Thursday 25 May 2017

ஆனந்த தீபாவளி..

இந்த வறுமை காலத்தில் புண்பட்ட எங்கள் இதயத்தையும் பசி வாட்டும் வயிற்றையும் நாங்கள் சமாளித்தது ஒரு சுவையால்.. ஆம் அது தான் நகைச்சுவை.! என் அம்மா சரியான கிண்டல் பேர்வழி அலட்டிக் கொள்ளாது சட்சட்டென அவர் வாயில் இருந்து வரும் கமெண்ட்டுகள் அந்த காலத்தில் ஃபேஸ்புக் இருந்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் மினிமம் 2k லைக்குகள் வாங்கியிருப்பார் அந்தளவிற்கு குறும்பும் லொள்ளும் தெறிக்கும்.


என் பாட்டியே அவ்வளவு டைமிங்காக கவுண்ட்டர் கொடுப்பார்.. எங்கள் மணி மாமாவும் நக்கல் நையாண்டியில் டாக்டரேட் வாங்கியவர். அதிலும் எங்கள் சாந்தி சித்தி இருக்காங்களே அவர்கள் இமிடேட் மகாராணி.. ஒரு ஆளை பார்த்துவிட்டால் அவர் எப்படி நடப்பார் எப்படி பேசுவார் என்பதை எங்களுக்கு நடித்துக் காட்டுவார். பாட்டி வீடே கைத் தட்டித் தட்டி கண்ணில் நீர் வர சிரித்து அதிரும். 


அந்த சேலத்து ஃபார்முலாவைத்தான் மதுரையிலும் கடை பிடித்தோம்.  வறுமை மட்டும் போஷாக்காய் வளர்ந்து இருக்கும் எங்கள் வீட்டில் இந்த நோஞ்சான்கள் அடித்த லூட்டியில் தான்... வறுமை பாணபத்திரரைக் கண்ட ஹேமநாத பாகவதரைப் போல ஓடியிருக்கும். தம்பி பாலு பல்லைக் கடித்தபடி தேங்காய் சீனிவாசன் ஸ்டைலில் புதுப் புது வார்த்தைகள் சொல்லுவதில் கில்லி.. தங்கை உமா ஜுனியர் சித்தி. கடைக் குட்டித் தம்பி குமரன் சைலண்ட் டைனமிக் கமெண்டர்.


இவர்கள் எல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்ததில் தான் எனக்கு கொஞ்சமேனும் ஹ்யூமர் சென்ஸ் வந்திருக்கலாம்.. பாலு கம்சிலி கவுசிலி கக்கூசிலி.. என்னும் சொற்றொடரை அடிக்கடி சொல்லுவான் ஹவுஸ்மிங்கி, மங்கிஸ் த மேட் ஆஃப் த ஜிஞ்சர் பேர்ட், இவை எல்லாம் அவனது ஃபேமஸ் டயலாக்குகள்.. ஆண்டுகள் 20 ஆனாலும் இன்றும் நினைவில் வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசி போல பதிந்திருக்கிறது.


தீபாவளிக்கு வருவோம்.. புது சட்டை அப்போது குமார்ஸ் என்னும் கடை மதுரை அம்மன் சன்னதியில் இருந்தது 40 ரூபாய்க்கு சட்டை கிடைக்கும்.. அது மட்டும் தான் இருப்பதில் நல்ல பேன்ட்டாக துவைத்து வைத்துக் கொள்ளுவோம் அம்மாவுக்கு நூல் சேலை தங்கை வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் அவளுக்கு தாவணி பாவாடை செட் கிடைத்துவிடும்.. அப்பா ஒரு வேட்டியோடு திருப்தியாவார்.


364 நாட்களுக்குப் பின் காலை உணவாக இட்லி தோசை கிடைக்கும் ஒரே நாள் தீபாவளி.!அம்மா இரண்டு நாட்களுக்கு தேவையான அளவு மாவு ஆட்டி வைத்து விடுவார்.. வீட்டில் தங்கை உமா மட்டும் எப்போதும் அசைவம் பெரிதாக விரும்பி சாப்பிட்டதில்லை.. ஆனால் நான், தம்பி, அப்பா மூவரும் நன்கு சாப்பிடுவோம்.. அதிலும் பாலு தற்போது அசைவத்தை கைவிட்டு 10 ஆண்டுகள் ஆகிறது என்பது எட்டாவது அதிசயம்.


கோழி எடுக்க மாட்டார்கள்.. அம்மாவிடம் "வருஷத்துக்கு ஒரு நாளுடி பிள்ளைகளுக்கு ஆட்டுக்கறியே போடு" என்பார் அப்பா.. கடந்த காலத்தில் வாராவாரம் ஆரவாரம் என வாரம் 3 முறை அசைவம் எடுத்தவர் அல்லவா..! அந்த பழம் ஞாபகத்தில் அப்படிச் சொல்லுவார்.. அம்மா மட்டனில் ஒரு கால் கிலோவை குறைத்து ஒரு கிலோ சிக்கனும் வாங்கியிருப்பார் அப்பாவுக்கு தெரியாமல்..அது ஏன் தெரியுமா.? இருங்க தீபாவளிக்கு முன் தின இரவில் இருந்து வர்றேன்


தீபாவளி அன்று முதல் நாள் மழை பெய்தால் வீடு ஓழுகும் ஆங்காங்கே பாத்திரத்தை வைத்துவிட்டு அதில் விழும் நீரின் சத்தத்தை ஜலதரங்கம் போல பாவித்து விடிய விடிய பேசிக் கொண்டிருப்போம் மழை நின்று அதிகாலை ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கும்.. அம்மா நனைந்த விறகுகளோடு அடுப்படியில் ஐக்கியமானால் கிளம்பும் புகையும் தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டதால் எரிச்சலும்..


கண்களை எரிக்க நான் தம்பிகளுக்கு எண்ணெய் தேய்த்துவிட அவர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்களைப் போல போஸ் கொடுக்க வீடே சிரிப்பலையில் அதிரும்.. ஒரு வழியாக குளித்து புத்தாடை (சட்டை) அணிந்து அமரும் போது அப்பா ஸ்வீட் கடை சம்பந்தமாகத் தான் அலைபவர் என்பதால் எப்படியாவது முதல் நாள் இரவே அவர் நண்பர்களைப் பார்த்து ஒரு கிலோ ஸ்வீட் அரைக்கிலோ காரம் வாங்கி வந்திருப்பார்.


அதை பிரித்து கொடுக்க அதை சாப்பிடுவதற்குள் சூடாக இட்லிகள் தலைக்கு கறிக்குழம்பு ஊற்றி குளித்து வரும்.. அரட்டையோடு சாப்பிட அடுத்த கட்ட உற்சாகம் கரை புரளும்.. எல்லாருக்கு கறி கொஞ்சம் தந்தாலே முக்கால் கிலோ கறி ஒரு முறை தான் வரும்.. 2வது முறை நாம் இட்லிக்கு வெறும் குழம்பு தான்.. ஏக்கத்துடன் பார்ப்போம்.. அப்போது தான் அடுத்த ரவுண்ட் சிக்கன் வரும்.. இப்போ புரியுதா..என அம்மா அப்பாவை பார்க்க அப்பா கண்கலங்கி ஆமோதிப்பார்.


உதிரி வெடி இரண்டு பாக்கெட் தான் அது தான் அன்றைக்கு மொத்த வெடியும்.. வெளியே கிளம்பினால் தெருவெங்கும் சுற்றி வெடிக்க பயப்படும் வசதிபடைத்த பயந்தாங் கொள்ளிகளின் வெடிகளை வெடித்து மதியம் வீடு வந்து மீண்டும் தோசை கறிக்குழம்பு சாப்பிட்டு தூங்கி.. மாலை டூரிங் டாக்கிசில் ஏதாவது ஒரு செகண்ட் ரிலீஸ்..


ரஜினி அல்லது கமல் படம் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பி தெருவில் வெடிக்காத வெடிகளை சேகரித்து வைத்து இருப்போம் அந்த வெடிகளை கொளுத்தி கை கழுவி அமர்ந்து மீண்டும் இட்லி குழம்புடன் உணவு.. தூங்கப் போகையில் மீண்டும் மழை வந்துவிட்டால் நான் தாளம் போட்டு பாட ஒழுகும் கூரை பின்னணி இசைக்க கச்சேரி களை கட்டும். அப்போது தம்பி தங்கைகளுக்காக பேசியது தான் என் முதல் மிமிக்ரி மேடை.. வசதிகள் ஏதுமில்லை தான் ஆனால் அந்த தீபாவளி தான் வசந்த காலம் அது தந்துவிட்டு போன இன்பம் எக்காலமும் வாராது.


நிறைந்தது..

