Friday 8 August 2014

தீனா - ஆகஸ்ட்

தீனா "கொரலு"

இந்த காதலிக்கிறவங்கோ அல்லாத்துக்கும் பொதுவா ஒரு கொணம் இர்க்குது.! அது இன்னா தெரிமா.? எங்கியாச்சும் பொது இட்த்துல பாக்க சொல்லோ இதுக்கு மின்னாடி ஒர்த்தர ஒர்த்தர் தெரியாத மேறியும் அப்பத்தான் பார்க்குற மேறியும் ஆக்ட் குடுப்பாங்க பாரு.. அடாஅடாஅடா இன்னா நடிப்புடா சாமி.! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : குறிப்பறிதல் : குறள் எண் : 1099 ]


தீனா "கொரலு"

கரீட்டான நேர்த்துல கரீட்டான இடத்துல இங்க இத்த செஞ்சா கரீட்டா இருக்கும்னு நல்லா அல்சி ஆராஞ்சு பாத்து... அதுக்கு ஏத்தா மேறி கில்லியா நட்ந்துகினினா இந்த ஒலகமே உன் கைக்குள்ள வந்துர்மாம்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.

[ பொருட்பால் : அதிகாரம் : காலமறிதல் : குறள் எண் : 484 ]


தீனா "கொரலு"

இந்த ஒலகத்துல நேர்மியா நாயமான வழியில நட்ந்து.. ஆ.. ஊன்னு சவுண்டுவுட்டு ஆர்ப்பாட்டம் பண்ணாம எப்யுமே நல்ல கொணத்தோட நல்ல மன்சோட இருக்குறவன் பெரிய மலைய வுட உசரமானவன்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அடக்கமுடைமை : குறள் எண் : 124 ]


தீனா "கொரலு"

ஏ மனசே.. நீ நல்லாருப்ப.. ஓன் மேல தம்மாத்தூண்டு கூட அன்பே இல்யாத ஒர்த்தர்ட்ட போயி உன் கஸ்டத்தை சொல்லினு இர்க்குறதவுடொ.. பீச்சுக்கு போயி அந்த அம்மாம் பெர்ய கடலை தூர் வாருறது ரொம்ப ஈஸி.! குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தனிப்படர்மிகுதி : குறள் எண் : 1200 ]



தீனா "கொரலு"

ஊரையே அட்ச்சிக்கினு போற வெள்ளம் கணக்கா கஸ்டம் வந்தாலும் அறிவாளிங்க ஒன்யும் கலங்க மாட்டாங்கோ.! ஏன்னா கஸ்டம் வர்ம்போதே அத்த கண்டுக்கினு மன்சு நெறியா தெம்பா நின்னு அந்த கஸ்டத்தை தொர்த்திடுவாங்கோ.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

[ பொருட்பால் : அதிகாரம் : இடுக்கணழியாமை : குறள் எண் : 622 ]


தீனா "கொரலு"

இது போதாது இன்னும் வோணும் வோணும்ன்னு நென்ச்சிகினே இர்க்குற அந்த பேராசை கொணம் கீதே.. அத்த மட்டும் ஒரு மன்சன் ஒழிச்சிட்டான்னா இந்த உல்கத்துலியே அவன் வாழ்றது தான் சந்தோஸ்மான வாழ்க்கியாம்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அவாவறுத்தல் : குறள் எண் : 370 ]


தீனா "கொரலு"

அவுரோட செல்லமா சண்ட இய்த்து கோச்சுக்கலாம்ன்னு தான் போனேன்.! ஆனா அது இன்னா மாயமோ தெரில.. அவுர பாத்தவுட்னே என் மன்சு என்பேச்ச கேக்காம அவர சேரணும்ன்னு நினைக்க சொல்லோ அப்டியே அவுர கட்டிபுட்ச்சிக்கினேன்.! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு.

