Sunday 26 April 2015

புருடா கப்ஸா ரீல்..

வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியாவில் மகாகவி பாரதியாரைப் பற்றி கேள்விப் பட்டிருந்தார்.. பாரதியின் பாடல் வரிகளில் இருந்த எழுச்சியும் புரட்சியும் அவரை வெகுவாக கவர்ந்தன.

இந்நிலையில் பாரதி தமிழ் தவிர ஆங்கில மொழியிலும் புலமை உள்ளவர் எனத் தெரிந்து கொண்டார்.. அவர் ஆங்கிலத்தில் பாடல் எழுதினால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சிறப்பு என நம்பினார்.!

அப்போது பாரதியார் ஆங்கிலேய அரசால் தேடப்படும் குற்றவாளி.. பிரெஞ்சு காலனியான புதுவையில் பதுங்கி இருந்தார். இதை தெரிந்து கொண்ட சர்ச்சில் பாரதியாருக்கு ஒரு ரகசிய தூதுவரை அனுப்ப முடிவு செய்தார்.!

அந்தத்தூதரும் பாரதியாரை ஒரு ரகசிய இடத்தில் சந்தித்தார்.. ஆங்கிலப்பாடல் எழுத வேண்டும், விக்டோரியா மகாராணியை புகழவேண்டும் போன்ற சர்ச்சிலின் கோரிக்கைகளை சொன்ன தூதுவர் பாரதியின் சம்மதத்தை கேட்டார்.

அதற்கு பரிசாக பாரதியார் மீதுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படும், அவர் தலைமுறையினருக்கு உயர்ந்த குடும்ப பிரிட்டிஷ் குடியுரிமை வழங்கப்படும் பாரதிக்கு சர் பட்டம் வழங்கப்படும் அதற்கும் மேலாக அவருக்கு அளிக்க இருந்த தொகை எவ்வளவு தெரியுமா?அந்த காலத்து பிரிட்டிஷ் ஒரு கோடி ரூபாய்.!!!!

இப்போதைய அதன் மதிப்பு 650 கோடி ரூபாய்..! அதற்கு பாரதி சொன்னார் பரங்கியர்களே என் தாய் மண்ணை அடிமையாக்கியது போதாது என்று என்னையுமா அடிமை ஆக்கப் பார்க்கிறீர்கள் இந்திய தாயை பாடிய நான் ஒரு போதும் உங்கள் ராணியை பாடப்போவதில்லை.. செத்து மடிவேனே தவிர..

ஆங்கில அரசிடம் பணிய மாட்டேன் என முழங்கினாராம்.. தூதரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்.. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சர்ச்சில் வியந்து நாட்டில் இப்படியும் உத்தமர்கள் உள்ளார்களே என சிலாகித்து பலரிடம் இதைப் பற்றி தான் சாகும் வரை பேசிக்கொண்டிருந்தாராம்.

இது தான் நம் மகாகவி பாரதி.. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..

எழுத மறந்த ஒன்று முதல் கமெண்ட்டில்....

Saturday 25 April 2015

ஜென் உணவு..

ஜென் துறவிகளுக்கு தேநீர் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.. அவர்கள் தேநீர் அருந்துவதே ஜென் நிலை என்பார்கள்.. தமிழகத்தில் இருந்து ஒருவர் சீனா சென்றார் அங்கு புகழ்பெற்ற ஒரு ஜென் குருவை சந்தித்தார்.. குருவே நான் தமிழ்நாட்டுக்காரன் போதி தர்மர் வாழ்ந்த நாட்டவன் என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளவும் எனக் கேட்டான்.. அந்த குரு அவன் சொல்லைக் கேட்கவேயில்லை.!

ஆனந்தமாக இரு கைகளிலும் ஒரு பீங்கான் கோப்பையை பிடித்து ஆவி பறக்கும் தேநீரை சொட்டுச் சொட்டாக உறிஞ்சிக்குடித்துக் கொண்டிருந்தார்.. தமிழர் திரும்பத் திரும்ப கேட்டும் அவரது கவனம் கலையவே இல்லை.! ஒரு வழியாக அந்தக் கோப்பை காலியானதும் மெல்ல வாய் துடைத்து தமிழரைப் பார்த்தார் ஜென் குரு.. இப்போது சொல் நீ யாரப்பா என்றார் தமிழரைப் பார்த்து.

தமிழருக்கு கோபம்.. குருவே இதுவரை நான் யார் என்று 6 முறை கூறிவிட்டேன் அது உங்களுக்கு கேட்கவில்லையா என்றார்.. அதற்கு ஜென் குரு சொன்னார் தம்பி நான் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன் அது தான் என்றார்.. அதனாலென்ன தேநீர் தானே அருந்தினீர்கள் உங்கள் செவி கேட்காதா என்றார் தமிழர்.! தம்பி.. ஜென் குருவாக இருப்பவர்களுக்கு தேநீர் அருந்துவதும் ஒரு யோகநிலையே..!

ஐம்புலன்களும் தேநீரை அருந்தும் போது அதையே ரசிக்கும் அது தான் ஜென் நிலை அது உனக்குப் புரியாது அது புரியும் வரை உன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது.. வேறு என்ன வேண்டும் கேள் என்றார்.! தமிழர் யோசித்தார் சரி நாளை உமக்கு என் மனைவி கையால் விருந்து சம்மதமா என்றார். சரி என ஒப்புகொண்டார் குரு.. அப்போ நான் விடை பெறுகிறேன் குருவே என தமிழர் சொல்ல...

குறுக்கிட்டார் குரு "மன்னிக்கவும் தம்பி நான் இன்னும் உன்னை சீடனாக ஏற்கவில்லை அதை பிறகு பார்க்கலாம் அதுவரை அப்படி என்னை அழைக்காதே" என்றார். மறுநாள் தமிழர் வீட்டுக்கு வந்தார் குரு... தேநீர் உட்பட உணவுகள் பரிமாறப்பட்டன.. அதில் ஒரு உணவை மட்டும் குரு சாப்பிடத் தயங்கினார்.. அவரால் அதை சாப்பிடவும் முடியவில்லை.. அந்தத் தமிழரைக் கூப்பிட்டார்..

"இது என்ன உணவு இதை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்னால் இதை ஒரு முறை கூட சகித்துக்கொள்ள முடியவில்லையே " இதன் பெயர் என்ன எனக் கேட்டார். தமிழர் சொன்னார் அய்யா இது தான் உப்புமா நாங்கள் அவசர சமையலுக்கு செய்து உண்பது என்றார்.. எத்தனை வருடமாக உண்ணுகிறீர்கள் இதை என்றார்.. தமிழர் சொன்னார் 20 வருடங்களுக்கும் மேலாக இந்த வார்த்தை முடியும் போது....

"குருவே" என்ற அலறல் கேட்டது... தமிழர் திகைத்து திரும்பிப் பார்த்தார் அவரது காலடியில் கிடந்தார் ஜென் குரு..!

 #உப்புமா_சாப்பிடுவதும்_ஜென்நிலையே

Friday 24 April 2015

வெட்டினாலும் வளரும்.

#சொக்கன்_மாமா

சொக்கன் மாமா முடி திருத்தும் தொழிலாளி சேலம் திருச்சி மெயின் ரோட்டில் எங்கள் கடைக்கு சைடு எதிர்புறம் (வகிடு எடுப்பது போல்)சலூன் கடை  வைத்திருந்தார். பிரத்யேகமாக எங்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்தே வெட்டி விடுவார். அப்பாவின் நண்பர்அவரை சொக்கா சொக்கா என்று அப்பா அழைப்பதை பார்த்து ஒரு முறை நான் சொக்கா நீ என்ன மக்கா என்று டி.ஆர் ஸ்டைலில் என் க்ரியேட்டிவிட்டியை எடுத்து விட வாயில் உதடு தெறிக்கும்படி அப்பாவும் விட்டார் ஒரு அடி..!

மாமா என்று அழை அது தான் மரியாதை என்று சத்தம் போட்டார்.. உதடு கிழிந்து ரத்தம் வடிந்த என்னை வாரியணைத்துக் கொண்ட சொக்கன் மாமா தான் என்னண்ணா இது புள்ளைய இப்படியா நத்தம் வர்றா மாறி அடிக்கிறது சின்னப்பையன் தானே என்னைய சொன்னா என்ன தப்பு..! என்றபடி வெளியே கடைக்கு கூட்டிப்போய் சர்பத் கடை ஐஸ்கட்டியை உதட்டில் வைத்து வலியை குறைத்து வேணுங்கறதை வாங்கிக்க கண்ணு என்று என் பைகளை மிட்டாய்களால் நிரப்பினார்.. என் மனதிலும் நிரம்பினார்.

அன்றுமுதல் எப்போதும் அவரை சொக்கன் மாமா என்று தான் அழைப்போம். பழைய நடிகர் மாலி என்பவர் கருப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி ஒரு தோற்றம். கணுக்கால் தெரிய கதர் வேட்டி காமராஜர் ஸ்டைலில் முரட்டுக் கதரில் முக்காகை சட்டை முள் முள்ளாக லேசான நரைத்த தாடி இது தான் சொக்கன் மாமா.TASரத்தினம் பட்டணம் பொடி மட்டை இடுப்பிலிருந்து லாவகமாக எடுத்து அதை இரு விரலில் ஒரு சிட்டிகை அள்ளி மூக்கில் வைத்து சர்னு உறிஞ்சும் ஸ்டைல் ஒரு கெளபாய் ஹீரோ துப்பாக்கியை கையாள்வது போல அவ்வளவு ஸ்டைலாக இருக்கும். 

அவரது அந்த பொடி மணமும் கதர் உடை சலவை மணமும் எனக்கு பிடிக்கும்.அப்பாவின் மேற்பார்வையில் எங்களுக்கு நடக்கும் முடிவெட்டு ஒரு கடா வெட்டு போல மாதாமாதம் நடக்கும்.. பலிபீடத்தில் (பலகை) அமர வைக்கப்பட்டு சொக்கன் மாமாவின் மிஷின் எங்கள் தலையில் ஓடுவதை பார்த்தபின்பு தான் புல் வெட்டும் மிஷின் கண்டுபிடிக்கப்பட்டது என்றால் சத்தியமாக அதை நான் ஒப்புக்கொள்வேன். ஆசை தீர அது ஓடிய பின்னும் கடைசியாக அப்பா ஃப்ரூப் பார்ப்பார்.!

இடது காதுக்கு மேல இன்னும் கொஞ்சம் குறைச்சிடு (கரைச்சிடு) சொக்கா..பிழைகள் திருத்தப்பட்டு அப்பா தலையாட்டும் போது நம் தலை தொங்கியிருக்கும்.. கண்ணாடியில் பார்த்தால் பரதேசி அதர்வா கூட நம்மை கிண்டல் செய்வார்.. பட்டையும் கொட்டையும் அணிந்தால் ஏதாவது ஒரு மடத்தின் இளைய சந்நியாசின்னு ஒப்புக் கொள்ளும் அளவுக்கு எங்கள் தோற்றம் இருக்கும். ஒரே மகிழ்ச்சி சொக்கன் மாமா போகும் போது கொடுக்கும் புளிப்பு மிட்டாய்.! 

சோகத்தை ஸ்வீட் எடு கொண்டாடு என அன்றே கொண்டாடியிருக்கிறோம். எனக்கு தம்பிக்கு அப்பாவுக்கு எல்லோருக்கும் முடித்துவிட்டு 15 ரூபாய் வாங்கிக் கொண்டு கிளம்புவார் இதில் அப்பாவுக்கு செய்யும் ஷேவிங்கும் அடங்கும்.. சிலநேரம் அப்பா 20 ரூபா தந்து வச்சுக்கோ என்பார்.வேணாங்கண்ணா தேவைப்பட்டா வாங்கிக்கிறேன் என்பார்.. மிகச்சரியாக 15 ரூபாய் அதற்கு மேல் நயா பைசா கேட்கமாட்டார் இது என் 5 வயது முதல் 13 வயது வரை 8 ஆம் வகுப்பு படிக்கும் போது சொக்கன் மாமா இறந்துவிட்டார் அதன் பிறகு தான் சலூன் கடை எனக்கு பரிச்சயம்.

இப்போ ஃபார்வர்டு பேக்..இந்த காலத்துக்கு வருவோம்... 2015 சென்னையில் புகழ் பெற்ற சலூன் அது முடி வெட்ட 150 ரூபாய் ஷேவிங் 75 ரூபாய் என நியாயமாய்(!?) கட்டணம் வாங்கும் கடை.. சார் புது ஹேர் ஸ்டைல் டோனி ஸ்டைல் கட் பண்ணவா... அது என்ன ஸ்டைலுப்பா என்றேன்.. சார் அது பேரு ஜார்ஹெட் 500 ரூபா ஆகும் இது தான் இப்ப சிட்டியில ஹாட் இந்த போட்டோ பாருங்க என டோனியின் போட்டோ ஒன்றைக் காட்டினார்.!

அதைப்பார்த்ததும் நினைவுகளில் சொக்கன் மாமா வந்தார்.. அப்படியே முப்பது வருடங்களுக்கு முன் வீட்டிற்குள் எங்களுக்கு வெட்டிய அதே ஸ்டைலில் டோனிக்கு முடி வெட்டப்பட்டிருந்தது.. இந்த போட்டோவை சிறு வயதில் பார்த்திருந்தால் நாங்கள் டோனிக்கு வெட்டியது சொக்கன் மாமா தான் என சத்தியமே செய்திருப்போம்.. இதுக்கு 500 ரூபாயா.?15 ரூபாய் வாங்கிய அவர் முகம் நினைவில் வந்தது. 

வேண்டாம்பா ரெகுலர் கட்டிங் வெட்டு என்ற போது கண்ணில் நீர் வர கண்ணை மூடினேன்.... மீண்டும் ப்ளாஷ் பேக்.... அன்று சலூனில் இருந்து திரும்பும் போது வீட்டில் அப்பா கண்ணாடி முன் நின்று செல்ஃப் ஷேவ் செய்துக் கொண்டிருந்தார்.. ஏம்பா நீங்களே பண்ணிக்கிறிங்க சலூனுக்கு போகலியா.? என்று கேட்டேன்.. அப்பா மெல்ல சொன்னார்.. போகலாம்பா... ஆனா அங்க உன் சொக்கன் மாமா இருக்க மாட்டானே என்றார்.. அவர் கண் கலங்கியதற்கு அர்த்தம் இன்று புரிகிறது..

#சொக்கன்_மாமா_நினைவுநாள்_இன்று

Thursday 23 April 2015

தொலைந்தும் தொலையாத நினைவுகள்.

