#ஏப்ரல்_கூல் (ஐஸ் & சர்பத்)
80களில் எல்லா பள்ளி வாசலில்களிலும் ஒரு ஐஸ்வண்டி நிற்கும்! விதவிதமான வண்ணங்களில் பெரிய பெரிய சர்பத் பாட்டில்களில் திரவங்கள் இருக்கும்! ஈரச்சாக்கில் சுற்றப்பட்ட பெரிய ஐஸ் பார் ஒன்று இருக்கும்! அந்த ஐஸை மரவேலை செய்பவர்கள் மரத்தை இழைக்கும் கட்டை போன்ற ஒரு கட்டையில் ஐஸ்கட்டியை விருட் விருட்னு துகள்களாக சீவி அதை ஒரு டம்ளரில் கொட்டுவார்கள்!
அதை நன்கு டம்ளரின் உட்புறம் அழுத்தி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என வண்ணமயமான இனிப்புக் கலவைகளை அதில் ஊற்றி நடுவில் ஒரு குச்சி செருகித் தருவார். உறைந்த வானவில் போல நம் கையில் ஏந்திய அந்த ஐஸை நம்மால் மறக்கமுடியுமா! அந்த ஐஸில் ஊற்றிய வண்ண இனிப்புகளை நாம் அன்னப் பறவை போல பிரித்து உறிஞ்சி மீண்டும் அதை வெள்ளை ஐஸாகவே ஆக்கிவிடுவோம்!
இதிலும் சேமியா போட்டுத் தரும் ஐஸ் இன்னுமொரு அற்புதம்! அந்த சேமியாவோடு ஐஸை சில்லென உறிஞ்சுவது தனி சுகம்! கண்ணாடி கிளாஸில் ஜப்ஸா விதைகள் போட்டு தரும் கலர் சர்பத்தும் அப்போ ஃபேமஸ்! நமக்கு அறிவுரை சொல்லுற எல்லாரும் இந்த ஐஸை சாப்பிடாதிங்க! சளி பிடிக்கும், காய்ச்சல் வரும், இதில சாக்ரீன் இருக்கு, தொண்டையில் சதை வளரும், ஆபரேஷன் செய்வாங்க,..
இப்படியெல்லாம் நம்மை பயமுறுத்தினாலும் நாம் அந்த ஐஸை தேடித் தான் போவோம்! அந்த ஐஸை கட்டையால் சீவும் போது தெறிக்கும் துகள்கள் முகத்தில் வந்து படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்! ஒரு குற்றாலச் சாரல் போல அது நம்மை குளிர்விக்கும்! ஐஸில் ஊறிய சேமியாவையும், ஜப்ஸா விதைகளையும் கடித்து ருசிப்பது ஒரு அலாதியான இன்பம்! இந்த ஐஸை சாப்பிட்டால் நம் உதடுகளில்..
வானவில் போல வண்ணச் சாயம் தெரியும்! நம் நலனில் அக்கறை உள்ள ஆசிரியர்களிடம் நாம் மாட்டிக் கொள்வோம்! தேவையில்லாத திட்டும் அடியும் கிடைக்கும்! பிற்பாடு பால் ஐஸ், மேங்கோ ஐஸ், ஆரஞ்சு, க்ரேப் என குச்சி ஐஸ் வண்டிகளின் காலம் துவங்கியது! அப்போது கப் ஐஸ், ball ஐஸ் கொஞ்சம் காஸ்ட்லி! வீட்டில் நமக்குத் தரும் தினசரி பாக்கெட் மணிக்கு அது கட்டுப்படியாகாது!
இந்த பால் ஐசுக்கும் ball ஐசுக்கும் வித்தியாசம் தெரியவே எங்களுக்கு நீண்ட காலம் பிடித்தது! பால், சர்க்கரை, ஐஸ் மூன்றும் சேர்ந்து குச்சியில் செருகித் தருவது பால் ஐஸ்! சின்ன டென்னிஸ் பந்து போன்ற ஒரு டப்பாவில் கப் ஐஸ்க்ரீமை வைத்திருப்பது ball ஐஸ்! இதன் பிறகு பெரிய பெட்டி போன்ற மேல் நோக்கித் திறக்கும் ஃபிரிட்ஜுகளில் ரஸ்னா கலக்கி வைத்து கிளாசில் விற்பார்கள்.
