Sunday 29 March 2015

அழகிய மழை நாள்....

#அன்று

முற்றத்து வீட்டில் ஒரு மழை நாளின் மாலை கூட்டுக்குடும்பத்தின் கலகலப்பான பேச்சும், மாலை நேரச் சிற்றுண்டி சமைக்கும் மணமும். குழந்தைகளின் கும்மாள சப்தமும் வீடெங்கும் நிறைந்து கொண்டிருக்கிறது. அழையாது வந்த விருந்தாளியாய் முற்றத்தில் பெய்த மழையும் சள சளவென்று எங்களோடு பேசுகிறது. 

எங்கள் வீட்டு தேநீர் மணத்தை அதுவும் நுகர்கிறது,அங்கு முற்றத்தை சுற்றி நின்று தூறலில் தங்கள் கைகளை நீட்டி நனைக்கிற குழந்தைகளின் கன்னங்களில் தன் சாரல் விரல் தொட்டு சில்லென கொஞ்சுகிறது. மழையின் சப்தமா.! குதூகலத்தின் எதிரொலியா.! எனப் பிரித்துப் பார்க்க முடியாத இன்ப பேரிரைச்சல். 

விருந்தாளியாய் வீட்டிற்குள் வந்த மழை ஓய்கிறது. மழை நின்ற பின் தெருவிற்கு விரையும் பிள்ளைகள் மழை கழுவி விட்ட வீதியில் குயவன் சக்கரம் போல் சுழித்தோடும் செம்மண் நிறகால்வாய் நீரில் கால் நனைக்கிறார்கள் இதோ இந்த மழை நீரில் அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் காகிதக் கப்பல்கள் ஓடும்.!

போக்குவரத்து தொடங்கும்.. வீட்டில் எங்களோடு விளையாடிய அதே மழை நீர் புரண்டோடும் கால்வாயில் வந்து சேரும்.. மீண்டும் அது குழந்தைகளோடு ரசித்து விளையாடும்... அது ஒரு அழகிய மழைப்பொன் மாலை..!

#இன்று

உயர்ந்து நிற்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் காற்றுக்காகவென கட்டிவிட்டு கொசுவிற்காக ஜன்னல்களை இறுக அடைத்து மூடியிருக்கிறோம். இதோ மழை வருகிறது மழை ரசிக்க ஜன்னல் திறக்கப் போகும் பிள்ளைகளை அதட்டுகிறோம் வீட்டிற்குள் மழை நீர் வந்து ஈரமாகிவிடும் உனக்கு காய்ச்சல் வரும் என்று.!

ஆண்டாண்டு காலமாய் நம் வீட்டிற்குள் வந்து நம்மோடு பேசிப்போன மழையை இன்று வீட்டிற்குள் சாரலாக கூட அனுமதிப்பதில்லை.! ஆர்வமாய் நம் வீடு தேடி வரும் மழையை நகரத்தில் எந்த வீடுமே ஏற்கவில்லை.! ஆற்றாமையிலும் ஆவேசத்திலும் நகரத்தை பழி தீர்க்க இப்போது மழை கொட்டித் தீர்க்கிறது.!

மழை நின்ற பின்பு சாலையெங்கும் வெள்ளக்காடு.. ஓப்பனை கலைத்த நடிகையின் முகம் போல அரசாங்கத்தின் லட்சணங்கள் மழை நீரில் அழிந்து விடுகிறது.. கற்கள் பெயர்ந்த சாலைகள், மூடியில்லாத பாதாள சாக்கடைக் குழி, அறுந்து விழுந்த மின் கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், மின் இணைப்பு துண்டிப்பால் எங்கும் இருள்.! 

பாலத்தின் அடியில் பாதி மூழ்கிய பேருந்து..இயங்க மறுக்கும் இரு சக்கர வாகனங்கள், அநியாய வாடகையில் ஆட்டோ டாக்சிகள்.. பேருந்து நிறுத்தத்தில் தவிக்கும் மக்கள பாதாள சாக்கடை குழிக்கும் அறுந்த மின் கம்பிக்கும் பயந்து தேங்கிக் கிடக்கும் மழை நீரில் கால் வைத்து நடக்க தயங்குகிறார்கள்.!

எங்கும் அங்கலாய்ப்புகள், எரிச்சல்கள், பேரிரைச்சல்கள், எப்ப வீட்டுக்கு போறது பாழாப்போன மழை கெடுத்துடுச்சு சார்"புலம்பல்கள்.. சாலையில் பென்ஸ் கார்கள் கிழித்து செல்லும் தேங்கிய மழை நீர் நம்மிடம் கேட்கிற கேள்வி அன்று வீட்டிற்குள் வந்த மழையை ரசித்தவர்க்கு மட்டும் கேட்கிறது...

#நான்_வராத_வீட்டிற்கு_நீங்கள்_மட்டும்_ஏன்_போகவேண்டும்


Wednesday 25 March 2015

கறிதோசை.

#யாம்_பெற்ற_இன்பம்

அசைவ உணவுப் பிரியனான நான் சைவத்திற்கு மாறியது எனக்கே ஆச்சரியமாக இருந்தாலும் இந்தப்பதிவு அதைப்பற்றி அல்ல.! கடந்த சனிக் கிழமை மதுரை செல்ல எக்மோர் வந்தேன்.

இதுபோன்ற பயணங்களில் எப்போதும் எக்மோர் புகாரியில் தான் உணவு என்னும் பழங்கதைகள் பல்லிடுக்கில் மாட்டிய கறித்துணுக்குகளாக நினைவிடுக்கில் வந்து போனாலும்.. புத்தன் வழியில் ஆசைகளை அடக்கிக் கொண்டு சைவ கடையான நம்ம வீடு வசந்த பவனில் நுழைந்தேன். 4 இட்லி சாப்பிட்டு கம்யூசனித்தை நிலை நாட்ட கை கழுவ எழுந்தேன்.

சூபர்வைசர் கேட்டார் "டிபன் போதுமா சார்" என்று.. சைவக்கடையில் புதிதாக வேறு என்ன உணவு இருக்க முடியும் என்ற அலட்சியக் கேள்வி என் வாயில் இருந்து விழுந்தது. சூபர்வைசரின் தன்மானம் எழுந்தது.. கறிதோசை சாப்பிடுறிங்களா.? என்றார்.. கை கழுவப்போன என் கம்யூனிசத்தை உடைத்தெறிந்தது அந்த முதலாளித்துவமான உணவின் பெயர்..!

என்ன கறிதோசையா.? அதுவும் சைவக்கடையிலா அவர் சொன்னது தவறாக எதும் காதில் விழுந்து விட்டதா என்ற சந்தேகம் கூட எழுந்தது.அதை உறுதிப்படுத்திக் கொள்ள அவரிடம் மீண்டும் பாஸ் என்கிற பாஸ்கரன் பட ஆர்யா போல நான் பாடேன் என்றேன் அவரும் பார்டன் என்ற அர்த்தத்தில் புரிந்து கொண்டது போலவே பதிலளித்தார். ஆமா ஸார் கறிதோசையே தான்.

நான் சைவமுங்க என்றேன்.. யோசிக்காது.. சார் இது சைவக்கடைதானே நான் சொன்னதும் வெஜ் கறி தான் ஆனால் அசைவ கறி தோசை போலவே இருக்கும் என்றார். ஆர்டர் செய்தேன். கரம் மசாலா மணக்க வெஜ் குருமா 3 சட்னிகள் சகிதம் காளான், பனீர், தக்காளி துண்டுகள் இறைச்சித் துண்டுகள் போல வெட்டப்பட்டு மிளகு தூள் தூவப்பட்ட கறி தோசை சூடாக வந்தது..!

ஆஹா அப்படி ஒரு ருசி.! மிக அற்புதமாக இருந்தது. அப்படியே அசைவக் கறி தோசையின் சுவை மாறாது இருந்தது அசைவ பிரியர்களுக்கும் இது நிச்சயமாக ரொம்பப் பிடிக்கும்.!
நான் மகாராஜாவாக இருந்தால் நம்ம வீடு வசந்த பவனுக்கு பாதி ராஜ்யத்தை எழுதி தந்திருப்பேன்.. ஆனால் சாதாரணன் தானே எனவே தான் இதை பதிவாகத் தருகிறேன்..!

நண்பர்களே..! ஒரு முறை அந்தப்பக்கம் சாப்பிடப் போனால் நிச்சயமா இந்தக் கறி தோசையை சுவைத்துப் பார்க்க மறந்துடாதிங்க..! ஓகே.

Friday 20 March 2015

கி(சி)ரிக்கெட் ...

1.

ஏப்பா கிளார்க்கு..! இந்தியாவை ஜெயிச்சிடுவியா பஞ்சாயத்து கேக்குறதுக்கு பதில் சொல்லு..!

என்னங்கய்யா இப்படி கேட்டுபுட்டிங்க.. அடுத்த மாசம் ஐ.பி.எல் ஆரம்பம்... சம்பளமா எத்தனை கோடி வாங்குறானுங்க..அதுமில்லாம அவங்க எல்லாம் தனியா தான் இந்தியா வந்து போவணும் அதெல்லாம் அவய்ங்க கண்ணு முன்னால வந்து போகுமில்லியா.. சொல்லுப்பா கிளார்க்கு...

அய்யா நாங்க செமி பைனல் வந்ததே போதும் கப்பை நீங்களே வச்சுக்கோங்க..

ஏய்.. அதான் கிளார்க்கே சொல்லிட்டாரு இல்ல.. அப்புறம் என்ன... போ..போ.. போ... கூட்டம் போடாத கிளம்பு கிளம்பு...கிளம்பு..

அப்பாடா..! இப்படியே மெயிண்டண்ட் பண்ணுடா #சீனா_வானா.. .. ம்ம் ம்ம் போ போ...

2.
பைலட் நல்லா கேளுங்க நம்ம ப்ளைட்டுல ஶ்ரீலங்கா, பங்களாதேஷ், பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் டீம் ப்ளேயர்ஸ்எல்லாம் இருக்காங்க..! ப்ளைட்டை நேரா கொழும்புக்கு விடு அங்க ஏர்போர்ட்டுல இலங்கை டீமை இறக்கி விடுறோம். 

அப்படியே டாக்கா போறோம் அங்க பங்களாதேஷ் டீமை ஏர் போர்ட்டுல இறக்கி விட்டுட்டு அப்படியே இஸ்லாமாபாத் ஏர்போர்ட்டுல இறங்காம நேரா வெஸ்ட் இண்டீஸ் போயி அவங்களை இறக்கி விடுறோம்... ஓகே.!

ஸார் ஒரு சின்ன சந்தேகம் இஸ்லாமாபாத் ஏர்போர்ட்டுல பாகிஸ்தான் டீமை இறக்கி விட மாட்டோமா.?

நானும் அவங்க கிட்ட இறக்கி விடவான்னு கேட்டேன்.. அதுக்கு அவங்க சொன்னாங்க இஸ்லாமாபாத் வந்தவுடனே நாங்களே குதிச்சுக்கிறோம்.. ரெண்டும் ஒண்ணு தான்னு.!

Tuesday 17 March 2015

தீனா..2015

தீனா "கொரலு"©

இந்த எள்ளு கீதே அத்து தம்மாத்தூண்டு தான் இருக்கும் அதுல இர்க்குற பொளவு எவ்வளவு சிறுசா இர்க்குமோ அந்த அளவுக்கு கூட யாருமேலியும் நாம பகைய நெனிக்கக்கூடாது.. அப்டி நெனைக்க சொல்லோ அந்த தம்மாத்தூண்டு நெனப்பே ஒரு வம்சத்தியே அழிச்சிருமாம்..!

"எள் அளவு பகைதான் ஒரு வம்சத்துக்கு எள்ளு தெளிக்கிற பகை"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாம் கேடு.

[பொருட்பால் : அதிகாரம் : உட்பகை : குறளெண் :889]


தீனா "கொரலு"©

டைட்டா கட்டி புட்ச்சிகினு இர்க்க சொல்லோ எங்க இவுளுக்கு நோவுமேன்னு ஆம்பளை நெனிச்சுகினே கைய கொஞ்சம் லூசாக்குனா அந்தய சின்ன கேப்ப கூட தாங்காத பொம்பள நெனிப்பாளாம் இன்னாடா இது இந்த ஆளுக்கு நம்ம மேலே அன்பு குறஞ்சிட்ச்சா இல்ல நம்மள பிரிய போறானான்னு நெத்திய சுர்க்குவாளாம்..! 

"நீ கெட்டியா கட்டிப்புடிக்காத பொண்ணு.. அதுக்கு உடனே கலங்குமாம் கண்ணு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.

