Tuesday 28 July 2015

அப்துல்கலாமுக்கு...

#வாலி_பாணியில்_அய்யா_கலாமிற்கு_ஓர்_புகழஞ்சலி..

தெற்கில் உதித்து வடகிழக்கில் மறைந்த சூரியனே

தெள்ளிய முடிவோடு லட்சியம் கொண்ட காரியனே

நீ பிறந்ததால் பெருமை கொண்டது சேது

இப்படி சொன்னால் அதை மறுப்பவர் ஏது

குடியரசுத் தலைவராய் இருந்த விஞ்ஞானியே

மதங்களுக்குள் சிக்காத அஞ்ஞானியே

மெய்ப்பொருள் கண்டிட்ட மெய்ஞானியே

உனக்கு வாரிசாக இல்லை ஒரு செல்வன் செல்வி

உனக்கு வாரிசாக இருந்த ஒரே செல்வம் கல்வி

நீ விஞ்ஞான பாரதி அறிவியலின் சாரதி

பாரதிக்கு கவிதை மட்டுமே வந்தது

உன்னால்தான் கவிதையோடு கணிப்பொறியும் சிறந்தது

அர்ஜுனன் கணை தொடுத்து புகழ் பெற்றவன்

நீ அக்கணையை கண்டுபிடித்து அதை  அர்ஜுன் ஆக்கியவன்

உனது கணைகள் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்தன

உன் புகழ் சொல்லியே பல வாய்கள் ஓய்ந்தன

வானவியல் அறிவோடு வள்ளுவனையும் போற்றினாய்

வளந் தமிழுக்கும் பெருந்தொண்டு ஆற்றினாய்

மரங்கள் வளர்க்கச் சொல்லி நட்டாய் பல கன்று

வருங்காலத்தில் அவை உம் பேர் சொல்லும் வளர்ந்து நின்று

வல்லரசு கனவு கண்ட நல்லரசே

வாழ்வாங்கு வாழ்ந்த அறிவியல் பேரரசே

நீ அக்னிச்சிறகுகள் விரித்தாய்

அதில் உன் எண்ணத்தை விதைத்தாய்

அப்பெரு நெருப்பில் உலகை எரித்தாய்

ஆம் எங்கும் எரிகிறது  நீ வைத்த அறிவு நெருப்பு

இது நிஜமானால் அந்த வெற்றிக்கு நீ ஒருவனே பொறுப்பு

இதைவிடவா இருக்கப் போகிறது இந்தியாவிற்கு சிறப்பு

கலங்கள் பல கலாமின் பேர் சொல்லும்

அறிவியல் தலைவன் என உன்னை மட்டுமே ஊர் சொல்லும்

உனக்கு மாலைகள் இடவேண்டும் என்பதற்காகவே

பல மாபெரும் சபைகள் உருவாகின

உன் அறிவியல் எண்ணத்தில் மண்ணில் சிகரங்கள் தொட்டாய்

அக்னிச் சிறகுகள் கொண்டு இன்று விண்ணில் பறந்திட்டாய்

எங்கள் விஞ்ஞான தேவனே

உன்னை வென்றிட்டான் காலனே

அழிந்தது உன் புகழுடம்பு

பெரும் புகழோடு ஏறினாய் விசும்பு

விசும்புகிறோம் நாங்களெல்லாம் மீண்டும் பூமிக்குத் திரும்பு.

Tuesday 21 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

ஹாய் ரவி குட்மார்னிங் என்றான் ஹரி.. பதிலுக்கு புன்னகையுடன் பதில் கூறிவிட்டு தன் கேபினுக்குள் நுழைந்தான் ரவி. இருவரும் ஒரே அலுவலகத்தில் ஒரே நிலையில் பணி புரிபவர்கள். அது ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம்.. தற்போது ஒரு புராஜக்ட்டுக்காக இருவருக்குமே ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதில் சிறப்பாக அதை வடிவமைப்பவருக்கு பதவி உயர்வு வெளிநாட்டு சுற்றுலா 3 மாதம் சம்பளத்துடன் விடுமுறை சொகுசுக்கார் போன்றவை கிடைக்கும். ஹரியை காட்டிலும் ரவி திறமையானவன்.. அவனது சாஃப்ட்வேர் நேர்த்தியாகவும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான தகவல்களுடனும் அதை தயாரித்து வைத்து இருந்தான். ஹரிக்கும் இது நன்கு தெரியும்.

