Wednesday 20 April 2016

ரிச்மாண்ட் நினைவுகள் 1

#ரிச்மாண்டில்_ரீ(பே)ச்சானோம்..

பார்ட் - 1

இந்த முறை அமெரிக்காவின் தலைநகரத்தில் போய் இறங்கிய போது வாஷிங்டன் விமான நிலையத்திற்கே வந்திருந்தார் ரிச்மாண்ட் தமிழ்ச் சங்கத் தலைவர் மலைச்சாமி அவருடன் முத்துராஜ் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரும் எங்களை ரிச்மாண்ட் அழைத்துச் செல்ல காத்திருந்தனர். அமெரிக்க பாணியில் சொன்னால் (டூ ஹவர் டிரைவ்) வாஷிங்டனிலிருந்து ரிச்மாண்ட் 2மணிநேரப் பயண தூரத்திலுள்ளது.

ஏப்ரல் 7 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் போய் 3மணிநேரம் காத்திருந்து காலை 7:20 க்கு விமானத்தில் ஏறி 11மணிநேர பயணத்தில் லண்டன் சென்று அங்கு ஐந்தரை மணிநேரம் காத்திருந்து வாஷிங்டன் விமானம் ஏறி மீண்டும் 10மணிநேரப் பயணம்.. பிறகு இமிக்ரேஷன் சோதனைகள் லக்கேஜ் எடுத்தல் இதற்கு ஒரு ஒன்றரை மணிநேரம் ஆக வாஷிங்டன் ஏர்போர்ட் வாசலுக்கு வர எங்களுக்கு கிட்டத்தட்ட 31 மணிநேரங்கள் ஆகியிருந்தது.

ஆனால் வெளியே வந்த போது அமெரிக்காவில் ஏப்ரல் 7ஆம் தேதி இரவு 10 மணி பூமிப் பந்தின் இரு கோடியில் இருக்கும் 2நாடுகளுக்கிடையே  இது போல வினோதமான கால மாற்றங்கள் இயல்பானதே. விமானத்தில் எங்களுக்கு சோப்பு டப்பாவில் கொடுக்கப் பட்ட உணவுகள் எங்கள் டைனோசார் பசிக்கு கடுகாகிப் போக பசி வயிற்றைக் கிள்ளாது கொல்லியது. கடந்த முறை இருந்த குளிர் இப்போது இருக்காது ஆகவே ஜெர்கின் ஸ்வெட்டர் தேவையிருக்காது எனச் சொல்லியிருந்தனர்.

ஆகையால் எதுவும் எடுத்துப் போகவில்லை.. ஆனால் வாஷிங்டன் குளிர் 9 டிகிரியில் டிரிபிள் கொடைக்கானல் எஃபக்டில் இருந்தது. அடித்த குளிர் வெளியேயும் பசி உள்ளேயும் எங்களை ரவுண்டு கட்டி அடித்தது. ஆனால், எங்கள் முகவாட்டம் பார்த்தே பசியைக் கண்டு கொண்ட மலைச்சாமி காரை விரட்டினார்.மெக்டோனல்டு வாசலில் காரை அவர் நிறுத்தி இறங்குவதற்குள் நாங்கள் குதித்து கடைக்கு உள்ளே ஓடிவிட்டோம்.

அகோரப் பசியை பட்டர்மில்க் சிக்கன் சாண்ட்விச் மூலம் அடக்க நினைத்தோம் ஆனால் அது மனைவியிடம் வாதிட்ட கணவன் போல பம்மி பதுங்கியது. அந்நேரத்தில் வேறு இந்தியக்கடைகள் இருக்காது என்பதாலும் ஒரு மணிநேரக் கார்ப் பயணம் வேறு இருப்பதாலும்..  கோக் டின்களை நம்பினோர் கைவிடப் படாரோ டமாரோ.. அதை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். ரிச்மாண்ட் வரலாற்றை முத்துராஜ் சொல்லியபடி வந்தார்.

கேட்டுக் கொண்டே வந்த கிறிஸ்டோபருக்கு கொஞ்ச நேரத்தில் அது தாலாட்டாக தெரிய அவர் உறங்கிவிட்டார்.. நான் ஆவலுடன் கேட்டுக் கொண்டு வந்தேன். ரிச்மாண்ட்டில் நண்பர் வாசு வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.. அவர் வீட்டிற்கு போன போது இரவு 12 :30 மணி ஆகியிருந்தது.. கதவு திறந்து வெளிப்பட்ட அந்த நொடி முதல் வாசு நீண்ட நாள் நண்பர் போல வரவேற்றார்.. அன்னியோன்ய நட்பு போல பழகினார். அதற்கேற்றார் போல அங்கிருந்த அவர்களது நண்பர்கள் கூட்டம்..!

