Friday 25 July 2014

எமலோகத்தில் ஃபேஸ்புக்..

எமலோகத்தில் ஃபேஸ்புக்..!

இடம் : எமலோகம் : பாத்திரங்கள் : எமதர்மன்,சித்திரகுப்தன்,டங்கரன்,டிங்கரன்,மனிதன்

காட்சி - 1

பின்னணிக்குரல் : எமதர்ம ராஜா பராக் பராக்.... ( எமன் நடந்து வர... பாஷா மியூஸிக் ) 

( வாசலில் அவருக்கு வழிவிடாத டங்கர டிங்கரர்கள் மொபைலில் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள் அப்படியே இருவரும் செல்ஃபி எடுக்க வழி கிடைக்காத எமன் கோபத்துடன்.... )

எம: மட கிங்கரர்களே நான் வருவது கூடத் தெரியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..?

டங்: (திடுக்கிட்டு) பிரபு மன்னிக்கவும் நாங்கள் ஃபேஸ்புக்கில் இருந்ததால் உங்கள் பேஸைப் பார்க்கவில்லை ..

டிங்: ஆமாம் பிரபு பார்க்கவில்லை..

எம: நீ என்ன அவன் எதிரொலியா..? வாருங்கள் என்னுடன் சபைக்கு...

( எமன் முன்னே போக பயத்துடன் பின் தொடர்கிறார்கள்...)

சிகு: வாருங்கள் பிரபு என்ன வாயிலில் நிற்கும் கிங்கரர்களை அழைத்து வருகிறீர்கள் ஏதும் பிரச்சனையா..?

எம: சிகு இவர்கள் என்ன செய்தார்கள் நீயே கேள்..

சிகு : டங்கர டிங்கரர்களே பிரபு கோபப்படும்படி அப்படி என்ன குற்றம் செய்தீர்கள்..?

( இருவரும் விழிக்க )

எம: கோபத்தை கிளறாமல் சொல்லுங்களடா அதென்ன கையில் ஒரு வெற்றிலைப்பெட்டி..?

டங்: பி..பி,,பிரபு அது வெற்றிலைப் பெட்டியல்ல செல்போன்..!

எம: அதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? சிகு நீ கேட்க மாட்டாயா..?

சிகு: ஐயோ..பிரபு நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் எப்படிக் குறுக்கே கேட்பது..? டிங்கரா டங்கரா சொல்லுங்கடா சீக்கிரம்..!

டிங்: சித்திர குப்தரே இது செல்போன்... இதில் ஆர்வமாக பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தோம் எமதர்மர் வருவதை கவனிக்க வில்லை மன்னித்தருளவும்...

எம: இவ்வளவு பெரிய உருவம் வருவது கூடவா தெரியவில்லை அற்ப பதர்களே..!

சிகு: பிரபு.. பொறுமை..! முகநூலில் இருக்கும் போது நீங்கள் மட்டுமல்ல பெரும் பிரளயமே வந்தாலும் தெரியாது..!

எம: என்ன பிரளயமே வந்தாலும் தெரியாதா..! அப்படி என்ன இருக்கிறது அதில்..!

சிகு: சொல்கிறேன் பிரபு.. இந்த முகநூல் இருக்கிறதே அதன் போதை அப்படி அவ்வளவு சீக்கிரம் வெளிவர முடியாது..!

எம: ஓ சோம பானம் சுரா பானத்தை விட அது போதையோ..!

டங்: ஆமாம் பிரபு இது அதை விட ராஜ போதை... உள்ளே வந்துவிட்டால் வெளியேறுவது கடினம்... சக்கர வியூகம் போல..

எம: நீ வாயை மூடு.. சிகு இந்த பேஸ்புக் பற்றி சுருக்கமாகச் சொல்..!

சிகு: பிரபு.. இந்த பேஸ்புக் விஞ்ஞானத்தின் வளர்ச்சி.. உலகின் எந்த மூலையில் இருப்போரும் எந்த மனிதருடனும் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம்..!

எம: அடடா... அருமை அருமை... மேலே சொல்..

சிகு: செய்திகள், புகைப்படங்கள், வீடியோ, குரல் என ஒரேஇடத்தில் அமர்ந்து கொண்டே பரிமாறிக் கொள்லலாம்...ஏன் ஒருவருக்கொருவர் பேசக்கூட முடியும்..

