Saturday 26 September 2015

மணி மாமா

#தாய்மாமன்_சீராட்டு

வெங்கடேசா... நம்ம மணி மாமாவுக்கு சீரியஸ், இன்னும் 3 நாட்கள் தான்... டாக்டர்கள் கெடு விதிச்சிட்டாங்க எல்லாரும் வந்து பார்த்துட்டு போறாங்க நீயும் வாடா.. சேலத்திலிருந்து தம்பியின் அலைபேசிக் குரல் என்னை அசைத்தது.. மாமாவைக் காணப் புறப்பட்டேன்.. காரில் விரையும் போது பயணத்தில் தன் சிறகினை விரித்தன பழம் நினைவுகள்.

மணி வெங்கட்ராமன் என்கிற மணி மாமா.. என் தாத்தா பாட்டிக்கு 8 குழந்தைகள்.. மிகச்சரியாக 4 ஆண்கள் 4 பெண்கள்... என் தாயார் தான் மூத்தவர் அதற்கு அடுத்தவர் மணி மாமா.. என் அம்மா ஒருவர் தான் அவருக்கு மூத்தவர்... மற்றபடி வீட்டில் மற்ற அறுவருக்கும் மூத்தவர் மாமா.

என் அம்மாவுக்கு தலைமகன் நான்.. அந்த வீட்டின் முதல் பேரன்.. இந்த ஒரு கோட்டாவில் நான் கொஞ்சம் எல்லாருக்கும் ஸ்பெஷல்.. மாமாவின் தோள்களில் குழந்தையான நான் செவ்வாய்பேட்டைக்கும் நாராயண நகருக்கும் மாமாவின் தோள் சர்வீசில் வாராவாரம் டிரிப் அடிப்பதுண்டு.

என்னை போல ஒரு கனத்த குழந்தையை ஒரு 10 நிமிடம் சுமப்பதே கடினம் ஆனால் என்னை சுகமான சுமையாய் கையில்,தோளில்,முதுகில், சுமந்தவர் மாமா...தாத்தாவின் விடாப்பிடி குணமும், பாட்டியின் ஹ்யூமர் சென்சும், இன்ன பிறசொந்தங்களின் ஒரு சில ஜீன்களும் எனக்குள் காக்டெயிலாக இருந்ததாம்.

இது அடிக்கடி மாமா என்னிடம் சொல்லும் வார்த்தை.. தாத்தாவின் அப்பா பெயர் தான் என் பெயர்.. என்னில் அவரையும் கண்டதாக தாத்தா சொல்லுவாராம்.. தாத்தா இறக்கும்போது எனக்கு 4 வயது தான்.. அவர்கள் சிலாகித்தது பற்றி எனக்கேதும் தெரியாது.. மாமா தான் சொல்லுவார்.

சிறு வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறியவர் 4ஆண்டுகள் கழித்துதான் திரும்பினார்.. அதாவது என் 4 வயதில் காணாமல் போன மாமா என் 8 வயதில் தான் திரும்ப காணக்கிடைத்தார். அதன் பிறகு இன்றுவரை அவர் எனக்குள் நிரம்பிய தருணங்கள் ஏராளம்..ஏராளம்..

கொஞ்சம் சாயலில் இளவயது நடிகர் விஜயகுமார் போல இருப்பார்..கனத்த சரீரம், நெற்றி நிறைய விபூதி நடுவில் குங்குமம் சந்தனம், வெள்ளை வேட்டி சட்டை, காதில் வெண்ணிறக்கல் ஜொலிக்கும் கடுக்கன். வலது கையில் ஃபீவேர் லீபோ கருப்பு ஸ்டிராப் வாட்ச் கொஞ்சம் ஜவ்வாது மணக்கும்.

கணீர் குரல்.. பஜனை பாடல்கள் பக்திப்பாடல்கள் பாடுவதில் நல்ல குரல் வளம்... அருமையாக மிருதங்கம் வாசிப்பார்.. கேள்வி ஞானம் மட்டுமே அபார நினைவுத்திறன்.. (இதிலும் நான் அவரைப்போல என்பாள் பாட்டி) மாமாவிடம் பேசிப் பார்த்தவர்கள் பொதுவாக ஒன்று சொல்லுவதுண்டு..

மணியிடம் பேசி ஜெயித்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய வக்கீலையும் வென்றுவிடலாம் என்று.. தர்க்கம், குதர்க்கம், எள்ளல், நகைச்சுவை, எதார்த்தம் என மாமா பேசுவதை பல முறைக் கேட்டதுண்டு.. தன் தரப்பை அழகாக சொல்லி அடுக்கடுக்காக வாதங்களை முன் வைப்பார்.

சில நேரங்களில் எதிரில் வாதாடுபவரே ஆவென்று ரசித்து கேட்டு சிலாகித்த காமெடியும் நடந்திருக்கிறது. அவ்வளவு அழகான வாதங்கள்.. அறிவான வாதங்கள்.. நிச்சயம் மாமா வக்கீலுக்கு படித்திருந்தால் இன்று ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகளில் ஒருவராய் இருந்திருப்பார். 

மாமாவுடன் தான் நான் நிறைய தெலுங்குபடங்கள் இந்திப்படங்கள் பார்த்திருக்கிறேன்..மாமா சரளமாக இந்தி,தெலுங்கு,கன்னடம், ஆங்கிலம் பேசுவார்.எங்கு அழைத்துப்போனாலும் பிரியப்பட்டதை வாங்கித் தருவார் அதைவிட இதுதான் வாங்கித்தரமுடியும் எனச்சொல்லி அழைத்துச் செல்வார். மொழி புரியாத போது அதை அழகாகச் சொல்லித்தருவார்.

என் 11 வது வயதில் தாயாரை இழந்திட்ட பின் எங்கள் மீதான அவர் பாசம் இன்னும் அதிகமாகிப்போனது.. அப்போது அவரும் ஒரு சராசரிக் குடும்பம் ஆனாலும் அக்கா குழந்தைகள் என்று அவரால் முடிந்தவரை எங்களுக்கு உதவுவார். என் அப்பாவிடம் ஓட்டல் தொழிலைக் கற்றுக் கொண்டார்.
 
அதன்பின் என் சேலத்து வாழ்க்கையை 15 வயதில் துறந்து மதுரை குடியேறிய பின்பு ஆண்டுக்கொருமுறை உறவினர் ஆனார் மாமா.. என் 21 வயதில் என் தந்தையும் மறைந்து மொத்தக் குடும்பப் பொறுப்பும் என் தோளில் விழுந்த போது எனக்கு தைரியம் சொன்னவரும் அவரே.

அதன் பிறகு எனது திருமணம் தங்கை தம்பிகள் திருமணம் எனது பணி பிறகு சொந்தத்தொழில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டம் புகழ் என நான் படிப்படியாக உயர்ந்தபோது பலர் என்னை பாராட்டினர்..மாமா மட்டும் இப்படி சொன்னார் வெங்கடேசா இந்த நிலைக்கு நீ வராது இருந்து இருந்தா தான்அது ஆச்சரியம் அதற்கான தகுதிகள் உனக்கிருக்கு என்றார்.

மாமாவிற்கும் ஒரு ஓட்டல் கனவு உண்டு உயர்வான தரம் நல்ல சுவை குறைந்த அளவே வியாபாரம் என்பது அவர் கோட்பாடு.. அதாவது தினமும் 100 இட்லி,50 பொங்கல், 60 பூரிசெட் இவ்வளவு தான் வியாபாரம். குறைவாகச் செய் அதை நிறைவாகச்செய் என்பதே தாரக மந்திரம்.

அதுதான் டிமாண்ட்டை அதிகரிக்கும் 10 மணிக்கு மேல் போனால் பொங்கல் கிடைக்காதே என வாடிக்கையாளர்கள் பதறும் படி அதன் சுவையும் தரமும் இருக்கவேண்டும் என்பார். இதை ஒரு லட்சம் தடவையாவது என்னிடம் சொல்லியிருப்பார்.. அவ்வளவு ஆவல்.

பொதுவாக மாமாவிடம் ஒரு பழக்கம் உண்டு.. தான் சொல்லுவதை மறை பொருளாக சொல்லிவிட்டு ஒரு சின்ன கேப் விட்டு நம்மை பார்ப்பார் நாம் அதை புரிந்து கொண்டோம் என்றதும் அவர் கண்களில் ஒரு குறும்பும் புரிந்து கொண்டாயா என்ற குறும் புன்னகையும் அவர் இதழில் விரியும்.

என் கார் மாமாவின் வீட்டு வாசலில் நின்றது.. உள்ளே விரைகிறேன் சித்திகள், மாமாக்கள், தம்பி, தங்கைகள் அவர்களது பிள்ளைகள் என கல்யாணச்சத்திரம் போல இருந்தது வீடு ரெண்டு நாட்களுக்கு முன் வீட்டில் ஒரு ஹோமம் என நடுஹாலில் இருந்த ஹோம குண்டம் சொல்லியது.

வாடா வெங்கிட்டா.. ( பாட்டி வீட்டில் அழைப்பது) மாமா எழுந்துட்டார் ஒரிரு வார்த்தை பேசறார் எல்லாரையும் பார்த்தது அவருக்கு ஒரு புத்துணர்ச்சி வா வா உன்னை பார்த்தால் இன்னும் தெம்பாவார் என்றாள் சாந்தி சித்தி.. ஜெயபாரதி சித்தியும் வந்தார் அறைக்குள் நுழைந்தோம்..

கட்டிலில் மாமா.. பேரதிர்வுகள் அலையலையாய் தாக்கியது கணீர் குரலில் ஆஜானுபாகுவாக பளிச் விபூதிப் படையுடன் இருக்கும் மாமா கசக்கி எறிந்த காகிதமாக கட்டிலில் குவிந்திருந்தார்.. ஏதோ சோமாலியா மனிதர் போல ஒருவரைக் காட்டி தாய் மாமன் என்றார்கள்.. அழுகை பீறிட்டது..

யார் வந்திருக்காங்க பாருண்ணா என சித்தி சொல்ல அலங்க மலங்க விழித்தார்.. யாரு என்றார் காற்றாக... வெங்கடேசன், நம்ம வெங்கிட்டா தெருவில் கேட்கும் படி கத்தினாள் சித்தி.. காது கேட்காதாம்..! ஏற்கனவே பைபாஸ் போட்ட இதயம், கிட்னி கோளாறு, தற்போது கல்லீரல் பழுது..!

