Friday 28 August 2015

கபாலி.

#கபாலி_திரைக்கதை

கபாலி வடசென்னையில் ஒரு தாதா, மீனவ நண்பன்.. தன் தேவைக்கு மேலே பிடிக்கின்ற மீன்களை ஏழைகளுக்கு கொடுத்துவிடுவான் ஆனால் அவர்களின் ஏழ்மையை இதுவரை அவன் ஒழித்ததே இல்லை. இதற்காக யாரும் அவனைத் தவறாக எண்ணவேண்டாம் ஏனெனில் அவன் மீது குற்றமில்லை ஸ்க்ரீன் ப்ளேவே அப்படித்தான் எந்த டைரக்டரும் அப்படி சிந்திக்கவில்லை.

கடல் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மலேசிய நாட்டு மாணவி ராதிகா அந்த குப்பத்துக்கு வருகிறாள்.. அவளுக்கு உதவுகிறான் கபாலி.. அவள் தங்கியிருப்பது கபாலிக்கு சொந்தமான ஒரு வீட்டில் தான்.. ஒருமுறை ராதிகா வீட்டுக்கு வரும் கபாலிக்கு அவள் ஒரு குட்டி மேசை மீது வைத்து உணவு பரிமாறுகிறாள்.. அந்த மேசை தான் டேபிள்மேட்.

அதன் அழகில் மயங்குகிறான் கபாலி.. அதில் 18 வகையான பயன்பாடுகள் இருப்பது பற்றி தெரிந்ததும் இன்னும் ஆவலாகிறான்.. அதற்குள் அந்த குப்பம் முழுக்க அந்த டேபிள்மேட் பற்றி தகவல் பரவ "அந்த ஏரியாவுல இருக்கு இந்த ஏரியாவுல இருக்கு மேலத்தெருவுல இருக்கு கீழத்தெருவுல இருக்கு ஆனா நம்ம குப்பத்துல இருக்கா"ன்னு மக்கள் ஏங்குகிறார்கள்.

அப்போதே அந்த ஏழைகளுக்கு வீட்டுக்கு ஒரு டேபிள்மேட் வாங்கித்தர முடிவு செய்கிறான் கபாலி.. அதற்கு இங்கு வேலை பார்த்தால் ஆகாது என மலேசியா செல்ல முடிவெடுக்கிறான். ராதிகாவின் துணையுடன் மலேசியா வருபவன் அங்கு மலேசிய டேபிள்மேட் கம்பெனியிலேயே வேலைக்கு சேர்கிறான்.. அவனுக்கும் 50805080 என்ற எண் வழங்கப்படுகிறது.

தினசரி அந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுப்பவர்களை கண்டுபிடித்து வீடு தேடிப்போய் அடித்து உதைத்து டேபிள் மேட் வாங்க வைக்கவேண்டும் இதுதான் கபாலியின் வேலை.. ஏற்கனவே குப்பத்துராஜா,காளி, பில்லா, ரங்கா, தீ, போக்கிரிராஜா, நல்லவனுக்கு நல்லவன், பாட்ஷா, என பல அடிதடி அனுபவங்களில் வல்லவனான கபாலி தூள் கிளப்புகிறான்.

மலேசியாவே அவனைக்கண்டு நடுங்குகிறது அவன் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் டேபிள் மேட்டாக வாங்கி குப்பத்துக்கு அனுப்புகிறான் குப்பத்து மக்கள் அனைவரும் பழைய சோறை அதில் வைத்து சாப்பிட்டு ஆனந்தமாக வாழ்கிறார்கள்.. அவ்வப்போது டொக்..டொக்.. என அதில் தாளமிட்டு தங்கள் மகிழ்ச்சியை குப்பத்தில் எதிரொலித்து வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில் கடல் ஆராய்ச்சிக்கு போன ராதிகாவை ஒரு பாம்பு மீன் கடித்துவிடுகிறது இதனால் ராதிகா உடல்நிலை பாதிப்படைந்து நோய் வாய்ப்படுகிறாள் அவளது தலைமுடி உதிரத் தொடங்குகிறது இதற்கு தென்அமெரிக்காவின் வடக்கில் தென்கிழக்கே வடகிழக்கு நோக்கி அமைந்துள்ள தென்மேற்கு என்னும் நிறுவனத்தில் மருந்து உள்ளது அந்த மருந்து வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என நாலா திசைகளிலும் பிரபலம்.

அந்த மருந்தின் பெயர் அர்மைவாட்டின் என அறிகிறான் அவர்களும் கபாலி வேலை பார்க்கும் கம்பெனி போல 50905090 என ஒரு நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லுகிறார்கள். கபாலி மிஸ்டுகால் தர அங்கிருந்து ஒரு பயங்கர அடியாள் கும்பல் கபாலியைத் தேடி வருகிறது அவர்களும் கபாலி போல மிஸ்டுகால் கொடுப்பவர்களை வதைக்கும் கும்பல் தான்.

ஆனால் கபாலி அடி உதை தான் தருவான் இவர்கள் ஆளையே க்ளோஸ் செய்யும் அநியாயக்காரர்கள் என்பது தெரிந்து வெகுண்டு எழுந்து பீட்டர் ஹெய்ன் இல்லாமலேயே சண்டைக்கு தயாராகிறான்.. சண்டை முடிந்ததும் கபாலி ஏமாந்த நேரத்தில் ராதிகாவை கடத்திப் போகிறது வில்லன் க்ரூப்.. ஆவேசமான கபாலி அமெரிக்க கைக்கூலியான அந்த நிறுவனத்துடன் 

மோத சபதமேற்கிறான். கபாலி சபதத்தில் வென்றானா, ராதிகா உயிர் பிழைத்தாளா, அவளுக்கு மயிர் மீண்டும் வளர்ந்ததா, கபாலி கடைசியில் இருக்கப்போவது குப்பமா, மலேசியாவா அல்லது வழக்கம் போல் இமயமலையா இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விரைந்து வருகிறான் கபாலி.. மீதியை வெண்திரையில் (அழுக்காயிருந்தாலும்) காண்க..

#மிஸ்பண்ணிடாதிக_அப்புறம்வருத்தப்படுவீக

காஸ்ட்லி பர்ச்சேஸ்..

10 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்த கிரானைட் மாளிகை.. இந்தர்மஹால்... சுற்றிலும் ஆஸ்திரேலியன் கிராஸ் என்னும் பச்சைப் பசும் புல்வெளிகள் பழ மரங்கள் வண்ண மலர்கள் நிரம்பியிருக்கும் தோட்டம் பளிங்கு நீருற்றுக்கள் நவீன எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலித்தது..

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ஆசியாவின் 3 வது பணக்காரரும் உலகளவில் 30 வது கோடீஸ்வரருமான தொழிலதிபர் இந்திரஜித்தின் பங்களா அது ஏறத்தாழ அங்கு பணிபுரிவர்களே 500 பேர். 

போர்டிகோவில் பெண்ட்லி, ரோல்ஸ்ராய்ஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர், லேண்ட் க்ரூசியர், வால்வோ, லெக்ஸஸ், பென்ஸ், ஹம்மர், பி.எம்.டபிள்யூ கார்கள் அணிவகுத்து நின்றன. பரபரவென அந்த மாளிகையில் இருந்து வெளிப்பட்டார் ப்ருதிவ் கபூர்.

அந்த வீட்டின் தலைமை செஃப் உலகில் பெரிய பெரிய ஏழு நட்சத்திர ஓட்டல்களில் பணி புரிந்தவர் தற்போது ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளத்தில் இந்திரஜித்தின் தலைமை சமையல் நிபுணராக இருக்கிறார். நீல நிற பென்ஸ் வண்டியை பளபளப்பாக துடைத்துக் கொண்டிருந்த டிரைவரை அணுகி கடைக்குப் போக காரை எடுக்கச்சொன்னார்.

பொதுவாக பெரும்பாலும்வெளியே போவது அவரது உதவியாளர்கள் தான்..மிகமிகமிக முக்கியமான போது தான் அவரே போவார். இது டிரைவருக்கும் தெரியும். பரபரப்புடன் வண்டியை எடுத்தார்... நகரின் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு வண்டியை விடச் சொன்னார்.. மிக மிக முக்கியமான வேலை அதுதான் என அவரே முணுமுணுத்துக் கொண்டார்.