சேலத்தில் என் தந்தை செல்வச் செழிப்புடன் வாழ்ந்த காலம். எனக்கு அப்போது 8 வயது தம்பிக்கு 6 வயது.. எங்கள் வீடு இருந்தது நாராயண நகரில் அப்பாவின் ஓட்டல் கடை இருந்தது குகையில்.. (சேலத்தில் ஒரு இடத்தின் பெயர்) இது போல ஒரு கோடை விடுமுறையில் நானும் என் தம்பியும் வீட்டுக்கருகே விளையாடும் கொண்டு இருக்கையில் அந்த பிரசித்தி பெற்ற பிரயாணம் தொடங்கியது.

யார் கேட்டது எதனால் அப்படி ஒரு முடிவெடுத்தோம் என்பதெல்லாம் என் நினைவு அடுக்குகளில் இல்லை. எங்கோ இடுக்கில் மாட்டிகிச்சு போல. அப்பாவை பார்க்க கடைக்கு போலாமாடா என்று நான் கேட்டது நினைவுக்கு வந்தது. தொடங்கியது அந்த பிரசித்தி பெற்ற பயணம்..! நாராயண நகர் to குகைஎன்னோடு விளையாடிய அந்தத் தெரு நண்பர்களும் என்னைத் தொடர்ந்தனர் ( அன்னிக்கே நமக்கு நிறைய ஃபாலோயர்ஸ்)

கல்லாங்குத்து வழியாக போஸ் மைதானம் வந்து ஜெயா தியேட்டர் & நியூசினிமா கடந்து விட்டால் அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் தான் அப்பாவின் கடை என்பது கூகுள் மேப் போல என் மூளையில் பதிவாகி இருந்தது. அடிக்கடி வண்டியில் என்னை அழைத்துப் போகும் வழி என்பதால்.. ஆனால் இம்முறை நடந்து போகிறோம் ஒரு குட்டி மாநாடு போல போஸ் மைதானத்தில் பாம்பாட்டி வித்தை நடந்து கொண்டிருக்க அங்கே செட்டிலானோம்.

தமிழ் சினிமா டைரக்டர்கள் சொல்ற மாதிரி இங்க கட் பண்ணி எங்க வீட்டுகிட்ட சீன் ஓபன் பண்ணா தெருவே களேபரமா ஆகி குழந்தைகளைக் காணாத பெற்றோர்கள் அவர்களைத் தேடி கடைசியில் என்னோடு மற்ற பிள்ளைகள் இருந்தாங்கன்னு தெரிஞ்சுகிட்டு எங்க வீட்டுக்கு வந்து நிற்க.. அதே நெருப்பு எங்க வீட்டுக்கும் பத்திக்கிச்சு.. எங்களை அங்க பார்த்தேன் இங்க பார்த்தேன்னு அப்பவே சிலர் அந்த காலத்து வாட்ஸப் செய்திகளாக மாற.. நாங்கள் போன திசைக்கு நேர் எதிரில் எங்களைத் தேடி பல படைப்பிரிவுகள் கிளம்பின.

வீட்டில் இருந்து கடைக்கு தகவல் போக அப்பா விழுந்தடித்துக் கொண்டு வீடு திரும்பினார் எங்கள் உறவினர் அண்ணன் அசோகன் அவர்கள் அப்போ சப் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவரது ஆலோசனையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. கட் பண்ணா இங்க கடைசி வரை பாம்பாட்டி கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடப் போவதில்லை என்பது எனக்கு தான் உறைத்தது.. சலிப்புடன் அங்கிருந்து கிளம்பினோம்.

போஸ் மைதானத்தை தாண்டி சாலையை கடந்து இடது புறம் திரும்பினால் ஜெயா தியேட்டர் ஆனால் சாலையின் மறுபுறம் உள்ள மைதானத்தில் கழைக்கூத்தாடி வித்தை நடந்து கொண்டிருக்க அடுத்த எண்டர்டெயின்மெண்டை ரசிக்க எங்கள் பயணம் அங்கு தொடர்ந்தது. கட் பண்ணா இங்கே எங்க அம்மா அழ அப்பா திட்ட ஊரே எங்களைத் திட்ட அங்கு நிலவரம் கலவரமாக இருந்தது.

இந்த வரியை டைப் செய்யும் போது நினைவு இடுக்கில் இருந்து நினைவுக்கு வந்த ஒன்று.. என் ஃபாலோயர்களில் என் தங்கை (பெரியப்பா பெண்) ந்நாகலெட்சுமியும் அவளோடு கல்பனா என்ற பெண்ணும் எங்களோடு வந்தது.. பெண் பிள்ளைகள் இருந்ததால் களேபரம் அதிகமானது.. எல்லோரது பெற்றோர்களும் எங்கள் வீட்டு வாசலில் கதறி அழுது கொண்டிருக்க புதிதாக அப்பக்கம் வந்தவர்கள் "யாருங்க இந்த வீட்டுல யாரும் இறந்துட்டாங்களா" அப்படின்னு துக்கம் விசாரித்து போனார்கள்.

அப்பாவின் உத்தரவுப்படி கடை ஊழியர்கள் தலைமையில் அடுத்த ரெஸ்க்யூ குழு கிளம்பியது.. இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களைத் தேடிய அத்தனை குழுவினரும் போஸ் மைதானத்தை கடந்து போயிருக்கிறார்கள் நாங்கள் கும்பலில் இருந்ததால் கவனிக்கவில்லை. கடைசியில் ஓடியாடி விளையாடி களைத்து நாங்களே அப்பா கடை அருகே வந்துவிட்டோம் பத்தடி தூரத்தில் கடை.. டேய் வெங்குடு.. எங்க கடை வடிவேலு மாஸ்டர்.!

கடை வரை வந்த எங்களை அப்பாவிடம் அழைத்து சென்று விநாயகர் போல பரிசைப் பெற்றுக் கொண்டார்.. எல்லா பெற்றோருக்கும் தகவல் போக அனைவரும் எங்கள் ஓட்டலுக்கு வந்து பிள்ளைகளை அழைத்து செல்ல எல்லோருக்கும் ஸ்வீட் பாக்கெட் தந்து அவர்களை வழியனுப்பிவிட்டு அப்பா திரும்பினார்.. நான் கேட்டேன் அப்பா ஏன் இவங்க எல்லாம் அழுகுறாங்க... அப்போது விட்டார் ஒரு அறை.. இப்பவும் நினைச்சாலே வலிக்குது..

(கழைக்கூத்தாடி காட்சி ஒன்றை டிவியில் பார்த்த எப்ஃக்டில் இந்த கொசுவர்த்தி சுருள் ஃப்ளாஷ் பேக்)

இளைக்க மறந்த கதை.

#வெங்கடேசும்_வெயிட் லாசும்

(3 நாள் மினி தொடர்) இதில் வரும் சம்பவங்கள் யாவும் உண்மையே.. இவை அனைத்தும் என்னையே குறிப்படுபவை ஆகும்..

அத்தி(அநி)யாயம் - 1

1999 வரை எனது எடை 60 கிலோவை தாண்டியது இல்லை 2000 ஆண்டு பிறந்த ராசியோ என்னவோ அதில் உள்ள சைபர்கள் போல உருண்டையாக தொடங்கினேன் 2001 ஆம் ஆண்டில் 80 கிலோ! இது சாதனையா தெரியவில்லை
முதன் முதலில் வெயிட் குறைக்க ஒரு சாதனம் வாங்கினேன்.!

நீளமான கயிற்றில் ஒருமுனையை ஒரு வளையத்தில் நுழைத்து (கிணற்று ராட்டினம் போல) அதிலிருக்கும் கைப்பிடியை பிடித்து கொள்ள வேண்டும் அந்த வளையத்தை உயரமானஜன்னலில் மாட்டி விட்டு மறு முனையில் குதிரை முதுகில் மாட்டியுள்ள சேணத்தில் இருந்து இரு பக்கமும் தொங்கும் கால்பிடிகள் போல் இருக்கும்.

அதில் இரு கால்களையும் நுழைத்து கொண்டு மல்லாக்க படுத்து கொண்டே கிணற்றில் தண்ணி சேந்துவது போல் கையால் கயிறை இழுத்தால் கால் மேலே போகும் இது போல ஐம்பது முறை பிறகு பக்கவாட்டில் ஐம்பது முறை இப்படி செய்தால் சிக்ஸ்டி பேக் சிக்ஸ் பேக் ஆகும் என்று கடைக்காரரின் பேச்சில் சில்க் ஸ்மிதா தெரிய உடனே 300 ரூபாய்க்கு அதை வாங்கினேன். (2001இல் 300 ரூபாய்)

முதல் நாள் அவர் சொன்னபடி செய்தேன் காலில் மாட்டி கயிறை இழுத்தவுடன் கால் மேலே போனது..அதே வேளையில் வலியில் உயிரும் போனது.! முடியை பிடித்துக் கொண்டு அதை பொறுத்துக் கொண்டேன்.( எத்தனை நாளைக்குதான் பல்லை கடித்துக் கொண்டுன்னு சொல்றது) ஒரு வழியாக வலி பழகியதும் ஒரு வைராக்கியம்.! 

ஏன் ஐம்பது முறை நூறு முறை செய்வோம் என அளவுக்கதிகமாய் ஆசைப்பட்டேன்... வாங்கிய 3வது நாளில் 100 முறை என்னும் மைல் கல்லை எட்டி சச்சின் போல சதமடித்து காலை உயர்த்திக் கொண்டேன் காலரையும்!4வது நாளும் ஒரு சதம்....5 வது நாள் 37, 38, 39, 4... தொம்ம்ம்.... கயிறு அறுந்து விட்டது..!

கால் தரையில் மோதி தாங்க முடியாத வலி... கைப்பிடி ஒரு பக்கமும் கால் பிடி ஒரு பக்கமும் அறுந்து இதற்காக தானே ஆசைப்பட்டாய் வெங்கடேசா என்று என்னை பார்த்து கேட்டது...வேகமாக போய் அந்த கடைக்காரரை பார்த்து நட (அறு)ந்ததை கூறினேன்... 50 முறை செய்யாது 100 முறை செய்தது தவறு என்றார்.!

இது தயாரிப்பு கோளாறில்லை உங்கள் ஆர்வக்கோளாறே என்று குறிப்பிட்டுவிட்டு அறுந்து போன கயிறை வாங்கி கொண்டு 250 ரூபாய்க்கு புதுசு தருவதாக சொன்னார்,,, மீண்டும் சிலுக்கு... மீண்டும் சிக்கினேன்..இம்முறை சரியாக 50 முறை செய்வதாக உறுதிபூண்டு, இஞ்சி ,கசகசா எல்லாம் எடுத்தேன்.

ஆனால் கால் வலியால் ஒரு 3 நாட்கள் இடை வெளி... 3 நாட்கள் கழித்து உபயோகப் படுத்த எடுத்தால் பேரதிர்ச்சி!!! துண்டு துண்டாக அறுந்து கிடந்தது புதிய கயிறு..! என் மகள் அப்போது குழந்தை.. இரவு பேரிச்சம் பழ சிரப் சாப்பிடுகையில் தவறிஒரு ஸ்பூன் கயிற்றுக்கும் ஊட்டி விட்டாள் போல கயிறு பிசுபிசுவென இருந்ததால் எலி கடித்து குதறி இருந்தது.... என் உள்ளமும் சிதறி இருந்தது.!
 
நாளை வரும்..


#வெங்கடேசும்_வெயிட் லாசும்

(3 நாள் மினித்தொடர் இதில் வரும் சம்பவங்கள் யாவும் உண்மையே.. இவை அனைத்தும் என்னையே குறிப்பிடுபவைஆகும்.

அத்தி (அநி)யாயம் -2

நொந்து போய் மீண்டும் கயிறு வியாபாரியை தேடிப்போனேன், அவருக்கு பதில் வேறு ஆள் இருந்தார் கேட்டதற்கு கயிறு வியாபாரி இப்போது அங்கு இல்லை அதற்கு பதிலாக கம்பெனி(?!) வேறொரு ஆளை போட்டு வியாபாரத்தை தொடங்கி இருந்தது அவரிடம் கேட்டால் பழைய ஆள் சரியில்லை ஸார்.. விக்க தெரியாம குறைச்சு வித்து இருக்கான் இந்த கயிறோட வெல 400/-ரூபாய் என்றார்.!  

குழம்பிப் போய் யோசித்து கொண்டு இருக்கும் போதே வெளியில் கூச்சல், பார்த்தால்... வாசலில் நான்கு பேர் கயிறு அறுந்து விட்டது என சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள்.. அவர்களிடம் புது வியாபாரி பழைய வியாபாரி என்னிடம் ஓட்டிய  ரெகார்டை ஓட்டிக் கொண்டிருந்தார்.! நான் புலம்பும் போது இதே மாதிரி எத்தனை பேர் பார்த்தார்களோ! வெறுத்து போய் திரும்பினேன்.

அடுத்த ஒரு வருடம் எந்த உடற் பயிற்சியும் செய்யவில்லை... ஆண்டு 2003! இப்போது என் எடை 90 கிலோ.! வாழ்க்கையில் வளர்வது என்பதை தவறாக புரிந்து கொண்டது போல் இருந்தது.. வாழ்க்கையின் தரமும் சற்று உயர்ந்து விட்டதால் அடுத்த வெயிட் லாஸ்முயற்சி.. வைப்ரேட்டர் பெல்லி கண்ட்ரோலர் மிஷின்!! 

இதை வயிற்றில் பெல்ட் போல கட்டிக்கொண்டு   பிளக் பாயிண்டில் கனெக்ட் செய்து ஸ்விட்ச் போட்டால் இது குலுங்கும்!!! குலுங்கும் இந்த மிஷின் வயிறை கரைக்கும் என்று உலகில் உள்ள எல்லா கடவுள்களின் மீதும் சத்யம் செய்து சொன்னார்கள், நானும் இதை (வாங்கி) கட்டிக்கொண்டேன்.!

வயிற்றில் பிள்ளையார் எறும்புகள் ஊர்வது போல கிச்சு கிச்சு காட்டியது. அது பழகியதில்லை என்பதால் கூச்சம் தாங்காமல் சிரிப்பேன். என்னை ஜன்னல் வழியாக பார்க்கும் தெருவாசிகள் கண்ணில் கவலை தெரிந்தது, பாவங்க அவரு நல்லாதான் இருந்தாரு என என் காது படவே பேசிக் கொண்டார்கள். இந்த எறும்பு ஊற கல்லும் தேயும் பழமொழி..தொப்பையை கொஞ்சம் கூட தேய்க்கவில்லை. 

