Friday 27 February 2015

ஓ.கே கதை


OK வந்த கதை - சுஜாதா

உலகிலேயே அதிகமாகப் பயன்படும் வார்த்தை இருக்கிறதென்றால் அது "ஓ.கே" தான். தமிழில் கூட பெரும்பாலும் தமிழுடனே பேசப்படுவது ஓ.கே. "ஷாட் ஓகேவா ஸார்" நீங்க பார்த்து ஓ.கே சொல்லிட்டா சரிதான்" பையன் எப்படி? ஓ.கே தானே" "கதை ஓ.கேன்னா ஷுட்டிங் ஆரம்பிச்சுடலாம்" என ஓகே இல்லாது பேசுவதில்லை.

அமெரிக்கர்கள் ஓகேவை வார்த்தைக்கு வார்த்தை இடையில் பயன்படுத்துவார்கள். ஐ கோ தேர் ஓ.கே" யு கம் தேர் ஓ.கே" வி போத் கோ அண்ட் மீட் ஹிம் ஓ.கே. இவ்வாறு அர்த்தமற்றும் The girl is ok. Is it ok if I meet you at ten. போன்ற பிரயோகங்களில் "ஆல்ரைட்" என்ற அர்த்தத்திலும் பயன்படுகிறது.

ஓகே டோக்கே' இட்ஸ் ஓகே பை மி போன்றவைகளும் இங்கு பிரசித்தம். அமெரிக்க விண்வெளி வீரர் 'அலன் ஷெப்பர்டு' முதன் முதலாக "ஏ ஓ.கே" என்பதை பிரயோகித்தார். நம்மூர் "டபுள் ஓ.கே" போல இது.இந்த ஓகேயின் சரித்திரம் சுவாரஸ்யமானது. 1840ல் அமெரிக்க ஜனாதிபதி மார்ட்டின் வான் ப்யூரன்.

அவரது சொந்தக்கிராமம் Old Kinderhook நியூயார்க் மாநிலத்தில் உள்ளது. அவர் சார்ந்த குழுவை அவர் ஊர் பெயருடன் ஓ.கே கிளப் என்றும், அவரையே ஓ.கே என்றும் அழைத்தனர்.எந்த சமாச்சாரத்தையும் ஓ.கே என குறிப்பிட்டால் அது ஜனாதிபதி தயவு பெற்றது அதனால் அது நிறைவேறும் என நம்பப்பட்டதாம்.

இவ்வாறு சொல்லாராய்ச்சியாளர்கள் சொல்ல 'உலகிலேயே மிக வெற்றிகரமான மிகவும் அறியப்பட்ட அமெரிக்கத்தனம் இதுதான் என்கிறார் H.L.மென்கன். ஓ.கே என்பது 'ஆல் கரெக்ட்" என்ற சொற்றொடரின் கொச்சைவடிவம் என்றும்,தவறு அது செவ்விந்தியர்களின் தந்தி பாஷையான ஓப்பன் கீ யிலிருந்து வந்ததென்றும்...

வேறுசிலர் ஓகே என்பது ' ஓகெண்டால் அண்ட் சன்ஸ்' கம்பெனியின் முத்திரை என்றும் ஹெயிட்டி தேசத்து துறைமுகப் பெயர் என்றும் கிரேக்க மொழியில் 'ஒல்லா கெல்லா' என்றால் 'எல்லாம் நல்லது' அதிலிருந்து வந்திருக்கலாம் என்றும் பல கதைகள் சொல்லப்படுகிறது.ஜெர்மன் வார்த்தையான 'ஒபெர் கொம்மாண்டோ"

தான் ஓ.கே என சொல்பவரும் உண்டு. அது எப்படி வந்ததோ... இன்று அது உலகையே ஆக்ரமித்திருக்கிறது. அமெரிக்கா செல்லும் எந்நாட்டவருக்கும் எளிதில் புரிவது இந்த ஓ.கே தான். விதவிதமாக தலையை ஆட்டி சம்மதத்துக்கும், சமாதானத்திற்கும் சந்தேக நிவர்த்திக்கும் பயன்படுத்தி சமாளிக்கிறார்கள்.

ஓகேவுக்கு ஈடான தமிழ் வார்த்தை உண்டா என்று கேட்டால் என் பதில்.. .ஆம் இருக்கிறது. அது தான் #சும்மா 

ஓ.கே.வா


Monday 23 February 2015

சூப்பர் மினிஸ்டர்ஸ்..

கற்பனைப் பதிவு..

அஜய் டிவி வழங்கும்... 

#ஃபயர்செல்_சூப்பர்_மினிஸ்டர்ஸ்_

சீசன் - 2016

"தமிழகத்தின் பிரம்மாண்டமான.. நல்ல முதல்வருக்கான தேடல்"

கண்டஸ்டண்ட் 1 : கலைஞர்

உடன்பிறப்பே.. நான் தான் கலைஞர்... ஏற்கனவே 5 முறை டைட்டில் வின்னர் ஆகக் 
தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.. எங்கள் அணியில் முதல்வர் பதவிக்கு என்னை விட்டால் ஆளில்லை.. வேறு யாரையாவது தேர்ந்தெடுத்தால் எனக்கு வருமே
தொல்லை.. ஆகவே நானே போட்டியிடுகிறேன்இந்த முறையும் என்னை டைட்டில் வின்னராக தேர்ந்தெடுத்தால் ஸ்டாலினுக்கு சப் - டைட்டில் வழங்குவேன் (துணை முதல்வராக்குவேன்) நான் அஞ்சுகத்தாயின் மகன் அஞ்சா நெஞ்சனும் என் மகன் அவருக்கு அஞ்சியே அஞ்சு முறை கடந்தும்  நானே நிற்கிறேன்.. எனது எண் அஞ்சு அஞ்சு அஞ்சு அஞ்சு.. எனக்கு வாக்களியுங்கள்.. மீண்டும் பொற்காலம் வரும்.

நேயர்களே உங்களது விருப்பமான முதல்வர் இவரென்றால் DMK ஸ்பேஸ் 5555 என்று டைப் செய்து 234 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.

கண்டஸ்டண்ட் 2 : புரட்சித்தலைவி அம்மா..

என் ரத்தத்தின் ரத்தங்களே.. தர்மத்தின் வாழ்வுதனை விஜய் சேதுபதி படம்.. மீண்டும் ஒரு நாள் தர்மம் வடிவேலு கைபுள்ளயாக நடித்த படம்..! என்பது உங்களுக்கே தெரியும்.. 3 முறை பட்டத்தை மெஜாரிட்டியாக ஜெயித்த நான்.. ஒரு மைனாரிட்டி கும்பலால் பட்டத்தை இழந்து நிற்கிறேன்.. திருவரங்கத்தில் நீங்கள் நீதியை நிலை நாட்டியது போல இம்முறையும் நிலை நாட்ட வேண்டும்.. சட்டம் எனக்கு தடை போட்டாலும் நீதிக்கு தலை வணங்கி நான் விரல் நீட்டும் நபருக்கு ஓட்டளியுங்கள்.. எனக்கு அளித்த ஓட்டை விட நான் கை காட்டுபவருக்கு நீங்கள் அதிக ஓட்டளிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்..அதை செய்வீர்களா.!செய்வீர்களா.! என கேட்காமல் செய்துவிடுங்கள் என்று உங்கள் அன்புச்சகோதரியான நான் கேட்டுக் கொள்கிறேன்..எங்கள் அணியின் எண் 2222 புரட்சித்தலைவரின் எண் 2222 ஆகவே எங்களுக்கு வாக்களித்து புரட்சித்தலைவரின் ஆட்சியை தொடரச்செய்யுங்கள்.

நேயர்களே உங்களது விருப்பமான முதல்வர் இவரென்றால் AIADMK ஸ்பேஸ் 2222 என்று டைப் செய்து 234 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.