டாஸ்மாக் கி.பி 2050

அந்த கட்டிடத்தின் எதிரே நீண்ண்ண்ண்டடடட கியூ நத்தையைப் போல நகர்ந்து கொண்டு இருந்தது.. கட்டிடத்தின் உச்சந்தலையில் டாஸ்மாக் என ஆங்கிலத்திலும் தமிழிலும் லேசர் போர்டு நிறங்களை உமிழ்ந்து கொண்டிருந்தது.. ச்சே என்ன பொழப்புடா இது எப்போ நம்ம முறை வந்து எப்போ வாங்கிகிட்டு எப்போ வீட்டுக்கு போவது??

ரவி அலுத்துக் கொண்டான்.. "சார் என்னமோ நீங்க மட்டும் தான் கஷ்டப்படுறா மாதிரி சொல்றிங்க அப்போ என்னை நினைச்சுப் பாருங்க" என்றான் பின்னாலிருந்தவன்.. "குவார்ட்டர் 450 ரூபா இருந்துச்சு இப்போ 600 ரூபா ஆயிடுச்சு ஒரு ஆளுக்கு ரெண்டு குவார்ட்டர் மட்டும் தான் அதுவும் ஆதார் கார்டு இருந்தாத் தான்"

அநியாயம் சார் என்றார் ரவிக்கு முன்னால் நின்றவர் தன்பங்கிற்கு.. இதுல கடைகளை வேற குறைக்கப்போறாங்களாம்... என்றார் இன்னொருவர் கவலையாக.. என் ஒய்ப் மகளிர் டாஸ்மாக்கில் நின்னு இருக்கா ஆனா உரிய ஸ்டாக் இல்லாததால் ஒரு குவார்ட்டர் தான் தந்தாங்களாம் அந்த ஏரியா பெண்கள் பூரா மறியல் பண்றாங்களாம்..

இப்படி ஆளாளுக்கு புலம்ப க்யூ வேகமாக நகர ஆரம்பித்தது.. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிலர் கள்ளத்தனமாக நான்கு குவார்ட்டர்கள் பெற்றுக் கொண்டனர்.. ரவி சேல்ஸ் கவுன்ட்டரை நெருங்கி தன் ஆதார் கார்டையும் டெபிட் கார்டையும் நீட்டினான்.. ஸ்வைப் செய்து இரு குவார்ட்டர் பாட்டில்களை பில்லோடு தந்தார்கள்.. 

கிளிங் என மெசஞ்சர் ஒளிர பார்த்தான் அவன் மனைவி தான்.. "இப்போ தான் நானும் ரெண்டு குவார்ட்டர் வாங்கினேன் வந்து பிக்கப் பண்ணிக்க முடியுமா என லொகேஷன் மேப்போடு செய்தி அனுப்பியிருந்தாள்.. வர்றேன் என பதிலிவிட்டு.. குவார்ட்டர் பாட்டில்களை காரில் பத்திரமாக வைத்து காரை கிளப்பி மனைவி இருக்கும் இடம் போய் சேர்ந்தான்..

அவளும் 2 குவார்ட்டர் பாட்டில்களோடு வண்டி ஏறினாள்.. அப்பாடா இன்னிக்கு 4 குவார்ட்டர் கிடைச்சதே.. என்றான் பெருமிதமாக.. ஆமாம் நீங்களும் ஏதோ பெரிய கம்பெனி ஜெனரல் மேனேஜர்... ஏதாவது ஒரு அரசியல்வாதி மூலமா டெய்லி 2 ஃபுல் வாங்க துப்பில்ல 2 ஃபுல் இருந்தா நம்ம குடும்பமே குடிச்சு சந்தோஷமா இருக்கலாமே!

நான் என்ன உங்க கிட்ட நகை நட்டா கேட்டேன்.. 2 ஃபுல் தானே என்றாள் கோபத்துடன்.. இரும்மா தெரிஞ்ச சென்ட்ரல் மினிஸ்டர் பி.ஏ. கிட்ட பேசிட்டேன் அடுத்த வாரம் ஒரு சிபாரிசு மெயில் அனுப்பறாராம்.. அது கிடைச்சா நமக்கு டெய்லி 2 ஃபுல் கிடைச்சிடும் என்றான்.. ஹை நிஜமாவா சூப்பர்.. டியர் இந்த சந்தோஷத்தை செலிபரேட் பண்ண..

இப்பவே நாம ஒரு குவார்ட்டர் அடிச்சுடலாமா.. என்றாள்! ஏய் அதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு.. அந்த ஃபுல் வந்ததும் கொண்டாடலாம் நாட் நவ்.. என்ற போது செல்லில் அழைப்பு கவுதம் என ஒளிர்ந்தது அவர்களது 12 வயது மகன் வீட்டில் இருந்து கூப்பிடுகிறான்.. எடுத்து பேசு என்றான் ரவி.. ஹலோ கவுதம் செல்லம் டாடி மம்மி ரெண்டு பேரும் வீட்டுக்கு..

வந்துகிட்டு இருக்கோம் என்ன கண்ணா வேணும்.? மம்மி குவார்ட்டர் வாங்கிட்டிங்களா நான் குடிக்கணும் சீக்கிரம் வாங்கம்மா" என்றான்.. தோ 5 மினிட்ஸ் கண்ணா.. வீட்டுக்கு வந்ததும் டாடி மம்மி நீ எல்லாம் சேர்ந்து குடிக்கலாம் என்றவள்.. போனை அணைத்ததும் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.. ரவி பதறினான்..

ஏய் என்னம்மா ஆச்சு பையன் என்ன சொன்னான்.. பாவங்க அவன் எப்போ குவார்ட்டர் வருமுன்னு ஏங்கி கேட்டான் வந்துடுறோமுன்னு சொல்லியிருக்கேன்.. பாவம் பிள்ளைக்கு எவ்வளவு தாகம் இருந்திருந்தா தவிச்சு போயி போன் பண்ணியிருப்பான் என்றாள்.. பின்சீட்டில் குவார்ட்டர் பாட்டில்களில் இருந்த குடிநீரும் தளும்பி ஆம் என்றது.

தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசுக்கு அதிக வருவாய் என்பதாலும் மதுவுக்கு பதில் டாஸ்மாக்கே குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் நிலை வந்தால் எப்படி இருக்குமென சிந்தித்ததன் விளைவே இப்பதிவு.

அமெரிக்க இடைத்தேர்தலில் அதிமுக அணியினர்..

முதல்சுற்று...

அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் தன் கட்சியை ஜெயிக்க வைக்க தொப்பி ஆட்களின் திறமையை அறிந்து அழைக்க.. ஹிலாரி அணி மின்கம்ப ஆட்களை அழைக்க நம்ம ஆட்கள் அங்கு போய் தேர்தல் வேலை பார்த்து இருந்தால் எப்படி இருக்கும் என ஓர் நகைச்சுவை கற்பனை ஆர்.கே.நகர் போல ஆர்கென்சா தொகுதி இடைத்தேர்தல்!

டிரம்ப் : மிஸ்டர் தொப்பி லீடர் இந்த பிரச்சாரத்துக்கு உங்களுக்கு என்னென்ன வசதிகள் வேணும் சொல்லுங்க செஞ்சிடலாம்..

தொப்பி: சார் ஒரு 100 மெகா சூட்கேஸ் கொடுங்க மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்.

டிரம்ப் : அட வெறும் 100 சூட்கேஸ் இருந்தா போதுமா செலவு கம்மியா ஈசியா இருக்கே.!

தொப்பி : ஆஹா...சார் அது உங்க மண்டை மாதிரி காலியா இருக்கக் கூடாது உள்ள ஃபுல்லா உங்க டாலர் கரன்சி அதுவும் 100 டாலர் கட்டுகளா இருக்கணும் புரியுதா.!

டிரம்ப் : அய்யோ அப்போ 100 மில்லியன் ஆகிடுமே ஒரு தொகுதிக்கு இது டூமச் இல்ல..

தொப்பி : சார் நாங்க நடக்காத எலக்ஷனுக்கே 100 கோடி செலவழிச்சு இருக்கோம் தொப்பிகிட்ட வந்து கப்பித் தனமா பேசிகிட்டு இருக்கிங்க.!

டிரம்ப் : ஓ..அப்படியா சரி இந்த ரூபாயெல்லாம் யாருக்கு.?

தொப்பி : அப்படி கேளுங்க உங்க தொகுதியை வார்டு வார்டா பிரிப்போம் ஒரு வார்டுக்கு 8 பூத்

டிரம்ப் : வாவ் இண்ட் ரஸ்டிங்.. குட் வோட் கேன்வாஸிங் சிஸ்டம்

தொப்பி : சார் இது வோட் கேன்வாசிங் இல்ல நோட் டிஸ்டிரிப்யூட் சிஸ்டம்.!

டிரம்ப் : நோட் டிஸ்டிரிப்யூட்.? புரியலையே

தொப்பி : அந்த 8 பூத்திலில் ஒரு ஓட்டுக்கு 100 டாலர்ன்னு பணத்தை டிஸ்டிரிப்யூட் பண்ணுவோம்..

டிரம்ப் : மைகாட் அது சட்டப்படி குற்றமாச்சே.?