[இன்பத்துப்பால் : அதிகாரம் : நிறையழிதல் : குறள் எண் : 1259 ]


தீனா "கொரலு"

இன்னா தான் நீ எடுக்குற பசிய தாங்கிகினுகீற பெரிய உஸ்தாதா இர்ந்தாலும் உன் பசிய தாங்குறது பெர்சு கெடியாத்து.! வவுறு பசின்னு துடிச்சினுக்குற ஒர்த்தன் துண்றதுக்கு ஒரு வா சோறு நீ வாங்கி கொட்த்தா அதான் பெர்சு.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : ஈகை : குறள் எண் : 225 ]


தீனா "கொரலு"

நம்க்கு தோதான நேரம் வர வெரிக்கும் அவஸ்ரப்படாம பொர்மியா கொக்கு கணக்கா காத்துகினு சய்லண்ட்டா இர்க்கணும்.. அத்தே சான்ஸ் கிட்ச்ச வொடனே அந்த கொக்கு குறி தவுறாம கொத்துறா மேறி கபால்ன்னு குத்திட்ணும்.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

[ பொருட்பால் : அதிகாரம் : காலமறிதல் : குறள் எண் : 490 ]


தீனா "கொரலு"

காதலிக்கிறவங்கோ ஒர்த்தர் மேல ஒர்த்தர் எந்த தப்புமே இல்யாம இர்ந்தா கூடொ.. அப்பப்ப சின்னுதா செல்லமா கோச்சிகினு சண்ட போட்றது.. அவுங்களுக்கு நடுவால வச்சிர்க்குற அன்பை நெரியா வளத்துகினே இர்க்குமாம்..! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்

வல்ல தவரளிக்கும் ஆறு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை : குறள் எண் : 1321 ]


தீனா "கொரலு"

இந்த ஒலகத்துல நெலயா இல்யாத விஸ்யத்தை அல்லாம் இத்து நெலயா நெலிக்கும்ன்னு நம்புறான் பாரு அவன் தான் பெர்ய முட்டாளு.. அப்டி நம்புறவன் வாழ்க்க ரொம்ப கேவலமான வாழ்க்க..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

[ அறத்துப்பால் : அதிகாரம் : நிலையாமை : குறள் எண் : 331 ]


தீனா "கொரலு"

இன்னாதான் நீ மேல்சாதியோ கீழ்சாதியோ இஸ்கோலுக்கு போயி படிக்கலின்னா இஸ்கோலுல நல்யா பட்ச்சவனவுட நீ மட்டந்தான்.. பட்ச்சவனுக்கு இர்க்குற பெருமை படிக்காதவனுக்கு கெடியாத்து.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.

[ பொருட்பால் : அதிகாரம் : கல்லாமை : குறள் எண் : 409 ]


தீனா "கொரலு"

ஒரு பொண்ணை இவ மெய்யாலுமே பொண்ணுதான் அப்டின்னு பெருமயா சொல்றது எப்ப தெரிமா? அவ தன் மன்சுக்கு புட்ச்சவன் கிட்ட என் ஆசைய தீக்கணும்ன்னா நீ என் கூடவே இருக்கணும்ன்னு கண்ணாலியே கேப்பா பாரு, அடாடாடா..! அந்த வெக்கப்படுற அயகு ஒண்ணே போதும் அந்த பெருமைக்கு..! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : குறிப்பறிவுறுத்தல் : குறள் எண் : 1280 ]


தீனா "கொரலு"

அடக்கவே மிடியாத கோவத்துல இர்க்குற ஆளு உசுரோட இர்ந்தாலும் அவன் செத்ததுக்கு சமானம்..! அத்தே நீ கோவத்த அடியோட ஒழிச்சு கட்டுன ஆளா இர்ந்தா நீ தவம் இர்க்குற மினிவருக்கு சமானம்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வெகுளாமை : குறள் எண் : 310 ]


தீனா "கொரலு"

நீ இன்னாதான் அல்லா வகையிலியும் உறுதியானவனா இர்ந்தாலும்.. நீ செய்ற காரியத்துல உறுதி இல்லாங்காட்டி ஒன்னிய இந்த ஒலகம் மதிக்கவே மதிக்காது.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

[ பொருட்பால் : அதிகாரம் : வினைத்திட்பம் : குறள் எண் : 670 ]

No comments:

Post a Comment