[இன்பத்துப்பால் : அதிகாரம்: உறுப்புநலனழிதல் : குறளெண்: 1238]


தீனா "கொரலு"©

கைல கத்திய வச்சிகினு குத்தவர்ற விரோதிய கண்டா கூட நீ மெர்சலாவாதே.. ஆனா உன் கூடவே  இர்ந்து நல்லவனா ஆக்ட் குட்த்து உனுக்கு குழி பறிக்காறான் பாரு பேமானி அவுன கூடவே வச்சிக்கினு இர்ந்தா நீ பயந்தே ஆவணும்.! "எதிரிய நம்பு..துரோகிய நம்பாதே" 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வாள்போல பகைவரை அஞ்சற்க;அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.

[பொருட்பால் : அதிகாரம்: உட்பகை : குறளெண் : 882]


தீனா "கொரலு"

உன்னிய மதிக்காத ஆளோட பின்னாலியே போயி அவுன தாஜா பண்ணிகினு உசுர் வாழ்றதவுட  அவுன் பின்னால போறதில்லன்னு வய்ராக்கியமா இர்ந்தேன்னு வய்யி.. அப்ப நீ அழிஞ்சா கூடொ அது நல்லது..! "மதிக்காதவன் பின்னால போறதவுட மண்டயவே போட்டுறலாம்"சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.

[பொருட்பால் : அதிகாரம்: மானம் : குறளெண்: 967]


தீனா "கொரலு"

ஒருத்தன் பொறாம பட்றதால அவுனுக்கு பெருமை வராது அத்த படலின்னாலும் கிடைக்கிறவனுக்கு கிடைக்காம போவாது. "கிடைக்கிறது கிடைக்காம இர்க்காது.. கிடைக்காம இர்க்குறது கிடைக்காது" அட 2ஆயிரம் வரதுக்கு மின்னாலயே சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதிலார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

[அறத்துப்பால் : அதிகாரம்: அழுக்காறாமை : குறளெண்: 170]

தீனா " கொரலு" 

உன்னிய பெத்து போட்ட மவராசி பசியால துடிச்சிக்கினு இர்க்குறத கூட நீ பாக்கலாம்.. ஆனா அதுக்காக பெர்ய  மன்சங்கோ கிட்ட வம்பு பண்ணி பார்க்கதே.

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

[பொருட்பால் : அதிகாரம்: வினைத்தூய்மை : குறளெண்: 656]

தீனா "கொரலு" 

பின்னாடி இன்னா நடக்குமுன்னு தெர்யாம இன்னொர்த்தரு கய்யில இர்க்குற பொருளுக்கு ஆசப்பட்டா நீ காலி..அப்படி ஆசைபடலைன்னா உன் வாழ்க்கை ஜாலி.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.

[அறத்துப்பால் : அதிகாரம்: வெஃகாமை : குறளெண்: 180]


தீனா "கொரலு" 

எம்மாம் பெர்ய கஸ்டம் வந்தாலும் நியாயமா உழச்சிகினே இர்க்கணும்.! அப்டி உழச்சி வந்த துட்டுல  நீ  தெளிஞ்ச  தண்ணி மேறி கூழு காச்சி குட்ச்சாலும் அத்து வட பாயசத்தோட விருந்து துண்ணதுக்கு சமானம்..!

"உழச்சு குடிக்கிற கூழு... அது உனுக்கு விருந்து சோறு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள் தந்தது

உண்ணலினூங்கினியது இல்.

[பொருட்பால் : அதிகாரம்: இரவச்சம் : குறளெண்: 1065]


தீனா "கொரலு" 

மன்சனுக்கு சாவுன்னாலே சோகம் தான் ஆனாஅந்த சாவே எப்ப தெரிமா சந்தோஸ்மா மாறும்.. ரொம்ப கஸ்டத்துல இர்க்க ஒரு ஏழை உன்னாண்ட வந்து ஒதவி கேக்க சொல்லோ அத செய்ய மிடியாத நெலயில வர்ற சாவு இர்க்கே அதான் நல்ல சந்தோஸ்மான சாவாம்..! பிரிறாமேறி சொன்னா... 

"ஒதவி செஞ்சு வாழு..மிடியாட்டி சந்தோஸ்மா சாவு"....

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்

ஈதல் இயையாக் கடை.

[அறத்துப்பால் : அதிகாரம்: ஈகை : குறளெண்: 231]


தீனா "கொரலு" 

மன்சனுக்கு காத கொட்த்து இர்க்கிறதே நல்லத கேக்கத்தான்.! அத்த செய்யாம எப்பயுமே வக்கிணியா துண்ணுகிட்டே இர்ந்தா நீ வாழ்றதும் ஒண்ணு தான் சாவறதும் ஒண்ணு தான் "காதுக்கும் வோணும் டேஸ்ட்டு... இல்ல நீ வாழ்றதே வேஸ்ட்டு" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

[பொருட்பால் : அதிகாரம்: கேள்வி : குறளெண்: 420]


தீனா "கொரலு" 

பூ மேறி சிர்ச்ச மூஞ்சி, சந்தோஸ்மான மன்சு இப்டி இர்க்குவறங்கோ காண்டானா இன்னாகும்?சிர்ச்ச மூஞ்சி கோரமாகி மன்செல்லாம் வெறியாகும் அந்த நிம்சம் நீ மன்சனாவே இர்க்க மாட்ட. மன்சனுக்கு கோவத்த வுட பெர்ய எதிரி வேற ஏதும் இல்லபா.! "சிர்ச்சு வாய்ந்தா லாபம்... உனுக்கு பெர்ய எதிரி கோவம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

[அறத்துப்பால் : அதிகாரம்: வெகுளாமை : குறளெண்: 304]

தீனா "கொரலு" 

"லேட்டா செய்றத லேட்டஸ்ட்டா செய்யி".. பாஸ்ட்டா செய்றத ஜுட்டா செய்யி" அட! இத்த 2ஆயிரம் வர்சத்துக்கு மின்னாடியே சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எந்த கார்யத்த உட்னே செய்யணுமோ அத்த தள்ளி போடாம அப்யே செய்ணும், அத்தே மேறி அப்பால செஞ்சுக்கிலாம்ன்னு இர்க்குற வேலய இப்பவே செய்றதும் தப்பு.. அத்த ஒயுங்கா நிதானமா செஞ்சாலே போதும்.! 

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.

[பொருட்பால் : அதிகாரம்: வினை செயல்வகை : குறளெண்: 672]


தீனா "கொரலு" 

தவமிர்க்குற சாமி கண்க்கா வேசங் கட்டிக்கினு அதுக்கு சம்பந்தமே இல்லாத வேலய செஞ்சுனுக்கிற டுபாக்கூரு சாமியாரு... பொதர்ல மர்ஞ்சி நின்னு பறவய வல வீசி புடிக்கிற வேடன் மேறி அவுனாண்ட நீ உஷாரா இரு..! பிரியற மேறி சொன்னா...

"வேசம் கட்ன சாமியாரும்.. வேடன் விர்ச்ச வலையும் ரெண்டுமே ஒண்ணுதாங்"

ரண்டாயிரம் வர்சத்துக்கு மின்னாடியே நம்ம தல சோக்கா சொல்லிக்கீரார்பா

தவம்மறைந்து அல்லது செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

[அறத்துப்பால் : அதிகாரம்: கூடாவொழுக்கம் : குறளெண்: 274]

Sunday 15 March 2015

டிராபிக்..

#நேர்மையாக_இருந்து_பார்

உன்னைச் சுற்றி போலீஸ் தோன்றும்.. உலகம் அர்த்தப்படும்.. 

விடியற்காலையின் நீளம் விளங்கும்...தலையெழுத்து 

அலங்கோலமாகும்..ஏட்டு எமனாவான்..உன் வீட்டு பால்கனி 

கம்பி உன்னையே குத்தும்..குடல் உடையும்..கண்ணிரண்டும் 

பீதியாகும் நேர்மையாக இருந்து பார்...

நான்கரை மணிக்கு எழுப்பப்படுவாய்..சட்டையணிய மறுக்கப்

படுவாய்..தர தரவென இழுக்கப்படுவாய் நிமிஷங்கள் வருஷங்களாகும்

தவறு ஒன்றும் இருக்காது.. அதுதான் பெரிய தவறு என்று உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று

உருளக் காண்பாய்... நேர்மையாக இருந்து பார்....

இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும் மிரட்டல் வழக்குகளில் 

உன் பெயர் மட்டுமே இருக்கும்.. கொலை முயற்சி புகார்கள் பல

உன் மீது அம்புவிடும்.. வழக்குகள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும் 

உன் கண்ணீரில் சட்டங்கள் இறக்கும்...நீதி தோற்கும்..

நேர்மையாக இருந்து பார்....

பொது நலத்திற்கு உழைத்து உழைத்தே உன்னால் உடைந்து போக

 முடியும்.. அகிம்சையின் முகமூடி தாங்கி இம்சை உன்னை இம்சிக்கும் 

உனக்குள்ளே நீ புதைந்து போவாய் அதிகார வர்க்கத்திடம்

மோதினால் அப்படியே சிதைந்து போவாய்..சபையில் தனிமையாக 

நிற்பாய் பின்பு தனிமையாய் மருத்துவமனை அடைவாய்.. ஐந்தங்குல 

இடைவெளியில் அமிர்தம் இருந்தும் அதைத் திருடிய பழி உன்மேல் 

சுமத்தப்படும்.... நேர்மையாக இருந்து பார்....

சகாயம் வழக்கில் நீ அரசின் சட்டையைப் பிடித்தாய் உறவுகள் ஏதுமின்றி 

ஒற்றை ஆளாய் உழைத்தாய் சிலுவையில் அறைந்து கொண்டு விளம்பரம் 

தேடிய சிறு மனிதர்கள் வாழ்கின்ற இவ்வுலகில் நீயே சிலுவையில் 

அறையப்படுவாய்.. நீ நேசிக்கும் நேர்மையும் உண்மையும் உடனே

கிடைக்காது போனாலும் நேர்மையாக இருந்து பார்.. சொர்க்கம் நரகம் 

இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்.. நேர்மையாக இருந்து பார்...


#வைய்யிறமுத்து



Saturday 14 March 2015

சிங்கம் நம்பர் -1

இந்தியச் சிங்கம்...!

உலகத் தடகளப் போட்டியை நடத்தியது புதிய நாடு ஒன்று...! அதில் அந்த நாட்டின் வீரர் ஒருவரும் கலந்து கொண்டார்.. உலகின் மின்னல் வேக மனிதன் ஜான்சன் போல்ட் அந்த போட்டியில் முதலிடத்தையும் நடத்திய நாட்டின் வீரர் 2 ஆம் இடத்தையும் பிடித்தனர். இது அந்த நாடே எதிர்பார்க்காதது

போட்டியை நடத்திய நாடு ஒரு பணக்கார நாடு.. அதற்கு ஒரு பேராசை வந்தது. முதன் முதலாக இப்போட்டியை நடத்தும் நம் நாட்டில் நமது வீரரே முதலிடம் பிடித்தால் உலகமே நம்மை உற்றுப் பார்க்குமே என்று எண்ணி ஜான்சன் போல்ட்டிடம் பெரும் தொகை தருவதாக விலை பேசியது அவர் மறுத்துவிட்டார்.

இந்த பொறுப்பை யாரிடமாவது கொடுத்து ஜான்சன் போல்ட் மனதை மாற்ற எண்ணி உலக நாடுகளில் இருந்து 3 கட்சிகளை பார்த்து பார்த்து தேர்வு செய்தது.. அதில் நம் காங் கட்சியும் ஒன்று! மற்றவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கட்சிகள்.

முதலில் ஐரோப்பிய கட்சி ஜான்சனை அணுகியது தன் நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று அவர்களிடம் அவர் சொல்ல அவரது நாட்டுப்பற்றுக்கு தலை வணங்கி ஐரோப்பிய கட்சி பின் வாங்கியது,அடுத்து அமெரிக்க கட்சி கொஞ்சமும் தயங்காமல் ஜான்சனை மிரட்டியது.

நீங்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் தானே என்று எடுத்த எடுப்பிலேயே கொக்கி போட்டது அமெரிக்கா.. நீங்கள் தடகளப் பாதையை விட்டு விலகி ஓடினீர்கள் என்று பொய்யாக எங்களால் நிரூபிக்க முடியும் என்றது, அவர்களது அச்சுறுத்தலுக்கு கொஞ்சமும் ஜான்சன் பணியவில்லை.

அமெரிக்காவும் ஏமாற்றத்துடன் திரும்ப இப்போது காங் மட்டுமே.! புதிய நாடு காங் பிரதிநிதியிடம் அய்யா.. நீங்க தான் கடைசி உங்களைத் தான் மலை போல நம்பியுள்ளோம்.. ஜான்சனை சந்தித்து வெற்றியுடன் வாருங்கள் என்று சொல்ல.. அவர் "ஜான்சனா அவர எதுக்கு பாக்கணும்"? என்றார்.