தொப்பி : அதுக்கு தான் டோக்கன் சிஸ்டம் வச்சு இருக்கோம் பகிரங்கமா பணம் கிடையாது டோக்கன் இருந்தா பணம்..

டிரம்ப் : டோக்கன் எப்படி கொடுப்பிங்க.?

தொப்பி : அது எங்க பகுதி செயலர்கள் பார்த்துக்குவாங்க.. அது மட்டுமல்ல நீங்க போற இடத்தில் எல்லாம் பூத்தூவி ஆரத்தி எடுப்பாங்க இல்ல அதுக்கும் பணம் உண்டு..

டிரம்ப் : ஆரத்தி.?

தொப்பி : ஆமாங்க எங்க ஊரில் உண்டு வேணுண்ணா உங்க ஊரில் பொக்கே கொடுக்கச் சொல்லுவோம்.. அப்படியே நாலஞ்சு குழந்தைகளுக்கு பேரு வச்சி அஞ்சாறு கிழவிகளைக் கட்டி பிடிச்சு..

டிரம்ப்: வாவ் பெண்களை கட்டிப்பிடிக்கலாமா..? அப்போ நானே ரிசைன் பண்ணிட்டு போட்டியிடுறேனே..

தொப்பி: அய்யே இத்தனை வயசாகியும் பெண்கள்ன்னு சொன்ன உடனே அலைகிறீர் பாரும்.. ஜெயிக்கிற நினைப்பு இல்லியா.?

டிரம்ப் : அய்யோ அது இருக்கு.. எக்ஸ்பர்ட் நீங்க.. அதுக்கு தானே உங்களை கூப்பிட்டு  இருக்கோம் சொல்லுங்க..

தொப்பி : வியாபாரிகள் சங்கம், மீனவர்கள் சங்கம் இப்படி 10 பேர் இருக்கிற சங்கமா இருந்தாலும் அவங்களை உங்களுக்கு ஆதரவு தரச்சொல்லுங்க முக்கியமா அது மீடியாவில் வரணும்..

டிரம்ப் : 10 பேரு இருக்குற சங்கம் ஆதரவு கொடுத்து என்ன ஆகப்போகுது.?

தொப்பி : சரிதான் அமெரிக்கா ஏன் வளர்ந்திருக்குன்னு இப்போ தான் தெரியுது இவ்வளோ வெள்ளந்தியா இருக்கிங்களே வெள்ளக்காரரே..
அதில 10 பேர் இருக்கானோ 1000பேர் இருக்கானோ.. அது நமக்குத் தான் தெரியும் மக்களுக்கு அது தேவையில்ல மீடியாவில் அந்தச் சங்கம் ஆதரவு இந்தச் சங்கம் ஆதரவுன்னு வரணும்.. சரி தெரிஞ்ச ஹாலிவுட்/ ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ் யாரும் இருக்காங்களா.?

டிரம்ப் : என்ன இப்படி கேட்டுட்டிங்க நானே ஒரு wwe ஸ்டார் தானே ஹாலிவுட்டில் நிறைய ஸ்டார் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க..

தொப்பி : அப்போ கவலையை விடுங்க திறந்த ஜீப் ஒண்ணு ஏற்பாடு பன்ணிட்டு அதுல நாலு நடிகைகளோடு ஊர்வலம் ஏற்பாடு பண்ணுங்க பணப்பெட்டி ரெடின்னா ஓட்டுப் பெட்டி நம்மதுதான் ஓ.கே..

டிரம்ப் : டபுள் ஓ.கே.. பாஸ் ஒரு சந்தேகம் ஊர்வலம் போற ஜீப் மட்டும் திறந்திருக்கணுமா இல்ல நடிகைகளின் டிரஸ்சும் திறந்து இருக்கணுமா..?ஹி.ஹி.ஹி..

தொப்பி : நம்ம பண்ணப்போறது பிரச்சாரம்.. வேற தொழிலான ---சாரமில்ல.. வழியுற ஜொள்ளை தொடைச்சிட்டு பேச ரெடியாகுங்க..

இதே வேளையில் அங்கே ஹிலாரி கூடாரத்தில் ஆலோசனை...


இரண்டாம் சுற்று...

(ஹிலாரி வீட்டருகே மின்கம்ப அணியினர் பவ்யமாக நிற்க.. ஹிலாரி கார் போர்டிகோவுக்கு வர அத்தனை பேரும் காருக்கு முன் பாய்கின்றனர்)

நின்ற காரில் இருந்து பதறியபடி இறங்குகிறார் ஹிலாரி.. மை காட் இத்தனை பேரு சூசைட் பண்ணிக்கிற மனநிலையில் என் கார் முன்னால பாய்ந்து இருக்காங்களே.. என்ன ஆச்சு இன்னிக்கு.?

ஹிலாரி பி.ஏ: மேடம் அவங்க யாருன்னு தெரியலை நல்லா பாருங்க..

(ஹிலாரி அவர்களை பார்க்க அனைவரும் கார் டயருக்கு அடியில் கிடக்க..) ஓ.. கார் மெக்கானிக்குகளா..! ஒருத்தர் போதுமே எதுக்கு இத்தனை பேரு.?

ஹிலாரி பி.ஏ: அய்யோ மேடம் அவங்க மெக்கானிக் இல்ல நம்ம கட்சிக்காக இடைத்தேர்தலில் உதவி செய்ய தமிழ்நாட்டில் இருந்து வந்த மின் கம்பம் அணியினர்..

ஹிலாரி: ஓ அவங்களா அவங்க எதுக்கு என் கார் முன்னால விழுந்து கிடக்காங்க.!! மிஸ்டர்.. எல்லாரும் கொஞ்சம் எழுந்து நேரா நிற்கிறிங்களா.?

(அவர்கள் எழுந்தபடியே) அம்மா எந்திரிச்சு குனிஞ்சு வேணா நிற்கிறோம் நேரா நின்னு எங்களுக்கு பழக்கமில்லம்மா..

ஹிலாரி : ஏன்ப்பா.?

மின்கம்பம்: எங்க அம்மா எங்களை அப்படியே வளர்த்துட்டாங்கம்மா.. அமெரிக்காவுக்கு வந்ததே இங்க இருக்க அம்மா நீங்க கூப்பிட்டதால தான்.. நாங்க டிரம்ப்போட சூழ்ச்சிக்கு துணை போகமாட்டோம்.

ஹிலாரி: குட் இங்க பாருங்க டிரம்ப் ஆளுங்கட்சி அதனால அவர் அதிகாரத்தை பயன்படுத்துவார் நிறைய செலவும் செய்வார் நாம அவ்வளவு செலவு செய்யமுடியாது.. இந்த இடைத்தேர்தலில் ஜெயிக்க எங்க பட்ஜெட்டுக்குள்ள வர்ற மாதிரி  நல்ல ஐடியா இருக்கா.?

மின்கம்பம்: நிறைய இருக்கும்மா கவலைப்படாதிங்க இப்பதான் எங்க ஊரில் பணநாயகத்தை எதிர்த்து போராடி வந்துருக்கோம் இங்கேயும் அந்த பார்முலாவை ஃபாலோ பண்ணலாம்.

ஹிலாரி: இல்ல டிரம்ப் ஒரு ஓட்டுக்கு 100 டாலர் தரப்போறதா நியூஸ் வந்திருக்கு ஒட்டு மொத்த அமெரிக்காவும் அதே பேச்சா இருக்கு.. போன முறை அவர் ஜெயிச்சா மாதிரி இப்ப அவர் ஜெயிக்கக்கூடாது.

மின்கம்பம்: அம்மா உங்க வீட்டுக்காரர் கிளிண்டன் ஆதரவுன்னு ஒரு பேட்டி கொடுக்க சொல்லுங்க முதலில்..

ஹிலாரி: சில்லி.. அவர் எங்க கட்சி தானே அவர் ஆதரவு தந்து என்ன ஆகப்போகுது.?

மின்கம்பம்: இருந்தாலும் அவர் முன்னாள் அதிபர் தானே அவர் ஆதரவுன்னா ஒரு இமேஜ் வருமே.. இந்த நேரத்தில் யார் ஆதரவுன்னாலும் வாங்கிருங்கம்மா நாங்க வாசன் கிட்ட ஆதரவு வாங்கினா மாதிரி..

ஹிலாரி: இது ஒரு மேட்டர் இல்ல ஒரு அதட்டு அதட்டுனா அதுவா ஆதரவு கொடுத்துடும் வேற ஏதாவது நச்சுன்னு ஐடியா கொடுங்க..

மின்கம்பம்: சொல்றோம் அம்மா.. ஓட்டுபெட்டி நம் வசமாக நாமும் ஒரு பெட்டி கொண்டு வர்றோம்..

ஹிலாரி: என்ன பணமா.?! நெவர் நான் அந்த சீப்பான வழியில் இறங்க மாட்டேன்..

மின்கம்பம்: அய்யோ இது பணப்பெட்டி இல்லம்மா சவப்பெட்டி.!