ஒரு படத்தில் நடிகர் விவேக்கிடம் தாடி பாலாஜி சொன்ன காமெடி போல நோய்களை அடுக்கினார்கள் காலில் ரத்த ஓட்டமில்லையாம்.. வாழைப்பூ கலரில் இருந்தன கால்கள்.. என் கண்களில் இருந்து கசிந்த நீரை நிறுத்தியது வெங்கடேசனா.. என்ற மாமாவின் குரல்..

எல்லாருக்கும் ஆச்சரியம்.. எழுப்பி தன்னை உட்கார வைக்கச்சொன்னார்.. செய்தார்கள் என் கைகளை ஆசையோடு தன் நடுங்கும் கைகளால் பற்றிக் கொண்டார்.. வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்..மிக மிக சிரமப்பட்டு என் நலம் என் குடும்ப நலம் எல்லாம் விசாரித்தார். மெல்ல நான்

"மாமா ஒரு ஓட்டல் ஆரம்பிச்சு இருக்கா என் மனைவி என ஆரம்பிக்க அடுத்து நடந்தது தான் ஆச்சரியம்..!! தொண்டையை செருமிக் கொண்டார் அடுத்த 20 நிமிடம் தன் ஓட்டல் அனுபவங்களை குழந்தை போல கூறத் தொடங்கினார்.. அதில் அவரது லட்சிய ஓட்டல் கதையும் இருந்தது.

அன்றும் ஒருகிலோ கோதுமைக்கு எவ்வளவு பூரி வரவேண்டும் எவ்வளவு செலவு எவ்வளவு வரவு எனக்கேட்டு ஒரு கேப் விட்டு என்னைப்பார்த்தார்... கணக்கிட்டு 500 ரூபாய் மாமா என்றதும் அவரது கண்ணில் அதே பழைய குறும்பும் உலர்ந்த உதடுகளில் அதே குறும்புன்னகையும் விரிந்தது..!

வசூல் ராஜா MBBS படத்தில் கேரம் போர்டு சத்தத்தில் எழுந்து வரும் காகா ராதாகிருஷ்ணன் எனக்கு ஞாபகம் வருகிறார்.. நினைவுகளுக்குள் ஒளிந்திருக்கும் பிடித்த விஷயங்களை பேசுவது நோயுள்ளோருக்கு எவ்வளவு பெரிய மருந்து என்பதை அனுபவப் பூர்வமாக தெரிந்து கொண்டேன்.

அன்று நிம்மதியாக உறங்கினார்.. மறுநாள் விழித்ததும் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாராம்.. வீடெல்லாம் ஆனந்தம்.. வெங்கட்டா இது போதுண்டா மாமா இன்னும் கொஞ்சம் ஆயுளுடன் இருப்பார் என்றனர் ஆனந்தக் கண்ணீருடன்.. இப்போது எல்லாரும் தினமும் அவருடன் பேசி மகிழ்கிறார்கள்.

என் தாய்மாமானுக்கு இதைவிட பெரிதாக நான் என்ன செய்திருக்க முடியும்..!

Tuesday 22 September 2015

ஸ்பார்டஸ் கிரகம்

#ஸ்பார்டஸ்_கிரகம்

ஸ்பார்டஸ் கிரகத்தில் இரவு நீல நிறத்தில் இருந்தது.. அந்நிறமே அவர்களின் தேசிய நிறம்.. அங்குள்ள ஆளும் கட்சியான ஸ்பா.கி.மு.க கட்சிக் கொடியின் கலரும் அது தான்.. அக்கிரகத்தின் காலை நேரம் வெளிர் மஞ்சளில் இருப்பதால் எதிர்க்கட்சியான அ.ஸ்பா.கி.மு.க கட்சிக் கொடியின் கலர் வெளிர் மஞ்சள்.. உதிரிகட்சிகள் எதிராக பிரிந்து..

இந்த இருவர் அணியிலும் இருந்தனர்... ஆளும்கட்சியான நீலக்கலருக்கு கொஞ்சம் அதிக கட்சிகள் சப்போர்ட் இருந்ததால் அவர்கள் ஆட்சி நடந்தது.. வெகு விரைவில் தேர்தலை சந்திக்க இருந்தது ஸ்பார்டஸ் கிரகம்.. மக்களைக் கவர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆளுங்கட்சி தலைவரான ஜிகோன் ஒரு யோசனை தந்தான்.

அந்நிய கிரகத்து முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதே அந்த யோசனை.. ஆளுங்கட்சியினர் எல்லாரும் அதனை கைதட்டி வரவேற்றனர்... ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் 10 நாடுகளை அழைக்க வேண்டும்.. அங்குள்ள அரசியல் அமைப்பு விதிகளின் படி சம அதிகாரம் எதிர்கட்சிக்கும் உண்டு. அதாவது 10 நாடுகளில் 5 ஐ ஆளுங்கட்சியும் 5ஐ எதிர்கட்சியும் தேர்வு செய்யலாம்.

அதன்படி எல்லா கிரகத்திலும் 10 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.. மாநாடு நடைபெறும் நாளும் வந்தது..எல்லா கிரகங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள் பறந்து வந்து குவிந்தனர். அனைவரும் அதிகம் எதிர்பார்த்தது பூமியைத் தான்.. ஏனெனில் மொத்த முதலீட்டின் மதிப்பில் சரிபாதி பூமியிலிருந்து கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.. காரணம்..

அமெரிக்காவில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறையும், சீனாவில் இருந்து பல விதமான பொருட்களும், சவுதியில் இருந்து எரிவாயு, ஜப்பானில் இருந்து மோட்டார் வாகனமும், கொரியா மொபைல்களும், ஜெர்மனியில் இருந்து தொழில் நுட்பமும் அதீதமாக குவியும் என்று எதிர்பார்த்தார்கள்.. இதில் இந்தியாவும் கலந்து கொண்டது.

ஆனால் அவர்கள் எதில் முதலீடு செய்வார்கள் என சொல்லவில்லை.. ஸ்பார்டஸ் கிரகமே ஸ்பார்க்கிளிங் ஆக இருந்தது.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அதகளப்பட்டது.. எதிர்பார்த்ததை விட பூமியின் முதலீடு தான் அதிகம் இருந்தது.. எல்லா நாடுகளும் தங்கள் முதலீட்டு திட்டங்களை அறிவிக்க இந்தியா மட்டும் பல பேச்சுவார்த்தைகளில்..

கலந்து கொண்டிருந்தது.. தொடர்ந்து பல தலைவர்களை அமைச்சர்களை சந்தித்துக் கொண்டே இருந்தது.. முதலீட்டாளர்கள் மாநாடு முடியும் கடைசி தினமும் சந்திப்புகள் தொடர்ந்தன.. இதோ ஊர் திரும்ப அனைவரும் ரெடி.. ஊருக்கு போய் மெயில் அனுப்பறேன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரரிடம் சொல்வது போல இந்தியா கையசைத்து திரும்பியது.

சரியாக ஒரே வாரத்தில் அங்கு ஆளுங்கட்சிக்கு அளித்த ஆதரவை உதிரிக் கட்சிகள் விலக்கிக் கொள்ள முதல் முறையாக ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி கேள்விப்படாத ஸ்பார்டஸ் வாசிகள் அதிர்ந்து போனார்கள்..அதற்கு மறுநாள் எதிர்கட்சித் தலைவர் முதல்வர் ஆனார்.. அவரது பதவியேற்பு முடிந்து தன் கேபினுக்குள் போய் உதவியாளரை அழைத்துச் சொன்னார்..

நம் நண்பன் இந்தியாவுக்கு ஒரு கான்ஃபரன்ஸ் போடு....

Saturday 19 September 2015

கனவான கனவு..

#இதுவும்_சயின்ஸ்ஃபிக்ஷனே

ஜான் இந்த ஊருக்கு புதிதானவன் அவன் சொந்த ஊர் தமிழ்நாடு. இந்த ஊருக்கு அவன் வருவது இதுவே முதன்முறை..அவ்வூரின் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான்.. சாலையில் மக்கள் அனைவரும் சீரான வேகத்தில் சாலைவிதிகளை மதித்து வாகனம் செலுத்திக் கொண்டிருந்தனர்.. ஹெல்மெட் இல்லாதவர்களையோ சீட் பெல்ட் அணியாதவர்களையோ அங்கு பார்க்கவே முடியவில்லை.

சிக்னல்களை தாய் தந்தையரை விட அதிகம் மதித்தார்கள். ஒழுங்கு என்றால் அப்படி ஒரு ஒழுங்கு.. பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வரும் வரை மக்கள் அமைதியாக நின்று வரிசையில் ஏறினார்கள்.. எந்தத்தள்ளு முள்ளும் இல்லை. கொஞ்சம் தமிழ்நாட்டை நினைத்துப் பார்த்தான்.. சிரிப்பு பொத்துக் கொண்டுவந்தது. அவனது பேருந்து வந்தது.

அடடா இதுவல்லவா அரசுப்பேருந்து.. புளிபோட்டு துடைத்த வெள்ளி குத்து விளக்கு போல பளபளத்தது.. உள்ளே ஒரு காஷ்மீர் போல ஏ.சி.. அழகிய குஷன் சீட்டுகள் பார்த்ததும் குஷியைத் தந்தது. சுத்தமாக பராமரிக்கப்பட்ட பேருந்து பஸ்ஸிற்குள் ஓடிகலோன் ஸ்ப்ரே மணத்தது. இத்தனைக்கும் இது டவுன்பஸ் தான் தனியார் ஆம்னி பஸ்களை விட சிறப்பாக இருந்தது.

அப்படியே நம்ம ஊரு டவுன் பஸ்களைப் பற்றி நினைத்துக் கொண்டே மெல்ல கைப் பையிலிருந்த வாழைப்பழத்தை தின்ன எடுத்தான் பதறி ஓடிவந்தார் கண்டக்டர் சார் பேருந்தில் உணவுப் பொருட்களை சாப்பிட அனுமதி இல்லை மன்னிக்கவும் என்றார் மிக அன்பாக. அவன் செல்லும் இடத்தை சொல்லி 500 ரூபாய் தந்து டிக்கெட் கேட்டான்.