சூப்பர் மார்கெட் முதலாளிக்கு போன் செய்திருப்பார் போலும் வாசலில் வந்து இவரை வரவேற்றுக் கூட்டிபோனார்.. என்ன ப்ரித்திவி சார் சொல்லியிருந்தா நானே வந்து இருப்பேனே என்றார் முதலாளி.. இல்லை மிக மிக முக்கியம் அதான் நானே வந்தேன் என்றார்.. சொல்லுங்க சார் என்ன வேணும் என முதலாளி கேட்டதற்கு கீழே உள்ள வரியைச் சொன்னார் ப்ரிதிவ் கபூர்...

#இரண்டு_கிலோ_வெங்காயம்

Monday 17 August 2015

ராதுபலி.

#ராதுபலி

பாகுபலியை மிஞ்சும் ஒரு பிரம்மாண்டமான புதிய சினிமாக்கதை

ராதாவும் ராஜாவும் தம்பதியினர் இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்பு அந்த ஊர் நாட்டாமை ராஜாவின் அப்பா பகிரதன் அடுத்த நாட்டாமையாக ராஜாவை தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறார் ராஜாவின் சித்தி வைதேகி அவர் மகனை நாட்டாமையாக்க விரும்பி காய் நகர்த்தி நயவஞ்சகமாக பேசி பகிரதனிடம் பழைய சத்தியத்தை நினைவூட்டுகிறார்.

வாக்குத் தவறாத எர்வாமேட்டின் பற்றித் தெரியாத கவரிமான் ஜாதியான பகிரதன் வைதேகியின் பேச்சைக் கேட்டு அவர்களை ஊரை விட்டு வெளியேற தீர்ப்பு சொல்லிவிடுகிறார். அவர்களும் குடும்பத்தை விட்டு விலகி வந்து ஊருக்கு வெளியே வசிக்கிறார்கள். ராஜாவின் தம்பி இளங்கோ அண்ணன் மேலுள்ள பாசத்தால் அவர்களோடு வந்துவிடுகிறான்.

இடையில் புத்திரசோகத்தில் பகிரதன் இறக்க அமெரிக்கா போயிருந்த வைதேகி மகன் சரத் ஊர் திரும்புகிறார்.. நடந்ததை கேள்விப்பட்டு அவர் தன் தாயை திட்டிவிட்டு போய் அண்ணன் ராஜாவை ஊருக்கு அழைக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனவே அப்பா தந்த தண்டனைக்காலம் முடியும் வரை நான் ஊருக்கு வரமாட்டேன் என்கிறார் ராஜா.

கண்ணீருடன் ராஜாவின் அங்கவஸ்திரத்தையும் சொம்பையும் கேட்டு வாங்கி இனி நம்ம ஊரில் இது தாண்ணே தீர்ப்பு சொல்லும் என நா தழுதழுக்க கூறு திரும்புகிறார் சரத். இப்படியாக இவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்க ஒருநாள் ராதா அதிர்ச்சியாகிறாள். அவளது ஃபேஸ்புக் இன்பாக்ஸில் சரவணன் என்பவன் அடிக்கடி டார்ச்சர் கொடுக்கிறான்.

அவள் பதிவிடும் புகைப்படங்களுக்கு cute darling, awesome dear, wow looking like angel, my sweety இப்படி அவன் அட்டூழியத்தை கண்டு வெறுத்து அவன் இன்பாக்ஸ் போய் தான் இன்னொருவர் மனைவி என்கிறாள் ராதா.. அதனாலென்ன ஃபேஸ்புக்கில் அதெல்லாம் சகஜம் டியர் அப்புறம் எதுக்கு இங்க வர்ற இந்தா இந்த விடியோ பாரு என ஆபாசமாக ஒரு படம் அனுப்பி அநாகரீகமாக பேசுகிறான் சரவணன்.. 

வெகுண்டெழுந்த சீதா சரவணனை திட்டி போஸ்ட் போட அதுக்கு நிறைய லைக்கும் சரவணனை திட்டி நிறைய கமெண்டும் வருகிறது. அவனை பிளாக்கும் செய்கிறாள் அதனால் கொதித்த சரவணன் தன் தங்கை சூர்யாவிடம் சொல்லி ராதாவைப் பற்றி அசிங்கமாக பதிவிட்டு மானத்தை வாங்கு என்கிறான் அவளும் அப்படியே செய்ய இதை மச்சினன் இளங்கோவிடம் சொல்கிறாள் ராதா.

இளங்கோவும் சூர்யாவுக்கு போக் செய்து அவள் கவனத்தை கவர்ந்து முகநூலில் இணைகிறான். ஒருவழியாக அவள் நம்பிக்கை பெற்றதும் நைசாக ராதா பற்றி பேசி அவளிடம் இருந்து தகவல்களை இன்பாக்ஸில் வாங்கி அதை ஸ்கிரீன்ஷாட்டாக போட்டுவிடுகிறான்..இந்த தகவல் பரவி சூர்யாவின் ஐ.டி ரிப்போர்ட் செய்யப்பட்டு ஐ.டிபிளாக்காகி அவள் மூக்குடைகிறாள்.

வெகுண்டெழுந்த சரவணன் தன் தம்பி சபேசனை அழைத்து ஒரு ஃபேக் ஐடி க்ரியேட் செய்யச் சொல்லி அதன் மூலம் ராதாவை நட்பாக்கிக் கொள்ள உத்தரவிடுகிறான். சரி என்று சொல்லிவிட்டு சபேசனும் சந்திரா என்ற பெண் பெயரில் ஐ.டி ஆரம்பித்து ராதாவுடன் நட்பாகிறான்.. அவனை பெண் என்றே எண்ணிய ராதா அப்பட்டமாக நம்புகிறாள். 

ஒருநாள் ஃபேஸ்புக் மீட் போகலாம் வர்றியா ராதா என சபேசன் சாட் செய்ய ராதா நான் அங்கெல்லாம் வருவதில்லை வேண்டுமானால் என்கணவரை அனுப்புகிறேன் என்கிறாள் சரி சரி நீவந்தாலென்ன அவர் வந்தாலென்ன அவரை அனுப்பு என்கிறான்/ள் சபேசந்திரா.. ராஜாவும் அங்கு கிளம்பும் முன் இளங்கோவை ராதாவுக்கு காவல் வைத்து விட்டு செல்கிறான்.

இதற்குள் ராஜாவின் ஐடியை ஹேக் செய்த சபேசன்.. அதிலிருந்து இளங்கோவின் இன்பாக்ஸிற்கு நீயும் மீட்டுக்கு வா என செய்தி அனுப்புகிறான். இளங்கோ அதை நம்பாமல் இருக்க ராதா அவனை வற்புறுத்தி அனுப்பிவிடுகிறாள் இளங்கோ போவதற்கு முன் வீட்டில் உள்ள Wi-Fi யை அணைத்துவிட்டு நான் வரும்வரை இதை ஆன் செய்யாதிங்க என அண்ணியிடம் சத்தியம் வாங்கிவிட்டு கிளம்புகிறான்.

அவன் கிளம்பிய சில நிமிடத்தில் சபேசனிடம் இருந்து மொபைலில் மெசேஜ் வருகிறது.. எங்க இருக்க ராதா நான் உன் வீட்டுக்கிட்ட வந்துட்டேன் ஒரு உதவி 
வேண்டும் என்று.. பரபரப்பான ராதா சந்திரா தான் வர்றாங்கன்னு வெளியே வர பெண் உருவில் இருந்த சரவணனை சந்திரா என்றே நம்பினாள்.

என்ன உதவின்னு கேட்க என்னோட நெட் தீர்ந்துடுச்சு உடனே நான் ஒரு மெயில் அனுப்பணும் உன் வீட்டு Wi-Fi யை 5 நிமிடம் உபயோகிக்கலாமான்னு கேட்க ராதாவுக்கு சத்தியம் ஞாபகம் வர தவித்து நிலையை கூறுகிறாள் சட்டென சந்திரா உருவில் இருந்த சரவணன் நீ தானே ஆன் செய்யக்கூடாது நான் செய்யலாமில்ல என்றாள்/ன்.

இந்த டீலிங் மிகப்பிடித்துப் போக சந்திராவை வீட்டிற்குள் அனுமதிக்கிறாள் ராதா.. வீட்டிற்குள் நுழைந்து Wi - Fi ஆன் செய்வது போல பாவலா காட்டிய சரவணன் சடாரென்று ராதா மீது மயக்கமருந்து ஸ்பிரே அடிக்க ராதா மயங்கி விழ வாசலில் வேகமாக வந்து நின்ற தன் அடியாட்களின் காரில் (சத்தியமா சுமோ இல்ல) ராதாவுடன் பறக்கிறான் சரவணன்.

மீதி ராதுபலி பார்ட் -2 வில் விரைவில்

டென்மார்க்.