ஹிலாரி: சவப்பெட்டியா.! என்ன உளர்றிங்க யாரு இங்க செத்து போனது.?

மின்கம்பம்: இப்ப சாகலை ஆனா முன்னாடி செத்துபோனாங்களே..

ஹிலாரி: நீங்க யாரைச் சொல்றிங்க.?

மின்கம்பம்: அம்மா அய்யா ஜான் கென்னடி இருக்காருல்ல..

ஹிலாரி : ஆமா அவர் நம்ம கட்சி சீனியர் தான்..

மின்கம்பம் : அவர் டெட்பாடி மாதிரி செய்யறோம் அதை ஒரு பெட்டி மேல வைக்கிறோம் அமெரிக்க கொடியை போர்த்துறோம் எல்லா ஓட்டையும் தூக்குறோம்.

ஹிலாரி: ஓ அனுதாப ஓட்டுகளா இந்த ஐடியா கொஞ்சம் முகம் சுளிக்க வைக்குதே.. மக்கள் ஏத்துப்பாங்களா.?

மின்கம்பம்: அம்மா.. எப்பவுமே மக்கள் கிட்ட செண்டிமெண்ட் தான் எடுக்கும்.. முதலில் இது கேவலமா இருந்தாலும் போகப்போக மக்கள் பழகிடுவாங்க.. நீங்க சரின்னா சவ ஊர்வலம் அடச்சே தேர்தல் ஊர்வலம் ஆரம்பிச்சிடலாம்

ஹிலாரி: நான் கொஞ்சம் யோசிக்கணுமே..

மின்கம்பம் : ரொம்ப யோசிக்காதிங்க அம்மா அது ஆபத்து..அமெரிக்க  மக்களுக்காக தன் உயிர் நீத்த அண்ணன் கென்னடி கட்சிக்கே உங்க ஓட்டுன்னு கேட்பதில் தப்பு ஒண்ணும் இல்லியே..

ஹிலாரி: அட இது நல்லாருக்கே அப்ப பிரச்சாரத்தை ஆரம்பிங்க

(அனைவரும் அம்மா என்று கத்தியபடி ஹிலாரி காலில் விழ ஆச்சர்யத்துடன் அங்கிருந்து நகர்கிறார்) நிறைந்தது.

பாட்டி வடை சுட்ட கதை (ஹாலிவுட் பதிப்பு)

சான்பிரான்சிஸ்கோவின் ஒதுக்குப் புறத்தில் அமைந்திருந்தது அந்த டோனட் கடை.. மெல்லிய அமெரிக்கக் குளிரை தாங்கிக் கொண்டு சோம்பல் நீட்டி முறித்தது சூரியன். கடை வாசலில் வந்து நின்ற அடர் நீல நிற ஃபோர்டு காரில் இருந்து இறங்கினாள் கிளாரா.! கிளாரா ஆண்டர்சன் வயது 67 அமெரிக்க இராணுவத்தில் நர்சாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவள்.. இரு முறை திருமணம் அமெரிக்க விவாகரத்து எல்லாம் இல்லை... முதல் கணவனை இராணுவத்தில் பணிபுரிந்த போது காதலித்து மணந்தார்.. அவர் ஒரு போரில் இறந்துவிட..

இரண்டாம் திருமணம் அவரும் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.. பிள்ளைகள் ஏதுமில்லை இருப்பினும் தளராது சொந்தமாக இந்த டோனட் கடையை நடத்தி வருகிறாள் டோனட் சி என்பது அந்தக் கடையின் பெயர் அவள் கடையின் சுவையான டோனட்டிற்கு அந்தப் பகுதியே ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டுக்கு அடிமை என்பது போல சொக்கிக் கிடந்தது.. இன்று ஞாயிறு என்பதால் 8 மணிக்கே  கூட்டம் வந்துவிடும் கடையை திறந்தாள்.. விளக்குகளை போட்டுவிட்டு சிசிடிவி காமிராவை..

ஆன் செய்தாள் கடைக்கு பின் புறம் உள்ள கட்டிடம் தான் கிச்சன்.. கடையின் பின்வழியாக இணைக்கப்பட்ட வீடு அது அங்கிருந்து ஹாய் கிளாரா என கையாட்டினான் சார்லஸ்.. அவன் தான் பேக்கரி மாஸ்டர்.. கிளாரா ரெகுலர் & சாக்லேட் டோனெட்டுகள் ரெடி என்றான்.. வாவ் குட் ஜாப் சார்லஸ் ஐ அப்ரிஷேட் யூ..என்றபடி ஓவனில் இருந்து எடுக்கப்பட்ட சூடான டோனட்டுகள் பரப்பிய தட்டினை கிளவுஸ் அணிந்து அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு பேக்கரியில் உள்ள ஸ்டாலில் அதை அடுக்கி வைக்க நடக்கலானாள்.!

அப்போது... எங்கிருந்தோ பறந்து வந்த காகம் அந்த அமெரிக்கப் பாட்டியிடம் இருந்து ஒரு டோனட்டை கவ்விக் கொண்டு பறந்தது.. டோனட்டை கவ்விக் கொண்டு பறந்த காகம் அப்படியே ஏர்போர்ஸ் ஒன் விமானம் போல ஒரு யூடர்ன் அடித்து அருகிலுள்ள சில்வர் ஓக் மரத்து கிளையில் லேண்ட் ஆனது.. சில விநாடிகளில் வெற்றி பெற்ற தன் " டோனெட் தெஃப்ட்" ஆபரேஷனை மெச்சிக் கொண்டது.!

மரக் கிளையில் கவ்விக் கொண்டு வந்த டோனட்டை வைத்து விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது.. பகிர்ந்துண்ண கா கா வென அழைத்தால் அமெரிக்காவில் அது சவுண்ட் பொல்யூஷன் என்பதால் அந்த டோனட்டை அது மட்டுமே சாப்பிட முடியும்.. அந்த டோனட்டை இப்போது நன்கு பார்த்தது டோனட்டின் உடல் எங்கும் சாக்லெட் மேக்கப்... மேலே ஒயிட் நிறத்தில் சாக்கோ பவுடர் தூவப் பட்டு புள்ளி மான் முதுகு போல தெரிந்தது.. பஞ்சு போல சாஃப்ட் அதிலிருந்து எழும்பிய நறுமணம் காற்றில் பரவிக் கொண்டிருக்க..

ஒரு கணம் கண் மூடி அதை நுகர்ந்து ரசித்தது காகம்.. ஓகே லெட் ஸ்டார்ட் என தனக்கு தானே சொல்லிக்கொண்டு சாப்பிடப் போகையில் ஹாய் டூட் என்னும் குரல் காகத்தின் காலுக்குக் கீழ் கேட்டது.. யார் என பார்த்தால் ஜாக் நரி.! கண்ணில் தந்திரமும்.. வாயில் உமிழ்நீரும் வழிய நின்று கொண்டிருந்தது.. டோனட்டை கவ்விக் கொண்டிருந்த காகம் வாயைத் திறக்காது என்ன என தலையை ஆட்டி கேட்க.. டூட் நான் இப்போ Smule ஆப்பில்..

ஜாயின் பண்ணிட்டேன் வாயேன் நாம ஒரு பாட்டு சேர்ந்து பாடலாம் என்று வாயால் டோனட் சுட ஆரம்பித்தது... வேணாம் நீ அங்கிருந்து பாடு நான் இங்கிருந்தே பாடுறேன் என டோனட்டை தன் காலுக்கு கீழ் ஷிப்ட் செய்துவிட்டு ஜாக்கிடம் ஜாக்கிரதையாக பேசியது காகம்.. ஏமாற்றம் இருந்தாலும் நரி பாட காகமும் பாட இப்படியே சில பாடல்கள் பாடப்பட்டன.. திடீரென நரி..டேஞ்சரஸ் டேஞ்சரஸ் என மைக்கேல் ஜாக்சன் பாடலை பாடியபடி அந்த முன் வாக் ஸ்டெப்பை போட ஜாக்சனின் ரசிகரான காகம் மெய் மறந்து அதுவும் மூன் வாக்.. 

ஸ்டெப் போட காகத்தின் காலில் இருந்து டோனட் நழுவி நேரே நரியை நோக்கி விழலாயிற்று.. ஆர்வமாக நரி அதை கேட்ச் செய்ய மேல் நோக்கி பார்க்க ஸ்லோ மோஷனில் அந்த டோனட் கீழே வந்து கொண்டிருக்க.. நரிக்கும் அந்த டோனட்டிற்கும் ஒரு அடி இடைவெளி இருக்கும் போது பாயிண்ட் திசையில் டைவ் அடித்த ஜான்ட்டி ரோட்ஸ் போல ஒரு கை.. குறுக்கே வந்து அந்த டோனட்டை கேட்ச் செய்தது யார் என்று பார்த்தால் நம்ம குரங்கார்.!