ஒரு கட்டத்தில் ஷாக் அடிக்க ஆரம்பித்து "மரண பயத்தை காட்டிட்டாய்ங்க பரமா" டயலாக்கை அந்த படம் வருவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன மிஷின் அது.ஒரு நாள் அந்த மிஷின்.. உன் வயிறை குறைக்க என்னால் முடியாது என்று சொல்லி தமிழ் சினிமாவின் அம்மா கேரக்டர் போல என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. மிஷின் செலவு 3000 ரூபாய்... கட் ஆகாத கரண்ட் பில் 2000 ரூபாய்.... (2003ல்)

மீண்டும் ஒரு இடை வெளி இப்போது 2006 ஆம் ஆண்டு இடைவெளி கொஞ்சம் அதிகம் தான் இப்போது எனது எடை 96 கிலோ!! இப்போது டிவி நிகழ்ச்சியில் பிரபலமாகிவிட்டேன்.. நான் ஆலோசித்த டாக்டர் என் பழைய கதைகளை கேட்டு சிரித்து விட்டு ஜாகிங் போங்க அது தான் பெஸ்ட் என்றார்.

ஷார்ட்ஸ் ஷூ எல்லாம் வாங்கி அணிந்து கொண்டு ஓட ஆரம்பித்தேன் தெரு முனை தாண்டி சில வினாடிகளில் அலோ ஸார் நீங்க தானே டிவியில என்று கை குலுக்கி போட்டோ எடுத்து கொள்ள ஆரம்பித்தார்கள் நாலு அடி எடுத்து வைப்பதுற்குள் நாப்பது போட்டோ இது தான் என் வாகிங்..ஒரு வழியாக அதை நிறுத்திவிட்டு யோசித்தேன்... அட மதுரையில் இதை எப்படி மறந்தோம்.. அது...

நாளை வரும்..


#வெங்கடேசும்_வெயிட் லாசும்

( 3 நாள் மினித்தொடர்) இதில் வரும் சம்பவங்கள் யாவும் உண்மையே... இவை அனைத்தும் என்னையே குறிப்பிடுபவைஆகும்...
அத்தி (அநி)யாயம் - 3

மதுரையின் புகழ்பெற்ற ரேஸ்கோர்ஸ் மைதானம் அட இது இருக்க கவலை ஏன்..! அதிகாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு ஸ்கூட்டரில் சென்று அங்கு அதை நிறுத்தி விட்டுஅந்த மைதானத்தை 5 முறை வலம் வந்தேன்.. அதிகாலை இருளில் என்னை யாரும் கண்டுபிடிக்கவில்லை, அருமையான உடற்பயிற்சி 5 நாட்கள் கடந்துவிட்டது.6:30 மணிக்குள் வீடு திரும்பி விடுவேன்.

6 வது நாள்!பேய் மழை!!! 3 தினங்கள் மதுரையே வெள்ளக்காடானது... மழை நின்ற அடுத்த நாள் மைதானம் முழுதும் தண்ணீர் வடியவே 7 நாட்கள் ஆகும் என்றார்கள்... மைதானத்து தண்ணீருடன் என் கண்ணீரும் கலந்து வெள்ளத்தை அதிகப்படுத்தியது, அந்த மழை முடிந்து.வெளியூர் வேலை ஒரு வாரம்.அது முடிந்து ஒரே நாளில் அப்படியே ஒரு வெளிநாடு பயணம் 20 நாட்கள்முடிந்தது. வந்தேன்.. 

உள்ளே விட வில்லை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச தரத்தில் டிராக் அமைக்கிறார்கள் அடுத்த 8 மாதம் உள்ளே அனுமதி இல்லை என்றார்கள்.ஒரு நல்ல உடற் பயிற்சி அத்துடன் நிறைவடைந்தது.. அடுத்து வந்தது தான் புது யுகம். "டயட் கண்ட் ரோல் "பக்கம் போய் வந்தேன். ஜெனரல் மோட்டார் டயட், ஃபோர்டு டயட், பென்ஸ் டயட் என எல்லா கார் கம்பெனி டயட்டுகளும் எனக்கு அத்துப்படி.!

வெகு வேகமாக புகுந்து கியர் போட்டு ஆக்ஸிலேட்டரை மிதித்து புகுந்ததை விட வெகு வேகமாக அதிலிருந்து வெளியேறினேன். முதல் நாள் முழுவதும் பழம், பிறகு காய்கறி, அப்புறம் ஒரு நாளைக்கு ஒரே உருளைகிழங்கு என திகிலூட்டியது அந்த டயட் ஒவ்வொரு காய்கறிக்கும் ப்ரோட்டின்,கார்போ,மினரல் ஆகியவற்றின் அளவுகள் மனதுக்குள் போய் அதுவே என் எடையை இன்னும் அதிகமாக்கியது!

இதற்கு இடையில் ப்ரோட்டின் பவுடர்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்தேன்...
இந்த புரோட்டின் பவுடர்கள் வயிற்றுக்குள் மேக்கப் போட்டு, என்னை படையப்பா ஆக்கின, என் வழி தனி வழி என அதையும் தொடர்ந்து 6 மாதங்கள் உபயோகித்து 9 கிலோ குறைந்தேன். பிறகு ஒரு நாள் அந்த பவுடர்கள் கடையில் கிடைக்கவில்லை!

ஒரு வேளை மொத்த தயாரிப்பும் எனக்கு தயாரித்து கொடுத்து விட்டு அந்த கம்பெனி நொடித்து விட்டது போல! என் தொந்தரவு பொறுக்க முடியாமல் எனக்காகவே மெடிக்கல் கடையில் நோ ஸ்டாக் போர்டு மாட்டினார்கள்.ஒரு வழியாக அந்த டயட்டும் கைவிடப்பட்டது. அப்போது ஆம் வே கம்பெனி காரர்கள் ஆம் ஆத்மி போல நம்பிக்கை தந்தார்கள்.அவர்களை நம்பி அதை உபயோகிக்க முடிவெடுத்தேன். 

வாங்கி உபயோகப்படுத்திய ஒரு வாரத்திற்குள் ஆம் வே பயன் படுத்தினால் புற்று நோய், கிட்னி பெய்லியர், இதய நோய், என ஆளாளுக்கு கலர் கலராக வதந்தி பரப்பினார்கள்.ஆம் வே பேரை கேட்டாலே நோ வே என்று பயந்து ஓடினேன்...
அப்ப்போது ஆறுதலாக வந்தது திரெட்மில் மழையோ வெயிலோ கவலை இல்லை, யாரும் கூட நின்று போட்டோ எடுக்க மாட்டார்கள்..!

வீட்டுக்குள்ளேயே ஓடலாம் கிச்சு கிச்சு தொந்தரவு இல்லை, பவுடர்கள் தொல்லை இல்லை, மைதானம் தேவையில்லை அந்த சில காரணங்களுக்காகவே அதை பிடித்து போனது.. விலை அதிகம் தான் என்ற போதும் வாங்கினேன். முதலில் அதில் ஓடும் போது வேகம் எடுக்க 4 வைக்க சொன்னார்கள்..முதலில் 4 இல் ஓடிய நான் வழக்கம் போல் ஆர்வ கோளாறில் 3 வது நாளில் 6 வரை வேகம் வைத்து ஓடினேன்..

கால் வலிக்க ஆரம்பித்து கடையில் போய் கேட்ட போது இது போன்ற ஆர்வக் கோளாறு ஆரோக்கியத்திற்கே கோளாறு ரூல்ஸ் என்றால் ரூல்ஸ் என்றார்கள் ஏற்கனவே அறுந்த கயிறு கண்முன் வந்து போனது.. சரிதானே.. அவர்கள் சொன்னபடியே தவறாது ஓடினேன்.. எனக்கு ஏற்கனவே சூடான உடம்பு, குளித்து விட்டு தலை துவட்டினாலே அதற்கே வேர்க்கும் இப்போது ஓடுகிறேனல்லவா!

ஓடி முடித்த பின்பு அந்த மிஷின் அருகே வீட்டில் பம்பு குழாய் வைத்து தண்ணி அடித்தால் அங்கு தேங்கி இருக்கும் நீரைப் போல சிறு குளம் போல என் வியர்வை மிஷினை சுற்றி தேங்கி இருக்கும்.! எடை எல்லாம் நீராக வெளியேறுகிறது என்ற ஆனந்தம் பிறந்தது.ஒரு நாள் மிஷினில் நடந்து கொண்டிருக்கும் போது கரண்ட் கட்!

திரெட் மில்லில் திடீரென கரண்ட் கட் ஆகிவிட்டால் எப்படி சமாளிப்பது என்று தெரியாத நான் தடுமாறி விழுந்து விட்டேன்.விழும் போது சரியாக கால் முட்டிகளை கீழே ஊன்றி விழுந்துவிட்டேன்... தாங்க முடியாத வலி உடனடியாக மருத்துவமனை சென்றேன்..கால் ஜவ்வில் அடி பட்டு விட்டது என்றார்கள்... திரட்மில்லில் நடப்பதை நிறுத்திக் கொள்ள சொன்னார்கள்.. எவ்வளவு நாள் என்றேன்? 

குறைந்தது 3 மாதங்கள் என்றார்கள்... இந்த நேரத்தில் நான் ஒரு செஞ்சுரி அடித்தேன்! ஆம் என் எடை 100 கிலோ என்ற மைல் கல்லை எட்டியது. இப்போது...! நிறைய நிகழ்ச்சிகள் பல வெளியூர் வெளிநாடு பயணங்கள் என என்னால் அதை தொடர முடியாமல் போனது..! பிறகு திரெட் மில் என்பது ஒரு நஷ்டத்தில் மூடப்பட்ட மில் போல ஆனது! தினசரி அலுவலகம் செல்லும் போது திரெட் மில்லை பார்ப்பேன்.
வீட்டில் துவைத்த துணிகள் அதன் மீது காயப் போட்டு இருக்கும்.!

இன்று வரை துணி காயப்போட திரெட்மில் வாங்கிய ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்... இன்றும் அது ஒரு அடையாளச் சின்னமாக உள்ளது. கால மாற்றத்தில் இன்று என் எடை 105.4 .எஃப்.எம். ஸ்டேஷன் ஃபிரிகவுன்ஸியை நினைவு படுத்துவது போல் இருக்கிறதா.! இப்போது எடை குறைக்க போகிறேன் என்று சொன்னால் அதற்கே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். ஆகவே யார் என்ன சொன்னாலும் தீவிரமாக இந்த வருடம் குறைக்கலாம் என்றுஇருக்கிறேன்!

ஆமா நீங்க ஏன் இப்போ சிரிக்கிறிங்க....!!!!!!!!!. 

  (நிறைந்தது...)



Wednesday 22 April 2015

லிமெரிக் 1

புவிக்கோர் தினம் ஒன்று
புறப்பட்டார் பலர் இன்று
கவிப்பல பாடி
கூகுளில் தேடி
குவிக்கிறார் லைக் நன்று.

தோசை மெலிதாக வார்த்து
தோதாக நெய்யதை சேர்த்து
மீசை போல முறுகல்
முகத்தின் மீது முறுவல்
ஆசைதீர வெட்டு சட்னியுடன் வைத்து.

செய்கூலி சேதாரம் குறைச்சல்
செயின் ஒண்ணு வாங்கச் சொல்லி குடைச்சல்
பொய் அதுன்னு தெரியுது
பொண்டாட்டிக்கு எங்க புரியுது
நாய் போல ஆயிட்டேன் பார்க்கலாமா அலைச்சல்.

மாதச் சம்பளம் என்று தான் பேரு
மகிழ்ச்சி அதில் இருக்குமா பாரு
சாதகமா ஏதுமில்லை
சம்பாத்தியம் பத்தவில்லை
பாதத்தில் வீழ்ந்து கடன் வாங்காதோர் யாரு.

தளை தட்டுதென தலையில் தட்டுவார்
தமிழ் மரபு இதுவல்ல என்றே திட்டுவார்
வளையும் இலக்கணம்
வம்பிழுப்பார் அக்கணம்
விளையும் பயிரதைப் பிடுங்கி கட்டுவார்.

விறுவிறுன்னு எழுதினேன் குறும்-பா
வில்லங்கமதில் காண்கிறார் குறும்பா
குறுகுறுன்னு பார்த்து
குறையெல்லாம் கோர்த்து
நறுநறுன்னு பல்லைக் கடிப்பது ஏம்பா.

மெதுவடை சூடாக போட்டால்
மெலிதாக அதில் காரட் சேர்த்தால்
புதுச்சுவை ஆகும்
புத்தி மாறிப் போகும்
எது இதற்கு நிகராம் எடை போட்டு பார்த்தால்.

சொல்லில் சோகமேதும் இல்லை
சொல்லைக் கேட்டவர்களால் தொல்லை
வில்லில் அம்பாக
விறைத்த கம்பாக
கல்லால் அடிப்பார் தாண்டு நீ எல்லை.

படித்திட அழைத்தார் சமையற்கலை
பட்டம் அதற்கு வைத்தார் நல்ல விலை
பிடித்திட்டார் விளம்பரம்
பெருக்கிட்டார் வியாபாரம்
முடிவில் இது பெற்றோர்க்கு விரித்த வலை.

தங்கம் வாங்க உகந்த நாள் ஒன்றாம்
தங்கிப் பெருகிடும் இல்லத்தில் இன்றாம்
பங்கம் வராதிருக்க 
பவுன் வாங்கிச் சிறக்க
எங்கும் சல்லியடிக்கிறார் தப்பித்தல் நன்றாம்.

தமிழ் உரை கோனார் அசைவமெஸ் பேரில் ஆனார்
தட்டில் இடும் கறிதோசையால் ஃபேமஸா போனார்
சிமிழ் போலே சிக்கனும்
மணம் மிக்க மட்டனும்
உமிழ்நீர் நாவிலே இதுபோல் வேறெங்கும் காணார்.

கயல் ஓடுள்ள பயல் முகத்தால் தோண்டினான் வயல்
காலடியளந்தவன் இரண்ய கசிபுவை கிழித்த செயல்
மையல் கொண்ட ராவணனை வதைத்து
மைந்தனே தாயை சிதைத்து
ஜெயக் கலப்பையேந்திய மாய வண்ணனவன் கலியுகப் புயல்.

மச்சம் கூர்மம் வராக அவதாரம்
மாபலி வாமன சிம்மமென ஆதாரம்
மிச்சம் ராம பலராமன்
மிடுக்கான பரசுராமன்
சொச்சம் கண்ணனும் கல்கியுமே தசாவதாரம்.

திங்கள் பிறந்தால் கேட்கிறது சங்கு
திகிலில் உறைகிறார் பலரும் இங்கு
உங்கள் ஓட்டம் தொடங்கும்
ஊரே பரபரப்பாய் இயங்கும்
சங்கம் வைத்து புலம்பினால் பலர் வருவார் அங்கு.

இரு வார்த்தை லிமெரிக்...

சிவன் பாதி
சக்தி மீதி
அவன் ஆசி
அதற்கு பூசி
இவனே ஜோதி.

லேட் நைட்டுல வீடு வந்தான் கோபி
லெப்ட் ரைட் வாங்குனா அவன் மனைவி ஷோபி
லைட்டா ஒரு கட்டிங்கு
லிக்கரால ஸ்வெட்டிங்கு
பைட்டு சகஜம் தானே பண்ண வேணாம் லாபி.

