மேற்கில் உதித்த தமிழ்ச்சூரியன் - மிசெளரி தமிழ்ச் சங்கம்
செயின்ட் லூயிஸ்..!அமெரிக்காவின் மேற்கு நுழைவாயில் என்று அழைக்கப்படும் பாரம்பரியமும் பெருமையும் கொண்ட நகரம் புரண்டோடும் மிசெளரி நதியும் பொங்கி பிரவாகமெடுத்து வரும் உலகின் நீண்ட நதிகளில் ஒன்றான மிசிசிபியும் ஒன்றையொன்று ஆரத் தழுவுகின்ற நகரம் மிசெளரி.. இதில் மூன்றாவதாக ஒரு பெரும் நதியும் சங்கமிக்கிறது.! ஆம் அது தான் மிசெளரி தமிழ்ச் சங்க நதி.!!
மனித குலம் இவ்வுலகில் தோன்றிய பின் நாகரிகமும் பண்பாடும் கலையும் கலாச்சாரங்களும் ஆற்றங்கரையில் தான் தோன்றின, அதை மெய்ப்பிக்கும் வகையில் பண்பாட்டையும், கலையையும், கலாச்சாரத்தையும் போற்றி வருகிறது நம் மிசெளரி தமிழ்ச் சங்கம். சத்தமின்றி பல சாதனைகளை செய்துவரும் நம் தமிழ்ச் சங்கம் அமெரிக்காவின் பிற மாநில தமிழ்ச் சங்கங்களுக்கும் முன் மாதிரியாக விளங்குகிறது.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் தம் உணர்வுகள் என்னும் கண்ணுக்கு புலப்படாத இழையில் தமிழகத்தோடு கலந்து இருக்கிறது அதாவது Wi-Fi போல.! தமிழகத்திலே ஒரு மக்கள் பிரச்சனை என்றால் அங்கு மக்கள் போராடுகிறார்களோ இல்லையோ தங்கள் ஆதரவை தந்து களமிறங்க மிசெளரி தமிழ்ச்சங்கம் என்றும் தயங்கியதே இல்லை.!
ஜல்லிக்கட்டு பிரச்சனையோ, நீட் தேர்வு குளறுபடியோ, அதனால் உயிர் நீத்த மாணவி அனிதாவிற்கு இரங்கலோ எதுவானாலும் உணர்வுப்பூர்வமாக கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை தருவதில் மிசெளரி தமிழ்ச் சங்கம் பணிவோடு பெருமிதம் கொள்கிறது. முதன் முதலில் நகைச்சுவையளர்களை வைத்து நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்பதற்காக 2016இல்..
விஜய்டிவி புகழ் திரு. ஈரோடு மகேஷ், சன் டிவி அசத்தப்போவது யாரு கலைஞர்கள் திரு.கிறிஸ்டோபர், மேலூர் சசி, வெங்கடேஷ் ஆகிய கலைஞர்களை விசா போட்டுத்தந்து அழைத்தது.. நம் சங்கம் அழைத்ததை கேள்விப்பட்டு அமெரிக்காவின் பிற மாநில சங்கங்கள் அவர்களுக்கும் அந்த நிகழ்ச்சியை செய்து தர நம் சங்கத்தை அணுகினார்கள்.
2016 ஆம் ஆண்டு தமிழரின் பாரம்பரிய பொங்கல் விழா சர்க்கரை பொங்கலுடன் இனிதாக துவங்கி குழந்தைகள் பெரியவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, அறுசுவை உணவு அளித்த பின்பு நகைச் சுவை நிகழ்ச்சி துவங்கியது.. நாவுக்கு அளித்த திருப்தியான சுவையைப் போல நகைச்சுவையாலும் அரங்கம் அதிர மிசெளரியில் வெற்றிகரமாக நிகழ்ந்தது அப்பொங்கல் விழா!
இந்த பயணத்தில் அந்த நகைச்சுவை கலைஞர்கள் கிட்டத்தட்ட 7 மாநிலங்களில் நிகழ்ச்சி செய்துவிட்டு இந்தியா போன மறுமாதமே மீண்டும் 7மாநிலங்களுக்கு அழைக்கப்பட்டதிலேயே தெரிந்திருக்கும் நம் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் தரம்.!இதுவரை எந்த கலைஞர்களுக்கும் அமெரிக்காவில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில்லை என்பதை மகிழ்வுடன் நம் சங்கம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறது.!