டென்மார்க் என்றவுடன் பால் பண்ணைகள் நம் நினைவுக்கு வரும்.. இந்த நாட்டில் ஏராளமான பால் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்த்துள்ளது.. பால் பொருட்கள் தயாரிப்பில் நவீன தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்பு மற்றும் அவற்றின் ஆரோக்கியத்திற்கான நிறுவனங்களும் நிறைந்து உள்ளது.  

உலகில் சிறந்த பால் பண்ணைகள்  டென்மார்க்கில் அமைந்ததற்கு முக்கிய காரணம் நகர பகுதிகளை விட கிராமங்கள் மிக அதிகம்.கால்நடை வளர்ப்பு, மேய்ச்சல் நிலங்கள், தீவனங்கள் தயாரிப்பு இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கிராம புறங்களை, நிலங்களை அக்கறையோடு  பாதுகாத்து வருகிறார்கள். 

முறையான ஆவணங்கள் இருந்தால் பால் பண்ணை அமைக்க 1மணி நேரத்தில் வங்கிக்கடன் கிடைக்கும்.. அதே ஒரு நட்சத்திர ஓட்டலோ, ஷாப்பிங் மாலோ அமைக்க என்ன முறையான ஆவணங்கள் இருந்தாலும் குறைந்தது 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் கிராமங்களை போற்றுகின்றனர்.

இங்குள்ள "வாம்ப்பர்ட்" என்ற ஊரில் எங்கள் நிகழ்ச்சி..ஓஸ்லோவில் இருந்து பண்டிலா ஏர்போர்ட்டை அடைந்து அங்கிருந்து 1மணிநேர கார்ப் பிரயாணம் இரவுப்பயணம் என்பதால் ஒன்றும் தெரியவில்லை.. விடிந்ததும் வெளியே வந்து பார்த்தால்..ஆஹா.. அழகான ஐரோப்பிய கிராம வாழ்க்கை.

பசுமை வயல்களுக்கு நடுவே அழகிய பண்ணை வீடு நாங்கள் போனது கடும் பனி காலமனதால் அந்த காலத்தில் விளையும் ஒரு வகையான புற்களை பயிரிட்டு இருந்தார்கள்.. யூகலிப்டஸ் மரம் போன்ற ஒரு குட்டிச் செடி.. பண்ணை வீடுகள் என அந்தப்பகுதியே ரம்மியமாக இருந்தது.

அங்குள்ள பசுக்களை பார்க்க ஆவலாக இருந்தது குளிர் காரணமாக மாடுகளை வேறு கதகதப்பான கூடத்திற்கு மாற்றி விட்டதால் காண முடியவில்லை. வெளியே கிராமமாக இருந்தாலும் உள்ளே ஹைடெக் வசதி வீடு..200 தமிழ்க் குடும்பங்கள் வழக்கம்போல் அதே அன்பு உபசரிப்பு.

இங்கு இரவு நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு உறைய வைத்த குளிரான அனுபவம்.. அங்கிருந்து கோபன்ஹேகன் விமான நிலையம் சென்று மீண்டும் ஜெனீவாவில் இறங்கவேண்டும்.. அதிகாலை 3 மணிக்கு டிரெயின் நாங்கள் இரவு ஒருமணிக்கே அங்கு போய்விட்டோம்.

அந்த ரெயில் நிலையம் ஒரு 18 ஆம் நூற்றாண்டு கட்டிடம் மலைப் பகுதிகளில் உள்ளது போல கல்லால் கட்டப்பட்ட கட்டிடம்.. அடித்த குளிர் அப்படியே உள்ளே இறங்கியது அதிகபட்சம் அரைமணி நேரத்துக்கு மேல் தாங்க முடியவில்லை வெயில் தாங்கியது போல குளிர் தாங்க முடியவில்லை.

உல்லன் கிளவுசுகளுக்குள் விரல்கள் விறைத்ததை உணர முடிந்தது.. பற்கள் இறுகிக் கொண்டன.. உடல் நடுங்க ஆரம்பித்தது..எங்களை இறக்கி விட்டுவிட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவர் மட்டும் எங்களுடன் இருக்க மற்றவர்கள் போய்விட்டனர்.. இருந்தது ஒரே கார் நாங்கள் 13பேர்.

அதில் நான்கு பேர் பெண்கள் அவரது காரில் ஹீட்டரை போட்டுவிட்டு முதலில் ஒரு 6 பேர் 10 நிமிடம் அடுத்த 10 நிமிடத்தில் அடுத்த 6 பேர் இப்படி மாறி மாறி அமர்ந்து எங்களை வெப்பப் படுத்தி கொண்டோம். இப்படி ஒரு ஒரு மணிநேரம் திடீரென அய்யோ என்றார் அமைப்பாளர்.!

என்னங்க என்றோம் வண்டியை ஆன் செய்து ஹீட்டர் உபயோகித்ததால் பெட்ரோல் அளவு குறைந்திருந்தது இங்கிருந்து அடுத்த பெட்ரோல் பங்க் போக 35 கி.மீ தூரம் அவர் சுமார் 100 கி.மீ பயணிக்க வேண்டும்.. இப்போது இருக்கும் பெட்ரோல் அதிகபட்சம் 40 கி.மீ தான் வரும் ஆகவே..

வண்டியை அணைத்து விட்டு மீண்டும் குளிர் குகைக்கு திரும்பினோம். மணி 2 இனி அடுத்த ஒரு மணிநேரம் மீண்டும் குளிர் அரக்கனின் பிடி இறுகியது.. அப்போது தான் ஒரு யோசனை வந்தது பீட்ஸா அட்டைப்பெட்டிகள் காரில் இருந்தது ரயில் நிலைய குப்பைக்கூடையிலும் நிறைய காகிதங்கள்..!

ஆளுக்கு ஒரு கை அள்ளி ரயில் நிலையத்திற்கு வெளியே எடுத்து வந்து கொட்டி தீமூட்டினோம்... பற்றாக்குறைக்கு எங்கள் பெட்டியில் எங்களது அழுக்கு ஆடைகளும் அங்கு போடப்பட்டன.. அந்நிய துணிகளை எரித்தது அன்றைய சுதந்திர போராட்டம் சொந்தத் துணிகளையே எரித்தது..எங்கள் தந்திர போராட்டம்.. 

10 நிமிடம் கூட இருக்காது விரைந்து வந்து நின்றது ஒரு கார்.. இறங்கியவர் அந்த ஸ்டேஷன் அதிகாரி.. இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்றவர் தீயை அணைக்கச்சொன்னார் உள்ளே எங்களை அழைத்து போய் அவரது அறையைத் திறந்து ஹீட்டரை ஆன் செய்தார்.10 நிமிடத்தில் இன்னும் 4 ரெயில்வே பணியாளர்கள் வந்தார்கள்.. அவர்கள் டூட்டி நேரம் காலை 3 மணிக்கு தானாம்

ஆனால் அதுவரை நிலைய பாதுகாப்பில் இரண்டு செக்யூரிட்டிகள் அங்கு இருக்கவேண்டும்..அவர்கள் எங்கே? ஏன் பயணிகளை இப்படி நடுங்க விட்டீர்கள் என சத்தம் போட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.இரு செக்யூரிட்டிகளில் ஒருவருக்கு திடீரென உடல் நலக் குறைவானதாகவும் மற்றவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் தான் யாருமே இல்லை என்பதும் தெரிய வந்தது.. 

அவ்வளவு பெரிய ஸ்டேஷனுக்கு மொத்தமே 6 பேர் தான் பணியாளர்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயம். இப்போது மணி 2:45 ரெயில் 20 நிமிட தாமதம் என்றார்கள் கடும் பனிப் பொழிவு காரணமாக என்றார்கள்.. ஒரு வழியாக ரயிலில் ஏறியதும் தான் குளிர் அடங்கியது.. 3 மணிநேர பயணத்திற்கு பின் கோபன்ஹேகன் விமானநிலையத்திற்கு உள்ளேயே டிரெயினில் இருந்து இறங்கினோம்.

லட்சகணக்கான வெண் இறகுகள் பறப்பது போல பனி பெய்து கொண்டிருந்தது ஏதோ தேவர்கள் பூமாரி பொழிந்தது என்பார்களே அது போல் விமானமும் 3 மணிநேர தாமதம் என்றார்கள் ஆனால் கதகதப்பான அந்த அழகிய விமான நிலையத்தின் எழிலில் குளிரை மறந்தோம்.

விமானம் தாமதமானதால் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவு.. டென்மார்க்கின் பாலினால் தயாரிக்கப்பட்ட பல வகை உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிட்டோம்.. செமி ஸ்லீப்பர் இருக்கைகள் கொண்ட லாஞ் தந்தார்கள் நன்கு தூங்கினோம். டென்மார்க்கிற்கு கனவில் 100 மார்க் போட்டேன்.