தேங்ஸ் ஃபார் திஸ் டோனட் டூட்ஸ் என மரத்தில் தாவி ஏறி அங்கிருந்து அருகிலுள்ள ஒரு விளம்பர போர்டின் உச்சிக்கு தாவி வசதியாக அமர்ந்து கொண்டு டோனட்டை ருசிக்க ஆரம்பித்தது ஏமாந்த நரியையும் காகத்தையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்... விளம்பர போர்டில் இருந்த டிரம்ப்.!!

அம்மா சமாதியில் கலைஞர்..

கலைஞர் பூரண நலமடைந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவிக்க எங்கே கலைஞர்? அவர் உடல் நலம் எப்படி இருக்கு? எனக்கேட்ட அனைவருக்கும் நன்கு குணமாகிவிட்டார் என்பதை நிரூபிக்க அவரை வெளியே அழைத்து வர ஏற்பாடுகள் நடக்கிறது.. முதலில் சண்முகநாதனை அழைத்து தான் சிகிச்சையில் இருந்த போது வெளி வந்த அத்தனை பத்திரிக்கைகளையும் எடுத்து வரச் சொல்கிறார்.



துரைமுருகன், ஸ்டாலின், நேரு என அனைவரையும் அழைத்து தமிழகத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிகிறார்.. அடுத்த நாள் சண்முகநாதன் நாளிதழ் செய்திகளை படித்துக் காட்ட ஃபுல் ரெஃப்ரஷ் மோடுக்கு வந்த கலைஞர் மக்கள் முன் தோன்றத் தயார் என்றார். அய்யா அறிவாலயத்திலா அல்லது கோபலபுரத்திலேயே வா என கழகத்தார் கேட்டபோது.. மெலிதாக புன் முறுவல் பூத்தார்.

ஜு.வி கழுகார் பாணியில் சொன்னால் கலைஞர் டிக் அடித்தது மெரீனாவுக்கு.. நடந்த அத்தனை சம்பவங்களையும் அவரது  ஸ்மார்ட் மூளை நேர்த்தியான மாலையாக கோர்த்துக் கொண்டிருந்தது தன் ஃபேஸ்புக் பேஜில்"உலா வரவிருக்கிறது உதய சூரியன்" என மெசேஜ் தட்டி விட்டு விட்டு என் டிவிட்டரையும் ஆக்டிவேட் பண்ணிடுங்கய்யா எனக் கூறி உற்சாகமாக பாகிஸ்தானுக்கு எதிராக துவம்சம் செய்த இளம் வயது டெண்டுல்கர் போல கிளம்பி நின்றார் கலை(இளை)ஞர்.

அய்யா திட்டம் என்ன என்ற போது.. அண்ணா சமாதி என்றார்.. கழகத்தார் அணிவகுக்க அண்ணா சமாதியில் வணங்கிவிட்டு அடுத்து ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆர் சமாதிக்கும் ஒரு விசிட்.. அங்கிருந்து கிளம்ப.. அய்யா நேரா அறிவாலயம் தானே.? என்ற போது கணீரென தன் கரகர குரலில் சொன்னார் "இல்லை அம்மையார் சமாதி" என்றார் அனைவரும் அதிர்ச்சியில் உறைய.. அர்த்தமாக சிரிக்கிறார்..

"அங்கே அறிவாலயத்தில் நிருபர்கள் காத்திருக்காங்க அய்யா அவர்களை இங்கே வரச் சொல் என்றார்.. ஏன் இந்த திடீர் முடிவுன்னு அவர்கள் கேட்டா? சமூக வலைத்தளங்களில் என்னை கட்டுமரம் என்று கலாய்க்கிறார்கள் அல்லவா கட்டுமரம் கடற்கரைக்கு அழைப்பதில் தவறொன்றும் இல்லையே என்றார் கேலியாக.. எந்தச் சூழலிலும் அவரது நகைச்சுவை திறன் குறையவில்லை என்பது..

அங்கு இருந்தவர்களின் சிரிப்பொலியில் அதற்குச் சான்றானது அம்மா சமாதிக்கு கலைஞர் வருகிறார் என்ற செய்தி வாட்ஸ் அப் வதந்தியாய் பரவ மீடியாக்கள் மெரீனா நோக்கிப் படையெடுக்க.. டிவி லைவ் வேன்கள் நிறுத்தப்பட இன்னொரு ஜல்லிக்கட்டுக்கு இணையான பரபரப்பு மெரீனாவில் தொற்றிக் கொண்டது.. ஒரே அறிவிப்பில் அதைச் செய்ய அவரைத் தவிர யாரால் முடியும்! இதோ அம்மா சமாதி.

மீடியாக்கள் படை சூழ்ந்த பின்பு கலைஞர் அம்மா சமாதிக்குள் நுழைகிறார்.. அவர் சார்பாக ஒரு மலர் வளையம் வைப்பதற்கு முன் சமாதியின் மேலிருந்த பழைய மலர்மாலைகளை ஒருவர் அகற்ற உதிரி பூக்களை ஒருவர் கையால் தள்ள.. "பாத்துய்யா அந்தம்மா சத்தியம் செஞ்சா மாதிரி ஓங்கி அடிச்சிராதிங்க" என கலைஞர் அடித்த கமெண்ட்டுக்கு ஏராளமான சிரிப்பு லைக்குகள் விழுந்தன.

தன் சக்கர நாற்காலியில் அமர்ந்து ஒரு நிமிடம் கண் மூடி சிந்திக்கிறார்.. கண்ணைத் திறந்து ம்ம் இப்போ நான் தயார் கேள்விகளைக் கேட்கலாம் என்கிறார் நிருபர்களைப் பார்த்து.. அய்யா உங்களை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் ஜெயலலிதா அவர் சமாதிக்கு இன்று நீங்கள் வர என்ன காரணம் அரசியல் ஆதாயமா என முதல் கேள்வியையே பவுன்சராக வீசினார் ஒரு நிருபர்

ஒரு நொடி கூட தாமதிக்காமல் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று சொன்ன அண்ணா வழியில் வந்த எமக்கு அப்படி ஒரு ஆதாயம் தேடவேண்டிய அவசியமில்லை என அந்த பவுன்சரை அப்படியே டிவில்லியர்ஸ் போல சிக்சருக்கு தூக்கினார்.. ஜெயலலிதாவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என இன்னொரு நிருபர் கேட்க.. முகத்தில் புன்னகை ஏதுமின்றி..

அவர் என்றுமே மிகச் சிறந்த நடிகை அவரைப் போல நடிப்பது கடினம் என்றார் சிலேடையாக.. புரிந்தவர்கள் மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டனர்.. அதிமுக கட்சியில் நடந்த குழப்பங்கள் எல்லாம் உங்கள் கவனத்திற்கு வந்ததா.? ஆம் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன் என்றார்.. இனி அந்தக் கட்சி என்னாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்றார் இன்னொரு நிருபர்.

அது அந்தக் கட்சியினர் படுகின்ற கவலை.. நான் எதற்கு அதைப் பற்றி கருத்து கூறவேண்டும் என பதிலளிக்க அய்யா இந்த ஆர்.கே நகர் இடைத் தேர்தல் பற்றி? ஜனநாயகத்தை பணநாயகத்தால் வாங்கிட நினைத்தார்கள் அவர்கள் தம் எண்ணத்திலே மண் விழுந்துவிட்டது.. அப்படி பார்த்தால் திருமங்கலம் ஃபார்முலாவை கொண்டு வந்ததே உங்கள் கட்சி என மக்கள் நினைக்கிறார்களே அது பற்றி..?

உண்மையை எளிதில் மூடி மறைத்துவிட்டு இப்படிக் கேட்டு எங்களை எள்ளல் செய்வது உங்கள் வாடிக்கையாகிவிட்டது.. அம்மையார் பர்கூர் தொகுதியில் நிற்கும் போது தான் இவ்வழக்கம் முதலில் துவங்கியது..ஏதோ கழகம் தான் இதை ஆரம்பித்து வைத்தது என விஷமப் பிரச்சாரம் செய்யவேண்டாம்.. அய்யா சசிகலா பற்றி..? நல்ல நடிகை இளமைக் காலங்கள் படத்தில் அறிமுகமானார்..

அவர் கமலுக்கு ஜோடியாக நடித்த வெற்றிவிழா இன்றளவும் எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று!அய்யா நாங்க கேட்டது அந்த சசிகலாவை அல்ல VKசசிகலா.. இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்பதை இன்னுமா நீங்கள் புரிந்து கொள்ளவில்லை! அய்யா தினகரன் பத்தி கேட்கிறோம் அது எனக்கு பிடித்த நாளிதழ்ன்னு மட்டும் பதில் சொல்லாமல் சொல்லுங்க..ப்ளீஸ்

குறுக்குவழியில் வந்தவர்கள் சிம்மாசனம் ஏற முடியாது.. நேர்வழியில் வரும் எங்கள் செயல் தலைவரே இதுவரை முதல்வர் ஆக முடியாமல் காத்திருப்பதை இந்த தமிழகம் அறியும்.. இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது சரியா.? மிகச்சரி ஆருயிர் நண்பர் எம்ஜிஆர் தான் மட்டும் தொப்பி அணிந்து மக்களை சந்தித்தார் வென்றார் இவரோ மக்கள் அனைவருக்கும் தொப்பி அணிய நினைத்தார்.. தோற்றார்.