காங் பிரதிநிதி கேட்ட கேள்வி அவர்களை திடுக்கிட வைத்தது... அவரை பாக்காம பின்ன யாரை பாக்கணும்? என்று கேட்க..."பத்திரிக்கையாளர்களை "என்றார் காங் பிரதி. இவரை அழைத்து வந்தது தவறோ.? என அந்த நாடு யோசிக்க சீக்கிரம் சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் காங் பிரதி.!

ஸார்... ஜான்சனை ஒப்புக்கொள்ள வைக்க அவரைத்தானே போய் பாக்கணும் பத்திரிக்கையாளர்கள் எதுக்கு பாக்கணும்.? இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா எங்க நாட்டுக்கே கேவலம் என்றனர். ஹாஹ்ஹா என சிரித்தபடி "உங்களுக்கு ஒண்ணும் புரியலை இல்ல எனக் கேட்டார் நம்ம காங் பிரதிநிதி.

அவர்களும் ஆம் எனத் தலையாட்டினர்.. நல்லா கேளுங்க உங்க ஆள் 2 ஆம் இடத்துல ஜெயிச்சு இருக்கார் இப்ப முதலிடத்துக்கு போகணும் அதானே உங்க பிரச்சினை! ஆமாம் என்றார்கள் அவர்கள்.. இதுக்கு எதுக்குங்க நாம போய் ஜான்சனைப் பாக்கணும்..?

பின்ன என்ன செய்யணும் என்பது போல் பார்க்க... தொடர்ந்தார் நம்ம காங் பிரதி முதலிடத்துல இருப்பவர் மேல ஏதாவது குறை சொன்னா ஆட்டோமேடிக்கா 2வது ஆளு முதலிடத்துக்கு வந்துடுவார் சரியா? ஆம் என்றனர் அனைவரும்.

வெரிகுட்! இப்ப இங்க அதான் நடக்கப்போகுது ஊக்க மருந்து பரிசோதனையில ஜான்சன் ஊக்க மருந்து பயன்படுத்தி இருக்காருன்னு டாக்டர் சர்ட்டிபிகேட் கிடைச்சா என்ன ஆகும்.? அவரது முதலிடம் பறிபோகும் 2ஆவது இடத்துல இருக்க உங்க ஆளு முதலிடத்துக்கு வந்துடுவாரு கரெக்டா" என்றார்.

அந்த நாட்டினர் முகத்தில் இப்போது குழப்பம்... "அது சரிங்க எந்த டாக்டர் அப்படி சர்ட்டிபிகேட் தருவாரு"? எங்க நாட்டு டாக்டருங்க எல்லாம் உயிர் போனாலும் அப்படி செய்ய மாட்டாங்க" என்று சொல்ல.. அட இவ்வளோ யோசிச்ச நான் அத யோசிக்க மாட்டேனா என்றபடி #கையைத் தட்டினார் காங் பிரதி..

உள்ளே இருந்து டாக்டர் ஒருவர் வெளியே வந்தார் அவரது #கையில் ஒரு ஃபைல்..!இதுல ஜான்சன் பத்தி எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டும் இருக்கு அத்தனயும் ஒரிஜினல்.!  உலகில் எந்த டாக்டர் பார்த்தாலும் இதை சரின்னே சொல்லுவாங்க.

இதை பிரஸ்மீட்ல சொன்னா அப்புறம் நீங்க தான் வின்னர்" என்று அந்த ஃபைலை அவர்களிடம் கொடுத்தார் காங் பிரதி. மறுநாள் ஜான்சனின் முதலிடம் பறிக்கப்பட்டு அந்த புதிய நாட்டு வீரர் முதலிடம் பிடித்த செய்தி உலகம் முழுவதும் வெளியானது.

அந்த நாட்டில் கொண்டாட்டங்கள் தூள் கிளப்ப அந்நாட்டு அதிபர் ஒரு பெரிய விருந்து கொடுத்தார்.. அந்த விருந்தில் சிறப்பு விருந்தினர்கள் நம் காங் பிரதியும் டாக்டரும் தான்..! அந்நாட்டு அதிபருக்கு இணையான மரியாதை பெற்றார்கள்.

அதிபர் சொன்னார் அருமைங்க உங்க சாதனையே சாதனை சம்பந்தப்பட்ட ஆளை சந்திக்காமயே கச்சிதமா முடிச்சுட்டிங்க.. ஆமா இந்த டாக்டர் உங்க நாட்டில் எந்த ஊரு? அதிபரை பார்த்து மெலிதாக புன்னகைத்தபடி காங் பிரதிநிதி சொன்னார்...

"சிவகங்கை"..

Monday 9 March 2015

காய்கறி அரசியல்.

#அரசியல்_காய்கறி_மார்க்கெட்

மோடி/RSS = தக்"காளி"
சோனியா = பரங்கி"க்காய்
ஜெயலலிதா = கத்திரி"க்காய்
ராகுல் = முருங்"கை"
கெஜ்ரிவால் = சேனை"க்கிழங்கு
ஈ.வி.கே.எஸ் = முட்டைக்கோஸ்(டி)
கேப்டன் = அவரைக்கா(கலா)ய்
கலைஞர் = முள்"ளங்கி
வை.கோ = கருணை"க்கிழங்கு
தமிழிசை = பெருங்"காயம்
அத்வானி/ஸ்டாலின் = பாவ"க்காய்
சீமான் = மர"வள்ளி"க்கிழங்கு
சரத்குமார் = முந்திரிக்கொட்டை
கார்த்திக் = காலி"ப்ளவர்
சுப்ரமணியசாமி = பூ"சனி"க்காய்
ஓ.பி.எஸ் = கருவேப்பிலை 


Friday 6 March 2015

காஷ்மீர் கலாட்டா..

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -1

புதிய திரைப்படம் ஒன்றில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துக் கொண்டு இருக்கிறேன் (தொப்பை இருப்பதால் ரியாலிட்டி) அந்த பட பிடிப்பிற்காக தான்  காஷ்மீர் சென்றேன், இந்தத் தொடரில் அப்படத்தை பற்றியோ கதையைப் பற்றியோ சொல்லப்போவதில்லை..! முழுக்க முழுக்க என் அனுபவங்களே....!

 சில இடங்களில் தவிர்க்க முடியாத இடங்களில் மட்டும் படத்தின் படபிடிப்பு காட்சிகளை பற்றி விவரித்து இருக்கிறேன் அதனால் அந்த கதைக்கு ஏதும் பாதிப்பில்லை என்பதால்...வாங்க போகலாம் காஷ்மீருக்கு....நீங்க ரெடியா?அப்படின்னா  எங்கே உங்கள் ஸ்வெட்டர் மற்றும் கம்பளி..! வெல்கம் டூ காஷ்மீர்...!

சென்னை to டெல்லி ரயில் பயணம் அங்கு 4 நாட்கள் டெல்லியில் பட பிடிப்பு, (இதை தனியாக எழுத உள்ளேன்) பிறகு அங்கிருந்து பேருந்தில் காஷ்மீர் செல்வதாக ஏற்பாடு.. நான் டெல்லியில் இருந்து காஷ்மீர் என்பது வெகு அருகில் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.! ஆனால் மதியம் 3 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பி முழு அரியானா பஞ்சாப் மாநிலங்களை கடந்து அடுத்த நாள் காலை 8 மணிக்கு தான் ஜம்முவை அடைந்தோம்..! 

இந்த இடத்தில் ஒரு கொசுவர்த்தி சுருளை என் முகத்தின் முன் சுழலவிட்டு டெல்லியில் கிளம்பிய இடத்துக்கு போய் வரலாமா...! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 2

நாங்கள் டெல்லியை தாண்டும் போது பானிபட் 40 கிமீ என்று போர்டு தென்பட்டது, இயல்பிலேயே வரலாற்று பிரியனான என் கண்களின் முன்னால் இப்ராஹிம் லோடியும், பாபரும், பைராம்கானும்,அக்பரும் வந்து போயினர்...!

அந்த ஊரை காண ஆவலுடன் இருந்தேன் பானிபட் நெருங்கியவுடன் கண்ணில் பட்டது ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம்...! தாடி வைத்த ஒருவர் உள்ளே நின்றிருந்தார்..! (ஒரு வேளை அவர் பெயர் பாபரோ) தெரு நாய்கள் கூட்டம், வாகன நெரிசல், பரபரப்பாக திரிந்த மனிதர்கள் ஊரெங்கும் இன்றைய நகரச்சூழல்...! பானிபட் என்ற இடத்தின் மீது இருந்த வரலாற்று மரியாதை பட்டென்று அறுந்து போனது..!

கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து டெல்லி மீது போர் தொடுக்க வந்தவர்களை பானிபட்டில் தான் தடுத்து நிறுத்த முடிந்தது என்றால் அன்றே இந்தியாவின் பாதுகாப்பு லட்சணங்கள் கண் முன் வந்து போயிற்று.. ஏனெனில் கைபர் போலன் கணவாய் அங்கிருந்து 2500 கி.மீ...! அடுத்து வரலாற்று சிறப்பு மிக்க பல ஊர்கள் வந்தாலும் பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ஊர்! குருஷேத்திரம்..!!! 

மகாபாரதப் போர் நடந்த ஊர் அல்லவா, அதை நெருங்க நெருங்க ஒரு விதமான சிலிர்ப்பு ஏற்பட்டது...குருஷேத்திராவில்  ஐடியா மொபைல் ஹோர்டிங் எங்களை வரவேற்றது, செல்போன் டவர்களும் திரும்பிய பக்கமெல்லாம் ஏர்டெல், வோடபோன், டொகோமோ விளம்பரங்களும் ஒரு வேளை கிருஷ்ணர் இப்போது வந்தால் பாஞ்சஜன்யத்துக்கு பதில் ஒரு மிஸ்டு கால் கொடுத்து போரை ஆரம்பித்து வைத்திருப்பார் என்று தோன்றியது...! 

நல்லவேளை கீதோபதேச நினைவுச் சிலை வைத்திருந்தார்கள்... கீதை தந்த ஊரில் போதையோடும் சிலர் தென்பட்டனர்...!இனி அடுத்த ஊர்கள் எப்படி இருந்தாலும் பார்க்கபோவதில்லை என எண்ணமும் உறுதியும் குருஷேத்திரத்தில் உதிக்க பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்தேன்..! அதாவது தூங்கினேன்...!

கொசுவர்த்தி சுழல் ஸ்டாப்.. (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 3

ஜம்முவில் உள்ள பஞ்சாபி தாபா ஒன்றில் பிரமாதமான நான் மற்றும் சப்ஜியுடன் மிகப் பிரமாதமான மலாய் லஸ்ஸியுடன் காலை உணவு முடிந்து சரியாக 9:30க்கு காஷ்மீர் கிளம்பினோம்...! ஜம்மு காஷ்மீர் ஒரே மாநிலம் என்றாலும் ஜம்முவில் இருந்து காஷ்மீர் மலை வழியாக 300 கி.மீ. அடிவாரம் தான் ஜம்மு .. இரு இடங்களிலும் அரசு செயலகங்கள் அமைந்த இடம்.. சரி வாங்க மலைப்பயணம் போகலாம்...!

54 கிமீ தூரம் உள்ள கொடைக்கானலே 3 மணிநேரம் எனும்போது 300 கி,மீ மலைப்பயணம் எவ்வளவு நேரம் என்பதை ஊகித்து கொள்ளவும்..! முதலில் நம் கொடைக்கானல் போலத்தான் அந்த பயணம் இருந்தது போகப்போகதான் இமயத்தின் பிரமாண்டம் புரிந்தது.. சாலை விளிம்பு பள்ளங்கள் 2000 அடி 5000 அடி என சரேல் சரேல் என செங்குத்தாக இறங்கி வைகுந்தத்தில் முடிந்தன, அருகில் வைஷ்ணவி கோவில் மலையை டூவீலர் ஓட்டும் போது சாமி கும்பிடும் ஸ்டைலில் வணங்கி உயிர் பிச்சை கேட்டுக் கொண்டோம்..! 

வட இந்திய டிரைவர்கள் மிக மிக அவசரமானவர்கள் போலும் இந்த அபாயகரமான சாலையில் 100 கி.மீ வேகத்திற்கு குறையாது மலை ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர்...! மலைப்பாதையில் கடை பிடிக்கும் எந்த ஒரு விதிமுறையும் அங்கு இல்லை ஒரு வேளை அந்த அதல பாதாளத்தில் அதை தள்ளிவிட்டு விட்டார்கள் போல..! திரும்பிய இடமெல்லாம் ராணுவம்..! 

