Saturday 31 January 2015

ஆதீனம் - உமாசங்கர்

மதுரை ஆதீனம் - உமாசங்கர் சந்திப்பு..

கப்ஸா செய்திகள்..

நேற்று மதுரைக்கு வந்திருந்த உமாசங்கர் சர்ச் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு ஆதீன மடத்துக்குள் வந்துவிட்டார்.. எங்கே யேசு என்று அவர் விழிக்க இங்கு யேசு கிடையாது எல்லாம் ஈசு தான் என்றபடி ஆதீனம் அங்கு வர..

ஓ நீங்கள் தான் ஆதீனமா உங்களை சந்திக்க போகும் தகவலை யேசு எனக்குச் சொல்லவில்லையே என்றார் குழப்பத்துடன். அசராத ஆதீனம் சட்டென்று சொன்னார் ஆனால் நீங்கள் வருவதை சிவன் எனக்கு சொல்லிவிட்டாரே என்று.!

ஓ.. இன்று ஞாயிறு.! ஓய்வு நாளால்லவா அதான் கர்த்தர் வரவில்லை போலும் என அதைச் சமாளித்தார் உமா. அவரது சமயோஜிதத்தை மெச்சிய ஆதினம்"அதுசரி ஏன் மடத்துக்குள் வந்தீர்கள் சர்ச் என்று தவறுதலாக நினைத்து தானே என்றார்.

இல்லை இந்த தெருவில் வந்து சர்ச் எங்கே எனக்கேட்டேன் பொது மக்கள் உங்கள் மடத்தை தான் கை காட்டினார்கள், இங்கு தான் ஏகப்பட்ட "சர்ச்சுகள் "நடந்து இருக்கிறதே அந்த அர்த்தம் தெரியாமல் வந்துவிட்டேன் என்றார் நக்கலாக.!

சரி சரி அதெல்லாம் நித்தமும் ஆனந்தமாக இருக்க நினைத்த நாட்கள் அதை எல்லாம் இப்போது மறந்து விட்டேன். சரி உண்மையில் கர்த்தர் உங்கள் கனவில் வருகிறாரா.? எனக் கேட்டார் ஆதினம் சந்தேகத்துடன்.

உங்கள் கனவில் சிவன் வருவது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை என உமா பதிலளிக்க, இதற்கு திருடனுக்கு தேள் கொட்டிய முகபாவனையை ஆதீனம் பிரதிபலித்தார்.! சரி சரி..அதை விடுங்க உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்.!

நீங்க உமாசங்கர் என்ற சிவனின் பெயரை வைத்துக் கொண்டு நீங்கள் இயேசு கனவில் வருவதாக சொன்னால் மக்கள் நம்புவர்களா.? என்று ஆதீனம் கேட்க
இந்த கேள்விக்கு உமாசங்கர் கொஞ்சமும் அசராமல்..

"நீங்க உங்க வாயால இளைய ஆதினமா நியமிச்ச ஆட்களை நீங்களே நீக்குனதை சிரிச்சுகிட்டே நம்புன மக்களுக்கு இது ஒண்ணும் அவ்ளோ பெரிய காமெடி இல்ல"என்று சந்தானம் ஸ்டைலில் பதில்சொன்னார்.!

அரசு அதிகாரியா இருக்க நீங்கள் இப்படி செய்யலாமா.? என்ற ஆதீனத்தின் கேள்விக்கு.. ஒரு மடாதிபதி நீங்க அரசியல் சார்ந்து பேசுறதை விட நான் ஒண்ணும் தவறா செஞ்சிடலை இது என் கர்த்தர் மேல் ஆணை என பதிலளித்தார் உமா.

ஆமா உத்திரகாண்ட் வெள்ளம் வரும்ன்னு கர்த்தர் உங்க கிட்ட சொன்னதை ஏன் முன்கூட்டியே சொல்லி மக்களை காப்பாத்தலை என ஆதினம் கிடுக்கிப்பிடி போட நீங்க கூட தான் அம்மா பிரதமர்ன்னு சிவன் சொன்னதா சொல்லி அது நடந்ததா.?

என பதிலுக்கு உமாவும் கிடுக்கிப்பிடி போட.. சரி நம்ம ரெண்டு பேரில யாருடைய சேவை மக்களுக்கு பெரிசுன்னு நினைக்கிறிங்க என்று ஆதினம் கேட்க..தேவன் மீது ஆணையாக என்னுடைய சேவை தான் மிகப் பெரியது என்றார் உமாசங்கர்.! 

அது எப்படி ஆச்சர்யத்துடன் ஆதீனம் கேட்க.. நீங்கள் உங்களைத் தேடி வரும் மக்களுக்கு ஞானப்பால் என பால் வழங்குகிறீர்கள்.. அது பால் உற்றுவது என்ற பொருளில் இறப்பதை குறிக்கும்.. ஆனால் நானோ எனது கையால் தொட்டு..

இறந்த உயிர்களை எழுப்புவேன் ஆகையால் நானே சிறந்தவன் என்று உமா கூற.. சிரிப்பை அடக்க முடியாத ஆதீனம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பிக்க.. உமாசங்கர் கடுப்புடன் அங்கிருந்து வெளியேறுகிறார்

கப்ஸா செய்திகளுக்காக மதுரையில் இருந்து "சரடு"சரவணன்



தீனா பிப் 15

"தீனா கொரலு"

குயந்தையோட பிஞ்சு கையால நல்யா ஒழப்பி பிசிஞ்ச தர்ற கூழு இர்க்குதே, அடா..அடா..அடா.. அதான் பெத்தவங்களுக்கு அமிர்தத்த வுடொ இனிப்பா தெர்யும்.! "குயந்தை கையால துண்ற நாஸ்டா..அமிர்தம் கூடொ அது மேறி இல்ல டேஸ்ட்டா" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : புதல்வரைப் பெறுதல் : குறள் எண் : 64 ]

கலைஞர் - அழகிரி.

கலைஞர் - அழகிரி சந்திப்பு..

கப்ஸா செய்திகள்.. இன்றைய கப்ஸா..

சென்னை: நேற்று கோபாலபுரத்தில் கலைஞரை சந்தித்தார் அழகிரி.. எடுத்தவுடன் வா உடன்பிறப்பே என்றழைத்து அவரது எரிச்சலில் எண்ணை ஊற்றினார் தலைவர்.. உலகின் எந்த மொழியிலும் அவருக்கு பிடிக்காத வார்த்தை இந்த உடன்பிறப்பு என்பது தெரிந்தும் அதை பயன்படுத்திய கலைஞரின் சாதுர்யத்தை மெச்ச வேண்டும்.

நீ கழகத்தை காக்காமல் கலகத்தை செய்யும் போக்கு எனக்கு பிடிக்கவில்லை என்று தலைவர் சொன்னதாகவும்.. தனக்கு ழகரம் வராது ஆகவே கழகம் என்பது என்னைப் பொறுத்த வரை கலகமே என்று அழகிரி அடித்த ஜோக் அருமையாக இருந்தது என அங்கு டீ குடிக்க போயிருந்த அல்லக்கை ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

என்னை ஏன் செயல்பட விடமாட்டேன் என்கிறீர்கள் என அழகிரி கேட்டதாகவும்.. செயல்படுதலா எப்படி நீ மத்திய அமைச்சராக இருந்தபோது செயல்பட்டது போலா? என கலைஞர் அவரை மடக்கியதாகவும் அந்த அறையில் இருந்த பல்லி மூலம் நமக்கு தகவல்கள் துள்ளி வந்து விழுந்திருக்கிறது.

உங்களைத் தவிர நான் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என அழகிரி பிடிவாதம் பிடித்ததாகவும்.. தலைவராக வேண்டாம் தம்பியாகவாவது ஏற்றுக் கொள் என்று தலைவர் பாசவலை விரித்ததாகவும் அழகிரி அதில் சிக்காமல் நான் பாசப்பறவை அல்ல மோசப்பறவை என்று எஸ்கேப் ஆனதாகவும் பல்லி சொல்லியது!

நான் அஞ்சா நெஞ்சன் என்ற அடைமொழியில் அழைக்கப்படுபவன் என்ற அழகிரிக்கு.. தளபதியாக இருப்பவரும் அஞ்சா நெஞ்சர் தான் என தலைவர் சாதுர்யமாக பதில் கூற.. அப்படி என்றால் என்னையும் தளபதி ஆக்குங்கள் என மடக்க..தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று நழுவும் மீன் ஆனாராம் தலைவர்!

J.K.ரித்தீஷ் அதிமுகவிலும், குஷ்பு காங்கிரசிலும்,நெப்போலியன் பாஜகவிலும் இப்படி தன் ஆதரவாளர்களை எல்லாம் ஒவ்வொரு கட்சியிலும் சேர வைத்தது தன் ராஜ தந்திரங்களில் ஒன்று எனவும்.. இனி இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சியிலும் என் ஆட்கள் இருப்பார்கள் என்றாராம் அழகிரி.

ஆதரவாளர்களை மட்டும் வேறு கட்சிக்கு அனுப்பிவிட்டு நீ மட்டும் ஏன் இங்கேயே இருக்கிறாய்? என்ற தலைவரின் மைண்ட் வாய்சை நேற்று பிறந்த குழந்தை கூட அபாரமாக கேட்ச் செய்தது.! மீண்டும் கழகத்திற்கு வர தலைவர் போட்ட நிபந்தனைகளும் அழகிரி சொன்ன நிபந்தனைகளும் ஒத்து வரவில்லையாம்.

டீலிங் சரியில்லாததால் அவசரமாக பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு வீட்டின் பின் வாசல் வழியாக வெளியேறினார் அழகிரி.. இதற்கு பின் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலைஞரிடம் அழகிரியை சந்தித்தது ஏன்? 

எனக் கேட்டதற்கு.. பேரன் துரை.தயாநிதி படத்துக்கு கதை. வசனம் எழுதும் விஷயமாக அழகிரி வந்து தன்னை சந்தித்ததாகவும்.. இது அரசியல் சந்திப்பு அல்ல என்றும் கேள்வி பால்களை எல்லாம் சிக்ஸருக்கு தூக்கினார் தலைவர்..!

அதே வேளையில் கழகம் திருந்த வேண்டும்.. நான் அப்போது தான் வருவேன்.. இப்போது தயாளு அம்மாள் கையில் தயிர் சாதம் சாப்பிடவே நான் கோபாலபுரம் வந்தேன் என விமான நிலையத்தில் அழகிரி பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

கப்ஸா செய்திகளுக்காக சென்னையிலிருந்து "ஊத்தவராயன்"

Friday 30 January 2015

அ.கி.பரந்தாமனாரின் நல்ல தமிழ்..