வாசு, மலைச்சாமி, சுகுமார், கிருபாகரன், கார்த்திக், வெங்கடேஷ், திருநா, மகேஷ், முத்துராஜ், மகாதேவன், என ஒவ்வொருவரும் ஒரு கூட்டு பாசப் பறவைகள் போல அங்கு கூடி இருந்தனர்.. எங்கள் முகம் பார்த்து அடடா பசியா ஆம்லேட் அல்லது தோசை ஊத்தட்டுமா எனக்கேட்டார் வாசு!அந்த ஒரு வார்த்தை பாரதியாரின் காதில் செந்தமிழ்நாடு எனும் போது  பாய்ந்ததே ஒரு தேன்..!அது.. அதைவிட 3மடங்கு அதிகமாக என் காதில் பாய்ந்தது.

"ஆகா.. தோசையா ஊத்துங்களேன்" என்றேன்.. என் வாய் எப்படி இதற்கு சரியென்றது இன்றுவரைஎனக்கு நினைவில் இல்லை.! படாரெனெ நமிதா உயரத்தில் இருந்த பிரிட்ஜை திறந்து அதில் இருந்து 2டஜன் முட்டை கண்டெயினரை எடுத்து வைத்தார் வாசு.. ஜில் ஜங் ஜக் சித்தார்த் போல மீசை முறுக்கியிருந்த சுகுமார் படார் படார் என முட்டை ஓடுகளை உடைத்த சப்தம்.. என்னை குழல் இனிது யாழ் இனிது என்பார் தம்மக்கள் முட்டை உடைக்கும் ஒலி கேளாதவர் எனப் புதுக்குறளை எழுத வைத்தது. 

முதலில் அவர் ஆம்லெட்டுகளாகவும், ஆப்பாயில்களாகவும் ஊற்றினார். பிறகு ஃபுல் பாயில், முட்டை பொடிமாஸ் என முட்டையின் தசாவதாரங்களை எங்களுக்கு காட்டினார். வாசு வெங்காயம் தக்காளி நறுக்க அடுத்து தோசை ஊற்ற ஆரம்பித்தனர் தொட்டுக்கொள்ள தோசைப்பொடி தான் இருப்பினும் அந்த நேரத்தில் அது மல்லையா வாங்கிய 9ஆயிரம் கோடியை விட விலை மதிப்பில்லாததாக இருந்தது. கலக்கி, ஒன் சைடு ஆம்லேட் என நாங்கள் மதுரை வகைகளைச் சொல்ல அதுவும் வந்தது.

ரசித்து, ருசித்து, சிரித்து சாப்பிட்டு முடிக்கும் போது பார்த்தால் அதிகாலை மணி 3:30. நீண்டநாள் கல்லூரி நண்பர்கள் வெகுகாலம் கழித்து மீண்டும் சந்தித்தால் நடக்கும் அரட்டைக் கச்சேரி போல கேலியும், கிண்டலும்,மகிழ்ச்சியும், ஊர்ப் பெருமையும்  அங்கு ஒன்றாக கலந்து உற்சாகம் ரிச்மாண்டின் ஜேம்ஸ் நதி போல கரை புரண்டு ஓடியது. கடந்த முறை இதே போல இரவு வந்து 1மணிக்கு படுத்ததால் பின்பு 8 நாட்கள் ஜெட்லாகில் சிக்கித் தவித்தோம். ஆனால் இப்போது அதைவிட தாமதம்.!?!

கேப்டனை மேடையில் சமாளிக்கும் பிரேமலதா போல் அவ்வப்போது மலைச்சாமி எங்களை தூங்க வைப்பதில் தனிக்கவனம் செலுத்தினார்..அவ்வப்போது பிறர் அறியாது சைகையில் தூங்குங்க என்பார். தமிழ்ச் சங்கத் தலைவர் அல்லவா! ஆனால் அதையும் மீறி காமிரா முன் சேஷ்டைகள் செய்யும் கேப்டன் போல நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். ஒரு வழியாக வை.கோ போல வாசுவும் அவர் உதவிக்கு வர எங்களை  தூங்க அனுப்பி காலை10 மணிக்கு தயாராக இருக்கச்சொன்னார்கள்.

ஏற்கனவே 35 மணிநேரப் பயணம் 10 மணிநேர கால வித்தியாசம் இப்போது தான் நல்ல உணவு வேறு சாப்பிட்டு இருக்கிறோம். உடலில் அசதி விஸ்வரூபம் மட்டுமின்றி உத்தமவில்லன், பாபநாசம் எல்லாம் எடுத்தது. நன்கு தூங்கி காலை சீக்கிரம் எழுந்து குளித்து தயாராக இன்னும் இருப்பது ஆறரை மணி நேரம் அது முடியுமா? அக் கேள்விகளையே தாலாட்டாக்கி உறங்கினோம் விடிந்தது.. 

ஆனால் நடந்த கூத்து வேறு..அது பற்றி (வரும்...)

No comments:

Post a Comment