இதிலேயே ஆரஞ்சு, பைனாப்பிள், லெமன், க்ரேப் போன்ற க்ரஷ் வகைகள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன! இதில் தனியிடம் பிடித்தது ரோஸ்மில்க்! அந்தக் கலரே அதை அருந்தச் சொல்லும்! அதன் ருசியும் வாசமும் எளிதில் எவரையும் வசப்படுத்தும்! பிறகு வந்தது பாதாம் மில்க் / கீர்.இதன் ருசியும் தனித்துவம் வாய்ந்தது! இப்படி ஐஸ் வண்டிகளில் துவங்கி க்ரஷ் வகைகள் வரை ஜில் காலமே!
இடையில் டியூப் ஐஸ் காலம் ஒன்று பேஜர் காலம் போல வந்து போனது! 25 பைசாவுக்கு மேங்கோ, க்ரேப் எல்லாம் ஒரு சாண் நீளத்தில் டியூப் போன்ற சாஷேவில் வந்தன! இது படிப்படியாக 50 பைசா 1 ரூபாய்னு வந்து அதன் பின்னே வழக்கொழிந்து போனது! அடுத்தது சர்பத் காலம்! சர்பத் கொஞ்சம் பெரியவர்களுக்கானது என்றாலும் அதை குடித்த பின்பு அதற்கும் ரசிகனாகிப் போனேன்!
அதிலும் நன்னாரி, ரோஸ், லெமன் போன்ற சர்பத்துகள் மிகவும் ருசியானவை! ஐசுக்கும், க்ரஷுக்கும் நடுவில் தனது தனித்த ருசியால் தாகம் தீர்த்தவை! 2 எலுமிச்சையை பிழிந்து ஐஸை நொறுக்கிப் போட்டு நன்னாரி எஸன்ஸ் 2 ஸ்பூன் ஊற்றிப் பிறகு மண்பானையின் நீர்விட்டு கலந்து தரும் சர்பத் தரும் இன்பம் இருக்கே அதெல்லாம் சொல்லில் அடங்காது! அதிலும் மதுரை ஜனதா, ஒண்டிப்புலி..
தஞ்சை குணங்குடி தாசன், சிவகாசி கண் மார்க் போன்றவை சர்பத் உலகில் தனித்துவமானவை! மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் துவங்கி மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுற்றுப்புறங்களில் புகழ் பெற்ற பல சர்பத் கடைகள் இருந்தன! நல்ல வெயிலில் வாடி வந்து “ஐஸ் அதிகமா போட்டு ஒரு சர்பத் போடுண்ணே” எனும் பலரது குரல்களை பரவலாகவும் பரவசமாகவும் காதில் கேட்க முடியும்!
இதிலேயே தண்ணீருக்கு பதில் சோடா ஊற்றி சோடா சர்பத்னு அஜீரணத்துக்கு ஒரு மருந்தை கண்டுபிடித்தவர்கள் பாண்டியர்கள்! ஒரு இட்லிக்கே 10 வகை சட்னிகள் கண்டுபிடித்த சிட்னியன்ஸ் சர்பத்திலும், இளநீர் சர்பத், நுங்கு சர்பத், ஜிஞ்சர் லெமன் சர்பத்துனு சர்பத்தில் பல வெரைட்டிகளை கண்டறிந்த எடிசன் ஆனார்கள்! எலுமிச்சையௌ இரண்டாக நறுக்கி நாரதர் கையில் இருக்கும்..
சப்ளா கட்டை போன்ற கட்டையின் தாடையை திறந்து அறுத்த எலுமிச்சையை அதில் வைத்து பிழிவது, சர்பத்தில் ஊற்ற மண் பானையில் நீர், எஸன்ஸ் ஊற்றிக் கலக்க பெரிய ஸ்பூன் பெட்டியில் இருக்கும் ஐஸ்கட்டியை உடைத்துப் போடுவது இதெல்லாமே இன்றும் நம் நினைவில் பசுமையாய் வந்து போகும்! இன்று கோக், பெப்ஸி போன்ற பிராண்டுகள் பாட்டில்களிலும், டின்களிலும் மலிந்து கிடக்க..
கார்ப்பரேட்டான இன்றைய ஜுஸ் கடைகளில் 100 விதமான பழரசங்களும், ஐஸ்க்ரீம் பார்லர்களில் 500 வெரைட்டிகளும் கிடைக்கின்றன! ஆனால் அன்று ஒரு குச்சிஐஸ், ஒரு ரோஸ்மில்க், ஒரு நன்னாரி சர்பத் தந்த நிறைவு இவை எதிலுமே இல்லை!