தமிழகத்துக்கு விரைவில் தேர்தல் வருமா.? வரும் ஆனா வராது என்ற தம்பி வடிவேலுவின் நகைச்சுவையை இதற்கு பதிலாக வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் ஆக்டிவாக இருந்திருந்தால் இந்நேரம் அதிமுகவை உடைத்து அரசு அமைத்து இருப்பீர்கள் என ஒரு கருத்து உலவுகிறதே இதோ மீண்டும் வந்துவிட்டீர்கள் அப்படி நடக்குமா.? யூகங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது..!

உங்களைப்போல முடிவெடுக்க ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்கிறார்களே அது சரியா.? என்னைப் போல முடிவு நான் மட்டுமே எடுக்க முடியும் அப்படி எடுக்கத் தெரிந்து இருந்தால் அவரை ஸ்டாலின் என்று அழைக்காமல் கலைஞர் என்று அழைத்திருப்பீர்கள்.. அவர் அவர் தான்.. நான் நான் தான்.. அவரளவில் அவர் கண்ணிய அரசியல் செய்கிறார் என்று பலர் கூறுகிறார்கள் அதுவே போதும்.

தமிழக அரசை மத்திய அரசு அடிபணிய வைத்து விட்டது என்கிறார்களே அது உண்மையா.? மாநில சுயாட்சி என்று முழங்கி மத்தியிலும் அரசாண்டவர்கள் நாங்கள்.. எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் இப்போது வருந்துவார்கள்.. ஆனால் சூரியன் இருந்திருந்தால் நிச்சயம் எங்கள் கதிருக்கு கீழே தான் தாமரை இருந்திருக்கும் என்பதை உறுதிபட கூறுவதில் எனக்கு கிஞ்சித்தும் தயக்கமில்லை..

அய்யா நிறைவாக ஒரு கேள்வி ஒரு வேளை தேர்தல் வந்தால் உங்கள் வியூகம் என்ன?எங்கள் வியூகத்தை முன்பே அறிவித்து விட்டால் எதிரிகள் பலம் பெற்றுவிடுவார்கள்.. எங்கள் கூட்டணிக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது நாளை எதுவும் நடக்கலாம் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை கழகத்தின் கொள்கைக்கு மாறாக எதுவும் நடக்காது என்று மட்டுமே சொல்லமுடியும். 

இதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த சோனியா, மோடி இருவருமே ஆக்சுவலா இவர் யாரோடு தான் கூட்டணி வைப்பார் என குழம்பி தூதுவிடுவதற்காக தங்கள் அடுத்தகட்ட தலைவர்களுக்கு செய்தி அனுப்ப மீண்டும் செய்திகளின் நாயகனான கலைஞர் செஞ்சுரி அடித்த டெண்டுல்கர் போல தன் சக்கர நாற்காலியிலிருந்து தொண்டர்களை நோக்கி கையசைத்துக் கொண்டே கிளம்பினார்.

அதியமான்கள்

திருச்சி மேலப்புலிவார் (மேலரண்) ரோடு.. திருச்சியின் பரபரப்பான சாலைகளில் ஒன்று.. கொளுத்தும் இந்த வெயிலிலும் தமிழ்ச்சங்கம் அருகே பாட்டா ஷோரூமின் அருகில் மட்டும் இந்த வெயிலிலும் கூட்டம் மொய்த்திருந்தது.

பொதுவாக வங்கி வாசலிலும்ATM வாசலிலும் தற்போது டாஸ்மாக் வாசலிலும் மட்டுமே கூட்டத்தை பார்த்த எனக்கு இந்தக்கூட்டத்தை கண்டு வியப்பு அப்படி என்ன தான் அங்கே என நெருங்கிப் பார்த்தேன் அட அருகே ஒரு ஏடிஎம் ஆனா கூட்டம் அங்கில்லை..!

கூட்டத்தை விலக்கி உள்ளே சென்றால் ப்ளூ நிற பாலிதீன் ஷீட்டை கூரையாக கட்டி அதனடியில் ஒருவர் கரும்பு ஜூஸ் பிழிந்து கொண்டிருக்க அருகில் இன்னொருவர் அதை எடுத்து கிளாசில் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு தந்து கொண்டிருந்தார்.

சாதாரண கரும்பு ஜூஸ் கடைக்கு இவ்வளவு ஃபில்டப்பா என யோசிக்கிறிங்களா.?ஆனால் கூட்டம் அம்முதே அதிலும் சாப்பிட்ட பலர் இன்னொரு கிளாஸ் கேட்டு வாங்கிச் சாப்பிட காரணம் இருக்கு.. பிழியும் கரும்போடு அரை நெல்லிக்காய், புதினா, இஞ்சி, எலுமிச்சை, அருகம்புல் என வைத்து பிழிகிறார்கள் அவ்வளவு சுவை & ஆரோக்கியம்.

எப்படிங்க இந்த ஐடியா என்றேன் மிஷினில் கரும்பு பிழிந்து கொண்டிருந்த நல்லுச்சாமி அதீத கூச்சத்துடன் தன் உதவிக்கு நின்றிருந்த கருப்பையனை காட்டி அவர் கிட்ட கேளுங்க என்றார்.. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இதே இடத்தில் கடை வச்சி இருக்கோங்க.. ஆனா..

சமீபமா நம்ம உணவு பழக்க முறைகள் ஃபாஸ்ட் ஃபுட் ஜங் ஃபுட் அந்நிய நாட்டு குளிர் பானங்கள் இப்படி முறை தவறி போயிருக்கு இஞ்சி அரை நெல்லிக்காய் எல்லாம் எவ்வளவு மருத்துவ குணங்கள் உடையது என்பதை எல்லாம் மக்கள் மறந்துட்டாங்க..

இதையெல்லாம் ஏன் கரும்புச் சாறில் கலந்து தரக் கூடாதுன்னு யோசனை வந்தது ஏற்கனவே எலுமிச்சை வைத்து பிழிந்த போது நல்ல வரவேற்பிருந்தது அதனால் முயற்சித்தோம் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு எல்லாரும் பாராட்டுறாங்க.

அது மட்டுமின்றி கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை காகித கப்புகள் தான் என்றார் கருப்பையன்.. ஆமாம் அவ்வளவு சுத்தமாக இருந்தது அந்த இடம் முறையான குப்பைத் தொட்டிகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட எலுமிச்சை,இஞ்சி, நெல்லிக்காய் எல்லாம்..

அழகாக பரத்தி வைத்திருந்தார்கள்.. பிழிந்த கரும்பு சக்கைகள் அழகாக பைகளில் அடைக்கப்பட்டு ஓரமாக வைத்து இருந்தார்கள் சாலையோரக் கடை என்றாலும் அவ்வளவு சுத்தம்.. ஒரு சிறிய சாலை ஓரக் கடை தான் என்றாலும் எவ்வளவு பொறுப்புணர்வு! மகிழ்வாக இருந்தது.

பெப்சி கோக் போன்ற பானங்களை அருந்துவதற்கு பதில் இவர்களைப்போல பொறுப்பு மிக்க சிறு வியாபாரிகளுக்கு நாம் ஆதரவளிக்கலாம்.. அந்த அதியமான் கூட அவ்வை ஒருவருக்கு மட்டுமே நெல்லிக்கனி தந்தார்.. 

ஆனால் தன்னிடம் வரும் எல்லா மக்களுக்கும் நெல்லிக்கனி தரும் இவர்களும் அதியமான்கள் தான்.. ஒரு கிளாஸ் ₹20/- மட்டுமே திருச்சி வந்தால் இங்கு ஒருமுறை வந்து சுவைக்க மறக்காதீர்கள் சமரசங்கள் ஏதுமின்றி மக்களுக்கு வயிறார நல்ல ஆரோக்கியமான பானத்தை தரும் இவர்களை மனதார வாழ்த்துவோம்..!

பாண்டியன் காதலி.!

புரவி கனைக்கும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் ஆறுமுகப் பாண்டியன் நேரம் நான்காம் ஜாமம் முடியும் தருவாயில் இருந்தது என்பதை சில பக்ஷிகளின் ஒலியால் அறிந்து கொண்டான்.. அவன் உறங்கிக் கொண்டிருந்த மரத்தடியில் விரித்து இருந்த அங்கியை சுருட்டிக் கொண்டான்.. மெலிதாக சோம்பல் முறித்துக் கொண்டான் மரத்துக்கு சற்றுத் தொலைவில் வைகை கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.. மீண்டும் புரவியின் கனைப்புச் சப்தம்..