எப்படியாவது இந்த சலுகைகளை தான் பெறவேண்டும் என ஆசைப்பட்டான். அதற்காக காய் நகர்த்தி ரவியிடம் நண்பன் போல நெருங்கிப் பழகினான் சாதுர்யமாக அவனது கணினியின் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டான் ஒருநாள் ரவி அவசர வேலையாக கிளம்பிப்போக அந்த வேளையில் நைசாக அவனது சாஃப்ட்வேரை காப்பி எடுத்துவிட்டான்.

அடுத்தவாரம் ஹரியின் சாஃப்ட்வேர் தான் தேர்வானது. ரவியால் ஊகிக்க முடிந்தது நிச்சயம் ஹரி இதை தன்னிடம் இருந்துதான் திருடியிருப்பான் என்று நேராக மேலதிகாரியிடம் சென்று இதைப்பற்றி கூறினான்.. அவரும் என்ன செய்ய இதை எப்படி நான் நம்புவது என்றார்.. 

உடனே ரவி அவன் உருவாக்கிய சாஃப்ட்வேரில் இப்படி ஒரு பிரச்சனை வந்தால் எப்படி தீர்வு காண்பது எனக் கேளுங்கள் அது ஹரி உருவாக்கியதாய் இருந்தால் அவன் தீர்வு சொல்லட்டும், இல்லாவிட்டால் நான் சொல்கிறேன் என்றான். மேலதிகாரியும் இந்த யோசனைக்கு ஒப்புக் கொண்டு தனித்தனியாக இருவரிடமும் அதைக் கேட்க ஹரி வசமாக சிக்கினான்.. ரவி சுலபமாக அதை தீர்த்துவைத்தான்.

மேலதிகாரி சாரி ரவி.. இது உங்க சாஃப்ட்வேர் தான்.. ஒத்துக்குறேன் இந்தச் சலுகைகள் எல்லாம்.... ஹரிக்கே கொடுத்துடுங்க என்றான் ரவி.!
ஆச்சர்யத்துடன் அவர் அவனைப் பார்க்க.. ஆமா சார் எனக்கு நம்பிக்கை இருக்கு இது ஒரு சின்ன புராஜக்ட் தான் இந்த நிறுவனத்துல இதைவிட அதிக சலுகைகளை நான் உழைத்து பெற முடியும்.

ஆனா.. ஒரு போலியான நண்பனை தெரிஞ்சிக்க நான் கொடுத்த விலை தான் இது. இனி அவன் பக்கம் திரும்பிகூட பார்க்கமாட்டேன்.. உங்களுக்கு இது என் சாஃப்ட்வேர்ன்னு நிரூபிச்சதே போதும் இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் ஸார் எனக்கூறிவிட்டு ரவி கம்பீரமாக கிளம்பினான்.

நீதி: மனத்தில் கெடுதல் இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசுள்ள நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.


Friday 17 July 2015

பிரியாணி குறள்கள்

#ரமலான்_குறள்கள்

தால்சா எலும்பு தயிர் வெங்காயம் இவை நான்கும்

இல்லா பிரியாணி இழுக்கு.

முகநக நட்பது நட்பன்று பிரியாணி தரும்

முகமது நட்பே நட்பு.

எலும்போடு கறியுள்ள பிரியாணி அதை

குழம்போடு உண்பது சிறப்பு.

பெருநாள் உணவாக பிரியாணி தருவோர்க்கு

பெருமை வாழ்வில் வரும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

ரம்ஜான் பிரியாணி தராதவர்க்கு.

Thursday 16 July 2015

T.R

கவியரசு தெரியும் கவிப்பேரரசு தெரியும் காதல் கவியரசு யார் தெரியுமா..! நீங்கள் முகநூலில் கிண்டலடிக்கும் டி.ஆர் தான்..

எப்படின்னு கேட்டா இந்த நீண்ட பதிவினை படித்தால் தெரியும்.. கரடி என்றோ, டண்டணக்கா என்றோ, நீங்கள் கலாய்க்கும் டி.ஆர். காதல் வரிகளில் கிங்..

இளையராஜா ரசிகர்களையும் ஏற்றுக் கொள்ள வைத்த அவரது திறமை அளவிட முடியாதது.. இசையை விடுங்கள் அவரது பாடல் வரிகளில் துள்ளும் காதலைப் பாருங்கள்.. இனி லிஸ்ட்...