கொஞ்சமும் முணுமுணுப்பின்றி 12.50 பைசா டிக்கெட்டுக்கு மிகச்சரியாக சில்லறை தந்துவிட்டு தங்கள் பயணம் இனிதாகட்டும் என்று கூறிச் சென்றார் கண்டக்டர். அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.. கையில் இருந்த ரூபாய்களும் சலவைத்தாள்களாக இருந்தன.. எப்படி இந்த ஊரில் மட்டும் இப்படி.!ஒரு சிக்னலில் நின்ற போது எதிரே ஒரு ஷாமியானா பந்தல்.

அதில் மந்திரிகள் நின்றுகொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பொது மக்கள் ஒவ்வொருவரிடமும் போய் மனு சேகரித்து கொண்டிருந்தார்கள். அந்த மனு இத்தனாம் தேதிக்குள் சரிபார்த்து ஆவன செய்யப்படும் என அங்கேயே உறுதிமொழிப் பத்திரம் எழுதித் தந்தார்கள். மக்கள் சராமரியாக கேட்ட கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் சொன்னார்கள்.

ஆச்சரியம் அவனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது அவன் வரும் இடம் வர இறங்கினான்.. மெல்ல நடந்தான் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தனர்.. நடைபாதைக் கடைகளே இல்லை சாலைகள் எல்லாம் அவ்வளவு சுத்தம். இப்போது இன்னொரு காட்சி ஹெல்மெட் இல்லாது வண்டி ஓட்டி வந்த ஒரு இன்ஸ்பெக்டரை மக்கள் நிறுத்தினர்.

அவர்கள் அவரிடம் லைசென்ஸ் கேட்டு R.C, இன்சூரன்ஸ், புகை பரிசோதனை முதலிய ஆவணங்களைக் கேட்டு வாங்கி அவைகளை பரிசோதித்து அவரை திட்டி அறிவுரை சொல்ல அவரும் நடந்த தவறுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டு வண்டியை தள்ளிக் கொண்டு போனார். ஜான் இப்படி ஒரு ஊரில் பிறக்கவில்லையே என வருந்தினான்.

சாலையில் ரேஷன் கடைகளில் இருந்து சரக்குகள் வண்டியில் ஏற்றப்பட்டு வீடுவீடாக விநியோகிக்கப்படும் அதிசயத்தையும் கண்டான். சுத்தமான ஆறு எங்கும் மரங்கள் எல்லா இடத்திலும் குடிநீர் கல்வி மருத்துவம் இலவசம் இப்படி அடுத்ததடுத்து அவன் பார்க்க பார்க்க அவன் பிரமித்து போனான். லஞ்சம் ஊழல் என்றால் என்னவென்று கேட்டார்கள்.

புத்தம் புதிதாக போட்டது போல இருக்கும் இச்சாலைகள் அமைத்து 8 வருடங்கள் ஆனது என்பதை அங்குள்ள திட்டப்பலகைகளில் அறிந்தான்  திட்டப்பல.. அட என்ன இந்த ஊரின் பெயர் இந்தப் பலகையில் எழுதப் பட்டுள்ளது இது தான் இந்த ஊரின் பெயரா..? சற்று அருகே சென்று படித்தான் அதே தான் "தமிழ்நாடு அரசு"... ஓ..ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ...

அலறியபடி ஜான் எழுந்தபோது அதிகாலை மணி 5 ஜன்னல் வழியாக பார்த்தான் சாலையெங்கும் குப்பை நிறைந்திருக்க நடுரோட்டில் நான்கு மாடுகள் படுத்திருக்க பொங்கி வழிந்த சாக்கடை நீரின் துர்நாற்றம் காற்றில் வந்து அவன் நாசியில் மோத சற்று நிதானித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு யோசித்தான் புரிந்தது அவன் கண்டது கனவென்று.

Friday 18 September 2015

ஹிட்லரின் அப்பா...

#கற்பனையாக_ஒரு_கொலை

தன் ஆராய்ச்சி லேபில் இருந்து உற்சாகமாக வெளிவந்தான் குரு. இன்னும் 3 மணிநேரத்தில் அவன் கிளம்பவேண்டும் அதன் பின்னே அவன் லட்சியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிவிடும். அவன் கடுமையான உழைப்பு வீண் போகவில்லை வெற்றிகரமாக தன் கண்டுபிடிப்பை தயாரித்து விட்டான் பயணத்துக்காக சில பொருட்கள் வாங்கத்தான் கிளம்பியிருக்கிறான்.

அவன் சென்று வருவதற்குள் அவன் கண்டுபிடிப்பை பார்ப்போமா.. குரு தயாரித்து முடித்தது டைம் மெஷினை ஆம் இது கடந்த காலத்துக்கு மட்டும் செல்லும் சிறப்பு டைம் மிஷின்..  அந்த இறந்த காலத்தில் அவன் சிலரின் தந்தைகளை கொலை செய்ய வேண்டியிருக்கிறது.

பதறாதீர்கள்.. இவன் ஒரு பட்டியல் வைத்திருக்கிறான் அதில் முதலாவாதாக இருப்பவர் ஹிட்லரின் தந்தை.! நோக்கம்..சிம்பிள் ஹிட்லரின் தந்தை இருந்தால் தானே ஹிட்லர் பிறக்கப்போகிறார் ஆனால் அதற்கு முன்பே அவரைக் கொன்றுவிட்டால் ஹிட்லரே பிறக்கப்போவதில்லை அல்லவா.

சிரத்தையெடுத்து டச்சு மொழி கற்றுக்கொண்டான் ஹிட்லரின் பிறந்த ஊரான ஆஸ்திரியாவைப் பற்றி அறிந்து கொண்டான்.. ஹிட்லரின் தந்தை பெயர் அலாய்ஸ் ஷிக்கில்பெர்க் என்பதையும் 1837 ஜுன் 7 ஆம் தேதி ஆஸ்திரியாவில் உள்ள strones என்னும் ஊரில் waldviertel என்ற இடத்தில் பிறந்தவர் என்பதையும் தெரிந்து கொண்டான்.

அவர் பிறந்த மருத்துவமனை அதைப்பற்றிய விவரங்கள் அவர் பிறந்த நேரம்
எல்லாம் அறிந்து கொண்டான் அவன் மூளைக்குள் இருந்த திட்டம் இது தான்..டைம் மிஷினில் ஏற வேண்டியது 1837 ஜுன் 7 ஆம் தேதிக்கு போக வேண்டியது ஆஸ்பத்திரியில் குழந்தையை மூச்சடக்கி கொல்ல வேண்டியது. சத்தமில்லாமல் திரும்பி வந்துவிட வேண்டியது. அவ்வளவு தான்.

திட்டத்தில் ஒரே ஒரு பாதகமான விஷயம் அவனது மிஷினில் ஒரு ஆண்டின் ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே போக முடியும்.. தவறினால் அந்த ஆண்டு மிஷினில் இருந்து மறைந்து விடும் ஒரு முறை சென்று வந்த அதே ஊருக்கு அடுத்தது 50 ஆண்டுகள் கழித்து தான் போக முடியும் ஆகவே கவனக் குறைவின்றி நடந்து கொள்ளவேண்டும்.. 18 ஆம் நூற்றாண்டின் உடைகளோடு அதோ திரும்பிவிட்டான் குரு.. இனி நடப்பதை பார்ப்போம்.

நீட்டாக ஷேவ் செய்து கொண்டான் ஒரு சுகமான குளியல் போட்டான்.. மெல்லிய இசைக் கேட்டுக் கொண்டே ஒரு சூடான க்ரீன் டீ குடித்தான் உணவு உட்பட பயணத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என சரிபார்த்தான் எல்லாம் சரியாக இருந்தது.. உற்சாக விசில் அடித்தபடியே 18 ஆம் நூற்றாண்டின் உடையணிந்தான்.

கண்ணாடியில் அவன் உருவம் பார்த்ததும் விசில் பெரிதானது அவ்வுடை அவனுக்கு அப்படியே பொருந்தியிருந்தது.. பெரிய தொப்பி முகத்தை நன்றாக மறைத்தது.. மிஷினில் ஏறினான்.. எரிபொருள், முதலுதவி, ரிப்பேர் சாதனங்கள் எல்லாம் சரி பார்த்தான். மிகச்சரியாக ஆண்டு மாதத்தை செட் செய்தான் ஒரு எண் தவறினாலும் எல்லாம் போச்சு இல்லியா.

செட் செய்த எண்ணை மீண்டும் சரிபார்த்தான் 1837 ஜுன் 7 சரிதான் ஓகே கொடுத்தான்.. மிஷின் கிளம்பியது.. ஆஸ்திரியா காற்று கொஞ்சம் ஏசியாய் வீசிக்கொண்டிருக்க அவனது மிஷின் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இறங்கியது. அதை பத்திரமாக மறைத்தான் மெல்ல ஊர் செல்லும் பாதையில் நடந்து ஆங்காங்கே விசாரித்து சரியாக மருத்துவமனையை அடைந்தான்.

சாலையில் கோச் வண்டிகளும் குதிரைகளும் சென்று கொண்டிருந்தன.. குருவை யாரும் வித்யாசமாக பார்க்கவில்லை.. நேரத்தை பார்த்தான் அது அந்த காலத்து அவர்கள் நாட்டு நேரப்படி காட்டியது பாக்கெட்டில் கைவிட்டு குறிப்பை பார்த்தான் ஹிட்லரின் தந்தை பிறந்து 5 மணிநேரம் ஆகியிருந்தது..மெல்ல மருத்துவமனைக்குள் சென்றான்.

ஒரு நடுத்தர வயது செவிலியிடம் ஷிக்கில்பெர்க் குடும்பத்து குழந்தை அலாய்ஸ் ஷிக்கில்பெர்க் என்றான் (அங்கு குழந்தைக்கு பேரிட்டு தான் அட்மிட் செய்வார்கள் என்பதையும் படித்திருந்தான்) 8 ஆம் எண் அறை என்றாள் நர்ஸ்.. மெல்ல நடந்தான் 8 ஆம் எண் அறையில் இருந்து ஒரு ஆண் வெளியேறினார் (ஹிட்லரின் தாத்தா) குஷியுடன் நடந்தான்.

பிரசவ மயக்கத்தில் அப்பெண் இருக்க குழந்தை தொட்டிலில்.. யாருமில்லை தன் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்ந்தான் அடுத்த 10 நிமிடம் எல்லாம் முடிந்தது.. வந்த வழியே ஓசையின்றி கிளம்பி தெருவில் இறங்கி பதறாமல் நடந்து மிஷின் நின்ற இடத்திற்கு வந்து மிஷினில் ஏறி 2015 ஆம் ஆண்டை அழுத்தி கிளம்பினான்.. அட எவ்வளவு சுலபமாக முடிந்தது.

