Friday 31 October 2014

தீனா - நவம்பர்

"தீனா கொரலு"

உனுக்கு கைல நெறியா துட்டு வந்து சேந்துச்சின்னா நாடக கொட்டாயில கூட்ற கூட்டம் கணக்கா உன்னிய சுத்தி மன்சங்க கூடுவாங்கோ.. அத்தே அந்தய துட்டு ஒன் கிட்ட தீர்ந்து போவ சொல்லோ அல்லாரும் நாடகம் முட்ஞ்சதும் கலையுற கூட்டம் மேறி கிளம்பிருவாங்கோ.! துட்டு இர்ந்தா சேருது கூட்டம்.. அது தீந்ததுன்னா ஓடுது ஓட்டம்.. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அது விளிந் தற்று.

[ அறத்துப்பால் : அதிகாரம் : நிலையாமை : குறள் எண் : 332


"தீனா கொரலு"

கைல துட்டு நெறியா இர்க்க சொல்லோ அத்த ஏழ பாழய்க்கு கொட்த்து எதுனா உதவி செய்ணும்..அத்தெல்லாம் வய்சானதுக்கு அப்றம் செய்யலான்னு நெனிக்காம அன்னிக்கே செஞ்சிட்டோம்ன்னா அந்தய புகழு உனுக்கு வயசாகி மண்டயப் போடற வெரிக்கும் கூடவே இஸ்ட்ராங்கா இர்க்குமாம்..! செத்தா கிடைக்கணுமா சிவலோக பதவி.. அப்ப இப்பயே செய்யு உதவி.. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அறன்வலியுறுத்தல் : குறள் எண் : 36 ]


"தீனா கொரலு"

நம்ம மன்சுக்கு புட்ச்சவங்க நம்ம மேல அன்பே இல்யாத மேறி நட்ந்துகினாலும் அவுர பத்தி யாராச்சும் புகழ்ந்து பேச சொல்லோ அத்து நம்ம காதுக்கு வரொ எம்மாம் சந்தோஸ்மா இருக்கு.! "மன்சுக்கு புட்சவன் புகழு... நம்பளை புடிக்கலைன்னாலும் மகிழு" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தனிப்படர்மிகுதி : குறள் எண் : 1199 ]


"தீனா கொரலு"

நாம பேஸ்ற பேச்சு எப்டி இர்க்கணும்ன்னா  அத்த கேக்குறவங்கோ மெய் மர்ந்து கேட்டுகினே கீறாமேறியும்... அத்த கேக்காதவங்கோ நம்பள தேடிகினு வந்து இஸ்டமா கேக்குறா மேறியும் இர்க்கணுமாம்.! பேச்ச கேட்டவனும் மயங்கணும்.. கேக்காதவனும் விரும்பணும்.. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.

[ பொருட்பால் : அதிகாரம் : சொல்வன்மை : குறள் எண் : 643 ]


"தீனா கொரலு"

மன்சனா பொர்ந்த அல்லாரும் நியாயமா வாழ்றது மட்யும் வாழ்க்க இல்ல..யாரு வாயில இர்ந்தும் பழி சொல்லு வராம வாழ்றான் பார் அதான் மெய்யாலுமே நியாயமான வாழ்க்க.! "நியாயமா வாழ்றது தான் வழி.. அதுல வராம பாத்துக்கோ பழி"..சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி

[ அறத்துப்பால் : அதிகாரம் : அறன்வலியுறுத்தல் : குறள் எண் : 40 ]


"தீனா கொரலு"

அவ என்னிய பாக்க சொல்லோ நானும் அவுள பாக்க அதுக்கு கொஞ்சமும் அசராம இஸ்ட்ராங்கா நின்னு திரும்ப வுடுவா பாரு ஒரு லுக்கு.. அடடா அத்து எப்டி இர்க்கும் தெரிமா..? தான் மட்யுமே கொல்லாம ஒரு படையவே கூட்டிகினு வந்து கொல்றா மேறி பேஜாரா இர்க்கும்.! கிக்கா வுட்டா பதில் லுக்கு.. படையெட்த்து அட்ச்சா மேறி சிக்கு... சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தகையணங்குறுத்தல் : குறள் எண் : 1082 ]


"தீனா கொரலு"

நெறியா துட்டு சம்பார்ச்சு வச்சுகினு அல்லா வசதியயும் குஜாலா அனுபவிச்சிகினு இர்க்குறது ஒன்யும் பெர்சில்ல.. கொணத்துல உசந்த பெர்ய மன்சங்க இருக்காங்க பார் அவுங்க உன் மேல காண்டாகுற மேறி நீ நட்ந்துகினினா நீ சம்பார்ச்சு வச்ச அல்லாமே வேஸ்ட்டு.!  "அறிவாளி படுறகோவம்.. உன் வாழ்க்கைக்கு கெட்ச்ச சாபம்".....சோக்கா சொல்லிகீரார்பா"தல"

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.