கண்டஸ்டண்ட் 3 : காங்கிரஸ்

தமிழகத்தின் வாக்காள பெருமக்களே நான் தான் EVKS.. இது நாங்கள் காமராஜர் காலத்தில் ஜெயித்த டைட்டில் அதன் பிறகு எப்போதும் END கார்டு தான் தந்து இருக்கிறீர்கள்.. இப்போது மீண்டும். (ஒருவர் குறுக்கிடுகிறார்)ஹாய் நான் தான் தங்கபாலு ஆக்சுவலி எங்க ஒற்றுமை..  (இப்போது வேறொருவர்) ஹாய் வியூவர்ஸ் நான் கார்த்தி சிதம்பரம் பேசுறேன் ஓல்டு ஆட்கள் போனா தான் ஜெயிக்கவே.. (மீண்டும் EVKS) ஒரு நிமிஷம் எல்லாரும் இப்படி சண்டை போட்டா புதுசா வந்திருக்க குஷ்பு நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க.. (மற்றவர்கள்)பாத்திங்களா நீங்க மக்கள் என்னா நினைக்கிறாங்கன்னு பாக்குறதை விட குஷ்பு என்னா நினைப்பாங்கன்னு தானே பாக்குறிங்க.. அப்புறம் எப்படி காமராஜர் ஆட்சி நடத்துவிங்க.. (சண்டை நடக்க.. இடையில புகுந்த குஷ்பு) ஹாய் நான் உங்க குஷ்.. அல்லாரும் காங்கிரசுக்கு வோட் பண்ணுங்க..காங்ரஸ் தான் ஜெய்க்கும்..  சோனியாஜி ஆட்சி நட்க்கும்.. எங்க நம்பர் 111 மர்ந்துடாம போடுங்க (எங்க நெத்தியிலா..!கார்த்தி சிதம்பரம் மைண்ட் வாய்ஸ்)

நேயர்களே உங்களது விருப்பமானவர்கள் இவர்களென்றால் AICC ஸ்பேஸ் 111 என்று டைப் செய்து 234 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.

தொடரும்..


கற்பனைப் பதிவு..

அஜய் டிவி வழங்கும்... 

#ஃபயர்செல்_சூப்பர்_மினிஸ்டர்ஸ்_

சீசன் - 2016

"தமிழகத்தின் பிரம்மாண்டமான.. நல்ல முதல்வருக்கான தேடல்"

கண்டஸ்டண்ட் 4 :கேப்டன்

மக்களே நல்லா கேளுங்க மக்களே.. உப்பு தண்ணி குடிச்சவன்.. இல்ல உப்ப தண்ணில கரைச்சி குடிச்சவன் ச்சே.. உப்ப தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்.. அது மாதிரி எனக்கே தண்ணி காட்டுனவங்களுக்கு நான் தண்ணி காட்டணும்.. மக்களே என்னடா இவன் தண்ணி தண்ணின்னே பேசறான்னு பாக்குறிங்களா.! வள்ளுவரே சொல்லியிருக்காரு நீரின்றி அமையாது உலகுன்னு.. கட்சிக்கு உங்க அண்ணி அதாவது என் மனைவி பக்கபலமா இருந்து பாத்துக்குவாங்க.. நாட்டுக்கு நல்லா தண்ணிய தந்து பக்காவா நான் பாத்துக்குவேன்..மக்களே நான் ஆட்சிக்கு வந்தா தண்ணிக்கு பிரச்சனையே இருக்காது.. ஆகவே மக்களே கூட்டணி வேணுமா வேணாமான்னு நீங்க சொல்லுங்க கடைசியில நான் சொல்லிடுவேன்.. உங்க ஓட்டு எனக்கு தான் என் நம்பர் 6090.. சிக்ஸ்ட்டி நைண்ட்டின்னு ஞாபகம் வச்சுக்கோங்க.!

நேயர்களே உங்களது விருப்பமான முதல்வர் இவரென்றால் DMDK ஸ்பேஸ் 6090 என்று டைப் செய்து 234 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.

கண்டஸ்டண்ட் 5 : அன்புமணி

டியர் வியூவர்ஸ் நான் தான் அன்புச்செல்வன்.. ஓ சாரி செல்வன் அப்படின்னா மகன்னு அர்த்தம் வருது இல்ல.. நான் தான் உங்க அன்புமணி பேசறேன்.. ஏன்னா இங்க தான் வாரிசு அரசியல் கிடையாதே.. என்ன அப்படி பாக்குறிங்க.? பின்ன ஏன் உங்க டாடி அப்படி சொன்னாருன்னு தானே.!  நான் கூட அவர் கிட்ட டாடி எனக்கு ஒரு டவுட்டுன்னு கேட்டேன் அதுக்கு அவரு சொன்னாரு அது கட்சியில இருக்குற மத்தவங்களுக்கு தான் உனக்கில்லைன்னு.. மாம்பழத்துக்காக சிவனோட குடும்பத்துலயே சண்டை வந்துச்சு அந்த மாதிரி வரக்கூடாதுன்னு தான் டாடி அப்படி சொல்லியிருக்காரு.. ஓகே நான் எம்ஜிஆரைவிட தக தகன்னு மின்னுறதா நினைச்சா... ஒரு டாக்டர் முதல்வராகணும்ன்னு நினைச்சா.. டாஸ்மாக்கை மூடணும்ன்னு நினைச்சா எனக்கு ஓட்டு போடுங்க.. என் நம்பர் 0001 மறக்காதிங்க.!

நேயர்களே உங்களது விருப்பமான முதல்வர் இவரென்றால் PMK ஸ்பேஸ் 0001 என்று டைப் செய்து 234 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.

கண்டஸ்டண்ட் 6 : வை.கோ

அன்பிற்குரிய ஈழத்தமிழ.... மன்னிக்கவும் தமிழக வாக்களார்களே.. புலி வருது புலி வருது கதையை கேட்டு இருப்பீர்கள்.. ஒவ்வொரு முறையும் வருவது போல வராமல் போய்விடும்.. ஆனால் இந்த முறை உண்மையிலேயே 2016இல் புலி வரயிருக்கிறது. விஜய் நடித்த புலி தானே என்றும், கொட்டை எடுத்த புலியா என்றும் வலைப் பதிவர்கள் பதிவு போல கிண்டலான எண்ணம் உங்களுக்கும் தோன்றலாம், ஆனால் இயேசுபிரான் உயிர்த்தெழுந்தது போல விரைவில் ஒரு புலி தென்னிலங்கையிலும் உயிர்த்தெழ உள்ளது அது உயிர்த்தெழும் போது அங்கு ஈழம் மலரும் தமிழகத்தில் நம் ஆட்சி தொடரும்.. ஆகவே நடையாய் நடந்த எனக்கும், ஓடாய் தேய்ந்த என் கட்சிக்கும் உங்கள் ஆதரவெனும் ஓட்டுக்களை வாரி வழங்கி இன்னும் என்னை பம்பரம் போல் சுழன்று பணியாற்றிட வாக்களியுங்கள்.. எனது எண் 144.

நேயர்களே உங்களது விருப்பமான முதல்வர் இவரென்றால் MDMK ஸ்பேஸ் 144 என்று டைப் செய்து 234 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.

(தொடரும்)



மதிமுகா...

மதிமுகா - பம்பரம்

{மறுபடியும் திரும்ப முடியாத காலம்}

பம்பரம். எத்தனை பேருக்கு இன்று சிறு வயதில் விளையாடியது போல் விளையாடத் தெரியும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் கடந்த வாரம் மதுரைக்கு போயிருந்த போது ஒரு கிராமத்து விழாவில் பம்பரம் விடச் சொன்னார்கள்.! அதாவது பம்பரத்தை சாட்டையால் சுழற்றி தரையில் விடாமல் அப்படியே கையில் சுற்ற வைக்க வேண்டும்!

சிறுவயதில் இது எனக்கு கை "வந்த" கலை இப்போது சாத்தியமா என்னும் சந்தேகத்துடனே.. பம்பரத்தை வாங்கினேன். நல்ல மீடியமான பம்பரம் அடிப்புறத்தில் ஆணி சரியான அளவில் நீட்டியிருந்தது.. ஆணியின் கீழ்ப்புறம் கூர்மையாக இல்லாமல் உருளையாக தர்மா மீட்டரின் முனை போல் இருந்தது.!

இவ்வகை பம்பரங்கள் நீண்ட நேரம் சுற்றும்.. என்னுள் அமிழ்ந்து கிடந்த பம்பர மெக்கானிசங்கள் அத்தனையும் குபீரென்று வெளி வந்தன.. சற்று பட படப்புடன் சிவப்பு நிற சாட்டையை வாங்கி அதன் இறுதியில் உள்ள முடிச்சு எனக்கு சிறியதாக தெரிந்ததால் மேலும் ஒரு முடிச்சு போட்டு பம்பரத்தை சாட்டையால் சுற்றினேன்.

தோளுக்கு மேல் கொஞ்சம் கையை உயர்த்தி பம்பரத்தை சாட்டையால் ஒரு சுழற்று சுழற்றும் போதே அதை நம்மிடம் இழுக்க வேண்டும்.. கிரிக்கெட்டில் ஜாண்ட்டி ரோட்ஸ் எறியும் த்ரோ போல. சுழற்றல், இழுத்தல், கையை சரியாக பம்பரத்தின் அடியில் கொண்டு செல்லுதல் மூன்றும் ஒரே வினாடிக்குள் நடக்க வேண்டும்.!