இன்னும் அவனாலேயே நம்ப முடியவில்லை.. ஒரு சரித்திரத்தையே அல்லவா மாற்றி இருக்கிறான்! இதோ மிஷின் லேபை அடைந்தது.. வெற்றிகரமான பயணம்.. இறங்கியவுடன் நேராக ஓடினான் கம்ப்யூட்டரை ஆன் செய்து கூகுளில் அடால்ஃப் ஹிட்லர் என அடித்தான்..அப்படிஎன்றால் யார் என்று கேட்கும் என அலட்சியமாகப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

ஹிட்லரைப் பற்றி எல்லாம் இருந்தது ஹிட்லரின் அப்பாவே பிறந்த 5 மணிநேரத்தில் கொல்லப்பட்ட போது ஹிட்லர் எப்படி.? ஆண்டு நாள் மாதம் இடம் எதுவும் மாறவில்லையே வெறிபிடித்தது போல கத்தினான்.. எப்படி நிகழ்ந்தது தவறு இனி அங்கு செல்ல 50 ஆண்டுகள் ஆகுமே.! குழம்பினான் அதே நேரத்தில் நாம் மீண்டும் 1837ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதிக்கு போய்வருவோம் அதோ அந்த பெஞ்சில் பேப்பர் படிக்கிறாரே...

அவருக்கு பின்னால் போவோமா The Wiener  என்னும் நாளிதழை விரித்து வைத்து இருக்கிறாரா அதில் வலப்பக்கம் ஓரத்தில் ஒரு குட்டிச் செய்தி தெரிகிறதா படியுங்கள் என்ன விழிக்கிறீர்கள்.! ஓ டச்சு தெரியாதா நானே சொல்கிறேன்..  Strones என்ற ஊரில் Waldviertel என்ற இடத்தில் நேற்று ஒரு குழந்தை அடையாளம் தெரியாதவரால் கொல்லப்பட்டது.

அக்குழந்தை பிறந்து 5 மணி நேரத்தில் இச்சோக சம்பவம் நடைபெற்றது. அக்குழந்தையின் பெயர் மிலாஸ் நிக்கில்பெர்க் ஆஸ்திரிய மன்னர் அங்கு பலத்த பாதுகாப்பு போட... வெயிட் வெயிட் ஹிட்லரின் தந்தை பெயர் அலாய்ஸ் ஷிக்கில்பெர்க் தானே.!இங்கு தான் இருக்கு ட்விஸ்ட் குருவுக்கு குழந்தையை அடையாளம் சொன்ன அந்த நர்சுக்கு காது கொஞ்சம் மந்தம்.

Thursday 17 September 2015

குறள் குரல்

#இதென்ன_புதுசா

இது 2015 அல்ல.. அதிலிருந்து 40 வருடங்கள் கடந்த ஆண்டு..! கள்ளக் கடத்தல் செய்கின்ற கந்தசாமி இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தான். கந்தசாமி.? தங்கம், கஞ்சா, அபின், பிரவுன் சுகர், வைரம்,ஆமைகள், சிலைகள், அவன் கடத்தாத பொருளே இல்லை.

இடையில் ரைஸ்புல்லிங், ஈமு கோழி, மேக்னட் படுக்கை, தங்க நாணயம், வெயிட் லாஸ், என பல்வேறு M.L.M கம்பெனிகளின் நெட்வொர்க் ஆகவும் இருந்தான். அவனுக்கு பணம் வினாடிக்கு இவ்வளவு என அதிகரிக்க வேண்டும். அப்படி ஒருவனிடம் ஒருவன் சென்னையிலிருந்து பேசினான்.

தான் மயிலாப்பூரில் இருப்பதாகவும் அங்கு ஒரு இடம் வாங்கி வீடு கட்டப் போகையில் பூமிக்குள் இருந்து ஒரு அரிய புதையல் கிடைத்ததாகவும் தகவல் அனுப்பி இருந்தான்! அது தங்கமா,வைரமா, என அவன் குறிப்பிட வில்லை. அது விலையுயர்ந்த பொருள் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தான்.

அவனைச் சந்திக்க நேரம் ஒதுக்கினான் கந்தசாமி.. ஒருவழியாக சந்தித்தார்கள்... என்ன அந்த பொருள் என்றான் கந்தசாமி.! வந்தவன் சில ஓலைச்சுவடிகளை மேசையில் எடுத்து வைத்து இதோ திருக்குறள் என்றான் கந்தசாமிக்கு மிகுந்த கோபம் வந்தது. திருக்குறளா? இதில் என்ன புதுமை?

எனக் கேட்டான். வந்தவன் சொன்னான் அய்யா மொத்தத் திருக்குறள் எத்தனை? என்றான். 1330 என பதிலளித்தான் கந்தசாமி.... அதுதான் இல்லை.. மொத்தத் திருக்குறள் 5000 அதில் மீதி 3670 திருக்குறள்கள் தான் என் வீட்டில் கிடைத்தன என்றான்.. கந்தசாமி வியக்க...

இங்கிருந்து இந்த கதையை யாரும் தொடரலாம்

Wednesday 16 September 2015

ஆப்பிள் பேபி 2

#ஆப்பிள்_பேபி  (மூன்று நாள் தொடர்)

(பார்ட் - 2)

ஸ்ருதியை மம்மி என அழைத்து அவள் கைகளில் இருந்த பேபி மெல்ல இப்போது ரவியிடம் திரும்பி டாடி என்றது.. அவனுக்கும் மகிழ்ச்சிதான்.. ஆனால் ஸ்ருதி அளவு வெளிப்படுத்தவில்லை ஸ்ருதி குழந்தையை கன்னம் கை என மாறி மாறி முத்தமிட்டாள்.. ஜாக்கிரதை கன்னத்தில் மட்டுமே வாஷ் ஃபுரூப்... பட் உன் மவுத் பிரஷனர் மணம் அருமை என்றது குழந்தை.

இருவரும் வியந்தனர்.. சரி எனக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்.?உலகில் எந்தக் குழந்தையும் பெற்றோரிடம் கேட்காத கேள்வியைக் கேட்டது.. கொஞ்சம் குழம்பினார்கள்.. ஓகே என் முதுகில் உள்ள டிஸ்ப்ளேவில் பேபி நேம் ஆப்ஷன்ஸ் என்னும் ஆப்ஸ் இருக்கு அதில் தேடுங்கள் பிடித்தால் அதிலொன்றை வைத்து விடுங்களேன் என்றது.

ரவி யோசித்தான்.. உனக்கு ஆப்பிள் என்றே பெயர் வைக்கிறேன் என்றான் மெல்ல நகைத்த குழந்தை இப்படி ரேண்டமாக என்னால் நினைவு படுத்திக் கொள்ள முடியாது நீ செட்டிங்ஸில் போய் ரிஜிஸ்டர் செய் அப்போது தான் என் மெமரியில் சேவ் ஆகும் என்றது.. அப்படியே செய்தனர். சரி நீங்கள் சாப்பிட்டீர்களா? இதுவும் உலகில் எந்தக்குழந்தையும் கேட்காத கேள்வி.

இல்லை என்றார்கள் போய் சாப்பிட்டு வாருங்கள் அப்படியே எனது கிட்டில் இருக்கும் கிளுகிளுப்பை வீடியோ கேம்ஸை என் கையில் தாருங்கள் நான் அதுவரை விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்றது. வியப்புடன் அதை எடுத்துத் தந்து விட்டு சாப்பிடப் போனார்கள். குழந்தை அந்த கேம்ஸை வாங்கி கேம் செலக்ட் செய்து லேட்டஸ்ட் கேண்டிகிரஷ் ஆட ஆரம்பித்தது.

அரைமணி நேரத்திற்குப் பிறகு சாப்பிட்டுத் திரும்பிய அவர்களைப் பார்த்து சிரித்தது. வந்துவிட்டீர்களா இப்போதான் 168 வது லெவல் வந்து இருக்கிறேன் அழகாக கொட்டாவி விட்டது.. எப்போது தூங்குவீர்கள் இருவரும் என்றது 11 மணிக்கு என்றார்கள் கோரஸாய். ஓ.கே இப்போது 9மணி தான் ஒன்று கேட்டால் என்னை தவறாக நினைக்க மாட்டீர்களே.!

என்ன என்றார்கள்.. இன்றிரவு இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்வீர்களா? குபீரென இருவரும் அதிர்ந்தார்கள்.. இல்லை அப்படி இருந்தால் 10 மணிக்கு நீங்கள் என்னை சார்ஜ் செய்ய வேண்டும் அப்போது ஆட்டோ ஸ்லீப் மோடை அழுத்திவிடுங்கள் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கமாட்டேன் எனச் சொல்லி விஷமமாக கண்ணடித்தது ஆப்பிள்.

நீ நிறைய பேசுகிறாய்..என்றாள் ஸ்ருதி.. என்ன செய்ய என் மேக் அப்படி வேண்டுமானால் ஒரு கதை சொல்லவா இருவருக்கும் என்றது.. உன்னிடம் குழந்தைக்குரிய தன்மையே இல்லை வளர்ந்த இளைஞன் பேசுவது போல உள்ளது.. ஓ நீங்கள் அதையும் என்னிடம் பார்க்கலாம் இன்னசென்ஸ் மோட் என அழுத்திவிட்டால் நான் அழுவேன் அடம் பிடிப்பேன் சிரிப்பேன்.

மழலையாக பேசுவேன் பார்க்கிறீர்களா என்று விட்டு.. ங்கா..ங்கா.. பூ.பூ..பூ என்றது.. சரி நீ எப்போது உறங்குவாய் என்றான் ரவி.. நீங்கள் உறங்கியதும் எனக்கு உறக்கம் என்பது ஸ்லீப் மோட் ஒவ்வொரு 10 பர்சண்ட் பேட்டரி இறங்கும் போதும் ஒரு கொட்டாவி விடுவேன் 3 வது கொட்டாவியில் ஆட்டோ ஸ்லீப் ஆகிவிடுவேன் 3 மணி நேரம் ஆகிவிட்டால்... மீண்டும்

சார்ஜ் பேக்கப் செய்து கொண்டு ப்ரெஷ்ஷாக எழுந்துவிடுவேன் என்றது. கொஞ்சம் திணறி தான் போனார்கள் ரவியும் ஸ்ருதியும்.. ரவி லேசாக ஸ்ருதியிடம் கண்ணைக் காட்டிவிட்டு  சரி நீ இரு உன்னை சார்ஜ் போட்டு விட்டு நாங்கள் ஒரு வாக் போய் வருகிறோம் என்றான் ரவி.. 