முருகன் தமிழரின் முப்பாட்டன் ஆனான்
முந்திப் பிறந்தவன் வடநாட்டுக்கு போனான்
உருகிக் கிளம்பினான் உலகைச் சுற்ற
உடனே கணபதி கனியை கைப்பற்ற
அருமை!தமிழ்ப் பாட்டனல்லவா அதனால் தான் ஏமாறினான்.

கத்திரிக்காய் வதக்கிப் போட்ட காரக்குழம்பு
கெட்டித் தயிர் கூட இருந்தா இல்ல அழும்பு
சத்தியமா இது சைவம்
சரிநிகராகது அசைவம்
வெத்திலையும் உடனிருந்தா இதெல்லாம் கரும்பு.


#லிமெரிக்_கதைகள்

காக்கா ஒன்று பாட்டிக் கடையில் வடையைத் திருடியதாம்
காட்டு மரத்திலமர்ந்து மூக்காலந்த வடையை வருடியதாம்
நேக்கா வந்து பாடக் கேட்டது  நரி
நேயர் விருப்பமதற்கு காக்கா சொன்னது சரி
ஷாக்கா ஆச்சு விழுந்த வடையை தூக்கி நரியும் ஓடியதாம்.

தங்கராசு என்ற தயாரிப்பாளர் புதுப்பட பூஜை போட்டார்
தமிழகம் முழுவதும் ரிலீசுக்கு தியேட்டர்களைக் கேட்டார்
எங்க கேட்டாலும் கிடைக்கல
ஏரியா எதுவுமே விக்கலை
திங்குதே வட்டிப்பணம் இனி அடுத்தப்படம் எடுக்க மாட்டார்.

வாணி தன் சிநேகிதியைக் காண பீச்சுக்கு சென்றாள்
வாலிபன் ஒருவன் பின் தொடர சட்டென நின்றாள்
ராணி அவளது தோழி
ராட்சசியவள் வர ஆனது வெகுநாழி
நாணி அவள் அவனைக்காட்டி என் காதலனே என்றாள்.

வானம் பொய்த்ததால் விவசாயி மாடசாமி
வாழ வழியின்றி வேண்டினான் பல சாமி
மானம் அது காக்க
மக்கள் பசி தீர்க்க
ஞானம் நகரென ப்ளாட் போட்டான் அதுவே அவன் குலசாமி.

தாழ்ந்த ஜாதியில சேர்க்க சொல்லி போராட்டம்
தலைவர் அழைச்சதாலே கூடியது ஒரு கூட்டம்
வீழ்ந்தது அவர் காலில்
வீரன் ஒருவன் காதில்
ஆழ்க் குரலில் சொன்னார் உயர்ஜாதி நாய் வாங்கும் திட்டம்.

படத்துக்கு வச்சாங்க ஓ.கே. கண்மணின்னு பேரு
பட்டுன்னு ஓ காதல் கண்மணின்னு மாத்தினது யாரு
தடத்தை மாத்துறாங்க
தமிழுன்னு ஏமாத்துறாங்க
அடத்தோட நின்னா வரிவிலக்கு கிடைக்காது பாரு.

சின்ன மழை பெய்தாலே தெருவெல்லாம் தண்ணி
சிங்காரச் சென்னைனா சிரிக்கிறாங்க எண்ணி
என்னய்யா ரோடு இது
எலும்புக்கூடா போனதது
தின்னுட்டான் எம் எல் ஏ காசை கணக்குப் பண்ணி.

வெள்ளி என்பது மங்கள நாள்
வேண்டிப் பணிவார் இறைவனின் தாள்
தள்ளினார் அதை
தடம் மாறிய கதை
உள்ளத்து மகிழ்ச்சிக்கு குடிக்கிறார் சார்வாள்.


Friday 17 April 2015

சாமி தருமா வரம்.!

ஃபேஸ்புக் மோகத்திலிருந்து விடுபட கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான் ஒருவன், சாதாரணமாக இது போல தவமிருந்தால் நேரில் வரும் கடவுள் இப்போது வரவில்லை.!

தவத்தின் கால அளவை இருமடங்காக்கினான்.. வரவில்லை மும்மடங்காக்கினான் அப்போதும் வரவில்லை.. நான்மடங்கு ஐம்மடங்கு... ம்ஹும் கடவுள் வரவே இல்லை.. கடைசியாக ஒரு முறை என ஆறாம் முறை தவத்தை நீட்டினான்.!

திடீரென ஓடி வந்தார் கடவுள்.. சொல் பக்தா உன்னை நான் காண வர தாமதமாகிவிட்டது என்றார் படபடப்புடன்.. அந்த மனிதன் கோபமாக இது ஆறாவது முறை ஏற்கனவே ஐந்து முறை தங்களை அழைத்தேனே ஏன் அப்போதே வரவில்லை என்றான்.!

அடடா இதற்கு முன்பு 5 முறையா அழைத்தாய்..! இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு என் இன்பாக்ஸில் ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாமே.. நான் உடனே வந்திருப்பேனே.. மன்னித்துக்கொள் நான் FBயில் கொஞ்சம் பிஸி.. ஆமாம் என்ன வரம் வேண்டும்..

என அவனிடம் கேட்ட கடவுள் அதிர்ந்தார்..! அங்கே அந்த மனிதன் செத்துக்கிடந்தான்.

Monday 13 April 2015

மன்மதா

சாப்பிடும் போது தலை முடி இருந்தால்
உறவு பலமாகுமாம்.!
ஒவ்வொரு முறையும் ஒரிரு முடிகள் தட்டுப்படுகின்றன
உன் பின்னங்கழுத்தை முத்தமிடும் போது.!

#மன்மதலீலை 7

ஆலங்கட்டி மழை பெய்தும்
சூடு பறக்கிறது! ஒரே குடைக்குள்
நாமிருவரும்.!

#மன்மதலீலை 6

ஆரஞ்சு சுளை மீது
உப்பு தூவி இருக்கிறது
அவள் மேலுதட்டின் மேல்
வியர்வைத் துளிகள்.!

மேலூதட்டையும் கீழுதட்டையும் மூடி
உள்புறமாய் அதை மடித்து அவள் பூசிய
லிப்ஸ்டிக்கை என் முன் சரி செய்தாள்..
இப்போது வெட்கத்துடன் மீண்டும்
லிப்ஸ்டிக் பூசிக்கொண்டிருக்கிறாள்.!

#மன்மதலீலை 1

Friday 3 April 2015

பொதுக்குழு@ஃபேஸ்புக்.!

#எதிர்காலத்தில்_கட்சி_பொதுக்குழு_மீட்டிங்

(பங்கு பெறுவோர் : தலைவர் & உதவியாளர்)

என்னய்யா பி.ஏ. மீட்டிங் எத்தனை மணிக்கு 

10 மணிக்கு தலைவரே.

எல்லா ஏற்பாடும் பண்ணிட்டியா..? இப்ப மணி என்ன.?

மணி 9:30 ஆகுது தலைவரே... ஏற்பாடு பக்காவா பண்ணியிருக்கேன்.

அப்படியா ஒரு தடவை செக் பண்ணிக்கிறேன் என்னென்ன செஞ்ச வரிசையா சொல்லு...

தலைவரே கட்சித் தொண்டர்கள் எல்லாத்துக்கும் மிஸ்டு கால் குடுத்துட்டேன்.. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப் அனுப்பிட்டேன் பொதுக்குழு தலைவர்களுக்கு ஸ்கைப்புல பேசிட்டேன்..

வெரிகுட்... அப்ப பொதுக்குழு தீர்மானம் எல்லாம்..

தலைவரே எல்லாத்தையும் ஸ்டேட்டசா டைப் பண்ணி வச்சிட்டேன் இப்ப நீங்க கட்சி ஃபேஸ்புக் பேஜை ஓபன் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ணா போதும்.. விழுகிற லைக்கை வச்சு தீர்மானத்தை நிறைவேத்திடலாம்..

ஆமாய்யா.. எல்லோரும் லைக் மட்டும் தான் போடணும்... எவனாவது கமெண்ட் பண்ணா அவ்ளோ தான் புரியுதா.!

அது தெரியாதா தலைவரே நம்ம பேஜ்ல தான் ஜனநாயக முறைப்படி கமெண்ட் ஆப்ஷனே இல்லையே..! கவலைப்படாதிங்க..!

சரி முன்ன எல்லாம் பொதுக்குழு மீட்டிங் வந்தா வர்றவங்களுக்கு குவார்ட்டரு கோழி பிரியாணின்னு தருவோம்.. கூட்டம் வந்துச்சு.. இப்ப வருமா.!?

தலைவரே இப்ப லைக் விழுகுதான்னு பார்த்துட்டு லைக் பண்ண அந்த ஐடிக்கு 1000 ரூபா நெட் டாப் அப் பண்றோமில்ல! ஒரு பய வராம இருக்க மாட்டான்! இப்பவே இன்னுமா பொதுக்குழுவை கூட்டலைன்னு என் வாட்ஸ் அப்புல 1456 மெசேஜ்..!

சூப்பருய்யா... கலக்கிட்ட இந்த மொபைலு, ஃபேஸ்புக் வந்ததும் நமக்கு வெட்டியா மீட்டிங் போடுற செலவு மிச்சம்..! மீட்டிங் முடிஞ்சதும் உனக்கு ஒரு சாம்சங் 6 கிஃப்ட்  நிச்சயம்.!

ஆஹா... நன்றி தலைவரே...

சரி சரி நேரமாச்சு நம்ம கட்சி பேஜை ஓபன் பண்ணு பொதுக்குழுவை கூட்டுவோம்..

குறள்நெறி குட்டிக்கதைகள்..

இன்னிக்கு என்ன டிபன் என்று கேட்டுக் கொண்டே ஆவலாக வீட்டிற்குள் நுழைந்தான் ரவி..

"தட்டை எடுத்து வையுங்க சூடா எடுத்துட்டு வர்றேன்" என்றாள் சமையலறையில் இருந்து அசரீரியாக மனைவி.. சிறிது நேரத்தில்

மனைவி வெளியே வர கையில் ஆவி பறக்க பாத்திரம்.. ஜலதோஷம் பிடித்ததால் ரவிக்கு சமையல் மணம் தெரியவில்லை.! ஆசையுடன் மூடியைத் திறந்தான் முகம் வாடி போனது..

சட்டியில் உப்புமா..!!!! என்னங்க பாக்குறிங்க சாப்பிடுங்க என்றாள்.. ஒரு வினாடி யோசித்தவன் சர்க்கரை வேணாம்... சட்னி இருக்கா என்றான்.. ஓ...இருக்கே இந்தாங்க என தந்தாள்..

வேறு ஒரு வார்த்தை பேசாமல் சிரித்த முகத்துடன் உப்புமாவை சட்னியுடன் சுடச்சுட அள்ளி விழுங்கலானான் ரவி

#குறள்நெறிக்_கதைகள்

(நீதி : இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண...)


மஞ்சுளா பரபரப்பாக எழுந்து அன்றைய வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள். காலிங்பெல் அடித்தது கதவை திறந்தாள் பெட்டி படுக்கையுடன் ஊரிலிருந்து அவள் மாமியார்..!

"இன்னும் ஒரு மாசம் இங்க தான்" என்றபடி உள்ளே நுழைந்தாள் மாமியார். அதனால என்ன அத்தை ஒரு வருஷம் கூட இங்க இருங்களேன் என்று சிரித்த முகத்துடன் கூறினாள் மஞ்சுளா.!!!

#குறள்நெறிக்_கதைகள்

(நீதி : துன்பம் வரும் வேளையில் சிரி...)


எப்படா கல்யாணம் பண்ணிக்கப் போற என்ற பெரிய அண்ணன் கேட்ட கேள்வி ரவியை சலிப்படைய வைத்தது. அண்ணா எத்தனை தடவை சொல்றது எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்.. 

யாரையும் லவ் பண்றியாடே..?

இல்லண்ணா அப்படி இருந்தா சொல்ல மாட்டேனா..!

சரி அப்ப யார் அந்த திவ்யா?!

அண்ணா அது வந்து... அது... அது எப்படி உங்களுக்கு...

எல்லாம் தெரியும்டா ஒரு நாளைக்கு எத்தனை வாட்ஸ் அப் மெசேஜ்.. எல்லாம் பார்த்தேன்.. அந்த பொண்ணு அப்பாகிட்ட பேசிட்டேன் அவங்களுக்கும் ஓகேவாம்.. இப்ப என்ன சொல்லுற!

ஹி..ஹி.நீங்க சொன்னா ஓகே தாண்ணே..

வழியாத நான் ஆபிஸ் போயிட்டு வர்றேன் சாயங்காலம் அவங்க வீட்டுக்கு போவோம் ஓ.கே..

(அவர் போனவுடன்) இவருக்கு எப்படித் தெரியும் என்று குழம்பியவன் "சித்தப்பா" என்ற குரல் கேட்டு திரும்பினான்.. அண்ணன் மகன் வருண் UKG வாண்டு நின்றிருந்தான்.

என்ன சித்தப்பா அப்பா ஓகே சொல்லிட்டாரா என கேட்க ரவிக்கு ஆச்சர்யம்.. டேய் இது எப்படிடா உனக்கு.. என்றவனிடம் வருண் சொன்னான்..

சித்தப்பா நேத்து கேண்டி க்ரஷ் விளையாட உன் மொபைல் எடுத்தனா அப்ப வாட்ஸ் அப் வந்துச்சு நீ தூங்கிட்டியா அதான் அப்பாகிட்ட காமிச்சேன் தப்பா சித்தப்பா.!

ஓடிப்போய் வருணை அணைத்துக் கொண்டு முத்த மழை பொழிந்தான்.. தேங்ஸ்டா செல்லம் நீ தான் இத அப்பாகிட்ட  சொன்னியா.. குட் தப்பே இல்லை என்றான் ஆனந்தமாக.

#குறள்நெறிக்_கதைகள்

நீதி: குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்....

Thursday 2 April 2015

மழை..

"டாக்டரய்யா வேற வழியே இல்லிங்களா" என்றார் சாமிக்கண்ணு.

யெஸ்.. உங்க பொண்ணுக்கு இருதயத்துல ரெண்டு ஓட்டைகள் இருக்கு ஆபரேஷனுக்கு 5 லட்சம் ஆகும்... என்றார் டாக்டர் ஹரி..

அய்யா என்கிட்ட சேமிப்பு 1 இலட்சம் இருக்கு இன்சூரன்ஸ் மூலம் 2 இலட்சம் இருக்கு எப்படியாவது நீங்க பெரிய மனசு பண்ணி...

மிஸ்டர் சாமிக்கண்ணு இது சிட்டியில பெரிய ஆஸ்பிடல் இங்க கொஞ்சம் குறைஞ்சாலும் ஆபரேஷன் பண்ண முடியாது.. நீங்க அந்த 3 இலட்சத்தை கட்டுங்க நான் ஆபரேஷன் பண்றேன் ஆனா 3 நாளில் மீதியை கட்டிடுங்க..

