Wednesday 20 April 2016

ரிச்மாண்ட் நினைவுகள் 2

#ரிச்மாண்டில்_ரீ(பே)ச்சானோம்..

பார்ட் - 2

அதிகாலை 3:30 க்கு படுக்கப்போன நாங்கள் காலை 10 மணிக்கு ரெடியாவது எப்படி.?ஒரே நிமிடம் ஒரு சபதம் எடுத்துக் கொண்டோம் எப்படித் தூங்கினாலும் காலை 8:30 க்கு அலாரம் வைத்து எழவேண்டியது 10 மணிக்குள் குளித்து சாப்பிட்டு தயாராகிவிடலாம் ஆனால் வீட்டில் தங்கக் கூடாது எங்காவது சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் தூங்கி விடவும் கூடாது நம்மூர் வைத்தியர் பாம்புக் கடிபட்டவர்க்கு சொல்லும் முறை போல.

விடிந்தது.. ஆனால் நடந்தது.. இரவு வந்த நாங்கள் அதிகாலை 3:30 க்கு தான் தூங்கப்போனோம் என்பது தெரிந்ததும் காலையில் எங்களை அழைத்துப் போக வேண்டியவர் பாவம் அவங்க நல்லா தூங்கட்டும்ன்னு அழைப்பை மதியத்திற்கு மாற்றிவிட்டார்.. 8:30க்கு அலாரம் வைத்த நாங்கள் 5:30க்கு ஒரு முறை 6:30க்கு ஒருமுறை 7மணிக்கொரு முறை என திடுக் திடுக்கென விழித்து நேரம் பார்த்து பின் மறுபடியும் படுத்து..

ஒரு தூங்காவனத்தில் விட்டது போல இருந்தோம்.. இதோ மீண்டும் முழிப்பு மணி 7:15 அட போங்கப்பா இனி தூங்கி என்ன என எழுந்து காலைக் கிரெடிட்டுகளை முடித்து ஷேவிங், குளியல் எல்லாம் ஆகி டைனிங் ஹால் வந்த போது மணி 8:45 வாசுவின் மனைவி சந்தியா சிநேகப் புன்னகையுடன் வரவேற்றார்.. இடியாப்பம் வெஜ் குருமா தோசை எனச் சுடச்சுட சூடாக பரிமாறினார் சிக்கன் குழம்பு இருக்கு வேணுமா என்றார் தயங்கியபடி..!

அந்த வார்த்தையை கேட்டதும் இதயம் சென்னை விமான நிலையக் கூரையை விட அதிகமுறை இடிந்து விழுந்தது.. கூட்டணி வேணான்னு சொல்ற கலைஞரையும் பார்க்க முடியாது கோழியை வேணாங்குற எங்க அணியையும் பார்க்க முடியாது.. நாங்க ரொம்ப பாரம்பரியமான கடும் அசைவமுங்க எங்களைப் பார்த்து இப்படி கேட்டுட்டிங்களே என்றோம். இல்ல மதியம் உங்களுக்காக மலைச்சாமி வீட்டில் அசைவ விருந்து..

அதான் கேட்டேன் என்றார்.. ஒரு நாளைக்கு 8 வேளைகள் இருந்தாலும் அனைத்திலும் அசைவம் சாப்பிடும் உச்சகிரகங்கள் படைத்த ராசிநாதர்கள் நாங்கள் என்பது உலகுக்கே தெரியும்.. உங்களைப் போல  சிலருக்குத் தெரியாது என நினைத்துக் கொண்டு.. அந்த வருத்தத்துடனேயே மீண்டும் இடியாப்பம் தோசையை இரண்டாவது ரவுண்ட்டில் சிக்கன் குழம்புடன் சாப்பிட தொண்டையை அடைத்தது.. அது உணவல்ல துக்கம் என்பதை...

நான் சொல்லவா வேண்டும்..! உணவருந்தி முடித்ததும் தூக்கம் கண்களைச் சுழற்றியது..  மணியோ 9:45 என்ன செய்ய இனி தூங்கினால் மீண்டும் ஜெட் லாகில் விழுவோம்.. அழைத்துப் போகும் நண்பர் மதியம் தான் வரமுடியும் காலை வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.. ஜெட்லாக் என்னும் பாம்பு கடித்துவிட்டதே தூங்காமல் இருக்க வேண்டுமே சரி வாக்கிங் போகலான்னு வெளியே  வந்தா வெளியே மலைவாசஸ்தலங்கள் போல மிதமான குளிர்.!