இது குழந்தை பாடும் தாலாட்டு.. இது இரவு நேர பூபாளம்.. இது மேற்கில் தோன்றும் உதயம்.. (ஒரு தலை ராகம்)

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி விட இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா...

செம்மார்ந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்.. ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்.. (இரயில் பயணங்களில்)

நெஞ்சம் பாடும் புதிய ராகம் பாடல் ஒன்றைத் தேடுது
(நெஞ்சில் ஓர் ராகம்)

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கிலேறுதாம்..ஓ..ஓ.ஓ

விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை.... மொழியோ அமுதம் குழலாகி தொனிக்கின்ற ஓசை.. ஒரு ஆனந்த ராகம்..

(கிளிஞ்சல்கள்)

பொன்னூறும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்.. இந்த மானிடனும் மயங்கிவிட்டான்.. அந்த மானிடமும் மனதை விட்டான்..

அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியிள் அவளே ஆதாரம்...

புருவ வில்லை வளைத்து போதைக் கணையைத் தொடுத்து..(2) அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை...(2) ஒரு நாகம் போல் காளை ஆடுகின்றான்...

பிரம்னனுக்கும் ஞானம் வந்து உன்னைப் படைக்க அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க... தவிப்பதா.. சிலிர்ப்பதா...அணைப்பதா.. அழைப்பதா...

(உயிருள்ள வரை உஷா)

கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே.. நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே... எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி..

(உறவைக் காத்த கிளி)

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாற தாமரைப்பூ மீது விழுந்தனவோ.. இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ.. இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட புதிய தம்பூராவை மீட்டிச் சென்றாள் கலைநிலா மேனியிலே சுவை பலா சுவையைக் கண்டேன்..

ஆஹா... ஆஹா.. நீ ரசிகண்டா..

நான் சொன்னது சரிதானே காதல் கவியரசுப்பட்டம்...

Monday 13 July 2015

MSV

மனிதர்கள் உடலில் ஹார்மோன்கள் சுரந்தது இவரது உடலில் மட்டும் ஆர்மோனியம் சுரந்தது இவர் விரற்கட்டை பட்ட போதெல்லாம் ஸ்வரக்கட்டை சிலிர்த்தது நல்ல மெட்டுக்கட்டை அணிந்தது கண்ணதாசனின் பாட்டா விஸ்வநாதனின் மெட்டா எது சிறந்தது எனக் கேட்டா
எவரும் இங்கு பதில் சொல்ல மாட்டா..
நல்லிசை தந்த மெல்லிசையே நீ வல்லிசை தந்ததில்லை.. கவிஞர்களின் சொல்லிசையை ராமனின் வில்லிசை போல அதிர வைத்தாய்..  ஏனெனில் உன்னுடனும் இருந்தார் ஒரு இராமமூர்த்தி உங்கள் இசையால் கிடைத்தது பெரும் கீர்த்தி.. நீ ஒரு இசை விவசாயி உன் வயலினில் விளைந்தது எத்தனைப் பாட்டுப் பயிர்.. அதை கேட்டு மகிழ்ந்தது மக்களின் உயிர் இரட்டைக் குழலாய் இணைந்திருந்த போதும் தனித்து இருந்த போதும் நீ ஒரு துப்பாக்கி.. அது தோட்டாவை பொழியும் நீ பாட்டாகவே பொழிந்தாய்.. கண்ணதாசன், வாலி, செளந்தரராஜன், விஸ்வநாதன் இந்த நால்வர் தான் தமிழ் சினிமாவின் நான்மறை.. ஆனால் இந்த நால்வருமே மறைந்தது என்ன முறை.. மறைந்தது உங்கள் உயிர் தான் மெல்லிசைகளில் நீங்கள் வாழ்வீர்கள் இவ்வுலகம் உள்ள வரை..

கண்ணீருடன்..

ரசிகர்கள்.

Friday 10 July 2015

ஸ்வீட்ஸ்

New tweets

அன்று தொரட்டிக்குச்சியை கையில்பிடித்ததின் பரிணாம வளர்ச்சியே இன்றைய செல்ஃபி ஸ்டிக்.

இவன் 40,50 பெண்கள்கூட சாட் பண்ணிட்டு அந்த பொண்ணுக்கு 11 பேரான்னு கிண்டலடிக்குறான்.

மனிதனின் களவுள்ள நாக்கு பாம்பின் பிளவுள்ள நாக்கை விட கொடியது.