இது சிறுவயதில் சாதாரணம்..26 வருடங்களுக்கு பிறகு.. ஒரு முறை சிறு வயதில் விளையாடியதெல்லாம் நினைவில் கொண்டு வந்து மிகுந்த யோசனையோடு சுழற்றுகிறேன் இழுக்கிறேன் கையை நீட்டுகிறேன்.. அட முதல் முயற்சியிலேயே என் உள்ளங்கையில் அழகாக சுற்றுகிறது அந்த வொயிலட் மஞ்சள்.. வெயிட்.. வெயிட்..

வொயிலட் மஞ்சள் என்றா சொன்னேன்.. அட சிறு வயதில் நான் "மார்ஷல்" என்று பெயர் வைத்திருந்த பம்பரமும் அதே கலர் தான் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.. அடடா சுற்றும் அந்த பமபரத்தின் உச்சியை பார்க்கிறேன் மஞ்சளும் வயலட்டும் குயவனின் சக்கரம் போல சுழல்கிறது..என் நினைவுகளும்..கட் பண்ணா..

1984.. சேலம்.. இந்தியாவை கிரிக்கெட் விளையாட்டு மோகம் ஆட்கொள்ளாத காலம்.. சிறுவர்களுக்கு கோலி, கில்லி, பம்பரம் தான் அப்போது எல்லாமே.! கோலியை காசு வைத்து சில முரட்டு அண்ணன்கள் ஆடுவார்கள்.. போலீசெல்லாம் துரத்தும்.. கில்லி தெருவில் நடப்போரை பதம் பார்க்கும்.. பம்பரம் தான் பாதுகாப்பு.!

பம்பர விளையாட்டிலும் ஆக்கராட்டம், அபீட்டாட்டம், என பல உண்டு.. அபீட் ஆட்டம் குரோர்பதியின் ஃபாஸ்டஸ்ட் ஃபிங்கர் போல வேகமாக பம்பரத்தை சுற்றி தரையில் சுழலவிட்டு சாட்டையால் அதை தூக்கி கேட்ச் செய்ய வேண்டும். பம்பரம் சுழலாமல் உருண்டுவிடும் அப்பாவிகளின் பம்பரம் வட்டத்துக்குள் வைக்கப்படும்.

பிறகு அத்தனை பேரும் அந்த பம்பரத்தை குறிப்பிட எல்லை வரை பம்பரத்தாலேயே அடித்து தள்ளிக்கொண்டே போய் அந்த எல்லை வந்ததும் ஆணியால் ஒரு குத்து குத்துவார்கள்.. பதிவர்களிடம் மாட்டிக்கொண்ட லிங்குசாமி போல அந்த பம்பரம் நாயடி பேயடி வாங்கி உடலெல்லாம் அம்மை தழும்புகள் போல காயம் பெறும்.

ஷார்ட் அபீட்டில் குறைந்தது நான்கு பேராவது மாட்டுவார்கள் அவர்களது பம்பரத்தை வெளியில் எடுத்து கடைசியில் மாட்டும் அப்பாவிக்கு ஆக்கர் பரிசு தரப்படும்.. கிச்சிப் பாளையத்தின் குறுகலான சாக்கடைகள் நிறைந்த வீதிகளில் அவ்வப்போது எங்கள் பம்பரங்கள் சாக்கடை நீராடும்.! மீண்டும் அதை கழுவி எடுத்து விளையாடுவோம்.!

பம்பரங்களில் சட்டி பம்பரம், நீள பம்பரம், தலையாட்டி பம்பரம், சாதா பம்பரம், என பலவகையுண்டு.. லேத்தில் கொடுத்து கூரான ஆணியடித்தால் நாம் ஆக்கரில் நிபுணன், மழு மழு முனை என்றால் சாகசத்திற்கு.. பம்பரத்திற்கு ஆணியடிப்பது ஒரு கலை சில பம்பரங்கள் ஆணியடிக்கும் போதே இரண்டாக பிளந்து உயிரை விடும்.!

சரியாக ஆணியடிக்காத பம்பரங்கள் குதிக்கும்..! தெற்கே விட்டால் மீதி ஏழு திசையிலும் ஓடும் அதற்கு தய்யத்தக்கா பம்பரம் எனப்பெயர். பூப்போல சுற்றும் பம்பரங்களை நாங்கள் பம்பரம் மயங்குது என்போம் நெடு நேரம் சுற்றும் பம்பரம் அது அதற்குதான் மழுமழு முனை ஆணி. சட்டி பம்பரம் ஷார்ட் அபீட்டுக்கு, 

அதே போல பம்பரம் நம் பேச்சு கேட்க சாட்டை தேர்ந்தெடுப்பது முக்கியம்.சாட்டை ரொம்ப நீளமாகவும் இருக்கக் கூடாது, குட்டையாகவும் இருக்கக்கூடாது. நீளமான சாட்டை பம்பரத்தை நழுவ விடும்.. குட்டையானது பம்பரத்தை உருட்டி விடும் சாக்கடைக்குளியல் குட்டை சாட்டையால் தான்.. ஆக சாட்டை மிக முக்கியம்.!

சாட்டை பம்பரத்தின் முக்கோணப்பகுதி நிறைவடையும் வரை நீளம் இருக்க வேண்டும். சாட்டையின் முடிவில் போடப்படும் முடிச்சு இருகப்பிடிக்க அதற்கு நாங்கள் கூல்டிரிங்க் பாட்டிலின் மூடியை (சோடா மூடி) வாங்கி அதை தட்டையாக்கி துளையிட்டு அதில் சாட்டையை நுழைத்து முடி போட்டு இருப்போம்..!

பம்பரத்தை சுற்றுகையில் மோதிர விரலுக்கும் சுண்டு விரலுக்கும் நடுவே சாட்டை இருக்க இரு விரல்களின் மீதும் தாமரைக்கனியின் மோதிரம் போல அந்த வட்டத் தகடு கம்பீரமாய் இருக்கும் பிடியும் நழுவாது. சாட்டையின்  முனையை திரிபோல இரண்டாக பிரித்து சுற்றும் பம்பரத்தின் ஆணியிடம் கொண்டு போனால்..

அது சிக்கிக்கொள்ளும்.. இதற்கு எலி பிடிப்பது என்று பெயர்.. பொதுவாக பெண்களை கவரவே கையில் பம்பரம் விடுவது காற்றில் அண்டர் ஆர்மில் இழுத்து கைக்கு கொண்டு வருவது போன்றவை அந்த காலத்து பைக் வீலிங்கிற்கு சமம். என்னிடம் 5 பம்பரங்கள் இருந்தன.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

அதிலும் வயிலட் மஞ்சள் கலந்த பம்பரத்தை நீண்ட நாள் வைத்திருந்தேன்.. அதற்கு மார்ஷல் எனப்பெயர்.. பெயர் காரணம் முத்துகாமிக்ஸில் கெளபாய் கதையில் வரும் போலீசுக்கு மார்ஷல் எனப்பெயர்.. அதில் ஒருமுறை மார்ஷல் சொல்லுவார் நான் எந்த சாட்டைக்கும் கட்டுப்படாத பம்பரம் என்று" அது எனக்குப் பிடித்துப் போக... 

அப்பெயரை சூட்டிவிட்டேன்.. மாப்ள தென்றல் தான் ஆக்கர் கிங் அவன் மிகக்கூரான ஆணியில் வைத்திருக்கும் பம்பரங்கள் நண்பர்களுக்கு கிலி ஏற்படுத்தும் அதிலும் சில பம்பரங்கள் மீது அவன் வைக்கும் ஆக்கர்கள் விக்ரமாதித்தன் தோளில் அமர்ந்த வேதாளம் போல நன்கு பதிந்து கொள்ளும்.. பிரிக்கவே முடியாது.!

சில வேளைகளில் இரண்டு பம்பரங்களுமே உடைந்துவிடும்.. பல நாள் என்னிடம் இருந்த மார்ஷலும் தென்றலில் ஆக்கரில் ஒரு நாள் உடைந்து போனான்.. இன்று உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும் தென்றல் சொல்லுவான் மாப்ள அப்படி ஒரு காலம் திரும்ப வராதுடா என்று.. சென்னையில் இதுவரை நான் பார்க்காதது.!

தெருக்களில் குழந்தைகள் விளையாடும் காட்சியை.! இது சென்னை மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதே தான்.. டென்னிஸ், நீச்சல், கிரிக்கெட், என எல்லா விளையாட்டுக்கும் வகுப்பு, அதற்கு கட்டணம் இது தான் பெரு நகர வாழ்வு.. காசிருந்தால் திறமையை வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள்.. அது தவறு.

