Tuesday 18 April 2017

அமெரிக்க "விசா"ரணை-1

கடந்த அக்டோபரிலேயே 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு வந்திருந்தது.. கிறிஸ்டோபர், மேலூர் சசி, ஈரோடு மகேஷ் இவர்களுடன் நானும்.. இதில் மகேஷ் ஏற்கனவே அமெரிக்க விசா வைத்திருப்பவர்..2 முறை அங்கு போய் வந்தவர் ஆனால் நாங்கள் மூவரும் அமெரிக்கா செல்வது இது முதல் முறை.

விசாவிற்கு அப்ளை செய்தோம்..6 மாத பாங்க் ஸ்டேட்மெண்ட், மூணு வருட இன்கம்டாக்ஸ் ரிடர்ன்,வாங்கிய ஷீல்டுகளின் போட்டோ, எங்களைப் பற்றி வந்திருந்த பத்திரிக்கைச் செய்திகள், சொந்த காரின் ஆர்.சி, சொத்து பத்திரம் முதல் அத்தனையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள் நாங்களும் பரபரப்பாக எல்லாம் தயார் செய்தோம் டிசம்பர் 31 இண்டர்வியூ.. அதற்கு முதல் நாள் கைரேகை புகைப்படம் பதியவேண்டும் என்றார்கள்.

கைரேகை பதிய இருந்த அமெரிக்க தூதகரத்தின் கிளை வள்ளுவர் கோட்டம் எதிரில் இருந்த சிறிய சாலையில் இருந்தது.. பிரம்மாண்டமான கட்டிடம்.. அமெரிக்கா செல்ல இருக்கும் ஏராளமான மக்கள் அங்கு குவிந்திருந்தனர்.. அந்தத் தெருவில் டீக்கடை வைத்திருப்பவர் ஆடி காரில் வந்து இறங்கினால் அது ஆச்சரியம் இல்லை.. அவ்வளவு வியாபாரம்.! எதிரில் ஒரு கோடீஸ்வரர் இளநீர் விற்றுக் கொண்டிருந்தார்.. அங்கும் கூட்டம்.

மதியம் 3:45 எங்களது அப்பாயிண்ட் மெண்ட் இரண்டரை மணிக்கே சென்று விட்டோம்.. டீக்கடைக் காரரின் அன்றைய சில லட்ச ரூபாய் வருமானத்தில் எங்களது 63 ரூபாயும் இருந்தது.. படிக்கப் போகிறவர்கள் வேலைக்கு போகிறவர்கள் கணவனை பார்க்கப் போகிறவர்கள், மகன் மகளை பார்க்கப் போகிற வயதானவர்கள், விசா புதுப்பிப்பவர்கள் என கதம்பமாக அங்கு கூட்டம் இருந்தது.. 3:30 க்கே அழைக்கப்பட்டோம்.

நீளமான அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதியில் நுழைந்து தரை தளத்திற்கு படியேறினோம் நீண்ட வரிசை.. அங்கு பாஸ்போர்ட் அப்பாயிண்ட்மெண்ட்  கடிதங்கள் சரி பார்க்கப்பட்டது.. அதன் பின் முதல் மாடி அங்கும் நீண்ட வரிசை நமது பாஸ்போர்ட்டுகள் ஒரிஜினலா என ஸ்கேன் செய்யப்பட்டது. அடுத்த பகுதி அங்கும் நீண்ட வரிசை நமது அப்பாயிண்ட்மெண்ட் கடிதத்தில் முத்திரை குத்தப்பட்டது.. அதற்கு அடுத்து மீண்டும் நீண்ட வரிசை..

அங்கு நம்மை நன்கு மெட்டல் டிடெக்டரில் பரிசோதித்து அனுப்பினார்கள் ஒரு டோக்கன் ஒன்று வழங்கப்பட்டது.. எதிரில் வங்கியில் பணம் எடுப்பது போல 25க்கும் மேற்பட்ட கவுண்டர்களுடன்.. அங்கிருந்த டிவியில் நம் டோக்கன் நம்பரும் அதற்குரிய கவுண்டர் எண்ணும் வரும்.. எதிரே கிடந்த நாற்காலிகளில் அமர்ந்தோம்.. எங்கள் எண் வர 10 நிமிடங்கள் ஆயிற்று.. அழைப்பு வந்ததும் வலது இடது கைகளில் நான்கு விரல்கள் பின்னர்..

தனியாக இரு கை கட்டை விரல்கள்.. என அத்தனையும் பதிவு செய்தோம் புகைப்படமும் எடுத்தார்கள்... எங்கள் பாஸ்போர்ட் மீது அடுத்த நாள் இண்டர்வியூவுக்கான ஸ்டிக்கர் பார்கோடு தாங்கி ஒட்டப்பட்டது.. எக்ஸிட் பகுதியில் வெளியேறினோம். இந்த முனையிலிருந்து அந்த முனை நடக்க 1 நிமிடமே ஆகும் அக்கட்டிடத்தில் எங்களை 20 நிமிடம் சுற்றிச் சுற்றி வர விட்ட அமெரிக்க விஞ்ஞானத்தை எண்ணி வியந்து கொண்டோம்.

சென்னையின் மாசு படிந்த காற்று எங்களை வரவேற்க மீண்டும் ஒரு டீ சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது ஒருவர் அப்பாடா பாதிக் கிணறு தாண்டியாச்சு மீதி தூதகரத்தில் தாண்டனும் என்றபடி கடந்து போனார்.. ஆமாம் அவருக்கு அடுத்தவாரம் இண்டர்வியூ எங்களுக்கு அடுத்த நாளே.. இப்போ பாதிக்கிணறு மீது அப்படியே நாங்கள் ஃபீரீஸ் ஆகி நிற்க மீதி இடைவேளைக்கு பிறகு... நாளை அமெரிக்க தூதகர நிகழ்வுகளோடு சந்திப்போம்..

வரும்....

No comments:

Post a Comment