அ.கி.ப 

உந்தன், எந்தன் என்று உரைநடையிலும் பாட்டிலும் எழுதுகிறார்கள். உன்றன் (உன்+தன்) என்றும், என்றன் (என்+தன்) என்றும் எழுதுவது தான் சரி. பன்மையாக எழுத வேண்டுமென்றால் உந்தம்,எந்தம் என்று எழுதுக.

"என் தம்பி சட்டையும் என் சட்டையும் நனைந்தது" என்று எழுதுவது தவறு ; நனைந்தன என்று எழுத வேண்டும். நனைந்தன என்பது பன்மை வினைமுற்று. மக்கள்கள் என்பது பெருந்தவறு, ஏனெனில் மக்கள் என்பதே பன்மை.

நாயோ அல்லது நரியோ இங்கு வந்தது" என்று எழுதுகின்றனர். ஐய ஓகாரம் வரும் போது அல்லது" என்னுஞ்சொல் வேண்டுவதில்லை. நாயோ, நரியோ வந்தது என்று தான் எழுத வேண்டும். இது எல்லாம்" என்பது தவறு.. இவையெல்லாம் என்க.

'நெய்வேலி என்ற இடத்தில் நிலக்கரி கிடைக்கிறது' என்னும் வாக்கியத்தில் "என்ற" என்று எழுதாமல்"என்னும்"என்று எழுத வேண்டும். என்ற எனில் அது இறந்தகாலம்.! இன்று செய்திகள் வராது என்பது தவறு.. செய்திகள் வாரா என்பதே சரி.

முன்னூறு என்றால் முன் நூறு என்று பொருள் படும். முந்நூறு என்றால் தான் மூன்று நூறு என்று பொருள் படும். பால் + அபிஷேகம் = பாலபிஷேகம். இத்தொடரை பாலாபிஷேகம் என்றெழுதுவது மிகவும் தவறு.

#சொல்லுக்கு_முதலில்_வரும்_எழுத்துகள் : 12 உயிரெழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும். ங,ண,ழ,ள,ற, ன, ஆகிய எழுத்துகள் சொல்லுக்கு முதலில் வாரா."ங எனும் எழுத்து சொல்லுக்கு முதலில் பழங்காலத் தமிழில் வந்துள்ளது.

#சொல்லுக்கு_இடையில்_வராத_எழுத்து : ட்,ற் என்னும் எழுத்துகளுக்குப் பக்கத்தில் எந்த மெய்யும் வராது. (உதாரணம் : அதற்கு,முயற்சி,நட்பு,தட்பம்) "பார்ப்பதற்கு" - இச்சொல்லை நினைவில் வைத்துக் கொண்டால் இடையில் 'ர் என்னும் இடையின மெய்க்கு முன் வேறு மெய் வரும் என்றும், வல்லின ற்' என்னும் மெய்க்கு முன் வேறு மெய் வராது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday 28 January 2015

தமிழகம் கி.பி2114.

கிபி : 2114 இல் தமிழகம்..!


இந்தியா யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியாவாக மாறி இருந்த காலம் அது.. சென்னை ஸ்டேட் தான் இந்தியாவின் சிறந்த ஸ்டேட்டாக இருந்தது..! இந்தியாவில் தலையாய தொழில் நகரமாக சென்னை இருந்தது..மொத்த உலகமும் சோலாருக்கு மாறி 40 ஆண்டுகள் ஆன படியால் நகரமே மாசில்லாது தூசு இல்லாது மிளிர்ந்தது.. 

சாலையில் சாட்டிலைட் உதவியுடன் ஓட்டுனர் இல்லா அதி நவீன கார்கள் துல்லியமான ஒழுங்கு படுத்தப்பட்ட வேகத்தில் சிக்கலின்றி விரைந்து கொண்டிருந்தது..! மனிதர்களுக்கு ஓட்டுனர் உரிமையே இல்லை என்பதால் சிக்னல்கள் மதிக்கப்பட்டன... ஹைடெக் லைட் வெயிட் சிமிண்ட்டுகளால் கட்டப்பட்ட எழில் மிகு கட்டிடங்கள் அணிவகுத்து நின்றன.. 

மரம் வளர்ப்பு கட்டாயப்படுத்தப்பட்டாதால் எங்கும் மரங்கள்..சாலைகளில் சோலைகளும் நீருற்றுகளும் அழகாய் அமைந்து இருந்தன வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின..! நாட்டின் கட்டாயத் தொழிலாக விவசாயம் இருந்தது.. கல்வி மருத்துவம் இரண்டும் இலவசமாக்க பட்டிருந்தது.. நாட்டு மக்கள் அனைவரும் ஒழுங்காக வரி செலுத்தினார்கள்..!

மக்கள் சுத்த பருத்தி ஆடைகள் அணிந்து இருந்தனர்.. மேக்னட் டிரெயின் ஏறி டெல்லிக்கு வேலைக்கு செல்பவர்கள் க்யூவில் நின்றார்கள்..! ஆம் மணிக்கு 1000 மைல் வேகம் செல்லும் ரயில் அது.. சென்னை to டெல்லி  2 மணிநேரப் பயணம் தான்... ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் குணமும் ,ஒழுக்கமும், பொறுமையும், அறிவும் மக்களிடம் மிகுந்து இருந்தன..! 

நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.. அவர்கள் சிறு தவறு என்றாலும் பதவியை தூக்கி எறியும் குணம் கொண்டவர்கள்..! நாட்டின் பற்பல வளர்ச்சிக்கு திட்டங்கள் தீட்டினார்கள் லஞ்சம் அறவே ஒழிந்து இருந்தது.. நாட்டில் கொலை கொள்ளை பயமே இல்லை... மக்களிடம் பணப் புழக்கம் அதிகரித்து இருந்தது..!

உலகில் மக்கள் வாழத்தகுதியான நிம்மதியான செல்வம் நிறைந்த இடப்பட்டியலில் முதலிடம் சென்னைக்கு கிடைத்தது.. நதிகள் இணைக்கப்பட்டு நீர்வளம் மிகுந்து இருந்தது.. மக்கள் ஆரோக்கியமான உணவுகள் உண்டனர்.. மதுப்பழக்கம் அறவே யாருக்குமில்லை.. சிகரட்டை ஒழித்துவிட்டிருந்தார்கள்.. மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்..!

தங்கு தடையின்றி மின்சாரம் இருந்தாலும் மக்கள் அதை சிக்கனமாக பயன் படுத்தினார்கள் நாட்டு மக்கள் அனைவரும் கட்டாய ராணுவ பயிற்சி எடுத்து இருந்தனர்.. நாட்டு மக்கள் அனைவரும் குறைந்தது 5 வருடம் விவசாயம் செய்ய வேண்டும் என்ற சட்டமே இருந்தது..! மருத்துவமனைகளில் எவ்வளவு நவீன சிகிச்சைக்கும் பைசா செலவில்லை..!

மக்கள் அனைவரும் உடல் தானம் கண் தானம் செய்திருந்தனர்.. தேவையோ இல்லையோ ரத்த தானம் மூலம் ரத்தம் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்தனர் 3மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் அளிக்க மக்கள் தயாராக வந்து மருத்துவமனை நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர்..அப்போது "டேய் அறிவிருக்கா எந்திரிடா"என்ற குரல் ஒலித்தது..!

அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரவியை எழுப்பியது நண்பன் ஹரியின் குரல்."என்னடா ஆபிஸ்ல தூக்கமா விளங்கிடும்", என்றான்.. அலங்க மலங்க விழித்த ரவிக்கு அப்போது தான் தெரிந்தது தான் கண்டது அத்தனையும் கனவு என்று..!


வெங்கடேஷ் ஆறுமுகம்
9944960365
venkatapy@gmail.com

Monday 26 January 2015

கிரிக்கெட் கட்சிகள்..

IPL கட்சிகள் (விளையாட்டாய் ஒரு கற்பனை)

அரசியல் கட்சிகளையும் IPL டீம் போல் ஆக்கி அந்த அணிகளைப் பற்றி ஒரு பார்வை...

பாஜக ராயல் சேலஞ்சர்ஸ் : அணித்தேர்வு நடக்கும் வரை கேப்டனாக ஆவார் என்று இருந்தவர் ஒருவர் ஆனால் வெளியில் அறிவிப்பு வரும் போது கேப்டனானவர் ஒருவர்..! இதுவரை குஜராத் லீக் போட்டிகளில் விளையாடியவர் இப்போது தேசிய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்..!

முன்பு லீகில் செய்த சாதனையை தேசிய அளவில் கொண்டு வர முயல்கிறார்.. தொடர்ந்து 15 ஆண்டுகள் குஜராத் அணியிலிருந்ததை பலமாக கருதுகிறார்.. டிரிங்ஸ் சமயத்தில் டீ சாப்பிடுவது இவருக்கு ரொம்பப் பிடிக்கும்..! கிரவுண்டில் உள்ள ஸ்கீரினில் தோன்றி அடிக்கடி பேசுவார்..எப்போதும்காமிரா பக்கம் முகம் இருக்கும்.!

சீனியர் வீரர்களை ஓரம் கட்டுவதில் கில்லாடி.!வெளிநாட்டு டூர் என்றால் கொள்ளை இஷ்டம்.!கிரவுண்டுகள் குப்பையாக இருந்தால் இவருக்குப் பிடிக்காது.. ஒழுங்காக ஆடாதவர்களையும் தன் ஆதரவாளர்களாக இருந்தால் அணியில் பொறுப்பு கொடுத்து வைத்துக் கொள்வார்.! தாமரை படம் போட்ட காவி நிறத்து சீருடையினர் #பாஜக_ராயல்_சேலஞ்சர்ஸ்


காங்கிரஸ் டேர் டெவில்ஸ் : மிகவும் தன்னம்பிக்கையான அணி.. ஃபார்மில் இல்லாத வீரர்களை வைத்துக் கொண்டு இவர்கள் எல்லா அணிகளிடமும் மோத நினைப்பதும் உருப்படியாக ஒரு மேட்சும் ஆடாது இனி சிறப்பாக ஆடுவோம் என சொல்வதும் படு காமெடி அணி கேப்டன் என எப்போதும் பேருக்கு ஒருவர் இருப்பார்.!

மற்றபடி கோச் தலைவி சொல்வது தான் வேதம்.! அதிலும் இவர்கள் அணியிலுள்ள தமிழக வீரர்கள் அனைவரும் தனித்தனி அணியாக அனைவருமே கேப்டன்களாக இருப்பார்கள்.. 15 நாட்களில் எல்லாம் மாறிவிடும் எனக் கூறும் ஒரு பவுலர் உள்ளார் ஒரே ஒரு ஓவரை கடந்த 2 வருடங்களாக போட்டுக் கொண்டு இருக்கிறார்..!