ராணுவத்தில் இத்தனை சீருடையா,எண்ணி எண்ணி வியக்கலாம்...! ஏராளமான செக்போஸ்ட்டுகள் டீக்கடையில் நின்று டீ சாப்பிடும் போது சர்வ சாதாரணமாக  AK 47, AK56, ராக்கெட் லாஞ்சர், எல்லாம் சுவற்றில் சாய்த்து வைத்து விட்டு எங்களோடு டீ சாப்பிட்டு கொண்டிருந்தனர் ராணுவர்கள்...! நேற்று கூட பக்கத்து கிராமத்தில் துப்பாக்கி சண்டை நடந்தது என்ற போது மிச்ச டீயை கீழே ஊற்றிவிட்டு அவசரமாக கிளம்பினோம்..! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 4


காஷ்மீர் மலைப் பயணத்தில் நீங்கள் எதாவது ஒரு இடத்தில் இறங்கி புகைப்படம் எடுத்தாலோ 5 நிமிடத்திற்கு மேல் நின்றாலோ மலைகளில் இருந்து ராணுவத் தலைகள் முளைக்கும்.! ஆனால் அவ்வளவு சினேகமாக பழகுகிறார்கள். என்னை ஒரு ராணுவர் நீங்கள் எந்த ஊர் என்ற போது மதராஸ் என்றேன்.! ஓ சென்னை சூப்பர் கிங்ஸ் என்றார்.! இதுவரை மதராஸ் மதராஸி என்று அழைத்தவர்கள் ஐபிஎல் மூலம் நம்மை சென்னை என்று ஒப்புக்கொண்டது மகிழ்வாக இருந்தது...!

மலைப்பயணம் அருமையாக இருந்தது ஒரு 100 கி.மீ மலை ஏறியதும் எல்லாம் விமான காட்சி தான்.. அதிலும் கரை புரண்டு ஓடும் நதி ஒன்று 1500 அடி பள்ளத்தில் நம்மோடு பயணித்து வரும் அனுபவம் அடடா... திடீர் வளைவுகள், பாறைகள் உருண்டு வரும் பகுதி, அபாயகரமான பள்ளம் என்ற அறிவிப்புகள் வயிற்றுக்குள் சாப்பிட்ட லஸ்ஸியை கரைத்து கொண்டிருந்தது...! 

இங்கே நமது டிரைவர் பற்றி... பெயர் சந்திரகாந்த் பண்டிட்.! காஷ்மீரி பண்டிட் அரசியலால் காஷ்மீரில் இருந்து வெளியேறிய பல லட்சம் குடும்பங்களில் இவர் குடும்பமும் ஒன்று ஜம்முவில் இருக்கிறார் வாய் நிறைய பாண் மணக்க ஒரு இடத்தில் கூட அவர் ஹார்ன்  அடிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது 15 வருடங்களாக இந்த பாதையில் வண்டி ஓட்டுகிறாராம்..! 

இதெல்லாம் என்ன பள்ளம் இனி ஒரு 50 கி.மீக்கு அப்புறம் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரம் மிக மிக அபாயகரமான பள்ளம் தான் அதை ஜாக்கிரதையாக கடப்பது தான் சவால் என்றார்..! இதற்கிடையே இந்திய ரயில்வே மலையை குடைந்து ரயில் பாதைகளை அமைத்துக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது ...! ( தற்போது வேலை முடிந்து திறந்து வைக்கப்பட்டுவிட்டது) டிரைவர் சொன்ன இடம் வர வர ஆங்காங்கே மலைச்சரிவில் உருண்டு கரப்பான் பூச்சிகளாய் கிடந்த லாரிகளை பார்த்ததும் எங்கள் கண்ணில் பூச்சி பறந்தது...!

நீங்க சொன்ன இடம் இது தானா என்றேன் ஆமா இது தான் ஆரம்பபகுதி இன்னும் கொஞ்ச நேரம் போனால் தான் அந்த அபாயகரமான பாதை என்றவர் மலையில் ஓரமாக ஒரு தாபாவில் நிறுத்தினார்..! நாங்களும் சிரம பரிகாரங்களை முடித்து விட்டு வண்டி ஏற வந்தோம் நம்ம பண்டிட் அண்ணனை காணோம்..!

அவரை தேட ஆரம்பித்தோம்.. பின் புறம் டிரைவர்கள் தங்குமிடம் இருந்தது..! அங்கு சென்று பார்த்தோம் அங்கு.... சக டிரைவர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் அண்ணன் பண்டிட்...! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 5

எங்களைப் பார்த்ததும் பண்டிட்...! தோ மினிட் பய்யா என்றபடி மிச்ச சரக்கை (கிட்டத்தட்ட 100மிலி) படாரென க்ளாசில் கவிழ்த்து தண்ணீர் ஊற்றி சகாக்களிடம் பாட்டம் அப் சொல்லி சரேலேன வாய்க்குள் கவிழ்த்துக் கொண்ட போது எங்கள் வயிறு எரிந்தது..! 

வெளியே வந்ததும் 4 பொட்டலங்களை பிரித்து வேறு வாயில் போட்டும் கொண்டார் (மாவா)  இப்போது அவரிடம் இருந்து மதுவும் மாவாவும் கலந்து ஒரு மணம் வீசியது..! இந்த ப்ளேவரில்  AXE ஸ்பிரே தயாரித்தால் ஒரே நாளில் அந்த கம்பெனி திவாலாகிவிடும் என்று என்னால் அடித்து சொல்லமுடியும்...! வண்டியில் வந்தவர்கள் அனைவரும் பீதியில் இருந்தோம்..! 

இவரை ஏற்பாடு செய்த ஆளிடம் எங்கள்  டைரக்டர் போனில் தொடர்பு கொண்டு புகார் செய்தார்..! எங்களுடன் வந்திருந்த பெண்கள் (ஹீரோயின் மற்றும் அவரது அம்மா) வண்டியில் இருந்து இறங்கிவிட்டார்கள்..! இத்தனைக்கும் எங்கள் வண்டியில் வந்த மூவருக்கு அருமையாக டிரைவிங் தெரியும் என்ற போதும் அந்த அபாயகரமான பகுதியை கடக்க தயங்கினார்கள்..!

பண்டிட் கொஞ்சமும் அசரவில்லை அந்த இடத்தை நான் கடக்கிறேன்.! மது சாப்பிட்டு விட்டு இங்கு நான் பலமுறை கடந்துள்ளேன்.! இது எனது 15 வருட அனுபவம் என்றார்..! இதற்குள் அனைத்து டிரைவர்களும் அவருக்கு ஆதரவாக வர வேறு வழியின்றி பயணத்தை தொடர சம்மதித்தோம்.! 

படாரென்று கூலிங் வாட்டர் பாக்கெட்டை கடித்து முகத்தில் தெளித்து கொண்டார் பண்டிட்..! முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு வாய் கொப்பளித்து வண்டியை கிளப்பினார்.. திகிலுடன் நாங்களும் ஏறினோம்.. (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 6


பண்டிட் இது வரை வண்டி ஓட்டியதற்கும் இதற்கும் நிறைய வித்யாசம் இருந்தது ஒரு குலுங்கல் கூட இல்லாமல் வெண்ணெய்க்குள் இறங்கிய கத்தி போல் வண்டி கிளம்பியது..! நான் முன் சீட்டில் அவருடன்..! என் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது..! ஒரு சிறுத்தை இரையை பார்ப்பது போல் இருந்தது அவர் பார்வை..! 5 நிமிடம் அந்த பாதைக்குள் வந்தோம்.!

கிறுக்கு பிடித்தது போல் இருந்தது சத்தியமாக 2000 அடி ஆழம் கண்ணுக்கு எட்டியவரை எங்களுக்கு இடது புறம் பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்கு, பள்ளதாக்கு, பள்ளதாக்கு... என போட்டு தாக்கியது.. அடுத்த மலை என்பது தென்படவே இல்லை 25 கிலோ மீட்டர்கள் இது தான்... ஹீரோயின் மயங்கி விட்டது போல கண்ணை மூடி அப்போதிருந்தே நடிக்க தொடங்கினார்.நம் பண்டிட்டின் சிறுத்தை கண்கள் சாலையில் மட்டுமே இருந்தது!

20 நிமிட பயணம் அது ஆனால் இன்று நினைத்தாலும் என் முதுகு தண்டில் அண்டார்டிகா தெரியும்..! அனைவரும் பாதி நேரம் கண்களை மூடியபடி தான் பயணித்தேன்..! திடீரென்று வண்டி குலுங்கியது அனைவரும் அலறினோம்... (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 7

குலுங்கிய வண்டியில் எங்கள் அலறலை நிறுத்தியது அண்ணன் பண்டிட்டின் குரல் நீங்க சாப்பிடுற இடம் வந்தாச்சு என்றார்.! ஆம்..! அந்த அபாயகரமான இடத்தை கடந்து நாங்கள் சாப்பிடும் இடத்தை அடைந்திருந்தோம்.. எங்கள் இயக்குனர் ஓடிப்போய் பண்டிட்டை கட்டிக் கொண்டார்..! நீ பெரிய ஓட்டுனண்டா என்ற போது சிரித்துக் கொண்டே பண்டிட் சொன்னது.. 

ஸார் நான் காலையிலேயே சரக்கு அடிச்சுட்டேன் இப்ப நீங்க பாத்ததால இது பெருசாயிடுச்சு என்றார்!குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது எவ்வளவு தவறு என்றாலும் இது போல பயணங்களில் அவர்களது நம்பிக்கை கிறுக்குத்தனமானது என்று தான் தோன்றியது.! ஆனால் இது தான் அங்கு இன்றைய ஓட்டுனர்களின் நிலை.

அதுவும் சில வடஇந்திய டிரைவர்கள் யோக நிலையில் தான் வண்டி ஓட்டுகிறார்கள் இது சரியா என ஓட்டுனர்கள் தான் சொல்ல வேண்டும். பிறகு ஒரு மணிநேரம் நாங்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்ப எங்கள் கைடே வண்டி ஓட்ட ஆரம்பித்தார். பின் சீட்டில் காஷ்மீரி உளறல்களுடன் தூங்கிக்கொண்டிருந்தார் பண்டிட்..! 

அவர் வண்டி ஓட்டுவேன் என்றுதான் சொன்னார் ஆனால் இனி ரிஸ்க் எனும் ரஸ்க் சாப்பிட விரும்பததால் நம்ம கைடே வண்டி ஓட்டினார்..!150 கி.மீ தாண்டியதும் காஷ்மீரிகளின் கிராம வாழ்க்கை தெரிய ஆரம்பித்தது..! ஆடு வளர்ப்பது மிக முக்கியம்..! நம்ம ஊர் ஆடுகள் போல அல்ல அங்கு.

அத்தனையும் கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகள் குறிப்பிட்ட காலத்தில் அவற்றை கீழிருந்து மேலே குளிருக்கு அழைத்து செல்ல வேண்டும்..! அப்போது தான் அந்த உரோமம் வளருமாம்..! நீங்கள் கூட்டமாக எவ்வளவு ஆடுகள் பார்த்து இருப்பீர்கள்? 100, 200,500, 1000,2000? நான் பார்த்தது எவ்வளவு தெரியுமா?! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 8

கிட்டத்தட்ட அந்த பயணத்தில் 1 இலட்சம் ஆடுகள் நான் பார்த்து இருப்பேன்..! ஒவ்வொரு ஆட்டுமந்தையிலும் குறைந்தது 5000 ஆடுகள் இருக்கும்..! அதற்கு நம்ம ஊரு கீதாரி போல ஒருவர், அவரது உதவியாளர் இருவர் இவர்களுக்கு சமைக்க 3 பேர் மொத்தம் 6 பேர் குழு! கட்சி மாறக்கூடிய எம் எல் ஏக்களை அழைத்து செல்வது போல் அதை பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்..! அப்படியும் சில ஆடுகள் பள்ளத்தில் தாவி ஓடிவிடுமாம்..! (கேப்டன் கவனத்திற்கு)

வெறும் விசில் சப்தத்திலேயே அத்தனை ஆடுகளையும் வழி நடத்தி செல்கிறார்கள்..! 2000 ஆடுகள் சாலை நடுவே சென்று கொண்டு இருக்க எங்கள் வண்டி வழி கேட்டு ஹாரன் அடிக்க அந்த கீதாரி ஒரு விசில் கிக்கிக்கிக்கிக்கி என்று அடித்தவுடன் 5 வினாடிகளில் அத்தனை ஆடுகளும் வண்டிக்கு வழி விட்டு ஒதுங்கியது ஆச்சர்யம்...! 

அம்மாவைக் கண்டஅதிமுகவினரைப் போல் அவ்வளவு பணிவு, பயம்..!அடுத்து மலைக்குகை பயணங்கள்..! நீளமான இருள் குகைக்குள் பயணம் சிலிர்ப்பூட்டும் பயணங்கள்..! இந்த குகை வாசலில் ராணுவத்தினரின் செக்போஸ்ட் உள்ளது, இங்குதான் அந்த ஆட்டு மந்தைகள் காத்திருப்பில் வைக்கப்படுகிறது..! 

