்னால்டு அண்ணனுக்கு கேத்த செம கதை ஒண்ணு சொல்றேன்.. அர்னால்டண்ணன் அமெரிக்காவுல ஒரு லேத் பட்டறை வைச்சு இருக்காரு.. எம்.எஸ். பாஸ்கர், பென்ஜமின், முத்துக்காளை, கிங்காங்ன்னு செம அதிரடி குரூப்பு அந்த ஃபிரெண்டுங்க..

கிங்காங் என்றதும் தயாரிப்பாளர் மல்யுத்த வீரரான்னு கேக்க.. இல்லண்ணே இவரு காமெடி கிங்காங்.. கதையை கேளுங்க படத்துல அண்ணனுக்கு ரெண்டு தங்கச்சி.. ஒண்ணு நம்ம லட்சுமி மேனன் இன்னொண்ணு சரண்யா மோகன்.. பேரரசு ஒரு நிமிஷம் அர்னால்டுக்கு இவங்க தங்கச்சியா நல்லாவா இருக்கும்..? லட்சுமி மேனன் கூட ஓகே அர்னால்டுக்கேத்த உடல் வாகு..

ஆனா சரண்யா எப்படி..? சரிண்ணே நம்ம மல்லிகா புள்ள இருக்கு பழைய சோத்த போட்டு உடம்பை டெவலப் பண்ணா அர்னால்டு அம்மான்னா கூட ஏத்துக்குவாங்க.. ஓகே கதையோட ஒன்லைன் என்ன..? அதாவதுண்ணே இந்த ஃபேஸ்புக் ட்விட்டர் இதனால பாதிக்கப்படுற பெண்களை அண்ணன் எப்படி காப்பாத்துறாரு..அதான் ஒன் லைன்.

அட பரவாயில்லையே லேட்டஸ்ட் டிரண்டுக்கெத்த மாதிரி இருக்கே மேல சொல்லுங்க..அண்ணே சின்ன வயசுல அமெரிக்காவுல கலிபோர்னியாவுல பொறந்த நம்ம அண்ணனோட அப்பாவுக்கு ரெண்டாவது பொண்டாட்டி ஒண்ணு இருக்கு அவங்களுக்கு பொறந்தவங்க தான் இந்த தங்கச்சிங்க..

சாகுறப்ப இந்த உண்மையை அர்னால்டுகிட்ட அவர் சொல்லிட்டு அந்த தங்கச்சிங்களுக்கு நீ தான் தகப்பனா இருந்து கல்யாணத்தை நடத்தியாகணுமுன்னு சத்யம் சிவம் சுந்தரம் எல்லாம் வாங்கிட்டு சாக.. இது வரைக்கும் தான் ஒரு அநாதைன்னு நினைச்ச அர்னால்டண்ணன் தனக்கு 2 தங்கச்சிங்க இருக்காங்க தெரிஞ்சதும் பாசத்துல உருகுறாரு.

அவங்களைத் தேடி கண்டுபிடிக்குறாரு அவங்களும் தனக்கு இப்படிப் பட்ட அண்ணன் ஒருத்தர் இருக்காருன்னு தெரிஞ்சதும் கண் கலங்குறாங்க.. அப்புறம் அண்ணன் அமெரிக்கா முழுக்க மாப்பிள்ளை தேடிகிட்டு இருக்க ஒருநாள் என்ன நம்ம தங்கச்சிங்க ரெண்டு பேரும் எப்பவும் நெட் பார்த்துகிட்டு இருக்காங்க அது ஏன்னு போய் பார்க்குறாரு.

அப்ப தான் அந்த உண்மை தெரிய வருது தங்கச்சிங்க ரெண்டு பேருமே ஃபேஸ்புக் மூலமா தமிழ்நாட்டில் காதல் வயப்பட்டு இருப்பதை.. தங்கச்சிங்க விருப்பத்தை நிறைவேற்ற அண்ணன் தங்கச்சிங்களை கூட்டிகிட்டு சென்னைக்கு பிளைட் ஏறுறாரு.. சென்னையில எங்க தங்குறது யாரைப் பார்க்குறதுன்னு கூட அவருக்கு தெரியாது. வந்து இறங்கிட்டாரு

ஏர்போர்ட்டில் ஒரு டாக்ஸி ஏற்பாடு பண்ணி அவங்க கிளம்ப அந்த டாக்சி டிரைவர் திடீர்னு மயக்க மருந்து ஸ்பிரே அடிக்க மூணு பேரும் மயங்கி விழுகுறாங்க.. கார் ஊருக்கு ஒதுக்குப் புறமா இருக்குற ஒரு பாழடையாத நல்ல பங்களாவுக்கு போகுது.. அங்க மூணு பேரையும் ஒரு தூணில் கட்டிப் போடுறாங்க.. அர்னால்டுக்கு விழிப்பு வருது..

கை கால அசைக்க முடியலை அப்படி கட்டிப் போட்டு இருக்காங்க எதிர்ல 20 ரவுடிங்க.. டேய் அவுத்துவிடுங்கடான்னு கத்துறாரு.. வில்லன்கள் கேலியாக சிரிக்க திடீர்னு வாசல்ல நெருப்பு பொறி அரிசிப் பொரி, அவல் பொரி எல்லாம் பறக்க வில்லன்கள் பதறி திரும்ப.. காக்கி பேண்ட் சட்டை உள்ள கருப்பு பனியன் கண்ணுல கூலிங் கிளாஸ் சனியன்னு ஒருத்தர்..

வெரி இன்ட்ரஸ்டிங் பேரரசு... யார் அந்த என்ட்ரியான கேரக்டர்.. (வெட்கத்துடன்) நான் தான் சார் என்னைப் பாத்ததுமே ரவுடிங்க பேதி பீதியாகி ஓடிடறாங்க.. அர்னால்டை நான் தான் காப்பாத்துறேன்.. அர்னால்டு என்னை கட்டிப்பிடிச்சுக்குறாரு.. இப்ப ஸ்க்ரீன்ல கதை திரைக்கதை வசனம் பாடல் இயக்கம் பேரரசுன்னு டைட்டில் கார்டு வருது..

நான் அவரை என் லேத் பட்டறைக்கு கூட்டிட்டு போறேன்.. அங்க இருந்து கிட்டே அவரு தங்கச்சிங்க காதலிச்ச ஆட்களை தேடுறாரு அப்ப தான் அந்த அதிர்ச்சியான ஒரு சேதி தெரியுது.. ஏர்போர்ட்டுல எல்லாத்தையும் கடத்துனதே அந்த காதலர்கள் தான்னு.. அர்னால்டு திகைச்சுப் போயி நிக்க இங்க போடுறோம் இடைவேளை..

அப்புறமா பார்த்தா அதுல ஒரு தங்கச்சியோட போட்டோவை மார்பிங் பண்ணி ஆபாச வெப்சைட்டில் பரப்பிய விஷயம் தெரிய ஒரு தங்கச்சி தூக்கு போட்டு செத்துடுறா.. உடனே.. வெகுண்டு வெடிகுண்டு அணுகுண்டா அர்னால்டு அண்ணன் அந்த காதலனை பழி தீர்க்க சபதம் எடுக்குறாரு.. அப்ப தான் இன்னொரு அதிர்ச்சியும் தெரிய வருது.! அது என்னங்க பேரரசு..?

தங்கச்சிங்க ரெண்டு பேரையும் காதலிச்சவன் ஒரே ஆள்ன்னு..! அந்த ரெண்டு ஐடியும் ஃபேக் ஐடின்னும் தெரியுது.. விசாரிச்சா அவன் ஒரு பெரிய கும்பலுக்கே தலைவன்னும் அவன் பேரு ஏழரை ஏழுமலைன்னும் சங்கு சண்முகம், பீர் பாண்டி, மாணிக்சந்த் மாணிக்கம் அப்படின்னு பல தளபதிகள் அவனுக்கு அவங்க எல்லாம் எங்க இருக்காங்கன்னு பார்த்தா தமிழ்நாட்டுல இருந்து தப்பிச்சு போயி அதே அமெரிக்கா கலிபோர்னியாவுல..

அண்ணன் திரும்ப அமெரிக்கா கிளம்பராரு.. கலிபோர்னியாவுல அப்படியே ஒரு முனிஸ்வரர் கோயில் செட்டு போட்டு கிளைமேக்ஸ் பைட்டு.. அண்ணன் கமாண்டோவுல வெடிகுண்டு துப்பாக்கி எல்லாம் லோடு பண்ணுவாறே அதை தூக்கி சாப்புடுறா மாதிரி இதுல சந்தனம் குங்குமம் விபூதி எல்லாம் எடுத்து முஞ்சியில கைல கால்ல அப்பிகிட்டு வாயில ஒரு சூலாயுதத்தையும் கவ்வுறாரு.. அப்படியே போய் துவம்சம் பண்றாரு கூடவே நானும்..

கடைசியா டிவிட்டர் ஃபேஸ்புக் தீமை பத்தி அண்ணன் நாலு வரி பேச.. உதவிக்கு வந்த நான் 40 பக்கம் பேசறேன் தாங்க முடியாத வில்லனுங்க எல்லாம் அவங்களே வாலண்டியரா சூலாயுதத்தை எடுத்து வயித்துல சொருகிகிட்டு செத்து போயிடுறானுங்க.. அண்ணன் அப்படியே என் கையை பிடிச்சு லட்சுமி மேனன் கையோட சேர்த்து வைக்க.. படம் முடியுது..!

எப்படிண்ணே இருக்கு கதை..? எல்லாம் சரி படத்துக்கு என்ன பேரு..? அட அதை சொல்லலை பாருங்க... பேரரசு & அர்னால்டு இணைந்து மிரட்டும் "கலிபோர்னியா" நல்லா இருக்காண்ணே.. புரடியூசர் மயங்கி விழுகிறார்.

Tuesday 24 November 2015

போராளியின் டைரி...