அய்யா மீதியை  ஒரு 1 மாசத்துல தர முயற்சி பண்ணவா..

1மாசமா.! ஜோக்கடிக்கிறிங்களா நோ இம்பாசிபிள் நீங்க கிளம்புங்க எனக்கு வேலை இருக்கு..

அய்யா... அய்யா... அய்யா.. (டாக்டர் கிளம்ப சாமிக்கண்ணும் கிளம்புகிறார்)

ட்ரிங்.. ட்ரிங்.. ட்ரிங்.. அலோ நான் டாக்டர் ஹரி பேசறேன்..

சார் நான் தான் ரமணா இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க ஆஸ்பிடலில் இன்கம்டாக்ஸ் ரெய்டு வருது தகவல் 100%உண்மை.. டொக்

ரமணனின் தகவல் பொய்க்காது என ஹரிக்கு தெரியும்.. பரபரவென செயல்பட்டான்.. தன் மனைவியிடம் பேசி ஆடிட்டரிடம் பேசி நிமிர்ந்தான்..

எதிரில் சாமிக்கண்ணு..! "அய்யா நீங்க போகலை"

இல்லிங்கய்யா எப்படியாவது...

ப்ளீஸ் நீங்க  கிளம்புங்க கெஞ்சாதிங்க எனக்கு முக்கிய வேலை இருக்கு..

சாமிக்கண்ணு சென்ற அடுத்த 5 நிமிடத்தில் ஆஸ்பிடலில் ரெய்டு வர அடுத்த 8 மணிநேரம் ஹரி இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் வசமானான்..

எல்லா டாக்குமெண்டும் பார்த்து சந்தேகத்திற்குரியதை அவர்கள் எடுத்து செல்ல இவனிடம் கையெழுத்து வாங்கி வீடு வர அதிகாலை 4 மணி..!

மனைவி கதவை திறந்தவுடன் "நல்லவேளை முன் கூட்டியே சொன்னிங்க என் தம்பி ராஜாவை வரச்சொல்லி பணத்தை அவங்கிட்ட கொடுத்துட்டேன்" என்றாள் கிசு கிசுப்பாக..

ஹரி அலட்சியமாக தலையசைத்த போது மனைவியின் போன் ஒலித்தது.. என்னங்க என் தம்பி ராஜா தான் பேசறான் என்றாள். ஓடிப்போய் பேசினான்.. சொல்லுங்க மச்சான்..

மாமா அக்கா 8 பெட்டி தந்தாங்க ஆனா இப்ப 7 தான் இருக்கு சரியான்னு கேளுங்க.. எரிச்சலுடன் ஹரி விசாரித்து காணாமல் போனது பச்சை நிறப்பெட்டி என்றதும் நொந்து போனான்..

அறிவிருக்கா உனக்கு அதுல தான் வைர நகை பூரா இருந்திச்சு மிச்ச 7 பெட்டியில இருக்குற காசும் அதுவும் கிட்டத்தட்ட ஒண்ணு.. உன் தம்பி வேஸ்ட்டு என கத்தினான்..

என்னங்க பண்றது நீங்க அவசரமா சொன்னிங்க.. அதான் வேணுமின்னா போலீசுல என்றவள்.. நாக்கை கடித்தாள்.. ஏய் பூரா பிளாக் மணி.. போலீசுக்கு சொல்ல முடியுமா..

போச்சு போச்சு எல்லாம் போச்சு கிட்ட தட்ட 1 கோடி நாசமா போச்சு.. வெளியே இடி இடித்தது.. மழை வரும் அறிகுறி.. இப்போது காலிங்பெல் ஒலித்தது.. கதவை திறந்தான்..

சாமிக்கண்ணு..! கோபத்தில் கத்திவிட்டான்.. யோவ்  அதான் முடியாதுன்னேட்டேன் இல்ல இங்க வந்து ஏன்.. தொல்........

சாமிக்கண்ணு கையில் பச்சைப்பெட்டி ஒரு நொடி யோசித்தவன் அய்யா வாங்க உள்ளே என்றான்.. டாக்டரய்யா இந்த பெட்டி ஆட்டோவுல இருந்தது பெட்டியில் உள்ள கவருல உங்க விலாசம் போட்டு இருந்திச்சு அதான் இங்க வந்தேன் என்றார் சாமிக்கண்ணு .

அந்த பெட்டியை வாங்கி மனைவியிடம் தந்து கண்ணாலேயே எல்லாம் சரியா இருக்கா பாரு என சைகை செய்தான்.. அவளும் அதை வாங்கி உள் அறைக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரத்தில் அறையில் இருந்து வெளிப்பட்ட அவள் முகமே எல்லாம் சரியாக இருக்கிறது எனச் சொன்னது.. மகிழ்வான ஹரி அய்யா நீங்க செஞ்ச உதவிக்கு எந்த பணமும் இல்லாம உங்க பொண்ணுக்கு ஆபரேஷன் பண்ண முடிவெடுத்துட்டேன் சந்தோஷமா என்றவனை விரக்தியாக பார்த்தார் சாமிக்கண்ணு.. டாக்டரய்யா உங்க ஆஸ்பத்திரில இருந்து வந்த ஒரு மணி நேரத்துல என் பொண்ணு இறந்துடுச்சுங்க சுடுகாடு போயி மத்த ஏற்பாடு பண்ண ஆட்டோவில போகும் போது தான் இந்த பெட்டி கிடைச்சது..

நாளைக்கு தகனம் பண்றோம் முடிஞ்சா வாங்கய்யா தோளில் இருந்த துண்டால் வாய் பொத்தி அழுதபடி எழுந்து போனார் சாமிக்கண்ணு..

இப்போது பலத்த இடியோசையுடன் சோ வென பெரு மழை கொட்டத் துவங்கியது...!

நீதி : நல்லோர் ஒருவர் உள்ளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை...

Wednesday 1 April 2015

காஷ்மீர் - Edited

காஷ்மீர் கலாட்டா -13 குல்மார்க் (குல்மாக்)

#இமயம்_கண்டேன்

குல்மாக் ஶ்ரீநகரில் இருந்து 52 கி.மீ தூரம்..! கிட்டத்தட்ட சென்னை-செங்கல்பட்டு தொலைவு இதில் மலைப்பயணம் 30 கிலோமீட்டர்கள்..நம் ஊட்டி போல இருக்கும். குல்மாக் வந்தவுடன் ஒரு உற்சாக விசிலடிப்பீர்கள், ஏனெனில் உங்கள் கண்முன் தோன்றும் அழகு அப்படி.! எதிரே பிரும்மாண்டமான பனிமூடிய இரு சிகரங்கள் வரவேற்கும்.! ஒன்று அபஃர்வாட் சிகரம் மற்றொன்று கோங்தாரி சிகரம்..!


அபஃர்வாட் 4200 மீட்டர் உயரமும் (13,780 அடி) கோங்தாரி 3,747 மீட்டர் உயரமும் (12,293அடி) கொண்டவை.கிட்டத்தட்ட பாதி எவரெஸ்ட் உயரம்.! அது மட்டுமின்றி இங்குள்ள மிகப் பெரிய அட் ராக்ஷன் ஆசியாவின் மிக உயர்ந்த கேபிள் கார் சுற்றுலா.! இது தான் உலகின் இரண்டாவது மிக உயரமான கேபிள் ஸ்டேஷன்.!


குல்மாக் முற்கால மன்னர்கள் யூசுப்ஷா மற்றும் ஜஹாங்கீரின் கோடை வாசஸ்தலமாக இருந்த இடம். அவர்கள் ஓய்வெடுக்க விடுமுறையை கழிக்க இங்கு அடிக்கடி வருவார்களாம்.! குல்மாக்கின் பழைய பெயர் கெளரிமாக்.! சிவ பெருமானின் மனைவி பெயர்...! இதை குல்மாக் என மாற்றியவர் யூசுப் ஷா தான்..! இதற்கு அர்த்தம் ரோஜாக்களின் பிரதேசம்..!


கெளரிமாக் குல்மாக் ஆனதை நல்லவேளை யாரும் கண் "மோடி"த்தனமாக இதுவரை எதிர்க்கவில்லை என்பது ஆறுதல்..! கோங்தாரியில் கேபிள் கார் செல்லும் இடம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது..! முதல் நிறுத்தம் காண்ட்லா இது 2,600 மீட்டர் உயரம் 8,530 அடி..! இரண்டாவது நிறுத்தம் கோங்தாரி வேலி 3,747மீட்டர் உயரம் 12,293 அடி..! ஓகே இப்ப கேபிள் கார் ஏறலாமா.!


காதடைக்கப் பஞ்சும் கையுறைகள் பனிக் குல்லாய்கள் எல்லாத்தையும் எடுத்துக் கோங்க கேபிள் ஏறுவதற்கு முன் உச்சா போய்விட்டு வந்துவிடவும்.. இல்லாவிட்டால் அது தானாக வந்து உங்களை கேவலப்படுத்திவிடும்.. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு தடா.. கண்ணை பயத்துல மூடிக்க மாட்டிங்க தானே அப்ப வாங்க பயணிக்கலாம்

சிலிர்ப்பூட்டும் கேபிள் கார் பயணம்.. நாளை  (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -14

ஒரு கேபிள் காரில் 6 பேர் ஏறலாம் மெதுவாக தரையோடு கிளம்பி ஜிவ்வென்று மேலே ஏறும்.. வயிற்றுக்குள் லட்சம் பிள்ளையார் எறும்புகள் ஊறும், காதை அடைக்காவிட்டால் கிர்ரென்று இருக்கும், வலிக்கும். ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் சுற்றிலும் பனிமலைக்கு நடுவே நாம் இருப்போம்.! என்ன ஒரு அற்புதம்.!


அப்போது நம்மை ஒரு பருந்து போல நினைத்துக் கொள்ளலாம். . சாகசப் பிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது திகில் & சிலிர்ப்பு அனுபவம்.! கேபிள் கார் இயங்குவது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான்... இதில் மதியம் 3 மணிக்குள் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள். 


12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் அனுமதி. பெரியவர்களுக்கு 500 ரூபாயும் சிறுவர்களுக்கு 250 ரூபாயும் கட்டணம் (2013ஆம் ஆண்டில்) ராணுவத்தினருக்கு சிறப்பு சலுகை உண்டு..! முதல் நிறுத்தம் 9 நிமிடப்பயணம், இரண்டாவது 12 நிமிடப்பயணம்.! இதய நோய், ஆஸ்த்துமா உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை.! 


திங்கள் அன்று விடுமுறை...! வானிலை சரியில்லாத நாளில் இயங்காது.! 12000 அடியில் பெரிய பனிச்சறுக்கு மைதானத்தில் உங்களை இறக்கி விடுவார்கள்..! அங்கே விளையாட ஆரம்பிக்கும் உங்கள் பிள்ளைகள் இந்த இடம் பிடிக்கவில்லை என்று சொன்னால் இங்கு டிக்கெட் பணத்தை நீங்கள் யாரும் தரவேண்டாம்.


இலவசமாக நான் கூட்டிச்செல்கிறேன்.! அடுத்தபடியாக நிறுத்தம் மூன்று என ஒன்று

உள்ளது.! அங்கு செல்லக் கேபிள் கார் இல்லை.. அது சாகசமோ சாகசம் நிறைந்த பாதை. மிக மிக அபாயகரமானப் பாதை... விதி வலியது அல்லவா.! எங்கள் படபிடிப்பு அங்கு தான்.! புதிய லொகேஷன்கள் அங்கு தான் இருக்காம்..!   (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -15

நிறுத்தம் 3 அபாயகரமான பாதை..குதிரை மூலம் தான் மலை ஏற முடியும். அதுவும் கரடுமுரடான பாதை..! அந்த இடத்திலிருந்து மேலே செல்ல நூற்றுக்கணக்கான குதிரைகளும் அதற்கு கைடுகளும் இருந்தனர். ஒரு ஆள் மேலே போய் வர 2200 ரூபாய்..! (இது 2013இல்) மேலே உச்சி என்பது நான்சொன்ன 12ஆயிரம் அடி.!


அந்த பனிசறுக்கு மைதானத்தின் பக்கத்து வீடு.! அதாவது அடுத்த மலை.. அதை விட இது 1000 அடி உயரம் அதிகம்..! காட்டாறுகள், பனிச்சகதி, வழுக்கும் பனி, (இது கண்ணாடி மாதிரி இருக்கும் )கால் வச்சா அவ்ளோ தான் சர்ருன்னு இழுத்து விட்டுடும் இத்தனையும் சொல்லி விட்டு போகலாமா என்றார்கள்..! 


நானும் கைப்புள்ள கணக்கா வாண்ட்டடா வண்டி (குதிரை) ஏறிட்டேன்..! இந்த வழியில் மேலே போகாதீர்கள், இந்த பயணம் சட்டப்பூர்வமானதல்ல, உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. போன்ற அறிவிப்பு பலகைகளை அலட்சியம் செய்துவிட்டு பலர் மலை ஏறிக் கொண்டிருந்தனர்.! 


அதில் அதிகம் பயமுறுத்தியது கைடு சொன்ன ஒரு வார்த்தை பாகிஸ்தான் இங்கு இருந்து 55கி.மீ தான் என்று.! ஏதோ உசிலம்பட்டிக்கு போற மாதிரி சொன்னார்.!ஒரு கணம் அனைவரும் தயங்க, அட அது அந்த மலைக்கு அந்த பக்கங்க என்றார்.! திரும்பி வரும் வரை நான் மலை உச்சியை பாத்துகிட்டே வந்தேன் யாராவது பாகிஸ்தான்காரங்க வர்றாங்களானு.! ஆனா கடைசி வரைக்கும் யாரும் வரலை.!


ஒரு வேளை தூரத்தில் பைனாகுலர் வழியாக என்னை அவங்க பார்திருந்தா நம்ம கேப்டன் தான் வர்றாருன்னு நினைச்சு பயந்துருப்பாங்க போல. மலை மீது குதிரைச்சவாரி..! அடடா எவ்வளவு திரில்லா இருந்தது தெரியுமா.!  இருங்க குதிரை சவாரி பற்றி நாளைக்கு சொல்றேன். (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -16

முதலில் குதிரைச் சவாரி என்பது பற்றி பார்க்கலாம்..குதிரைமீது அமர்ந்து சம தளத்தில் நிலத்தில் ஓட்டுவது வேறு, மலையேறுவது என்பது வேறு..! அதற்கு முன் குதிரை ஏறி அமர்ந்து பார்க்கவும்.பஸ்ஸின் கடைசி சீட்டில் அமர்ந்து குண்டும் குழியுமான சாலையில் பிரயாணம் செய்வது போலவே இருக்கும்..! 