அதன் பிறகு தமிழகத்தின் மரபு இசையான கிராமிய இசையின் மாண்பை நம் சந்ததியருக்கு சொல்லும் வண்ணம் வளர்ந்து வரும் கிராமியக் கலைஞர்/பின்னணிப்பாடகர்/ நடிகர் ஆண்டனிதாசன் அவர்களின் கலைக் குழுவை அழைத்து வந்தது நம் தமிழ்ச் சங்கம்.. நிகழ்ச்சிக்கு 15 தினங்கள் முன்பே அவர்களை வரவழைத்து அவர்களுக்கு தனி வீடு கொடுத்து உபசரித்தது.!
அவர்கள் கையாலேயே அங்கு தமிழக கிராமிய மணம் மிக்க சமையல் செய்ய அதை ருசித்து மகிழ்ந்தது.. விழா நாளும் வந்தது மேடையில் ஆண்டனிதாசன் பாடிய பாடலும் நம் மண்ணின் துள்ளல் கிராமிய இசையும் ஒரு மகுடி போல இசைக்க அனைவரும் தங்களை மறந்து அந்த இசைக்கு துள்ளாட்டம் போட்டனர். இவர்களும் நம் தமிழ்ச் சங்கம் மூலம் இங்கு வந்து..
அமெரிக்காவின் பிற மாநில சங்கங்களுக்கும் சென்று சிறப்பு பெற்றனர்.. இப்போது அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் புது கலைநிகழ்ச்சியா.? மிசெளரி தமிழ்ச் சங்கம் என்ன ஏற்பாடு பண்ணுறாங்க பாருங்க அவர்கள் அழைக்கும் குழுவையே நாமும் அழைக்கலாம் எனப் பேசும் அளவிற்கு நம் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சித் தேர்வுகள் சிறப்பாக அமைந்தன.!
அடுத்ததாக டாக்டர்.வேலு சரவணன் அவர்களை வைத்து குழந்தைகளுக்காக நடத்திய நிகழ்ச்சி நம் சங்கத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.. அவரை வைத்து குழந்தைகளுக்கு நடிப்பு சொல்லித் தரும் கருத்தரங்கமும் நடை பெற்றது. பிறகு உணவுத் திருவிழா, முத்தமிழ் இசைவிழா, பாட்டுப்போட்டி, மகளிர் மட்டும், என அடுத்தடுத்து நம் தமிழ்ச் சங்கம் நடத்திய நிகழ்ச்சிகள் எல்லாமே பலரால் பாராட்டும் படி அமைந்தன.
மீண்டும் 2017 ஆம் ஆண்டு பொங்கல் விழா.! இப்போது நாம் கையில் எடுத்தது உணவுக் கலாச்சாரத்தை.! ஆம் உலகில் தமிழர்களின் விருந்தோம்பலையும், நம்முடைய உணவே மருந்து மருந்தே உணவு என்னும் தாரக மந்திரத்தையும் போற்றும் வகையில் மிசெளரியில் வாழையிலை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இலைகள் மதுரையில் இருந்து விமானம் மூலம் தருவிக்கப்பட்டன.!
நாதஸ்வரமும் தவிலும் இசையாக ஸ்பீக்கரில் கசிய தலைவாழை இலை போட்டு கூட்டு, பொரியல், அப்பளம், வடை பாயாசத்துடன் நம் தமிழக உணவு பரிமாறப்பட்டது.. வேஃபல்சும், பர்கரும், பான் கேக்கும், கோக்கும் பெப்சியும் பழகி மரித்த நாக்கிற்கு புத்துயிர் தந்து நாவின் சுவை மொட்டுகளை மலரச் செய்தது நம் வாழை இலை விருந்து.! விருந்து முடிந்ததும் மீண்டும் நகைச்சுவை..