#முகனூல்_போராளிகளின்_நவம்பர்_2015_டைரிக்குறிப்பு

வேதாளம் டீசர்ல ஆரம்பிச்சது நவம்பர் மாசம்... அது ஏய் படத்துக் கதை... தூங்காவனம் ப்ரெஞ்ச் படத்துக் கதைன்னு உள்ளூர் சினிமால இருந்து ஒலக சினிமா வரைக்கும் கரைச்சிக் கழுவி வுட்டு வெளாண்டோம்.

அப்புறம் வூட்ல சுட்ட பீடை புடிச்ச சீடை, வரட்டி மாதிரி அதிரசம், முறுக்கு, ஜாங்கிரி, டோங்கிரி எல்லா பலகார போட்டோவும் போட்டு ஆப்பி தீவாளி சொல்லிகிட்டோம்... ஒரு சிலரு அவங்க தேனடைங்க கிட்ட தேன் வழுக்க வழுக்க  (அதாங்க சொட்ட சொட்ட) உள்ளாற இருக்க டப்பாவுல பட்சணம் சுட்டோம். (கடலை தான்)

இடையில லாலு நிதீஷ் சபாசு.. மோடி அமித்ஷா பூட்டகேசுன்னு வெடி போட்டோம்.. அவர் அத்வானியையே ஓரங்கட்டுனவரு நம்மள ஓரங்கட்றது என்ன பெரிசா..! வழக்கம் போல வெளிநாடு கிளம்பி போயி டிபன் காபி சாப்பிட்ட போட்டோ போட அதையும் கலாய்ச்சோம். தீபாவளி முடிஞ்சது

அப்புறம் தான் உலக லெவலுக்கு மாறுனோம்.. அல்லாரும் மூஞ்சியில பிரான்ஸ் கொடிய குத்திகிட்டு பொங்கி வழிஞ்சோம்... சில பேரு பிரான்ஸ் புலனாய்வுத் துறைக்கெல்லாம் ஸ்கெட்ச் போட்டு தந்து புளகாங்கிதமா இல்ல புளங்காகிதமா ஏதோ ஒண்ணை அடஞ்சோம்.

பிரான்சுக்கு தான் பொங்கலா.? இந்த கடலூர் தாமிரபரணிக்கு எல்லாம் 2இட்லி அட அட்லீஸ்ட் கொஞ்சம் பழைய சோறாவது போட்டிங்களான்னு கேட்டதும் சுரீர்ன்னு கோவம் வந்து ஜீன்ஸை சுருட்டிகிட்டு சண்டையை ஆரம்பிச்ச நேரம்...

அப்டியே இடி வெட்டி மின்னல் இடிச்சு "சோ"ன்னு மழை கொட்டுச்சு.. சரி நவம்பர் மாச மழை தானேன்னு நெனைச்சா.. அது சோ"வைத் தாண்டி நாகேஷ், சந்திரபாபு, தங்கவேலு, குலதெய்வம் ராஜகோபால், காகா ராதா கிருஷ்ணன், காளிN.ரத்தினம், NSK ன்னு விடாம பெஞ்சுகிட்டே போச்சு.

ஒருமணிநேரம் மழை பெஞ்சாலே ரோடெல்லாம் மினி ஸ்கர்ட் ஃபுல் ஸ்கர்ட்டா தெரிய மழைத்தண்ணி ஓடும்.... இதுல 4 நாள் விடாம பெஞ்சா.. ஊரே தண்ணியில மிதக்க.. FBயில் புறப்பட்டுச்சி நம்ம பதிவு கப்பல்கள்.

இதுல கலாய்க்கிறேன்னு "ஓலா போட்"ன்னு அவனை சீண்டி ஐடியா குடுக்க அவன் நெஜமாவே சைக்கிள் கேப்புல டைட்டானிக் ஓட்டி சம்பாரிச்சுட்டான். அம்மா, ஆடு, இலை, கலைஞர், கட்டுமரம் கோபாலபுரம் வரை பதிவுகளில் மழையை வச்சி படகு விட்டு வாயை வச்சி வடை சுட்டு மகிழ்ந்தோம்..

விட்ட மழை ரெண்டு நாளில் மறுபடி வருமுன்னு ரமணன் சொல்ல ரமணன் வருணன் பதிவு மழையை விட அதிகமா கொட்ட.. குழந்தைகளுக்கு ரமணன் ரமண மகரிஷியை விட தெய்வமாக தெரிய மீண்டும் சென்னை மிதக்க.. 

ஏரியெல்லாம் வீடுன்னு சர்வேயரா சர்வே எடுத்து சர் சர்ருன்னு ஸ்டேட்டஸ் போட பாதிக்கப்பட்ட சென்னை மக்களை விட நாம இங்க அதிகமாபுலம்ப.. அதை தாங்கிக் கொள்ளாத நம்ம தோழர்கள் கொதிச்சுட்டாங்க.

அதென்ன சென்னை.! தமிழ்நாட்டுல மத்த ஊரெல்லாம் என்ன பாவமுன்னு ஒரு அவலக்குரல் கேட்டதும் ஆனந்தவிகடனைக் கண்ட அம்மா போல பதறி அட நாமளும் தென் மாவட்டம் தானேன்னு சப்போர்ட் பண்ணப் போனா..

இந்த அமீர்கான் பய நாட்டுல சகிப்புத் தன்மை லிப்ட்டுல ஏறி இறங்கி கிட்டே இருக்கு நான் புள்ளக் குட்டியோட நாட்டை விட்டே போறேன்னு மொத்த ஃபேஸ்புக்கையும் திசை திருப்பி விட்டுருக்கான் ரேஸ்க்க்கல்ஸ்.. 

போடா போடா இந்தியா பக்கமே வரதடா ஓடிடிடான்னு அவனை கண்டபடி திட்டிட்டு வந்துட்டோம்.. இதை நீங்க ஏன் சகிச்சுகக் கூடாதுன்னு கேக்குறிங்களா.. அட போங்க பாஸ் அப்புறம் எப்படி போராளியாவுறது

உஸ்ஸ்ஸ்ஸ்... அபா... உஸ்ஸ்ஸ்ஸ் அபபா.. எத்தனை..மூச்சு வாங்குது.. ந்தா இப்படி கொஞ்சம் உக்காந்துக்குறோம் ஒரு ஜோடா தர்றியளா.. இன்னும் டிசம்பர்ல எப்படியெல்லாம் இங்க உளைக்க வேண்டியது இருக்குமோ..?  நெட் ரீ சார்ஜ் போட்டு வந்து வச்சுக்குவோம்.. வர்ட்டா...

ஓவிய உதவி : Thanks to Santhosh Narayanan

பூகா கிரகம்..

#பூகா_கிரகம்

மஞ்சள் நிற இரவு... வானம் வெண்மையாக இருந்தது.. சிவப்பு ஊதா பச்சை ஆகிய மூன்று நிறத்தில் அறுகோண வடிவ நிலாக்கள் மூன்று ஜொலித்து கொண்டிருந்தன.

விடியலில் வயலட் நிற சூரியன் வடக்கில் உதிக்க இன்னும் 3 வருடங்களே இருந்தது. 60 நாட்கள் ஒரு வினாடியாய் கழிந்து கொண்டிருந்தன.....

தரையெங்கும் நீல நிற மண் குவிந்திருந்தது அதிலே கலன்கள் அமர்ந்த சுவடுகளைத் தவிர வேறேதும் இல்லை கிரகத்தின் அனைத்து மனிதர்களும் கால்களால்  சுவாசித்து கொண்டிருந்தனர்.

இடுப்புக்கு கீழே அவர்களது நுரையீரல் விம்மிக் கொண்டிருந்தது.. உயிர் வாழத் தேவையான நைட்ரஜன் அந்த வெளியில் குறைந்து இருந்தது..

அவர்களின் அக்குளுக்குள் இருந்த மூளை அடுத்த கட்டத்தை பற்றி சிந்தித்து கொண்டிருந்தது. முதுகில் இருந்த 8 கண்களும் விழித்து கொண்டே இருந்தது...

அவர்கள் அனைவருக்கும் தெரியும் அவர்களது பூகா கிரகம் அழியப் போகிறது என்று வேற்று கிரக வாசிகளின் தாக்குதல் தொடங்கப்போகிறது என்று...

அவர்கள் கிரக தெய்வம் பூகாரூன் 3 நூற்றாண்டுகளுக்கு முன் சொன்னது நினைவுக்கு வந்தது... இதோ விண்கலங்கள் வந்திறங்கும் பேரிரைச்சல் செங்குத்தான ராக்கெட் போன்ற ஒரு கலன்..

இது பூமி என்ற கிரகத்தில் உபயோகிப்பதல்லவா அந்த மக்கள் சாவின் விளிம்பில் நின்று யோசித்து கொண்டிருந்த போது பூமியில் இருந்து வந்த கலத்தின் வாசல் திறந்தது... 

பூகா கிரக மக்கள் தங்கள் வாழ்வின் கடைசி வினாடியை தங்களது இதயத்தால் பிடித்த படி பார்த்து கொண்டிருந்தனர் பூமியின் கலத்திலிருந்து இறங்கிய உருவத்தை பார்த்ததும் அவர்கள் அனைவரும்.....

அக்குளில் இருந்த மூளை வெடித்து சிதறி இறந்தே போனார்கள்... பூமியின் கலத்திலிருந்து இறங்கி கொண்டிருந்தார்....
.
.
.
.
.
.
.
.
.

மோடி..!!!!!!

 ஹி...ஹி...ஹி ....ஹி ...

Sunday 15 November 2015

அவன்..சிவன்..

அ(சி)வன்..

அவனை அடிக்கடி எங்கள் பகுதியில் பார்க்கலாம்.. சாம்பல் நிறத்தில் உலகிலுள்ள அத்தனை கறைகளும் படிந்த கால்சட்டை அதற்கு அரைஞாண் கயிறு பெல்ட்..நிறம் என்னவென்று கூற முடியாத கிழிந்த சட்டை எண்ணைக் காணாத முள்ளம்பன்றித் தலை தாடைக்கு கீழ் மட்டும் முள் புதராய் தாடி என்னால் கணிக்க முடிந்த அவன் வயது ஏறத்தாழ என் வயதே இருக்கும்.. எப்போதும் சிரித்த முகம் மணிரத்னம் விரும்பும் பல் வரிசை!