இங்கு என் உள்ளே " வெளியே" புகைப்படங்கள்.

Sunday 16 August 2015

Bergan

Bergen... உலக உருண்டையின் கழுத்துப்பகுதி.. இதற்கு மேலே க்ரீன்லாந்து அதன் பிறகு ஆர்டிக் பனிப்பிரதேசம் நார்வே நாட்டின் முன்னாள் தலை நகரம்.. ஸ்காண்டிநேவிய அரசு ஆட்சி புரிந்த இடம்.. நார்வேயின் உச்சியில் அமைந்த்துள்ள பழம் பெருமை வாய்ந்த அழகான நகரம்..

பனிச்சிகரங்கள், உறை பனிக் கடல், பழம் பெருமை வாய்ந்த கட்டிடங்கள், சிலைகள், அருங்காட்சியகங்கள் நிறைந்த நகரம்... உலகத் தரம் வாய்ந்த பனிச் சறுக்கு மைதானங்கள் இங்கு உண்டு.. மிகப்பெரிய கப்பல் துறைமுகமும் விதவிதமான நவீன படகுகளும் உள்ள அழகிய துறைமுகம்.

பனி மலைகளை குடைந்து போடப்பட்ட வெகு நீளமான மலைக் குகை பயணம் சிலிர்ப்பூட்டும் .. தற்போதைய தலை நகரான ஓஸ்லோவிலிருந்து 7 மணி நேர ரயில் பயணம். பசுமை புல்வெளிகள், அழகிய பனிமலைகள் என கண்கொள்ளாக் காட்சி.. கோ" படத்தில் என்னமோ ஏதோ பாடல் படமாக்கப்பட்ட இடம் என்றால் திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு புரியும்...

அங்கு ymca விடுதியில் உள்ள டார்மெட் ரி என்னும் வகை அறைகளில் தங்கியிருந்தோம்.. ஒரு அறையில் நான்கு பேர் இரட்டைக் கட்டில் அப்பர் பெர்த் உடன் இதற்கே 200 டென்மார்க் ரூபாய்கள்.. (டேனிஷ் டாலர்) கிட்டத்தட்ட நம்ம ஊர் காசுக்கு 10 ஆயிரம் ரூபாய்..! (2010இல்)

சாக்லெட் தூவப்பட்ட பன்.. கொய்யாப்பழ ஃபேளவரில் Fanta, மெகா சைஸ்களில் பீட்ஸா என எங்கள் பயணம் முழுவதும் (ஒரே டைப்) சாப்பிட்ட எங்களுக்கு YMCA வில் காலை ஆச்சரியம் காத்திருந்தது.. உணவு ஹாலுக்குள் நுழைந்ததும் பிரமிப்பானோம்.

சுடச்சுட இட்லிகள், தோசைகள், பூரிக்கிழங்கு, சட்னி, சாம்பார், ஈழத்து சிறப்பான சம்பல், ஆம்லெட்டுகள், இடியாப்பம் தேங்காய்ப் பால், அசைவர்களுக்கான பெப்பர் மட்டன் பாயா, தர்பூசணி&லெமன் ஜுஸ் என பிரமாதப்படுத்தியிருந்தார்கள். நெகிழ்ந்து புகுந்து விளையாடினோம்.

ஏனெனில் இங்கு வந்து 7 ஆம் நாளில் நாங்கள் சாப்பிட்ட முதல் தமிழ்நாட்டு உணவு இது.. மதியம் பருப்பு சாதம், சாம்பார், ரசம், தயிர்,கூட்டு, பொரியல், அவியல், அப்பளம் வடை, பாயாசம் என ஒரு நாள் சைவமும், மறுநாள் மட்டன் சிக்கன் மீன் என ஒவ்வொன்றிலும் 3 அயிட்டங்களில் விருந்து..!

அதிலும் ஒடியங்கூழ் எனப்படும் அரிசி மற்றும் மீன் இறால் உள்ளிட்ட பல வகை மீன்களில் தயாரான ஒரு கூழ் கொடுத்தார்கள் அசுராமிர்தம்... (தேவர்கள் அசைவம் உண்பதில்லை என்பதால்) அதற்கு தொட்டுக்கொள்ள ஒரு இஞ்சித் துவையல் வேறு.. 5 ஆண்டுகள் ஆனாலும் நினைவிலிருக்கிறது.

கிட்டதட்ட 2000 தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றனர் இனிய விருந்தோம்பல் மிகுந்த அன்பில் எங்களை குளிப்பாட்டி விட்ட அன்பு நெஞ்சங்களை என்றும் மறக்க இயலாது -6 டிகிரி உறைய வைக்கும் குளிரில் டிசம்பர் மாதத்தில் நடுக்கத்துடன் சென்று வந்தது இனிய நினைவுகளாய்.

Saturday 15 August 2015

ஜெர்மனியின்..

#ஜெர்மனியில்_ஒருஅசுரவேகப்_பயணம்

ஜெர்மனி..... வரலாற்று சிறப்பு மிக்க நகரம் என்று சொன்னால் நீங்கள் ஹிட்லர் ஆகிவிடுவீர்கள்.. ஏனெனில் உலகிற்கு நன்றாகத் தெரிந்த உண்மை அது.

எனது பயணத்தில் மொத்தம் ஒரு 18 மணி நேரமே அங்கு இருக்க முடிந்தது.. முதலில் நார்வே செல்ல பெர்லின் விமான நிலையத்தில் சில மணி நேரங்கள்..

பிறகு பயணத்தின் கடைசி தினத்தின் முதல் நாள் ஜெர்மனியில் நிகழ்ச்சி.. அங்கு எசன் என்ற ஊரில் எங்கள் நிகழ்ச்சி... சுவிஸ் நாட்டின் ஃபிட்பெர்க் என்ற இடத்திலிருந்து கிட்டதட்ட 900 கி.மீ சாலை வழிப்பயணம். 

கொட்டும் பனியில் இரவு 8 மணிக்கு தொடங்கிய பயணம்... மறு நாள் காலை 8மணிக்கு முடிந்தது... ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சாலை வழிப்பயணம் என்பது புதிய அனுபவமாக இருந்தது.. 

எல்லை நெருங்கும் போது நாங்கள் காரில் அயர்ந்து தூங்கிவிட்டோம். ஆனால் நாங்கள் கலை நிகழ்ச்சிக்கு வந்த கலைஞர்கள் என்று தெரிந்ததும் எங்களை எழுப்பாமல் நிகழ்ச்சி அமைப்பாளரிடம் மட்டும் தகவல்களை பெற்றுக் கொண்டு அனுமதித்த ராணுவத்தினர் பண்பு எங்களை கவர்ந்தது.

இதே நம் ஊராக இருந்தால்.. என்ற எண்ணம் வந்து போனது.. ஒரு வழியாக எஸன்" அடைந்தோம் அழகான நகரம் டென்னிஸ் வீராங்கனை  ஸ்டெபி கிராஃப் பிறந்த ஊர்... சுற்றி பார்க்கவெல்லாம் நேரமில்லை... கடும் பனி பெய்து கொண்டிருந்தது..

முகம் கழுவும் போது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து எங்களை பயமுறுத்தியது.. போட்டிருந்த 5கிலோ ஆடையை மீறி குளிர் ஊடுருவி நடுங்கவிட்டது.  மதியம் 2மணிக்கு நிகழ்ச்சி .. ஆம் ஏனெனில் அடுத்த நாள் காலை எங்களுக்கு விமானம்.. 

அதுவும் ஜூரிச் நகரில்..மீண்டும்900 கி.மீ  சுவிஸ் வரவேண்டும்... மறு நாள் காலை 9 மணிக்கு விமானம் காலை 6 மணிக்கு அங்கு இருத்தல் அவசியம்.. மதியம் 3 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 6 மணிக்கு முடிந்தது.. 

சரி போக சரியாக இருக்கும் என்று நினைத்த போது அங்குள்ள சிலர் எங்களோடு புகைப்படம் எடுக்க வந்தார்கள்.. சரி ஒரு 10 நிமிடம் தானே என்று சம்மதித்த வேளை வெளியே கடும் பனிப் பொழிவுடன் காற்று என்பதால் நிகழ்ச்சியில் இருந்து வீட்டுக்கு செல்ல இருந்த மக்கள் அனைவரும் அரங்கம் திரும்பினர்.. 

