Wednesday 27 September 2017

மீண்டும் மிசெளரி

#மீண்டும்_மிசெளரி

அமெரிக்காவில் ஒரு தமிழ்ச்சங்கத்திற்கு முதலாண்டு நிகழ்ச்சி செய்த பின்பு அடுத்த ஆண்டும் அதே கலைக்குழுவினர் அதே ஊருக்குச் செல்வது மிக மிக மிக அபூர்வம்.. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்த ஒரே கலைக்குழு நாங்கள் மட்டுமே.! இம் முறை ஈரோடு மகேஷிற்கு பதில் சுட்டி அரவிந்த், நான் (வெங்கடேஷ்) கிறிஸ்டோபர், மேலூர் சசி என மூவரும் ஏற்கனவே அங்கு நிகழ்ச்சி செய்த பழைய முகங்கள் தான்.. இம்முறை எங்கள் அமெரிக்க பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது மிசெளரி நிகழ்ச்சி.!

அதற்கு முன்பு நாங்கள் நிகழ்ச்சி செய்த ஊர் கான்ஸாஸ் அதே மாநிலம் தான் என்றாலும் நாங்கள் இருந்த கான்ஸாஸ் சென்னை என்றால் மிசெளரி திருவனந்தபுரம்.. மேலும் கான்ஸாஸ் நிகழ்ச்சி காலையிலேயே இருந்தது.. மாலை மிசவுரியில் இருக்கவேண்டும் கடந்த முறை விஸ்கான்சினுக்கு எங்களை மின்னசோட்டாவில் இருந்து அழைத்துச் சென்ற சிவானந்தம் சாரும் சுந்தரும் மீண்டும் இந்த ஆண்டும் உதவினார்கள் அவர்கள் போகும் பாதை வேறு..!

எங்களை இறக்கிவிட்டு சென்றால் 150 மைல்கள் அதிகம் இருப்பினும் அதை பொருட்படுத்தாது உதவினார்கள்.. கான்ஸாசில் நிகழ்ச்சி பெரு வெற்றியடைய அவர்கள் அன்புப்பிடியில் இருந்து விலகி கிளம்ப அரைமணிநேரம் தாமதம் இருப்பினும் 7 மணிக்கு மிசவுரியில் இருக்க வேண்டிய நாங்கள் இந்த தாமத்திலும் 7:15 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தோம்.. வரும் போதே அமர்க்களமாய் தமிழர் பண்பாட்டுப்படி வாழையிலை விருந்து நடை பெற்றுக் கொண்டிருந்தது.. வந்த களைப்பில் உண்டோம்.!

அப்படியே தமிழகத்தின் பாரம்பரிய அறுசுவை உணவுகள் ஒரு விநாடி நாங்கள் இருப்பது செயிண்ட் லூயிசா சென்னையா என்ற குழப்பம் ஏற்பட்டது.. கடந்த ஆண்டே இங்கு வந்ததால் தமிழ்ச்சங்கத்தில் அனைவரும் வந்து அன்போடு விசாரித்தனர்.. அறுசுவை விருந்து முடிந்து நகைச்சுவை விருந்து துவங்கியது.. பெரும்பாலும் அமெரிக்க மண்ணில் நடக்கும் எந்த தமிழ்விழாக்களும் 8 மணிக்கே முடிந்து விடும் ஆனால் எங்கள் நிகழ்ச்சி துவங்க 8:30 மணி ஆகியும் கூட்டம் கலையாமல் அப்படியே இருந்தது.. எங்கள் பயணச் சிரமத்தை

நண்பர் விஜய் ஏற்கனவே அறிவித்து இருந்ததால் அனைவரும் எங்களுக்கு அன்பு செலுத்தும் விதமாக அங்கிருந்தனர் என்பதை பின்னர் தெரிந்து நெகிழ்ந்தோம்.. இம்முறை அரவிந்த் எங்களோடு சேர்ந்து கொள்ள அவரது புல்லாங்குழல் இசையில் துவங்கி கிறிஸ்டோபர் & சசியின் நகைச்சுவையில் அதிர்ந்து, நானும் அரவிந்தும் ஆடிய காம்பினேஷன் காதல் கதைக்கு குதூகலித்து, மிகச் சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.

இரண்டாவது முறையும் செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேனின் பூரிப்பில் நாங்கள் நிற்க இரு முறையும் எங்களுக்கு வாய்ப்பளித்த கேப்டனாக விஜய் மணிவேல் பெருமிதப்பட மறுநாளே சிகாகோ செல்ல வேண்டும் என்பதால் விரைந்து விடை பெற்றுக் கொண்டு திரும்பினோம். அடுத்த நாள் காலையில் விஜய் வீட்டில் வழக்கம் போல மதுரை ஸ்டைல் சாப்பாடு.. மதிய உணவை அழகாக பேக்கிங் செய்து தந்து வழியனுப்பினார்கள்.. இவ்வளவு அவசர பயணத்திலும்..

கடந்த முறை போகாத செயிண்ட் லூயிஸ் ஆர்ச்சுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டிவிட்டு காரை கிளப்பினார் விஜய்.. அங்கு அந்த ஆர்ச் புதுப்பிக்கும் பணி நடந்துவருவதாக சொன்னார்.. சிலு சிலு காற்றடிக்கும் மிசெளரி ஆற்றங்கரையில் ஒரு வாக் போய்விட்டு கிளம்ப மனமின்றி காரில் ஏறியிருந்தோம்.. கார் மெல்ல ஒரு வளைவில் திரும்புகையில் வானவில் போல தெரிந்த செயிண்ட் லூயிஸ் ஆர்ச் எங்களை மிசெளரிக்கு வரவேற்கும் வரவேற்பு வளைவாக தெரிந்தது.

பை பை மிசெளரி மீண்டும் வருவோம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த எனச் சொல்லிக் கொண்டே இரண்டாம் முறையும் வெற்றியோடு திரும்பினோம் மிசெளரி தமிழ்ச்சங்கத்தினர் அனைவருக்கும் நன்றி!