ஸ்ருதியும் புரிந்து கிளம்பினாள்.. என்ன ரொமான்சா... என்ஜாய் பிடரியில் விழுந்தது ஆப்பிளின் நக்கலான குரல்..

வரும்...



ஆப்பிள் பேபி 3

#ஆப்பிள்_பேபி  (மூன்று நாள் தொடர்)

(பார்ட் - 3)

ப்ளாட்டிலிருந்து வெளியேறினார்கள் ரவியும் ஸ்ருதியும்.. இவர்களைப் போல சில ப்ளாட்டுகளில் குழந்தைகளை வாங்கியவர்கள் குழந்தையோடு பேசும் பேச்சு கசிந்துக் கேட்டது.. லிஃப்ட்டில் இறங்கும் போது எதிர்பட்ட சிலரில் பலர் கைகளில் புது ஆப்பிள் பேபி அட்டைப்பெட்டி இருந்தது. அவர்கள் கண்களில் குழந்தையைப் பார்க்கப் போகும் ஆசை இருந்தது.

மெல்ல அந்தக் குடியிருப்பின் பூங்காவிற்கு வந்தனர் உறுத்தாத நவீன விளக்குகள் மிகப் பெரிய டிஜிட்டல் திரை கொண்ட டிவி மெல்லிய இசை நீருற்று அழகிய பூக்கள் என எல்லாமிருக்கும் அக்குடியிருப்பின் பூங்கா.. ஒரு  பெஞ்சில் அமர்ந்தார்கள் பெஞ்சில் வெல்கம் என்னும் எழுத்துகள் மின்னி மறைந்தன. ஸ்ருதி விசும்ப ஆரம்பித்தாள்..ரவி பதறினான்.. என்ன ஸ்ருதி.?

ஏன் அழற.? இல்ல ரவி இந்தக் குழந்தை வந்தால் எனக்கு அம்மா ஆன திருப்தி கிடைச்சிடும்ன்னு நினைச்சேன்.. ஆனா இப்ப அப்படியே நொறுங்கிட்டேன்.. ஏய்ய் என்ன இது இதுக்கு போயி ஃபீல் பண்ணிட்டு அது ஒரு இயந்திரம் தானே.. சரி இப்ப சொல்லு கல்யாணம் பண்ணிக்கலமா.. என்றான். ஸ்ருதியும் யோசித்தாள் அவன் சொல்வதிலும் நியாயமிருந்தது.

5 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் அன்பாக இருக்கிறான்.. விட்டுக் கொடுக்கிறான்.. சண்டையிட்டாலும் ஈகோ இன்றி முதலில் பேசுகிறான்.. ஓ.கே ரவி அதுதான் சரின்னாலும் ஒரே ஒரு நாள் டைம் கொடு என்றாள்.. என்ன ஆப்பிள் பேபியால் பிரச்சனையா.? பின்னால் குரல் கேட்க திரும்பினார்கள்.. அவர்களது நண்பர்கள் மஞ்சுவும் ஹரியும் நின்றார்கள்.

ஹாய்.. ஹாய்.. வாங்க அது எப்படி உங்களுக்கு.? இப்ப தான் நாங்களும் குழந்தையை விட்டுட்டு வெளியே வர்றோம்..என்றான் ஹரி.. மம்மின்னு சொன்னவுடன் வாரி எடுத்து அணைத்தேன்.. என் உடல் சூடு பட்டதும் மம்மி நாளை மறுநாள் உன் ப்ரீயட்ஸ் பீகேர்ஃபுல் என்றது குழந்தை" விசும்பினாள் மஞ்சு. டாடி நீ நீள கோடுள்ள ஆடையணிந்தால் இன்னும் ஸ்மார்ட் ஆவாய் என்கிறது..

இதெல்லாம் குழந்தைகள் பேசும் பேச்சா? இவர்கள் குழந்தை வடிவில் இருக்கும் அறிவாளிகள் இவர்களிடம் எப்படி குழந்தைத் தன்மையை எதிர்பார்ப்பது.. நாங்கள் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்துள்ளோம் ரவி என்றான் ஹரி. நாங்களும் அந்த முடிவுதான் எடுப்பதாக உள்ளோம் ஆனால் ஒருநாள் காத்திருக்கச் சொல்கிறாள் ஸ்ருதி.. ரவி"

ஏன் ஸ்ருதி?மூன்று வருடங்கள் கூட ஆகாத நாங்களே திருமணம் செய்து கொள்ள இருக்கும் போது நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் மஞ்சு கேட்க இல்லை குழம்பிய மனநிலையில் நான் முடிவெடுப்பதில்லை.. அது தான் அப்படிச் சொன்னேன் எனச் சொல்லும் போது பிளாட்டில் உள்ள ஏராளமானவர்கள் ஜோடி ஜோடியாக பார்க்குக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு பேபி உங்க மொபைல் நம்பரில் என் ஐ.எம்.ஐ.ஈ நம்பரை சேவ் பண்ணிக்கோங்க தொலைந்தாலும் ஐ - க்ளவுடில் என்னை கண்டுபிடிக்கலாம்ன்னு சொல்லுது..

அட ஏன் நீங்க தமிழ் லாங்வேஜ் ஃபேவரிட்டா வைக்கலன்னு கேக்குது..?

நீங்க ஆபிஸ் போங்க வீட்டை நான் பாத்துக்கிறேன்னு சொல்லுது..

அனாசியாமா வீடியோ கேம்ஸ் ஆடுது..

எல்லாரும் பேபி வாங்கியவர்கள் எனத்தெரிந்தது.. அதில் பலர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருந்தனர்..அப்போது வேகமாக மூச்சிரைக்க வந்தான் ஒரு பிளாட் வாசி டிவியில் பாருங்கள் டிவியை ஆன் செய்யுங்கள் என்றான்.. பூங்காவில் உள்ள டிவியை ஆன் செய்தார்கள். இவர்களைப் போல பலர் ஸ்மார்ட்பேபிக்கள் பற்றி அங்கலாய்த்து பேட்டியளித்துக் கொண்டிருந்தார்கள் நடுவில் ஒரு விளம்பரம்...

ஆப்பிள் நிறுவனம் ஆர்வத்தில் அதீத திறன் படைத்த குழந்தைகளை படைத்து விட்டார்கள் அது தான் பிரச்சனை.. இனி கவலை வேண்டாம் எந்த வயது குழந்தை என சொல்லிவிட்டால் அந்த குழந்தைத்தனம் மாறாத குழந்தைகளை தயாரித்து 
அடுத்த மாதம் வெளியிட உள்ளோம் இந்த ஆப்பிள் குழந்தைகளை எக்சேஞ்ச் செய்து கொண்டு அவர்களை வாங்கிக் கொள்ளலாம் ஆப்பிள் செய்த தவறினை ஆண்ட்ராய்டு செய்யாது... அடுத்த மாதம் அறிமுகம் ஆண்ட்ராய்டு பேபிகள்.. சாக்லேட் கப் 500 வெர்ஷன்..

இந்தச் செய்தியைக் கேட்டு கைத்தட்டினர் அனைவரும்.. மெல்ல ரவியை பார்த்து ஸ்ருதி சொன்னாள் நாம வெயிட் பண்ணலாம் ரவி.

நிறைந்தது.



ஆப்பிள் பேபி 1

#ஆப்பிள்_பேபி

கி.பி 2500 ஆம் ஆண்டு.. 

உலகமே ஆவலுடன் காத்திருந்தது ஆப்பிள் நிறுவனத்தின் iOS 500 மாடல் பேபிகளுக்காக..குறிப்பாக பெண்கள் மிகமிக ஆவலுடன் காத்திருந்தார்கள் இந்த இடத்தில் ஆப்பிள் iOS பேபி என்பதை புதிய மாடல் போன் என நினைத்தால் நீங்கள் 21ஆம் நூற்றாண்டின் சராசரி மனிதர்கள். அது ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் குழந்தைகள்.

கி.பி.2500 இல் திருமணம் என்பது அரிதாகி லிவிங் டுகெதர் கலாச்சாரம் வேர் விட்டிருந்தது.. குழந்தை என்பது சுமை கணவன் மனைவியே எவ்வளவு நாள் சேர்ந்து வாழப்போகிறார்கள் என்பது நிச்சயம் இல்லாத போது குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் தயங்கினார்கள்.

இருவக்கும் தங்கள் சொத்துக்களை வாரிசுகளின் பேரில் எழுதி வைக்க வேண்டி வருமோ பயம் இருந்தது..மேலும் அதை படிக்க வைத்து ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்து..அப்பப்பா... இதை யார் செலவு செய்வது ஆணா.? பெண்ணா.? ஏனெனில் அப்போது இருவருக்கும் உரிமைகள் சரிசமம்.

மேலும் அன்றைய அரசாங்கம் முறைப்படி திருமணம் செய்து ஒழுங்காக அரசுக்கு வரி கட்டுபவருக்கே குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதியளித்து இருந்தது. அறிவியலும் விஞ்ஞானமும் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து மனிதன் ஏழாம் அறிவும் பெற்ற காலம் அது.. நவ நாகரீகத்தின் உச்சம்.

இதையும் மீறி பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்களின் ஜீன்களில் ஒளிந்திருந்த தாய்மையன்பு தலை தூக்காமல் இல்லை. ரோபோ தயாரிப்பெல்லாம் அரதப் பழசாகிவிட்டிருந்த காலத்தில் தான் இந்த iOS ஸ்மார்ட் குழந்தைகளை ஆப்பிள் தயாரித்து வெளியிடுவதாக அறிவித்தது.

நிஜக்குழந்தை போல பட்டு போன்ற தேகம் சிலிக்கான் சிந்தெடிக் தோலினால் அதே பிஞ்சு விரல் ஸ்பரிசம் அப்படியே நிஜ மனிதக்குழந்தை தான்.ஆனால் இந்தக் குழந்தை வளராது, சாப்பிடாது, அழாது, அடம் பிடிக்காது மூன்று மணிநேரம் சார்ஜ் செய்தால் போதும் அதன் ஆட்டோ பேக்கப்பின் மூலம் ஒருவாரம் தாங்கும். மிக மிக புத்திசாலி உருவத்தில் குழந்தையானாலும் அறிவில் பெரியவர்களுக்கு இணையாக இருந்தது.