அரசியல் கூட்டணிக்கு காத்திருப்பது போல ரொம்ப நேரம் காக்க வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்த மந்தைகளை அந்த கணவாயில் அனுமதிக்கிறார்கள்..! திடீரென்று சூழும் இருள் பிறகு வெளிச்சம் என அற்புதமான பயணம் அது..! (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 9

கார்கில், லே, லடாக், போன்ற ஊர்களின் தூரத்தை குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளை பார்க்கும் போது நாம் எல்லையில் இருக்கிறோம் என்பது பெருமிதமாக இருந்தது.. சாலையோரம் எல்லா கடைகளிலும் கிரிக்கெட் பேட்டுகள் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். காஷ்மீர் வில்லோ என்ற மரத்தில் செய்யப்படுபவை கிரிக்கெட் பேட்டுகள் என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன்..!

காஷ்மீரை நெருங்க நெருங்க நம்ம சென்னை ரோடுகளில் உள்ள கும்பகோணம் காபி கடை போல குங்குமப்பூ கடைகள் தென்படுகின்றன..! இடையில் சாப்பிட நிறுத்தும் கடைகளில் தந்தூரி ரொட்டிகளும் தட்டைப்பயிர் க்ரேவியும் அற்புதம்..!
எல்லா கடைகளிலும் ப்ரெட் ஆம்லெட் கிடைப்பது ஆறுதல்...! இத்தனை தூரத்திலும் தொடர்ந்து கூட வரும் நெட் வொர்க் BSNL மட்டுமே...! 

ஹட்ச் நாய் விளம்பரம்  BSNL க்கு தான் பொருந்தும்..! காஷ்மீர் செல்பவர்களுக்கு இந்த நெட் வொர்க்கை பரிந்துரைக்கிறேன்...! இது இருந்தால் நீங்கள் நாராயணசாமி போல் பேசலாம் வேறு நெட்வொர்க் எனில் நீங்கள் மன்மோகன் தான்...!ஒரு வழியாக ஶ்ரீநகர் அடையும் போது மணி 7..! எங்களுக்கு தங்க ஒதுக்கப்பட்ட படகு வீடு மெஜஸ்டிக்..! தால் ஏரிக்குள் இருந்தது...

தால் ஏரி ஒரு ஏரி மட்டுமல்ல அது மிதக்கும் சிறு ஊர் அங்கு தனி உலகமே இருக்கிறது..! இரவில் வெளிச்ச புள்ளிகளில் ஏராளமான படகு வீடுகள் அசைந்து கொண்டிருப்பது தெரிய நதியில் படகுப் பயணம்...! இரவில் அதன் அழகு தெரியவில்லை..! போட் நிறுத்தம் 9 தான் எங்கள் படகு வீட்டுக்கு அருகில்..! ஒரு வழியாக அந்த படகு வீட்டிற்கு வந்தோம். இது படகா அல்லது வீடா.! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -10


அந்த படகு வீட்டில் 5 இரட்டை படுக்கை அறைகள், சமையலறை, பணியாள், வரவேற்பறை, நீண்ட லாபி, டிஸ்கஷன் அறை, பெரிய டைனிங் ஹால், ஜிம், என சகல வசதிகளும் கொண்ட படகு வீடு அது..! நல்ல குளிர் அடித்து கொண்டு இருந்தது, இரண்டு நாள் பயணக்களைப்பு வேறு..! ஓடிப்போய் வெந்நீரில் சுகமாக குளித்து விட்டு வந்த போது அடுத்த ஆச்சர்யம்..!ஆவிபறக்க டைனிங் ஹாலில் ஏராளமான உணவு வகைகள்..! வாவ்..! ஒரு உற்சாக குரல் எழுப்பினேன்.!

 ஏன்னா எல்லாம் நம்ம ஊரு சாப்பாடு..! வெஜிடபிள் சூப்,பூப்போல பாசுமதி அரிசிச்சாதம், பருப்பு நெய், பூண்டுப்பொடி, பூசணிக்காய் சாம்பார், அப்பளம், உருளைக்கிழங்கு காரக்கறி, பீன்ஸ் அவரைக்காய் பொரியல், சுண்டைவத்தல் புளிக்குழம்பு, மிளகு ரசம், தயிர், ஆவக்காய் ஊறுகாய்,கேட்க கேட்க சூடாக மிளகு வெங்காயம் போட்ட ஆம்லெட் என அமர்க்களப் படுத்தி இருந்தார்கள்..! திவ்யம்..!

அடுத்த நாள் படப்பிடிப்பு இல்லை ஆகவே நன்கு ஓய்வெடுக்க சொன்னார்கள்.. நிம்மதியான உறக்கம்.. காலை 8 மணிக்கு தான் எழுந்தேன்.. வெளியே எழுந்து வந்த போது சூடான டீயும் ரஸ்க்கும் தயாராக இருந்தது.! வெளியே டீக்கோப்பையுடன் வந்தேன்... அங்கு நான் கண்ட காட்சி.. ஆஹா.. (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -11

என்னை விடவா ஒரு அழகு இருக்கிறது  என்று தால் ஏரி என்னிடம் கேட்பது போல இருந்தது. ஆஹா.! என் கண் முன்னே கடல் போல தால் ஏரி... வண்ண வண்ணப் படகுகள் பின்னணியில் பனியையே குல்லாய் போட்டது போன்ற இமயமலைத் தொடர்... அதிகாலை பட்டர் பேப்பர் புகைப்பனிப் படலம்..! செல்லமான சூரிய ஒளி, என அந்த சூழலே ரம்மியம்.. இந்தப்பகுதி முழுவதும் தால் ஏரிக்குள் தான் இருக்கப் போகிறோம்.! கவனம்  100 மீட்டர் வரை ஆழம் உள்ள ஏரி..!


தால் ஏரி 8 கிலோ மீட்டர் நீளம் 4 கிலோ மீட்டர் அகலம் கிட்டதட்ட 26 சதுர கி.மீ பரப்பளவுள்ள பிரம்மாண்ட ஏரி, சில இடங்களில் அம்மாவை கண்ட அமைச்சர்கள் போல கூனிக் குறுகியும்,சில இடங்களில் திமுக மாநாடு போல் பிரம்மாண்டமாகவும் விரிந்திருக்கும் நீர்அழகி..! இந்த ஏரிக்குள் 4 வார்டுகளும் அதற்கு கவுன்சிலர்களும் இருக்கிறார்கள்...!


காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள், இறைச்சி, ஆடைகள், அணிகலன்கள், குங்குமப்பூ, தையற்கடைகள், ரீசார்ஜ் கூப்பன்கள், ப்யூட்டி பார்லர்கள்,பெட்ரோல் பங்குகள், பூங்கொத்து கடைகள், கைவினைப் பொருட்கள், பலசரக்கு கடை, பால் விற்பனை, ஓட்டல்கள், டீக்கடைகள் போன அனைத்தும் ஏரிக்குள் உள்ள மார்க்கெட்டில் உள்ளது..!கரையை விட விலை அதிகம்..! 


தி.நகரில் பெரிய கடைகளுக்கு போகும் முன் வழிமறிக்கும் நடை பாதை கடைக் காரர்கள் போல இங்கும் நடமாடும் படகுக் கடைகள் உள்ளன..! நாம் படகில் பயணிக்கும் போதே நம் படகை நெருங்கி வந்து லாவகமாக நம்மோடு இணைந்து துடுப்பு செலுத்தி வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள். அவருக்கு தமிழருவி மணியன் போல நம் படகோட்டியும் உதவுகிறார்..!


நான் மேலே சொன்ன அத்தனையும் படகுக் கடையிலும் கிடைக்கும்..! பேரம் பேசும் நம் ஊர் பெண்கள் தான் இந்த வணிகத்திற்கு லாயக்கு...! ஏனெனில் 1 கிராம் குங்குமப்பூ 100 ரூபாய் 10 கிராம் ஆயிரம் ரூபாய், நான் பேரம் பேசி 500 ரூபாய்க்கு வாங்கினேன்.! மறுநாள் அதே 10 கிராமை 200ரூபாய்க்கு வாங்கி என் முகத்தில் குங்குமத்தை பூசினார் ஹீரோயின் அம்மா..! (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -12

படகில் விற்கும் பொருட்களுக்கு வாய்க்கு வந்தபடி விலை வைத்து இருக்கிறார்கள். காஷ்மீர் செல்பவர்கள் முதலில் வாங்க வேண்டிய பொருட்களை நோட்டம் விட்டு  பல இடங்களில் விலை விசாரித்து பிறகு ஷாப்பிங் செய்வது நலம்.படகில் குங்குமப்பூ வாங்கவே கூடாதாம், எங்கள் ஓட்டல் பணியாள் விக்ரம் சிங் சொன்னார்..!


ஏன் என்றோம்.. ?அது மலிவான தரம் 10 கிராம் 50 ரூபாய் தான் என்ற போது ஹீரோயின் அம்மா முகத்தில் சேம் கும் கும்...! எனக்கும் குபீரென மகிழ்ச்சி பொங்கி பெருக்கெடுத்து ஓடி தால் ஏரியில் கலந்தது..! இந்த ஏரியிலும் ராணுவத்தின் அதிநவீன ஆயுதம் தாங்கிய படகுப் பிரிவு ரோந்து வருகிறது.


ஏரியின் நடுவில் பிரம்மாண்டமான ராணுவப் படகுத்துறை உள்ளது.. விபத்துகள் ஏற்பட்டாலும்  விரைந்து வந்து உதவுகிறார்கள் ராணுவர்கள்.! அங்குள்ள போக்குவரத்து படகுகள் ஷிகாரா என்று அழைக்கப்படுகிறது இதற்கு நீர்ப்பறவை என அர்த்தமாம்.!அங்குள்ள வீடுகளில் கட்டாயம் 2 படகுகள் இருக்கின்றன.!


அனைவருக்கும் அந்த தால் ஏரி தாய் போல அங்குள்ள குழந்தைகள் சர்வ சாதாரணமாக அதில் குதித்து நீச்சலடிக்கிறார்கள்..! இவ்வளவு பெரிய ஸ்விம்மிங் பூலை அம்பானி கூட கட்டமுடியாது..! பொறாமையாக இருந்தது..!  பெண்கள் தங்கள் பிள்ளைகளை படகில் அழைத்து சென்று பள்ளியில் விட்டு வருகிறார்கள்.!


தரையோ தண்ணீரோ இந்த வழக்கம் பெண்களுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயல்பு போலும்...! மாலை ஆண்கள் அழைத்து வருகிறார்கள் அவருக்கு இறைவன் கொடுத்த வரம் போலும்.! (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -13



இவ்வளவு சிறப்புள்ள தால் ஏரியின் பழைய முகமே வேறு என்றார்கள்.. ஆம் இப்போது அதன் பரப்பில் பாதிக்கும் மேல் பாசி பிடித்து பாழ்பட்டு கிடக்கிறது.! 

அதன் பழைய அழகு போய் மார்கெட் இழந்த கதாநாயகி போல பொலிவின்றி கிடக்கிறது... திரும்பிய பக்கமெல்லாம் பாசி ஒருபக்கம் அழித்துக் கொண்டு வருவதற்குள் மறு பக்கம் வளர்ந்து விடுகிறது.!


காஷ்மீர் அரசின் பெருங்கவலையே இதை தூய்மை படுத்துவது தான்.! இப்போது ஒரு கிலோவுக்கு 1 ரூபாய் திட்டம் போட்டுள்ளார்கள்... அதாவது ஒரு கிலோ பாசிகுப்பையை நகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தால் 1 ரூபாய் கிடைக்கும்..! சராசரியாக 10 மணி நேரம் படகில் போய் 10 டிரிப் அடித்தால் 1000கிலோ குப்பையை அள்ளி தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்..!


இந்த திட்டம் நன்கு பயனளிப்பதாக சொன்னார்கள்..! தால் ஏரி மார்க்கெட்டுக்குள் ஒரு விசிட் அடித்து பார்க்காமல் திரும்பாதீர்கள்.! படகில் ஏறும் போதும் இறங்கும் போதும் ஜாக்கிரதை  ஏனெனில் நாங்கள் போன 3 வது நாளில் படகில் இருந்து இறங்கிய பெரியவர் கால் தவறி ஏரிக்குள் விழுந்து விட்டார்..! 


உடனடியாக காப்பாற்றினர்..! பிறகு தான் தெரிந்தது தினசரி இது போல 100 பேர் விழுகிறார்களாம் ஜாக்கிரதை.! நானும் விழுந்தேன் ஏரியில் அல்ல குதிரை மீது இருந்து...! அது... (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -14 குல்மார்க் (குல்மாக்)


குல்மாக் ஶ்ரீநகரில் இருந்து 52 கி.மீ தூரம்..! கிட்டத்தட்ட சென்னை-செங்கல்பட்டு தொலைவு இதில் மலைப்பயணம் 30 கிலோமீட்டர்கள் நம் ஊட்டி போல இருக்கும்..! குல்மாக் வந்தவுடன் ஒரு கணம் விசிலடிப்பீர்கள்..! எதிரே பிரும்மாண்டமான பனிமூடிய இரு சிகரங்கள் வரவேற்கும்..! ஒன்று அபஃர்வாட் சிகரம் மற்றொன்று கோங்தாரி சிகரம்..!