அத்தனையும் நோ பால். இவரை போன்றவர்களை வைத்துக் கொண்டு களம் கண்டு படுதோல்வி அடைந்துள்ளார்கள்.இவர்களது அடுத்த இளம் கேப்டனுக்கு இவ்வளவு நாள் பேட்டிங் பவுலிங் வாய்ப்பு தராது இப்போதும் களம் இறக்கலாமா என யோசிக்கிறார்கள். சில மூத்த வீரர்கள் தங்களது இடத்துக்கு தங்கள் வாரிசைக் கொண்டு வந்து தங்கள் மீதான விமர்சனத்தை மறைக்க பார்க்கிறார்கள்.!

ஏதாவது அதிசயம் நடந்து விடாதா என எதிர்ப் பார்க்கின்ற டீம்.. கைப்புள்ளயை விட அதிகம் அடிபட்ட கைப்புள்ள டீம்.. கை கிழிந்த கறை படிந்த வெள்ளைச் சீருடையினர்.!  #காங்கிரஸ்_டேர்_டெவில்ஸ்


#அதிமுக_கிளாடியேட்டர்ஸ் : அணியில் யாருக்கு நிரந்தர இடம் என்று யாராலும் சொல்ல முடியாது..! இப்போதைக்கு ஒருவர்கேப்டன் ஆனால் நிரந்தர(மக்கள்) கேப்டன் அம்மா தான்.! அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கேப்டன் ஆக்குவார், மறு நாளே கேப்டனை12th மேனாக்குவார்.. தரையில் விழுந்து பீல்டிங் செய்வதில் மிகத் திறமையான அணி..!

இதுவே இவர்களது பலம் ஆனால் எந்த முடிவும் கேப்டனை கேட்காமல் எடுக்க முடியாதது பலவீனம்..! கிரவுண்ட்டில் பவுண்ட்ரி லைன் அருகே இவர்கள் கேப்டனை பற்றிய விளம்பரங்களே இருக்கும்..! டிரிங்ஸ் டைமில் அம்மா வாட்டர் குடிக்க தரப்படும்..

மேலே பறந்து வரும் பந்தை இமைக்காமல் பார்க்கும் ஹெலிகாப்டர் ஷாட் பயிற்சி பெற்றவர்கள் என்றாலும் "மின்"னொளியில் நடக்கும் ஆட்டங்கள் தான் இவர்களது தற்போதைய பிரச்சனை ஆனால் தலைமைக்கு அடங்கும் மிக மிக பணிவான பவ்யமான டீம்.. இலைப் பச்சை சீருடையினர் "அதிமுக கிளாடியேட்டர்ஸ்".

#திமுக_சூப்பர்_கிங்ஸ் : அணியின் பெயரில் கிங்ஸ் எனப்பன்மையில் இருப்பதிலேயே பிரச்சனை விளங்கும்..! கோச் & கேப்டன் இருவரும் ஒருவரே... பல ஆண்டுகளாக வைஸ்கேப்டன் மட்டும் மாறாது இருக்கிறார்..!

ஆனால் அவர் எப்போது கேப்டன் ஆவார் என்பது யாருக்கும் தெரியாது..அவர் கேப்டன் ஆனால் அணிக்குள்ளேயே பிரச்சனை ஆகும் என்பதால் முதிர்ந்த வயதிலும் பதவியை தொடர்கிறார் தற்போதைய கேப்டன்..!

ஆடும் லெவனில் உறவினர்களே அதிகம் தேர்வு செய்யப்படுவார்கள்.. பலருக்கு இதயத்தில் இடமளித்து 12th மேன்களாக்கி அழகு பார்ப்பது கேப்டனுக்கு  கை வந்த கலை..வைஸ் கேப்டனின் சகோதரர் கேப்டனாக நினைத்ததால் அவர் அணியிலிருந்தே நீக்கப்பட்டார்.! 

தற்போது எதிர் அணிகளை சந்தித்து சொந்த அணியை தோற்கடிக்கும் பணியை அவரே செய்வதும், அடிக்கடி பேட்டி கொடுப்பதும்
இவர்களது பலவீனம்..! தற்போதைக்கு கேப்டனின் பேச்சு மட்டும் தான் அணியினருக்கு பலம். யார் கிங் எனத் தீர்மானிக்க முடியாத டீம்.. சூரிய மஞ்சள் நிறத்து சீருடையினர் திமுக சூப்பர் கிங்ஸ்!


#தேமுதிக_சார்ஜர்ஸ் : அதிரடி ஆக்ரோஷமான கேப்டன் உள்ள அணி.. மற்ற அணியினருக்கு எல்லாம் கேப்டனுக்கு பெயர் வேறு இருக்கும் ஆனால் இவர் பேரே கேப்டன் தான்..சார்ஜர்ஸ் என்று பேர் இருந்தாலும் சார்ஜர் கேப்டனே..! இவரது சார்ஜை தாங்காது அலறி அடித்துக் கொண்டு அணி மாறிய வீரர்களும் உண்டு.!

விளையாட்டு மைதானத்தில் எதிர் அணி கேப்டனையே கோபத்துடன் எச்சரித்தவர் கேப்டன்... எப்போது கோபப்படுவார் என்றே தெரியாது.! பந்து காலில் பட்டதுக்கு How is that கேக்காமல் வைடுக்கு கேட்டு அம்பயரையே குழம்ப வைப்பார்..அடிக்கடி டயர்டாகி திடீர் திடீர் என பெவிலியன் திரும்பி விடுதல் இவரது பலவீனம்.!

ஆனால் இவரது குடும்பத்தினர் இவரது வெற்றிக்காக பாடுபடுவது பலம்.! போன முறை தேசிய அளவிலான அணியில் மாநில அளவில் உள்ள இவரது அணியினர் அதிகம் பேர் இடம் பெற்றதே இதுவரை சாதனை..! மேட்சுகள் துவங்குவதற்கு முன் எந்த டீமோடு இணைவது என்று முடிவெடுக்க எல்லா டீமையும் கேப்டன் ஃபாரினில் ரூம் போட்டு சந்தித்தது... இது வரை யாரும் ரூம் போட்டு சிந்திக்காததே..! 

வெற்றி முரசு கேட்காதா என காத்திருக்கும் டீம்... கருப்பு,மஞ்சள்,சிகப்பு மிக்ஸ் ஆன சீருடையினர் தேமுதிக சார்ஜர்ஸ்..

#மதிமுக_வாரியர்ஸ் : ஃபிட்னெஸ் நிறைந்த டீம்... நிறைய போராட்டங்களுக்கு பிறகு ஆட வந்துள்ளது... உணர்ச்சிவசப்பட்டு அழுகின்ற கேப்டனை கொண்ட அணி.. எல்லோரையும் அரவணைத்து செல்பவர் என்றாலும் பலர் இவரை அழ வைத்துவிட்டு பிரிந்து சென்று விடுவார்கள்.!

இவரது அணியின் பெயரிலேயே வாரியர் என்று இருப்பதால் ஆளாளுக்கு வாரி விட்டு செல்கிறார்கள் போல..! இவரே வேறு ஒரு அணியில் இருந்து பிரிந்து வந்தவர் தான் என்பது வேறு கதை.. எந்த ஒரு பிரச்சனை என்றாலும் நடையாய் நடந்து அதை தீர்த்து வைப்பார்.. ஆனால் பேட்டிங், பவுலிங்,பீல்டிங் ஆகிய எல்லாத் துறைகளிலும் அணி இவரையே நம்பி இருப்பது இந்த அணியின் பலம் மற்றும் பலவீனம்.

களத்தில் பம்பரமாக சுழன்றாலும் சாட்டை மட்டும் இவர் கையில் இல்லை.. கேப்டனாக அதிக தோல்விகளை சந்தித்த சோகமான சாதனை உள்ளவர்.இப்போது அது மாறுமா என ஆவலுடன் எதிர்பார்க்கும் டீம்..கருப்பு சிவப்பு கருப்பு சீருடையினர் மதிமுக வாரியர்ஸ்..

#கம்யூனிஸ்ட்_லெவன்ஸ் : 

கையேந்துவது இவர்களுக்கு கை வந்த கலை.! எப்போது லீக் துவங்கினாலும் அது துவங்கும் வரை வேறு அணியின் டோர் திறக்காதா என காத்திருக்கும் அணியினர். ஆர்வக்கோளாறில் ஆதரவு என்ற பேரில் எதிரெதிர் அணிகளிடம் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அப்படி ஓவராக ஓடி ஓடியே கடைசியில் ரன் அவுட் ஆகும் அணி.!

இவர்களது அவுட்டை மட்டும் 3வது அம்பயரிடம் கேட்காமல் மைதானத்தில் உள்ள நடுவரே அவுட் கொடுத்து  கதவை மூடிவிடுவார்..பிறகு என்ன செய்வது என திகைத்து ஏற்கனவே சண்டை போட்டு பிரிந்த பங்காளியை சேர்த்து ஒரே அணியாக மாறிய டீம் 2 பேட்ஸ் மேன்களையும் 2 பவுலர்களை மட்டும் வைத்துள்ள டீம்.!

இதுவரை மற்ற அணியில் விளையாடியவர்கள்..! இப்போது முழு லெவனையும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் மூச்சு திணறுகிறார்கள்.! உழைப்பாளிகளை நம்பி உள்ள அணி அவர்களது உழைப்பு பலன் தருமா என்று விடையளிக்க முடியாத டீம்..! சிவப்புச் சீருடையினர் கம்யூனிஸ்ட் லெவன்ஸ்..

#ஆம்_ஆத்மி_க்ளீனர்ஸ் : 

முதல் மேட்சிலேயே செஞ்சுரி அடித்து பிறகு அத்தனை மேட்சிலும் டக் அவுட் ஆன அணி.! அதிலும் முன்னாள் சாம்பியனை க்ளீன் போல்டாக்கி கவனம் கவர்ந்தாலும் க்ளீன் ஸ்வீப் செய்ய முடியாமல் போன அணி.! முதலில் கிரிக்கெட் அணியாக ஆக மாட்டோம் ஒன்லி கோச்சிங் தான் என்று ஒரு பெரியவர் ஆரம்பித்த கோச்சிங் சென்டரில் இருந்து பிரிந்த அணி..!