உள்ளே புகைப்படம் எடுப்பது பார்த்தவுடன் அனைவரும் எடுக்க வேண்டும் என வரிசை கட்டி நின்றுவிட்டார்கள்... ஏறத்தாழ 2 மணி நேரம்.. இனி சாப்பிடாமல் கிளம்பினாலும் காலை 8 மணி ஆகிவிடும்...

சிவா அண்ணன் கூலாக இருந்தார்.. அவர் தான் எங்கள் ஓட்டுனர்.. வரும் போது கடும் பனிப்பொழிவில் அவர் சொன்னது பனி இல்லாவிட்டால் வேகமாக போகலாம் என்றார்.. ஆனால் தற்போது அதை விட அதிகமாக ஏன் மோசமாக இருந்தது..

வாங்க சாப்பிட போகலாம் என்றார்.. வேணாம் சிவாண்ணே நேரமாகிவிடும் என்ற சொன்னதை கேளாமல் மெக்டொனால்ட் அழைத்து சென்று சாப்பிட வைத்தார்.. நேரம் 9:30 மணி.. அண்ணே போய் விமானத்தை பிடித்துவிட முடியுமா? வாங்க அதே கூலான புன்னகை... 

காரில் நம்பிக்கை இல்லாமல் ஏறினோம்... சில கிலோமீட்டர் சென்ற பிறகு Express ways என்ற பலகை கண்ணில் பட்டது.. ஜெர்மனியில் மட்டுமே குறிப்பிட்ட சாலைகளில் வாகன வேகத்திற்கு எல்லை கிடையாது.. 

ரேஸ் பிரியர்களுக்கும் மோட்டார் கார் தயாரிப்பாளர்களுக்கும் மிகப் பிடித்த சொர்க்க (!!?) சாலை...  எவ்வளவு வேகத்திலும் பறக்கலாம்.. எடுத்தவுடன் 140கி.மீ வேகம் சில நேரம் 200 கி.மீ நம்ப மாட்டீர்கள்...

விடியற்காலை 6:30க்கு ஜூரிச் விமான நிலையம் வந்துவிட்டோம்.. இதில் இடையில் எல்லை தாண்டும் போது சோதனை இரண்டு இடங்களில் இளைப்பாற... 

வெறும் 9 மணி நேரத்தில் 900 கி.மீ அசுர வேகம்... மறக்கவே முடியாது ஜெர்மனியையும் சிவா அண்ணணையும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே..

Friday 14 August 2015

வலைச்சிரிப்பு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி.

இன்று நடந்த வலைச்சிரிப்பு சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சியின் லிங்க் கீழே... இதை அனுப்பிய நண்பர் செல் முருகன் அவர்களுக்கு நன்றி..

http://www.dailymotion.com/video/x23rhbv_valai-sirippu-independensday-special_shortfilms

Tuesday 11 August 2015

காடு எது.?

ஸ்வேதா படிம்மா டிவி அப்புறம் பாக்கலாம்..

டாடி டோலு பப்லு பாத்துட்டு படிக்கிறேன் ப்ளீஸ்..

நோ இதை மட்டும் சொல்லு அப்பத்தான் பார்க்கவிடுவேன்..

சொல்லுங்க டாடி...

விலங்குகள்... டேஷில் வசிக்கும்...

விலங்குகள் டேஷில் வசிக்கும்..

ஏய் நான் சொல்றதையே ஏன் திருப்பி சொல்ற அந்த டேஷ் என்ன சொல்லு விலங்குகள் டேஷில் வசிக்கும்..

டாடி விலங்குகள் ஜூவில் வசிக்கும்..

ஏய் இது ராங் ஆன்சர் ஸ்வேதா..

டாடி அப்ப போன வாரம் ஜூ போன போது எல்லாம் அங்க தானே இருந்தது..

ஆமா.. ரொம்ப முக்கியம் இப்ப டாடி ஆன்சர் சொல்லுவேன் அப்படியே சொல்லு..

விலங்குகள் காட்டில் வசிக்கும்.. சொல்லு..

விலங்குகள் கார்டில் வசிக்கும்..

நோ கார்டில் ...அது காட்டில்...சரி ஒண்ணு செய்... அந்த ரூம் போய் மெமரி பண்ணிட்டு வா அதுக்குள்ள டாடி டிவியில் ஹெட் நியூஸ் கேட்டுட்டு வரேன் ஓடு..

வணக்கம் தலைப்புச் செய்திகள்

பெங்களூரில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..

சென்னையில் நகைக்காக மூதாட்டி அடித்து படுகொலை ...

நெல்லை அருகே பல திருமணங்கள் செய்து பெண்களை ஏமாற்றியவர் கைது...

மதுரையில் பல கோடி மோசடி செய்து பைனான்ஸ் அதிபர் தப்பி ஓட்டம்..

விரிவான செய்திகள் இரவு 7:30 மணிக்கு.. வணக்கம்

டாடி மெமரி பண்ணிட்டேன்.. மிருகங்கள் காட்டில் வசிக்கும் ரைட்டா..ஏன் பேச மாட்டேங்குறிங்க? டாடி ரைட்டான்னு சொல்லுங்க ப்ளீஸ்..!

#எதுமிருகம்_எதுகாடு_தெரியலைம்மா

Sunday 9 August 2015

தினமணிக்கதிர்.

#வாசிப்பு

என் அப்பா பக்கா தி.மு.க காரர் காலையில் முரசொலியும் தினகரனும் படிக்காவிட்டால் அவருக்கு பொழுது போகாது... அன்றைக்கு அந்த பேப்பர்கள் வாங்கும் காசிருந்தால் 2 பன்னும் 1 பார்சல் டீயும் வாங்கி குடும்பமே குடித்து பசியாற முடியும்... முதல் நாள் இரவு பட்டினியுடன் படுத்த எங்களுக்கு அடுத்த நாள் காலை உணவாக அதைக் கொடுக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பளித்ததில்லை எங்கள் மிஸ்டர் தகப்பன்..

இந்த நாளிதழ்களை நானும் வாசிப்பேன்.. கழகச் செய்திகளும் சாதாரணச் செய்திகளும் என்னைக் கவரவில்லை.. நேர் எதிர் வீடு கணபதி சித்தப்பா வீடு அவர் காங்கிரஸ் காரர்.. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பத்திரிக்கை இல்லை என்பதாலும் திமுக போல் கட்சி பத்திரிக்கை இல்லை என்பதாலும் அவர் நடுநிலையாக தினமணி வாங்குவார்..

ஒருநாள் சித்தப்பா வீடு வெள்ளையடிக்கப்பட்ட போது சித்தப்பா பெண் தங்கை உலகம்மாள் என் உடன்பிறந்த தங்கை உமா (முகநூலில் உமா மகி) ஆகிய மூவரும் சுத்தப்படுத்தினோம் அப்போது பொக்கிஷமாக கிடைத்தது தான் தினமணிக் கதிர் வார புத்தகங்கள்.. மொத்தமாக ஒரு 35 புத்தகங்கள் இருக்கும்.. அதை எடைக்கு போடாது சித்தப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி பெற்றுக் கொண்டது இன்றும் நினைவில் உள்ளது.

இதற்கு எனக்காக வாதாடி உதவிய தங்கைகள் உலகம்மாளுக்கும் உமாவிற்கும் பல நன்றிகள்.. முரசொலி தினகரன் போன்ற கட்சிசார்பு பத்திரிக்கைகள் படித்த எனக்கு தினமணிக் கதிரின் வாசிப்பானுபவம் புதுமையாக இருந்தது..! அந்த 35 புத்தகங்களைபடித்த பின் நான் தீவிர தினமணிக் கதிர் வாசகனாகிப் போனேன்.

அதன் பின் வாராவாரம் என் ஞாயிறு சித்தப்பா படித்துவிட்டு விட்டெறியும் தினமணிக்கதிருக்காக காத்திருப்பேன்.. ஞாயிறு எனக்கு அது படித்தால் தான் விடியும்..சில நேரங்களில் விரைவாகவும் பல நேரங்களில் தாமதமாகவும் அந்த பத்திரிக்கை கைவசப்படும். 

ரகமி எழுதிய இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய தொடர்கள்.. ராண்டார் கை எழுதிய புகழ்மிக்க மனிதர்கள் பற்றிய தொடர்கள்.. சுசி கணேசன் எழுதிய வாக்கப்பட்ட பூமி தொடர் என் ஆசான் சுஜாதா கிரிக்கெட்டை மையமாக வைத்து எழுதிய நிலா நிழல் தொடர்.. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்து பிரெஞ்சு கலாச்சாரமிக்க தொடரான...

