#வேற_லெவல்
தமிழ்நாடு முழுவதும் சின்ன சந்துகளில், தெரு திருப்பங்களில், சாலையோரங்களில், ஹைவேஸ்களில், ஏராளமான உணவகங்கள் ‘லொகேட்’ ஆகியிருக்கின்றன! அந்தக் கடைகளின் ‘ஆம்பியன்ஸ்’ செமையாக இருக்கிறது! எல்லா கடைகளிலும் சோறும் & குழம்பும் விதவிதமாக கிடைக்கின்றன!
கிட்டத்தட்ட 25 முதல் 100 வருட பாரம்பரியம் இருப்பதாக அனைத்து ஓட்டல் காரர்களுமே சொல்கிறார்கள்! 20 அயிட்டங்களுடன் (உணவு வகைகள் தாங்க) அன் லிமிடெட் சைவச் சாப்பாடு கிடைக்கிறது! 2 வகை சாம்பார், 2 வகை வத்தக் குழம்பு, 2வகை பொரிச்ச குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் எல்லாமே பிரமாதமாக இருக்கிறது!
பாகற்காய் கசக்கிறது! பாயாசம் இனிக்கிறது! இவையெல்லாம் ஜஸ்ட் ₹250க்கே கிடைக்கிறது! பிளாட்பாரங்களில் ₹50க்கு 5 வகை சாதங்கள் கிடைக்கிறது! ₹10 கூடுதலாக தந்தால் ஒரு அவிச்ச முட்டையும் கிடைக்கிறது! இந்தக் கடைகளையெல்லாம் ஒரு அக்காவோ, அம்மாவோ, அத்தையோ, பாட்டியோ நடத்துகிறார்கள்!
இதில் மட்டும் 100 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கே கிடைத்துள்ளது பெருமையாகும்! அசைவ உணவுகள் அனைத்துமே ‘அல்டிமேட்’டாக இருக்கின்றன! கறிகள் ‘டெண்டராகவும்’ ஜுஸியாகவும் வெந்து இருக்கிறது! டேஸ்ட் எல்லாம் ‘தட்டிக் காயப் போடுது! பிரியாணிகள் ‘கொலமாஸாக’ இருக்கிறது.
அதிகாலை 5 மணிக்கே இட்லியும் குடல் குழம்பும் கிடைக்கிற கடைகள் மொத்தம் 96 இருக்கின்றன! அதில் தொண்ணூற்றி ஐந்தே முக்கால் கடைகள் ஈரோட்டிலேயே இருக்கின்றன! அந்தக் குடல் கறியின் டெக்ச்சரே நமது நாக்கில் ரப்ச்சர் உண்டாக்குகிறது! அந்தக் குழம்பின் ஃப்ளேவரை நம் கண்ணில் நுகரமுடிகிறது!
ஒரு அன்லிமிடெட் சாப்பாடுக்கு ₹700 முதல் ₹1000 வரை வாங்கிக் கொண்டு படுக்கும் பாய் போல தலைவாழை இலை விரித்து அதில் நடப்பன, பறப்பன, நீந்துவன, ஊர்வன என எல்லா அசைவ வகை உணவுகளிலும் தலா 4 வகைகளை சமைத்து இலைமீது சமமாக படுக்கப்போடும் சமத்துவபுரமான மெஸ்களும், தோப்புகளும்..
கொங்கு மண்டலம் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன! தடுக்கி விழுந்தால் நாட்டுக் கோழி விருந்துக்கடைகளிலும் தடுமாறி விழுந்தால் குடில் போன்ற தாபாக்களிலும் விழலாம்! சூரியன் உதிக்கும் முன் அதிகாலை 4 மணிக்கு சுடச்சுட ஆயிலில் பொரிச்ச ஆயுள் தராத புரோட்டாவும் மட்டன் குழம்பும் கிடைக்கின்றன!
மதுரையிலும் சேலத்திலும் அர்னால்டு போன்ற ஜிம் பாடியில் யாரையேனும் பார்த்தால் 99% அவர் புரோட்டா மாஸ்டராக இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்! தினமும் அவ்வளவு புரோட்டா மாவு பிசைஞ்சு, புரோட்டா வீசுனா எவரும் அர்னால்டு போன்ற பாடி ஆகிடலாம்! அடுத்து இரவு தள்ளுவண்டிக் கடைகள்!
அங்கே இட்லி கறிக் குழம்பு, சப்பாத்தி குருமா, முட்டை தோசை, எஸன்ஸ் தோசைகள் லட்சகணக்கிலும், புரோட்டா & சால்னா, ஆம்லெட், ஆஃபாயில் கோடிக்கணக்கிலும் விற்பனையாகின்றன! சேலைகளில் கூட இத்தனை ரகங்கள் இல்லை தோசைகளில் 100க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் இருக்கிறது!