[ பொருட்பால் : அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை : குறள் எண் : 897 ]


"தீனா கொரலு"

அட்த்தவங்க செய்ற தப்ப மட்டும் எப்யுமே குத்தம் சொல்லிகினு இர்க்கவங்கோ அத்தே மேறி அவுங்க செய்ற தப்பயும் ஒர் நிம்சம் நென்ச்சு பார்த்தாங்கன்னா ஒலகத்துல வாழுற வாழ்க்க கஸ்டமில்லாம நிம்மிதியா இர்க்கும்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

[ அறத்துப்பால் : அதிகாரம் : புறங்கூறாமை : குறள் எண் : 190 ]

Saturday 25 October 2014

பொட்டு..!

ஸ்டிக்கர் பொட்டு.!

தங்கும் விடுதியின் குளியலறைக்குள் தான் எத்தனை விதமான ஸ்டிக்கர் பொட்டுக்கள்..! வட்ட வடிவில் சிவப்பு நிறப்பொட்டொன்று குளியலறை வெண்ணிற டைல்ஸ் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது.சற்று பெரிதான கருப்பு பொட்டொன்று அந்தக் கண்ணாடியில்.. ! ஒரமெல்லாம் தங்கப் புள்ளிகள் டிசைனில் வைணவ நாமம் போல் ஒரு பொட்டு சுவிட்ச் போர்டில்..வித்தியாசமான பளபளப்பில் தங்க நிற பொட்டொன்று குளியலறைக் கதவில் ஒட்டியிருந்தது.. நீலம், பச்சை, மெரூன், மஞ்சள், சிவப்பு, வயலட்,மெஜந்தா,ரோஸ் என பல்வேறு நிறங்களில், பலப்பல டிசைன்களில் எங்கெங்கு காணினும் பொட்டுக்களடா என குட்டி வானவில்களாய் பூத்திருந்தது அந்தக் குளியலறையின் பல இடங்களில்..!

இது யாருடையய பொட்டு?

தேனிலவு தம்பதியரின் ஆசைகள் தீர்ந்தபின் அந்த மனைவி கணவனுக்கு முன்னால் அவிழ்க்காத ஒரு பொட்டு.. அலுவலக விஷயமாய் தங்கிய பெண் அதிகாரியின் நெற்றியில் இருந்து இறங்கிய பொட்டு.. கல்லூரி சேர்க்கைக்கு பெற்றோருடன் வந்த மகளின் பொட்டு.. சுற்றுலா வந்த வட இந்திய தம்பதியின் நெற்றியில் நேற்று இருந்த பொட்டு.. உடலை விலை பேசிய பரிதாப பெண்ணின் ஆயாசப் பொட்டு, கள்ளக் காதலின் விரைவு சுமந்த பொட்டு, ஆன்மீக பயணம் வந்த வயதான பாட்டியின் பொட்டு.. இண்டர்வியூ வந்த பெண்ணின் இளமை மிகு பொட்டு.. திருமணத்திற்காக வந்து தங்கிய பெண் தோழிகளின் பொட்டு.. குட்டிப் பெண் குழந்தைகளை குளிப்பாட்டும் போது இடம் மாறிய பொட்டு.. பள்ளிச் சுற்றுலாவிற்கு வந்த பட்டாம் பூச்சி பெண்களின் பொட்டு.. விடை தெரியாத திருநங்கை ஒருத்தியின் பொட்டு..

இத்தனை பொட்டுகளுக்கும் பின்னால் ஏதாவது ஒரு கதை இருக்கக்கூடும்..! ஆனால் குடும்பத்தை பிரிந்து வெளியூர் வரும் ஒரு விற்பனை பிரதிநிதியின் சட்டையிலோ அல்லது குளியலறையில் அவிழ்த்து மாட்டப்பட்ட அவன் கைலியிலோ இதில் ஒரு பொட்டேனும் ஒட்டியிருந்தால் அவனது வாழ்க்கை பொட்டில் அறையப்படும்..!