சேலத்தின் வீதிகளில் விளையாடிய நான் தான் பிறகு மாநில அளவிலான கிரிக்கெட் அணிக்கு தேர்வானேன்..பம்பர ஆட்டம் எனது பந்து எறியும் திறனைத் தந்திருந்தது பார்வைக் கூர்மையை மேம்படுத்தியிருந்தது. இயல்பிலேயே இருந்த திறமை மற்ற விளையாட்டுகளால் மேம்பட வேண்டும்.. அது தான் உணமையான பயிற்சி.!

உங்கள் குழந்தைகள் திறமைசாலிகளாக வேண்டுமா எங்களிடம் வாருங்கள் என்று விளம்பரப்படுத்தி இப்போது சம்மர் கேம்ப் என்னும் பெயரில் வகுப்புகள் நடக்கிறது.. அதை போய் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது..!அதில் ஒரு வகுப்பு.!"க்ளே ப்ளே" என்று களிமண்ணை குழைத்து விளையாட வேண்டுமாம்.. அடப்பாவிகளா..!

இதைத்தானே சிறு வயதில் தெருவில் விளையாடினோம்.. இதற்கு கட்டணமா.! ஒரு வேளை கில்லி, மணல் வீடு கட்டுவது, பம்பரம் எல்லாம் சம்மர் க்ளாசில் வந்துவிடும் போல..! மாநகர மனிதனுக்கு பணம் கட்டி எதையும் வாங்குவது தான் மதிப்பாக தோன்றுகிறது.. சரிதானே நான் சொன்னது..!

Saturday 21 February 2015

ராஜாதி ராஜா.

#ராஜாதி_ராஜனிந்த_ராஜா

அமைதியான இரவில் அல்லது தனிமையான பொழுதில் மனதில் எவ்வளவு கவலைகள் இருப்பினும் சில பாடல்கள் அதற்கு மருந்தாவது உண்டு.! புண்ணாகி எரியும் காயங்களுக்கு குளு குளுவென மயிலிறகால் மருந்து தடவும் சுகத்திற்காகவே மீண்டும் காயம் ஏற்படாதா என ஏங்க வைக்கும் ஒரு சுகம் அலாதியானது..!

இளையராஜாவை எத்தனையோ புகழுரைகளால் பாராட்டியிருக்கிறார்கள் பலர்.. ஆனால் எனது வார்த்தை ராஜா என்றொரு ஜீவன் இல்லாவிட்டால்  தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். தன் மாய இசையால் பலரின் மனக் காயங்களுக்கு மயிலிறகால் இசை மருந்து தடவியவர் ராஜா..!

விரையும் பேருந்தோ, கார் பயணமோ, வீடோ,
இரைச்சலான டீக்கடைகளோ, அல்லது மலை பிரதேசத்தில் அமைதியான சூழலோ தூரத்தில் ஒலிக்கும் மைக் செட்டோ எதுவாக இருப்பினும் காது வழியாக உள்ளத்தில் இறங்கி நம்மை உருகவைக்கும் வித்தை ராஜாவின் பாடல்களுக்கு மட்டுமே சாத்தியம்.!

அப்படி ஒரு பாடல்.. படம் ஒன்றும் பெரிய வெற்றிப்படமல்ல 80களில் வந்த ஒரு சாதாரணப்படம்.. ஜெயச்சந்திரனும் உமாரமணனும் தங்கள் தேன் குரலில் பாட ராஜாவின் புல்லாங்குழல் மற்றும் டிரம்பட் இணைந்து குழைய டிரம்ஸ் ஒலி மூங்கிலால் தட்டப்பட்டது போல ஒரு வித்யாசமான ஒலியுடன் தொடங்கும் பாடல் அது..!

இப்போதும் நம் எல்லாரது வாழ்க்கைக்கும் ஒரு ரீவைண்ட் பட்டன் தருவது ராஜாவின் இசையே.. நடிகர் சுரேஷ் நடிகை கலாரஞ்சனி (நடிகை ஊர்வசியின் அக்கா) ஜோடியாக நடித்த மஞ்சள் நிலா படத்தில் வரும்..

#பூந்தென்றல்_காற்றே_வா_வா பாடலை மீண்டுமொருமுறை கேளுங்கள் உங்கள் வயதில் இருபது குறையும் கவலைகள் அனைத்தும் மறையும்.. நெஞ்சம் மகிழ்வில் நிறையும்..!

Thursday 19 February 2015

அ.கி.ப. தொடர் -2

அ.கி.ப.

#தமிழ்_அன்றும்_இன்றும் 33

அ.கி.பரந்தாமனார்...

பிறமொழிகளில் இருந்து தமிழில் புகுந்த சொற்களைத் திசைச் சொற்கள் என்பர். அவற்றைப்பற்றி பார்ப்போம். இதெல்லாம் தமிழ்ச்சொற்கள் இல்லையா.! தெலுங்கு சொற்களா என நீங்கள் வியக்கும்படி இருக்கும்... ஒவ்வொரு சொல்லுக்கும் எதிரே அதன் தமிழ்ச் சொல் தந்து இருக்கிறேன். இனி

#தெலுங்குச்_சொற்கள்

அப்பட்டம் - கலப்பில்லாதது, ஆஸ்தி - செல்வம், எக்கச்சக்கம் - மிகுதி, ஏடாகூடம் - ஒழுங்கில்லாமை, ஏராளம் - மிகுதி, ஒய்யாரம் - குலுக்குநடை, கச்சிதம் - ஒழுங்கு, கெட்டியாக - உறுதியாக, கெலிப்பு - வெற்றி, கேப்பை - கேழ்வரகு, சந்தடி - இரைச்சல், சரக்கு - வாணிகப்பொருள், சாகுபடி - பயிரிடுதல், சொகுசு - நேர்த்தி. 

சொச்சம் - மிச்சம், சொந்தம் - உரிமை, துரை - பெரியோன், தெம்பு - ஊக்கம், தொந்தரவு - தொல்லை, பண்டிகை - பெருநாள், பந்தயம் - பணயம், மச்சு - மேல்தளம், மடங்கு - அளவு, வாடகை - குடிக்கூலி, நிம்மதி - கவலையின்மை, வாடிக்கை - வழக்கம், விக்கிரயம் - விற்பனை, ரீதி - ஒழுங்கு, வேடிக்கை - காட்சி, எச்சரிக்கை - முன்கூட்டி சொல்லி வைத்தல்/விழிப்பாக இருத்தல்.

எழுந்திருக்கை என்னும் தமிழ்ச்சொல்லே எச்சரிக்கை என மருவிற்று என்றும், இக்காலத்திலும் கோயில்களில் திருவீதி புறப்பாடு முடிந்ததும் சுவாமி கோயிலுக்குள் எழுந்தருள எச்சரிக்கை பாடுவதுண்டு என்றும் பன்மொழிப் பெரும்புலவர் திரு.வே. வேங்கடராஜுலு ரெட்டியார் கூறியுள்ளார்.

#கன்னடச்_சொற்கள்

அக்கடா - வாளா, கோசரம் - ஆக (அதற்கோசரம் - அதற்காக), அக்கறை - கவனம்.

நாளை போர்த்துகீசிய, அரபு,பாரசீக,இந்துஸ்தானி சொற்கள்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 34

அ.கி.பரந்தாமனார்...

தமிழ்ச்சொற்களாகவே மாறிவிட்ட பிற மொழிச்சொற்களும் அதன் எதிரே தமிழ்ச்சொல்லும் தந்திருக்கிறேன்... தமிழ்ச்சொல் தராத சொற்களை அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை என்று பரந்தாமனார் எழுதியுள்ளார்.

#போர்த்துக்கீசிய_சொற்கள்

சாவி - திறவுகோல், ஜன்னல் - காற்று வழி/சாளரம், பாதிரி - கிறித்துவ சமயத் தொண்டர், கிராம்பு, அலமாரி (கடைசி 2 சொற்களை அப்படியே பயன்படுத்தலாம்)

#அராபியச்_சொற்கள்

அகஸ்மாத்தாய் - தற்செயலாய், ஆஜர் - வருகை, இனாம் - நன்கொடை, ஈது - பண்டிகை, ஐவேஜ் - உடைமை, கலால் - சாராயம், கஜானா - கருவூலம், காலி - ஏதுமில்லாத, காயம் - நிலையான, காஜி - நீதிபதி, குலாம் - அடிமை, கைதி - சிறையாளி, சராப்பு - காசுக்கடை, சவால் - அறைகூவல், ஜவாப் - மறுமொழி.