எல்லைகளை வகுத்துக்கொண்ட போதே பிரிவினைகள் தொடங்கிவிட்டன.

நீ ஃபீனிக்ஸ் பறவையாகவே இருந்தாலும் சோம்பேறியாய் இருந்தால் சாம்பலாகவே இருப்பாய்.

மனது வெள்ளையாக இருப்பதால் தான் சீக்கிரம் அழுக்காகி விடுகிறது.

சோகத்திற்கு வடிகால் என்பது ஆல்கஹால் எனத் தவறாகவே  புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.

அதிர்ஷ்டமில்லாத மரங்கள் வெட்டி எறிந்து சிறு துண்டுகளான போதும் மீண்டும் சீவப்படுகிறது பென்சில்களாய்.

ஏன் சுவற்றோடு பேசுகிறாய் உன் சோகத்தை கடவுளிடம் போய் சொல்லி ஆறுதல் தேடு என்கிறார்கள் இரண்டும் ஒன்றுதான் எனத் தெரியாமல்.

கடமை என்பது நம் கண்ணுக்கு கொடுமையாகவே தெரியும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியாது.. "புரொஃபைல் பிக்சர்"

நம் சோகம் என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு ஆறுதல் கிடைக்காது.

என்ன தான் முகம் மூடி ஹெல்மெட் போட்டாலும் என்னவளை எளிதாக அடையாளம் காண முடிகிறது. பிரேக் போடும் போது 2 காலும் சாலையில்.!

நடுத்தர வயதில் ஆணின் சமாதானக் கொடி நரையாக மாறி காதோரங்களில் பறக்கும்.

சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் "பாட்டாளிகள்" தானே!

காதலில் தோற்றவனுக்கு ரோஜாப்பூவும் நிலாவும்  கவிதையாகத் தெரியாது.

சரி சரி... லேட்டானாலும் பரவாயில்லை மெதுவாவே வாங்கன்னு மனைவி சொன்னால் அவங்க வீட்டில் இல்லை வெளியே போயிருக்காங்கன்னு அர்த்தம்.

காதலில் தோற்றவர்களின் சோகம் முன்பு பாட்டில் இருந்தது தற்போது பாட்டிலில் இருக்கிறது.

"உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருந்துச்சு"என்பது  நட்பே இல்லை.

ஆங்கிரி பேர்டு விளையாடும் குழந்தைகளிடமிருந்து மொபைலை பறித்தால் நிஜ ஆங்கிரிபேர்டாக மாறிவிடுகிறார்கள்.

மனிதன் பறக்க முடியவில்லையே என ஏங்குவதுபோல் ஓட முடியவில்லையே என பறவைகளும் ஏங்கலாம்.

மனைவியிடம் அனுமதி பெற்று பார்ட்டிக்கு செல்வதே நிபந்தனை ஜாமீன் ஆகும்.

போன்கள் எல்லாம்"ஸ்மார்ட் ஆனது மக்கள் மட்டும்"பிளாட் ஆகிவிட்டனர்.

நல்ல அன்பான குடும்பத் தலைவனாக நடிக்கத் தெரிந்தவருக்கு அது போல நடக்கத் தெரியாததே வாழ்க்கை எனப்படும்.

ஆக்ச்சுவலி குத்துசண்டை மல்யுத்த வீராங்கனைகளை மணந்தவர்கள் தானே மாவீரர்கள்!

ரெண்டே நிமிடத்தில் தயாராச்சு 20 கோடியில் அழிஞ்சுபோச்சு.

பேண்ட் போட்டு பெல்ட் போட்டா "ஸ்டைலிங்" ஜட்டி போட்டு பெல்ட் போட்டா "ரெஸ்லிங்"

மதுவின் தீமைகளை பற்றி நெடுநேரம் நண்பர் எடுத்துரைத்தார் உடனே நிறுத்திவிட்டேன்!

சூப்பர் அந்த பழக்கத்தையா.?

இல்லை..அவருடன் பேசுவதை..

இந்தியாவிலுள்ள ஆண் ஜென் துறவிகள் அனைவருக்கும் திருமணமம் ஆகிவிட்டது.

குடித்துவிட்டு தாமதமாக வீடு திரும்புபவனுக்காக வாசலிலேயே வெறியோடு காத்து நிற்கும் மனைவி...

 இதான் "தெய்வம் நின்று கொல்லுங்கறதோ"

Wednesday 8 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

வாட்...? போர் தொடுப்பதா..! என்ன சொல்கிறீர்கள் ஹிஸ் ஹைனஸ்.!