இந்த கேப்டனின் முயற்சியால் உருவான அணி இது..! டெல்லி லீகில் வெற்றி பெற்று யாரை தோற்கடித்தார்களோ அவர்களின் ஆதரவோடே மேன் ஆப் தி மேட்ச் அவார்டு பெற்றுக் கொண்டது பெரிய காமெடி,எல்லோரும் குல்லா போட்ட வீரர்கள். ஆனால் எதிரணியினர் இவர்களுக்கே குல்லாபோட்டு அந்த அவார்டை48 நாளில்..

பிடிங்கிக் கொண்டனர்..! கேப்டனே பல இடங்களில் தாக்கப்பட்ட சாதனை இவர்களுக்கு மட்டுமே உரியது.! மேட்ச் ஆட ஆட்டோ ஏறி வருவது ரயிலில் வருவது என்பதெல்லாம் பலமாக கருத முடியாது..திடீர் ஹீரோ ஆனதே இவர்களது பலமும் பலவீனமும்.. மிகுந்த நம்பிக்கையோடு துவங்கி நம்பிக்கை குறைந்த டீம்..! தூய வெள்ளை சீருடையினர் ஆம் ஆத்மி க்ளீனர்ஸ்..

யார் கனவுல யாரு..!

#யார்_கனவுல_யாரு

மதுரை ஆதீனம் கனவில் சிவபெருமான் வந்தது (??!!) போல மற்ற அரசியல் தலைவர்கள் கனவில் படையெடுக்கிறார்கள் பலர் (சும்மா கற்பனையா தான்) 

ஜெயலலிதா: என் கனவில் நேற்று..! நீங்கள் வருவீர்களா.. வருவீர்களா.. என்ற குரல் கேட்டு யார் எனப்பார்த்தேன்..! ஹெலிகாப்டரே இன்றி வானத்திலிருந்து ஒரு பெண் இறங்கினார்..! அவர் மேரி மாதா போலவும் இருந்தார் ஜெகமாளும் ஆதிசக்தியாகவும் தெரிந்தார்..! 

அன்பில் கருமாரி.. அன்னை அவள் உருமாறி வந்தது போலவும் தெரிந்தது.. ஆனால் இந்த முகம்.! இந்த முகம்! எங்கு பார்த்தோம் என நான் வியப்போடு யோசித்தேன்.! அடடா இது நம் முகம் அல்லவா.! நம் முகம் எப்படி? என கொடநாட்டில் ரூம் போடாது யோசித்தேன்..!

நமது ரத்தத்தின் ரத்தங்கள் பிளக்ஸ் பேனரிலும், போஸ்டரிலும் அவ்வப்போது நம்மை இப்படி புகழ்வதால் கனவில் வந்தவரும் என்னைப்போலவே தோன்றியது காலத்தின் கட்டாயம்..! அடடா வந்தது நானே தான்...! நானே மக்கள் முதல்வர்.... நானே கடவுள்..! 

ஒரு பெண்ணாக பிறந்து எத்தனை பதவிகள் தான் ஏற்பது என தயங்காமல் அவரை வரவேற்றேன்.! அவரும் என் காலில் விழுந்து நீங்கள் தான் எப்போதும் நிரந்தர முதல்வர் என பெண் சம்பத் போல் கூறி(வி)னார்..! இது போன்ற புகழுரைகளை கொஞ்சமும் விரும்பாத நான்...

போனால் போகட்டும் என விரும்புவது போல நடித்தேன்..! அடுத்து மீண்டும் முதல்வர் நான் தானா என்று அவரிடம் கேட்டேன்..! மதுரை ஆதீனத்தின் கனவில் சிவனே அதை கன்பார்ம் செய்துவிட்டாரே என்பதை எனக்கு இன்பார்ம் செய்தார்..! நீங்கள் ஓடி ஓடி உழைத்தால்.. 

இந்தியாவையே ஆட்சி செய்வீர்கள் என்பதையும் சொன்னார்..! நானும் தர்மத்தின் வாழ்வு தனை விஜய்சேதுபதி படம்..! மீண்டும் ஒரு நாள் தர்மம் கமல் ஆண்ட்ரியா நடித்த படம் என்றேன்..! மகிழ்ந்து போய் பதவியேற்பு விழாவிற்கு வருகிறேன் எனக் கூறி மறைந்தார்.!


மு.க. அழகிரி : கனவில்...

அண்ணனே.. நான் தான் தம்பி வந்திருக்கிறேன்..! 

யாரு ஸ்டாலினா? என்ன தைரியம்..! 

அட இல்லிங்க ப்ரோ.! 

ப்ரோன்னா யாரு நம்ம நடிகர் விஜய்யா? 

அட நாந்தாங்க முழு முதற்கடவுள் முருகன்..! 

ஓ நீங்களா..! நான் கூட எல்லா கட்சிக் காரங்களும் என்னை வந்து சந்திக்கிறாங்க.. இந்த கேப்புல என் தம்பியும் வந்துட்டாரோன்னு பதறிட்டேன்..!

நம் அப்பாக்களின் திருவிளையாடல்களில் பாதிக்கப்பட்டோர் நாமிருவரும் தான் அண்ணா..!

ஆமா முருகா..! உனக்கு உங்க அண்ணன் காரணம்.. எனக்கு என் தம்பி காரணம்..! 

அண்ணா எனக்கு ஞானப்பழம் கிடைக்கவில்லை ஆனால் பழனி மலை கிடைச்சது உங்களுக்கு? 

எனக்கு எதுவும் கிடைக்கலை ஆனா... எல்லா கட்சி ஆட்களையும் சந்திச்சு எங்க கட்சியை பஞ்சாமிர்தமாக்க முடிஞ்சது.! உனக்கு "வேல் உண்டு வினை இல்லை" எனக்கு "வேலை இல்லை ஆனா வினை உண்டு"..! 

அண்ணா திருமங்கலம் பார்முலா கொண்டுவந்த நீ இப்படிக் கூறலாமா? தென் மாவட்ட அமைப்பு செயலராக இருந்த நீ இப்படி பேசலாமா? தந்தையை பகைக்கலாமா? தம்பியை எதிர்க்கலாமா? இது நீதியா?

இருப்பா முருகா..! இவ்வளவு சொல்ற நீயும் உங்கப்பா கிட்ட கோவிச்ச ஆளு தானே..!

அண்ணா நான் அப்பனிடம் கோபித்தேன்.! ஆனால் அவருக்கு பாடம் சொன்ன சுப்பன் அல்லவா நான்.! 

ஹஹ்ஹா நானும் உன்னைப் போல் நானும் அப்பாவுக்கு பாடம் கற்பிக்கிறேன் விரைவில்.! பொறுத்து இருந்து பாரு இந்த சூரனின் சம்ஹாரத்தை.! (முருகன் மறைகிறார்)

சோனியா : 

(கனவில் வந்தவர்) அன்னையே இப்படி ஆகிவிட்டதே..! நீங்கள் அன்று பிறந்திருக்கக்கூடாதா? 

ஹு ஆர் யூ மேன் ?  

நான் தாங்க ராவணன்..!  

வேர் ஆர் யூ ப்ரம்?

தாயே நான் இலங்கையிலிருந்து வருகிறேன்..! 

ஓ ராஜபக்ஷே அனுப்பிச்சாரா? 

ஐயோ இல்லிங்க மேடம் அவரே துண்டைக் காணோம் துணியக் காணோம்ன்னு ஓடிகிட்டு இருக்காரு.. நான் யாருன்னா முன்னாடி பல ஆயிரம் வருஷத்துக்கு முன் அங்க ஆட்சி செய்தவன்.. இராமாயணம் படிச்சு இருந்தா தெரிஞ்சு இருக்கும்...

ஓஓ... மிஸ்டர் ராவணன் யெஸ் நான் கேள்விபட்டு இருக்கேன்..!

நீங்க மட்டும் என் காலத்துல இருந்து ஆதரவு தந்து இருந்தா அந்த ராமரை நான் ஜெயிச்சு இருப்பேன்..! ஆனா ஒண்ணு இந்த ராமரை ஆதரிக்கற ஆளுங்க அன்னைக்கு எனக்கு எதிரி..! இன்னைக்கு உங்களுக்கு எதிரி..! 

யெஸ் மிஸ்டர் ராவணன் எக்சாட்லி..! எங்களுக்கு பட்டாபிஷேகத்துக்கு பதிலா பட்டை நாமம் போட்டுட்டாங்க நாட்டு மக்கள்.! நான் வெளிநாட்டில் பிறந்தாலும் இந்தியர் ஒருவரைத் தானே மணந்தேன்.. அவர் கட்டிய தாலிக்கு மதிப்பளித்து தானே வந்தேன்.. சொல்லுங்க.... இத்'தாலிக்கு மதிப்பளித்தது தப்பா.?

அன்னையே ஏன் விரக்தியாக பேசுகிறீர்கள்.? நீங்கள் இத்'தாலிக்கு மட்டுமே உழைத்தீர்கள்..! ஆனால் மக்கள் தான் அதை தவறாக புரிந்து கொண்டனர். கவலைப்படாதிர்கள் உங்களுக்கு இனி ஜெயம் உண்டு..! 

இப்படி யாராவது பேசினால் தான் கொஞ்சம் ஆறுதலாவது கிடைக்கிறது மிஸ்டர் ராவணன்..! 

நன்றி தாயே எனக்கு நீங்கள் ஏதாவது உதவ முடியுமா?

ஓ.கே மிஸ்டர் ராவணன்.! நீங்க காங்கிரஸில் சேர ரெடியா.? 

சேர்ந்து என்ன செய்யணும்..?

ஒண்ணும் செய்யவேணாம் நான் சொன்னதை செஞ்சா போதும்.!

அதை நீங்களே செய்யலாமே அன்னையே.?

எனக்கு இயக்கத்தான் தெரியும் ஒரு தலை இருக்க மன்மோகனே நல்லா தலையை ஆட்டினாரு.. உங்களுக்கு பத்து தலை ஆட்டமாட்டிங்க..! ஹலோ..ஹலோ..
(அட ஏன் இவர் 10 தலையும் தெறிக்க ஓடுறாரு...!)


ராகுல்காந்தி கனவில்...

நேற்று எனக்கு ஒரு குட்டிக்கனவு தமிழகத்தில் நடப்பது போல்.! அதில் கடவுள் யாரும் வரவில்லை.. எங்களுக்கு கடவுளாய் தெரியும் தமிழக மக்கள் நிறைய வந்தார்கள்.! ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் ஏழ்மையை ஒழிக்காமல் இருக்கும் இயக்கம் எமது காங்கிரஸ் பேரியக்கம்..! 