ஜப்தி - கைப்பற்றுதல், ஜாஸ்தி - மிகுதி, ஜாமீன் - பிணையாதல், சாமான் - பண்டம், ஜூட் - பொய்/மோசம், தபா - காலம், தாவா - வழக்கு, திவான் - அமைச்சர், நபி - தீர்க்கதரிசி, பக்கிரி - துறவி, தோபா - கப்பம், பதில் - மறுமொழி, பாக்கி - நிலுவை, மஹஜர் - வேண்டுகோள், மஹால் - அரண்மனை, மாமூல் - பழைய வழக்கம்.

மாஜி - முன்னைய, முகாம் - தங்குமிடம், முலாம் - மேற்பூச்சு, மைதானம் - திடல், ரத்து - விலக்கு, ராஜி - உடன்பாடு, லாயக்கு - தகுதி, வகையறா - முதலான, வாரிசு - உரியவர். இனி தமிழ்ப்படுத்த தேவையில்லாத அராபியச் சொற்களை நாளை பார்ப்போம். (வரும்..)


#தமிழ்_அன்றும்_இன்றும் 35

அ.கி.பரந்தாமனார்...

கீழ்க்கண்ட அராபியச் சொற்களை தமிழ்ச் சொல்லாக்காமல் அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை..

அசல், அமீனா, அமுல், அனாமத்து, அல்வா, அண்டா, அத்தர், ஆபத்து, இலாகா, நகல், உஷார், உருமால், ஊதா, கடுதாசி, சர்தார், சலாம், ஜாப்தா, ஜாரி, ஜிப்பா, ஜில்லா, தகரார், தாக்கீது, தர்பார், தாலுகா, தாக்கல், தினுசு, நபர், நமூனா, பாபத்து, பிர்கா, மசோதா, ருஜு, ருமால், ரையத்து, வக்கீல், வக்காலத்து, வஸுல், வாய்தா, வஜா, முன்சீ, ஷர்பத்,ஷரத், ஷரா. இவையெல்லாம் அரபுச் சொற்கள்.

#பாரசீகச்_சொற்கள்

அம்பாரி - குவியல், அலாதி - தனி, ஆப்காரி - மதுவரி, கறார்விலை - ஒரேவிலை, கம்மி - குறைவு, கிஸ்தி - வரி, கரம் - சூடு/காரம், சரகம் - எல்லை, சந்தா - கட்டணம், சர்க்கார் - அரசாங்கம், சாவி - பதர், சிப்பந்தி - வேலையாள், சிப்பாய் - படை வீரன், ஜமீன் - நிலம், ஜமீன்தார் - நிலக்கிழார், ஜரூர் - விரைவாக.

சுமார் - ஏறக்குறைய, தயார் - ஆயத்தம், நாதார் - ஏழை, படுதா - திரைச்சீலை, பந்தோபஸ்து - பாதுகாப்பு/திட்டப்படுத்திய ஒழுங்கு, பாரா - காவல், பூரா - முழுவதும், பேஷ் - மிகநன்று, ரஸ்தா - பாதை/சாலை, ஷோக் - பகடு. இனி நாளை தமிழ்ப்படுத்த தேவையில்லாத பாரசீகச் சொற்கள். (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 36

அ.கி.பரந்தாமனார்...

தமிழ்ப்படுத்தத் தேவையில்லாத பாரசீகச்சொற்கள் : கச்சேரி, குஸ்தி, குமாஸ்தா, குருமா, கூஜா, சபாஷ், சவாரி, ஜரிகை, ஜாங்கிரி, ஜோர், டபேதார், தராசு, தர்பார், தஸ்தாவேஜு, தபேலா, தாசில்தார், பட்டா, பர்தா, பிரியாணி, பிராது, புகார், புலாவ், பூந்தி, பூரி, பைசல், பயில்வான்,பைஜாமா, மனு, மனுதார், மேஜை, ரகம், ராஜிநாமா, வாபஸ். இப்பகுதியில் ஒரளவே அயல் மொழிச்சொற்கள் தரப்பட்டுள்ளது.

பிறமொழிச்சொற்களை அளவு கடந்து புகுத்துவது தமிழின் இனிமையை கெடுக்கும். மொழி வளர்ச்சிக்கு நம் மொழியோடு பிற மொழிச்சொற்களைப் புகுத்த வேண்டும் என்பது அண்மையில் தோன்றிய மொழிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும் ஆனால் செம்மொழியான தமிழுக்கு அது முற்றும் பொருந்தாது.

ஆனால் நம் முன்னோர்கள் இன்றியமையாத பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு "திசைச்சொல்" என்ற ஒரு பாகுபாடு வைத்தார்கள். அவர்களது பேரறிவை எண்ணும் போது நாம் வியப்படையாமல் இருக்க முடியாது. இன்றியமையாத இடங்களில் பிற மொழிச்சொற்கள் பயன்படுத்துதல் தவறல்ல.

அயல்மொழிகள் அதிகம் கலப்பதால் ஒரு மொழி அழிய வாய்ப்புண்டு. ஆர்மீனிய மொழியுடன் அளவு கடந்த ரஷ்ய மொழி கலந்ததால் ஆர்மீனிய மொழி அழிந்தது. இங்கிலாந்தில் கெல்ட் என்னும் மொழி அதிக அளவு ஆங்கிலக் கலப்பால் அழிந்தது. இது போல ஒரு நிலை நம்முடைய தமிழ்மொழிக்கும் வந்துவிடக்கூடாது.

பிறமொழிகளின் கலப்பால் ஆங்கிலமும், மலையாளமும் புதிய சொற்களை உண்டாக்கும் ஆற்றலை இழந்து விட்டதாக மொழி நூலறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தமிழ் மொழி மட்டும் அந்த ஆற்றலை இன்னும் இழக்கவில்லை என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை.

நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி இன்றியமையா இடத்தில் பிற மொழிச்சொற்களை அனுமதிப்போம் முடிந்தால் அதற்கும் புதுச்சொல் உருவாக்குவோம்.. மீண்டும் நாளை (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 37

அ.கி.பரந்தாமனார்...

செல்லாத காசுகளை நல்ல காசுகளுடன் சேர்த்து அறியாதவர்களிடம் மாற்றிவிடலாம் ஆனால் விழிப்புணர்வோடு இருக்கும் இடத்தில் மாற்ற முடியுமோ.? முடியாதல்லவா.! அதே போல சரியான சொற்கள் என எண்ணி நாம் எழுதிவரும் தவறான சொற்களை (செல்லாக்காசுகள்) இங்கு பார்ப்போம்

"என் வீடு அருகாமையில் இருக்கிறது" என்று எழுதுவது தவறு.! அருகில் என எழுதவும். முயற்சித்தல், முயற்சித்தான் என எழுதாமல் முயற்சி செய்தல், முயலுதல், முயன்றான் என்றும் முறையே எழுதுக. நாம் பூவை முகருகிறோம் என்பது தவறு மோக்கிறோம் என்பதே சரி. முகருகிறோம் என்பது தவறான பேச்சு வழக்கு.

"பிரதி ஞாயிறு தோறும் விடுமுறை" என அச்சிட்ட அட்டைகளை பார்த்திருப்பீர்கள். அது தவறு... ஞாயிறு தோறும் விடுமுறை" என்பதே சரி. பிரதி & தோறும் இரண்டும் ஒரே அர்த்தம் தான் ஆகவே பிரதி என்பது வேண்டுவதில்லை. மாடுகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன என்பது தவறு.. புல்லை என்று எழுவதே சரி.

"பல ஆறுகளின் நீர்களை குடித்தேன்" என்பது தவறு.. நீரைக்குடித்தேன் என்பதே சரி. பலருடைய தாகங்களை தண்ணீர் கொடுத்து நீக்கினான் என்பது தவறு. தாகத்தை என்க. "நாட்டுமக்களுடைய வறுமைகளை ஒழிக்க" என்பது தவறு.. வறுமையை என்க. புல்,நீர்,தாகம்,வறுமை ஆகியவற்றிற்கு பன்மை கிடையாது.

மீண்டும் நாளை (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 38

அ.கி.பரந்தாமனார்...

கால்கள் என்பதை காற்கள் என்று எழுதுகிறோமா? இல்லையே. ஆகையால் நூற்கள் என்றும் தொழிற்கள் என்றும் எழுதாமல் நூல்கள், தொழில்கள் என்றும் எழுதுக. தோள்கள் என்பதை தோட்கள் என்றா கூறுகிறோம்.? பின் ஏன் நாட்கள் என்று எழுதுகிறோம்.? நாட்கள் என்பது தவறு, நாள்கள் என்பதே சரி.