இதுவரை ஓரிரு முறை கொடைக்கானலிலும், மெரினா பீச்சிலும், குதிரை ஓட்டிய அனுபவத்தை தவிர எனக்கு பெரிய அனுபவம் ஏதுமில்லை..! நான் குதிரையில் அமர்ந்திருந்ததே பைல்ஸ் வந்தவன் போல பரிதாபமாக இருந்தது..! ஒரு புறம் சாய்ந்து கொண்டே சைக்கிள் பழகுபவன் போல அமர்ந்திருந்தேன்...! 

மற்றவர்களுக்கு எல்லாம் மட்டக் குதிரை தந்து விட்டு எனக்கு மட்டும் ஜாதிக்குதிரை தந்தார்கள்.! அதுதான் என் வெயிட் தாங்குமாம், (பின்னே குதிரை மேல யானையை ஏத்துனா) அது நல்ல உயரம்...! குதிரையின் முதுகு விளிம்பே என் காதுக்கருகே இருந்தது அதன் மீது ஏறி அமர்ந்து பார்த்தேன்..! 

வீட்டு மொட்டைமாடி கைப்பிடி சுவர் மீது வெளிப்புறம் காலை தொங்கப் போட்டு அமர்ந்தது கீழே பார்த்தால் எப்படி இருக்கும்.! அது போல் இருந்தது.. இதில் அது ஆடி அசைந்து நடக்கும் போது நானும் அதற்கு எதிர்த் திசையில் அசைந்து அதன் சேணத்தை சரித்து விட்டேன்..!

அதற்கு காஷ்மீரியிலோ அல்லது உருதிலோ அந்த குதிரைக்காரன் என்னை பார்த்து சொன்னது சத்தியமாக நல்ல வார்த்தை கிடையாது என்பது அப்பட்டமாக தெரிந்தது. முதலில் சில கிலோ மீட்டர் தூரம் சம தளம் அதிலியே இந்த ஆட்டம்..! அடுத்து மலைப்பாதை ஏற ஆரம்பித்ததும் என் குலை நடுங்கலாயிற்று..!

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா 17

அப்படத்தின் நடிகர்கள் குதிரையேற்றம் பழகியவர்கள். அதனால் அவர்கள் இயல்பாக இருந்தனர் ஆனால் தரையிலிருந்து 12ஆயிரம் அடி உயரம் செல்ல ஒரு குதிரைப்பயணம் என்பது அவர்களுக்கும் புதிது தான். இருந்தாலும் என் குதிரை தான் அங்கிருப்பதிலேயே உயரமானது. அது தந்த பயம் அதனினும் உயரமானது.

நன்கு மலையேறி பழக்கப்பட்ட இக்குதிரைகளே மேடு பள்ளங்கள் பாறைகளில் தடுமாறி தான் ஏறுகின்றன, முன்பை விட குலுங்கல் அதிகம், என்னால் உட்காரவே முடியவில்லை. உடன் வந்த கைடுக்கு குதிரையை வழி நடத்தி செல்வதை விட அடிக்கடி சரிந்து கொண்டிருக்கும் என்னை தாங்கிப்பிடிப்பது தான் வெ(பொ)றுப்பு.

அவ்வப்போது குதிரையை குச்சியால் குத்துவது போல என்னையும் குத்திக் கொண்டே வந்தான்..60 அடியில் வலப்புறம் பெரிய பள்ளம் அதை ஓரக்கண்ணால் பார்த்தபடி என் வயிற்றில் ரசம் தயாராகிக் கொண்டிருந்தது.. (அதாங்க புளியைக் கரைத்தது) வந்தது பாருங்கள் ஒரு பெரிய ஏற்றம்...! 

அதில் ஏறிய குதிரை வலப்பக்கம் இருந்து இடப்பக்கமாக பக்கவாட்டில் ஒரு சிறு பள்ளத்தை ஜம்ப் செய்ய நான் கடிவாளத்தை விட்டு விட தூக்கி வீசப்பட்டேன்.. சினிமாவில் ஹீரோவிடம் அடிவாங்கும் ரவுடிகள் பறப்பது போல அந்தரத்தில் நான் பறக்க.. என்னுடன் வந்தவர்களின் அலறல் பின்னணி இசைக்க.. குதிரைகள் கனைக்க.. இந்த இசைகளுக்கு சற்றும் பொருந்தாத இசையுடன் விழுந்தேன்...

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -18

குதிரையிலிருந்து நான் தூக்கி வீசப்பட்ட இடத்தில் வலது புறம் பாறைகள் 60 அடி பள்ளம் இடது புறம் புல்வெளி.. எனக்கு கடன் தந்த நல்ல கடன்காரன் ஒருவனின் வேண்டுதல் போல.. நான் புல்வெளியில் விழுந்தேன், லேசான சிராய்ப்பு தான். எல்லோரும் ஓடி வந்து தூக்கிவிட ஒண்ணுமில்லையே என வழிந்து எழுந்தேன்.

அந்த கருப்புக் குதிரை என்னை பார்த்த பார்வையில் "ஜஸ்ட் மிஸ்சுடா" எனக் கேட்டது போல இருந்தது.. இந்த இடத்தில் என் கனத்த உருவத்தை கேலி செய்பவர்களுக்கு.. அங்கே பல சேட்ஜிக்கள் விக்ரம் பட அம்ஜத்கான் மாதிரி XXXL சைசில் சர்வ சாதாரணமாக குதிரையில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

சொல்லப்போனால் கனத்த உருவம் கொண்டவர்கள் மலையேறுவது சிரமம் என்பதற்காகவே தனிக் குதிரைகள் அங்கு இருக்கின்றன.. சிலருக்கு அது கன்னுகுட்டி அளவில் தெரிந்தது என்றால் அவர்களது அளவை கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக மேனகா காந்தி பார்த்திருந்தால் நாங்களெல்லாம் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்போம்.!

ஒரு வழியாக 8000 அடி உயரத்தில் ஒரு டீக்கடையில் சாப்பிட்டு விட்டு பயணத்தை துவக்குகையில் மூச்சு திணற ஆரம்பித்தது. தூய ஆக்சிஜன்.! வாயைத்திறந்து சுவாசிக்க வேண்டியது இருந்தது. இடையில் காட்டாறு ஒன்று பெரும் வெள்ளப் பெருக்கோடு குறுக்கிட குதிரைகள் மிரண்டன. மணி மதியம் 3 ஆகிவிட இனி உச்சிக்கு போய் திரும்புவது கடினம் என்று அன்று திரும்பி விட்டோம்.

மீண்டும் மறு நாள் அதே பயணம்.! என்னை பார்த்தவுடன் நேற்றைய கைடு எனக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டும் அவன் குதிரை கனைத்து விட்டும் மறைந்தனர். எங்கிருந்தோ ஒரு தெய்வம் வந்தது, அவன் பெயர் ரஹீம் 20 வயது இளைஞன்.. குதிரை சவாரி பற்றி மிகப் பொறுமையாக எனக்கு சொல்லிக் கொடுத்தான்.

குதிரை மீது அமர்ந்து மேடு ஏறுவதை விட இறங்குவது அபாயமானது. அது உச்சியில் நிற்பவனை பின்னால் இருந்து தள்ளியது போல வேகமாக இருக்கும்.! வெறும் 15 அடிச் சரிவு என்றாலும் உயரமான குதிரை மீது அமர்ந்து அங்கிருந்து செங்குத்தாக இறங்குவது அடி வயிற்றில் கத்தி செருகியது போல இருக்கும்.

அதுவும் இரு புறமும் 200 அடி கிடு கிடு பள்ளம் எனும் போது நினைத்து பார்க்கவும். ரஹீம் தான் என் பயம் போக்கினான்.. குதிரை மீது எப்படி அமர்வது.. நம் உடலை குதிரைச் சவாரியின் போது வைத்திருக்கும் முறைகள் பற்றி அழகாகச் சொல்லி சவாரியின் சூட்சுமம் அதன் சேணத்தில் தான் இருக்கிறது என்றான். பாடம் அது.

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -19

குதிரையின் முதுகிலுள்ள சேணத்தில் நன்றாக நடுவில் அமர வேண்டும். உடம்பை ரிலாக்சாக வைத்துக் கொள்வது அவசியம். சேணத்தின் கால் நுழைக்கும் வளையத்தில் சரியான அளவில் கால்களை  நுழைக்க வேண்டும். சைக்கிள் மிதிக்கும் போது  பெடலில் உங்கள் பாதம் இருக்குமே அந்தளவு நுழைப்பது சரியானது.

இரு புறமும் கால்களை சரியாக பொருத்தி வைத்து கொள்வது முதல்படி , இது சரியா என்பதை சமதளத்தில் குதிரை நடக்கும் போது எழுந்து நின்று பார்க்கவும். கால்கள் சரியாக இருந்தால் எழுந்து நிற்க முடியும். அமரும் இடத்தில் சேணம் அசைய அசைய அதன் திசையிலேயே நமது பிருஷ்டங்களை அசைக்க வேண்டும்..!

நான் எதிர் திசையில் அசைத்து சேணம் அவிழ்ந்தது இப்போது ஞாபகம் வந்தது..! மேடு ஏறும் போது நம் உடலை முன்புறம் சாய்த்துக்கொள்ள வேண்டும் பள்ளத்தில் இறங்கும் போது உடலை பின் பக்கம் சாய்த்துக்கொள்ள வேண்டும்.! ஒரு சிறிய மைதானத்தில் பயண ஓய்வுக்கு நிறுத்தும் போது சொல்லிக்கொடுத்தான்.. 

இப்போது தொடங்கிய பயணத்தில் நான் புது மனிதனானேன்..! மீண்டும் பயணம் ஆரம்பித்த போது குதிரைச் சவாரியின் சுகம் அறிந்தேன்.!அடுத்த 6000 அடிப்பயணம் இனிதானது..! மிக எளிதாக என்னால் குதிரை ஓட்ட முடிந்தது சொல்லிக் கொடுப்பவன் கலைஞனாக இருந்தால் எல்லா கலைகளும் மிகச்சுலபமே.! 

சூட்சமம் புரிந்து விட்டால் எதுவும் இன்பமே..! எனத் தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்களும் 13000 அடி உயரத்திற்கு கைடு உதவி இல்லாமல் நானே குதிரையை ஓட்டிச் சென்று வந்தேன்.! மலைஉச்சியில் தான் எங்கள் படபிடிப்பு. இதற்குள் 3 முறை குதிரையில் இருந்து விழுந்து அடிபடாமல் தப்பியதும் நடந்தது.!

காட்டாற்று வெள்ளமும் பனிபடர்ந்த உச்சியும் பனிச்சகதியும் பெரிய பிரமிப்பை தரவில்லை குதிரைச் சவாரியைப்போல.! இப்போது நன்கு குதிரைச் சவாரி பரிச்சயம் ஆகி இருந்தது எனக்கு. ஆனால் படபிடிப்பு முடிந்து திரும்பும் போது மீண்டும் குதிரையில் இருந்து விழுந்தேன் இப்போது பலத்த அடியுடன்..! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 20

குதிரையில் இருந்து விழுவது மிகப்பெரிய வலி.! அதை அனுபவித்தேன் ஒரு சிறு தவறினால்.! அதுவும் நன்கு பழகிய பின்பு சிறிது அஜாக்ரதையாக இருந்தாலும் ஆபத்து என்பதை..! அதை பார்க்கும் முன் என்னை சுமந்த குதிரையை பற்றியும்.. குதிரைகளை பற்றியும் பார்க்கலாம்..!

குதிரைகளை பற்றி நான் படித்தது உண்டு மனிதன் பழக்கும் மிருகங்களிலேயே அன்பை அதிகம் எதிர்பார்க்கும் மிருகம் குதிரை..! குதிரைகளோடு தினமும் பேசவேண்டும் குறைந்தது அரைமணி நேரமாவது, அப்போது தான் அது ப்ரியமாக அதன் எஜமானனிடம் பழகுமாம்...!

மூர்க்கமாகி விட்டால் தன் மேலுள்ள மனிதனை யானையைப் போல் குதிரையும் தள்ளிவிட்டு விடும்.! அம்மா அமைச்சர்களை நீக்குவது போல.! ப்ரியமாக பேசுபவர்களை அப்படித் தள்ளாதாம்.! அதுவும் அதன் முகத்தை கைகளால் வருடிக் கொடுத்து கொண்டே பேசுவது அதற்கு ரொம்பப் பிடிக்குமாம்..! 

அடுத்து அதற்கு உணவு தருவது..! பெரும்பாலும் தன் எஜமானன் கையால் சாப்பிடும் குதிரைகள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்குமாம்..! ரேஸ் ஜாக்கிகள் கூட குதிரை உணவு அருந்தும் நேரத்தில் அங்கு தன் கையால் தான் உணவளிப்பார்கள்..! அடுத்து தண்ணீர் காட்டுவது..! குதிரைக்கு மிகவும் பிடித்தது நீர் அருந்துவது...! 

அதிலும் நாங்கள் மலையேறிய போது காட்டாற்று வெள்ளத்திற்குள் இறங்கி எங்களை அக்கரை சேர்த்த குதிரை மிரட்சியுடன் தான் நீரை பார்த்தது..! ஆனால் அதை கடந்து ஓடை போன்ற பகுதிக்குள் நுழைந்ததும் ஆவலாகப் போய் நீர் அருந்த துவங்கியது..! 

நீர் நிலைகளை கண்டதும் கடந்து செல்லாது இரண்டு ஸ்டெப் பின்னாடி நகர்ந்து வாலை தூக்கி மீண்டும் முன்னால் நகர்ந்து முன்னும் பின்னும் முரண்டு பிடித்தால் அதற்கு சரக்கு(நீர்) தேவைப்படுகிறது என அர்த்தம்..! இப்போது அதனை நீர் அருந்த அனுமதித்தால் எந்த சைட்டிஷ்ஷும் இல்லாமல் ஃபுல்லாக குடித்துவிட்டு ஒரு கனைப்பு விக்கல் மாதிரி.! அதை சந்தோஷப்படுத்த வேண்டும். அது முக்கியம். 

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 21

எனக்கு முதல் நாள் வந்த குதிரையின் பெயர் கல்நாயக்.. கருப்புக் குதிரை கல்நாயக் தொடர்பு முதல் நாளே முடிந்துவிட்டது.! அடுத்த 5 நாட்களும் என் செல்லம் பாதல் பிஸ்கெட் பழுப்பில் இருக்கும் என் அழகு தேவதை! 100 கிலோ வெயிட்டில் என்னை என் தாய் கூட சுமந்திருக்க மாட்டாள்.. பாதல் சுமந்தது..! 