ரவியும், ஸ்ருதியும் அப்படி ஒரு ஸ்மார்ட் குழந்தை வாங்கினார்கள்.. புது கிரைண்டர் அட்டைப் பெட்டி போல அழகான ரீ சைக்கிள் அக்ரிலிக் பெட்டியில் பேக் செய்யப்பட்டு அதன் உள்ளிருந்து வெளியே குழந்தையின் முகம் பட்டும் தெரியும்படி பெட்டியில் கண்ணாடித்தாள் ஒட்டப்பட்டிருந்தது.

ஒரே முக அமைப்பு என்றாலும் கண்களில் பழுப்பு, கருப்பு, சாம்பல், நீலம், பச்சை என ஐந்து வண்ணங்களிலும் தலை முடி கருப்பு, செம்பட்டை, கோல்டு, பிரவுன், செமி கோல்டு என ஐந்து வண்ணங்களிலும் அறிமுகம் ஆகியிருந்தது ரவி ஸ்ருதி தம்பதியினர் கருப்பு முடி நீலக்கண்கள் உள்ள..

குழந்தை பேக் செய்த பெட்டியை வாங்கி வீடு திரும்பினார்கள். அதை திறந்த போது உள்ளே அழகாக தலை உடம்பு கைகள் கால்கள் எல்லாம் தனித்தனியாக கழட்டப்பட்டு அதற்குரிய சேம்பர்களில் அடுக்கப்படுருந்தது மேனுவல் நானோ டிஸ்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

அதை ஏற்கனவே நெட்டில் பார்த்திருந்ததால் அழகாக அதைப் பொருத்தினார்கள் இன்பில்ட் பேட்டரியில் சார்ஜ் இருந்தது குழந்தையின் முதுகுப் புறம் ஒளிர்ந்த டச் ஸ்கிரீனில் இவர்கள் மெயில் ஐ.டி ,பெயர்கள், பாஸ்வேர்டு எல்லாம் கேட்க தகவல்கள் பதிவாகி சில வினாடிகளில்..

ரிஜிஸ்டர் ஆன பின்பு மம்மி என ஸ்ருதியை திரும்பி அழைக்க ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்..

வரும்..


Tuesday 15 September 2015

பியாடர் கிரகம்

பியாடர்_கிரகம்

பூமியில் விஞ்ஞானிகள் கவலையுடன் இருந்தார்கள்.. வருடத்தில் செப்டம்பர் மாதம் மட்டும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பூமி மீது பெரும் பெரும் விண்கற்கள் மழையாக பொழிந்தன.. ஒரு கல் இரு கல் இல்லை லட்சக்கணக்கான கற்கள்.. இதனால் பலத்த சேதம் அடைந்தது பூமி.

விண்வெளியில் உள்ள ஆராய்ச்சி மையத்திலிருந்து பியாடர் செல்ல அங்கிருந்து ஒரு விஞ்ஞானியை அனுப்ப முடிவெடுத்தார்கள் ஜுலை மாதம் கிளம்பினால் செப்டம்பர் முதல் வாரம் போகும் தொலைவில் அது இருந்தது.. அவரும் கிளம்பினார் அவர் அங்கு இறங்கியது செப்டம்பர் முதல் வாரம். இறங்கியவுடன் அந்த வினோதக் காட்சியைக் கண்டார்.

பியாடர் மனிதர்கள் 16 அடி உயரம் இருந்தார்கள் நான்கு கால்களுக்கு நடுவே இரண்டு கைகள் பத்தடி நீள தும்பிக்கை போல இருந்தது.. அவர்கள் முகம் வயிற்றில் இருந்தது.. அவர்கள் அனைவரும் பெரிய பெரிய கற்களை சுமந்து கொண்டு வரிசையாக சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அறியாது தொடர்ந்தார் அவர்கள் சென்ற இடம் ஒரு பெரிய மைதானம் போலிருந்தது அங்கு 100 அடி உயரத்தில் ஒரு மலை சிற்பம் போல செதுக்கப்பட்டிருந்தது.. அந்த உருவத்திற்கு மட்டும் தலை சரியான இடத்தில் இருந்தது உடல் வேறாக இருந்தது அதற்கு கைகளும் இருந்தன.

அங்கு வந்து அக்கற்களை வரிசையாக நட்டு வைத்துவிட்டு தங்கள் இரு தும்பிக்கை கைகளை தரையில் ஊன்றி நான்கு கால்களையும் தூக்கி ஆவ்வ்வ்வ்வ் என ஸைரன் போல அனைவரும் ஊளையிட்டார்கள். பிறகு அந்தக் கற்களை தூக்கிக் கொண்டு மீண்டும் ஊர்வலம் போனார்கள்.

அவ்வூர்வலம் முடிந்த இடத்தில் ஏராளமான பேர்அக்கிரகத்தின் பல பகுதிகளிலிருந்து கற்களை கொண்டுவந்து அங்கு காத்திருந்தனர். திடீரென மீண்டும் தும்பிக்கை ஊன்றி காலைத்தூக்கி அனைவரும் ஊளையிட்டு விட்டு கற்களை கிரகத்தை விட்டு வீசத் துவங்கினர்.நிறுத்துங்கள் எனக் கத்தினார் விஞ்ஞானி.. 

திடீரென அந்நியக் குரல் கேட்டு ஸ்தம்பித்த அவர்கள் அப்போது தான் அவ்விஞ்ஞானியைப் பார்த்தார்கள். மெல்ல நெருங்கிய ஒரு உருவம் #%^*+=¥£€><#}|~?!,.|\_[]{= என்றது. இவருக்கு புரியவில்லை என்பது போல சைகை செய்தார்.
உடனே அந்த உருவம் சட்டியைக் கவிழ்த்தது போல இருந்த தன் தலையில் தன் தும்பிக்கையால் தட்டியதும் ஏரியல் போல ஆண்டெனாக்கள் நீண்டது.. 

இப்போது சொல் மனிதா என்றது பியாடர் உருவம். இப்போது அது பேசியது நன்கு புரிந்தது அது டிரான்ஸ்லேட்டர் ஆண்ட்டெனா என அறிந்தார்.ஏன் நீங்கள் பூமியை நோக்கி கற்களை எறிகிறீர்கள் எங்கள் மேல் அப்படி என்ன கோபம் என்றார். மீண்டும் ஊளையிட்டார் பியாடர்..(சிரிப்பாம்) மனிதா எங்கள் கிரகத்தில் இது விண் தோன்றி மண் தோன்றா காலத்து வழிபாடு பல டிரில்லியன் ஆண்டுகளாக இதை வீசி வருகிறோம்.

எங்கள் கிரகம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனை வலம் வர 456 ஆண்டுகள் ஆகும் இப்போது பூமியின் நேர்கீழே இருக்கிறோம் அடுத்த 48 வருடங்கள் நாங்கள் வீசும் கல் பூமியில் தான் விழும்.. கடந்த 48 ஆண்டுகள் செவ்வாயிலும் அதற்கு முன் 48 ஆண்டுகள் புதனிலும் விழுந்திருக்கிறது. 

எங்கள் கிரகத்தில் இது விண் தோன்றி மண் தோன்றா காலத்து வழிபாடு பல டிரில்லியன் ஆண்டுகளாக இதை வீசி வருகிறோம்.ஆகவே.. மனிதா 
இது பூமி மீதான கோபமில்லை என்றது. வழிபாடா அதென்ன என்றார் விஞ்ஞானி.. அதுவா அங்கு ஒரு மலை தெரிகிறதா என்றது உருவம்.

விஞ்ஞானிக்கு அந்த சிலை நினைவுக்கு வந்தது.. ஆமாம் என்றார்.. அது தான் எங்கள் கடவுள் பியாடரப்பர்.. ஒரு முறை எம் கிரகத்தை விண்கற்கள் மோத வந்தபோது மலையாக மாறி அதைத்தாங்கி இந்த கிரகத்தை காத்தவர்.. அவர் பிறந்த தினத்தை தான் கல்லாக அவரை சுமந்து வணங்கி..

பிறகு எங்கள் கிரகத்துக்குள் விண்கற்கள் வரக்கூடாது என்பதற்காகத்தான் பால் வெளியில் கற்களை வீசுகிறோம் என்றது.. அதற்காக இப்படியா.? பாதிக்கப்படுவது நாங்கள் தானே.. கொஞ்சம் யோசியுங்கள் நீங்கள் செய்வது சரியா என்று என்றார் விஞ்ஞானி.

இப்போது மீண்டும் ஊளை (சிரிப்பு) ஏன் நீங்கள் மனிதர்கள் தானே ஆறறிவு உள்ளவர் தானே நீங்கள் மட்டும் விநாயகர் சதுர்த்திக்கு கடலில் தூக்கி போடுவதில்லை..! அது கடல் வாழ் உயிரினங்களை பாதிக்காதா என்றது நக்கலுடன்.. விஞ்ஞானி தலை குனிந்து திரும்பினார்.

மினிலா கிரகம்

#மினிலா_கிரகம்

கி.பி.2020... பூமியில் இருந்து கிளம்பிய கலாம் 2020 என்னும் அந்த இந்திய விண்கலம் மினிலா கிரகத்தை இன்னும் 30 நிமிடங்களில் அடையும் என மானிட்டர் சொன்னது அதை செலுத்திக் கொண்டிருந்த சாதனா சவுத்ரி தன்னுடன் பயணித்த சகவீரனான ஆகாஷை நோக்கி புன்னகைத்தாள்.

சாதனா சவுத்ரி பெங்காலைச் சேர்ந்தவள் ஆகாஷ் சென்னையைச் சேர்ந்தவன் இந்த கலாம் 2020 கலத்தில் பிரயாணிக்க இந்தியா முழுவதும் 500இளம் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் இறுதிக்கட்டத்தில் 50 பேராக மாறி.. அதிலும் சிறந்த 5 பேரில் 2 பேராக தேர்ந்தெடுக்கபட்டனர்.

இவர்கள் செல்லும் மினிலா கிரகம் 2016 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப் பட்டது.. நிலாவுக்கும் பூமிக்கும் இடையில் மறைவாக ஒதுங்கியிருந்த இக்குட்டி கிரகத்தை கண்டறிந்தவனே ஆகாஷ் தான்.. அவன் தான் இதற்கு குட்டிநிலா எனப் பெயர் வரும்படி மினிலா எனப் பெயரிட்டான்.