அதற்கு 5 முதல் 8 சட்னிகள் தரப்படுகிறது! முட்டை / கறி தோசையே 22 வகைகளில் கிடைக்கிறது! மூளையோடு முட்டை மசாலா, மட்டன் மாங்காவோடு ஈரல், குடல் ஃப்ரையுடன் பிச்சு போட்ட கோழின்னு சாப்பிடுபவர்களின் தட்டு ஓவியர்களின் பேலட் பலகையில் கலைந்து கிடக்கும் வண்ணங்கள் போல காட்சியளிக்கிறது!
கடைகளில் விதவிதமான காம்போக்கள் கலந்து காணப்படுகின்றன! அவையெல்லாம் இங்கே ‘மஸ்ட் டிரை’ உணவாகவோ அல்லது அந்தக் கடையின் ‘சிக்னேச்சர்’ டிஷ்ஷாகவோ இருக்கிறது! திண்டுக்கல்லின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் ஒரு பிரியாணிக் கடை இருக்கிறது! எல்லாருமே 50 வருடப் பாரம்பரியத்தை கடந்து இருக்கிறார்கள்!
அநேகமா திண்டுக்கல் பூட்டை வாங்காத கடைகள் இந்த பிரியாணிக் கடைகளாகவே இருக்கலாம்! ஏன்னா எந்நேரமும் திறந்திருக்கும் இந்தக் கடைகளுக்கு கதவுகளே இல்லை! கிராமத்து சந்தைகளில் அமைந்துள்ள சாப்பாட்டுக் கடைகளில் சந்தைக்கே வராதவர்களும் அங்கே வந்து சாப்பாட்டுக்கு காத்திருக்கின்றனர்!
காலை 6 மணி அய்யர் கடை, படி இட்லி அய்யங்கார் கடை, கோனார் மெஸ், முதலியார் இட்லிக் கடை, சவுராஷ்டிரா பொங்கல் கடை, செட்டியார் வடைக்கடை, ஆசீர்வாதம் வடைக் கடை, ஈவினிங் பஷீர் பாய் பிரியாணிக் கடைன்னு சில மணி நேரக் கடைகளிலும் கூட்டம் சாதி, மதங்களை மறந்து சமத்துவமாய் நிற்கிறது!
கென்யாவின் மாஸிமாரா காடுகளில் வருடந்தோறும் லட்சக்கணக்கில் இடம் பெயரும் காட்டு மாடுகள் போல மதுரையில் இருந்து நத்தம் சென்று பொரிச்ச புரோட்டா சாப்பிடுபவர்களும் சேலத்திலிருந்து ஓமலூர் சென்று களி & கறி சாப்பிடுபவர்களும் திண்டுக்கல் சென்று பிரியாணி சாப்பிடுபவர்களும் பெருகிவிட்டனர்!
இட்லி, பணியாரம், ஆப்பம், இடியாப்பம் துவங்கி உப்புமாவுக்கு கூட சிறந்த உணவுகள் ரிவ்யூ யூடியூபெங்கும் கொட்டிக் கிடக்கின்றன! வடை, பஜ்ஜி, சாட் அயிட்டங்களுக்கு கூட அமர்க்களமான ரிவ்யூ வீடியோக்கள் உலா வருகின்றன! களி & கறிக்குழம்பு, சோறு & மீன் குழம்பு, பிரியாணி & சிக்கன் குழம்புன்னு..
உலகத்தின் எல்லா கடைகளிலும் சாப்பிடும் ரிவ்யூவர்கள் சொல்லும் ஒரே யூனிஃபார்ம் வார்த்தை.. டேஸ்ட் ‘வேற லெவலில்’ இருக்கிறது! இங்கே உணவு ரிவ்யூ என்பதே பெரும் க்யூவில் இருக்கிறது! ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்லமுடியும்….
சுகாதாரத்துறை அதிகாரிகள் சற்று நேரம் ஒதுக்கி இந்த யூ டியூப் சானல்களை பார்த்து அந்த ஓட்டல்களுக்கு நேரில் ஆய்வுக்கு போனால் அபாரதமே பல கோடிகள் நம் அரசுக்கு வரலாம்! அப்போது தெரியும் இந்தக் கடைகளின் தரம் “வேற லெவல்” என்பது!
{குறிஞ்சி பூத்தாற் போல சில நல்ல கடைகளும் இந்தப் பட்டியலில் பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாக இருக்கின்றன}