எம: பலே..மனிதர்கள் மிகவும் அறிவாளிகள்.. இவ்வளவு நல்ல சாதனமாக இருக்கிறதே இதை ஏன் இவர்கள் முகத்துக்கு நேராக பிடித்து இப்படி செய்தார்களே..! ( செய்து காட்டுகிறார் )

டிங்: பிரபு.. அது தான் செல்ஃபி.. இப்ப டிரெண்ட் அது தான்..

எம : அதென்ன செல்ஃபி..?

டங்: பிரபு.. உங்களை நீங்களே போட்டோ எடுத்துக் கொள்வது தான் செல்ஃபி..

எம: ஓ இப்போது புரிகிறது சுயத்தம்பட்டத்தின் இன்னொரு பெயர் தான் செல்ஃபி..

சிகு: அருமை பிரபு அதற்குள் முகனூலைப் புரிந்து கொண்டீர்களே..!

எம: சரி எப்படி முகநூலில் இணைவது..?

டங்: பிரபு அதற்கு நீங்கள் ஒரு கணக்கு துவங்க வேண்டும்..

எம: பாவக்கணக்கா..? புண்ணியக்கணக்கா..?

சிகு: பிரபு அது நாம் பார்ப்பது.. இவன் சொல்வது முகநூல் கணக்கு..!

டிங்: ஆம் பிரபு அதற்கு ஒரு மெயில் ஐடி இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் துவங்கலாம்..!

எம: எங்கே டங்கரா நீ துவக்கிய பேஸ்புக் கணக்கை காட்டு... 

டங் : இதோ பிரபு ( மொபைலில் காட்டுகிறார் )

எம: அட இது இப்போது வாயிலில் நீங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அல்லவா அதற்குள் எப்படி இங்கு வந்தது..!

டங் : ஹி..ஹி..உங்கள் பின்னால் நடந்து வரும் போதே அப்லோடு செய்து விட்டேன்..!

எம : ஆமாம் உன் பெயர் டங்கரன் தானே இங்கு ஏதோ வேறு பெயர் இருக்கிறதே..! என்ன பெயர் இது..

டங்: ஆம் பிரபு.. டார்லிங் டங்கரன் என்று அடை மொழியுடன் என் பெயர் வைத்திருக்கிறேன் பிரபு...

எம: என்ன அடை மொழிப்பெயரா ஏன் அப்படி..?

சிகு: பிரபு பேஸ்புக்கில் அடைமொழி புனைப்பெயர் எல்லாம் சகஜம்..!

எம: சிகு..  புனைப்பெயரா புரியவில்லையே..!

சிகு: டிங்கரா நீ உன் பக்கத்தை பிரபுவிற்கு காட்டு..

டிங்: இதோ.. ( காட்டுகிறார் ) 

எம: என்னடா இது உன் புகைப்படத்திற்கு பதில் நடிகர் அமீர்கானின் புகைப்படம் வைத்திருக்கிறாய்..

டிங்: ஹி..ஹி.. சும்மா ஒரு கெத்தாக இருக்குமே என்று என் பெயரைப்பாருங்கள் பிரபு..!

எம: என்ன "உயிரைப்பிடுங்கி" என்று பெயர் வைத்திருக்கிறாய்..!

டிங்: மகாப்பிரபு அது தானே நம் தொழில் அதையே புனைப்பெயராக வைத்துள்ளேன்..!

எம: அப்படி என்றால் சொந்தப்பெயர் இங்கு யாரும் வைக்க மாட்டார்களா..?

சிகு: அப்படி வைத்தால் ஒரு திரில் இருக்குமா, விளங்காதவன்,பொறுக்கி,மோசமானவன், பழிக்குப்பழி, பன்னி மூஞ்சி,, இப்படி பெயர்கள் தான் இங்கு பிரபலம்..

டங்: பிரபு இப்படி அடைமொழியையே பெரிதாக பேசுகிறீர்களே ஃபேக் ஐடியை பார்த்தால் என்ன சொல்வீர்கள்..?

எம: அது என்ன ஃபேக் ஐடி..?!

சிகு: நான் சொல்கிறேன் பிரபு... ஒரு ஆண் பெண் பெயரிலோ அல்லது ஒரு பெண் ஆண் பெயரிலோ துவங்கும் ஐடி தான் ஃபேக் ஐடி..

டிங்: கூடு விட்டு கூடு பாய்வது போல..

எம: புரியவில்லையே..

டங்: ஐயா... சித்திர குப்தரே... உங்க ஐடியை காட்டும்..