அபஃர்வாட் 4200 மீட்டர் உயரமும் (13,780 அடி) கோங்தாரி 3,747 மீட்டர் உயரமும் (12,293அடி) கொண்டவை.கிட்டத்தட்ட பாதி எவரெஸ்ட் உயரம்.! அது மட்டுமின்றி இங்குள்ள மிகப் பெரிய அட் ராக்ஷன் ஆசியாவின் மிக உயர்ந்த கேபிள் கார் சுற்றுலா..! உலகின் இரண்டாவது மிக உயரமான கேபிள் ஸ்டேஷன் அமைந்துள்ளது..!


குல்மாக் முற்கால மன்னர்கள் யூசுப்ஷா மற்றும் ஜஹாங்கீரின் கோடை வாசஸ்தலமாக இருந்தது..! அவர்கள் ஓய்வெடுக்க விடுமுறையை கழிக்க இங்கு அடிக்கடி வருவார்களாம்.! குல்மாக்கின் பழைய பெயர் கெளரிமாக்.! சிவ பெருமானின் மனைவி பெயர்...! இதை குல்மாக் என மாற்றியவர் யூசுப் ஷா தான்..! இதற்கு அர்த்தம் ரோஜாக்களின் பிரதேசம்..!


கெளரிமாக் குல்மாக் ஆனதை நல்லவேளை யாரும் கண் "மோடி"த்தனமாக இதுவரை எதிர்க்கவில்லை என்பது ஆறுதல்..! கோங்தாரியில் கேபிள் கார் செல்லும் இடம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது..! முதல் நிறுத்தம் காண்ட்லா இது 2,600 மீட்டர் உயரம் 8,530 அடி..! இரண்டாவது நிறுத்தம் கோங்தாரி வேலி 3,747மீட்டர் உயரம் 12,293 அடி..! சிலிர்ப்பூட்டும் கேபிள் கார் பயணம் அது.. (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -15

ஒரு கேபிள் காரில் 6 பேர் ஏறலாம் மெதுவாக தரையோடு கிளம்பி ஜிவ்வென்று மேலே ஏறும்.. வயிற்றுக்குள் லட்சம் பிள்ளையர் எறும்புகள் ஊறும், காதை அடைக்காவிட்டால் கிர்ரென்று இருக்கும்..! ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் சுற்றிலும் பனிமலைக்கு நடுவே நாம் இருப்போம்...! 


நான் அப்போது என்னை ஒரு பருந்து போல நினைத்துக் கொண்டேன்.. சாகசப் பிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது திகில் சிலிர்ப்பு அனுபவம்..!காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் இதில் மதியம் 3மணிக்குள் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.பெரியவர்களுக்கு 500 ரூபாயும் சிறுவர்களுக்கு 250 ரூபாயும் கட்டணம் ராணுவத்தினருக்கு சிறப்பு சலுகை உண்டு..!


முதல் நிறுத்தம் 9 நிமிடப்பயணம், இரண்டாவது 12 நிமிடப்பயணம்..! இதய நோய், ஆஸ்த்துமா உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை..! திங்கள் அன்று விடுமுறை...! 

வானிலை சரியில்லாத அன்றும்  இயங்காது..! 12000 அடியில் பெரிய பனிச்சறுக்கு மைதானத்தில் உங்களை இறக்கி விடுவார்கள்..! 


அங்கே விளையாட ஆரம்பிக்கும் உங்கள் பிள்ளைகள் இந்த இடம் பிடிக்கவில்லை என்று சொன்னால் இலவசமாக நான் கூட்டிச்செல்கிறேன்..! இதற்கு அடுத்தபடியாக நிறுத்தம் 3 ஒன்று உள்ளது..! அதற்கு கேபிள் கார் இல்லை அது சாகசமோ சாகசம் நிறைந்த பாதை. மிக மிக அபாயகரமான பாதை. விதி வலியது அல்லவா.! எங்கள் படபிடிப்பு அங்கு தான்... (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -16

அந்த அபாயகரமான பாதையில் குதிரை மூலம் தான் மலை ஏற முடியும் அதுவும் கரடுமுரடான பாதை..! அந்த இடத்திலிருந்து மேலே செல்ல நூற்றுக்கணக்கான குதிரைகளும் அதன் கைடுகளும் இருந்தனர் ஒரு ஆள் மேலே போய் வர 2200 ரூபாய்..! மேலே உச்சி என்பது நான்சொன்ன 12ஆயிரம் அடி.!


பனிசறுக்கு மைதானத்தின் பக்கத்து வீடு.! அதாவது அடுத்த மலை அதை விட இது 1000 அடி உயரம் அதிகம்..! காட்டாறுகள், பனிச்சகதி, வழுக்கும் பனி,(இது கண்ணாடி மாதிரி இருக்கும்) கால் வச்சா அவ்ளோ தான் சர்ருன்னு இழுத்து விட்டுடும் இத்தனையும் சொல்லி விட்டு போகலாமா என்றார்கள்..! 


நானும் கைப்புள்ள கணக்கா வாண்ட்டா வண்டி (குதிரை) ஏறிட்டேன்..! இந்த வழியில் மேலே போகாதீர்கள், இந்த பயணம் சட்டப்பூர்வமானதல்ல, உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை போன்ற அறிவிப்பு பலகைகளை அலட்சியம் செய்துவிட்டு பலர் மலை ஏறிக் கொண்டிருந்தனர் அதில் அதிகம் பயமுறுத்தியது கைடு சொன்ன ஒரு வார்த்தை பாகிஸ்தான் இங்கிருந்து 55கி.மீ தான் என்று.!


ஏதோ உசிலம்பட்டிக்கு போற மாதிரி சொன்னார்..! ஒரு கணம் அனைவரும் தயங்க, அட அது அந்த மலைக்கு அந்த பக்கங்க என்றார்.! திரும்பி வரும் வரை நான் மலை உச்சியை பாத்துகிட்டே வந்தேன் யாராவது பாகிஸ்தான் காரங்க வர்றாங்களானு.! ஆனா கடைசி வரைக்கும் யாரும் வரலை.!


ஒரு வேளை தூரத்தில் பைனாகுலர் வழியாக என்னை அவங்க பார்திருந்தா நம்ம கேப்டன் தான் வர்றாருன்னு நினைச்சு பயந்துருப்பாங்க போல. குதிரைப்பயணம் பற்றி சொல்வதற்குள் இந்த தொடர் பெருசா ஆனதால அடுத்த பார்ட்டுல நான் விழுந்த கதை.. (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -17

முதலில் குதிரைச் சவாரி என்பது பற்றி பார்க்கலாம்..குதிரைமீது அமர்ந்து சம தளத்தில் நிலத்தில் ஓட்டுவது வேறு, மலையேறுவது என்பது வேறு..! அதற்கு முன் குதிரை ஏறி அமர்ந்து பார்க்கவும்.பஸ்ஸின் கடைசி சீட்டில் அமர்ந்து குண்டும் குழியுமான சாலையில் பிரயாணம் செய்வது போலவே இருக்கும்..! 

இதுவரை ஓரிரு முறை கொடைக்கானலிலும், மெரினா பீச்சிலும், குதிரை ஓட்டிய அனுபவத்தை தவிர எனக்கு பெரிய அனுபவம் ஏதுமில்லை..! நான் குதிரையில் அமர்ந்திருந்ததே பைல்ஸ் வந்தவன் போல பரிதாபமாக இருந்தது..! ஒரு புறம் சாய்ந்தே சைக்கிள் பழகுபவன் போல அமர்ந்திருந்தேன்...! 

மற்றவர்களுக்கு எல்லாம் மட்டக் குதிரை தந்து விட்டு எனக்கு மட்டும் ஜாதிக்குதிரை தந்தார்கள்.! அதுதான் என் வெயிட் தாங்குமாம், (பின்னே குதிரை மேல யானையை ஏத்துனா) அது நல்ல உயரம்...! குதிரையின் முதுகு விளிம்பே என் காதுக்கருகே இருந்தது அதன் மீது ஏறி அமர்ந்து பார்த்தேன்..! 

மொட்டைமாடி கைப்பிடி சுவர் மீது வெளிப்புறம் காலை தொங்கப் போட்டு அமர்ந்தது கீழே பார்த்தால் எப்படி இருக்கும்.! அது போல் இருந்தது.. இதில் அது ஆடி அசைந்து நடக்கும் போது நானும் அதற்கு எதிர்த் திசையில் அசைந்து அதன் சேணத்தை சரித்து விட்டேன்.. அதற்கு காஷ்மீரியிலோ அல்லது உருதிலோ அந்த குதிரைக்காரன் என்னை பார்த்து சொன்னது சத்தியமாக நல்ல வார்த்தை கிடையாது என்பது அப்பட்டமாக தெரிந்தது..!

முதலில் சில கிலோ மீட்டர் தூரம் சம தளம் அதிலியே இந்த ஆட்டம்..! அடுத்து மலைப்பாதை ஏற ஆரம்பித்ததும் என் குலை நடுங்கலாயிற்று..!மேடு பள்ளங்கள் பாறைகள் குதிரையே தடுமாறி தான் ஏறுகிறது..! முன்பை விட குலுங்கல் அதிகம்..! என்னால் உட்காரவே முடியவில்லை..! 

உடன் வந்த கைடுக்கு குதிரையை வழி நடத்தி செல்வதை விட அடிக்கடி சரிந்து கொண்டிருக்கும் என்னை தாங்கிப்பிடிப்பது தான் வெறுப்பு போலும்.! அவ்வப்போது குதிரையை குச்சியால் குத்துவது போல என்னையும் குத்திக்கொண்டே வந்தான்..! வந்தது பாருங்கள் ஒரு பெரிய ஏற்றம் அதில் ஏறிய குதிரை ஒரு சிறு பள்ளத்தை ஜம்ப் செய்ய நான் கடிவாளத்தை விட்டு விட தூக்கி வீசப்பட்டேன்.! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -18

குதிரையிலிருந்து நான் தூக்கி வீசப்பட்ட இடத்தில் வலது புறம் பாறைகள் 20 அடி பள்ளம் இடது புறம் புல்வெளி எனக்கு கடன் தந்த நல்ல கடன்காரன் ஒருவன் வேண்டுதல் போல.! நான் புல்வெளியில் விழுந்தேன், லேசான சிராய்ப்பு தான்..! 
இது போல மூன்று முறை விழுந்தேன்.!

ஒரு வழியாக 8000 அடி உயரத்தில் ஒரு டீக்கடையில் சாப்பிட்டு விட்டு பயணத்தை துவக்குகையில் மூச்சு திணற ஆரம்பித்தது. இடையில் காட்டாறு ஒன்று பெரும் வெள்ளப்பெருக்கோடு குறுக்கிட்டது. மணி மதியம் 3 ஆகிவிட இனி உச்சிக்கு போய் திரும்புவது கடினம் என்று அன்று திரும்பி விட்டோம்,மீண்டும் மறு நாள் அதே பயணம்..!

என்னை பார்த்தவுடன் நேற்றைய கைடு எனக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு போய்விட..! ஒரு தெய்வம் வந்தது,அவன் பெயர் ரஹீம் இளைஞன்..! அவ்வளவு அழகாக என் பயம் போக்கினான்.! குதிரை மீது அமர்ந்து மேடு ஏறுவதை விட இறங்குவது அபாயமானது அது உச்சியில் நிற்பவனை பின்னால் இருந்து தள்ளியது போல வேகமாக இருக்கும்.!

வெறும் 15 அடி சரிவு என்றாலும் உயரமான குதிரை மீது அமர்ந்து அங்கிருந்து செங்குத்தாக இறங்குவது அடி வயிற்றில் கத்தி செருகியது போல இருக்கும் அதுவும் இரு புறமும் 200 அடி கிடு கிடு பள்ளம் எனும் போது நினைத்து பார்க்கவும்..! ரஹீம் தான் என் பயம் போக்கினான்..! குதிரை சவாரியின் சூட்சுமம் அதன் சேணத்தில் தான் இருக்கிறது என்றான்..! பாடம் அது..! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -19

குதிரை சேணத்தில் இரு புறமும் கால்களை சரியாக பொருத்தி வைத்து கொள்ளுதல் முதல் படி ,இது சரியா என்பதை குதிரை நடக்கும் போது எழுந்து நின்று பார்க்க வேண்டும்..! கால்கள் சரியாக இருந்தால் தான் எழுந்து நிற்க முடியும்.. ! அதே போல அமரும் இடத்தில் சேணம் அசைய அசைய அதன் திசையிலேயே நமது பிருஷ்டங்களை அசைக்க வேண்டும்..!