பொதுவாக குதிரைகளின் மொழி அதன் கனைப்புச் சத்தம், அதிலும் பெண் குதிரைகள் தான் அதில் சிறந்தவை ரஹீம் போன்ற குதிரைக்காரர்கள் அதற்கு கனைப்பிலேயே பாஸ்வேர்டு வைத்திருந்தார்கள்.! நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி போல ப்ப்ப்ப்ர்ரூரூவா, ப்ர்ர்ர்ர்ர்ர்ரூவா என்றும்... கேரள ஆட்டோ டிரைவர்கள் ஸ்டைலில் ச்ச்ச்ச்ச்ச் என்றும் ஒலி எழுப்புகிறார்கள்..!

இதில் முதல் ப்ப்ப்ப்ர்ரூரூவா வலது என்றும்.. அடுத்த ப்ர்ர்ர்ர்ர்ரூவா இடது என்றும் ச்ச்ச்ச்ச் என்பது மெதுவா போ இப்படி அர்த்தங்கள்.! எனக்கு மிமிக்ரி செய்யத் தெரியும் என்பதால் வெகு சுலபத்தில் அதை நான் கற்றுக் கொண்டேன்..! ரஹீமுக்கு தான் நான் அவர்கள் பாஸ்வேர்டு மொழியை கற்றது பெரிய ஆச்சர்யம்..! பஹூத் அச்சா பய்யா... என்று சொல்லிக்கொண்டே இருப்பான்..!

பாதலுக்கு காரட் மிகவும் பிடிக்கும் என்றான் ரஹீம்..! 2வது நாள் ஶ்ரீநகரில் இருந்து செல்லும் போதே ஒரு மூட்டை காரட் வாங்கிச் சென்றோம்..! பாதலுக்கு ஏகக் குஷி, உற்சாகமாக கனைத்தாள் எனக்கும் பாஷை இப்போது தெரியுமாதலால் பாதலுடன் காதல் மொழியில் கனைத்தேன்.! அண்ணனும் கனைத்தேன் அவளும் கனைத்தாள் 

கனைப்பில் கனெக்டானோம். அவள் உருது காஷ்மீரிக் குதிரை நான் தமிழன்.! அவளுக்கு மொழி புரிகிறதோ இல்லையோ.. தினமும் அவளோடு ஏதாவது பேசுவேன் "ஏன் அந்த ஓடையிடம் வந்த போது தடுமாறுன, காரட் நல்லா இருந்துச்சா, தண்ணி குடிக்கிறியா இப்படி என் சம்பாஷணைகள் இருக்கும்..! சில நேரம் தலையாட்டுவாள் சில நேரம் கனைப்பாள்... அன்று திமிறினாள்..! ஏன்..? (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 22

கடைசி நாள் மாலை குதிரையை நிறுத்திவிட்டு திரும்பும் போது முன்னங்கால்களை தூக்கி, தலையை சிலுப்பி அடம் பிடிக்கும் குழந்தையை போல உடலை உதறிக் கொண்டாள் பாதல்.! நாங்கள் ஊருக்கு போகிறோம், நாளை வர மாட்டோம் என்பதை எங்கள் பேச்சுக்களில் இருந்து தெரிந்து கொண்டு விட்டாள்..! 

எங்களுடன் ஒரு வாரப் பழக்கம் கூட இல்லை ஆனால் எப்படிப்பட்ட உள்ளுணர்வு.! மிருகங்களுக்கு 5 அறிவு என்று தவறாக யாரும் இனிச் சொல்லாதிர்கள். அவை நாம் காட்டும் அன்பை பிரதிபலிப்பவை. சட்டென எனக்கு சேகுவாராவின் சாண்ட்டா குதிரையும், பிருதிவி ராஜனின் சேதக் குதிரையும் நினைவுக்கு வந்து போனது..! 

ரஹீமிடமும் பாதலிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு திரும்பிய போது யாரும் அறியா வண்ணம் நான் லேசாக அழுதேன்.. இங்கு தான் நான் விழுந்த கதை..! 
குதிரையை விட்டு விட்டு திரும்பிய நான் எப்படி குதிரையில் இருந்து விழுந்தேன்? நியாயமான கேள்வி. அங்கிருந்து நாங்கள் வேன் நிறுத்திய இடம் 3 கி.மீ தூரம்..! 

வேனுக்கு நடந்து தான் செல்லவேண்டும்.. நாங்கள் ஏறிய குதிரைக்காரர்களின் ஸ்டாண்டு கிழக்கில்.. வேன் நிற்பது மேற்கில் அங்கு வேறு ஸ்டாண்டு.! கிழக்கு ஸ்டாண்ட் மேற்கு பக்கம் வராது மேற்கு ஸ்டாண்ட் கிழக்கு பக்கம் வராது யாரோ ஒரு காஷ்மீர் கைப்புள்ள கோடுபோட்டு வச்சுருக்கான் போல..! 

நடக்க ஆரம்பித்த போது எங்கள் வேன் அருகே செல்ல.. கொடுக்கிறதை கொடுங்க என்று சில குதிரைக்காரர்கள் வந்தார்கள்..! நாங்களும் களைப்பினால் குதிரையில் போக முடிவெடுத்தோம்.! அனைவரும் ஆளுக்கொரு குதிரை ஏற, நானும் குதிரை சேணத்தில் கால் வைத்து ஏறி அப்படியே தலைக்குப்புற மறுபக்கம் விழுந்தேன்..! அதாவது குதிரையின் இந்தபக்கம் ஏறி அந்தப்பக்கம் தடாலென விழுந்தேன்.! அது...

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -23

கடந்த 5 நாட்களாக தினமும் ஒரு 12 முறை என்ற கணக்குப்படி கிட்டத்தட்ட 60 முறை குதிரை ஏறி இருக்கிறேன்..! ஒரு தடவை கூட விழலை. இப்ப மட்டும் என்னாச்சு..! செய்த சிறு தவறு இது தான், குதிரையில் இந்த 5 நாட்களாக அதன் இடப்பக்கம் நின்று என் இடது காலை கால் பிடியில் வைத்து வலது காலை தூக்கி ஏறியே பழகி விட்டேன்.. இப்போது உல்டா...!

வலப்பக்கம் கால் வைத்து இடது காலை தூக்கி ஏறினேன்.. இதுவரை இடப் பக்கமே
ஏறி பழகி விட்டேன்.. அதே பாணியில் வலப்பக்கம் ஏறும் போது என் உடல் எடையை பேலன்ஸ் பண்ண முடியவில்லை.! விழுந்தேன்.. விழுந்த வேகத்தில் நல்ல அடி..! என் இடப் பக்க தலை தரையில்  நச்சென்று மோதியது.. இங்கும் புல் தரை தான் காப்பாற்றியது அந்த அடிதான் வேன் ஏறும் வரை வேதனையாக இருந்தது.

பிறகு காஷ்மீர் திரும்புவதற்குள் வலி குறைந்து விட்டது.. படகு வீடு திரும்பினோம்.. இரவுக் குளியல் முடிந்து உடல் துவட்டும் போது இடது இடுப்பில் சுளீர் என வலித்தது உட்கார்ந்தால் வலி இல்லை.! நின்றால் வலித்தது, சரி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சாப்பிட்டு படுத்தேன்.

மறு நாள் காலை எழுந்த போது என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை..! எவ்வளவு முயற்சித்தும் வலது கால் மட்டுமே அசைந்தது..! எனக்கு இடது கால் என்பது உடலிலேயே இல்லை என்பது போல மரத்துப் போய்கிடந்தது.! அசைவற்று கிடந்த என் கால் என்னை பயமுறுத்தியது..! முதுகு தண்டில் சுளீர் வலி! 

என் உயிர்த் தோழன் படத்தில் பாபு என்று ஒரு நடிகர் கதாநாயகனாக அறிமுகமானார் அவரது 4 வது படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் ரிஸ்க் எடுத்து முதுகு தண்டில் அடிபட்டு கடைசி வரை போராடி இறந்து போனது என் ஞாபகத்தில் வந்ததும் எனக்குள் பீதி பெருக்கெடுத்தது.! ஏனென்றால் எனக்கும் இது 4 வது படம்

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 24

என்னால் காலை அசைக்க முடியவில்லை காலை 7 மணி தான் ஆகிறது டாக்டர்கள் வர வேண்டும் என்றால் படகில் கரைக்கு போய் அழைத்து வரவேண்டும் அன்று பஸ் ஸ்டாண்டில் கதாநாயகனை விரட்டி செல்லும் காட்சி வேறு 8 மணிக்கு கிளம்பினால் தான் படபிடிப்புக்கு சரியாக இருக்கும்..

அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க நான் மட்டும் படுக்கையில்..! இன்று வேறு காட்சி எடுக்கலாம் என்றால் மறு நாள் அங்கு பந்த் அதற்கு அடுத்த ஒரு நாள் திரும்பி செல்லும் வழியில் சில காட்சிகள் எடுப்பதாக ஷெட்யூல். நாளை மறுநாள் நாங்கள் ஜம்முவில் இருந்து டெல்லி கிளம்பவேண்டும்.!

என்ன செய்வது என அனைவரும் யோசித்துக் கொண்டிருந்த போது எங்கள் பணியாள் விக்ரம் சிங் வந்தார்.. என்ன பிரச்சினை எனக் கேட்டார்.. முகத்தின் முன் கொசுவர்த்தி சுருள்... இது தாங்க நடந்தது...! எல்லாவற்றையும் கேட்டவர்  என்னை கைத்தாங்கலாக படுக்கையில் இருந்து எழுப்பி உட்கார வைத்தார்.

என் இரு கால்களையும் தரையில் படுமாறு வைத்தார்..! வலது கால் தரையில் பட்ட உணர்வு தெரிந்தது இடது காலில் ஒன்றுமே தெரியவே இல்லை, விக்ரம் சிங் தன் வெறும் காலால் அவரது பின் பாதத்தை என் இடது கால் பெரு விரலில் மிதித்து ஓங்கி அழுத்தினார்.!! ஒரு தரம்.. இரு தரம்... 

மூன்றாவது அழுத்தத்தில் நீர் நிரம்பி இருக்கும் தண்ணீர் தொட்டியின் கீழ்ப்புறம் துணி வைத்து அடைத்து இருப்பார்களே, அதை பிடுங்கி விட்டால் பாய்ந்து வரும் நீர் போல விர்ரென ரத்த ஓட்டம் என் காலில் பாய்வதை உணர்ந்தேன்..இப்போது காலில் உணர்வு தெரிந்தது 40 வினாடிக்களில் விக்ரம் என்னை குணப்படுத்தினர்...!

எப்படி இந்த முறை பற்றி உங்களுக்கு தெரியும் என்ற போது, தால் ஏரியில்  நன்கு நீந்த தெரிந்தவர்கள் குளிக்கும் போது ஸ்விம் ஸ்ட்ரோக் ஏற்படுமாம் அல்லது நீண்ட நேரம் குளிர் நீரில் நீந்தும் போது இப்படி ரத்த ஓட்டம் தடைபடுமாம் அவர்களுக்கு செய்யும் வைத்தியம் தான் இது என்றார் விக்ரம் சிங்..! ஆனால் முதுகில் வலி இன்னும் இருந்தது.. (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 25

என் முதுகு வலியை யூகலிப்டஸ்  எண்ணை கலந்த சுடு நீரில் டவல் நனைத்து ஒரு 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்த பின்பு அந்த வலியும் பறந்தோடச் செய்தார்.! விக்ரம் சிங்கை எங்கள் படக்குழுவினர் பாராட்ட நான் அன்பளிப்பு தந்த போது அன்போடு அதை மறுத்து என்னை அவருக்கு ஆயுள் கடன்காரன் ஆக்கி விட்டார் விக்ரம் சிங்...!

பிறகு படகில் கரைக்கு சென்று முன்னெச்சரிக்கையாக ஆஸ்பிடல் சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது முதுகு தண்டிற்கு சற்று அருகில் எலந்தைப் பழம் அளவு ரத்தக்கட்டு இருந்தது. அதற்கும் மருந்துகள் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.! 
ஶ்ரீநகர் பேருந்து நிலையத்தில் தான் படபிடிப்பு. அந்த பஸ்ஸ்டாண்டில் நுழைந்ததும் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்தது போலிருந்தது.! 

மக்களின் நடை உடை உருவம் எல்லாம் அப்படி..! தொள தொள பைஜாமா, அதன் மீது ஓவர் கோட்டு, பெண்கள் தவிர்த்து எல்லார் முகத்திலும் நீண்ட தாடி, கருப்பு பர்தாக்கள், சிவப்பு ஜர்தாக்கள், உருது இரைச்சல்கள், கண்ட இடமெல்லாம் ஈரானிய முகங்கள்.அது காஷ்மீருக்கு வடக்கே உள்ள ஊர்களுக்கு போக இயங்கும் பேருந்து நிலையம்..கிட்டத்தட்ட பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஊர்கள்..! 

அந்த கிராமத்து மக்கள் தொழில் நிமித்தமாக காஷ்மீர் வந்து போவதால் தான் இங்கு நான் பார்த்த மக்களின் உடையில் நடையில் ஆப்கன் & பாக் கலாச்சாரம் என்பது தெரிந்தது..! நாளிதழ்களில் நாம் அடிக்கடி படிக்கும் காஷ்மீரில் துப்பாக்கி சூடு...  
எல்லையில் பதட்டம், தீவிரவாத தாக்குதல், ராணுவத்தினர் மீது குண்டு வீச்சு,

என்றெல்லாம் நாளிதழ்களில் நாம் படிக்கும் கார்கில்,பாரமுல்லா ஆகிய ஊர்களின் பெயர்களை தாங்கிய பேருந்துகளை பார்த்தேன்.. அவற்றை பார்க்கையிலேயே எனக்கு அஸ்தியில் புளிய மரமே கரைந்தது..!  (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 26

காஷ்மீர் பாகிஸ்தான் எல்லைப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றிலும் டிரைவர் கண்டக்டர் இல்லாவிட்டாலும் கட்டாயம் துப்பாக்கி ஏந்திய இரண்டு எல்லைப் பாதுகாப்பு படையினர் இருக்கிறார்கள்.! முன்னால் ஒருவர் பின்னால் ஒருவர் என ஒரு பஸ்சிற்கு இருவர்! அவர்களுக்கு ஆயுள் பஸ் பாஸ் எடுத்து தந்து உள்ளார்கள் போல..! அவர்களுக்கும் பஸ் ஓட்டத் தெரியுமாம்..!

அவர்களும் சர்வ சாதாரணமாக தாடை அரித்தால் கைத்துப்பாக்கியாலும்.. முதுகு அரித்தால் AK47 துப்பாக்கியாலும் சொறிந்து கொண்டு, பான் மென்று கொண்டும் பால்வாடிக்கு போகும் கைக்குழந்தைகள் போல் தினமும் பஸ்ஸில் போய் வருகிறார்கள்.! பேருந்துகளில் ஏற்றும் மூட்டைகளை சோதித்து தான் ஏற்றுகின்றனர் பஸ் கிளம்பும் முன் கார்கில்.. கார்கில்.. கார்கிலோய்ய்ய்ய்ய் என கத்துவதை தவிர எல்லாம் செய்கிறார்கள்..!