Wednesday 22 October 2014

ஏர்போர்ட் வாடிவாசல்.

ஏர்போர்ட் வாடிவாசல்..!

நான் இம்முறை மலேசியாவிலிருந்து இந்தியா திரும்பும் போது மலேசிய நேரப்படி மாலை 3:55 க்கு விமானம்.. மூன்றரைமணி நேரப்பயணத்திற்கு பிறகு 7:25 க்கு சென்னை வருவோம். அப்போது இந்திய நேரம் மாலை 5 மணி..!

அதாவது ஒரு நாளில் இரண்டுமுறை நாங்கள் 5 மணியை சந்திக்கிறோம் வெவ்வேறு நாடுகளில்.. இது தான் ஜெட் லாக் எனும் நேர மாற்றத்திற்கான கால மாற்றமாகும்.

நாங்கள் விமானம் ஏறி இருக்கைகள் எல்லாம் நிறைந்த பின்னும் கதவுகள் சாத்தப்பட்ட பிறகும் விமானம் கிளம்பவில்லை.. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் எந்த அறிவிப்பும் இல்லை..! பயணிகள் முணுமுணுக்கத் தொடங்கினர்

இப்போது விமான ஆண் பணியாளர்கள் இருவர் வந்து சேர்ந்து கொண்டார்கள்.. அதில் ஒருவர் மலேசியத் தமிழர் என்பது பார்த்ததும் புரிந்தது..! அவரிடம் கேட்டேன் ஏன் தாமதம் என்று.. அவர் சொன்ன பதிலும் அதற்கு பின் பார்த்ததும் மிக அருமை..!

அதாவது அன்று விமான நிலையத்தின் ரஷ் ஹவர்ஸ்... அதாவது அதிக விமானங்கள் கிளம்பும் நேரமாம் ஓடு பாதைக்காக காத்திருக்கிறோம் என்றார் அவர்..! சரியாக 40 நிமிடங்களுக்கு பிறகு விமானம் ஓடு பாதைக்கு போக அனுமதி கிடைத்தது.!

அந்த விமான நிலையத்தில் இருந்து ஓடு பாதைக்கு செல்ல ஒரு 3 நிமிடங்கள் ஆகியிருக்கும் அதற்குள் 4 விமானங்கள் இறங்கி ஏறியதை கண்ணால் பார்த்தேன் ஓடு பாதைக்கு அருகில் வந்து ஒரு வளைவில் நின்றது எங்கள் விமானம்..!

நின்றது வளைவில் என்பதால் எங்கள் விமானத்தின் பின் புறம் பார்க்க முடிந்தது..! பார்த்தேன் வியந்தேன் ஏறத்தாழ 8 விமானங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக நின்றிருந்தன..! அப்படின்னா எங்களுக்கு முன்னாடியும் விமானங்கள் இருக்கு..!

ஓ.. எங்கள் விமானம் நிற்பது வரிசையில் என அப்போது தான் புரிந்தது.. அடுத்த 5 நிமிடங்களில் கிட்டத்தட்ட 10 விமானங்கள் வரிசையாக ஒன்று இறங்கும் ஒன்று ஏறும் காட்சியை கண்டு வியந்தேன்..! 11வது விமானமாக நாங்கள் கிளம்பினோம்.!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்து விடும் இடத்திற்கு வாடிவாசல் எனப்பெயர்.. ஒரு காளை வந்த பிறகு அடுத்த காளையை விடுவார்கள்.. அங்கு மாடுகளை விடுவது போல இங்கு விமானங்களை விட்டது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது..!

வானத்து தேவதைகள்...

வானத்து தேவதைகள்..

விமானப் பயணங்களில் முன் இருக்கைகளில் அமரும் போது ஏர்ஹோஸ்டஸ்களுக்கு அருகிலேயே இருக்கலாம் என்பதில் ஒரு சுவாரஸ்யம்.. நான் அவர்களை சைட் அடிக்கிறேனோ இல்லையோ அவர்களது பணியை நன்கு கவனிப்பேன்..!