சூரியவெளியில் பூமி தோன்றிய போது பூமியின் ஒரு பகுதியாக வெகு தூரத்தில் தூக்கியடிக்கப்பட்ட இக்கிரகம் எத்தனையோ லட்சம் ஆண்டுகள் கடந்து மீண்டும் தாய்க்கிரகமான பூமியைத்தேடி தன் பாதையை மாற்றி வந்தது..புறாக்கள் தங்கள் இருப்பிடம் தேடிவந்ததைப் போல இருந்தது.

இந்தக்கிரகத்தில் மனிதர்கள் இருப்பதும் ஆக்சிஜன் மற்றும் நீர் இருப்பதும் ஆராய்ச்சியில் தெரிய வர இக்கிரகத்தை தொடர்பு கொண்டபோது அங்கிருந்து பூமியின் மொழியிலேயே அழைப்பு வந்தது.. விஞ்ஞானிகள் அதிசயமடைந்தார்கள்.. உடனடியாக இதற்கு திட்டம் வகுத்தார்கள்.

அடுத்த3 ஆண்டுகளில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டு இவர்கள் இருவரும் இப்போது வெற்றிகரமாக பயணித்து இலக்கை நெருங்கியிருக்கிறார்கள்.. எல்லாம் தயார் தானே ஆகாஷ் என்றாள் சாதனா.. பாதுகாப்பு கவசங்களை பொருத்திக் கொண்டாய் தானே இறங்கும் போது ஜெர்க் இருக்கலாம்.

ஆக்சிஜன் அங்கு இருந்தாலும் ஆக்சிஜன் மாஸ்க்கும் தயாராகவுள்ளது அல்லவா.? கட்டைவிரலை உயர்த்தினான் ஆகாஷ்.. எல்லாம் தயார் சாது.. நான் லேண்ட் ஆனதும் இறங்குகிறேன் சரியாக 90 வினாடிகள் கழித்து நீ இறங்கவேண்டும் ஓ.கேவா.. நம் பாடங்கள் நன்றாக நினைவிலிருக்கிறது ஆகாஷ் என்றாள்

இன்னும் எவ்வளவு நேரம் சாது,? 5 நிமிடங்கள் என்றவள் ஹேய்ய்ய்ய் லுக் தேர் என்று அலறினாள் அதில் ஆச்சரியம் எதிரொலித்தது.. மெல்ல மானிட்டரைப் பார்த்த ஆகாஷ் அதை விட வியப்படைந்தான்.. ஆம் கீழே சென்னை மாநகரம் தெரிந்தது.. இது எப்படி அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

அதே ரிப்பன் பில்டிங், சென்ட்ரல் ஸ்டேஷன், வள்ளுவர் கோட்டம், LIC பில்டிங், அட மெரீனா கடற்கரை, அண்ணா & எம்.ஜி.ஆர். சமாதி ஒன்றும் விளங்கவில்லை நேராக அவர்கள் கலம் இறங்கியது மெரினா பீச்சில்.. பூமியில் கண்ட்ரோல் அறைக்கு இந்தத் தகவல் போனது.

அவர்களும் பரப்பானார்கள்.. ஜாக்கிரதை எதுவும் விர்ச்சுவல் எஃபக்டாக இருக்கும்.. அங்கு நம் மொழியில் பதில் வந்த போது சிறிது சந்தேகம் இருந்தது இது இந்தியாவை பிடிக்காத ஏதோ ஒரு நாட்டின் சதியாகக் கூட இருக்கலாம்.. பாதுகாப்பு ஆயுதங்களை தயாராக வையுங்கள்.

ஆகாஷ் மட்டுமே இறங்க அனுமதி சாதனா கலத்திலேயே இருக்கட்டும். அடுத்தடுத்து கட்டளைகள் வந்தன. சாதனா கவலையுடன் கேட்டாள் பேசாமல் திரும்பிவிடலாமா ஆகாஷ்.. எனக்கு பயமாக இருக்கிறது என்றாள் ச்சீ என்ன இது சாதனா நம்தேசத்தின் கோடிக்கணக்கான ரூபாய்கள்..

இந்த பயணத்திற்கு செலவழிக்கப்பட்டுள்ளது இதில் மரணம் வந்தாலும் அது பற்றி கவலையில்லை இதுவும் ராணுவசேவை போலத்தான்.. அய்யா கலாம் பேரில் ஆராய்ச்சிக்கு வந்துவிட்டு பின் வாங்குவதா! கவலைப்படாதே நான் போய் வருகிறேன் என்றான். ஆல் தி பெஸ்ட் &கேர் ஆகாஷ் லவ் யூ ஸோ மச் டியர்.

கையசைத்துவிட்டு கலத்திலிருந்து நீண்ட ஏணியில் இறங்கினான் பீச் மணலில் இறங்கினான்.. டேய் ஷங்கர் பட ஷூட்டிங்கு டோய்ன்னு சிறுவர்கள் குரல்.! அட தமிழ்..! வியந்தான் இன்னா சாரு சுண்டல் துண்றியா தேங்க்கா மாங்கா பட்டாணி போட்டது ஜ்ஜுடா இருக்கு என்றான் சுண்டல்காரன்.

ஒரு நிமிடம் திகைத்தான் எல்லோரும் நடக்கிறார்கள் புவி ஈர்ப்பு விசை இருக்கிறது சுவாசிக்கிறார்கள் தமிழ் பேசுகிறார்கள் இத்தனையும் விண்வெளியில் எப்படி சாத்தியம்.. அப்போது தான் தன்னாலும் இயல்பாக நடக்க முடிந்ததை உணர்ந்தான் ஆகாஷ்.. ஒரு குரல்"மைடியர் யங் மேன்" 

குரல்வந்த திசையில் தமிழ்சினிமாவில் பணக்கார ஹீரோயினின் அப்பாவாக வரும் தோற்றத்தில் ஒரு குறுந்தாடிக் கிழவர் நின்று கொண்டிருந்தார். வெல்கம் டூ மினிலா என்றார் எங்கே உன் தோழி அவளையும் அழை என்றார். நீங்கள்..?. நான் இந்த கிரகத்தின் தலைவன் மெல்டன்.

விவரங்களை உங்கள் கிரகத்துக்கு அனுப்பிவிட்டேன் இங்கு ஆபத்தில்லை இந்நேரம் உன் தோழிக்கும் தகவல் போயிருக்கும் என்ற போது பின்னால் இருந்து ஆகாஷ் என்று சாதனாவின் குரல்.. அவளும் இறங்கியிருந்தாள். ஆகாஷ் இவர்களை நம்பலாமாம் கண்ட்ரோலில் சொன்னார்கள்.

வாருங்கள் இந்த கிரகத்தின் விருந்தாளிகள் நீங்கள் இன்னும் ஒருமாதம் இங்கு இருக்கலாம் அப்படியே பெங்களூர், மும்பை, ஏன் சாதனாவின் கொல்கத்தா கூட போகலாம்.. இந்த மாஸ்க்கை கழட்டிவிடுங்கள் என்றார். இங்கு ஆக்சிஜன், புவி ஈர்ப்பு, நீர், மொழி எல்லாம் உருவாக்கப்பட்டவை.

எப்படி இதெல்லாம் என்றான்? மெல்ல அவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.. நீங்கள் இருவரும் ஃபேஸ்புக்கில் இருப்பவர்களா.? ஆம் அதற்கென்ன என்றார்கள்.. அப்படியென்றால் உங்களுக்கு நிச்சயம் புரியும் என்று சொல்லிவிட்டு அடுத்து அவர் சொன்ன பதிலில் இருவரும் குலுங்கி குலுங்கிச் சிரித்தார்கள்..

அவர் சொன்ன பதில் #இந்தக்கிரகம்_தான்_இந்தியாவின்_ஃபேக்ஐடி



Sunday 13 September 2015

லோவா கிரகம்

 #லோவா_கிரகம்

லோவா கிரகத்தில் எங்கு பார்த்தாலும் பிளானட் சூப்பர் ஸ்டார் லானீஷ் நடித்த "லோவாலி" திரைப்படத்தின் டிஜிட்டல் போஸ்டர்களும் தோரணங்களும் வானில் லேசர் ஒளியில் பிரம்மாண்டமான லானீஷின் கட் அவுட் பிம்பமும் ஜொலித்தன. டிவி ரேடியோக்களிலும் அதே பேச்சு.

எங்கள் தங்கத்தலைவன் பிளானட் சூப்பர் ஸ்டார் லானீஷ் நடித்த காவியத்தை காண வந்த கண்களுக்கு நன்றி.. உடல் கிரகத்துக்கு உயிர் லானீஷீற்கு அண்ணனின் போர்ப்படைத் தளபதிகள் லானீஷ்" டோல்வா, லானீஷ்" பகீரா, லோவாலி கப்ரீ, லோவாலி ஜெனோ, லானீஷ் லாவா...

இது போன்ற வாசகங்கள் தாங்கிய விர்ச்சுவல் டிஜிட்டல் பேனர்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.. அங்குள்ள லோஜா டிவியில் லோவாலி பட சிறப்பு பேட்டிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.. அந்த கிரகத்து சமூக வலைத்தளமான லீவிட்டரில் பெரும் ஹேஷ் டாக் புரட்சி ஆரம்பமானது.

பிளானட் தல லானீஷ் ரசிகர்களும் சக நடிகனான பிளானட் தளபதி லீவாஜ் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டிருக்க மீம்ஸ்கள் தூள் பறந்தன ஹேஷ் டாகுகள் வைரல் ஹிட்டடித்தன. இந்த சினிமா கலாச்சாரம் அக்கிரகத்தில் சமீபத்தில் தோன்றியது தான் இதற்கு முன் அப்படி இல்லை.

வானில் திடீரென தோன்றியது அந்த விண்கப்பல் அந்த கிரகத்து மன்னரின் ராஜகுருவான லாகேண்டாரின் பிரத்யேக கப்பல் அது கடந்த சில ஆண்டுகளாக அண்டை கிரகங்கள் பலவற்றிற்கு ஓடி ஓ(மோ)டி சுற்றுப் பயணம் போய்விட்டு 4 ஆண்டுகளுக்கு பின்பு இப்போது தான் திரும்புகிறார்.