யெஸ் போரே தான்..! அதுவும் இன்னும் 30 நிமிடங்களில்..

உலக வரை படத்தில் ஐரோப்பிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே சிறு புள்ளியாய் மறைந்துள்ள நாடு அது. உரையாடல் அந்நாட்டு அதிபருக்கும் அமைச்சருக்கும் இடையே நடந்தது.. இனி.. தொடர்கிறது...

ஹிஸ் ஹைனஸ்.. அந்த புரட்சிப்படையில் அதிக பட்சம் 100 பேர் இருந்தாலே அதிகம்.. காதும் காதும் வைத்தாற்போல ஒரு ரகசிய ஆபரேஷனில் அனைவரையும் உயிருடன் பிடித்துவிடலாமே.. பகிரங்கமாக போர் எதற்கு.? அந்தளவு அவர்கள் பலம் வாய்ந்த படை இல்லையே.?

தெரியும் அமைச்சரே என் ஆட்சிக்கு எதிராக நாட்டின் தென்கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் 6 மாதத்தில் நாட்டின் மையப்பகுதிக்கு முன்னேறியிருக்கிறார்கள்.. அவர்களிடம் கையிலிருக்கும் ஆயுதங்கள் குறைவு ஆனால் மூளை அதிகம்..அவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

முழு பலத்துடன் அவர்களை இப்போதே தாக்கி அழிக்காவிட்டால் நாளை நீங்களும் நானும் கொல்லப்படுவோம்.. செல்லுங்கள் அவர்களை பெரிய எதிரி போல கருதி வீழ்த்துங்கள் என்றார் அதிபர். அவரது சொல்லிலுள்ள உணமையை தெரிந்து கொண்ட அமைச்சர்  போரிட விரைந்தார்.

நீதி : முள்மரத்தை சிறு செடியிலேயே களைந்துவிட வேண்டும் அது வளர்ந்த பின் வெட்டுபவர் கையை நோகடிக்கும் அதே போல பகையையும் அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.

Tuesday 7 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

"ஐயாவை நம்பி வந்துட்டேனுங்க அடுத்த மாசம் பொண்ணுக்கு காலேஜ் திறக்குறாங்க நீங்க கொடுத்த காசுல தான் புள்ளை ஸ்கூல் படிப்பே முடிச்சா இப்ப காலேஜுக்கும் பணம் கட்டிட்டா என் காலம் இருக்குறவரைக்கும் மறக்கமாட்டேனுங்க" என அந்த ஏழை தகப்பன் சாமிக்கண்ணு தேவராஜனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

தேவராஜன் மிகப்பெரிய செல்வந்தர்..! பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனம் உடையவர்.. ஆனால் இப்போது நொடித்துவிட்டார்.. இப்போது இருக்கும் இந்த பங்களாவையும் விலை பேசி தான் பட்ட எல்லா கடனையும் கொடுத்துவிட்டார். இன்னும் ஒரு வார அவகாசத்தில் இதை காலி செய்யவேண்டும். இந்த நேரத்தில் தான் சாமிக்கண்ணு உதவி கேட்கிறார்.

சாமிக்கண்ணுவின் மகள் நன்றாகப் படிப்பாள்.. உண்மையில் அவள் பத்தாவது படிக்கும் போதே தேவராஜ் பணம் இல்லாததால் உதவி செய்வதை நிறுத்திவிட்டார்.. அதற்கே அவருக்கு மனவேதனை இருந்தது நல்ல வேளையாக அந்தப்பெண்ணுக்கு கடைசி 2 வருடங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க நிம்மதியடைந்தார். இப்போது 10 பைசா கூட அவரிடம் இல்லை.

ஐயா.. என்ன யோசிக்கிறிங்க.. என்றார் சாமிக்கண்ணு.. ஒண்ணுமில்லப்பா நாளைக்கு காலையிலவா ஏற்பாடு பண்றேன் என்றார் தேவராஜ். மகிழ்வோடு சாமிக்கண்ணு கிளம்ப..அவர் போனதும் தேவராஜின் மனைவி கேட்டார் என்னங்க இப்படி சொல்லிட்டிங்க பணத்துக்கு என்ன பண்ணபோறிங்க?