விமானக்கதவை படிகள் அகற்றப்பட்டதும் மூடுவது அவர்கள் தான் அதை இழுத்து மூடி லாக் செய்து அதில் உள்ள பெல்ட் போன்ற பகுதியை சேர்த்து விட்டு அருகில் இருக்கும் தொடு திரையில் அதை சரிபார்த்து விட்டு அறிவிப்பார்கள்..!

கையில் இண்டர்காம் போல இருக்கும் போன் தான் அவர்களது மைக் அதை ஸ்டைலாக பிடித்து இருப்பார்கள் கதவு சரியாக மூடப்பட்டதா என்பதை விமானியும் சரி பார்ப்பார் அவர் ஓகே சொன்னதும் ஆட்டோ வாய்ஸை ஆன் செய்வார்கள்.! 

இப்போது சீட் பெல்ட் அணிவது, ஆக்சிஜன் மாஸ்க், லைஃப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு அம்சங்களை ஒலிக்கும் குரலுக்கு ஏற்ப ஒரு நாட்டியம் போல சைகையில் விளக்குவார்கள்.. சில நேரங்களில் நமது இருக்கைக்கு அருகில் இது நடக்கும்..!

அப்போது பல முறை நான் புத்தனாகி இருக்கிறேன்(அதாங்க ஆசையை அடக்குவது) மிக பணிவாக புன்னகையை வரவழைத்து கொண்டு தான் பேசுவார்கள் இவர்களுக்கு கோபமே வராதா என வியக்கலாம்.! அவர்கள் உணவு பரிமாறுவதும் தனியழகு..!

அவ்வளவு அழகாக பரிமாறுவார்கள்.. மது வகைகளை பரிமாறும் போது அதிகம் கேட்பவர்களை கண்ணால் ஒரு செல்ல முறைப்பில் மறுப்பார்கள்.. அவ்வளவு அழகு அது..! குழந்தைகளுடன் குழந்தையாய் முதியவர்களிடம் பாசமாய் பல உரு மாறுவார்கள்..!

நான் தெரிந்து கொண்டது ஏர்ஹோஸ்டசுகள் பயணிகள் முன் கொட்டாவி விடக்கூடாதாம்.. எப்போதும் பூத்த மலர் போல முகத்தை வைத்துக் கொள்வதும் கஷ்டம் தானே.. அதை திறம்பட செய்கிறார்கள் இந்த தேவதைகள்..!

போதும் ஓவர் ஏர்ஹோஸ்டஸ் ஜொள்ளுங்கிறிங்களா.. அதுவும் சரிதான் துடைச்சிக்கிறேன் சாரி முடிச்சிக்கிறேன்..!

வானில் ஒரு தீபாவளி..

வானில் ஒரு தீபாவளி..!

கிட்டத்தட்ட 3000 மேடை நிகழ்ச்சிகள் செய்த அனுபவம் எனக்கு இருந்தாலும் முதன் முறையாக 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி செய்தது ஒரு புதிய அனுபவம்..!

மலேசியா சென்றுவிட்டு தீபாவளிக்காக அக்டோபர்20 ஆம் தேதி சென்னை திரும்பும் போது கிடைத்த மறக்க இயலாத தருணங்கள். எனக்கு அங்கு மலேசிய நேரப்படி 3:55 மணிக்கு பிளைட் மூன்றரை மணிநேர பிரயாணம்..!

நாங்கள் விமானம் ஏறும் போது 2ம் எண் சீட் என்பதால் விமானத்தின் நுழைவுக்கு அருகே இடம்.. மிக ஸ்டைலான குரலில் அழகான சிரிப்புடன் ஒரு சிவப்பு மின்னல் வரவேற்றாள்.. ஏர் ஹோஸ்டஸ் தான்.!

எப்போதும் ஏர்ஹோஸ்டஸ் ராசி மிகுந்த எனக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியது அருகில் வீட்டம்மா இருந்ததால்.! விமானத்தில் என்னை யாரும் கண்டுபிடிக்கலை இல்லாட்டி என்னை பாக்கபிடிக்கலை எதுவேணா வச்சுக்கங்க.!

விமானம் கிளம்பும் போது எனக்கு எதிரில் ஏர்ஹோஸ்டஸும் அவரது சக தோழரும் அவர்களது இருக்கையில் சீட் பெல்ட் அணிந்த படியே என்னை கைகாட்டி பேசிக்கொண்டிருந்தனர்.! மெதுவாக ஒரு புன்முறுவல் வேறு! நானும் பதிலிளித்தேன்!