அது இன்னும் எங்களை சோம்பேறியாக்கியது.. படாரென வாசு சொன்னார் ஒரு மணிநேரம் மட்டும் பொறுத்துக்கோங்க நானே கூட்டிட்டு போறேன்னு. டிவி பார்த்து ஃபேஸ்புக் நோண்டி ஒரு வழியாக ஒரு மணி நேரத்தை விரட்டினோம்.. வாசு சொன்னதை விட 5நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பினார். நாங்கள் போன இடம் ஜேம்ஸ் நதி (தேம்ஸ் அல்ல) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஜாலியன் வாலாபாக் போல அங்கு இது.

ஜேம்ஸ் நதி பற்றி உள்நாட்டுப் போர் நடந்தபோது ஜேம்ஸ் நதியின் பங்கு பற்றி எல்லாம் வேறொரு பதிவாக போடும் எண்ணம் இருப்பதால்.. வீட்டுல நாங்க கார் ஏறுறோம்.. ஷாட்டை இங்க கட் பண்ணி ஓபன் பண்ணா ஜேம்ஸ் நரிக் கரையில நாங்க நடந்து வர்றோம்.. சிலு சிலு காற்றடிக்க சல சலத்து நதியோட அதன் கரையில் அருமையான நடை பயிற்சி.. வைகோ இருந்து இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பார்.. சுற்றிலும் புல்வெளிகள் மலர்கள்..!

ரம்மியமான அந்த நதிக்கரையில் மியூசியங்களும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகமும் உள்ளது.. பழமையான சர்ச் ஒன்றையும் பார்த்தோம். மதியம் 2 மணிக்கு மேல் ஆகிவிட்டது.. வீடு போய் கொஞ்சம் முகம் கழுவி ஃபிரெஷ்ஷாக மலைச்சாமி வீட்டு மதிய விருந்துக்கு போக நினைத்தோம். ஆனால் சுற்றிய களைப்பு தூக்கம் எல்லாம் ஒரு 45 நிமிட தாமத்தை தர மதியம் 3:30க்கு தான் அங்கு லஞ்ச் சாப்பிடப் போனோம்.

மலைச்சாமியின் துணைவியார் கவிதா அசைவம் அருமையாக சமைப்பார்.. அவர் கைப்பக்குவமே தனி என பலர் சொல்லி க்யூரியாசிட்டியை அதிகப் படுத்தி இருந்தனர். ஹாட்பேகில் வைத்திருந்தாலும் மதியம் 1 மணிக்கே தயாரான உணவு இந்தக் குளிர் க்ளைமேட்டில் சூடு குறைவாகவும் நாங்கள் தாமதமாக வந்ததற்காக கவிதா சூடு அதிகமாகவும் காணப்பட்டார் ஆனால் எங்கள் கண்ணில் தெரிந்த களைப்பை பார்த்து சூடு தணிந்து வரவேற்றார்.

மட்டன் பிரியாணி இறால்.. என ஆரம்பித்து... சரி வேண்டாம் நிறைய பேர் கண் படும் வாய்ப்பிருப்பதால் மெனு 10 வகை என்பதோடு உரையை நிறைவு செய்கிறேன்.. உண்மையில் பிரமாதமான சமையல்..இவ்வளவு நேரம் கட்டுப்படுத்தி இருந்த தூக்கம்.. கவிதாவின் கைமணத்தில் அம்மாவை கண்ட அமைச்சர்கள் போல அப்படியே எங்களை சோபாவில் தள்ளிவிட நன்கு தூங்கி விட்டோம்ஒரு மணிநேரம் கழித்து தான் விழித்தோம் அல்லது..

எழுப்பப்பட்டோம்.. மணி மாலை 6.. திருப்தியான ஏப்பத்துடன் நன்றியையும் கவிதாவுக்கு தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம். நாளை ரிச்மாண்ட் நிகழ்ச்சி மறுநாளே வாஷிங்டனில் நிகழ்ச்சி.. நாளை தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த ஒரு சந்திப்பு மதிய உணவுடன் அது முடிந்ததும் நிகழ்ச்சி.. பிறகு மீண்டும் மலைச்சாமி வீட்டில் இரவு உணவு.. இன்று வாசு வீட்டில் டின்னர்சாப்பிட்டு விட்டு சீக்கிரம் தூங்குங்க இதான் ப்ளான் என லட்சம் முறை சொன்னார்கள்.

நாங்களும் நம்ம்ம்ப்ப்ப்பி வீடு வந்தோம்.. விதி வலியதல்லவா இன்றும் இரவு தூங்க 1:30 மணி ஆனது.. அது பற்றி .. (வரும்...) 

1 comment:

  1. சாப்பாட்டு ராமர்கள். (பசிக்குதே)

    ReplyDelete