அந்த இயக்கத்தின் பல ஆணிகளில் ச்சே... ஆணிவேர்களில் ஒருவரான சிதம்பரம்ஜியின் தொகுதிக்குள் நிற்கிறேன்..! சுற்றிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூட்டம் (இது கனவு என்பதால் ஏற்றுக்கொள்ளவும்) ஏராளமான மூதாட்டிகள் முகத்தில் மகிழ்ச்சியோடு "கை" அசைத்தார்கள்...! 

நானும் கை அசைத்துக் கொண்டே..கார்த்தி சிதம்பரம்ஜியிடம் யார் இவர்கள் என்றேன்.! இவர்கள் எங்கள் ஊர் ஆச்சிமார்கள் என்றார்.. வழக்கம் போல் பாதுகாப்பு வளையம் தாண்டி அவர்களுடன் கை குலுக்க மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தேன்!

அவர்கள் அனைவரும் சிதறி ஓடிவிட்டனர்.!கனவும் கலைந்தது.! ஒரு உண்மையும் உறைத்தது..! ஒரு ஆச்சியை கூட பிடிக்க முடியாத நம்மால் எப்படி.! ச்சே...அத எப்படிங்க என் வாயால சொல்லுவேன்..!

கப்ஸா செய்திகள்..

கப்ஸா செய்திகள்...

பாரதிராஜா - விஜயகாந்த் சந்திப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தனிமை தேடிய கேப்டனுக்கு அன்னக்கொடி ஓடும் தியேட்டர்களில் அது கிடைப்பதாக தெரிந்து அங்கு வந்தார்.. எங்கு குறட்டை.. சாரி...கோட்டை விட்டோம் என்பதை பார்ப்பதற்காக பாரதியும் அங்கு வந்தார்...

இது வரை ஒருவர் கூட வராத இந்த படத்திற்கு இருவர் வந்தது தியேட்டர் முதலாளியை மகிழ்ச்சி கண்மாயில் ஆழ்த்தியது. நமக்கு நேரம் சரியில்லை என்று இருவரும் ஒரே நேரத்தில் நினைத்து கொண்டார்கள்.... 

எப்படி இருக்கீங்க என்று பாரதியிடம் கேப்டன் கேட்க ....யா.. ஐயாம் பைன் பட்.. சபரிங் த மூவி ரிசல்ட்ஸ்.. நானும் எலக்ஷன் ரிசல்ட்ல தவசிங் (சபரிங்ல சபரி வர்றதால கேப்டனும் வேற படம் சொல்றார் என பொருள்)

யா..ஐ நோ.. பட் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு டிபரண்ட் உங்க ஆளுங்க வெளியே போய் டேமேஜ் பண்ணாங்க.. எங்க ஆளுங்க கூட இருந்தே டேமேஜ் பண்ணிட்டாங்க.. யெஸ் திஸ் இஸ் பியூர் பாலிடிக்ஸ்... 

விடுங்க.. உங்களுக்கு அன்னகொடி கிழிஞ்சது எனக்கு கட்சி கொடி கிழிஞ்சது... சரி தமிளர்களை விட்டுடுங்க விஜயகாந்த் அப்படின்னு ஏன் சொன்னீங்க?

ஆக்சுவலி நான் சொன்ன மீனிங்...

நிறுத்துங்க...... முதல்ல நீங்க தமிள்ள பேசுங்க பாரதி...

யா ஐ.. வில் ட்ரை பட் யு குட் நாட் அண்டர்ஸ்டாண்ட் மை பிராபளம்...

(கேப்.சிரித்து) வெக்கமில்லாம என்னை சொல்லிட்டு... தமிளெ வரல... நீங்க தான் தமிள காப்பாத்த போறீங்களா...

ok நவ் ஐ ஸ்பீக் டமில் ஆக்சுவலி 

விடுங்க பாரதி உங்களால முடியாது....

யூ ஆர் அதாவது நீங்க பாலிடிக்ஸ்ல பியூப்புள்ஸ எண்டெர்டெயின் பண்றீங்க ..சோ.. தியேட்டர்ஸ்க்கு பியூப்புள்ஸ் எப்படி வருவாங்க.. 

ஓ... நீங்க ஒளுங்கா படத்தை எடுக்கமாட்டீங்க பளிய எங்க மேல போடுறிங்க.. சரி அப்ப ஏன் தமிள்செல்வன் படத்தை என்னை வச்சு எடுத்தீங்க? 

யா.. ஐ.. டிட்.. கிரேட் மிஸ்டேக் பேசிக்கலி... 

இருங்க பாரதி.. இந்த பேசிக்கலி பெருச்சாளி இதெல்லாம் வேணாம்... நான் சொல்றேன்.. அன்னைக்கு நான் மார்கெட் வேல்யூ ஹீரோ அதான் எடுத்தீங்க இப்ப தமிள் தமிளர்னு உளர்றீங்க... 

பட் ஒன் திங்க் ஐயாம் வில்லேஜ். பெல்லோ....

வில்லேஜா அது உங்க படத்துலதான் இருக்கு... பேச்சுல எங்க இருக்கு.?!

என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்.. ஒகே திஸ் இஸ் இனப் பார் யூ..... 

இந்த ரெக்கார்டு தான் 30 வருசமா ஓடுதே...இதை. தவிர நீங்க தமிள் பேசி ஒரு பய பார்த்ததில்ல... 

ஓகே லீவ் இட் ஐயாம் சாரி அதாவது மன்னிச்சுடுங்க

கேப்டன்... ஏய்ய்ய்ய்ய்ய் மன்னிப்பா..... தமிள்ள எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...

கொந்தளித்த கேப்டனை தியேட்டர் முதலாளி சாந்த படுத்த பாரதியை மற்றவர்கள் அழைத்து செல்ல....

நன்றி.... வில் மீட் யூ அகெய்ன் ..

கப்ஸா செய்திகளுக்காக சென்னையிலிருந்து "சரடு"சரவணன்...

கப்ஸா செய்திகள் ......

சுப்ரமணிய சாமி- நாராயணசாமி சந்திப்பு ...

சென்னை : மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிற்கு விமானங்களை விட அதிகமாக வந்து போகும் நாராயணசாமி வழக்கம் போல் இன்றும் வருகை புரிந்தார் நமது கப்ஸா நிருபர் தவிர வேறு யாரும் இல்லாதது கண்டு அது ஏன் என நம்மிடமே விசாரித்தார்.!

எப்படி சொன்னாலும் 15நாள்னு சொல்லபோறீங்க இதுக்காக இங்க வேஸ்ட்டா வந்துகிட்டு என்று உண்மையைகூறினோம்.பரவாயில்ல நீங்களாவது வந்திங்களே என்றவரிடம் சாரி சார் நாங்களும் உங்களை பாக்க வரலை...

சுப்பிரமணிய சாமிய பாக்க வந்தோம் அப்பிடின்னோம் உடனே நா.சா டென்ஷன் ஆகி இன்னும் 15 நாள்லன்னு ஆரம்பிக்கும் போது பின்னால இருந்து ஒரு குரல் "இன்னும் 15 நாள்ல அமாவாசை  வரும் ஓய்.! ஏன்னா இன்னிக்கு பவுர்ணமி"

திரும்புனா நம்ம சுனா.சானா.!அவர பாத்ததும் நம்ம நா.சா வுக்கு முகம் கருத்திருச்சு (இல்லைனா மட்டும்) ரஷ்யாவுல KGB சதி பண்றா.. கூடங்குளம் ப்ராஜெக்ட்ல 2 லட்சம் கோடி ஊழல் நடத்திட்டா எங்கிட்ட ஆதாரம் இருக்குனு ஆரம்பிச்சார்..

அதுக்கென்ன இப்போ என்பது போல் நா.சா. பார்க்க.. அதுமட்டுமில்ல ஓய்.. ராஜபக்ஷே இப்படி கேவலமா தோத்தாளே அதுக்கு அமெரிக்க சதி தான் காரணம் அதுக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்கு என்றார் சூனா சானா.!

முதல்ல உம்ம கிட்ட ஆதார் கார்டு இருக்கா அப்பிடினு நா.சா கேக்க சு.சா.வரணும் ஆனா CBI காரா சதி பண்ணிட்டா எம்பேர்ல வந்த ஆதார் கார்ட சுப்ரஜித்சிங் அப்படிங்குற பஞ்சாபிக்கு மாத்திட்டா.. அதுக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்குன்னார் 

பேசாமல் நீங்க ரின் சோப் விளம்பரத்துலநடிக்கலாம் எப்படி பாத்தாலும் ஆதாரம் இருக்கு சேதாரம் இருக்குன்னுட்டு சே...?!

ஏன் நீங்க ஒயாம15 நாள்னு சொல்றேளே அதுக்கு இது தேவல..

இங்க பாருங்க ஒரு உறைக்குள்ள ஒரு கத்தி தான் இருக்கணும்..

ஓ புரியறது 2 காமெடியன் இருந்தா டிராஜிடியா போய்டும்னு சொல்லவறேள் அதானே..

அடுத்த தேர்தலில் இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்..

ஏன் இப்பவே சொல்றனே இனி வர்ற எந்த எலக்ஷன்லயும் நீங்க ஜெயிக்க போறதே இல்லை...

பாக்கலாமா பாக்கலாமா இன்னும் 15நாள்ல இதுக்கு பதிலடி தர்றேன்.

இப்ப ஆதாரமே இல்லாம அடிச்சு சொல்றேன் 15 நாள் கழிச்சும் நீர் இதத்தான் சொல்லப்போறேள்..

டென்ஷனான நா.சா..திரும்ப திரும்ப பேசற நீ ஸ்டைலில் பேச அவர் கட்சி தொண்டர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்து கிளம்ப..

நம்ப சுனா.சானா சிரிச்சிகிட்டே கெத்தா கிளம்பிட்டாருய்யா... கிளம்பிட்டாரு..!

கப்ஸா செய்திகளுக்காக மீனம்பாக்கத்தில் இருந்து "சரடு"சரவணன்..


கப்ஸா செய்திகள் ....

மோடி-மன்மோகன் சந்திப்பு.......

புதுதில்லி:இன்று புதுதில்லியில் தூய்மைப்பணிகள் புரிய பிரதமர் மோடி விரைந்தார். இது நாட்டு மக்களை வியப்பிலாழ்த்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே வெளி நாட்டு வாழ் இந்தியராக இருந்த நான் இன்று தில்லிக்கு வந்தது தெய்வச் செயல் என்று மோடியே நமக்கு போன் போட்டு தெரிவித்தார்..!