ஆம்.. அவ்வளவு கருப்பு.. எதிரில் உள்ள உணவகத்திலும் டீக்கடையிலும் செல்லப் பிள்ளையவன்.. ஒரு கிளாஸ் தேனீரோ 4 இட்லியோ அவனுக்கு எளிதில் கைவரப் பெற்றது.. யாரிடமும் காசு கேட்க மாட்டான்.. கொடுத்தாலும் வாங்க மாட்டான்... கீழே சிதறி இருக்கும் சிகரெட் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து அதில் ஒன்றை பற்றவைத்து நுரையீரல் நிரப்பிக் கொள்வான்.. ஏகாந்தமாய் அவன் அதை குடிப்பதே பார்க்க அலாதியாக இருக்கும்.

மனநிலை பிறழ்ந்தவன் என்பார்.. நான் அவனை சித்தன் என்பேன்.. இன்று காலையில் தெப்பலாக நனைந்து வெறும் கால் சட்டை மட்டும் அணிந்து நடந்து வந்து கொண்டு இருந்தான் கையில் ஈரமான கருப்பு டிசர்ட்.. அதை தலையில் போர்த்தியிருந்தான்.. கை கால்கள் நீரில் உறி வெளிறியிருந்தது.. உடல் வெட வெடவென நடுங்கிக் கொண்டிருக்க அவன் முகத்தில் அதே மாறா டிரேட்மார்க் சிரிப்பு.. வந்தவன் டீக்கடைக்குள் நுழைந்தான்.

குத்துகாலிட்டு தரையில் அமர்ந்தான்.. வழக்கம் போல ஒரு பேப்பர் கப்பில் டீ வந்தது.. முதன் முறையாக என்னிடம் இரு விரல்களை அவன் உதடுகளின் மேல் வைத்து எடுத்து சைகையில் சிகரெட் வேண்டுமெனக்கேட்டான். குளிர் தாங்க முடியவில்லை எனப் புரிந்தது... வாங்கித் தந்தேன்.. ஒரே மூச்சில் சூடான டீயை சரேலென கவிழ்த்துக் குடித்துவிட்டு வாயோரம் ஒட்டியிருந்த தேநீர்த்துளிகளை கூட துடைக்காமல்.. சிகரெட்டைப் பற்றவைத்தான்.

இன்னும் அவன் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது.. எதிரே தான் என்வீடு.. நேராக வீடு வந்து குளிர் தாங்கும் ஒரு டீ சர்ட் தேடினேன்.. Tommy பிராண்ட் சிவப்பு முழுக்கை டீசர்ட் குவாலிட்டியானது.. வெளிநாட்டில் வாங்கியது எடுத்துக் கொண்டு சென்றேன்.. அதற்குள் அந்த சிகரெட்டை முடித்திருந்தான். பனியனை நீட்டினேன்.

சட்டென வாங்கி அணிந்து கொண்டான் அவனது கறுப்பு டீசர்ட்டை பந்து போல சுருட்டிக்கொண்டான்..எழுந்தான்... விடுவிடுவென நடந்தான் நேராக குப்பைத் தொட்டிக்கு போனான்.. விருட் என நான் தந்த பனியனை அவிழ்த்துக் குப்பைத் தொட்டிக்குள் எறிந்தான்.. அவன் கறுப்பு பனியனை தலையில் போர்த்திக்கொண்டு அதே டிரேட் மார்க் புன்னகையுடன் நடந்தான். அவன்போக்கு நமக்கு புரியாது ஏனெனில்...

#சித்தன்போக்கு_சிவன்போக்கு_அல்லவா 

மழைப் பாக்கள்...

#மழைப்_பாக்கள்

பேய்மழைக் காற்றுடன் சோவெனப் பெய்ய
நாய்நரி எல்லாம் பதுங்கிய தெருவில்
காய்கறி வாங்கிட வழியெதும் இன்றி
பாய்தனிலமர்ந்து பதிவுகள் இட்டேன்.

தெருவிலே ஓடிடும் தேங்கிய நீராம்
உருவிலே அதுவோர் சிறிய ஆறாம்
கருவிலிருக்கும் சுருண்ட சிசுபோல்
மருகினார் மக்களி வ்வூரில்.

இடியது முழங்கும் சத்தத்தில் நடுங்கி
தடியதால் தாக்குண்ட அரவமாய் நசுங்கி
விடியலில் கதிரவன் காட்சிக்கு ஏங்கி
கொடியது இந்த அடைமழை நன்னாள்.

காரிருள் சூழ் மழை அவனியில் பெய்ய 
ஊரினுள் சாலையில் ஏரியும் தேங்க
தேரதுபோல் மெல்ல வாகனம் ஊர
நாறுது வாழ்விங்கு மாநகர்தனிலே.

சீர்மிகு சென்னையில் மேவிய சாலைகள்
நீர்மிகு நதியாய் ஓடிடும் வேளைகள்
நேர்மிகு மனிதர்கள் இம்மழைக் காலையில்
பார்புகு(ந்து) போதையில் பணிந்தன ரன்றோ.

மும்மாரி பெய்த மாதங்கள் இல்லை
அம்மாரி ஒருநாளில் பெய்வதே தொல்லை
எம்மாரி பெய்தாலும் மக்களின் வாழ்க்கை
அதுமாறிப் போகா என்பதே இயற்கை.

வங்கக்கடல் சீற்றம் கண்டேன் இப்புயலில்
அங்கம் நடுங்கியது அப்பெரும் மழையில்
தங்கம் போல் விடுமுறை நாளது ஒன்று
சிங்கம் போல் சோம்பலில் கழிந்த தின்று.

புயல் அடிக்கும் இந்நாளில் நானும்
கயல் சமைத்து உண்கிறேன் வாரும்
முயல் அதுபோல் விரைந்தோடி
பயலிவன் கவிக்குப் பரிசு பல கோடி.

முன்னைப் பிறவியில் செய்திட்ட நற்பயன்
என்னை அழைத்திங்கு குடிபுக வைத்தது
சென்னை நகர்தனில் அமைந்திட்ட வாழ்வினை 
மொண்ணை யென்றாக்குதே பெய்கிற தொடர் மழை.

புள்ளின் வாய்மொழி கீழ்திசைக் கேட்க
வள்ளென ஞமலியின் போர்க்குரல் முழங்க
கள்ளென போதையாய் வந்ததோர் சேதி
நில் இன்று பணியில்லை விடுமுறை என்றால்.

#சென்னையைப் பத்தி என்னவோ ஒருப் பா.

1. 
சிற்றாறு சுழித் தோடுமந்த சிந்தாதிரியில்
காட்டாற்று வெள்ளமது பாய்கின்ற சைதை
அருவிகளைக் காண அசோக நகராம்
கேணிகள் பல காண் கே.கே.நகராம்
சுனைகள் குளங்கள் ஏரிகள் குட்டைகள்
மூழ்கியே போனது சென்னையின் பேட்டைகள்
நிலவிலே காணும் முழுவட்டக் குழிகள்
நிஜத்திலே பார்க்கலாம் சாலைகள் மீதே 
சிலநாள் மழைக்கே சிங்காரச் சென்னை
Sink ஆகிவிட்டதே அதுதான் உண்மை.

2. 
ஊறிய நெகிழிகள் ஊரெங்கும் மிதக்க
நிலத்தடிக் கழிவுகள் ஊர்வலம் நடத்த
வைகுந்த கைலாய லோகங்கள் அடைந்திட
சாக்கடை மூடிகள் அடைப்பது இல்லை 
சாலையில் தேங்கிய மழைநீர் அலைகள்
கழிவுநீர் கலந்து புரியுது கொலைகள்
பசுக்களை வளர்த்து வாழ்ந்த நற்றமிழர் 
கொசுக்களை வளர்த்து வீழ்ந்தன ரிங்கு
தலைநகர் இதுவென பெருமிதம் கொள்ள
எதுவொன்றுமில்லை என்னத்தைச் சொல்ல.

Saturday 14 November 2015

பட்டப்பெயர்கள்..

#முகநூலில்_சில_பட்டப்பெயர்கள்

காலை/மாலை/இரவு வணக்கப் பதிவர் = கும்பிடு குருசாமி.

ஃபேக் ஐடிக்கள் = அவ்வை சண்முகி.

சமூக அக்கறை / சிந்தனையாளர் = அந்நியன்.

இன்பாக்ஸ் கடலை பார்ட்டி = ரெமோ.

ஆல்பர்ப்பஸ் அங்கிள்ஸ் = அம்பி.

ஆண்களிடம் வழியும் ஆண்கள் = இவன் வேற மாதிரி.

திருமணமான பெண்களிடம் வழிபவர் = கலாபக் காதலன்.

எப்போதும் பெண்கள் பதிவில் இருப்பவர் = மன்மதன்.

காப்பி & பேஸ்ட் பதிவர்கள் = சுட்ட பழம்.ப்

செல்ஃபி / போட்டோ பதிவர்கள் = பி.சி.ஶ்ரீராம்.

வீடியோ பதிபவர்கள் = ஆபரேட்டர்.

ஷார்ட்டான பதிவுகள் போடுபவர் = வள்ளுவர்.

நீளப் பதிவுகள் போடுபவர் = கம்பர்.

வெறும் லைக் மட்டுமே போடுபவர் = மிக்சர்.

கமெண்ட்டில் அதிரடி காட்டுபவர் = கமாண்டோ.

கவிதைகள் எழுதுபவர் = பக்கெட் (வாளி).

எல்லாரையும் டேக் செய்பவர் = டைலர்.

புரியாத பதிவுகள் போடுபவர் = கமல்.

பழைய பதிவுகளை தோண்டி எடுப்பவர் = கொத்தனார்.

எல்லாரும் படித்த ஓல்டு செய்தியை புதிதாக பதிவிடுபவர் = சுடு பழைய சோறு.

அறிவு ஜீவியாக எழுதுபவர் = ஞானப்பழம்.