நாட்கள் என்றால் புதிய கள் என்றே பொருள். கொடுக்கப்பெறும், கொடுக்கப்படும் இந்த இரு சொற்களுக்குமே வேறுபாடு உண்டு. "இவன் தமிழ் முதுகலைப்பட்டம் கொடுக்கப்பெற்றான்" இது மனமுவந்து பெறுதலைக் குறிக்கும். "இவன் விலங்கிடப்பட்டான்" இது வலியச்செய்தலைக் குறிப்பிடும்.

இயலாது, கூடாது, வேண்டும் என்னும் சொற்களைப் பயன்படுத்துவதிலும் வேறுபாடு உண்டு.

 "நீ இதனைச் செய்ய இயலாது (cannot)

"நீ இதனைச் செய்யக்கூடாது (should not)

"நீ இதனைச் செய்ய வேண்டும் (should do)

இவ்வெடுத்துக் காட்டுகளைக்கண்டு வேறுபாடு தெரிந்து கொள்வோம்.தமிழில் வடமொழிச் சொற்கள் பற்றி நாளை (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 39

அ.கி.பரந்தாமனார்...

கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியரே வடசொல்லை தமிழில் பயன்படுத்தும் முறையை கூறியுள்ளார். சங்க நூல்களில் வடசொல் மிக மிகக்குறைவு. வடமொழி புராணங்கள், சமயங்கள் தமிழகத்தில் புகுந்த போது செய்யப்பட்ட மொழி பெயர்ப்பினால் வடமொழிச்சொற்கள் தமிழில் கலந்துவிட்டன.

கிபி12ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை தமிழில் வட மொழி சொற்கள் கலந்தே பல நூல்கள் இயற்றப்பட்டன.. வில்லிபுத்தூரார்,அருணகிரிநாதர், தாயுமானவர் போன்றோர் தங்களது பாடல்களில் வடசொற்களை மிகுதியாக புகுத்தினார்கள். நம்முடைய மக்களும் தமிழில் வடமொழிச்சொல் கலந்து பேசுவது.. 

திருமணம் மற்றும் கோயில் விழா பத்திரிக்கைகளில் வடமொழி சொற்களை எழுதுவது போன்றவற்றைப் பெருமையாகக் கருதினார்கள். வட மொழியாளர்கள் வடமொழியில் இருந்து தான் தமிழ் தோன்றியது எனத் தவறாக நம்பினார்கள். அது தவறு தமிழ் தான் ஒரே திராவிட மொழி என அறிவித்தவர் யார் தெரியுமா.!

அவர்தான் கால்டுவெல் எனும் ஐரோப்பியர். திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்னும் நூலில் திராவிட மொழிகளுள் தமிழ் மொழி ஒன்றே.. வடமொழியின்றியும் தமிழ் மொழி தனித்து இயங்க வல்லது என்று எடுத்துக்காட்டினார். இதன்பிறகு தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பின் தமிழில் வட சொற்களுக்கு விடையளித்தோம்.. 

நாளை வடசொற்களுக்கு தமிழ்ச் சொல்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 40

அ.கி.பரந்தாமனார்...

வடசொல்லும் தமிழ்ச் சொல்லும் : அகங்காரம் - செருக்கு, அகதி - புலம் பெயர்ந்தோர்/ஆதரவற்றோர், அகிம்சை - ஊறு செய்யாமை, அக்னி - எரி,தீ, அங்கத்தினர் - உறுப்பினர், அங்கீகாரம் - ஒப்புதல், அசுத்தம் - துப்புரவின்மை, அநீதி - முறையற்றது, அபயம் - அடைக்கலம், அபாயம் - துன்பம், அப்பியாசம் - பயிற்சி, அபிவிருத்தி - பெருவளர்ச்சி, அபிஷேகம் - திருமுழுக்கு, அபிப்ராயம் - உட்கருத்து.

அபூர்வம் - அருமை, அம்சம் - கூறு, அர்ச்சனை - மலரிட்டு ஓதுதல், அவகாசம் - ஓய்வு, அவசரம் - விரைவு, அவயம் - உறுப்பு, அனுக்கிரகம் - அருள் செய்தல், அனுபவம் - பட்டறிவு, அனுமானம் - யூகித்தல்/உய்த்தறிதல், அதிகாரி -அலுவலர், ஆக்ரமிப்பு - வலிந்து கவருதல், ஆகாயம் - வானம், ஆசீர்வாதம் - வாழ்த்து, ஆபத்து - துன்பம், ஆராதனை - வழிபாடு, ஆன்மா - உயிர், இராகம் - பண், இலக்கம் - எண்.  

இரத்தம் - குருதி, இரத்தினம் - செம்மணி, இலட்சணம் - அழகு, இலெளகீகம் - உலகியல், உதாரணம் - எடுத்துக்காட்டு, உத்திரகிரியை - நீத்தார் கடன், உத்யோகம் - அலுவல், உபத்திரவம் - வேதனை, உற்சவம் - விழா, ஐக்கியம் - ஒற்றுமை, ஒளபாஷாணம் - எரியோம்பல், கஷ்டம் - தொல்லை, கல்யாணம் - திருமணம், காரியம் - செயல், காரியாலயம் - அலுவலகம்.

வடசொல்லுக்கு தமிழ்ச் சொற்கள் நாளையும்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 41

அ.கி.பரந்தாமனார்...

வடசொல்லுக்கு தமிழ்ச்சொற்கள் : காரியதரிசி - செயலாளர், கஷாயம் - துவராடை, கிரமம் - ஒழுங்கு, கிரகம் - கோள், கிரகசாரம் - கோள்பயன், கிரகணம் - பற்றுகை, கிரயம் - விலை, கிராமம் - சிற்றூர், கிருஷ்ணபக்ஷம் - தேய்பிறை, குஷ்டம் - தொழுநோய், குதூகலம் - எக்களிப்பு, கும்பாபிஷேகம் - குடமுழுக்கு, கைங்கர்யம் - திருப்பணி, கோஷ்டி - குழாம், கோத்திரம் - குடி, சக்தி - ஆற்றல், சகஜம் - வழக்கம்.

சகோதரன் - உடன்பிறந்தான், சக்ரவர்த்தி - பேரரசன், சந்தேகம் - ஐயம், சமத்துவம் - சமன்மை, சபதம் - வஞ்சினம்/சூள், சந்தோஷம் - மகிழ்ச்சி, சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம், சமீபம் - அண்மை, சத்யாகிரகம் - அறவழிப்போராட்டம், சந்ததி - வழித்தோன்றல்/கால்வழி, சிகிச்சை - மருத்துவ முறை, சந்திரன் - நிலா/மதி, சந்தர்ப்பம் - வாய்ப்பு, சம்பிரதாயம் - தொன்மரபு, சரணம் - அடைக்கலம்.

சமுதாயம் - பொதுமக்கள், சாபம் - கெடுமொழி, சாதாரண - எளிதான, சாக்ஷி - சான்று, சாதம் - சோறு, சாமியார் - அடிகளார், சாசுவதம் - நிலையான, சிங்காசனம் - அரியணை, மதம் - நெறி, சிநேகம் - நட்பு, சீமந்தம் - முதற்சூல் விழா, சீதோஷ்ணம் - தட்ப வெப்பம், சுதந்திரம் - உரிமை/விடுதலை, சுத்தம் - துப்புரவு, சுத்தத்தங்கம் - தூய பொன், சுக்கில பக்ஷம் - வளர்பிறை, சுயராஜ்யம் - தன்னாட்சி.

நாளையும் இப்பகுதி... (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 42

அ.கி.பரந்தாமனார்...

வடசொல்லுக்கு தமிழ்ச்சொற்கள் : சுவிசேஷம் - நற்செய்தி, சுபாவம் - இயல்பு, சுவீகாரம் - தத்தெடுத்தல்/மகன்மை செய்தல், சூட்சமம் - நுண்மை/நுட்பம், சூரியன் - கதிரவன்,ஸ்தூலம் - பருமை, சேவை - தொண்டு, சேஷ்டை - குறும்பு, செளகரியம் - வசதி, ஞாபகம் - நினைவு, தற்காலிகம் - நிலையில்லா, தர்மம் - அறம்/கடமை, தாகம் - வேட்கை, சாசனம் - பட்டயம், தேதி - நாள், திருப்தி - நிறைவு.