அதுதாம்மா தெரியலை ..இல்லைன்னு சொல்லவும் வாய் வரலை..உங்கிட்ட ஏதாச்சும் நகை நட்டு இருக்கா.. என்னங்க இது அது இருந்தா நான் தரமாட்டேனா தாலியில இருந்த தங்கத்தை கூட வித்தாச்சுங்களே  என்றார் தேவராஜின் மனைவி.. அய்யோ அவருக்கு காலையில் தர்றேன்னு சொல்லிட்டனே இப்ப என்ன பண்ணுவேன்.. புலம்ப ஆரம்பித்தார் அவர்.

சரி விடுங்க கடவுள் இருக்கான் அவன் பாத்துக்குவான் என மனைவி ஆறுதல் படுத்த திரும்ப திரும்ப அதையே புலம்பியபடி வேதனையான முகத்துடன் கண்ணீர்விட்டார் அவரை தேற்றியபடியே மனைவி தட்டிக்கொடுக்க இருவருமே தூங்கிவிட்டனர். விடிந்தது மனைவி எழுந்தார்..கட்டிலில் உறங்கிய நிலையில் தேவராஜ் இறந்திருந்தார்.

அவரது முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சிறு புன்னகையும் நிம்மதியும் தெரிந்தது.

நீதி : வறியவர்க்கு உதவ முடியாத வேளையில் வரும் மரணமும் இனிமையானது.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

Sunday 5 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

"வேணாங்க அரசியல் செல்வாக்கு இருக்குற அவங்க கூட நாம மோத முடியாது... பேசாம இந்த வீட்டை அவங்க கேட்ட விலைக்கே கொடுத்துடுங்க" என்றாள் கணவன் ரவியிடம் மஞ்சுளா. 

இல்லம்மா அவங்க அநியாயத்துக்கு குறைஞ்ச விலைக்கு கேக்குறாங்க இன்னிக்கு இந்த இடத்தோட வேல்யூவை விட பாதி கூட இல்லை அவங்க தரேன்னு சொன்ன தொகை அதான் யோசிக்கிறேன் என்றான் ரவி.

யோசிக்காதிங்க கிடைச்சது வரைக்கும் நல்லதுன்னு வாங்கிகிட்டு பேசாம போயிடுவோம்.. நீங்க இல்லாத நேரமா ரவுடிங்க வீட்டுக்கு வெளிய நின்னு மிரட்டுறாங்க.. நாம வேற எந்த ஊருக்காவது போயிடுலாங்க என அழுதாள்.

சரி சரி அழாதே.. அந்த பத்திரத்தை எடு அந்தாளுகிட்ட போய் கொடுத்துட்டு வர்றேன்.. அரசியல்வாதி அம்பலவாணனின் மிரட்டலில் அந்த அப்பாவி குடும்பத்தார் அந்த இடத்தை விற்றுவிட்டு வேறு ஊர் போனார்கள்.

ஆறு மாதங்களுக்குப் பின்... அம்பலவாணன் வீடு கோபத்தோடு உறுமிக் கொண்டிருந்தார்.. என்னடா சொல்ற தகவல் உண்மை தானா என்றார் உதவியாளிடம்.. ஆமாண்ணே இந்த இடத்துல தான் ஹைவேயை இணைக்கிற மேம்பாலம் வருதாம் அதான் நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க.. 

இது மத்திய அரசு திட்டம்.. இப்ப நம்ம கட்சித் தலைவருக்கும் மத்திய அரசு ஆதரவு வேணுங்கறதால பிரச்சனை பண்ணாம இடத்தை இலவசமாவே கொடுத்துடுங்கன்னு தலைவர் சொல்லிட்டாரு. என்றபோது அம்பலவாணன் திகைத்து நின்றார்.

நீதி: பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

Saturday 4 July 2015

100 ஆண்டுகளுக்கு பின்...

#கிபி2115

நானோ டெக்னாலஜிகள் அரதப்பழசாகி சைனோ டெக்னாலஜிகள் மூலம் உலகம் இயங்கிக் கொண்டிருந்தது.. சந்திரன் செவ்வாயில் எல்லாம் குடியிருப்புகள் சகஜமாகி இருந்தன பூமியில் பாஸ்போர்ட் அழிக்கப்பட்டிருந்தது.

வேற்று கிரகத்திற்கு மட்டும் சைனோ டெக்னாலஜி மைக்ரோசிப் பாஸ்போர்ட்டுகள் தேவைப்பட்டது.. தினசரி சிங்கப்பூர் துபாய்க்கெல்லாம் சென்னையிலிருந்தே வேலைக்கு போய் வரும் அளவு போக்குவரத்து அதி நவீனமாக இருந்தது.. 