யூ ட்யூப் கூகுள் ஆதாரத்துடன் பதிபவர்கள் = லிங்க் கேஸ்வரன்கள்.

இனி நீங்க சொல்லுங்க...

Friday 13 November 2015

கனவுச் செய்திகள்...

#வெளிவராத_நாளிதழ்_செய்திகள்

+தமிழகத்தில் கனமழையால் பாதிப்பு எங்கும் இல்லை அரசு எடுத்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு...

+மழையால் சாலைகளில் நீர் தேங்காது நிலத்தடிக்கு நீர் திருப்பிவிடும் திட்டம் மூலம் 50 டி.எம்.சி நீர் சேமிப்பு.

+தமிழகம் எங்கும் கன மழையால் கொஞ்சம் கூடசாலைகள் சேதமாகவில்லை நெடுஞ்சாலைத் துறையினருக்கு பாராட்டு குவிகிறது.

+புறநகர் பகுதிகளில் நீர் புகாமல் நீர் நிலை ஆதாரங்களை தூர் வாரியதால் அந் நீர் சேகரிப்பு திட்டம் வெற்றியடைந்துள்ளது..

+பாதாள சாக்கடைகள் ஒழுங்கு படுத்தப்பட்டதால் மழையில் எங்கும் அது நிரம்பி வழியவே இல்லை அனைத்து மாநகராட்சி நகராட்சி நிர்வாகங்கள் சாதனை.

+அடுத்த 5 ஆண்டுகளுக்கு உடையாத ஏரிக்கரைகளை பலப்படுத்திய பொதுப் பணித்துறையினர் தேசிய விருது பெறுகிறார்கள்.

+தமிழகத்தில் அணைகள் ஏரிகள் நிரம்பின.. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.. வெள்ள அபாய எச்சரிக்கை முறைப்படி அறிவிக்கப்பட்டு உயிர்சேதம் பொருட்சேதம் தடுக்கப்பட்டது.

+எவ்வளவு மழை வந்தாலும் இனி கடலூர் தாங்கும்.. கடலூர் கலெக்டர் பெருமிதம்.

+அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீர் தேவை இருப்பில் உள்ளது குடிநீர் வாரியம் அறிவிப்பு.

+மழையால் எங்கும் நிற்காமல் பழுதின்றி ஓடியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட உட்புறம் வராத அளவிற்கு நல்ல வசதியுடன் அரசுபேருந்துகள் இயங்கியன மக்கள் நெகிழ்ச்சி.

+சாலைகளில் நீர் தேங்கியதை பார்த்து 25 வருடங்கள் ஆயிற்று 85 வயது மூதாட்டி ருசிகர பேட்டி.

+மத்திய அரசின் வெள்ள நிவாரண நிதி வாங்காத மாநிலம் என்னும் பெருமையை தொடர்ந்து 10 வது ஆண்டாக தக்க வைக்கிறது தமிழகம்.

+தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளும் இணைக்கப்பட்ட பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.. தைப் பொங்கலன்று திறந்து வைக்கிறார் முதல்வர்.

+கன மழை வந்தால் எப்படி அதை எதிர்கொள்வது.. அதை தமிழகத்தில் கற்றுக் கொள்ளுங்கள் ஐ.நா.சபை அறிவிப்பு.

+நீர் மேலாண்மை பற்றி கற்றுக் கொள்ள தமிழகம் வருகிறார்கள் அமெரிக்க பல்கலைக் கழக மாணவர்கள்.

+தமிழகம் முழுவதும் 7894 புதிய நீர் நிலைகள் ஏற்படுத்தப்பட்டது.. பழைய நீர் நிலைகள் 8956 கண்டுபிடிக்கப்பட்டு தூர் வாரப்பட்டன.

+ஒரே நாளில் 300 செ.மீ மழை பெய்தாலும் பாதிப்பின்றி தாங்கும் உலகின் ஒரே இடம் தமிழ்நாடு தான்.. சர்வதேச பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் நற்சான்றிதழ்.

+எங்களுக்கு தண்ணீர் தாருங்கள் ஆந்திரா, தெலுங்கானா,கேரளா அரசுகள் தமிழகத்திடம் கெஞ்சல்.

+காவிரி நீர் இனித் தேவைப்படாது... நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் கர்நாடக அரசிடம் தமிழகம் திட்டவட்ட அறிவிப்பு.

+இவ்வாண்டும் தேசிய அளவில் வேளாண்மையில் முதலிடம் பிடித்தது தமிழகம்.

காதல் வேட்டை பார்ட் - 2

#வேட்டைக்காரன்

பார்ட் - 2

துப்பாக்கியின் டுமீல் ஓசைக்கு எதிராக ஐயோ என குரல் ஒலித்ததும் நான் பதறி விட்டேன்... வேகமாக ஓடிப்போய் பார்த்தால் அந்த புதருக்கு எதிர் புறம் கொஞ்சம் பள்ளமான ஏரியா அங்கு முள் வெட்டிக் கொண்டிருந்த  என் எதாவது ஒரு மாமாக்களில் ஒருவரான பால் அல்லது வேல் பாண்டி...! கீழே விழுந்து கிடந்தார்.. ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது.

நான் அவர் அருகில் சென்ற போது குபீரென எழுந்து உட்கார்ந்து செந்தமிழில் உயர்வான வார்த்தை ஒன்றில் எந்த ------- மவண்டா சுட்டது...ங்......  என ஆரம்பிக்க... பதறி மாமா நான் தான் சுட்டேன் என்றேன்.. நடந்தது இது தான்... நான் குறிபார்க்கும் அழகை நான்ஸி என் பின்னால் வந்து பார்ப்பதற்காக வந்து என் மேல் சாய...

நான் சற்று தடுமாறி சுட்டு விட செம்போத்தின் இறக்கையை உரசி பாண்டி மாமா காதில் பதிந்திருந்தது பெல்லட்.. புதரில் செம்போத்தின் ஐந்தாறு சிவப்பு சிறகுகள் உதிர்ந்து கிடந்தன பாதி செம்போத்து மீது பட்டதால் லேசாகத் தான் காதில் அடி நேரடியாக பட்டிருந்தால் காதில் ஒரு சிறு துண்டு காணாமல் போயிருக்கும்.. என்னை மேலும் கீழும் பார்த்தார்..

நீயாடா மாப்ள சூதானமா பார்த்து செய்யறதில்ல.. என்ற படி அந்த பெல்லட்டை பிய்த்தார்.. குபுக் என மிளகு அளவுக்கு ரத்தப் பந்தொன்று அவர் காதில் துளிர்த்தது.. அவர் அண்ட்ராயரில் கைவிட்டு சுண்ணாம்பு டப்பாவில் விக்ஸ் போல கொஞ்சம் சுண்ணாம்பு வழித்து அந்த ரத்தத்தை அடைத்தார்.. பூமார்க் பீடி ஒன்றை பற்ற வைத்து கோளாறா இரு மாப்ள..

என சொல்லிவிட்டு முள் வெட்ட ஆரம்பித்தார்.. இத்தனை களேபரத்தில் நான்ஸி வீட்டில் அத்தனைக் கதவையும் மூடிவிட்டு உள்ளே பதுங்கி விட்டாள். நான் திரும்பி வந்து கதவை தட்டியபோதும் திறக்கவில்லை.. ஒரு வழியாக கதவிடுக்கில் ஒண்ணும் பிரச்சனை இல்லை நான் தான் என கத்திய பிறகும் அரைமணி நேரத்திற்கு பின்பே கதவு திறந்தாள்.

யாருக்கும் அடிபடலையே..அது யாரு என நடுங்கியபடி கேட்டாள் பதில் சொன்னேன்.. அப்ப அந்த செம்போத்து என்றாள் ஏக்கத்துடன்... கொஞ்சம் பொறு மீண்டும் வரும் அப்போ சுட்டுத்தர்றேன் என்றேன்..ஆனால் அதன் பின் 3மணிநேரம் காத்திருந்தும் செம்போத்து தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருந்து சப்ஸ்க்ரைபர் இஸ் பிசி தயவு செய்து காத்திருக்கவும்..

என சொல்லாமல் சொல்லிற்று.. கடைசியில் இந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என வராமல் போக நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.. கிளம்பும் போது என்னைப் பார்த்து நான்ஸி நீயெல்லாம்.. என்னும் அர்த்தத்தில் சிரித்த ஒரு ஏளனப் புன்னகை இதுவரை யாரும் என்னை இந்தளவிற்கு கீழ்தரமாக சித்தரித்திருக்க முடியாது.. என் வாழ்நாளிலும் மறக்க முடியாதது.

அதன்பின் வெள்ளக்கல்லில் நாரை கொக்கு சுடுவது... கவுதாரி காட்டுக் கோழி என எங்கள் வேட்டை உணவு சார்ந்ததாகவே இருந்தது.. சமையலும் கற்றுக் கொண்டேன் சுட்ட பறவைகளை சிறகு நீக்கி மசாலா தடவி நான் சமைத்தது அனைவருக்கும் பிடித்து போக வேட்டைக் குழுவின் ஆஸ்தான செஃப் ஆனேன் என் சமையலுக்கு மயங்கி துப்பாக்கி சுடவும் கற்றுத்தந்தனர்.

குறி பார்த்து சொல்லி அடிக்கும் கலை 2 மாதத்தில் கைவரப்பெற்றது ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லை அளவுக்கு வந்தபின்பு... மீண்டும் ஒரு ஞாயிறு துப்பாக்கியுடன் நான்ஸி வீட்டுக்கு ஓடினேன்... வீடே கல கலவென இருந்தது.. அவர்கள் உறவினர்கள் வந்திருந்தனர்.. நான்சியின் அம்மா வாப்பா என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

பொடிசுகளின் ரகளை பெண்களின் பேச்சு என இரைச்சலாக இருந்தது.. என் ஏஞ்சல் மட்டும் காணவில்லை.. சூடாக டீ வந்தது சாப்பிட்டேன் பிறகு 15 நிமிடம் ஆயிற்று.. மெல்ல ஆன்ட்டி நான்சி என்றேன்... ஓ அவளா வீட்டிற்கு பின்னால இருக்கா போயி பாருப்பா என்றார்கள்..அது அன்று அந்த செம்போத்து அடித்த அதே இடம்.. ஒடிப்போனேன் டுமீல் என சத்தம்..!