பிரபஞ்சன் எழுதிய வானம் வசப்படும் தொடர் என நான் மூழ்கி குளித்த முத்துக்கள் ஏராளம்.என்னை வேறு விதமான வாசிப்பு தளத்திற்கு அழைத்துப் போனது அந்த தினமணிக்கதிர் தான்.. அதன்மூலமாகவே என் ஆசான் சுஜாதாவையும் பிரபஞ்சனையும் அறிமுகப்படுத்தியது தினமணி. இதற்கு நடுவே அசோகமித்திரன், லா.ச.ரா, ஜெயகாந்தன், கதைகளும் வந்தன.

என்னைப் போன்ற சராசரி வாசிப்பனுக்கு தினமணி விருந்து படைத்தது 2 மணி நேரம் அந்தப் பத்திரிக்கை கை வர காத்திருந்தாலும் அத்துணை விஷயங்களும் மிகப் பெரிய அறிவு.. அதிலும் ராண்டார்கை எழுதிய எல்லா தொடர்களுக்கும் நான் அடிமை.. சுஜாதாவின் விஸ்வரூபத்தை கண்டதும் இங்கே தான்... ரகமியின் தொடர்களும் விறுவிறுப்பானது. 

இதன்பிறகே என் வாசிப்பனுபவம் பண்பட்டது.. தேடித் தேடி பல விஷயங்களைப் படிக்க தினமணிக் கதிர் தான் காரணம் என்பதை நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன் இதில் எந்த சுயநலமோ துதியோ இல்லை.. 

பிரபஞ்சனின் ஆனந்தரங்கப்பிள்ளையும், சுஜாதாவின் முகுந்தனும்,  ரகமியின் தியாகராஜ பாகவதர் & கலைவாணரும் ராண்டார்கையின் செண்பகராமன் பிள்ளையும் ஹிட்லரும் எம்டன் கப்பலும்... சுசிகணேசனின் கிராமங்களின் வாழ்க்கையும் என்றென்றும் என்னைத் தாலாட்டும்.

Saturday 8 August 2015

சேலம் திரையரங்குகள் 2

#விரும்பிச்_சொன்ன_பொய்கள் 

பார்ட் - 2

இதை படிக்கும் முன்".. இந்தப்பதிவில் நான் சொல்வதெல்லாம் உண்மை..

(முன் பதிவு சுருக்கம்) முந்தைய பதிவில் சேலத்திலுள்ள தியேட்டர்களைப் பற்றி சொல்லிவிட்டு நான் என்னுடைய 10வது வயதில் முதன்முதலாக தனியாக போன படம்  பொல்லாதவன் என கூறி இடைவேளை விட்டு இருந்தேன்.. இனி...

பொல்லாதவன் சாந்தி தியேட்டரில் நான் பார்த்தேன்.. பிறகு நெற்றிக்கண், தனிக்காட்டு ராஜா மூன்று முகம் போன்ற படங்களும் ஏராளமான சிவாஜி படங்களும் பார்த்தேன்.. ஜெயாவில் ஜானி, சாதனை, சிம்லா ஸ்பெஷல், நியூசினிமாவில் மணல்கயிறு, கரும்புவில், சித்ராவில் சிவப்பு மல்லி, கடமை, அலங்காரில் கன்னிப்பருவத்திலே, மண்ணுக்குள் வைரம், சுகமான ராகங்கள்.

சங்கத்தில் வைதேகி காத்திருந்தாள், ரங்கா, சிவப்பு சூரியன், எங்க ஊரு ராசாத்தி, சங்கம் பாரடைசில் இளமை ஊஞ்சலாடுகிறது, பிள்ளைநிலா, கைதி, லட்சுமிவந்தாச்சு, ஓரியண்டலில் திரிசூலம், சகலகலா வல்லவன், போக்கிரிராஜா ஓரியண்டல் சக்தியில் இரண்டில் ஒன்று, மந்திரப்புன்னகை தென்றலே என்னைத் தொடு பிரபாத்தில் ஜகன் மோகினி.

அப்சராவில் வண்டிக்காரன் மகன், ஆறிலிருந்து அறுபது வரை, பயணங்கள் முடிவதில்லை, சங்கர்லால், பேலசில் அலைகள் ஓய்வதில்லை, சிகப்புரோஜாக்கள், நினைவெல்லாம் நித்யா, பகவதிபுரம் ரயில்வே கேட் இதன் பிறகு வந்த புதிய தியேட்டர்களான கீதாலயாவில் தாய்மூகாம்பிகை அந்த தியேட்டருக்கே முதல் படம் நான்15 முறைக்கு மேல் பார்த்த படம் பிறகு சட்டம், விக்ரம், மாவீரன், தங்கைக்கோர்கீதம் தம்பிக்கு எந்த ஊரு, உருவங்கள் மாறலாம், ராகங்கள் மாறுவதில்லை, சூரக்கோட்டை சிங்கக்குட்டி ஆகிய பல படங்கள் பார்த்தது கீதாலயாவில்.

பிறகு கைலாஷ் பிரகாஷ் தியேட்டர் ஆரம்பத்தில் கைலாஷில் நாயக்கரின் மகள் படமும் பிரகாஷில் அமிதாப் நடித்த லாவரீஸ் படமும் ரிலீசானது பிறகு அந்த தியேட்டரில் தான் முதன்முதலாக சேலத்தில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது முந்தானை முடிச்சு படத்துக்காக பாக்யராஜுக்கு வைக்கப்பட்ட கட் அவுட் பிறகு வெள்ளைரோஜா, நான் சிகப்புமனிதன், உதயகீதம், இதயக்கோவில், சரணாலயம், நீதிபதி, தாவணிக்கனவுகள், சின்னவீடு, என் தங்கை கல்யாணி போல பல படங்கள் அங்கு பார்த்தேன்.

அடுத்து சந்தோஷ் சப்னா சாந்தம் இதில் தியேட்டர் ஆரம்பித்த போது சந்தோஷில் பரிட்சைக்கு நேரமாச்சு படமும் சப்னாவில் டார்லிங் டார்லிங் டார்லிங்கும் சாந்தத்தில் அக்னி சாட்சியும் முதல் படங்கள் இந்த தியேட்டர் வந்த பிறகு பெரும்பாலான ஹிட் படங்கள் இங்கு தான் ரிலீசாகின தங்கமகன், தூங்காதே தம்பி தூங்காதே, உன்னை நான் சந்தித்தேன், சிந்துபைரவி, உயிருள்ளவரை உஷா, உறவைக்காத்தகிளி, விடுதலை, நான் மகான் அல்ல, காக்கிச்சட்டை, அண்ணா நகர் முதல் தெரு, பகல்நிலவு, கீதாஞ்சலி, பூவிலங்கு, மெல்லத்திறந்தது கதவு, நான் பாடும் பாடல் இப்படி ஏராளமான படங்கள் அங்கு பார்த்தது  இன்றும் நினைவில் இருக்கிறது.

பாரத் தியேட்டரில் முழுக்க முழுக்க பழைய படங்கள் எம்.ஜி.ஆர் சிவாஜி ஜெமினி படங்கள் இங்கு பார்ப்பதை விட மாயாஜாலப் படங்கள் பார்த்தது அதிகம். ஆங்கிலப்படங்களுக்கு சேலத்தில் சங்கீத் சென்ட்ரல் நியூ இம்ப்ரியல் இதில் எனக்கு விவரம் தெரிந்தே சென்ட்ரலும் இம்பிரியலும் மூடப்பட்டன நான் அதிகம் ஆங்கிலப்படங்கள் பார்த்தது சங்கீத்தில் தான்.. அடேயப்பா எவ்வளவு படம் பார்த்துட்டோம் இல்ல..இருங்க இன்னொரு கூல்டிரிங்ஸ் சாப்பிட்டு வாங்க நாளைக்கு சொல்றேன்.

{ இடைவேளை }

Thursday 6 August 2015

சேலம் திரையரங்குகள்..

#விரும்பிச்_சொன்ன_பொய்கள்

இதை படிக்கும் முன்".. இந்தப்பதிவில் நான் சொல்வதெல்லாம் உண்மை..