மனிதர்களின் சராசரி ஆயுள் 150 ஆண்டுகளாக இருந்தது.. டிஜிட்டல் புரட்சி சிகரத்தில் இருந்தது.. அமெரிக்காவிலிருந்து வாராவாரம் தன் ஹெலிடாக்சியில் சென்னை திரும்பும் தீபா தன்அபார்ட்மெண்ட்டின் மொட்டை மாடி பார்க்கிங்கில் டாக்சியை லேண்ட் செய்து சோலார் பவர் லிப்டில் 115 மாடியில் இருக்கும் தன் பிளாட்டுக்கு கீழிறங்கினாள்.

தன் விரல் ரேகையை கதவில் ஸ்கேன் செய்து லேசர் சாவியால் கதவை திறந்தாள்.. அங்கே சைனோ டெக்னாலஜியில் இருந்த ரோபோ உயிர் பெற்று தன் எஜமானியை வரவேற்று அந்த நூற்றாண்டின் பானமான ஹாஸ்ட் போட்டு தந்தது.. ரோப்ஸ் ப்ளீஸ் ஸ்விட்ச் ஆன் த டிவி என்ற எஜமானியின் கட்டளை கேட்டு...

தன் முதுகில் இருந்த சாட்டிலைட் புரொஜக்டர் மூலம் எதிரே இருந்த சுவரில் டிவியை ஒளிரச் செய்தது.. தன் ஆப்டிக் கண்ட் ரோல் கண்களை ரிமோட்டாக்கி சேனல் ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டு வர.. தமிழ் சேனல் போடு என்ற அடுத்த கமெண்ட் வந்தது தீபாவிடம் இருந்து., சட்டென்று திரையில் விஜய் டிவி தெரிய அதில் ஓடிக்கொண்டிருந்தது #கும்கி_திரைப்படம்.

Friday 3 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

சார் நம்ம நிறுவனத்து தயாரிப்புகளை கிண்டல் அடித்து நமக்கு மார்க்கெட் போட்டியான ஒரு நிறுவனம் விளம்பரம் எடுத்து இருக்காங்க.

ஓ.. அப்படியா அதுக்கு என்னா செய்யலாங்கறிங்க!

நாமும் பதிலுக்கு ஒரு விளம்பரம் எடுத்து அதுக்கு கவுன்ட்டர் கொடுக்கணும் சார்..

சரி அவங்க நம்ம தயாரிப்பு பத்தி கிண்டல் பண்ணதுல ஏதும் உண்மையிருக்கா?

95 சதவீதம் இல்ல சார்..

ஓ.. அப்ப 5சதவீதம் இருக்கு இல்லியா.. அந்த நிறுவனம் நமக்கு நல்லதை தான் செஞ்சிருக்காங்க.. அவங்க செலவு பண்ணி நம்ம குறையை சுட்டிக்காமிச்சு இருக்காங்க.. அவங்களுக்கு பதிலடி தர்றதுக்கு யோசிக்கிற நேரத்துல இந்தக் குறையை களையெடுக்க யோசியுங்க, அதுவே நமக்குப் போதும்.

அந்த முதலாளியின் இந்த பாசிட்டிவான பழி வாங்கும் குணமில்லாத அணுகுமுறை அடுத்த சில மாதங்களில் அவர்களது விற்பனையை பல மடங்காக்கியது.

நீதி: செல்வத்தை உயரிய வழியில் சேர்த்துக் கொண்டே இருப்பது தான் எதிரியின் கர்வத்தை அறுக்கும் கூரிய ஆயுதமாகும்.

செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

Thursday 2 July 2015

குறள் குறுங்கதைகள்

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

என்ன சார் சொல்றிங்க இளம்பிள்ளை வாதம் வந்து இரண்டுக்காலுமே சூம்பிப் போன என் மவனுக்கு விளையாட்டு கத்துத்தர போறிங்களா?!?! அதெப்படி சார் முடியும் என அப்பாவியாய் கேட்டார் மாடசாமி.

ஐயா நாங்க எங்க ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலமா திறமையான ஆளுங்களை பள்ளிகளில் தேடி வாய்ப்பளிக்கிறோம் உங்க பையன் படிக்கிற பள்ளியில் அவனது ஆர்வத்தை பார்த்து தான் அவனை தேர்ந்தெடுத்து இருக்கோம். நீங்க சம்மதம் தாந்தா தம்பியை எங்க அகாடமிக்கு அழைச்சிட்டு போய் சிறப்பு பயிற்சி தருவோம் என்றார் அந்த கோச்.