துப்பாக்கி என்னிடம் இருக்க எப்படி.. வியப்போடு அங்கு செல்ல கை தட்டி குதித்துக் கொண்டிருந்தாள் நான்ஸி.. அருகே... யாரவன் நல்ல ரகுவரன் உயரத்தில் சுருண்ட முடி டிசர்ட் மீறி தெரிந்த எக்சைர்ஸ் புஜங்கள் ஸ்டோன் வாஷ் ஜீன்ஸ் உடன் வாயில் பபுள்கம் அலட்சியப் பார்வை.. அவன் தோளில் ஒரு ஏர் கன் லேட்டஸ்ட் மாடல்.. நான்சி அவனிடம் கை குலுக்கினாள்..

அவள் கண்கள் பார்த்த இடத்தைப் பார்த்தேன்... கீழே... அன்று என்னிடம் நாட் ரீச்சபளுக்கு போன செம்போத்து.. தன் லைஃப்டைமை இழந்து கிடந்தது... நான் மெல்ல நான்ஸி என்றேன்.. திரும்பினாள்.. அவன் அந்த செத்த செம்போத்தை பார்த்த அதே பார்வையில் என்னையும் பார்த்தான்.. ஹே வெங்கி வா..வா இது என் அங்கிள் பையன் எட்வர்டு.. என்றாள்.

ஹாய் என என் கைகளை பிசைந்து அவன் வலிமையைக் காட்டி ஓடிடு என்றான் கண்களில்.. சரி நான் அப்புறம் வர்றேன்னு கிளம்பினேன்.. மெல்ல வீடு வந்து நான்சி அம்மாவிடம் ஏன்ஆன்ட்டி இந்த எட்வர்டு உங்க அக்கா மகனா என்றேன் அங்கிள் பெரியப்பாவாக இருக்கும் என நம்பிக்கையில்.. இல்லப்பா என் அண்ணன் மகன் என்றதும்.. டுமீல்.. என் இதயத்தில்...

அப்புறம் வேட்டைக்கு போவதே வெறுத்து போனது".நான்சியை அந்தப் பையன் தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறான் என்று ஊரே பேசிக்கொண்டார்கள்.. என் தந்தையார் அப்போது இறந்துவிட பொறுப்பான தலைமகனாய் குடும்ப பாரம் 21 வயதில் தோளில் ஏற இதயத்திலிருந்து நான்ஸியை இறக்கி வைத்தேன்.

5 ஆண்டுகளுக்கு முன் நான்ஸியை கொடைக்கானலில் பார்த்தேன்.. அப்படியே இருந்தாள் பக்கத்தில் பழைய நடிகர் சுரேஷ் போல ஒருவர்.. வெங்கி இது என் ஹஸ்பெண்ட் டாக்டர்...சிவானந்தம்..(அப்போ எட்வர்டும் இல்லியா) லவ் மேரேஜ் நான் பல்டாக்டருக்கு படிக்கும் போது லவ் .. மொதல்ல அப்பா அம்மா முடியாதுன்னாங்க ஒருவழியா ஒத்தக்காலில் பிடிவாதமா நின்னு மேரேஜ் ஆச்சு.. ஏங்க நான் சொல்வேனே இவர் தான் அந்த வெங்கடேஷ்.. என அறிமுகப்படுத்த..

ஹாய் என்றார் சிவானந்தம்.. நான் வெங்கடேஷ் ஸார் என்றேன்... தெரியும் ஸார் நீங்க தானே அந்த செம்போத்து சுட்டது என்றார்.. கட கடவென சிரிப்பு பொத்துக்கொண்டு வர கண்ணில் நீர் வர சிரித்தேன்.. டுமீல்.. அதிர்ச்சியுடன் திரும்பினால் அங்கு பலூனை ஒரு 15 வயது சிறுவன் சுட்டுக் கொண்டுருந்தான் என் பையன் ராம் என்றாள் நான்ஸி. 

ராம் உனக்காவது குறி தவறக்கூடாது என்றேன் முணுமுணுப்பாய்.. என்ன என்றாள் நான்ஸி இல்ல இவனுக்கு செம்போத்து சுடத்தெரியுமா என்றேன் அனைவரும் சிரித்தோம்... டுமீல்.... பலூனும் வெடித்து சிரித்தது.

நிறைந்தது...

Thursday 12 November 2015

காதல் வேட்டை பார்ட் -1

#வேட்டைக்காரன்

பார்ட் - 1

நான், ஆஸ்டின், மகேஷ் மூன்று பேர் தான்... எங்கள் வேட்டையாடு விளையாடு பிரசித்தமானது அல்ல... ஆனால் எங்களுக்கு அது ஒரு நேஷனல் ஜியாகிராபி அனுபவம் தந்தது... மதுரை முத்துப்பட்டி..! பழங்காநத்தம் தாண்டி திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அழகப்பன் நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து இடது புறம் ரெயில்வே டிராக் தாண்டி செல்லவேண்டும்.!

அங்கிருந்து அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டரில் ஒரு பாரம்பரிய கிராம அனுபவம் (அன்று) முத்துப்பட்டி இன்று வளர்ந்து நகராகிவிட்டது ஆனால் அப்போது அது கிராமம் தான். இராமநாதபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க என் தாத்தா காலத்தில் எனது உறவினர்கள் கூட்டம் குடியேறிய ஊர்.

தெருவுக்கு நாலு சித்தப்பா அஞ்சு மாமா ரெண்டு பெரியப்பா என என் உறவுக் கூட்டம் இருந்த.. இருக்கும் ஊர். ஊரின் மந்தையைக் கடந்து நேராக சென்றால் இருபக்கமும் வயல்கள் பம்புசெட் என பாரதிராஜா படம் போல இருக்கும் அந்தப்பாதையின் இறுதியில் இடது புறம் அவனியாபுரம் வலதுபுறம் திருப்பரங்குன்றம்..!

எங்கள் வேட்டைக் காடு இங்கு தான் ஆரம்பம்.. பச்சைப் பாம்புகள் கட்டுவீரியன் சில சமயம் நல்ல பாம்புகளை ஸ்டீவ் இர்வினாக மாறி பிடித்தும் அடித்தும் இருக்கிறோம்.. பயமறியா வயது அது..அதிலும் பச்சைப் பாம்பு.. பறக்கும் செடிக்குக் செடி மரத்துக்கு மரம் அதன் வேகம் அபாரமானது ஆபத்து என்றால்கண்களை குறிவைத்து தாக்கும் பாம்பு இது இதை விரட்டி பிடிப்பது என்பது எங்களுக்கு மிகப் பெரிய சவால்.!

10 வேட்டைகளில் 7 வேட்டைகளை கச்சிதமாக முடித்த ரெகார்டு சச்சினின் 100சதத்திற்கு கொஞ்சமும் குறைந்ததில்லை.. என் கனவு தேவதையான (அந்த ஊருக்கே தேவதை) ப்ளஸ் டூ (ஜுவாலஜிகிளாசுக்கு) படிக்கும் நான்ஸி  கேட்டாள்
வெங்கி ஒரு பாம்பு வேணுண்டா பிராக்டிகல் க்ளாசுக்கு.. 

மானசீக காதலியின் மயக்கும் குரல் செவிகளில் ஒலித்த பின் சினங்கொண்ட சிறுத்தையாய் புயலென புறப்பட்டேன் வேட்டைக்கு.. அன்று தான் முதன் முதலாக கண்டேன்...ஒரு கரு நாகத்தை... கிட்டத்தட்ட 6 அடி நீளம் ஒரு இட்லியின் சுற்றளவில் தேகம் கருகருவென வெல்வெட் பளபளப்பில்..

வழக்கம் போல ஓடும் பாம்புகள் போல் இல்லாது திரும்பி நின்று எதிர்த்தது.. தரையில் இருந்து நான்கடி..உயரத்தில் நின்று சீறியது.. கொஞ்சம் அடி வயிற்றில் கலங்கியது. தளராது.. அதைப் பிடிக்க தயாரானோம்.. சத்தியமாக அப்போதெல்லாம் டிஸ்கவரி சானல்கள் இல்லை இருந்திருந்தால் நான் இப்போது அதில் பணி புரிந்து இருக்கலாம்.. 

ஒரு வழியாக ஆஸ்டினின் துப்பாக்கியை வைத்து அதன் படமெடுக்கும் தலையை நசுக்கினோம்..மகேஷ் அதன் உடலை பிடிக்க நான் அதனை ஒரு பாலிதீன் கவரில் அடக்கினேன். இவ்வளவு நேரம் சீறிக் கொண்டிருந்த அந்த பாம்பு இப்போது பானுமதியைக் கண்ட வெங்கடேஷாக அடங்கிக் கிடந்தது.

ஒரு வழியாக அதை நான்ஸி வசம் சேர்க்க அடுத்த நாள் அவள் பள்ளியே அல்லோலகல்லோலப் பட்டிருக்கிறது அந்த பாம்பின் சீற்றத்தால்.. அதன்பின் ஒரு வாரம் நான்சி என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.. ஒரு பாம்பு சீறியதற்காக அதை விட என்னிடம் அதிகம் சீறிவிட்டாள் அவள்.

ஒரு வழியாக கிறிஸ்துமஸ் வர கேக் கொடுத்து பழம் விட்டுக் கொண்டாள்.. ஒரு நாள் ஆஸ்டினின் துப்பாக்கியோடு அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன் ஊரின் ஒதுக்குப்புறத்தில் அவள் வீடு அமைந்திருந்தது.. அவள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது ஓடி வந்தது ஒரு செம்போத்து..!