நகரம் - பேரூர், நஷ்டம் - இழப்பு, நிபுணர் - வல்லுநர், நிரந்தரம் - நிலையான, நீதி - நன்னெறி, பகிரங்கம் - வெளிப்படை, பஞ்சாங்கம் - நாளோதி, பரிகாசம் - நகையாடல், பதிவிரதை - கற்புடையாள், பத்தினி - கற்பணங்கு, பத்திரிக்கை - இதழ், பஜனை - கூட்டுப்பாடல், பரீட்சை - தேர்வு, பந்துக்கள் - உறவினர்கள், பாரம் - சுமை, பாலகன் - குழந்தை, பாஷை - மொழி, பாணிக்கிரகணம் - திருமணம்.

பார்வதி - மலைமகள், பிரயாணி - வழிச்செலவினன், பிரசாரம் - பரப்பு வேலை, பிரசாதம் - திருப்பொருள், பிரகாரம் - திருச்சுற்று, பிரதட்சணம் - வலம் வருதல், பிரார்த்தனை - வேண்டல், பூர்வம் - முன்னாள்/முந்திய, பெளர்ணமி - முழுமதி, மத்தியானம் - நண்பகல், மந்திரம் - மறைமொழி, மரணம் - சாவு /இறப்பு, மார்க்கம் - நெறி/வழி, மாதம் - திங்கள், மாமிசம் - இறைச்சி, மிருகம் - விலங்கு.

வடசொல்லுக்கு தமிழ்ச்சொற்கள் தொடர்கிறது நாளையும்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 43

அ.கி.பரந்தாமனார்...

முகூர்த்தம் - நல்வேளை, மோசம் - கேடு, யமன் - காலன்/கூற்றுவன், யந்திரம் - பொறி, யாகம் - வேள்வி, யாத்திரை - திருச்செலவு, யாத்திரிகன் - திருச்செலவினன், யுத்தம் - போர், ரகசியம் - மறை பொருள், ருசி - சுவை, லாபம் - ஊதியம், லோபம் - கஞ்சத்தனம், வம்சம் - குடி, வருஷம் - ஆண்டு, வாகனம் - ஊர்தி, வாக்கியம் - முற்றுச் சொற்றொடர், வாக்குமூலம் - சான்றியம், வாதம் - சொற்போர்.

வாலிபர் - இளைஞர், விகிதம் - விழுக்காடு, விக்கிரகம் - திருவுருவம், விஷயம் - பொருள்/செய்தி, விபத்து - துயர நிகழ்ச்சி, வேகம் - விரைவு, ஜனங்கள் - மக்கள், ஜன்னி - இசிவு, ஜயம் - வெற்றி, ஜாதகம் - பிறப்புக்கணிப்பு, ஜாக்கிரதை - விழிப்பாக, ஜெபம் - தொழுகை, ஜென்மம் - பிறவி, ஜோதிடன் - கணியன், ஸ்தாபனம் - நிலையம், க்ஷவரம் - மழிப்பு,க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள் ஶ்ரீலஶ்ரீ - தவத்திரு.

இது போதும் என்று நினைக்கிறேன்.. தெலுங்கிலிருந்து வடமொழியை நீக்குவது அரிது, கன்னடத்தில் மிக அரிது, மலையாளத்தில் அரிதினும் அரிது.. இம்மொழிகள் கணக்கு வழக்கில்லா வடசொற்களை கடன் வாங்கிய மொழிகள்.. தங்கள் சிறப்புகளைத் தொலைத்து நிற்கின்றன. ஆனால் நம் தமிழ் மொழி மட்டுமே வடசொல் இன்றி தனித்தியங்கும் மொழியாக விளங்குகிறது.

கூடிய மட்டும் வடசொற்களை தவிர்த்து தமிழில் எழுதுவோமானால் புதுச்சொற்களை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு பெருகும்.. நீங்கள் அதைச் செய்யவீர்கள் தானே.. வாருங்கள் ஊர் கூடி தேரிழுப்போம்..

இந்த தொடரை படித்து வந்த அனைவருக்கும் எனக்கு ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.. ஒரு சிறு இடைவேளைக்குப் பின் இதன் இரண்டாம் பாகம் தொடரும்.. தற்சமயம் பிரிவோம் தமிழால் என்றும் இணைவோம்.

#வாழ்க_நற்றமிழ்_வாழ்க_தமிழகம்_வாழிய_தாய்த்திரு_நாடு












Wednesday 18 February 2015

நினைவு நாடா.

டேப்ரிகார்டரும் நானும்...!

நினைவு நாடா...

டேப் ரிகார்டர்..... கேசட் இவை எனக்கு அறிமுகமான போது உலகில் இதை விட ஒரு விஞ்ஞான வளர்ச்சி ஏதும் இருக்காது என்று நம்பினேன்... அந்தளவு என்னைக் கவர்ந்தது அது, அதிலும் கேசட்டில் பாடல்களை ரிகார்ட் செய்வது வாங்கி வருவது தனி சுகம். நமக்கு பிடித்த பாடல்களை பட்டியலிட்டு அதனை மியூசிக்கல்ஸ் என்ற பெயரில் அமைந்துள்ள கடைகளில் சென்று கொடுத்துவிட்டால் 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு வரச்சொல்வார்கள். 

இதில் அரிசந்திரனாக சிலர்.! அரசாங்கமாக சிலர்.! அதாவது சொன்னபடி கொடுப்பதும் இழுத்தடிப்பதும் உண்டு. அதிலும் 60காசட்டில் 12 பாடல்களும், 90காசட்டில் 18 பாடல்களும் பதியலாம் கடை காரர்கள் நமக்கு 60 காசட்டையே பரிந்துரை செய்வார்கள்,90காசட் டைட் ஆவதாகவும் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் எனவும் கூறுவார்கள். 

உண்மையில் 60 என்றால் இன்னொரு காசட் அதிகமாக விற்கும் என்பது இதன் பின் ஒளிந்திருக்கும் வணிகம். முதலில் என்னை அறிவுத் தேடலில் விட்டவர்களும் மியூசிக்கல்ஸ் கடைக்காரர்கள் தான்... என்ன பாட்டு என்ன படம் என்பதே அவர்களுக்கு தெரியாது, என்ன படமுன்னு தெரியலையே கொஞ்சம் சொல்லுங்க தம்பி என்று நம்மிடம் கேட்பார்கள்.... இவர்கள் மிதவாதிகள்..!

இசை ஞானம் இல்லாது சம்பாதிக்க இத்தொழிலில் இறங்கியவர்கள் தீவிரவாதிகள்.! சங்கர்கணேஷ் இசையமைத்த பாடல்களை இளையராஜா ஹிட்ஸில் பதிந்து தந்து விட்டு கேட்டால் இது இளையராஜா தான் என்று தீக்குண்டமே இறங்குவார்கள்.. நாமும் பயந்து ஆமாங்க அண்ணன் சொன்னா சரியா தான் இருக்கும் என ஜகா வாங்க வேண்டியது இருக்கும். 

இதற்காகவே தேடித்தேடி பாடல்கள் பற்றிய விவரங்களை எடுக்கக் கற்றுக் கொண்டேன். இதனால் என் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தது... பிறகு சில வருடங்கள் கழித்து ரசனையானவர்கள் இத்தொழிலுக்கு வந்தார்கள். இவர்கள் கடையில் அழகாக பைண்டிங் செய்யப்பட்ட பெரிய நோட் ஒன்று இருக்கும், அதில் அழகான கையெழுத்தில் படத்தின் பெயரும் பாடலின் முதல்வரியும் எழுதப்பட்டிருக்கும் அதற்கு நேராக ஒரு எண்ணும் குறிப்பிட்டு இருக்கும்,அதன் படிஎழுதி கொடுத்தால் போதும்.

அதிலும் சிலர் ரஜினி ஹிட்ஸ்,கமல்ஹிட்ஸ், ராஜாஹிட்ஸ் என பிரித்து எழுதி இருப்பார்கள். சிலர் கலர் கலரான ஸ்கெட்ச் பேனாவில் தென்றல், நிலா,பூ, நெஞ்சம், மல்லிகை, ரோஜா, காதல், மேகம், என தொடங்கும் பாடல்களாக தனித்தனி நோட்டுகளில் எழுதி வைத்து இருப்பார்கள் ரசனையாக இருக்கும். நாம் கேட்ட பாடல்களை பதிந்து அவர்கள் தந்து விட்ட அடுத்த நொடி வீட்டிற்கு ஆவலாக ஓடி வந்து டேப்ரிகார்டரில் அந்த பாடல்களைக் கேட்கும் சுகம் அடடா...!