அங்கிருந்தபடியே ஸார் நீங்க டிவியில் என்றார்கள் தமிழில்..! அட இருவருமே மலேசியத் தமிழர்கள்.! ஆமாம் என்று தலையசைத்தேன் இருங்க சீட் பெல்ட் எடுக்கும் உயரம் வந்ததும் வந்து பேசுகிறோம் என்றார்கள்..!

அதே போல வந்து பேசினார்கள்.. உங்களுடன் போட்டோ எடுக்கணும் எங்களுக்கு ஏதாவது நிகழ்ச்சி செய்ய முடியுமா என்றார்கள்.. நானும் சரி என்றேன்.. உணவு பரிமாறிவிட்டு வருகிறோம் அதன் பின் செய்யலாம் என்றார்கள்..! சரி என்றேன்.

அதே போல ஒரு மணிநேரம் கழித்து அழைத்தார்கள் அவர்களது கேபினுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.. நிகழ்ச்சி செய்யத்தயாரா என்றனர் நானும் அவர்களுக்கு மட்டும் தான் என நினைத்து சரி என்றேன்...ஆனால்

நேராக இண்டர்காம் எடுத்து என்னைப்பற்றி மற்ற பயணிகளிடம் அறிமுகம் செய்துவிட்டு நமக்காக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி செய்வார் என்று அறிவித்து விட்டனர்.! இப்போது பயணிகள் அனைவரும் என்னை அடையாளம் கண்டனர்.!

அந்த இண்டர்காமை கையில் கொடுத்து அதை எப்படி ஆபரேட் செய்யவேண்டும் என சொல்லித்தர முதலில் என்ன செய்வதென தெரியாமல் மத்தாப்பு சுட்டு சுட்டு போடட்டுமா பாடலை பாடினேன்... அப்போதுபயணிகளிடம் இருந்து ஒரு குரல்..!

"மிமிக்ரி பண்ணுங்க என்று"எனக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இடைவெளி மிமிக்ரி செய்து.. திடீர் என கேட்கிறார்களே.. என்ன கான்செப்ட் செய்வது..? கொஞ்சம் நிறையவே மரிதையாக விழித்தேன் (திருதிருவென) எதுவும் பிடிபடவில்லை..!

இப்போது ஆளாளுக்கு கையில் மொபைல் போனில் வீடியோ வேறு எடுக்க ஆரம்பித்து விட்டனர்.. பழைய ரஜினி டயலாக் ஒன்று நினைவுக்கு வர அதை பேசினேன் அவசரத்தில் இண்டர்காம் சுவிட்சை அழுத்த மறந்துவிட்டேன்.!

எல்லோரும் ஒண்ணும் கேக்கலை ஒண்ணும் கேக்கலை என்று குரல் கொடுக்க சட்டென்று தோன்றியது அந்த ஐடியா தீபாவளிக்கு வெடிப்பதை பாதுகாப்பாக வெடிக்க சொல்லும் தகவலை நடிகர்கள் சொன்னால்.. இது தான் கான்செப்ட்.!

கேப்டன் வாய்ஸில் ஆரம்பித்து ரஜினி,கமல்,சிம்பு,டி.ஆர்,தல என வரிசையாக செய்து கடைசியில் ஒரு வாண்டு குட்டியின் விருப்பத்திற்காக ஊதா கலர் ரிப்பன் பாடலோடு நிகழ்ச்சி முடிந்தது.12நிமிட நிகழ்ச்சி தான் ஆனால் மிகுந்த மனநிறைவு!

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் கைத்தட்ட.. அந்த விலை மதிக்க முடியாத பரிசினை தீபாவளிப்பரிசாக ஏற்றுக் கொண்டேன்..! தேங்யூ ப்ரியா.. தேங்யூ ஜமால்..
ஆமாங்க இது தான் அந்த ஏர்ஹோஸ்டஸ் இருவரின் பெயர்கள்.! தேங்யூ ஏர்-ஏசியா.

Thursday 9 October 2014

அப்பாவின் சட்டை..

#அப்பாவின்_சட்டை

காற்றில் அசைகிறது ஆணியில் மாட்டியிருந்த அப்பாவின் சட்டை சற்றே பழுப்பேறிய அச்சட்டையில் ஒளிந்திருக்கிறது பல கதைகள் அதன் வலப்பக்க பாக்கெட்டில் சிறு குறிப்பு நோட்டு ஒன்று, ஹீரோ பேனா.. சில நேரங்களில் பாக்கெட்டாகவும் சில நேரங்களில் அதுஇல்லாது உதிரியாகவும் சிகரெட்டுகள்..!