சேலத்தில் எனது பள்ளிப்பருவம்.. சேலத்தில் திரையரங்கங்கள் இருப்பது போல தமிழகத்தில் வேறு எங்கும் இருந்ததில்லை (அன்று) அன்றைக்கு மிகப்பெரிய பொழுது போக்கே சினிமா தான் நான் பெரும் ரசிகன் சினிமாவுக்கு இதுவும் அப்போது தான்.. (கடந்த பத்து வருடங்களில் 10 படம் கூட திரையரங்கில் போய் பார்த்ததில்லை) 

சங்கம், சங்கம்பாரடைஸ், அலங்கார், சித்ரா, சாந்தி, சங்கீத், ஜெயா, நியூசினிமா, ஒரியண்டல் விக்டோரியா, அப்சரா, சென்ட்ரல், பிரபாத், பேலஸ், நியூ இம்ப்ரியல், பாரத், பாலாமணி, ஜோதி, தியேட்டர்கள் இவையெல்லாம் ஆரம்பகாலத்தில்... பிறகு கைலாஷ், பிரகாஷ், சந்தோஷ் சப்னா சாந்தம், கீதாலயா, ஓரியண்டல் சக்தி, நாகாமினி, சபரி, மினி அப்சரா, L.KS போன தியேட்டர்கள் உதயமாயின..

இதுல பாலாமணி தியேட்டர் மட்டும் பிடிக்காது ஏன்னா பள்ளியில் அந்த தியேட்டருக்கு தான் படம் பார்க்க மொத்தமா கூட்டிட்டு போயி அடுத்த நாள் கேள்வி கேப்பாங்க.. அங்க ஒரு முறை ஹாதீம்தாயும் ஏழுகேள்விகளும்ன்னு ஒரு படத்துக்கு கூட்டிட்டு போயிட்டு அடுத்தநாள் சிவானந்தம் சார் 700 கேள்வி கேட்டாரு.. அப்பவே அவர் மேல உள்ள கோவம் தியேட்டர் மேல மாறிடுச்சு... 

நான் ஆரம்பத்தில் இருந்தது சேலம் குகை என்னும் பகுதியில் 1முதல்5 வகுப்பு வரை பிறகு கிச்சிப்பாளையம் இது ரெண்டுக்கும் நடுவுல தான் நான் மேலே சொன்ன பல தியேட்டர்களும் இருந்தது சென்ட்ரல், பேலஸ், நியூ இம்ப்ரியல் மற்றும் பாலாமணி ஜோதி மட்டும் தூரம்.. சங்கீத் தியேட்டருக்கு நேர் பின்புறம் கொஞ்ச தூரம் நடந்து திருச்சி மெயின் ரோடு வந்துட்டா எங்க வீடு கடை எல்லாம்.. முதன் முதலா தனியா படம் பார்க்கப் போனது 10 வயதில் பார்த்த படம் "பொல்லாதவன்"...

-இடைவேளை-

Wednesday 5 August 2015

காஞ்சனமாலா..

சரித்திரக்கதை எழுதவேண்டும் என நெடுநாள் ஆசை.. இது ஒரு சின்ன டிரைலர் தான்.. சாண்டில்யன் பிடிக்கும் என்பதால் அவர் பாணியில் எழுதியிருக்கேன் நல்லா இருக்கா சொல்லுங்க...


#பல்லவன்_காதலி

சட்டென்று விழிப்பு தட்டியது மாறவர்மனுக்கு விழிக்க சிரமமாயிருந்தது சற்று பிரயாசைப்பட்டு தான் விழிக்க வேண்டியதாயிற்று... சுற்றிலும் இருள் சூழ்ந்து கும்மிருட்டாக இருந்தது சிறிது நேரம் மெல்ல விழிகளை சுழல விட்டான்.. ஆயாசமாகவும் இருந்தது தோளில் தீப்பற்றி எரிந்தது போல் வலித்தது...என்ன நடந்தது?.. நினைவுகளை அசை போட்டான்..

பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நோக்கி சென்ற பிரயாணத்தில் காஞ்சியை நெருங்கும் வேளையில் இரவாகி விட்டபடியால்.. சிறுவூர் என்ற இடத்தில் புரவியை நிறுத்தி விட்டு அங்கிருந்த கோவில் மண்டபத்தில் இளைப்பாற சென்றதும்,அந்த மண்டபத்தில் நுழைந்த மறுகணம் எதிரிகளால் சூழப்பட்டதும் நினைவுக்கு வந்தன..

சரேலென வாளை உருவி சுழற்றிய அந்தக் கணமே அவனது கூர்ந்த புலன் எதிரிகளுக்கு அச்சத்தை தந்துவிடது... சக்கரவியூகமாய் சுற்றி வளைத்து தாக்கியவர்களை சிதறி ஓடச்செய்தது அவன் வாள் வீச்சு... உக்கிரமான அந்த சண்டை நிறைவுறும் தருவாயில் மண்டபத்தின் தூண் மறைவிலிருந்து பாய்ந்து வந்த குத்தீட்டி அவனது தோளில் செருகியது..

அவனைத் தவிர யாரேனும் அங்கு இருந்தால் அவர்களது சிரம் தனியாக நிலத்தில் வீழ்ந்திருக்கும் துல்லியமாக கழுத்துக்கு குறி வைத்து எறியப்பட்ட குத்தீட்டி அது.. மாறவர்மனின் அபார போர்பயிற்சி அவனது செவிகளில் குத்தீட்டி காற்றை கிழித்து வரும் ஓலி கேட்ட நொடியிலேயே விலக சொன்னது அவனது விலகல் புலி பாய்ச்சலை ஒத்து இருந்தது.

சற்று தாமதித்து இருந்தாலும் கழுத்து அல்லது இதயத்தில் பாய்ந்திருக்கும்... இப்படி குத்தீட்டிகளை வீசும் கலை சாளுக்கிய தேசத்தில் தான் பிரபல்யம்... அப்படி என்றால்!! சாளுக்கியர்கள் எப்படி பல்லவ தேசத்தில்.. ஏதோ மிகப்பெரிய சதி அரங்கேறுகிறது என்று மட்டும் புரிந்த வேளையில் மயக்கமும் தழுவிக் கொள்ள நிலத்தில் வீழ்ந்தான் மாறவர்மன்.

இப்போது இருள் கண்ணுக்கு பழகிவிட்டது... குத்தீட்டி பாய்ந்த இடது தோளையும் இடது கரத்தையும் அசைக்கவே முடியவில்லை மெல்ல நாசிக்குள் பச்சிலை மணம் நுழைந்தது.. காயத்திற்கு யாரோ மருந்து இட்டு இருக்கிறார்கள் என்று அறிந்த போதே தான் காப்பாற்ற பட்டுள்ளோம் எனத் தெரிந்து கொண்டான்.. தூரத்தில் யாரோ நடந்து வரும் காலடியோசை...

மாறவர்மன் ஒரு உபாயம் செய்தான்! தன்னைக் காப்பாற்றியவர் யார் என அறிந்து கொள்ள மயக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல பாவித்து விழிகளை மூடிக்கொண்டான்.. காலடியோசை சமீபித்தது... ஒருவர் அல்ல இருவர் என்பது அவனது கூரிய புலனாலும் அவர்கள் மெல்ல ரகசியமாய் பேசிய ஒலி செவிகளில் விழுந்ததாலும் அறிந்தான்,அதில் ஒரு குரல் பெண்குரல்!

அந்த பெண்ணோடு வந்தவர் ஒருவர் முதியவர்... அவர்களது பேச்சில் அந்த முதியவர் ஒரு மருத்துவர் என அறிந்தான்... சஞ்சீவினி இலைகளால் பற்று போட்டுள்ளேன் இனி ஒன்றும் பயமில்லையம்மா வலி இரு தினங்களுக்கு இருக்கும் காயம் ஒரு மாதத்தில் பூரணமாக ஆறிவிடும் என்றார்...

இன்னும் இவர் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளாரே நான்கு நாழிகைகளில் விழிப்பார் என்றீர்களே? என்று கேட்டாள் அப்பெண்... அது தான் புரியவில்லையம்மா வயதானவர்கள் கூட அந்நேரத்தில் விழித்து விடுவார்கள் இந்த வாலிபன் ஏன் விழிக்கவில்லை? இரம்மா நான் போய் இன்னொரு சாறு எடுத்து வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து அகன்றார்...

அவரது காலடியோசை தேய்ந்ததும் மெல்ல கண்விழிப்பது போல பாவனையை முயற்சிக்கலானான் மாறவர்மன்... அப்பெண்ணிடம் இப்போது பரபரப்பு தொற்றிக் கொண்டது.. மெல்ல.. மெல்ல என்றாள்.. பிரயாசையோடு விழிப்பது போல பாவித்த மாறவர்மன் அவளை கண்டதும் மூச்சற்று போனான்... அவன் விழி மூடும் போது இருந்த இருள் இப்போதில்லை!