அடுத்து அந்த பேருந்து நிலையத்தின் சுகாதாரம்.! ஒருமுறை அங்கு சென்றால் நீங்கள் நம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு கோவில் கட்டுவீர்கள்.!  சர்ஃப் எக்ஸல் நிறுவனம் கறை நல்லது என்ற வார்த்தையை இங்கு இருந்து தான் எடுத்திருப்பார்கள் போல.. 6அந்தளவிற்கு சுத்தத்திலும் சுகாதாரத்திலும் படு படு படு மோசமாக இருந்தது...!

மொத்த பேருந்து நிலையமே திறந்த வெளி கழிப்பிடம்...! ஒரு பஸ்ஸிற்கும் இன்னொரு பஸ்ஸிற்கும் போதிய இடை வெளி விடுவதே சிறுநீர் கழிக்கத் தான்...! என்று எழுதித்தான் போடவில்லை..! எங்கும் பார்த்தாலும் வெட்டி துண்டாக்கப்பட்ட கோழிக்கால்கள் லட்சக் கணக்கில் சிதறிக்கிடந்தன, பான் எச்சில்கள், பஸ்சிலிருந்து வடிந்த ஆயில், குப்பைகள்..!

கீழே கால் வைக்க ஷுவே கூசியது..!அங்குள்ள பஸ் டயர்கள் கங்கையில் இறங்கினால் சொச்ச கங்கையும் அழுக்காகிவிடும்..!இங்கு தான் எங்கள் படபிடிப்பு..! அதிலும் ஒடி விரட்டி பிடிக்க வேண்டிய காட்சி அவ்வளவு அழுக்குக்குள் எப்படி ஓடுவது என்பதை யோசிப்பதற்கு முன்.. அந்த பேருந்துகளைப்பற்றி... (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 27

வட இந்தியா லாரிகளை பார்த்து இருப்பீர்கள்..! அதைப்போலவே பஸ்சும் இருக்கும்..! நம்ம ஊரு பஸ்சுக்கு ராஜஸ்தான் ஸ்டைலில் முண்டாசு கட்டிவிட்டது போல ஒரு தோற்றம்..! அந்த முண்டாசு பஞ்சவர்ண கலரில் இருக்கும்..! அய்யனார் சிலை போல 90 டிகிரியில் அமர்ந்து தான் பயணிக்க வேண்டும்.. பேருந்தின் பராமரிப்பு பரிதாபமரிப்பாக இருக்கிறது..! 

வெள்ளை சட்டையுடன் ஏறி அமர்ந்தால் செலவில்லாமல் அது பழுப்பாக மாறும் வசதியுள்ள பேருந்து..! ஒவ்வொரு அங்குலமும் அழுக்கு அழுக்கு ஆஆஆழுக்கு..! பொது மக்களை அந்த பஸ்ஸில் பயணம் செய்ய வைப்பதே ஒரு தீவிரவாதச் செயல் என்றால் ஒப்புக் கொள்வீர்கள்..! இங்கு சற்று சுத்தமான இடம் இருக்கிறதா?என்று பலரிடம் கேட்டோம்..!

அதற்கு அவர்கள் எங்கள் படக் குழுவினரை பார்த்த பார்வையில் பரிதாபமே தெரிந்தது..! ஒரு வழியாக பேருந்து நிலையத்தின் கடைசி பிளாட்பாரத்திற்கு அருகில் ஒரு மெக்கானிக் ஷெட் இருந்தது பேருந்து நிலையமே இவ்வளவு அசுத்தமென்றால் அந்த மெக்கானிக் ஷெட்..!

ஆனால் ஆச்சரியப்படும் அளவிற்கு அது சுத்தமாக இருந்தது..! அல்லது பஸ் ஸ்டாண்டை விட சற்று குப்பை குறைவாக இருந்தது..! அந்த இடத்தில் அடுத்த 4 மணி நேரம் படபிடிப்பு முடிந்து படகு வீடு திரும்பினோம்..! காஷ்மீரில் வந்த இந்த 8 நாட்களும் மறக்க முடியாதவை.!அடுத்த நாள் காலை மீண்டும் டெல்லி பயணம்..! 

வழக்கம் போல பண்டிட் குளித்து குங்குமம் பூசி பான் மணக்க சிரித்தார்..! குங்குமப்பூ காஷ்மீர் மரப்பெட்டி கிரிக்கெட் பேட்டுகள் போன்ற ஷாப்பிங்குகள் முடிந்து ஜம்முவுக்கு புறப்பட்டோம்..! இரவு ஜம்முவிலிருந்து டெல்லிக்கு பேருந்துப் பயணம் அது பற்றி தனியே எழுதும் அளவுக்கு கதை இருக்கிறது..!

அதை தனியாக டெல்லி அனுபவங்களோடு எழுத உத்தேசம்..! மீண்டும் இமயமலை சாலை, மலைக்குகைகள், ஆடுகள் என டிட்டோ பயணம்..! காஷ்மீரிலிருந்து வேன் கிளம்பியது வேனின் பின் புறம் பனி மூடிய இமயம்..! ஒரு வினாடி அதை திரும்பிப் பார்த்தேன் அது கை அசைத்தது போல ஒரு தோற்றம்..! என் கண்களில் சட்டென்று நீர் கோர்த்து கொண்டது..! பை..பை.. காஷ்மீர்...!

#நிறைந்தது


Edited...

காஷ்மீர் கலாட்டா - 6

எங்கள் அலறலை நிறுத்தியது அண்ணன் பண்டிட்டின் குரல் நீங்க சாப்பிடுற இடம் வந்தாச்சு என்றார்.! ஆம்..! அந்த அபாயகரமான இடத்தை கடந்து நாங்கள் சாப்பிடும் இடத்தை அடைந்திருந்தோம்.. எங்கள் இயக்குனர் ஓடிப்போய் பண்டிட்டை கட்டிக் கொண்டார்..! நீ பெரிய ஓட்டுனண்டா என்ற போது சிரித்துக் கொண்டே பண்டிட் சொன்னது.. 

ஸார் நான் காலையிலேயே சரக்கு அடிச்சுட்டேன் இப்ப நீங்க பாத்ததால இது பெருசாயிடுச்சு என்றார்! குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது எவ்வளவு தவறு என்றாலும் இது போல பயணங்களில் அவர்களது நம்பிக்கை கிறுக்குத்தனமானது என்று தான் தோன்றியது.! ஆனால் இது தான் அங்கு பல ஓட்டுனர்களின் நிலை.

அதுவும் சில வடஇந்திய டிரைவர்கள் யோக நிலையில் தான் வண்டி ஓட்டுகிறார்கள் இது சரியா என ஓட்டுனர்கள் தான் சொல்ல வேண்டும். பிறகு ஒரு மணிநேரம் நாங்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்ப எங்கள் கைடே வண்டி ஓட்ட ஆரம்பித்தார். பின் சீட்டில் காஷ்மீரி உளறல்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார் பண்டிட்..! 

அவர் வண்டி ஓட்டுவேன் என்றுதான் சொன்னார் ஆனால் இனி ரிஸ்க் எனும் ரஸ்க் சாப்பிட விரும்பததால் நம்ம கைடே வண்டி ஓட்டினார்..!150 கி.மீ தாண்டியதும் காஷ்மீரிகளின் கிராம வாழ்க்கை தெரிய ஆரம்பித்தது..! ஆடு வளர்ப்பது மிக முக்கியம்..! நம்ம ஊர் ஆடுகள் போல அல்ல அங்கு.

அத்தனையும் கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகள்.! குறிப்பிட்ட காலத்தில் அவற்றை கீழிருந்து மேலே குளிர் சீதோஷ்ண சூழலுக்கு அழைத்து செல்ல வேண்டும்..! அப்போது தான் அவற்றிற்கு உரோமம் வளருமாம்..! மலையின் நடுவே இருப்பவர்கள் மலை உச்சிக்கு ஆடுகளை மந்தையாக ஓட்டிச்செல்கின்றனர்.

குறைந்தது 5 மாதங்கள் வீட்டை விட்டுப் போய் நாடோடிகள் போல கூடாரம் அமைத்து குளிரில் தங்க வேண்டும்.. வசதியானவர்கள் குளிர் பிரதேசத்திலும் மர வீடுகள் கட்டி வைத்திருப்பார்களாம்.. 5 மாத உணவுப் பொருட்கள் கம்பளி ஆடைகள் இவற்றோடு தற்காலிகமாக தங்கள் கிராமத்தை பிரிகிறார்கள் காஷ்மீரி மலை கிராம மக்கள்.!

நீங்கள் கூட்டமாக எவ்வளவு ஆடுகள் பார்த்து இருப்பீர்கள்? 100, 200,500, 1000,2000? நான் பார்த்தது எவ்வளவு தெரியுமா?! (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 7

கிட்டத்தட்ட அந்த பயணத்தில் 2 இலட்சம் ஆடுகள் நான் பார்த்து இருப்பேன்..! ஒவ்வொரு ஆட்டுமந்தையிலும் குறைந்தது 5000 ஆடுகள் இருக்கும்..! அதற்கு நம்ம ஊரு கீதாரி போல ஒருவர், அவரது உதவியாளர் இருவர் இவர்களுக்கு சமைக்க 3 பேர் மொத்தம் 6 பேர் குழு! கட்சி மாறக்கூடிய எம் எல் ஏக்களை அழைத்து செல்வது போல் அதை பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்..! அப்படியும் சில ஆடுகள் பள்ளத்தில் தாவி ஓடிவிடுமாம்..! (கேப்டன் கவனமாக இல்லா விட்டால்)

வெறும் விசில் சப்தத்திலேயே அத்தனை ஆடுகளையும் வழி நடத்தி செல்கிறார்கள்..! 2000 ஆடுகள் சாலை நடுவே சென்று கொண்டு இருக்க எங்கள் வண்டி வழி கேட்டு ஹாரன் அடிக்க அந்த கீதாரி ஒரு வித்யாசமான தொனியில் விசில் கிக்கிக்கிக்கிக்கி என்று அடித்தவுடன் 5 வினாடிகளில் அத்தனை ஆடுகளும் வண்டிக்கு வழி விட்டு ஒதுங்கியது ஆச்சர்யம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லக லக லக லக்க... சத்தம் கூட இமாலயத்தில் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவனின் குரல் தான் என்று அவரே சொன்னதை இங்கு நினைவு படுத்துகிறேன். ஆடுகள் அந்த இடையர்களுக்கு அவ்வளவு மரியாதை தருகின்றன. அம்மாவைக் கண்ட அதிமுகவினரைப் போல் அவ்வளவு பணிவு, பயபக்தி..!

அடுத்து இந்த பயணத்தில் பிடித்தது மலைக்குகை பயணங்கள்..! நீளமான இருள் குகைக்குள் சிலிர்ப்பூட்டும் பயணங்கள்.. இந்த குகை வாசலில் ராணுவத்தினரின் செக் போஸ்ட் உள்ளது, இங்குதான் அந்த ஆட்டு மந்தைகள் காத்திருப்பில் வைக்கப்படுகிறது... அரசியல் கூட்டணிக்கு காத்திருப்பது போல ரொம்ப நேரம் காக்க வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்த மந்தைகளை அந்தக் கணவாய்க்குள் செல்ல அனுமதிக்கிறார்கள்.. திடீரென்று சூழும் இருள் சில நிமிடங்கள் பிறகு சில நிமிடங்கள் வெளிச்சம் என மாறி மாறி ரசித்த அற்புதமான பயணம் அது..! (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -12

இவ்வளவு சிறப்புள்ள தால் ஏரியின் பழைய முகம் இதைவிடப் பேரழகு என்றார்கள்.. ஆம் இப்போது அதன் பரப்பில் பாதிக்கும் மேல் பாசி பிடித்து பாழ்பட்டு கிடக்கிறது.! 

அதன் பழைய அழகு போய் மார்கெட் இழந்த கதாநாயகி போல பொலிவின்றி கிடக்கிறது... திரும்பிய பக்கமெல்லாம் பாசி ஒரு பக்கம் அழித்துக் கொண்டு வருவதற்குள் மறு பக்கம் வளர்ந்து விடுகிறது.!

காஷ்மீர் அரசின் பெருங்கவலையே இதை தூய்மை படுத்துவது தான்.! இப்போது ஒரு கிலோவுக்கு 1 ரூபாய் திட்டம் போட்டுள்ளார்கள்... அதாவது ஒரு கிலோ பாசிகுப்பையை நகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தால் 1 ரூபாய் கிடைக்கும்..! 

சராசரியாக 1 மணி நேரத்தில் 100 கிலோ வரை அள்ளமுடியுமாம் 10 மணி நேரம் 10 டிரிப் அடித்தால் 1000 கிலோ குப்பை வரை அள்ளி சம்பாதிக்கின்றனர்.இந்த திட்டம் நன்கு பயனளிப்பதாக சொன்னார்கள்.!

தால்ஏரிக்குள் இருக்கும் மார்க்கெட்டுக்குள் ஒரு விசிட் அடித்து பார்க்காமல் திரும்பாதீர்கள்.! விலை அதிகம் தான் இருப்பினும் இங்கும் சில தரமான பொருட்கள் கிடைக்கும். விலை விசாரித்து வாங்கவும்.

தாராளமாக பேரம் பேசலாம்.. என்ன ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க படகில் ஏறி இறங்கணும்..ஒவ்வொரு கடை வாசலிலும் படகை பார்க்கிங் செய்து விட்டு ஷாப்பிங் செல்வது புது விதமான அனுபவம்.. 

ஷிகாரா படகுகள் நன்கு மெத்தை விரிக்கப்பட்டு சொகுசாக சாய்ந்து கொள்ளும் படி அமைக்கப்பட்டவை.. சுற்றுப்புறத்தை ரசித்துக்கொண்டே மெல்ல ஒரு சுற்று ஏரியை வலம் வருவது இன்னும் அழகு.. 

ஓடும் படகில் எழுந்து நிற்கக் கூடாது அது மொத்த படகையும் கவிழ்த்து விடும் நிறுத்தங்களில் மட்டுமே எழுந்து இறங்க வேண்டும். அதுவும் படகில் ஏறும் போதும் இறங்கும் போதும் ஜாக்கிரதை ஏனெனில் நாங்கள் போன 2வது நாளில்..

படகில் இருந்து இறங்கிய ஒரு பெரியவர் கால் தவறி ஏரிக்குள் விழுந்து விட்டார் உடனடியாக காப்பாற்றினர்..! பிறகு தான் தெரிந்தது தினசரி இது போல 100 பேர் விழுகிறார்களாம் ஜாக்கிரதை.! நானும் விழுந்தேன் ஏரியில் அல்ல குதிரை மீது இருந்து...! அது... (வரும்...)