அதிலிருந்து உதிர்ந்த துகள்கள் சிதறிய பாக்குப் பொட்டலம் போல பாக்கெட்டின் அடியில் கொட்டியிருக்கும் சின்னவீடு போல அதற்கு நேர் பின்னே உள் பாக்கெட் சக்களத்தி ஒன்று.! அப்பாவின் பணமெல்லாம் எப்போதும் சின்ன வீட்டில் தான் இருக்கும்..! எத்தனை முறை அதில் பணம் எடுத்திருப்போம்..!

அப்போதெல்லாம் மெளன சாட்சியாக இருந்தும் அமைதி காத்தது அப்பாவை போலவே.! அவரது வியர்வை மணமும் அப்பாவின் சிகரெட் மணமும் கலந்து ஒரு கதம்ப மணத்தை எப்போதும் தந்து கொண்டிருக்கும்.. சில சமயங்களில் பணம் காணாமல் போன போது கூட பதறாத அப்பா பதறியிருக்கிறார்..!

அவரது பையிலுள்ள சிகரெட்டுகள் காணாமல் போன போது..! அதன் அர்த்தம் இப்போது விளங்குகிறது.. பெரியவன் சாப்பிட்டானாடி என்று கேட்டபடியே தான் அந்தச் சட்டையை அவிழ்ப்பார் வீடு திரும்பும் போதெல்லாம்.. வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும் போது அவசர வேலை வந்து விட்டால் அப்பா சட்டையை எடுத்துட்டு வா தம்பி என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்..!

விழுந்தடித்து ஓடி அதை எக்கி எடுத்து தந்ததும் அவசரமாக கை நுழைத்து மாட்டி கிளம்புவார்..செய்தி நல்லதாக இருந்தால் இந்தாடா தம்பி என நாலணா கொடுக்க மறந்ததில்லை.. சலவைக்கு போய் வரும் சட்டை கஞ்சியிடம் வாங்கிய கம்பீரத்தில் விறைப்பாக இருக்கும்..அப்போது அதில் ஒரு புது மணமும் கலந்திருக்கும்..! 

மின் வெட்டில் புழுக்கமான போது அந்த சட்டையைக் கையில் துணி விசிறியாக சுழற்றிக் கொண்டிருப்பார்.. நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்வதுபோல அப்பாவின் எல்லா மணங்களும் கலந்து ஒரு குளிர்க் காற்று சுகமாய் அருகில் படுத்திருக்கும் நமக்கும் வந்து போகும்.. !

அரைக்கைச் சட்டைதான் அணிவார் அவர் முழுக்கை சட்டை அணிந்த தருணம் அவரது திருமணத்தில் தான்.. மருளோடும் நாணத்தோடும் நிற்கும் அம்மாவுடன் கழுத்தில் மாலையோடு இளமை ததும்ப அவர் நிற்கும் புகைப்படம் அதைச் சொல்லும்.. எனக்கென்னவோ அரைக்கைதான் பிடிக்குது என்பார் அடிக்கடி..!

அப்பாவின் சட்டை அணிதல் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.. உமக்கு மட்டும் எப்படிய்யா இந்த ஒரே மாதிரி வெள்ளைச்சட்டை இத்தனை கம்பீரமாயிருக்கு என்பார்கள் அப்பாவின் நண்பர்கள்..கரீம் மாமா ஒருத்தர் தான் அவரது பிரத்யேக டைலர்.. அவரை தவிர்த்து யாரும் அவருக்கு சட்டை தைத்ததில்லை..!

வீட்டிற்கு பின்புறம் அப்பா இருந்தாலும் அவர் வீட்டில் தான் இருக்கிறார் என்பதை ஆணியில் மாட்டப்பட்டிருக்கும் அச்சட்டை கட்டியம் கூறும்.. இதோ இன்றும் ஆணியில் தான் மாட்டியிருக்கிறது அச்சட்டை..அப்பா தான் எதிரே இருந்து சிரித்துக் கொண்டுஇருக்கிறார்.....

எதிர் சுவற்றில் மாலையிடப்பட்டிருக்கும் போட்டோவிலிருந்து..!