மாடசாமியைச் சுற்றி இருந்த உறவினர்கள் இதோ பாரு மாடசாமி எந்தக்குறையும் இல்லாதவனே ஜெயிக்க முடியலை..உன் மவன் பாவம் ரெண்டு காலும் இல்லாதவன் அவன் எல்லாம் விளையாடி சாதிக்க முடியுமா? அவன் விதி அப்படி... அவனை எங்கேயும் அனுப்பாதே என்றனர்.

மாடசாமி ஒரு நிமிடம் சிந்தித்தார்.. தன் மகனைப் பார்த்தார் அவன் கண்களில் அதீத ஆர்வமும் சாதிக்க வேண்டுமென்ற வெறியும் தெரிந்தது.. சட்டென சொன்னார்.. ஐயா எனக்கு என் மவன் மேல நம்பிக்கை இருக்கு எம்மவனை அழைச்சிட்டு போங்க நான் சம்மதிக்கிறேன் என்றார்.

5 வருடங்களுக்கு பின் இன்று... அந்த ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.. ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த தங்கள் ஊரின் தங்க மகனை வரவேற்க..

நீதி: சோர்வின்றி முயற்சி செய்பவர்களிடம் விதி கூட தோற்றுவிடும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாளாது உஞற்று பவர்.

Wednesday 1 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

"இப்படியே வியாபாரம் நடந்தா ஒரு மாசத்துல கடையை மூடிட வேண்டியது தான்" என்றான் ரவி.

ரவியும் ஹரியும் இணைந்து ஆரம்பித்த ரெஸ்ட்டாரெண்ட் அது.. ரவி தான் முதலீடு செய்திருந்தான் பெரிய செல்வந்தன் அவன்.. ஹரி உழைப்பு மட்டும் தான் மூலதனம். ஆகவே இப்படி ரவி சொன்னதும் ஹரி திடுக்கிட்டான்.

என்ன சொல்ற ரவி? நாம இந்தக் கடையை ஆரம்பிச்சி 2 மாதம் கூட ஆகலை.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நம்ம கடை பெயர் பிரபலமாகிட்டு வருது.. நம்ம உணவுகள் தரமா ருசியா இருக்கு அதுல குறையிருந்தா தான் நீ சொன்னது நடக்கும்.

எப்பவும் உணவுக்கடைகள் மக்கள் வாய் வார்த்தையால் தான் பிரபலமாகும் அது தான் அவர்களுக்கு உண்மையான விளம்பரம். இன்னும் சில மாதத்தில் நம் வியாபாரம் பெருகும் பொறு என்றான் ஹரி.. எனக்கு நம்பிக்கையில்லை ஹரி அதெல்லாம் முடியாது இப்ப தாங்குற அளவுக்கு நஷ்டம் இருக்கு இதை இப்படியே விட்டுடுறது தான் சரி என ரவி கூறினான்.

அப்ப என்ன செய்யலாம் என்றான் ஹரி.. நான் போட்ட மூலதனத்தை மட்டும் நீ கொடுத்துடு இல்ல வேற யார்கிட்டயாவது வித்துடுறேன்.. எனக்கு பணம் வந்தா போதும் ரிஸ்க் எடுக்க நான் தயாரில்லை என்றான் ரவி. சரி ரவி எனக்கு 3 நாட்கள் டைம் தா சொல்றேன்.. ஹரி.

3 ஆண்டுகளுக்கு பின் ஹரிஸ் கிச்சன் என்னும் உணவகங்கள் 50 கிளைகளுடன் சக்கை போடு போட்டு வருகிறது. இப்போது மாநிலம் முழுவதும் அதற்கு கிளைகள் உண்டு.. அன்று ரவியிடம் டைம் கேட்ட ஹரி வங்கி அதிகாரி ஒருவர் மூலம் கடன் வாங்கி ரவிக்கு செட்டில் செய்து விட்டு அயராது உழைத்ததன் விளைவே இந்த வெற்றி.

நீதி: ஊக்கம் உடையவரே எல்லாம் உடையவர் செல்வம் இருந்தும் ஊக்கமில்லாதவர் எதுவுமே உடையவர் அல்ல.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.