நான் எதிர் திசையில் அசைத்து சேணம் அவிழ்ந்தது இப்போது ஞாபகம் வந்தது..! மேடு ஏறும் போது நம் உடலை முன்புறம் சாய்த்துக்கொள்ள வேண்டும் பள்ளத்தில் இறங்கும் போது உடலை பின் பக்கம் சாய்த்துக்கொள்ள வேண்டும்.!ஒரு சிறிய மைதானத்தில் பயண ஓய்வுக்கு நிறுத்தும் போது சொல்லிக்கொடுத்தான்.. 

இப்போது தொடங்கிய பயணத்தில் நான் புது மனிதனானேன்..! மீண்டும் பயணம் ஆரம்பித்த போது குதிரைச் சவாரியின் சுகம் அறிந்தேன்.!அடுத்த 6000 அடிப்பயணம் இனிதானது..! மிக எளிதாக என்னால் குதிரை ஓட்ட முடிந்தது சொல்லிக் கொடுப்பவன் கலைஞனாக இருந்தால் எல்லா கலைகளும் மிகச்சுலபமே.! 

அந்த சூட்சமம் புரிந்து விட்டால் இன்பமே..! எனத் தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்களும் 13000 அடி உயரத்திற்கு கைடு உதவி இல்லாமல் நானே குதிரையை ஓட்டிச் சென்று வந்தேன்.! மலைஉச்சியில் தான் எங்கள் படபிடிப்பு.!

அதில் சுவாரஸ்யம் ஏதுமில்லை.! காட்டாற்று வெள்ளமும் பனிபடர்ந்த உச்சியும் பனிச்சகதியும் பெரிய பிரமிப்பை தரவில்லை குதிரைச் சவாரியைப்போல இந்த இடத்தில் எங்கள் படபிடிப்பு முடிந்தது..! திரும்பிச் செல்லும் போது மீண்டும் குதிரையில் இருந்து விழுந்தேன் இப்போது பலத்த அடியுடன்.. (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 20

குதிரையில் இருந்து விழுவது மிகப்பெரிய வலி..! அதை அனுபவித்தேன் ஒரு சிறு தவறினால்.! அதுவும் நன்கு பழகிய பின்பு சிறிது அஜாக்ரதையாக இருந்தாலும் ஆபத்து என்பதை..! அதை பார்க்கும் முன் என்னை சுமந்த குதிரையை பற்றியும்.. குதிரைகளை பற்றியும் பார்க்கலாம்..!

குதிரைகளை பற்றி நான் படித்தது உண்டு மனிதன் பழக்கும் மிருகங்களிலேயே அன்பை அதிகம் எதிர்பார்க்கும் மிருகம் குதிரை..! குதிரைகளோடு தினமும் பேசவேண்டும் குறைந்தது அரைமணி நேரமாவது, அப்போது தான் அது ப்ரியமாக அதன் எஜமானனிடம் பழகுமாம்...!

மூர்க்கமாகி விட்டால் தன் மேலுள்ள மனிதனை யானையைப் போல் குதிரையும் தள்ளிவிட்டு விடும்.! அம்மா அமைச்சர்களை நீக்குவது போல.! ப்ரியமாக பேசுபவர்களை அப்படித் தள்ளாதாம்.! அதுவும் அதன் முகத்தை கைகளால் வருடிக் கொடுத்து கொண்டே பேசுவது அதற்கு ரொம்பப் பிடிக்குமாம்..! அடுத்து அதற்கு உணவு தருவது..! 

பெரும்பாலும் தன் எஜமானன் கையால் சாப்பிடும் குதிரைகள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்குமாம்..! ரேஸ் ஜாக்கிகள் கூட குதிரை உணவு அருந்தும் நேரத்தில் அங்கு தன் கையால் தான் உணவளிப்பார்கள்..! அடுத்து தண்ணீர் காட்டுவது..! குதிரைக்கு மிகவும் பிடித்தது நீர் அருந்துவது...! 

அதிலும் நாங்கள் மலையேறிய போது காட்டாற்று வெள்ளத்திற்குள் இறங்கி எங்களை அக்கரை சேர்த்த குதிரை மிரட்சியுடன் தான் நீரை பார்த்தது..! ஆனால் அதை கடந்து ஓடை போன்ற பகுதிக்குள் நுழைந்ததும் ஆவலாகப் போய் நீர் அருந்த துவங்கியது..! அதற்கு அது தான் டாஸ்மாக் போலும்..!

நீர் நிலைகளை கண்டதும் கடந்து செல்லாது இரண்டு ஸ்டெப் பின்னாடி நகர்ந்து வாலை தூக்கி மீண்டும் முன்னால் நகர்ந்து முன்னும் பின்னும் முரண்டு பிடித்தால் அதற்கு சரக்கு(நீர்) தேவைப்படுகிறது என அர்த்தம்..! இப்போது அதனை நீர் அருந்த அனுமதித்தால் எந்த சைட்டிஷ்ஷும் இல்லாமல் ஃபுல்லாக குடித்துவிட்டு ஒரு கனைப்பு விக்கல் மாதிரி..!இப்படி அதை சந்தோஷப்படுத்த வேண்டும். (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 21

எனக்கு முதல் நாள் வந்த குதிரையின் பெயர் கல்நாயக்..! கருப்பு குதிரை...! கல்நாயக் தொடர்பு முதல் நாளே முடிந்துவிட்டது..! அடுத்த 5 நாட்களும் என் செல்லம் பாதல்..! பிஸ்கெட் பழுப்பில் இருக்கும் என் அழகு தேவதை..!
இவ்வளவு வெயிட்டில் என்னை என் தாய் கூட சுமந்திருக்க மாட்டாள்...! பாதல் சுமந்தது..! பொதுவாக குதிரைகளின் மொழி அதன் கனைப்புச் சத்தம்..! 

அதிலும் பெண் குதிரைகள் தான் அதில் சிறந்தவை..! ரஹீம் போன்ற குதிரைக்காரர்கள் அதற்கு கனைப்பிலேயே பாஸ்வேர்டு வைத்திருந்தார்கள்..! நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி போல ப்ப்ப்ப்ர்ரூரூவா, ப்ர்ர்ர்ர்ர்ர்ரூவா என்றும் கேரள ஆட்டோ டிரைவர்கள் ஸ்டைலில் ச்ச்ச்ச்ச்ச் என்றும் ஒலி எழுப்புகிறார்கள்..!

இதில் முதல் ப்ப்ப்ப்ர்ரூரூவா வலது என்றும்.. அடுத்த ப்ர்ர்ர்ர்ர்ரூவா இடது என்றும் ச்ச்ச்ச்ச் என்பது மெதுவா போ இப்படி அர்த்தங்கள்..! மிமிக்ரி தெரிந்ததால் வெகு சுலபத்தில் இதை நான் கற்றுக் கொண்டேன்..! ரஹீமுக்கு தான் நான் அவர்கள் பாஸ்வேர்டு மொழியை கற்றது பெரிய ஆச்சர்யம்..! பஹூத் அச்சா பய்யா... என்று சொல்லிக்கொண்டே இருப்பான்..!

பாதலுக்கு காரட் மிகவும் பிடிக்கும் என்றான் ரஹீம்..! 2வது நாள் ஶ்ரீநகரில் இருந்து செல்லும் போதே ஒரு மூட்டை காரட் வாங்கிச் சென்றோம்..! பாதலுக்கு ஏகக் குஷி, உற்சாகமாக கனைத்தாள் எனக்கும் பாஷை இப்போது தெரியுமாதலால் பாதலுடன் காதல் மொழியில் கனைத்தேன்.!அண்ணனும் கனைத்தேன் அவளும் கனைத்தாள் கனைப்பில் கனெக்டானோம்.

தினமும் ஒரு அரை மணி நேரம் அதோடு பேசுவேன் எதாவது... ஏன் அந்த ஓடையிடம் வந்த போது தடுமாறுன, காரட் நல்லா இருந்துச்சா, தண்ணி குடிக்கிறியா இப்படித்தான் என் சம்பாஷணைகள் இருக்கும்..! சில நேரம் தலையாட்டுவாள் சில நேரம் கனைப்பாள்.. அன்று திமிறினாள் ஏன்..? (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 22

கடைசி நாள் மாலை குதிரையை நிறுத்திவிட்டு திரும்பும் போது முன்னங்கால்களை தூக்கி, தலையை சிலுப்பி அடம் பிடிக்கும் குழந்தையை போல உடலை உதறிக் கொண்டாள் பாதல் நாங்கள் ஊருக்கு போகிறோம் நாளை வர மாட்டோம் என்பதை எங்கள் பேச்சுக்களில் இருந்து தெரிந்து கொண்டாள் போலும்..! எப்படிப்பட்ட உள்ளுணர்வு..!

மிருகங்களுக்கு 5 அறிவு என்று இனி யாரும் சொல்லாதிர்கள். அவை நாம் காட்டும் அன்பை பிரதிபலிப்பவை.எனக்கு சேகுவாராவின் சாண்ட்டா குதிரையும், பிருதிவி ராஜனின் சேதக் குதிரையும் நினைவுக்கு வந்து போனது..! ரஹீமிடமும் பாதலிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு திரும்பிய போது யாரும் அறியா வண்ணம் நான் லேசாக அழுதேன்..இங்கு தான் நான் விழுந்த கதை..! 

குதிரையை விட்டு விட்டு திரும்பிய நான் எப்படி குதிரையில் இருந்து விழுந்தேன்? நியாயமான கேள்வி..! நாங்கள் வேன் நிறுத்திய இடம் 3 கி.மீ தூரம்..! வேனுக்கு நடந்து தான் செல்லவேண்டும்.. நாங்கள் ஏறிய குதிரைக்காரர்களின் ஸ்டாண்டு கிழக்கில் வேன் நிற்பது மேற்கில் அங்கு வேறு ஸ்டாண்டு..!

கிழக்கு ஸ்டாண்ட் மேற்கு பக்கம் வராது மேற்கு ஸ்டாண்ட் கிழக்கு பக்கம் வராது யாரோ ஒரு காஷ்மீர் கைப்புள்ள கோடுபோட்டு வச்சுருக்கான் போல..! நடக்க ஆரம்பித்த போது எங்கள் வேன் அருகே செல்ல கொடுக்கிறதை கொடுங்க என்று சில குதிரைக்காரர்கள் வந்தார்கள்..! நாங்களும் களைப்பினால் குதிரையில் போக முடிவெடுத்தோம்..!

அனைவரும் ஆளுக்கொரு குதிரை ஏற, நானும் குதிரை சேணத்தில் கால் வைத்து ஏறி அப்படியே தலைக்குப்புற மறுபக்கம் விழுந்தேன்..! அதாவது குதிரையின் இந்தபக்கம் ஏறி அந்தப்பக்கம் தடாலென விழுந்தேன்.! அது...(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -23

கடந்த 5 நாட்களாக தினமும் ஒரு 8 முறை என்ற கணக்குப்படி கிட்டத்தட்ட 40 முறை குதிரை ஏறி இருக்கிறேன்..! ஒரு தடவை கூட விழலை. இப்ப மட்டும் என்னாச்சு..! செய்த சிறு தவறு இது தான், குதிரையில் இந்த 5 நாட்களாக அதன் இடப்பக்கம் நின்று என் இடது காலை கால் பிடியில் வைத்து வலது காலை தூக்கி ஏறியே பழகி விட்டேன்..இப்போது உல்டா...!

வலப்பக்கம் கால் வைத்து இடது காலை தூக்கி ஏறினேன் உடல் எடையை பேலன்ஸ் பண்ண முடியவில்லை.! விழுந்த வேகத்தில் நல்ல அடி.. என் இடது பக்க தலை தரையில்  மோதியது இங்கும் புல் தரை தான் காப்பாற்றியது அந்த தலையில் பட்ட அடிதான் வேன் ஏறும் வரை வேதனையாக இருந்தது... 

பிறகு காஷ்மீர் திரும்புவதற்குள் வலி குறைந்து விட்டது.. படகு வீடு திரும்பினோம்.. இரவுக் குளியல் முடிந்து உடல் துவட்டும் போது இடது இடுப்பில் சுளீர் என வலித்தது..! உட்கார்ந்தால் வலி இல்லை..!நின்றால் வலித்தது, சரி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சாப்பிட்டு படுத்தேன்.

மறு நாள் காலை எழுந்த போது என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை..! எவ்வளவு முயற்சித்தும் வலது கால் மட்டுமே அசைந்தது..! எனக்கு இடது கால் என்பது உடலிலேயே இல்லை என்பது போல மரத்துப் போய்கிடந்தது.! அசைவற்று கிடந்த என் கால் என்னை பயமுறுத்தியது..! முதுகு தண்டில் சுளீர் வலி! 