செம்போத்து என்பது ஒரு கோழி போல.. அதன் கறி அவ்வளவு ருசியாக இருக்கும்.. நான் பெரிய வேட்டைக்காரன் என்னும் நினைப்பில் வெங்கி அதை பிடிச்சு தர்றியா என்றாள் அதே கொஞ்சும் குரலில்.. வேட்டையில் ஆஸ்டினும் மகேஷும் கில்லி குறிபார்ப்பது சுடுவது எல்லாம் அவர்கள் தான்.

நான் விறு விறுவென ஓடி.. மரமேறி அவர்கள் சுட்டதால் விழும் உயிர்களைப் பிடிப்பது தான் என் வேலை (அப்ப அவ்ளோ ஒல்லி நான்) துப்பாக்கியை கையாள்வதெல்லாம் அப்போ கேள்வி ஞானம் தான்.. இப்போ நான் என்னை ஃப்ரூப் பண்ணியாகணும் நான்ஸி என்னைக் காதலிக்க வேண்டும்.

ஆஸ்டினும் மகேஷும் சொல்லிக் கொடுத்த... துப்பாக்கியை கையாண்ட விதங்களை நெஞ்சில் ப்ளாஷ் பேக்கில் நினைத்து துப்பாக்கியை எடுத்துப் பார்த்தேன்.. ரைபிளின் முனையில் எழும்பி இருக்கும் i போன்ற குறியை துப்பாக்கியில் குண்டை லோடு செய்து லாக் செய்யும் இடத்தில் இருக்கும் v யில் நிறுத்தி...

இதை எந்த மிருகத்தை குறிபார்க்கிறோமோ அதன் உடலில் குறி வைக்க வேண்டும்... ஆஸ்டின் என் காதுகளில் சொன்னான்.. அதாவது v வழியாக i அதன் வழியாக சுட வேண்டிய மிருகத்தின் உடல் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.. இப்போ மகேஷ் சொன்னான்.. இந்தப் பாடம் நினைவுக்கு வர அதையே மனக்கண்முன் நிறுத்தி குறி வைத்தேன்.

புதரில் மறைந்திருந்த செம்போத்தின் சிவப்பு வெல்வெட் சிறகுகளில் கண் பதிந்தது.. V வழியாக i  அதன் வழியாக சிவப்பு சிறகு.. மூன்றும் ஒரே நேர்க்கோடு.. என்ன அசைக்காமல் சுடவேண்டும் இந்த இடத்தில் நான்ஸி எனக்கு தேவையில்லாத கிளுகிளுப்பை தரவா வேண்டும்..? நான் டிரிக்கரை சுண்டும் வினாடியில் வந்து என் தோளில் சாய்ந்தாள்... டுமீல்...

அய்யோ.. என்ற குரல் டூமிலுக்கு பதிலாக எதிரொலித்தது...!

வரும்...

Tuesday 10 November 2015

தூங்காவனம்

#தூங்காவனம்

ஸ்லீப்லெஸ் நைட் என்னும் படத்தின் தழுவல் என்பதை சிந்தனையில் இருந்து நழுவ விட்டுவிட்டு கமல் என்னும் நடிப்பு காதலுனுக்காக மைண்ட் மோடை செட் செய்து கொண்டு அனைவரும் காண வேண்டிய படம். படத்தின் கதையை சொல்லி உங்கள் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தை கெடுக்கும் வகையில் இந்தப் பதிவில் நான் ஏதும் சொல்லப் போவதில்லை.

ஒரே இரவில் நடக்கும் கதை படத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துள்ள கதாநாயகனுக்கு கடைசி வரை ஒரே உடை (இடையில் ஒரு கோட் மட்டும் மாறும்) என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் புதுமை..

திவாகர், மணி, வாசு, மல்லிகா, திரவியம் என காரக்டர்கள் எல்லாவற்றிற்கும் தமிழ்ப் பெயர்கள்.. எஸ்தர்,விட்டல்ராவ் தவிர.. கிட்டத்தட்ட படத்தின் முக்கிய கேரக்டர்களே இவ்வளவு தான்.. சம்பத், ஆஷா சரத், நண்டு ஜெகன், பிரகாஷ் ராஜின் உதவியாளர் சம்பத்தின் உதவியாளர்கள்,  சாம் மற்ற கேரக்டர்கள்..

சந்தானபாரதி, வசனம் எழுதியிருக்கும் சுகா, உமா ரியாஸ்  இவர்களெல்லாம் வந்து போகிறார்கள்.. படத்தில் கமல் அந்த க்ளப்பில் நுழையும் காட்சியில் இரு பெண்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்டிருப்பது..

எங்கெல்லாம் அரையிருட்டு தென்படுகிறதோ அங்கெல்லாம் காம சில்மிஷங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜோடிகள்.. என இன்றைய மேல்தட்டு கலாச்சார அதிர்ச்சிகளை பிரச்சாரம் செய்யாமல் பார்வையாளனின் பார்வையில் விட்டு விடுகிறார்...

முதன்முதலாக அதிர்ச்சியோடு ரசிகன் பார்த்த கமலின் முத்தக் காட்சி இதுவாகத்தான் இருக்கும்.. அந்த சூழலுக்கு தேவையான விரசமின்றி அமைத்தமைக்கு பாராட்டுகள்..

சில விநாடிகள் தான் இக்காட்சி... கமலின் முத்தத்தில் மயங்கி ஆர் யூ மேரிட்.? எனக் கேட்பதற்கு முன் மது ஷாலினியின் முகத்தில் தெரியும் கிறக்கம்.. லவ்லி

கேப்பில் கடா வெட்டுவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம்.. கமல் டைனசாரே வெட்டி இருக்கிறார்.. பரபரவென போகும் திரைக் கதையில் மகனிடம் இருந்து வரும் போனில் தந்தை பாசத்தை கிளாசிக்காக வெளிப் படுத்தி இருக்கிறார்.. அந்த சில விநாடிகள் நேரத்தில் நடிப்பில் அள்ளுகிறார் கமல்..

திரிஷா... இப்படி ஒரு கேரக்டர் நிச்சயம் அவரது கேரியரில் முக்கியம்... ரஃப் அண்ட் டஃப் லுக்குடன் ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்குரிய தோரணை பிரமாதம்.. கமலுடன் அவர் மோதும் சண்டை வாவ்.. நமக்கு வலிக்கிறது..

கிஷோர்... வெல்டன் சார்.. குள்ளநரித்தனம் மிடுக்கான போலீஸ்.. கடைசியில் துரோகி.. அந்த கிச்சனில் கமலோடு மோதும் அந்த ஆக்ரோஷ சண்டை மிக மிக அருமை  

பிரகாஷ் ராஜ்.. செல்லம் சினிமாவின் டி வில்லியர்ஸ்...  360 டிகிரியில் கிடைத்த பந்தையெல்லாம் சிக்சருக்கு தூக்குகிறார்.. சம்பத்துடன், கமலுடன், தன் உதவியாளருடன் என எல்லா பிட்ச்சிலும் வெளுத்து வாங்குகிறார்.

கமல் மகனாக வரும் அந்தச்சிறுவனும் பிரமாதப்படுத்தி இருக்கிறான்.. படத்தின் கடைசிக் காட்சியில் அவன் காரோட்டப் போகிறான் என்பதை முதல் காட்சியிலேயே வசனம் மூலம் தெரிவித்து இருக்கும் உத்திக்கு ஒரு சபாஷ்.

பளிச் வசனங்களால் சில இடத்தில் சிரிக்கவும் சீரியசாகவும் குதூகலிக்க வைக்கிறது சுகாவின் வசனங்கள்... வாழ்த்துகள் பாஸ்..

படத்தின் முதல் இரு காட்சிகள் கடைசி இரு காட்சிகள் தவிர மொத்த படமும் ஒரே கிளப்புக்குள்.. சுனாமியாய் சுழன்று இருக்கிறது காமிரா ஒளிப்பதிவாளருக்கு ஒரு பூங்கொத்து..

ஜிப்ரானின் பிண்ணணி இசை.. ஒரு ஆக்ஷன் படத்துக்கு தேவையானதை தந்து சிறப்பித்து இருக்கிறார்.

படத்தில் ஒரே பாடல் அதுவும் படம் முடிந்து டைட்டில் வரும் போது.. பாடல்கள் இன்றி ஹாலிவுட் பாணி தமிழ் சினிமாவுக்கு கமல் ஏதோ சொல்ல வருகிறார்..

இயக்குநர் ராஜேஷ் செல்வாவுக்கும் ஒரு பூங்கொத்து.. திரைக்கதையும் கமல் தான்.

லாஜிக் ஓட்டைகள் ஏதுமில்லையா? இருக்கிறது பாதாள சாக்கடை மேன் ஹோல் அளவில்லாது சல்லடைக் கண் போல சிறு சிறு ஓட்டைகள்.. அதில் எல்லாம் கமல் நிரம்பி விடுவதால் படம் பார்க்கும் போது அது தெரியாது..

அதைக் கண்டுபிடித்து சலிப்பவர்கள் சலிக்கட்டும்.. என்னைப் பொறுத்தவரை ரசிகனுக்கு சலிப்பூட்டாத படம் தூங்காவனம்..

5 ஸ்டார் ரேட்டிங்கில்என் ரேட்டிங் ****

வேதாளம்...

#வேதாளத்தின்_கதை

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான்.. அங்கு தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை தன் தோளில் சுமந்து கொண்டு இறங்கி நடந்தான்.. அவன் முதுகில் இருந்த வேதாளம் எள்ளி நகையாடியது.. உன் செயலிலேயே குறிக்கோளாய் இருக்கும் விக்கிரமா இந்தக் கதையை கவனமாகக் கேள்...

இதுவரை குறிப்பிட்ட கதாபாத்திரங்களை வைத்து கதை சொன்ன நான் இப்போது ஒட்டு மொத்த மக்களின் கதையை சொல்கிறேன்..அது கி.பி 2015 ஆம் ஆண்டு பூமியில் அறிவியல் வளர்ச்சி அதிகம் இருந்த ஆண்டு.. சமூக வலைத் தளங்கள் என்னும் பேரில் ஆளுக்காள் சரத்குமாராக (நாட்டாமை) இருக்கும் காலமது...