அறையில் மெல்லிய வெளிச்சம் வியாபித்து இருந்தது.... அதற்கு காரணம் சுவற்றில் சாளரம் அருகே இருந்த திரைச்சீலை மெல்ல விலகியிருந்தது... அந்த சாளரத்தின் வழியே முழுமதியின் ஒளிக்கிரகணங்கள் அறைக்குள் புகுந்து இருந்தன அவ்வொளி நின்றிருந்த அந்த பெண்ணின் வதனத்திலும் பட்டு அவளை பிரகாசிக்க வைத்திருந்தது..

வட்ட வடிவத்தில் பூரண சந்திரன் போன்ற பேரெழில் மிகுந்த வதனம்.. காதோரத்தில் சுருண்டிருந்த அவளது குழல் மெல்லிய காற்றில் அசைந்தது ஓர் நாட்டியம் போல இருந்தது.. கடல் போல் விரிந்த விழிகளில் கரிய திராட்சை பழங்கள் தெரிந்தது.. அதில் சற்று மருளும் கலந்திருந்தது.. 

வில் போல் வளைந்த புருவங்கள் வினோதமாய் மேலேறியது கூட அவளுக்கு பேரழகு தந்தது.. செவ்விய பவள இதழ்களை நாவால் அவள் ஈரப்படுத்தியது தனிக்கிளர்ச்சியை தந்தது... குவளை மலர் போன்ற அவளது நாசி நுனியில் ஆழ்ந்த சிவப்பு விளைந்திருந்தது...அழகிய வினாக் குறிகளை போல செவிகள் அதில் ஆடிய காதணிகள் கவிதையாய் இருந்தன.. 

மூங்கில் போன்ற தோள்கள் தந்த நிறத்தில் மிளிர்ந்தது.. படபடப்பாக இருந்ததால் அவள் வெளியிட்ட பெருமூச்சு அவளது மார்புகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது மதியை மயக்கியது... என்ன நான் கேட்டது உங்கள் செவிகளில் விழவில்லை? திடுக்கிட்டான் மாறவர்மன்... என்ன என்ன!! என விழித்தான்... இவ்வளவு கணம் அவள் அவனிடம் பேசிக் கொண்டிருந்ததும் அவள் அழகில் லயித்து தான் மெய் மறந்து இருந்ததும் புலனானது..

சொல்லுங்கள் என்றான் சற்று வெட்கத்துடன்...  இப்பொழுது வலி உள்ளதா? என்றாள்..ஆம் என தலையசைத்தான்... நல்ல வேளை நேற்று அவ்வழியே வந்தேன் நீங்கள் மயங்கி சரிந்த போது அவ்வழியே பல்லக்கில் என் வீரர்களோடு கடந்து கொண்டிருந்தேன் நாங்கள் வரும் அரவம் கேட்டு சிலர் மண்டபத்திலிருந்து ஓடினார்கள்.. வந்து பார்த்தால் நீங்கள் வீழ்ந்து கிடந்தீர்கள் மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.

நன்றி... என்று பதிலுரைத்த மாறவர்மனுக்கு சட்டென்று உறைத்தது... பல்லக்கில் என் வீரர்கள் என்றாளே இப்பெண் அப்படியென்றால் அப்படியென்றால்... நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன? என வினவினான்.. அவள் மெல்ல பதிலுரைத்தாள்..என் பெயர் காஞ்சன மாலா!

காஞ்சன மாலா!!!!! பல்லவ இளவரசியா!!!!!!!!!!! கூவியே விட்டான் மாறவர்மன்...

தொடரும்....

Tuesday 4 August 2015

ஆடி வந்த நட்பு...

#உண்மையான_நட்பு_தினம்

சென்னையின் பல பகுதிகளில் ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா கூழ் ஊற்றி கொண்டாட்டம்.. என் வீட்டிற்கு பக்கத்திலும் காலை ஐந்து மணிக்கே L.R.ஈஸ்வரி என்னை எழுப்பிவிட்டார் அங்காளம்மா எங்கள் செங்காளம்மா.. சிவப்பு சேலை கட்டிகிட்டு.. வேப்பிலைய எடுத்துகிட்டு... செல்லாத்தா எங்க மாரியாத்தா.. வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்.. கண்ணபுரம் நாயகியே மாரியம்மா.. என அவரது ட்ரேட் மார்க் அம்மன் பாடல்கள் ஹைடெசிபலில் ஒலிக்க துவங்கி சிங்கம் 2 சூர்யாவை வெட்கி தலை குனிய வைத்தது.

என் தூக்கம் என் உரிமை என்ற கோஷத்தை இளைய திலகம் பிரபு பாணியில் செயல்படுத்த தனி ஒருவனாக எந்த PGM மியூசிக்கும் இல்லாமல் ஹீரோ போல வெ"குண்டு"(நானே) கிளம்பினேன்.. PGM ஒலித்திருந்தாலும் இந்த சவுண்டில் கேட்டிருக்காது என்பது வேறு விஷயம்... அடுத்த தெரு தான் 3 நிமிட நடை சின்ன பையன் ஒருவனிடம் விழா கமிட்டி பொறுப்பாளர்களை பார்க்க வேண்டுமென்றேன் அவன் வாங்க என ஜிம்னாஸ்டிக்ஸ் போல வளைந்து நெளிந்து கூட்டி போனான்.

சத்யமாக பாம்பு கூட அப்படி வளைந்து போகாது... ஒரு வழியாக பந்தல் ஒன்றிற்கு கூட்டி போனவன் இதான்பா என்று சொல்லி மறைந்து விட்டான்..உன் நான் சற்று ஆசுவாச படுத்திக் கொண்டு அந்த பந்தலை பார்த்தேன் ஒரு பக்கம் கூழ் காய்ச்சி கொண்டிருந்தனர் மறுபக்கம் மஞ்சள் வேட்டி கையில் காப்பு துணி கட்டி கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர் அவர்களை அணுகி பொறுப்பாளர் யார் என்ற போது பக்கத்து வீட்டை காட்டி அண்ணா உன்ன தேடிணா என L.R.ஈஸ்வரியை விட அதிக டெசிபலில் அழைத்தனர்.. உள்ளிருந்து வந்..... இது... இது... இவரா அது..!

ஏராளமான படங்களில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரோடு மோதும் ஸ்டண்ட் நடிகர் அவர்..! என்னப்பா என்று அவர் கேட்டதே ஒரு குத்து விட்டது போல இருந்தது.. வந்த போராட்டம் மறந்து .. சார் நான் புதுசா குடி வந்துருக்கேன் அறிமுகபடுத்திக்க வந்தேன் ஹி.. ஹி.. என்று வழிந்து திரும்பினேன்.. தம்பி.. ஒரு நிமிஷம் என்றவர் ஏரியாக்கு புதுசா வீடு எங்க என கேக்க.. நான் சொன்னேன் உடனே மற்ற ஆட்களை பார்த்து கண்ணால் ஏதோ கேக்க ஆமாண்ணா நம்ம ஏரியாவுக்குள்ள தான் வருது என அவர்கள் பதிலளிக்க.. தம்பி கோவில் வரி ₹500/- கட்டி ரசீது வாங்கிக்கங்க என்று கட்டளை இட்டார்.

வந்ததற்கு அதை அழுது வரும் வழியில் மெடிக்கலில் பஞ்சு வாங்கி கொண்டு வீடு திரும்பினேன்... மாலை வரை L.R.ஈஸ்வரி ஓயவில்லை... அந்த பஞ்சையும் பஞ்சராக்கி பாடல் காதுக்குள் ஒலித்தது வெறுப்பாக இருந்தது திடீரென்று மாலை பாடல் நின்று விட்டது.! மின் தடையா?! இல்லையே வெளியில் வந்து காதில் பஞ்சை எடுத்தேன் ஆஹா ஆனந்தம் சாலையில் வாகனம் செல்லும் ஓசை தூரத்தில் மசூதி பாங்கு ஓதும் ஓசை இவை எல்லாம் இன்பமாக காதில் ஒலித்தன.

மெல்ல நடந்து விழா நடக்கும் இடத்திற்கு போனேன் மைக்செட் ஆபரேட்டரே இருந்தார் அவரிடமே கேட்டேன் ஏன்பா பாட்ட நிறுத்திட்ட... அவர் சொன்னார்.. அட இன்னாபா நீ மசூதில பாங்கு ஓதுற சவுண்டு கேக்கல உனக்கு அத்த டிஸ்டப் பண்ண வோணான்னு தான் பாட்டை நிறுத்திக்கிறேன் என்றார்.

ஆஹா... இதுவல்லவோ "மத நல்லிணக்கம்" இது தாண்டா உண்மையான ஃப்ரெண்டஷிப் டே.. இப்போது வீடு திரும்பினேன் மன நிறைவாக இருந்தது.