எனது பால்யம் இளையராஜாவின் பொற்காலமான எண்பதுகள்... இது என் பிறவிப் பயன்..! அழகே உன்னை ஆராதிக்கிறேன், பன்னீர்புஷ்பங்கள்,ஆராதனை, உதிரிப்பூக்கள், நண்டு, மஞ்சள் நிலா, ஆனந்தக்கும்மி, காதல் ஓவியம், மெட்டிஒலி, சிட்டுக்குருவி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அனைத்து பாரதிராஜா, பாக்யராஜ், கமல்,ரஜினி, படங்கள் என ராஜா பட்டையை கிளப்பி ராஜ பாட்டையில் நடை போட்ட நேரம்.. கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் வெளி வந்த காலமது.

சில மொக்கை படங்களில் கூட அற்புதமான பாடல்களை தந்து இருப்பார் ராஜா... அதை தேடி எடுத்துப் பதிவதில் எனக்கு ஆவல் அதிகம்.. அந்த படங்களின் பேரெல்லாம் தேடுவதற்கு இப்போதுள்ள கூகுள் வசதி அன்று இல்லை.. தனி நோட்டு வைத்து எழுதிக்கொள்வேன்.. அந்த நோட்டு தான் அப்போது என் பைபிள், குரான், கீதை... அந்த நோட்டை பின்னாளில் மதுரையில் தொலைத்தபோது 2 தினங்கள் சாப்பிடாமல் இருந்தது தனிக்கதை..!

இதற்குப் பிறகு அசெம்பிள் செட் வந்து சக்கை போடு போட்டது.. இதற்காக தனி ஸ்பீக்கர் பாக்ஸ் செய்து வைத்திருப்பேன்.. பானையில் வூஃபர் எஃபக்டில் ஒரு ஸ்பீக்கரும் அதில் அடக்கம். இப்போது மோகன்,விஜயகாந்த், ராமராஜன் பாடல்களின் காலம்... அந்த பாடல்கள் ஸ்டீரியோ இசையில் கிடைத்தன... அந்த பாடல்களின் ஸ்டீரியோ இசையை தெருவே அலற விட்டு கேட்டது ஒரு அலாதி இன்பம் இது வீடா? இல்ல சவுண்ட் சர்வீஸ் கடையா? என்று திட்டு வாங்குவோம்.

இதில் டேப் சிக்கி கொள்வது அதை பென்சிலால் சரி செய்வது அறுந்து போன டேப்பை குய்க்ஃபிக்ஸ் வைத்து ஒட்டுவது போன்ற மெக்கானிக் வேலைகளும் தெரிந்து வைத்து கொண்டேன்... போன வாரம் ஒரு கடையில் என் மொபைலில் பழைய இளையராஜா பாடல்கள் பதிய வேண்டுமென்றேன்.. இதோ சார் என்றவர்...

அடுத்த 5 நிமிடங்களில் 345 பாடல்களை டவுன் லோட் செய்து கொடுத்தார், சட்டென்று எனக்கொரு வெறுமை தோன்றியது..! ஒரு உண்மையும் விளங்கியது.. ஆசைப்படுவது சீக்கிரம் கிடைத்து விட்டால் சில சுவாரஸ்யங்களை இழந்து விடுகிறோம்.! காலரை உயர்த்தி மிகப் பெருமையாகச் சொல்வேன் டேப்ரிகார்டர் காலம் தான் பொற்காலம் என்று.

சிறு சிறு கதைகள்.

சின்னஞ்சிறு கதைக்கு  சமநிலைச் சமுதாயம் எனும் இதழில் வந்த இந்த கற்பனை உரையாடலை உதாரணமாக கூறுகிறார் சுஜாதா.!

தலைப்பு : கற்பனை உரையாடல்

"ஹலோ யாருங்க ஜார்ஜ் புஷ்ஷுங்களா.?" 

ஆமா என்ன விஷயம்.?

சதாம் உசேனோட கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஈராக் மக்களை விடுவிச்சதுக்கு பாராட்ட தாங்க போன் பண்ணினேன்"

"ரொம்ப நன்றிங்க"

வேற நாடுகளிலும் அப்படி கொடுமையான ஆட்சி நடந்தா அந்த மக்களையும் விடுவிப்பிங்களா.?

"நிச்சயமா!அதானே எங்க நாட்டோட கொள்கை"

ரொம்ப நன்றிங்க எங்க நாட்டுலயும் அப்படி ஒரு கொடுங்கோல் ஆட்சி நடக்குதுங்க உங்க படையை அனுப்ப முடியுமா.?

"ஒன் மினிட்.. உங்க நாட்டுல பெட்ரோல் கிணறு இருக்குதா?"

"அதெல்லாம் இல்லிங்களே சார்"

அப்ப வைடா போனை.


#சுஜாதா_நினைவலைகள்

சின்னஞ்சிறுகதை... தலைப்பு : சந்திப்பு.

நீலாவை அங்கே சந்திப்பதை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அவளை அவன் கடைசியாக பார்த்தது போலவே அதே அழகு. அதே இளமை. யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவளை மெல்ல அணுகி "ஹாய் நீலா.! என்னைத் தெரிகிறதா.? என்றான்.

ஒரு நிமிஷம் நெற்றியைச் சுருக்கி யோசித்தவள் தன் நினைவு செல்களை புதுப்பித்துக் கொண்டாள். சட்டென்று அவள் முகம் மலர்ந்தது "ஹாய், ராம் தானே நீ.? இங்கே எப்படி? என்றாள்.

ஒரு பஸ் விபத்து நாலு பேர் பலி.. அதுல நானும் ஒருத்தன்..!

ஸாரி ராம்..!

ஆமா.. நீ ஏன் தற்கொலை பண்ணிகிட்ட நீலா.?.



ஆலன் மெயர் எழுதிய சின்னஞ்சிறு கதை..

தமிழாக்கம் : எழுத்தாளர் சுஜாதா

தலைப்பு : துரதிர்ஷ்டம்.

உடம்பெல்லாம் வலியுடன் கண்விழித்தான். படுக்கையருகில் ஒரு நர்ஸ் நின்று கொண்டு இருந்தாள். "மிஸ்டர் ப்யூஜிமா.. நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டக்காரர் 2 நாட்களுக்கு முன்புதான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தது...

"நீங்கள் இந்த ஆஸ்பத்திரியில் இப்போது பத்திரமாக இருக்கிறீர்கள்" என்றாள். அவன் ஹீனஸ்வரத்தில் கேட்டான் "நான் எங்கே இருக்கிறேன்.?

"நாகசாகி"என்றாள்.


50வார்த்தைகளில் ஒரு கொலைக்கதை...

அருண் அழகானவன். ஜாலியாக நேரம் கழிப்பது அவனுக்குப் பிடிக்கும். நண்பன் விஜய் அவனுடன் வந்து சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஒருநாள் அருண் கொஞ்சம் குடித்திருந்தான். விஜய் ஒரு பந்தயம் வைத்தான்."50 வார்த்தைகளுக்குள் ஒரு கொலைக்கதையா? உன்னால் எழுதமுடியாது அருண், நீ வளவளா ஆசாமி" என்றான். "முடியுமே"  என்றான் அருண். எப்படி? அருண் அலமாரியிலிருந்து துப்பாக்கியை எடுத்து சிரித்துக் கொண்டே விஜய்யை சுட்டுக் கொன்றான்.

#எழுத்தாளர்_சுஜாதா 

#சுஜாதாவின்_போஸ்ட்கார்டு_கதைகள்

தலைப்பு : பொது வாழ்வு.

"இன்றிரவு 8மணிக்கு ஷெரட்டனில் சந்திக்கலாம். நீல சாரி அணிந்திருப்பேன். மெரூன் பார்டர்" மனைவி வருவதை கவனித்து சட்டென்று அந்த துண்டுச்சீட்டை கிழித்து குப்பையில் போட்டான். 

என்னங்க அது.? 

ஒண்ணுமில்லை இரவு ஒரு மீட்டிங் அதுக்கு தான் சீட்டனுப்பி கூப்பிட்டிருக்காங்க போகணும்.

இன்னைக்குமா? "தினமும் இப்படி மீட்டிங் வந்துடுதே உங்களுக்கு" 

"என்னம்மா பண்றது.. பொது வாழ்வுன்னா அப்படித்தான்"

"முந்தாநாள் வனவிலங்கு பாதுகாப்பு பத்தி மீட்டிங்னீங்க", நேத்து குடும்பக் கட்டுபாடுன்னீங்க.. இன்னிக்கு.?

"எய்ட்ஸ் விழிப்புணர்வு"
-----------------------------------------------------------------------------------------
போஸ்ட் கார்டு கதைகள் அதிக பட்சம் 55 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் கதை எழுத ஒரு போஸ்ட் கார்டு போதும் என்பதால் இப்பெயர் - எழுத்தாளர் சுஜாதா