ஃபேஸ்புக் என ஆங்கிலத்திலும் தேவையே இல்லாது அதை தமிழில் முகனூல் என மொழி பெயர்த்து இருக்கும் காலமது.. அதில் எழுதுபவர்கள் தங்களை பதிவர்கள் என்றும் முகனூல் பிரபலங்கள் என்றும் வலையிலே கோட்டை கட்டி வாயிலே வடை சுட்டார்கள். தங்கள் எழுத்து இந்த சமூகத்தை திருத்த வந்ததாக மூடத்தனமாக நம்பினார்கள்.

அதிக பட்சம் அவரது 5ஆயிரம் நண்பர்களாலேயே 500 லைக்குகள் கூட வாங்காத பதிவை புரட்சி என நம்பினார்கள். தான் எழுதினால் எல்லாம் மாறிவிடும் என்ற மமதை அவர்களுக்கு இருந்தது. இப்படி நாட்டில் நடக்கும் எந்த விஷயத்தையும் கலாய்ப்பது.. உண்மையோ பொய்யோ ஊருக்கு முன் அதை பதிவாக வெளியிட வேண்டும் என்னும் வெறி அவர்களிடம் அதிகம் காணப்பட்டது.

செய்திகளை முந்தித் தருவது என்ற ஆசையில் முந்திரிக் கொட்டை தனமாக அதைத் தர ஆரம்பித்தார்கள்... இறக்காதவர்களை சாகடித்தார்கள்.. ஸ்க்ரீன் ஷாட்டுகளை நம்பினார்கள்.. ஆடியோ க்ளிப்பிங்கை ஷேர் செய்தார்கள்.. இயேசுநாதருக்குப் பின் பலரை உயிர்த்தெழச் செய்தார்கள்.

இங்கு தான் கதை ஆரம்பிக்கிறது.. சினிமாத் துறையில் இருந்து 5 முதல்வர்களை தேர்ந்தெடுத்து.. ஆட்சி புரிய வைத்தவர்கள்... சினிமா ஹீரோ நிஜத்திலும் ஹீரோ என நம்பியவர்கள்.. இன்று வரை கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தவர்கள்.. சினிமாவை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டவர்கள் இணையத்தில் தங்கள் இம்சைகளை தொடர ஆரம்பித்தனர்.

கேமிரா பற்றியோ எடிட்டிங் பற்றியோ திரைக்கதை பற்றியோ தெரியாதவர்கள் அதில் விற்பன்னர் போல எழுத ஆரம்பித்தனர்... ரசிகர்கள் டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் 156வது பானிபட் போர் வரை நடத்தி விட்டார்கள்... பலர் ஹிட்லர் ஆனதை விட கோயபல்ஸ் ஆனது தான் அதிகம்.. ரசனை என்பது ஆளுக்கு ஆள் மாறும் என்பது கூட தெரியாமல் சரமாரியாக விமர்சித்தார்கள்..

சில ஸ்பானிஷ், கொரிய, ஈரானிய திரைப்படங்களை திரைப்பட விழாக்களில் ஓசி பாசில் பார்த்து விட்டு குறுந்தாடி ஜோல்னா பை கெட்டப்புக்கு போனார்கள் சிலர்.. உண்மையில் இது குறித்த ஞானம் உள்ளவர்கள் எழுதியது மறைந்து போனது.. நுனிப் புல் மேய்ந்தவர்களின் கூற்றை நம்ப ஆரம்பித்தது உலகம்.. அதை சாதகமாக்கிக் கொண்டனர்.

பலருக்கு பிடித்த சாம்பார் சிலருக்கு பிடிக்காது.. சிலருக்கு பிடித்த சில காய்கறிகள் பலருக்கு பிடிக்காது.. ஒரே ஒரு உணவிலேயே இப்படி வித்தியாசம் இருக்க தனக்கு பிடிக்காத படம் இன்னொருவருக்கு பிடிக்குமே எனத் தெரியாது எழுதினார்கள்.. கத்தி,வீரம்,புலி,வேதாளம் என பல போர்கள் நடந்தன.. டி.பியில் போலி முகம் வைத்து லட்சக்கணக்கானவர்கள் அஞ்சா நெஞ்சத்துடன்!!??? போரிட்டனர்.

இப்போது சொல் இவர்களுடைய விமர்சனம் சரியா? இதை எழுதும் இவர்கள் 5 கோடி கொடுத்தால் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் தருவார்களா? அல்லது இப்படியே திண்ணைப் பேச்சு வீரர்களாய் தொடர்வார்களா? இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்றது வேதாளம்.

பதில் தெரியாத விக்ரமன் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறி இறந்து போனான்.. விக்ரமனிடம் இருந்து விடுதலை பெற்ற வேதாளம் தூங்காவனத்திற்கு பறந்து சென்றது.

Thursday 5 November 2015

அதிமுக ராக்கெட்...

ஆளுங் கட்சி சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ராக்கெட்...

ஓ.பி.எஸ். : அன்பின் திருவுருவாய் அகிலம் போற்றுகின்ற வாழும் இதயதெய்வம் தங்கத்தாரகை பெண் பெரியார் பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மா அவர்களின் பொற்பாதங்களை வணங்கி வருகின்ற நவம்பர் 14 ஆம் தேதி சுபயோக சுபதினத்தில் ராகு காலம் முடிந்து நல்ல நேரம் துவங்கும் வேளையில் இந்தியாவில் ஏன் உலகத்திலேயே எந்தக் கட்சியும் செய்யாதது..இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனையாக சொந்த ராக்கெட் ஒன்று அம்மாவின் ஆணைக் கிணங்க செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப் படுகிறது.. அதனைக் காணொளி மூலம் மாண்புமிகு அம்மா அவர்கள் கவுண்ட்டவுன் சொல்லி அனுப்பி வைக்க உள்ளார் என்ற மகிழ்வான செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..

நத்தம் விஸ்வநாதன் : சாதனைகள் நாலாண்டு... சரித்திரம் படைக்கும் நூறாண்டு... என்னும் தாரக மந்திரத்திற்கு செயல் உருவம் தந்திருக்கும் இதயதெய்வம், தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்தது தான் இந்த யோசனை.. எல்லாரும் அறிவாகத் தான் சிந்திப்பார்கள் ஆனால் அம்மா அவர்களோ அறிவியலாகவே சிந்திப்பார் என்பதற்கு இதுவே ஒரு சான்று.. உலகில் எந்த முதல்வரும் ராக்கெட் அனுப்பியதாக வரலாறு உண்டா.. அந்த வரலாற்றை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.. அம்மாவின் ஆணைக்கிணங்க நம் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

பா.வளர்மதி : எங்கள் பாசமே எங்கள் நேசமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் நான் வணங்கும் இதயதெய்வம் தங்கத்தாரகை புரட்சித்தலைவி எங்கள் அம்மாவின் காலடி பணிந்து கேக்குறேன்.. எந்தக்கட்சியாவது ராக்கெட் விட்டு இருக்காங்களா.. இல்ல இந்த யோசனையாவது தோணியிருக்குமா பூமி மட்டுமில்ல அந்த வானத்தை பத்தியும் யோசிப்பாங்க அதான் புரட்சித் தலைவி.. எந்த விஞ்ஞானியை நம்பியும் எங்கம்மா இல்ல அவங்க நெனைச்சாஇந்த ராக்கெட்டை எங்கம்மாவே செலுத்துவாங்க அவங்க ஆணையிட்டா அதுவாவே கூட பறக்கும்..அதுக்கான தகுதியுள்ளவங்க எங்கம்மா அவங்க ஜான்சிராணி வீரமங்கை... அமெரிக்காகாரன் எல்லாம் சும்மா... அறிவாளின்னா அது எங்கம்மா.. 

கலைஞர்: உடன்பிறப்பே..இன்றைய செய்திகளில் அம்மையார் ராக்கெட் விடப் போகிறார் என்று அவரது அடிப்பொடிகள் அறைகூவல் விட்டதை நீ படித்திருப்பாய்.. இது ஒன்றும் புதியதல்ல.. இது அவர்கள் சிந்தையில் உதித்ததும் அல்ல.. பேரறிஞர் அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு யேல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதை உலகம் அறியும். அப்போது அண்ணா அவர்களை சந்தித்த மாணவர்கள் சொன்னது தான் இந்த ராக்கெட் யோசனை 1968 ஆம் ஆண்டிலேயே இது குறித்து அண்ணா அவர்கள் என்னிடம் இந்த திட்டத்தை தயாரிக்கச் சொல்லி அதுப்படிப் படியாக வளர்ந்து கடந்த திமுக ஆட்சியில் செயல்படும் வேளையில் ஆட்சிமாற்றம் வந்ததால் நின்றது.. இதை ஏதோ இவர்கள் சாதனை போல கூவுவது விந்தையாக இருக்கிறது..செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பும் அம்மையாருக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன் நீங்கள் எந்த கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்பலாம் ஆனால் சூரியனுக்கு மட்டும் அது நடக்கவே நடக்காது.. உதயசூரியனுக்கு மேல் எந்த ராக்கெட்டும் பறக்காது.

ஈ.வி.கே.எஸ் : ஒரு முறை சத்தியமூர்த்தி பவனுக்கு இந்திரா அம்மையார் வந்திருந்த போது ராக்கெட் பற்றி பேசினார்.. அங்கிருந்த கூச்சல் கோஷ்டி சத்தத்தில் எங்கள் காதில் மார்க்கெட் என்று விழுந்தது... அதன் பிறகு தலைவர் ராஜீவை நான் டெல்லியில் சந்தித்த போது நிலாவுக்கு ஒரு ராக்கெட் என்னும் தன் கனவை சொன்னார்.அதன் பிறகு இளைய பாரதமான ராகுல் அவர்களும் தன் தந்தையாரின் கனவை நீட்டி செவ்வாய்க்கு ராக்கெட் என்று சொன்னார்... ஆனால் காங்கிரஸ் பேரியக்கத்தின் கனவான இத் திட்டத்தை அதிமுக செயல்படுத்தியது அதிர்ச்சி தருகிறது.. அதிமுகவிற்கு இந்த ரகசியத்தை அநேகமாக தங்கபாலு தான் சொல்லியிருப்பார் என்று சந்தேகப்படுகிறேன்.. ஏனெனில் ராகுல் அன்று சொல்லும் போது அவரும் உடனிருந்தார்.. மேலிடம் தான் இனி இதுபற்றி முடிவு செய்யவேண்டும்.