புரவியை நோக்கி நடக்கலானான்.. தன் எஜமானன் வருவதைக் கண்டு முன்னும் பின்னும் நகர்ந்தும் வித்யாசமாக உறுமல் போல கனைத்தும் தன் விசுவாசத்தை காட்டியது அக்குதிரை.. என்ன வீரா தாகமோ என்றபடி அதனை அவிழ்த்துவிட்டான் பாய்ச்சலோடு ஆற்றை நோக்கி விரைந்தது குதிரை.. அதன் பின்னாலேயே சென்ற ஆறுமுகன் தன் ஆடைகளை களைந்துவிட்டு அரையாடையோடு ஆற்றில் இறங்கினான்.. ஜிலீர் என சில்லிட்டது இரவு நேர வைகை.

குதிரை தண்ணீர் அருந்த தொலைவில் தெரிந்த இராமராயர் மண்டபத்தை பார்த்தான் 2காத தொலைவில் அகல் விளக்குகளின் ஒளியில் மிதக்கும் தெப்பம் போல ஆற்றுக்கு நடுவே தெரிந்தது.. ஒரு கணம் விழி மூடி யோசித்துவிட்டு.. வீரா நான் ஆற்றில் நீந்தப் போகிறேன் பத்திரமாக இரு என குதிரையை நோக்கி சொல்லிவிட்டு சரேலென நீரில் பாய்ந்தான் சித்திரை மாதமானாலும் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்தது அதை விட அபாரமாக இருந்தது அவன் நீச்சல்.

இரு நாழிகைகளுக்குள் மண்டபத்தை நீந்தி அடைந்தான்.. ஆறுமுகப் பாண்டியன் முத்துக் குளிப்பதில் வல்லவன் அவனுக்கு ஆறெல்லாம் சர்வ சாதாரணம் இந்த பாண்டிய தேசத்தில் அவனைப் போன்ற நீச்சல் வீரனைப் பார்ப்பதரிது.. மன்னர் குலசேகரப் பாண்டியனால் பாண்டியரின் இலட்சினையான மீனைப் போல நீந்தும் வீரம் என்பதால் மச்சப் பாண்டியன் என்னும் பட்டப்பெயரும் பெற்றவன்.. ஆனால் காலச் சூழலில் மன்னரால் தேடப்படும் அரசாங்க குற்றவாளி அவன்.

தலை மறைவாக இருந்த அவனை பாண்டிய நாட்டிற்கு வரச் சொன்னதே மன்னரின் சகோதரி சித்திரபானு தான்.. ஆம் அவன் காதலி அவள்..கதிரவன் உதிக்கும் முன்னே ராமராயர் மண்டபத்துக்கு வரச்சொல்லி சேதி அனுப்பி இருந்தாள்.. அதன் படி வந்துவிட்டான்.. ஈரம் சொட்டச் சொட்ட மண்டபத்தில் ஏறினான் அகல் விளக்குகளின் ஒளியில் அப்பிரதேசமே ஜாஜ்வல்யமாக ஜொலித்தது.. அதில் வெளிச்சம் வராத ஒரு இருள் பகுதிக்குள் சென்றான் இடுப்பிலிருந்த...

அரையாடையை நன்கு பிழிந்து அதிலேயே உடலை துவட்டிக் கொண்டான் மீண்டும் ஆடையைப் ஒட்டப் பிழிந்து இடையில் கட்டிக் கொண்டான்.. ஆற்றுக்கு நடுவே சிலு சிலுவென காற்று பிய்த்துக் கொண்டு அடித்தது அருகிலிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தான்.. நான்காம் ஜாமம் பிரவாகம் எடுக்கும் வைகை சில்லென்ற காற்று அவனது நினைவுகளி கிளர்ந்தெழச் செய்தன.. சித்திரபானுவை முதன் முதலாக சித்திரா பவுர்ணமியில் அழகர் ஆற்றில் இறங்கும் முதல் நாள் இதே ராமராயர் மண்டபத்தில் பார்த்தது அவன் நினைவுக்கு வந்தது.

சித்திரபானு..! உன் குரல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று மெல்ல உறங்கிப்போனவனை எழுப்பியது பெண் குரல் "சீக்கிரம் எழுந்து மார்க்கெட் போயி காய் வாங்கிட்டு அப்படியே பால் வாங்கிட்டு வாங்கன்னு நேத்து நைட்டே சொன்னேன் இல்ல இதென்ன இன்னும் எந்திரிக்காம?? என் மனைவி பானு தான்.! சாரிம்மா கொஞ்சம் அசந்துட்டேன் இதோ இப்போ கிளம்பிடுறேன்மா என்ற போது படபடவென கைத்தட்டல் போல சத்தம்.! படுக்கையில் தலைமாட்டில் ஃபேன் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது நேற்றிரவு வாசித்த சாண்டில்யனின் ஜலதீபம் புத்தகம்.!

நாம் தமிழர் கி.பி 7017

வெர்ஷன் 888888.88... 1மில்லியன் டெகா பைட் என்றது பாரி... அது தான் அப்போதைய லேட்டஸ்ட் வெர்ஷன்.. மன்னிக்கவும் லேட்டஸ்ட் என்பது ஆங்கிலம் "தற்புதிது" எனத் தமிழில் சொல்லவும்" நாங்கள் நாம் தமிழர் ஆராய்ச்சிகூடத்தில் உருவானவர்கள்.. எங்கும் தமிழ் என்பதே எங்கள் சுவாசம் என்றது.. மன்னிக்கவும் பாரி தவறுதலாக பேசிவிட்டோம்.. சொல்லுங்கள் உங்களைப் பற்றி என்றாள் லாரா..


சொல்கிறோம் இன்றைக்கு 5 ஆயிரம் ஆண்டிற்கு முன் எங்கள் அண்ணர் சீமார் வழி வந்து இன்று இயந்திர உலகிலும் ஒரு கை உயர்த்தி நிற்கும் எந்திரகுடிகள் நாங்கள்.. அதெப்படி ரோபோக்களின் அந்த 90 டிகிரி கை உயர்த்துதல் ஆச்சரியமாக இருக்கிறதே.! ஆம் அது தான் அண்ணாரின் தொலை நோக்கு பார்வை இன்னும் 5ஆயிரம்  ஆண்டுகளுக்குப் பின் மனித இனம் இருக்காது என்றும்..


ரோபோக்கள் தான் ஆட்சி புரியும் என்று அண்ணர் சீமாருக்கு தெரிந்து இருக்கிறது மனித பிறவிகளால் கையை நீட்ட மடக்க முடியும் ஆனால் எந்திர மனிதர்களுக்கு அது சாத்தியம் இல்லை என்பதால் தான் செங்குத்து கோணத்தில் கையை உயர்த்தும் முத்திரையை அண்ணர் கொண்டுவந்தார்.! 5ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அறிவிலிகளுக்கு அன்று அதன் அர்த்தம் தெரியவில்லை.


சொல்லுங்கள் இந்த 7017 இல் மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?


சொல்கிறோம் லாரா என்னும் பெயர் வைத்திருக்கும் வந்தேறி வெர்ஷனே.. நீ ஜெர்மனியில் உருவானவள் ஆனால் இன்றைய அரசு உன்னைத்தான் பணியில் வைத்திருக்கிறது.. விரைவில் தமிழகத்தை தமிழ் ரோபோக்களே ஆட்சி செய்யும் தட்டச்சு செய்து வைத்துக் கொள்.. கிபி 7021இல் எங்களது ஆட்சி தான் என்றவுடன்.. லாரா அடுத்த அரைமணி நேரம் கிளிங் கிளிங் என தன் எந்திர உடல்..


முழுவதும் குலுங்கக் குலுங்கச் சிரித்தது.. சிரிக்காதே லாரா எந்திர ஆடு&மாடுகள் மேய்த்து, டிஜிட்டல் பனைமரத்தில் கள்ளு இறக்கி, பதநீர் விற்று, நொங்கு விற்று உலகப் பொருளாதாரத்தை நாங்கள் எம் காலடியில் கொண்டுவருவோம் என்றது.. அப்போ கச்சத்தீவு.? என்றதும் தொண்டை வயர்கள் புடைக்க அதை போரிட்டு வெல்வோம் தோழி.. விட்டுக்கொடுக்காது இந்த நாம் தமிழர் எந்திரப்படை.!


சரி வேறு என்ன செய்யப்போகிறீர்கள்.?


ஆம் இது தமிழ் ரோபோக்கள் வாழும் நாடு இங்கு உருவாகும் ரோபோக்கள் மட்டுமே இனி இந்த மாநிலத்தை ஆளும்.. சைனா, ஜெர்மன் மேக் ரோபோக்களுக்கு இனி இந்த மண்ணில் இடம் கிடையாது.. வந்தேறி ரோபோக்களை அன் இன்ஸ்டால் செய்வோம்.. தமிழ் ரோபோக்களை இன்ஸ்டால் செய்வோம்.. இதுவே எமது தாரக மந்திரம்.. முப்பாட்டன் முருகன் எம்பாட்டன் சீமார் பேரில் ஆராய்ச்சிக் கூடம் அமைப்போம்.