Wednesday 8 October 2014

தீனா - அக்டோபர்

"தீனா கொரலு"

நம்பளை புர்ஞ்சிகினு நம்ம மேல உசுரியே கொடுக்குற அன்பான மன்சங்க இல்யாத ஊருல வாழுறது பேஜாரான்து.. அத்தவுட பேஜார் இன்னா தெரிமா? மன்சார காதலிச்சவங்களை பிர்ஞ்சி வாழ்றது தான்..! குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

இன்னாது இனனில்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : பிரிவாற்றாமை : குறள் எண் : 1158]


"தீனா கொரலு"

இந்த யானைகீதே அத்துகிட்ட கையில வேல் வச்சிகினு எம்மாம் பெர்ய பிஸ்தா அல்லாம் சேந்து கூட்டமா வந்தாலும் அல்லாத்தையும் தில்லா நின்னு தொம்சம் பண்ணிடும்..ஆன்யா அத்தே யானை சேத்துக்குள்ள காலவுட்டு மாட்டிக்கிச்சுன்னு வை அத்த ஒரு நரிகூட கொன்னுரும்..!  சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

[ பொருட்பால் : அதிகாரம் : இடனறிதல் : குறள் எண் : 500 ]


"தீனா கொரலு"

விதிய மாத்தவே மிடியாது சிலரு புலம்பிகினு இர்ப்பாங்கோ.. ஆனா இன்னா ட்ரபுள் வந்த்யாலும் அத்தக் கண்டு மெர்சலாகாம அட்த்தட்த்து ட்ரை பண்ணிகினே கீறான் பாரு அவன் விதியவே விரட்டியட்ச்சுடுவான்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.

[ பொருட்பால் : அதிகாரம் : ஆள்வினையுடைமை : குறள் எண் : 620 ]


"தீனா கொரலு"

சொம்மா தக தகன்னு ஜொலிச்சுனுகீறாளே என் ஆளு.. இவ எம்மேல இன்னும் கோச்சுகட்டும் அப்ப தான் நான் அவுளோட சமாதான்மா போக கெஞ்சிகினே இர்ப்பேன் அப்றோம் நாங்க குஜாலா இர்ப்போம்.. இந்தொ ஒண்ணுகோசரமே இந்தய நைட்டு நீண்டுகினே போவட்டும்.. குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை : குறள் எண் : 1329 ]



பாவாடை சட்டை..

#பாவாடை_சட்டை

பெண்களுக்கான ஆடை குறித்து கிளம்பும் சர்ச்சைகளை தவிர்த்து விட்டு நான் எனது டீன்-ஏஜ் காலத்தில் பார்த்த பெண்களின் ஆடைகளை சொல்லவே இப்பதிவு..

சீட்டிப்பாவாடை என ஒன்று அப்போது பெண்களின் விருப்ப உடையாகவும் பெற்றோர்களின் பொருளாதாரத்திற்கு உகந்ததாகவும் வலம் வந்தது.. காடா துணி போல கெட்டித்துணியில் இருக்கும் டார்க் கலர் பின்னணியில் ரோஜா, சாமந்தி, செம்பருத்தி போன்ற பூக்கள் பெரிது பெரிதாக பிரிண்ட் செய்யப்பட்டு அமர்க்களமாக இருக்கும்..!

வயதுக்கு வராத பெண்கள் பஃப் கை வைத்த பின் பக்கம் ஊக்குகள் உள்ள சட்டையும் பலூன் போல விரியும் முழுப்பாவாடையும் அணிவார்கள்.. தெருவில் விளையாடும் போது இரு கை விரித்து கிறு கிறுவென சுற்றி சட்டென்று தரையில் அமர்வார்கள்.. காற்று புகுந்த அப்பாவாடைத்துணி கவிழ்த்து வைத்த கிண்ணம் போல அவர்களை சுற்றி தரையில் நிற்கும்..! 

எனக்கு அதை பார்க்கும் போதெல்லாம் தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் லட்சுமியோ சரஸ்வதியோ நினைவுக்கு வரும். இத் துணிகளின் நல்ல உழைப்பால்  சில வருடங்கள் இந்த துணி தாங்கும் என்பதை அணியும் பெண்களின் முழுப்பாவாடை முக்கால் பாவாடை ஆவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.. கிழிந்து போனாலும் வீட்டில் அடுப்படியில் கரித்துணியாகவும்..சைக்கிள் & சுவேகா துடைக்கவும் இந்தத் துணி பயன்படும்.!