வை.கோ : உலகெங்கும் நீதி கேட்டு தமிழன் அலையும் இவ்வேளையில் செவ்வாய்க்கு ராக்கெட் அவசியமா.. தீபாவளிக்கு ராக்கெட் வாங்கவே காசில்லாத நிலையில் இருக்கிறான் ஏழைத்தமிழன் அவனுக்கு வழி செய்தீர்களா.? ஏழைத்தமிழனை விடுங்கள் ஈழத்தமிழர் கதி என்ன? செவ்வாய் பற்றி சிந்திக்கிறீர்களே  அந்தத் தமிழர்கள் வாயில் இடும் கதறல் உங்கள் செவிகளில் விழவில்லை.. உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை..இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்களே அது என்னவாயிற்று? தமிழகத்திலே அடிப்படை வசதிகள் இல்லையே அதை தீர்க்காமல் ராக்கெட் விடுவது நியாயமா.. ஆயிரம் முறை கேட்டாலும் சொல்லுவேன் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி சாதனை புரியும் நாளை விட தனி ஈழம் மலரும் அந்நன்னாள் தான் என் வாழ்வின் பொன்னாள்.

ராமதாஸ் : செவ்வாய்க்கு ராக்கெட்.. நினைத்தாலே சிரிப்பு வருகிறது.. நாடு இப்போது இருக்கும் நிலை என்ன மக்களின் தேவை என்ன என சிந்திக்காது எடுத்த முடிவு இது.. இதனால் தான் சொல்லுகிறேன் அன்புமணி முதல்வர் ஆக வேண்டும் என்று.. இவ்வளவு காலம் இரு திராவிட கட்சிகளும் நாட்டை சுரண்டியது போதும்.. எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் (அய்யா மீனிங் தப்பாகுதுங்களே) இது போல ராக்கெட் விடுவதில் கவனம் செலுத்தாமல் காய்கறி மார்க்கெட் அதிகரிக்க பாடுபடுவோம்.. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்காக பாடுபடுவோம்.. நாட்டில் எங்கள் முதல் கையெழுத்தே மதுவிலக்கு தான்.மாற்றம்.. முன்னேற்றம்..அதிமுகவின் ராக்கெட் ஏமாற்றம்.

கேப்டன் : மக்களே உப்பு தண்ணிய குடிச்சவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்.. நான் கேக்குறேன்.. இப்ப எதுக்கு ராக்கெட்டு... இந்த கவருமெண்ட்டுக்கு ரெண்டு தான் தெரியும் ஒண்ணு டாஸ்மாக் டார்கெட்டு இல்லாட்டி பறக்குற ராக்கெட்டு.. கேப்டன் கோபப்படுறாரு முறைக்கிறாரு இப்படியெல்லாம் சொல்றாங்க ஆனா மக்களே நான் தப்பிருந்தா தான் கோவப்படுவேன்... சொல்லுங்க நாட்டுல இப்ப இருக்குற பிரச்சனையில எத்தனை தீர்ந்து போச்சு... ஒண்ணுமில்ல.. எல்லாம் தீராத பிரச்சனையா தான் இருக்கு..இந்த கேப்டன் முதலைமைச்சரா வந்து தான் தீர்க்கணுமுன்னு கிடக்கு.. நிச்சயம் அது நடக்கும் மக்களே.. கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன்.. எப்படி ஏமாத்துவாங்க தெரியுமா..? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எதுக்குடா..? ராக்கெட் பறக்கறதை பார்க்கடா..

சரத்: அயர்ன் லேடி ஆயிரம் மோடி எங்க புரட்சித் தலைவி அம்மா..(லா) அவங்க நினைச்சா செவ்வாய் கிரகம் கூட கீழே இறங்கிவரும்..(லா) அவங்க பாதம் பட்டா செவ்வாயிலும் செடி முளைக்கும் ஊர் வாயையும் அது அடைக்கும்.. (லா) அம்மாவை பார்க்கும் போதெல்லாம் வாழும் நீல் ஆர்ம்ஸ்டிராங்குன்னு பாக்குறதா வாழும் யூரிககாரின்னு பாக்குறதான்னு ரொம்ப யோசிச்சு தமிழகத்தின் சுனிதா வில்லியம்சா அவங்களை நான் பார்க்குறேன்(லா) எங்கம்மா கை பட்டா மண்ணுலேயும் வின்னு விண்ணுலேயும் வின்னு ஏன்னா அவங்க இந்த ஊரு பொண்ணு(லா) அம்மா நினைச்சா முடியாததும் இல்ல அவங்க அறிவுக்கு வானமே எல்லை (லா)

பிராக்கெட்டில் இருக்கும்(லா)ஒவ்வொரு டயலாக்கிற்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் பின்னணி இசையான லால்லலலல..லாலாலா.என்று ஹம் செய்து படிக்கவும்.

ஜெயலலிதா : என் ரத்தத்தின் ரத்தமான அன்புப் பெரியோர்களே தாய்மார்களே இம்மாநிலத்தின் முதல்வரான எனக்கு எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பது தெரியாதா.. உண்மையில் அன்று அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் செவ்வாயன்று வரும் தீபாவளிக்கு என் அன்புப் பரிசாக தமிழக மக்களுக்கு விலையில்லா ராக்கெட் வழங்கும் படி ஆணையிட்டேன்.. சிக்னல் பிராப்ளத்தில் அவருக்கு அது வேறு மாதிரி கேட்டு அவர் இஸ்ரோ வரை விசாரித்து எனக்கு பதிலளித்த போது விழுந்து விழுந்து சிரித்தேன்... இது வாட்ஸ் அப் ஃபேஸ்புக் காலம் இங்கு ஒரு செய்தி எப்படியெல்லாம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை.. உலகிற்கு உணர்த்த எம் அமைச்சர் பெருமக்களோடு சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்த முடிவுசெய்தேன்.. நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் தெரியாமல் எந்த மாநில அரசாவது ராக்கெட் விடுமா..? 

மத்திய அரசு தான் ராக்கெட் விடும் என்னும் அடிப்படை கூட தெரியாது அறிக்கை விட்ட தலைவர்களை பார்த்தீர்களா இவர்களின் முகமூடியை கிழிக்கத்தான் இந்த அறிக்கை.. தர்மத்தின் வாழ்வுதனை சூது எப்படி கவ்வுகிறது என்பதன் விளக்கம் தான் இச்செய்தி.. இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வாதர பிரச்சனைக்கு முடிவு கட்டி தமிழகத்தை இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாக்குவதே என் மூச்சு..லைக் கமெண்ட் போடுவது மட்டும் உங்கள் பணி அல்ல வாட்ஸ் அப் முகநூலில் வந்த செய்திகளை அப்படியே நம்பாது  இருப்பது தான் உங்கள் தலையாய பணி.. அன்புச் சகோதரியின் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து நான் கேட்டதை செய்வீர்களா.. செய்வீர்களா.. நிச்சயம் செய்வீர்கள் அண்ணா நாமம் வாழ்க.. புரட்சித் தலைவர் நாமம் வாழ்க.. நன்றி.

Wednesday 4 November 2015

தீபாவளி நினைவுகள்...

#80களின்_தீபாவளி

விடிஞ்சா தீபாவளின்னா அதுக்கு மொத நாள் ராத்திரி 10 மணிக்கு சுல்தான் டெய்லர் நியூஸ் பேப்பரில் சுற்றித்தரும் ஒரே ஒரு செட் புத்தாடை...

இரவு வீடு திரும்பி இருக்கும் அப்பா வாங்கிட்டு வந்த பட்டாசு பொட்டலம்... (தம்பி நாளைக்குத் தான் வெடிக்கணும்..)

அம்மா வீட்டில் சுட்ட அதிரசம் முறுக்கு ரவா லட்டு..

விடிஞ்சதும் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கண்களில் வழிந்து எரிய கொதிக்கும் வெந்நீர் இருக்கும் விறகடுப்பின் புகையும் எரிச்சலை அதிகப் படுத்தும் சுகமான வலி..

கண்கள் சிவக்க குளித்துவிட்டு சாமி கும்பிட்டு அப்பா அம்மா காலில் விழுந்து ஓரத்தில் மஞ்சள் தடவப்பட்ட புத்தாடையை வாங்கி ஆசையுடன் அணிந்த சுகம்..

இட்டிலியோ தோசையோ சூடாக அம்மா கையால் இனிப்புடன் சாப்பிடும் ருசி..

பங்காளி என்னும் வார்த்தை பட்டாசு பிரிக்கும் போது பொருந்தும் சரி சமமாக தம்பி தங்கைகளோடு அதை பிரித்து எடுத்து வெடித்த குதூகலம்..

தெரு முழுவதும் நண்பர்களோடு கொட்டாங்குச்சிக்கு கீழே குருவி வெடி சுவர் இடுக்கில் ஊசி வெடி என வெடி வெடித்த உற்சாகம்..

ரேடியோவில் பாட்டு.. மதியம் கறிச்சாப்பாடு மேட்னி ஷோ சங்கத்திலோ, அலங்காரிலோ, கீதாலயாவிலோ எதாவது புதுப்படம்..

மாலை மீண்டும் பலகாரம் இரவு வெடிக்கும் வண்ண வெடிகள்.. அதுக்குள்ள தீபாவளி முடிஞ்சுடுச்சு என்ற அங்கலாய்ப்புடன் இரவு 10 மணிக்கு தூங்கச் செல்வது..

அடடா நினைவுகளில் இருக்கும் அந்த பால்ய தீபாவளி என்றும் இனிக்கும்.. உங்களுக்கு....