என் உயிர்த் தோழன் படத்தில் பாபு என்று ஒரு நடிகர் கதாநாயகனாக அறிமுகமானார் அவரது 4 வது படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் ரிஸ்க் எடுத்து முதுகு தண்டில் அடிபட்டு கடைசி வரை போராடி இறந்து போனது என் ஞாபகத்தில் வந்ததும் எனக்குள் பீதி பெருக்கெடுத்தது.! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 24

ஏனென்றால் எனக்கும் இது 4 வது படம் காலை 7 மணி தான் ஆகிறது டாக்டர்கள் வர வேண்டும் என்றால் படகில் கரைக்கு போய் அழைத்து வரவேண்டும் அன்று பஸ் ஸ்டாண்டில் கதாநாயகனை விரட்டி செல்லும் காட்சி வேறு 8 மணிக்கு கிளம்பினால் தான் படபிடிப்புக்கு சரியாக இருக்கும் அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க நான் மட்டும் படுக்கையில்..!

இன்று வேறு காட்சி எடுக்கலாம் என்றால் மறு நாள் அங்கு பந்த் அதற்கு அடுத்த ஒரு நாள் தான் அன்று நாங்கள் கிளம்பவேண்டும்.. என்ன செய்வது என அனைவரும் யோசித்துக் கொண்டிருந்த போது எங்கள் பணியாள் விக்ரம் சிங் வந்தார்.. என்ன பிரச்சினை எனக் கேட்டார்.. முகத்தின் முன் கொசுவர்த்தி சுருள்... இது தாங்க நடந்தது...!

எல்லாவற்றையும் கேட்டவர்  என்னை கைத்தாங்கலாக படுக்கையில் இருந்து எழுப்பி என் இரு கால்களையும் தரையில் படுமாறு வைத்தார்..! வலது கால் தரையில் பட்ட உணர்வு தெரிந்தது இடது காலில் ஒன்றுமே தெரியவே இல்லை, விக்ரம் சிங் தன் வெறும் காலால் அவரது பின் பாதத்தை என் இடது கால் பெரு விரலில் மிதித்து ஓங்கி அழுத்தினார்...!!!

ஒரு தரம்.. இரு தரம்... மூன்றாவது அழுத்தத்தில் நீர் நிரம்பி இருக்கும் தண்ணீர் தொட்டியின் கீழ்ப்புறம் துணி வைத்து அடைத்து இருப்பார்களே..! அதை பிடுங்கி விட்டால் பாய்ந்து வரும் நீர் போல விர்ரென ரத்த ஓட்டம் என் காலில் பாய்வதை உணர்ந்தேன்..இப்போது காலில் உணர்வு தெரிந்தது..! வெறும் 40 வினாடிக்களில் விக்ரம்சிங் என்னை குணப்படுத்தினர்...!

எப்படி இந்த முறை பற்றி உங்களுக்கு தெரியும் என்ற போது, தால் ஏரியில்  நன்கு நீந்த தெரிந்தவர்கள் குளிக்கும் போது ஸ்விம் ஸ்ட்ரோக் ஏற்படுமாம் அல்லது நீண்ட நேரம் குளிர் நீரில் நீந்தும் போது இப்படி ரத்த ஓட்டம் தடைபடுமாம் அவர்களுக்கு செய்யும் வைத்தியம் தான் இது என்றார் விக்ரம் சிங்..! ஆனால் முதுகில் வலி இன்னும் இருந்தது.. (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 25

என் முதுகு வலியை யூகலிப்டஸ்  எண்ணை கலந்த சுடு நீரில் டவல் நனைத்து ஒரு 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்த பின்பு அந்த வலியும் பறந்தோடச் செய்தார்... விக்ரம் சிங்கை எங்கள் படக்குழுவினர் கட்டிக்கொண்டனர். 1000 ரூபாய் அன்பளிப்பு தந்த போது அன்போடு அதை மறுத்து என்னை அவருக்கு ஆயுள் கடன்காரன் ஆக்கி விட்டார் விக்ரம் சிங்...!

பிறகு படகில் கரைக்கு சென்று முன்னெச்சரிக்கையாக ஆஸ்பிடல் சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது முதுகு தண்டிற்கு சற்று அருகில் எலந்தைப் பழம் அளவு ரத்தக்கட்டு இருந்தது..!அதற்கும் மருந்துகள் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.! காஷ்மீர் பேருந்து நிலையத்தில் தான் படபிடிப்பு..அந்த பஸ்ஸ்டாண்டில் நுழைந்ததும் பீதி கிளம்பியது.!கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுற்குள் நுழைந்தது போலிருந்தது.! 

ஶ்ரீநகர் பஸ் ஸ்டாண்டு..! மக்களின் நடை உடை உருவம் எல்லாம் அப்படி..! தொள தொள பைஜாமா ஓவர் கோட்டு பெண்கள் தவிர்த்து எல்லார் முகத்திலும் நீண்ட தாடி... கருப்பு பர்தாக்கள், சிவப்பு ஜர்தாக்கள், உருது இரைச்சல்கள், கண்ட இடமெல்லாம் ஈரானிய முகங்கள்..!

அந்த பேருந்து நிலையம் தான் காஷ்மீருக்கு வடக்கே உள்ள ஊர்களுக்கு போக இயங்கும் பேருந்து நிலையம்..! அத்தனையும் கிட்டத்தட்ட பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஊர்கள்..! அந்த கிராமத்து மக்கள் தொழில் நிமித்தமாக காஷ்மீர் வந்து போவதால் தான் இங்கு நான் பார்த்த மக்களின் உடையில் நடையில் ஆப்கன் & பாக் கலாச்சாரம் என்பது தெரிந்தது..!

நாளிதழ்களில் அடிக்கடி காஷ்மீரில் துப்பாக்கி சூடு...ராணுவத்தினர் மீது தாக்குதல் என்று நாம் படிக்கும் கார்கில்,பாரமுல்லா ஆகிய ஊர்களின் பெயர்களை தாங்கிய பேருந்துகளை பார்த்தேன்.. அவற்றை பார்க்கையிலேயே எனக்கு அஸ்தியில் புளிய மரமே கரைந்தது..!  (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 26

காஷ்மீர் பாகிஸ்தான் எல்லைப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றிலும் டிரைவர் கண்டக்டர் இல்லாவிட்டாலும் கட்டாயம் துப்பாக்கி ஏந்திய இரண்டு எல்லைப் பாதுகாப்பு படையினர் இருக்கிறார்கள்.! முன்னால் ஒருவர் பின்னால் ஒருவர் என ஒரு பஸ்சிற்கு இருவர்! அவர்களுக்கு ஆயுள் பஸ் பாஸ் எடுத்து தந்து உள்ளார்கள் போல..!அவர்களுக்கும் பஸ் ஓட்டத் தெரியுமாம்..!

அவர்களும் சர்வ சாதாரணமாக தாடை அரித்தால் கைத்துப்பாக்கியாலும்.. முதுகு அரித்தால் AK47 துப்பாக்கியாலும் சொறிந்து கொண்டு, பான் மென்று கொண்டும் பால்வாடிக்கு போகும் கைக்குழந்தைகள் போல் தினமும் பஸ்ஸில் போய் வருகிறார்கள்.! பேருந்துகளில் ஏற்றும் மூட்டைகளை சோதித்து தான் ஏற்றுகின்றனர்..! பஸ் கிளம்பும் முன் கார்கில்.. கார்கில்.. கார்கிலோய்ய்ய்ய்ய் என கத்துவதை தவிர எல்லாம் செய்கிறார்கள்..!

அடுத்து அந்த பேருந்து நிலையத்தின் சுகாதாரம்...! ஒருமுறை அங்கு சென்றால் நீங்கள் நம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு கோவில் கட்டுவீர்கள்..! சர்ஃப் எக்ஸல் நிறுவனம் கறை நல்லது என்ற வார்த்தையை இங்கு இருந்து தான் எடுத்திருப்பார்கள் போல..!அந்தளவிற்கு சுத்தத்திலும் சுகாதாரத்திலும் படு படு படு மோசமாக இருந்தது...!

மொத்த பேருந்து நிலையமே திறந்த வெளி கழிப்பிடம்...! ஒரு பஸ்ஸிற்கும் இன்னொரு பஸ்ஸிற்கும் போதிய இடை வெளி விடுவதே சிறுநீர் கழிக்கத் தான்...! என்று எழுதித்தான் போடவில்லை..! எங்கும் பார்த்தாலும் வெட்டி துண்டாக்கப்பட்ட கோழிக்கால்கள் லட்சக் கணக்கில் சிதறிக்கிடந்தன, பான் எச்சில்கள், பஸ்சிலிருந்து வடிந்த ஆயில், குப்பைகள்..!

கீழே கால் வைக்க ஷுவே கூசியது..!அங்குள்ள பஸ் டயர்கள் கங்கையில் இறங்கினால் சொச்ச கங்கையும் அழுக்காகிவிடும்..!இங்கு தான் எங்கள் படபிடிப்பு..! அதிலும் ஒடி விரட்டி பிடிக்க வேண்டிய காட்சி அவ்வளவு அழுக்குக்குள் எப்படி ஓடுவது என்பதை யோசிப்பதற்கு முன்.. அந்த பேருந்துகளைப்பற்றி... (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 27

வட இந்தியா லாரிகளை பார்த்து இருப்பீர்கள்..! அதைப்போலவே பஸ்சும் இருக்கும்..! நம்ம ஊரு பஸ்சுக்கு ராஜஸ்தான் ஸ்டைலில் முண்டாசு கட்டிவிட்டது போல ஒரு தோற்றம்..! அந்த முண்டாசு பஞ்சவர்ண கலரில் இருக்கும்..! அய்யனார் சிலை போல 90 டிகிரியில் அமர்ந்து தான் பயணிக்க வேண்டும்.. பேருந்தின் பராமரிப்பு பரிதாபமரிப்பாக இருக்கிறது..! 

வெள்ளை சட்டையுடன் ஏறி அமர்ந்தால் செலவில்லாமல் அது பழுப்பாக மாறும் வசதியுள்ள பேருந்து..! ஒவ்வொரு அங்குலமும் அழுக்கு அழுக்கு ஆஆஆழுக்கு..! பொது மக்களை அந்த பஸ்ஸில் பயணம் செய்ய வைப்பதே ஒரு தீவிரவாதச் செயல் என்றால் ஒப்புக் கொள்வீர்கள்..! இங்கு சற்று சுத்தமான இடம் இருக்கிறதா?என்று பலரிடம் கேட்டோம்..!

அதற்கு அவர்கள் எங்கள் படக் குழுவினரை பார்த்த பார்வையில் பரிதாபமே தெரிந்தது..! ஒரு வழியாக பேருந்து நிலையத்தின் கடைசி பிளாட்பாரத்திற்கு அருகில் ஒரு மெக்கானிக் ஷெட் இருந்தது பேருந்து நிலையமே இவ்வளவு அசுத்தமென்றால் அந்த மெக்கானிக் ஷெட்..!

ஆனால் ஆச்சரியப்படும் அளவிற்கு அது சுத்தமாக இருந்தது..! அல்லது பஸ் ஸ்டாண்டை விட சற்று குப்பை குறைவாக இருந்தது..! அந்த இடத்தில் அடுத்த 4 மணி நேரம் படபிடிப்பு முடிந்து படகு வீடு திரும்பினோம்..! காஷ்மீரில் வந்த இந்த 8 நாட்களும் மறக்க முடியாதவை.!அடுத்த நாள் காலை மீண்டும் டெல்லி பயணம்..! 

வழக்கம் போல பண்டிட் குளித்து குங்குமம் பூசி பான் மணக்க சிரித்தார்..! குங்குமப்பூ காஷ்மீர் மரப்பெட்டி கிரிக்கெட் பேட்டுகள் போன்ற ஷாப்பிங்குகள் முடிந்து ஜம்முவுக்கு புறப்பட்டோம்..! இரவு ஜம்முவிலிருந்து டெல்லிக்கு பேருந்துப் பயணம் அது பற்றி தனியே எழுதும் அளவுக்கு கதை இருக்கிறது..!

அதை தனியாக டெல்லி அனுபவங்களோடு எழுத உத்தேசம்..! மீண்டும் இமயமலை சாலை, மலைக்குகைகள், ஆடுகள் என டிட்டோ பயணம்..! காஷ்மீரிலிருந்து வேன் கிளம்பியது வேனின் பின் புறம் பனி மூடிய இமயம்..! ஒரு வினாடி அதை திரும்பிப் பார்த்தேன் அது கை அசைத்தது போல ஒரு தோற்றம்..! என் கண்களில் சட்டென்று நீர் கோர்த்து கொண்டது..! பை..பை.. காஷ்மீர்...!

#நிறைந்தது