சாலையில் துரிதமாக அவர் துப்புரவு பணி மேற்க் கொண்டிருந்த போது அவ்வழியே காரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் வந்துவிட்டார்.. முதலில் என்ன செய்வது என இருவருமே யோசிக்க.. சட்டென மன்மோகனுக்கு ஜெ & வை.கோ.சந்திப்பு ஞாபகம் வர காரில் இருந்து இறங்கினார்..!

முன்னாள் பிரதமர் சாலையில் இறங்கியதால் மனமிரங்கி இந்நாள் பிரதமர் மோடி ஓடி சென்று அவருக்கு கை'குலுக்கினார்.. மன்மோகன் அவர்கள் அர்த்த நோஞ்சானாக (புஷ்டி வேணாம்) கை"யைபார்க்க சுதாரித்து மோடி தயாராக வைத்திருந்த தாமரைப்பூ பொக்கேவை நீட்டினார்.

நலமா மன்மோகன் ஜி இப்பதான் நீங்க நிம்மதியா இருக்கிங்க இல்லையா..?! எனக்கேட்டார்.. அதற்கு அர்த்தமில்லாமல் புன்னகைத்து ஆமாவா இல்லையா பாணியில் தலையாட்டி மோடியை குழப்பினார் மோகன்..

என்ன கையில் துடைப்பம் இப்ப நீங்க ஆம் ஆத்மியில சேந்துட்டிங்களா.! என்று கண்ணாலேயே கேட்டார் மோகன்.. அர்த்தம் புரிந்து கொண்ட மோடி"என்ன செய்ய நாட்டில் சேர்ந்த குப்பைகளையும்,நீங்க கடந்த ஆட்சியில் போட்ட குப்பைகளையும் நான் தானே சுத்தப்படுத்த வேண்டியிருக்கு" என்றார்.

நான் இரண்டு தடவை பிரதமரா இருந்து பண்ணாததை அப்படி என்ன தான் புதுசா பண்றிங்கன்னு பார்ப்போம் என்று சொன்னார் (மறுபடியும் கண்ணில்) மோகன்.. மீண்டும் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவீர்களா? என மோடி கேட்ட போது ஆகாயத்தை பார்த்தும் சட்டைபையில் உள்ள சோனியா புகைப்படத்தை எடுத்து பார்த்தும் விரக்தியாக சிரித்தார் மோகன்..!

பரிதாபப்பட்ட மோடியும் கண்கலங்கி கவலைப் படாதிங்க உங்களுக்கு ஒரு பத்ம பூஷனுக்கு ஏற்பாடு செய்யறேன் என்றார்.. அப்போது துரத்தில் அத்வானியின் கார் வருவதை பார்த்த மோடி அவரை கடுப்பேற்ற அவர் வண்டியை மறிப்பது போல சாலைக்கு வந்து மன்மோகனுக்கு மீண்டும் இறுக்கமாக கை குலுக்கினார்...

இது தெரியாத மோகன் சரி விடை பெறுகிறார் போல என்று "சரி போய்ட்டு வாங்க" என்றார் வாய் திறந்து..! அவர் பேசிய அதிசயத்தில் பாரதிராஜா படம் போல அசையும் பொருட்கள் எல்லாம் சில வினாடிகள் தில்லியில் freeze ஆனது..!

பேசாத முன்னாள் பிரதமரையே பேசவைத்த எங்கள் அண்ணனுக்கு ஜிந்தாபாத் என மோடியின் அல்ல கைகள் கோஷமிட.. தாமரைப்பூ போல மோடி சிரிக்க.. அத்வானி முகம் தாமரை போல சிவக்க.. கூலாக கார் ஏறிக் கிளம்பினார் மன்.!

கப்ஸா செய்திகளுக்காக புதுதில்லியில் இருந்து "சரடு"சரவணன்..


கப்ஸா செய்திகள் ....

வை.கோ-விஜயகாந்த் சந்திப்பு ....

ரிஷிவந்தியம் : நேற்று வீட்டுக்கு போவதாக நினைத்து கொண்டு தவறி தன் தொகுதிக்கே போய் விட்டார் கேப்டன்.. பாதை மாறி வந்ததாக டிரைவர் சொன்னதும் அவர் முகத்தில் அன்பாக கை வீசி.. இவன் உளறுறான்.. (அவனுமா!) 

நான் தொகுதி மக்களை பாக்க வந்தேன் என சமாளித்தார்.. வேற தொகுதி போகம கரெக்டா சொந்த தொகுதிகுள்ளயாவது வந்தாரே என்ற அல்ப சந்தோஷ பட்ட மக்கள் கேப்டனை வரவேற்றார்கள்.! அப்போது நிறைய பேர் ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து அங்கு நடந்து வர....

ஓ.! ஏரியாவுல பொங்கல் விழாவா? நடைபோட்டி நடக்குது போலனு நெனச்சு பாக்கெட்டில் இருந்து கேப்டன் 1000 ரூபாயை எடுத்து தலைபாகை அணிந்திருந்த நபரைப் பார்த்து "பெரியவரே இத வாங்கிகோங்க"என்றார்.

பதிலுக்கு அந்த தலைப்பாகை அணிந்திருந்தவர் "என்னை தெரியலயா கேப்டன்" என கேட்க கண்ணை உருட்டி உற்று பார்த்தவர் "நீங்க மைக்கேல் ராயப்பன் தானே"?!? என்று பல்லைக் கடித்து முஷ்டியை ஓங்க.. விபரீதம் உணர்ந்த அவர் தலைப் பாகையை அவசரமாக கழட்ட அட நம்ம வை.கோ..!!!!!

மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காத நம்ம கேப்டன் தனது செயலுக்கு sorry கேட்டார். கட்சி எப்படி போகுது என்று கேட்ட வை.கோ வை கண் சிவக்க பார்த்து என் கண்ட்ரோல்ல இல்லாமல் போகுதுன்னு கண்ணாலயே கேப்டன் சொல்ல..

புரிந்து கொண்டார் வை.கோ. இப்ப கேப்டன் "நீங்க எப்படி இங்க? என்று வாயால் கேட்டாரு,"நடை பயிற்சி அடுத்த போராட்டத்திற்கு முயற்சி" என அடுக்கு மொழியில் மிடுக்காக பதிலளித்தார் வை.கோ. 

"பிரபாகரனுக்காக போராடும் நீங்க ஏன் எனக்காக போராடல"? கேப்டனின் கேள்வி வை.கோ வை குழப்பியது.! "அட நானும் கேப்டன் பிரபாகரன் தானே" என்று கூறியதும் தன் கவலைகள் எல்லாம் மறந்து குலுங்கி குலுங்கி சிரித்தார் வை.கோ.! 

ஒருவாறு சிரித்து முடித்த வை.கோ "கவலைபடாதிங்க வரும் 2016ல நாங்க ஆட்சிக்கு வந்ததும் உங்க பிரச்சினைய தீர்த்து வைக்கிறேன்" என்றார்.இப்ப கேப்டன் வயித்த பிடிச்சுகிட்டு  உருண்டு பெரண்டு பல்டியடிச்சு சிரிச்சாரு. 

ரெண்டு பேருமே கட்சி கவலைகளை மறந்து செஞ்சி காமெடிய பாத்து தொகுதி மக்கள் எல்லாம் ஒரு காமெடி சானல் பாத்த திருப்தியில் கைக் கொட்டி சிரிக்க.. இருவரும் மகிழ்ச்சியாக விடை பெற்று கொண் டார்கள்..

கப்ஸா செய்திகளுக்காக ரிஷிவந்தியத்திலிருந்து "சரடு"சரவணன்..


கப்ஸா செய்திகள்...

கனிமொழி / ஜெயலலிதா சந்திப்பு.....

ஜன 10 ,நேற்று உழைப்பதற்காக ஊட்டி வந்த கனிமொழி அங்கு ஓய்வுக்காக வந்திருந்த ஜெயலலிதாவை சந்தித்தார். கனியின் வருகையை ஒட்டி கொட நாடு பணியாளர்களுக்கு 1 நாள் விடுமுறைவழங்கப்பட்டது..!

கனியை வாசலுக்கே வந்து ஜெ. வரவேற்றதாக வதந்திகள் சொல்கிறது...ஜெ கனியை கனிவோடு நலம் விசாரித்ததாகவும் காபி போட்டு குடுத்ததாகவும் கனியே நம்மிடம் தெரிவித்தார்..!

கனி எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றதை விழுந்து விழுந்து சிரித்து கொண்டே ஜெ. வாழ்த்தியதாக செய்தி குரைப்பு ஒன்று தெரிவிக்கிறது. மானம் நிமித்தமாக (எவ்வளவு நாள் மரியாதைன்னே சொல்றது) நடைபெற்ற இச்சந்திப்பு 15 நிமிடம் நீடித்தது.!

விடை பெறும் போது கனிக்கு 3G செல்போன் பரிசளித்தார் ஜெ. பதிலுக்கு கனியும் நெஞ்சுக்கு நீதி புத்தகம் பரிசளித்து கடுப்பு ஏற்றினார். உள்ளுக்குள் கடு கடு வென்றாலும் இருவரும் சிரித்துகொண்டே புகைப்படம் எடுத்து கொண்டனர்.....

கனி வெளியேறிய அடுத்த மைக்ரோ செகண்டில் ஊட்டிக்கு ஷாப்பிங் போயிருந்த சசி கொட நாடு நுழைந்தார். கனி சந்திப்பை தவிர்க்க நான் ஊட்டி போகவில்லை என வாண்ட்டடாக பேட்டி அளித்து அதை ஊர்ஜித படுத்தினார்..!

கனியும் ஜெவும் சந்தித்தது அரசியல் அல்ல என நமது எம்.ஜி.ஆரில் எம்.ஜி.ஆரே எழுதியுள்ளார் என்று முரசொலியில் கலைஞர் எழுதியுள்ளார்.!

கப்ஸா செய்திகளுக்காக கொட நாட்டிலிருந்து "சரடு" சரவணன்...

கப்ஸா செய்திகள்.. (இன்றைய கப்ஸா..)

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு..

புதுதில்லி: நேற்று ஸ்டாலின் புதுதில்லி வந்திறங்கினார்.. தளபதியின் வருகையை ஒட்டி கழகத்தினர் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், கட்-அவுட்கள், பிளக்ஸ் பேனர்கள் எல்லாம் வைத்து புதுதில்லியை புரசைவாக்கம் ஆக்கினார்கள்.! 

தமிழ்நாடு இல்லத்தை பார்த்து பெருமூச்சு விட்டபடி கடந்து போய் ஒரு ஓட்டலில் தங்கினார் ஸ்டாலின். அந்த ஓட்டலில் உணவருந்த சென்ற போது அங்கு ராகுல் தன் வெள்ளைக்கார தோழியுடன் வெள்ளை நிறக்கோழி சாப்பிட்டு கொண்டிருந்தார்....