மெல்ல தன் கப்பலின் ஜன்னல் வழியாக இந்த விளம்பரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே மன்னரின் மாளிகை வந்தடைந்தார்... ஹோ..ஹோ... வாருங்கள் லாகேண்டரே லோவாலி ரிலீஸ் அன்றே வந்துவிட்டீரா என கூவிக்கொண்டு  வந்தான் மன்னன் லீகாண்டன்.

முட்டாளே கோபத்தில் கத்தினார் லாகேண்டர்.. நடு நடுங்கிப் போனான் துர்வாசரை விட பல மடங்கு கோபக்காரர் லாகேண்டர் என்றால் மனிதர்களுக்குப் புரியும்.. என்ன கூத்து நடக்கிறது என்ன இதெல்லாம் கோமாளிக்கூட்டம் இது கிரகமா இல்லை சீரழிந்த சாக்கடையா..!

சினிமாவை பற்றி அவருக்கு விளக்கிக்கூறினான் லீகாண்டன்.. எத்தனை ஆண்டுகளாக இது இங்கு நடக்கிறது என்றார் கோபம் குறையாத குரலில்.. அது நீங்கள் சென்ற அடுத்தாண்டு முதலே என கழுத்தை சொறிந்தான் லீகாண்டன். கருமம் கருமம் நீங்களெல்லாம் பத்தறிவு இருந்துமா இப்படி.?

சரி இந்தக் கண்றாவி கலாச்சாரத்தை இங்கு கொண்டு வந்தது யார்.? என்றார்... என் மகன் லுதானும் தங்கள் மகன் லைகானும் தான். அவர்களை வேறு கிரகத்துக்கு பட்டம் படிக்க அனுப்பினோம் அல்லவா அங்கிருந்து அதைக் கற்றுக் கொண்டுவந்து அதை இங்கு புகுத்திவிட்டார்கள் என்றார்.

முட்டாள்கள்.. ஆமாம் அவர்கள் எந்த கிரகத்தில் இருந்து இதைக் கற்றுக் கொண்டார்கள்.? பூமி என்றான் லீகாண்டன்.."எனக்கு இந்த கிரகமே பிடிக்கவில்லை"எனப் பல்லைக் கடித்த லாகேண்டர் திடீரென கண்கள் மின்ன யார் இந்த அழகி என்றார் லோவாலி பட போஸ்டரைக் காட்டி 

இவளா இவள் தான் தற்போது நம் கிரகத்து ஆண்களின் கனவுக்கன்னி லோவீன்தாரா... இன்று கூட முதல் காட்சிக்கு தியேட்டருக்கு வருகிறாள் என்றான் லீகாண்டன். சட்டெனக் கூவினார் லாகேண்டர் முட்டாள்... இதை ஏன் முன்பே சொல்லவில்லை சீக்கிரம் தியேட்டருக்குக் கிளம்பு என்றார். 

இப்போது அவருக்கு "கிரகம்" பிடித்தது.!



வின்சியஸ் கிரகம்

ந்#வின்சியஸ்_கிரகம்

வின்சியஸ் கிரகம் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது அவர்களின் வருமானம் மிக மிகக் குறைந்து இருந்தது அவர்கள் நாணயமான வீலாடர்  கிரகத்தின் பணக்கார நாடான வீஎஸ்ஸானோ மதிப்பில் மிக மிகக் குறைந்தது.. பங்குச்சந்தைகள் வீழ்ந்தன. நிதி அமைச்சகம் கூடியது.

என்ன செய்யலாம் என்றபோது கிரகத்தின் இலவசங்களை நிறுத்தலாம் என்றார் நிதி மந்திரி வினாகி. அது நல்ல யோசனையாகப் பட்டது அனைவருக்கும்.. முதலில் இலவசமாக கொடுக்கப்பட்டு அதனால் சுமை அதிகமாகும் செலவினம் எதுவென்று ஆராய்ந்து பார்த்தார்கள்.

வின்சியசில் கல்வியும் மருத்துவமும் இலவசம்..! இதை நிறுத்தினாலே அடுத்த 5000 ஆண்டுகளுக்கு பிரச்சனை இல்லை என்றார் வினாகி..! சரி இதை பணம் கொழிக்கும் துறையாக மாற்றுவது எப்படி என அவர்கள் கிரகத்து வலைத்தளமான வீகுளில் பரபரப்பாகத் தேடினார்கள்.

விடை..  பூமியில் இந்தியாவென வந்தது உடனடியாக இந்தியாவைத் தொடர்பு கொண்டார்கள் சாட்டிலைட் வீடியோ கான்பரன்சில் உரையாட முடிவு செய்தார்கள்.. இறுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வித் தந்தை கண்ணனும் மக்கள்மருத்துவர் மகாதேவனும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

முதலில் கல்வி.. கண்ணன் திரையில் தோன்றினார்..வின்சியஸ் கல்வி முறை பற்றிக் கூறுங்கள் என்றார்.. இங்கு கல்வி இலவசம் என்றார் வினாகி.. முட்டாள்களே முதல் கோணல் முற்றிலும் கோணல் கல்வியை இலவசமாகத் தருவதே முட்டாள்தனம்.. அதற்கு கட்டணம் வசூலியுங்கள் என்றார்.

கல்விக்கு கட்டணமா..! அது எப்படி? என்றார் வினாகி உங்கள் ஆரம்பக்கல்விப் படிப்பென்ன.? கண்ணன்.. இங்கு வில்.கே.ஜி மற்றும் வில்யூ.கே.ஜி இதுதான்.. அதற்கு என்ன கட்டணம்..? இங்கு மேல்படிப்புக் கல்வியே இலவசம் குழந்தைகள் படிப்புக்கு கூடவா கட்டணம் என்றார் வினாகி.

மூடர்களே.! பணம் கொட்டும் கல்வியை இப்படியா வீணடிப்பது.! உங்கள் ரூபாயின் பேரென்ன என்றார் கண்ணன். வீலாடர் என்றார் வினாகி.. அதன் மதிப்பு இந்திய ரூபாயில்.? உங்கள் 100 ரூபாய் எங்கள் கிரகத்தில் 10 ரூபாய் என்றார் வினாகி.. ஆஹா எவ்வளவு நல்ல விஷயம் இது..!

உடனடியாக உங்கள் வில்.கே.ஜிக்கு அட்மிஷன் 25 ஆயிரம் வீலாடர்களும் வில்யூ.கே.ஜிக்கு 50 ஆயிரம் வீலாடர்களும் கட்டணம் வையுங்கள் என்றார் கண்ணன். வில்.கே.ஜிக்கு 25 ஆயிரமா.! வியந்தார் வினாகி. ஆம் அது மட்டுமல்ல உங்கள் குழந்தைகள் எப்படி பள்ளி வருகிறார்கள்.? என்றார்.

அரசின் பறக்கும் தட்டுகள் அவர்களைப் போய் வீட்டிலிருந்து அழைத்து வந்து பள்ளியில் இறக்கிவிடும் மீண்டும் மாலை வீடு போய் சேர்க்கும் என்றார் அதற்கு கட்டணம் எவ்வளவு என்றார் கண்ணன்.. இதற்கு எதற்கு கட்டணம்? வினாகி வினவ.. யோவ் லூசு இதையுமா இலவசமாகத் தருவது.?

உங்கள் பறக்கும் தட்டில் எவ்வளவு பேர் அமரலாம்? எனக்கேட்டார் கண்ணன் அதில் 50 பேர் அமரலாம் பிள்ளைகளின் நலன் கருதி நாங்கள் 26 பேருக்கு மேல் ஏற்றமாட்டோம் என்றார் வினாகி. அடத்தூ.. யோவ் நீங்கள் அதில் 100பேரை ஏற்றுங்கள் அவர்களிடம் மாத தட்டுபீஸ் வாங்குங்கள்.

என்ன நூறுபேரா பிள்ளைகளுக்கு அசவுகரியமாக இருக்குமே என்றார் வினாகி. அப்போ நீங்க சவுரியமா இருக்கமாட்டிங்க பரால்லையா என்றார் நாய்சேகர் பாணியில்.. இல்லையில்லை நீங்கள் ஆலோசனை தாருங்கள் என்றார் பதட்டத்துடன் வினாகி. நான் சொல்றதை கேளுங்க..

பிள்ளைகள் படிக்க ஃபீசு,புக் ஃபீசு,பஸ் ஃபீசு, ஸ்நாக்ஸ் ஃபீசு, வாட்டர்ஃபிசு, யூனிஃபார்ம் பீசு,லஞ்ச்ஃபீசு, ட்யூஷன்ஃபீசு, ரிவிஷன்ஃபீசு, டூர்ஃபீசு, டெஸ்ட்ஃபீசு,லேப்ஃபீசு, இப்படி ஃபீசுகளை வாங்கிக் குவியுங்கள் என்றார் கண்ணன். இது அநியாயம் மக்கள் ஃபீசாகிவிடுவார்களே என்றார் பினாகி.

அப்ப சரி.. நீங்க ஃபீசா போயி நிதி நெருக்கடியில் தள்ளாடுங்க என்றார் கண்ணன்.கொஞ்சம் யோசித்த பினாகி சார் நீங்க சொல்றதுதான் சரி இதில் பாவம் புண்ணியம் பார்க்கக் கூடாது இனி வின்சியசில் பென்சிலுக்கு கூட ஃபீஸ் உண்டு ஓகேவா எனச்சொல்ல.. சூப்பருய்யா..

பென்சில் ஃபீசா.. இந்த டீலிங் நல்லா இருக்கே.! உடனடியா இங்கேயும் அமுல் படுத்திடுறேன் சரி எதுவானாலும் கூப்பிடுங்க திரையில் மறைந்தார் கண்ணன். அடுத்து மக்கள் மருத்துவர் மகாதேவன் தோன்ற பிரச்சனையை சொன்னார்கள். அவர் எல்லாம் கேட்டுவிட்டு ஒன்று கேட்டார்.

ஓ இந்த பிரச்சனையா!பதில் சொல்றேன் அதுக்கு முன்னாடி என் கன்சல்டிங் ஃபீஸ் எவ்வளவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?என்றார். வின்சியஸ் கிரக வாசிகளுக்கு எல்லாம் புரிந்தது நன்றி டாக்டர் எங்களுக்கு இனி உங்கள் ஆலோசனை தேவைப்படாது நன்றி வணக்கம் என கட் செய்தார் வினோகி.