சென்ற முறை வந்த நகைச்சுவை கலைஞர்களான திரு. சசி, கிறிஸ்டோபர், வெங்கடேஷ் இவர்களோடு புதிதாக திரு சுட்டி அரவிந்த் அவர்களும் அப்போது அமெரிக்காவில் வேறு மாநிலங்களில் நிகழ்ச்சி செய்ய வந்து இருந்தார்கள் (நாம் போட்ட பிள்ளையார் சுழி தான்) அவர்களையே மீண்டும் அழைக்கலாம் என முடிவு செய்து அழைத்தோம்.
நமக்காக கான்சாசில் இருந்து காரில் வந்திருந்தார்கள். இவ்வேளையில் அவர்களை அழைத்து வந்து நம் சங்கத்திற்கு உதவிய மின்னசோட்டா தமிழ்ச்சங்க நிர்வாகிகள் திரு. சிவானந்தம் அவர்களுக்கும் திரு. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் நம் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இம்முறை சுட்டி அரவிந்த் ஒருவர் தான் புதிதாக வந்திருந்தார் என்றாலும் அவரோடு காம்பினேஷன் அமைத்து பழைய மூவர் செய்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்தது.. வயிறார வாழையிலையில் சாப்பாடு வயிறு குலுங்க சிரிப்பு என நம் மக்கள் அனைவருக்கும் இனிய அனுபவமாக அமைந்தது இந்த 2017ஆம் ஆண்டு பொங்கல்விழாவும்.!
ஓடி விளையாடு பாப்பா எனப்பாடிய பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வெறும் கலை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி உடலுறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நம் சங்கம் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்தது.. வாலி பால் போட்டிகளை நடத்தியது, உடல் உறுதிக்கான விளையாட்டு என்றாலும் அதிலும் கொஞ்சம் வேடிக்கையும் சேர்த்து நடத்தியது நம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்து நம் தமிழ்ச் சங்கம் நடத்திய மிகப் பெரிய நிகழ்ச்சி இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வரும் பிரபல தமிழ் இசையமைப்பாளுருமான திரு. யுவன்ஷங்கர் ராஜா அவர்களது இசை நிகழ்ச்சியை.!! இதை மிக பிரம்மாண்டமாக நம் சங்கம் நடத்தியது.. ஹரிச் சரண், NSKரம்யா உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாட அரங்கம் அதிர யுவன்ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி மிக மிகச் சிறப்பாக நடந்தேறியது.
கலைநிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, விளையாட்டு மட்டுமின்றி குடும்பச் சுற்றுலா, பயனுள்ள கருத்தரங்கங்கள், துறை சார்ந்த பிரபலங்களை அழைத்து வந்து விவாதிப்பது, குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தருவது, தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சிக்கு சேவை செய்வது இப்படி உடலாலும், உள்ளத்தாலும் உணவாலும் மட்டுமின்றி உணர்வாலும் தமிழ்ப்பணியாற்றுவதில் நம் மிசெளரி தமிழ்ச் சங்கம் மிகுந்த பெருமிதம் கொள்கிறது.
நமது செயின்ட் லூயிஸ் நகரில் பூமியில் இருந்து எழுந்த வானவில்லாய் எழும்பி நிற்கும் ஆர்ச்சை நீங்கள் பார்த்து இருப்பீர்கள், அன்று கிழக்கிலிருந்து மேற்கே சென்ற அமெரிக்க மக்களுக்கு அது நுழைவாயில் ஆனால் அது நம் தமிழ் மக்களுக்கு அமெரிக்கத் தாய் வைத்த வரவேற்பு வளைவு.!
கிழக்கில் உதித்த சூரியன் மேற்கில் மறையும் என்பது இயற்கை ஆனால் மிசெளரி தமிழ்ச்சங்கம் மேற்கில் உதித்த சூரியன்.!! இதன் தமிழ் பணிகளுக்கும் பண்பாட்டை போற்றும் பல விதமான செயல்களுக்கும் என்றும் அஸ்தமனம் கிடையாது. உணவின்றி வீழ்ந்தாலும் வீழ்வோமே தவிர தமிழ் உணர்வின்றி ஒரு போதும் விழமாட்டோம்.. வாழ்க தமிழ்.. வெல்க தமிழ்.!