தளபதியை பார்த்து திடுக்கிட்ட ராகுல் நிலைமையை சமாளிக்க. ஓ.. என்னை பார்க்க இங்கேயே வந்துட்டீங்களா? என்றார். சளைக்காத தளபதி கழகத்தினர் நினைத்தால் கடலையும் தாண்டுவார்கள் எனக்கூறி வைக்கோல் அரிக்க வைத்தார்!

பேச்சை மாற்ற ராகுல், பாத்திங்களா! Mr. ஸ்டாலின். காஷ்மீர் அரசியல் நிலமை கவலைக்கிடமா இருக்கு என்றார். இந்தியாவில் காங்கிரஸ் நிலமையே கவலைக்கி டமாத்தான் இருக்கு என்று நினைத்து கொண்டு அதை ஆமோதிப்பது போல் சிரித்தார் தளபதி.!

சரி நீங்க ஏன் பிரதமர் பதவி வேட்பாளர் என்பதை மறுத்துட்டிங்க.! அதான் கூட பிறந்தவங்க யாரும் போட்டிக்கு இல்லையே என்றார் ஏக்கத்துடன் ஸ்டாலின்! "ஓட்டலோ குடிசையோ நமக்கு வெரைட்டியா சாப்பிடணும் அதுபோதும்" அண்ணனோ தம்பியோ இருந்தா அவங்களுக்கு வழி விட்டுருப்பேன் என்றார் ராகுல்.!

சட்டென இவருக்கு அண்ணனாவோ இல்ல இவர் நமக்கு தம்பி யாவோ பொறந்திருக்கக் கூடாதான்னு தளபதி கண்கலங்கினார். ஏன் அழறீங்கன்னு ராகுல் கேட்க.. "அன்னையின் பிள்ளைக்கு பதவி காத்திருக்கு... தந்தையின் பிள்ளைக்கு காத்திருப்பதே பதவியாக இருக்கு" என்றார் தளபதி. 

இந்த ரணகளத்திலும் ரைமிங்கா என ராகுல் வியந்து ஆறுதல் கூறினார்..கண்களை துடைத்து கொண்ட தளபதி"சரி என்ன தமிழகத்துல ஒட்டு மொத்தமா நிர்வாகிகளை மாத்திட்டீங்க" என கேட்க ஆமாங்க கோஷ்டி கானம் கூரைய பிய்க்குது...

பேசாமல் சத்யமூர்த்தி பவனை சரவணபவனா மாத்திடலாம்னு கூட நெனச்சதுண்டு புது இளைஞர் படையை கொண்டுவர ஆசைப் படுறேன் என்ற ராகுல் திடீரென... ஹேய்... உங்க கட்சிக்கு நீங்க தானே இளைஞரணி தலைவர் என்று கேட்க..

தளபதி வெட்கத் துடன் தலைகுனிந்து ஆம் என்றார்.nice very nice உங்க பேருக்கு முன்னாடி பட்டபேரு ஒண்ணு.. என்ன சொல்லுவாங்க.. அது ..அது. தளபதின்னு சொல்லுவாங்க...ஆனா நான் சொல்றேன் உண்மையில நீங்க தான் இளையதளபதி.. என்று விஜய்க்கு ஆப்பு வைத்தார் ஸ்டாலின்.

ஓ அவரா! முன்னாடி நம்பள மீட் பண்ணாரு படத்துல பஞ்ச் பேசுற ஆளை கட்சில வச்சா கட்சி பஞ்சராயிடும்னு வேணாம்னு சொல்லிட்டேன்.... 

ஆமாமா உங்களுக்கு பேசாத ஆள் தான் லாயக்கு என்று தளபதி நினைத்துகொள்ள

அடுத்த கோழி ரெடி என தோழி கூவ கட்டி தழுவி விடை பெற்றார்கள் இரு தளபதிகளும்...

கப்ஸா செய்திகளுக்காக புதுதில்லியில் இருந்து "சரடு" சரவணன்...


Sunday 25 January 2015

ஶ்ரீரங்கத்தில் ஒபாமா 3

தன்னிடம் கேள்வி கேட்ட கலைஞரை பார்த்து வியந்த ஒபாமா ஹு இஸ் திஸ் ஓல்டு மேன்.? என்றார் மோடியிடம்.. மோடி மெல்ல ஒபாமா காதருகே வந்து"ஹி இஸ் நாட் எ ஒல்டு மேன்! வெரி போல்டு மேன்" தமிழகத்தின் முக்கிய தலைவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் இருப்பவர் பார்த்து பேசுங்க என்றார்.!

ஓ.மை.காட் 60ஆண்டுகளுக்கு மேலாகவா என வாயைப் பிளந்தார் ஒபாமா.!உடனே கலைஞர்.. ஆம் உடன்பிறப்பே ட்ரூமேன் அவர்கள் அமெரிக்க அதிபராய் இருந்த போது என் அரசியல் வாழ்வை திமுகவில் துவக்கியவன் இன்றும் தாங்கள் அதிபராய் இருக்கும் வரை அயராது உழைக்கிறேன் இது காலத்தின் கட்டாயம் என்றார்.!

ட்ரூமேனுக்கு பிறகு தான் 13 வது அதிபர் என்பதை ஒபாமா எண்ணிப்பார்க்கிறார்.! அமேசிங், மார்வலஸ், ஒண்டர்புஃல், இவ்வளவு ஆண்டுகள் அரசியலிலா ஏன் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லையா.? என்றார் விவரம் தெரியாமல் ஒபாமா.. உடனே கலைஞர் தனது பாணியில் அடுக்கு மொழியும் சேர்த்து ஒரு கவிதை சொன்னார்..!

கதிரவனுக்கும் இரவில் ஓய்வு.. முழுமதிக்கும் உண்டு தேய்வு.. கருணாநிதிக்கு ஏது ஓய்வு.. இதைச் செய்ய வேண்டாமே ஆய்வு.! மொழி பெயர்த்து இதை ஒருவர் ஒபாமாவுக்கு சொல்ல மீண்டும் பிரமாதம் என்றார் ஒபாமா. உங்கள் பேச்சும் அருமை என்றார் ஒபாமா.. பேசி பேசித்தானே அதிகாரத்துக்கு வந்தோம்.. இதோ..!

அன்பு என்பதும் மூன்றெழுத்து, அறிவு என்பதும் மூன்றெழுத்து, கட்சி என்பதும் மூன்றெழுத்து, தேர்தலில் காணும் களம் என்பதும் மூன்றெழுத்து,அக்களத்தில் காணும் வெற்றியும் மூன்றெழுத்து, தளபதிக்கு தடையாய் இருக்கும் அண்ணா என்பதும் மூன்றெழுத்து, அண்ணனுக்கு பிடிக்காத தம்பி என்பதும் மூன்றெழுத்து..

USA என்பதும் மூன்றெழுத்து, ஒபாமா என்பதும் மூன்றெழுத்து, ஈராக் என்பதும் மூன்றெழுத்து, ஒசாமா என்பதும் மூன்றெழுத்து, ட்வின் என்பதும் மூன்றெழுத்து 
டவர் என்பதும் மூன்றழுத்து..என கலைஞர் சொல்லிக்கொண்டே போக...

அய்யய்யோஓஓ... ஸ்டாப் என்பதும் மூன்றெழுத்து எனக் கூவினார் ஒபாமா.. ஒரு நிமிடம் கலைஞர் திகைக்க.. அண்ணாமலை பட பாடல் ஒலிக்கிறது.!

கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ.?  கேப் விட டைமிங்காக கலைஞர் வெறுப்பு என கமெண்ட் அடித்தார்.! மின்னும் ஜாக்பாட் ஜாக்கெட்டுடன் பளீரென குஷ்பு வர பின்னாலேயே ஈவிகேஎஸ் வருகிறார். முன்னாள் தலைவர் என்ற மரியாதையில் குஷ்பு கலைஞரை வணங்க கடுப்பாகிறார் ஈவிகேஎஸ்

என்ன மிஸ்டர் ஒபாமா திருச்சி காங்கிரஸ் கோட்டை இங்கு உங்க பிரச்சாரம் செல்லாது என்று ஈவிகேஎஸ் சொல்ல கவலைகள் எல்லாம் மறந்து கலைஞர் விழுந்து விழுந்து சிரித்தார்.. ஏன் சிரிக்கிறிங்க என ஈவிகேஎஸ் கேட்க.. இல்லை 1967 க்கு அப்புறம் தமிழகத்தில் காங்கிரசுக்கு கோட்டையே இல்லையே..

என்பதை நினைத்தேன் சிரித்தேன் என்றார்.! பதில் சொல்ல முடியாத ஈவிகேஎஸ் ஏதாவது சொல்லுங்க என்பது போல குஷ்புவை பார்க்க.. அவரும் காங்கிரஸ் தான் பாரம்பரிய மிக்க கட்சி என்றார்.. உடனே மோடியிடம் யார் இந்த லேடி சினிமா நடிகை போல் என்றார் ஒபாமா.. இவர் நடிகையே தான் ஆனால் எதிர்க்கட்சி.!

என்று மோடி சொல்ல.. நோ..நோ. மிஸ்டர் மோடி இந்த மாதிரி செலிபரட்டி எல்லாம் வெளிய விட்டு வைக்காதிங்க.. கட்சிக்குள் இழுத்துடுங்க எங்க அமெரிக்காவுல ரீகன் கூட அப்படித்தான் சொல்வார் என்றார். ஆல்ரெடி நடிகர் நெப்போலியன் கங்கை அமரன் எல்லாம் வந்தாச்சே என்றார் மோடி.!

அவங்கல்லாம் யார்னு தெரியாது மிஸ்டர் மோடி.. பட் ஐ லைக் திஸ் லேடி.. யூ ப்ளடி என்ற எரிச்சலான குரல் ஒபாமாவுக்கு மட்டும் ஒலிக்க திரும்பினால் பல்லைக் கடித்த படி மிச்சேல்.. மவனே நீ வா ஒயிட் அவுசுக்கு என்ற பார்வை வேறு.! சுதாரித்த ஒபாமா சட்டுன்னு..  யா.. யா.. யா ஷி இஸ் லுக் லைக் மை சிஸ்டர் என்று உளற..

உன் கலருக்கு குஷ்பு உன் சிஸ்டரா.. பிக்காளித்தனத்தை கூட ப்ளான் பண்ண தெரியாத நீயெல்லாம்...! மிச்சேலின் மைண்ட் வாய்ஸ் அநியாயமாய் அனைவருக்கும் கேட்டது.! இந்த நேரத்தில் குலவை சத்தம் கேட்க 200 பேர் தீச்சட்டி ஏந்தி மஞ்சள் ஆடை வேப்பிலையோடு வர பின்னால் 500 பேர் முளைப்பாரி ஊர்வலம் வர..