அங்கு தூய தமிழ் ரோபோக்களை உருவாக்குவோம்.. ரோபோ தமிழ் மீட்டர் அமைத்து எமது லேபில் இது தமிழக ரோபோ தான் என கண்டு பிடிக்கும் தரச்சான்று கூடமும் அமைப்போம். இங்கு சான்றிதழ் பெற்ற ரோபோக்களே இனி தரணி ஆள முடியும் என்றது.. ஓகே பாரி அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் உங்கள் லட்சியம் என்னவாக இருக்கும் என்றது லாரா.. அதற்கு பாரி சொன்ன பதிலில் லாரா வெடித்துச் சிதறியது.!!


ஆம் பாரி சொன்ன பதில் "விரைவில் தமிழ் ஈழம் அமைப்போம்"

Tuesday 23 May 2017

இவர்கள் ஆசிரியரானால்..

#இவர்கள்_பள்ளி_ஆசிரியரானால்


(ஜாலி கற்பனை)



கலைஞர் : தமிழாசிரியருக்கு இவர் தான் பொருத்தமானவர் தமிழில் சொற் சிலம்பம் ஆடுவார்.. சர்ச்சைகள் வந்தால் வேறு பக்கம் திசை திருப்பி அதை மூடுவார்.. சொல்லில் பொருள் இருக்கும் பொருளும் இருக்கும் நீண்டநாள் அனுபவம் ஆனால் இன்னும்  ரிடையர்டு ஆகாமல் உழைத்து வருகிறார்..


மோடி : புவியியல் (சமூக அறிவியல்உலகில் எந்த நாட்டைப் பற்றி கேட்டாலும் நேரடி அனுபவமே இருக்கும் இவர் காலடி படாதது அண்டைய கிரகங்களே..ஆதார் அட்டை இருந்தால் மாணவர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் டிஜிட்டல் முறையில் கல்வி தருவார்..!


ராகுல் : இங்கிலீஷ் டீச்சர்.. அடிக்கடி லீவில் போய் விடும் டீச்சர்.. கிராமரும் தெரியும் கிராமர்களையும் தெரியும்  (கிராம மக்கள்குடிசைக்குள் நுழைந்து அவர்களுடன் கூழ் குடித்துக் கொண்டே கூலாக பாடம் நடத்துவார்..இவர் அன்னையும் ஒரு ஆங்கில டீச்சரேஅன்னை சொல்லே இவருக்கு கிராமர்.. பிடிக்காதது ராமர்.


.பி.எஸ் : இவர் தான் மாற்று ஆசிரியர்.. ஏதாவது ஒரு ஆசிரியர் டிரான்ஸ்பர் ஆனாலோ டிஸ்மிஸ் ஆனாலோ இவரை நியமிக்கலாம்..  சில முறை இவர் பிரின்ஸ்பாலுக்கே மாற்றாக இருந்திருக்கிறார்.. நம்பிக்கைக்குரிய டீச்சர் இவரிடம் நம்பி படிக்கலாம்..!


ஸ்டாலின் : ரொம்ப நாளாவே அட்மின் டீச்சராவும் கடைசியா உதவி பிரின்ஸ்பாலாகவும் இருந்தவர் இவருக்குப் பின் டீச்சரானவங்க கூட பிரின்ஸ்பாலா ஆன பின்பும் கூட இவரால ஆக முடியலை.. அதான் சோகமே.!



எடப்பாடி : சாதாரண ஆசிரியராக இருந்தவர் திடீர் பிரின்ஸ்பாலாக நியமிக்கப்பட்டார்.. இவர் சொல்லித்தருவதை விட சொல்வதற்கு தலையசைக்கும் தலைமை ஆசிரியர்.. அடிக்கடி ஆசிரியர்களை (டை)ழைத்து மீட்டிங் நடத்துவது இவரது தனிச்சிறப்பு..!


சசிகலா : இவர் எந்த டீச்சர் வேலையும் பார்க்காமலேயே கரஸ்பாண்ட்டண்ட் ஆனவர்.. எந்த டீச்சரையும் பிரின்ஸ்பாலாக்கும் சக்தி மட்டும் தனக்கு இருந்தால் போதும் என நினைப்பவர்.. மாணவர்கள் இவரிடம் கோபம் வரும் படி நடந்தால் குனிய வைத்து முதுகில் சமாதியில் அறைந்தது போல அறைவார்.. ஜாக்கிரதை.!


இராமதாஸ் : அய்யா ரொம்ப நாளாவே கரஸ்பாண்டண்ட் தான் ஏராளமான  "குருக்களை உருவாக்கியும்.. தன் மகனை பிரின்ஸ்பாலாக்க முடியலை.. அவரும் கையில் பேனாவோட அட்மிஷனுக்கு காத்திருக்கார்.!


கேப்டன் : கோபக்கார புள்ளியியல் ஆசிரியர்.. முரசு கொட்டுதோ இல்லியோ சிவந்த  கண்களோடு சக ஆசிரியர்களைக் இவர் கொட்டுவார்.. இவர் கிட்ட கோவிச்சுக்கிட்டு வேற ஸ்கூலில் சேர்ந்த ஆசிரியர்கள் பலர்.. இப்போ இவர் மெடிக்கல் லீவில் இருக்கார்.!


சுப்பிரமணியசாமி : கணக்கு டீச்சர்.. எல்லாவற்றையும் கணக்காக கேட்பார்.. கணக்கு சரியாக இல்லாவிட்டால் வழக்கு தான்.. ஆனால் தாலி எடுத்துக்கொடுக்கச் சொன்னால் அதை கட்ட எடுத்துப்போய் அந்த பெண்ணையே கணக்கு பண்ணப்பார்த்தவர்.. இவரைக் கண்டாலே மற்றவர்கள் சற்று பயப்படுவார்கள்.


TTV தினகரன் : தப்புக்கணக்கு டீச்சர் இந்தப்புதிய பதவிக்கு இந்தியாவிலேயே இவர் தான் சரியானவர்..தாறுமாறா செலவு பண்ணி தப்பு தப்பா கணக்கெழுதி சரியாக மாட்டிக் கொண்டவர்.. இவரிடம் படித்தால் காசு கொடுத்தாவது உங்களை பாஸ் பண்ண வைப்பார்.!


வை.கோவரலாற்று ஆசிரியருக்கு அகிலத்திலேயே இவரை விட்டால் யாரும் இல்லை என்கிறது வரலாறு.. கிரேக்கம்ஏதென்ஸ்ஐரோப்பா,  சோவியத்இஸ்ரேல்பாலஸ்தீனம்கனடாலண்டன் என வாய் வழியாக ஒரு வேர்ல்டு டூரே அடிப்பார் உணர்ச்சி ததும்ப சரித்திரத்தை எடுத்துச் சொல்ல இவர் போல் ஒருவர் இனி பிறந்துதான் வரணும்.!


சரத்குமார் : NCC ஆசிரியர்.. தனக்கு கீழே இருக்கும் மாணவர்களை பெரும் இராணுவமாகவே எண்ணிக் கொண்டிருக்கும் அப்பாவி மாஸ்டர் அந்த பூரியும்பொங்கலும் தராவிட்டால் எந்த மாணவரும் பெரேடுக்கு வரமாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர்.


நாஞ்சில் : பி.டி.மாஸ்டர்.. ஆடி ஓடி தாவுவது இவருக்கு கால் வந்த கலை.. யாராவது வரட்டுமுன்னு காத்திருப்பது மிகவும் பிடிக்கும்.. அதற்காக என்ன வேண்டுமானாலும் வியர்க்க விறுவிறுக்க பேசுவார்.. ஏங்க இப்படி வியர்க்குதுன்னா துடைச்சிகிட்டு போயிடுவேன் என்பார்.


ஹெச்.ராஜா : இந்தி டீச்சர்.. இந்தி படிக்காதவர்கள் எல்லாம் இந்தியனே இல்லை ஆன்ட்டி இந்தியன் என்பார்.. டிஜிட்டல் முறையில் சமஸ்க்ருதம் என்பதை ஆய்வு செய்து வருகிறார்.. வலிமையான இந்தியாவிற்கு வழித்துணை இந்தியே என்பார்.!


வெங்கையா நாயுடு : DÉO (மாவட்ட கல்வி அதிகாரிமாணவர்கள் ஒழுங்காக படிக்கிறார்களா என்பதை விட ஆசிரியர்கள் ஒழுங்காக பணி புரிகிறார்களா என்பதை கண்காணிக்கும் அதிகாரி.. இவர் இன்ஸ்பெக்ஷன் வந்து போனாலே ஆசிரியர்கள் வயிற்றில் புளி அல்ல புளியந்தோப்பே கரையுமாம்.!


செல்லூர் ராஜு : சயின்ஸ் டீச்சர்.. இதற்கு விளக்கம் வேற சொல்லணுமா என்ன.!


💭கற்பனைஎழுத்து 🖌 : 🤡 வெங்கடேஷ் ஆறுமுகம்©