மென்மையான பெண்களுக்கு முரட்டுத்தனமான இத்துணி தன் மேல் பட்டுக் கொண்டே இருப்பது ஏதோ ஒரு வகையில் மனரீதியான பாதுகாப்பு உணர்வு அளித்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.. நான் நினைத்தது சரியா என யாராவது பெண்கள் தான் பதில் தர வேண்டும்.. இதே அப்பெண்கள் வயதுக்கு வந்தபின்
பாவாடை ஜாக்கெட் சீட்டித்துணியிலும் காட்டன் அல்லது ஃபுல்வாயிலில் தாவணியும் அணிவார்கள்..!

அதிலும் எங்கள் தெருவில் இருந்த விஜி அதில் தேவதை..(பெயர் மாற்றியுள்ளேன்) அவளது ரசனை அபாரமானது.. கறுப்பு பின்னணியில் சூரியகாந்தி பூ தெளித்த பாவாடை ஜாக்கெட்டும் வெளிர் மஞ்சள் நிற தாவணியும் அணிவாள் காதோரம் மஞ்சள் ரோஜாவுடன் அவள் நடந்து வரும் போது தான் தேவதைகள் நடந்தும் வரும் என நான்(ங்கள்) அறிந்து கொண்டேன்(டோம்).

அதே உடையில் தாவணியை மட்டும் வெள்ளையாக அணிந்து வெள்ளை ரோஜாவுடன் வந்து மிகப்பெரிய சேஞ்ச் ஓவர் தருவாள்.. அடர் சிவப்பில் மஞ்சள் பூக்கள் உள்ள பாவாடை சட்டை அதற்கு மஞ்சள் தாவணி.. ஆகாய நீலத்தில் கருநீலப்பூக்கள் பாவாடை சட்டைக்கு கருநீல தாவணி என துவம்சம் செய்வாள்.!

அநேகமாக பலர் எழுதும் கவிதைகளுக்கு காரணமாகவோ அல்லது பல கவிஞர்கள் உருவாக காரணமாகவோ இருந்திருக்கிறாள் அவள்... என்பதை விட அவள் ஆடை என்பது பொருத்தமாக இருக்கும்.. 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் என் கண் முன்னே விரிகிறது அவள் நடையும் அந்த உடையும்..!

அதன் பிறகு வந்தது சட்டை கலாச்சாரம்.! அதாவது பாவாடை மேலே அணிவது ஆண்களின் சட்டை.. இதில் ஒரு தகவல் ஒளிந்திருக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அண்ணன் இருக்கிறான் என்பதை சட்டையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.! ஓல்டாக இருந்தால் அப்பா..! லேட்டஸ்ட்டாக இருந்தால் சகோதரன் என இனம் கண்டு தைரியமாய் (!?!) சைட் அடிக்க முடிந்தது.!

என்னது ஜீன்ஸ் லெக்கின்ஸா..! ஒன்று சொல்ல விரும்புகிறேன் அவரவர் வாழும் காலகட்டங்களில் இருக்கும் ஆடைகள் அவரவர்க்கு பிடித்ததாய் அமையும்.. என் காலத்தில் இந்த ஜீன்சோ லெக்கின்சோ அணிந்திருந்தால் இவ்வளவு ரசிப்புடன் நான் எழுதியிருப்பேனா என தெரியாது. அதேபோல இப்போது இருக்கும் இளைய சமுதாயமும் அந்த காலத்து ஆடையை விரும்பியிருக்காது.

ஆடை அவரவர் செளகரியமும் அவரவர் விருப்பமுமே.. இதை அணி இதை அணியாதே என யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது.. ஆணோ பெண்ணோ அவரவர்க்கு பிடித்ததை அணியும் உரிமையுண்டு.. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வோம் அல்லது விமர்சிக்காமலாவது இருப்போம்..!

பாவாடை தாவணியை நான் எழுதியது போல எதிர்காலத்தில் ஜீன்ஸ் லெக்கின்ஸ் பற்றி யாரேனும் எழுதலாம் ஆனால் அப்போதும் இப்படி இதை அணியாதே அதை அணியாதே என்ற பிரச்சனை இல்லாமலிருக்குமா..!? தெரியவில்லை.......