அதனை தொடர்ந்து 100 பேர் அலகு குத்தி வர பறவைக்காவடி, பால் காவடி, பன்னீர்காவடி என காவடிகளுடன் பலர் தொடர ஷங்கர் படம் போல 1000 மொட்டைத் தலையர்களின் ஊர்வலம் வர ஒரு கட்டத்தில் ஒபாமாவுக்கே சாமி வந்து ஆடவேண்டும் போல இருந்தது.! என்ன மிஸ்டர் மோடி எதுவும் திருவிழாவா என்றார்!

இல்லிங்க இவங்க எல்லாம்அம்மா கட்சிக்காரங்க.! அந்தம்மா ஜெயிச்ச தொகுதி தான் இது.! அதுக்கு தான் இங்க இடைத்தேர்தல் நடக்குது இந்த முறை நாங்க ஜெயிக்க உங்களை கூட்டிட்டு வந்தேன் அது நடக்காது போல.. இந்த அட்ரா சிட்டிய பார்க்கும் போது நீங்க இங்க வந்தது தப்புன்னு தோணுது.. வாங்க போயிடலாம் என்ற மோடியிடம் கொஞ்சம் இருங்க என்றார் ஒபாமா.!

ஏன் நான் தான் பிரச்சாரம் வேணாம்ன்னுட்டேன் இல்ல வாங்க போகலாம்.. ஒன் மினிட் இங்க நான் உங்களுக்கு பிரச்சாரம் பண்ணலைன்னாலும் இந்த ஊர் அரசியல் தலைவர்கள் எல்லோரையும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.! ம்ம் அவங்களை கூப்பிடுங்க லஞ்ச் சாப்பிட்டுகிட்டு பேசிட்டு போலாம் என்றார்.!

இந்த பேச்சு அருகில் இருந்த மைக்கில் கசிந்து அனைத்து கட்சியினரின் காதிலும் விழ எல்லோரும் ஒபாமா வாழ்க ஒபாமா வாழ்க எனக் கத்தினார்கள். வழக்கம் போல ஒரு தண்ணிவண்டி வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வாழ்க என்று கத்த அனைவரும் கொல்லென்று சிரிக்க பை..பை ஶ்ரீரங்கம்..!



ஶ்ரீரங்கத்தில் ஒபாமா.!

ஒபாமாவின் தாஜ்மஹால் பயணம் ரத்தாகிவிட்ட சூழலில் அதற்கு பதிலாக மோடிக்கு ஒரு சூப்பர் ஐடியா தோன்றுகிறது.! ஶ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஒபாமாவை தமக்கு ஆதரவாக பேச வைக்கும் மாஸ்டர் ப்ளானை சொல்ல ஒபாமாவும் ஶ்ரீரங்கம் பற்றி கேள்விப்பட்டு ஓகே சொல்ல அதகளப்படுகிறது தமிழ்நாடு.. (முக்கியமாக திருச்சி)


வழக்கம் போல அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வசம் திருச்சி ஒப்படைக்கப்பட கெடுபிடிகள் ஆரம்பம்..! சற்று அகண்ட காவிரியை கண்ட அமெரிக்கர்கள் நீர் வழியாக ஆபத்து வரலாம் ஆகவே 2நீர் மூழ்கி கப்பல்களை காவிரியில் கொண்டு வந்து நிறுத்தலாமா என ஆலோசித்தார்கள். குறுக்கிட்டனர் தமிழக அதிகாரிகள்..!

சார் நீங்க நினைக்கிறா மாதிரியெல்லாம் இல்லை கர்நாடகாகாரன் தண்ணி விட்டுருந்தா கூட கொஞ்சம் தண்ணி இருந்திருக்கும் இப்ப இருக்குற தண்ணியில பரிசல் கூட மூழ்காது என்றனர்.! பரிதாபத்துடன் கண் கலங்கிய அமெரிக்கர்கள் சரி சரி.. இங்கு நாங்கள் சொல்லும்படி பாதுகாப்பு தாருங்கள் என்று சொன்னார்கள்.

ஆற்றின் கரைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டன ஒபாமா வரும் வரை மக்கள் யாரும் குளிக்கக் கூடாது (ஆற்றில்) வாகனங்களை கழுவக்கூடாது,துணி துவைக்கக் கூடாது,ஆற்றில் மீன் பிடிக்க கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆறுதலான கெடுபிடி அவர் வரும் வரை ஆற்றில் மண் அள்ளக்கூடாது என்பதே.!

மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் உச்சியில் இராணுவ கூடாரம் அமைக்கப்பட்டு அதி நவீன டெலஸ்கோப் பொருத்தப்பட்டது.. அதன் வழியாக பெரம்பலூரில் உள்ள ராஜா மெடிக்கல்ஸ் கடையின் போர்டை இங்கிருந்தே துல்லியமாக படிக்க முடிந்தது! அந்தளவு பவர்ப்ஃல் டெலஸ்கோப்.!

அந்த டெலஸ்கோப் வழியாக பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு பிள்ளையாரே அமைதியாக உட்கார்ந்திருந்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டு இராணுவ செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டன. ப்ளாட்பாரவாசிகள் விரட்டப்பட்டனர்.

பிளாட்பாரக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. கொத்து புரோட்டா போடுவதும் தடை செய்யப்பட்டது.. ஓபாமா வரும் நாளும் அதற்கு முந்திய நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.! இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வெளிவரத் தடை விதிக்கப்பட்டது.. கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது போல.!

காஷ்மீர் மக்களின் வாழ்க்கை என்னவென்று திருச்சிவாசிகள் உணர்ந்த நாள் அது.! ரயில் நிலையம் விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு.. தெருவெங்கும் ராணுவம், மத்திய ரிசர்வ்போலீஸ், அமெரிக்க அதிகாரிகள் என பலத்த பாதுகாப்பு..!
ஶ்ரீரங்கத்தில் தான் இன்னும் அதிகளவு பாதுகாப்பு.!

ஒபாமாவின் பயணத்திட்டத்தில் அவர் பேசும் இடம் என்பதால் பாதுகாப்பு வளையத்தின் முக்கிய அடுக்கில் இருந்தது ஶ்ரீரங்கம். அரங்கனின் கோவில் முழுவதும் அமெரிக்கர்கள் பாதுகாப்பு..! ஒவ்வொரு அர்ச்சகருக்கும் பக்கத்திலும் ஒரு ராணுவ வீரர் நின்று கொண்டு இருந்தார்.. கோவில் மக்களின் கடவுள் நம்பிக்கை மிகுந்த இடம் என்பதாலும் பாஜக கட்சி என்பதாலும் அதை மட்டும் பூட்டவில்லை.! 

அர்ச்சகர் கையில் வரும் அர்ச்சனை தட்டெல்லாம் மெட்டல் டிடெக்டர்களால் பரிசோதிக்கப்பட்டது..தேங்காய்&பழம் எதற்கு, துளசி &மாலை எதற்கு, தீர்த்தம் எதற்கு, ஜடாரி எதற்கு ஆயிரம் கேள்விகள்.! நல்லவேளை அரங்கன் உறக்கத்தில் இருந்தான் இல்லை எழுந்து வந்து அறைந்திருப்பான்.!

அமெரிக்கர்களுக்கு மட்டும் பிரபந்தம் தெரிந்திருந்தால் அர்ச்சகர்களாகவே மாறி இருப்பார்கள்.. அது போல ஆச்சாரகேடு எதுவும் நடக்கவில்லை.! எல்லா ஶ்ரீரங்க வாசிகளுக்கும் டைடல் பார்க்கில் வேலை பார்ப்பவர் போல போட்டோவுடன் ஐ.டி கார்டு வழங்கப்பட்டது.அதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் தான் தெருவுக்குள் போய் வரலாம்.! லெச்சு பாட்டி தான் பிடிவாதம் பிடித்தாள்.!

என் ஆம்படையான் போனதுக்கப்புறம் தாலியையே கழட்டி வச்சவ இப்போ இத மாட்டிக்கிறதான்னு..அவளுக்கு மட்டும் சுருக்கு பையில் வைத்துக் கொள்ள ஸ்பெஷல் அனுமதி.! தெருவில் எல்லோரும் பேசியது அந்த ஐ.டி கார்டு பற்றித்தான்.. 
ஏண்டா வரதா யூ.எஸ்காரா குடுத்த ஐடி கார்டு பாத்தியோ எவ்ளோ வழவழன்னு.. அழகா நம்மவாளை போட்டோ எடுத்து கொடுத்துருக்கா இந்த ஆதார் கார்டும் வோட்டர் கார்டும் எடுக்குறவா கிட்ட போய் இவாளாண்ட கத்துக்க சொல்லணும்.!

தேரடி வீதிகளும் அடையவளஞ்சான் உள்ளிட்ட வீதிகளும் பாதுகாப்பு வீரர்களால் நிறைந்தது.! எல்லார் வீட்டு மாடியிலும் பல துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் புரிந்தனர்.! மாமிகளும், பாட்டிகளும், காக்காய் விரட்ட ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் மாடியில் வடாமோ, மிளகாயோ காயப்போட்டு விட்டு.. ராணுவ வீரரை பார்த்து..

ஏண்டா அம்பி..! சித்த இதை பார்த்துகோடா என்று சொல்லிவிட்டு பாராயணம் படிக்கவோ டிவி சீரியல் பார்க்கவோ கிளம்பினார்கள்.! ஊரெங்கும் போஸ்டர்கள் அலங்கார வளைவுகள், தோரணங்கள்.இதோ இன்று ஒபாமா வரும் நாள்..

பாதுகாப்பு காரணமாக தமிழிசை, பொன்னார், இல.கணேசன் மட்டும் திருச்சி விமான நிலையத்தினுள் காத்திருக்க கட்சியினர் விமான நிலையதிற்கு வெளியே கூடி இருந்தனர்.! தன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வந்திறங்குகிறார் ஓபாமா& மிச்சேல் பின்னால் அமித்ஷாவுடன் மோடியும் வர மிகுந்த மரியாதையுடன் வரவேற்பு.

அது முடிந்ததும் விமான நிலயத்தில் விமானம் நிற்கும் இடத்திற்கே ஒபாமாவின் பீட்ஸ் கார் வந்து கீறிச்சிட்டு நிற்க அதில் ஏறி ஶ்ரீரங்கம் புறப்படுகிறார்கள்.! இனி

வரும்...