எம: என்ன சிகு நீயுமா..!!!! 

சிகு: ஆமாம் பிரபு .. பொறுத்தருளவும் (காட்டுகிறார்) 

எம: இந்த பெண்ணின் புகைப்படம் எனக்கு பரிச்சயமாக உள்ளதே..யார் இது..?

சிகு:இது யார் என்று தெரியவில்லை.? நன்றாகப் பாருங்கள்.. நம் தேவ லோகத்து நாட்டியக்காரி மேனகை... பிரபு..!

எம: அடப்பாவி...! மேனகையை நீயா வைத்திருக்கிறாய்...

சிகு: பிரபு..!!!!! 

எம: புகைப்படத்தில்.. புகைப்படத்தில்.. ( சிகு தலை குனிகிறார் )

அவள் படத்தைப் போட்டு சித்ரா என்று வேறு உனக்கு பெயர் வைத்திருக்கிறாய்.. கொடுமை... கொடுமை..

டிங்: பிரபு அப்படியே அவரை ஹாய் என்று ஒரு பதிவு போடச்சொல்லுங்கள்..!

எம: அது எதற்கு..? 

டங்: போடச் சொல்லுங்களேன்...சொல்லுகிறோம்..

எம: இவர்கள் சொன்னது காதில் விழுந்ததா சிகு.. அப்படியே போடு ( சிகு.. போடுகிறார்)
போட்டாச்சு இப்போது என்ன..?

டிங்: சில வினாடிகள் பொறுங்கள் பிரபு.. இப்போது எத்தனை லைக் பாருங்கள்..!

எம: லைக்கா..? அது என்ன..?

டங்: அந்த செய்தியின் கீழே கைக் கட்டைவிரல் போல ஒரு குறி உள்ளதே அது தான் லைக்.!

எம : அதற்கென்ன..இப்போது..? 

டிங்: பிரபு அதற்கென்னவா அந்த லைக் பட்டன் மட்டும் இல்லாவிட்டால் முகனூலே இயங்காது... தெரியாதா..!

எம: அப்படியா.. அட சில வினாடிகளில் 50 பேர் விரும்பியுள்ளார்களே இந்த ஹாய்க்கு

சிகு: ஒரு பெண்ணின் பேரில் இருக்கும் பதிவல்லவா அதான் இவ்வளவு லைக்..!

எம : அட எமகாதகர்களா.. இப்படியுமா செய்வீர்கள்..?

சிகு: பிரபு இதென்ன பிரமாதம் இவர்கள் எடுத்த புகைப்படங்களை பாருங்க..!

சிகு: ஒரு பெண்ணின் பேரில் இருக்கும் பதிவல்லவா அதான் இவ்வளவு லைக்..!

எம : அட எமகாதகர்களா.. இப்படியுமா செய்வீர்கள்..?

சிகு: பிரபு இதென்ன பிரமாதம் இவர்கள் எடுத்த புகைப்படங்களை பாருங்க..

எம: ( பார்க்கிறார் ) நேற்று உயிர் எடுக்க போகையில்...டங்கரன்.. உயிரை எடுக்கும் போது... நரகத்தின் எண்ணை கொப்பரை அருகில்... எமலோகத்தில் ஒரு வீக் எண்ட்... சோம பானம் 3 வது ரவுண்டில் டிங்கரன் இதென்ன நேர்முக வர்ணனை போல இருக்கிறதே..!

சிகு: அது தான் பிரபு அப்டேட்ஸ்..! நடக்கும் போதே பதிவிடுவது..

எம : ஓ இவ்வளவு இருக்கிறதா..? அட இதென்ன ஒரு பனிமலை பின்னணியில் பசும்புல் வெளியில் டங்கரனும் டிங்கரனும் நிற்கிறார்கள் இப்படி இடம் எமலோகத்தில் இல்லையே.!

டங்: மகாப்பிரபு அது நரகத்தில் எண்ணைச்சட்டியிடம் எடுத்த போட்டோ நான் தான் போட்டோ ஷாப்பில் பேக்கிரவுண்டை மாத்திட்டேன்..!

எம : போட்டோ ஷாப் என்றால்..?

டிங்: இண்டர் நெட்டில் பட்டி டிங்கரிங் பார்ப்பது இதில் இல்லாததை கூட இருப்பதாக காட்டமுடியும்.?

எம: நிறுத்துங்கள்.. இதில் எல்லாமே பொய் தானா நன்மை ஏதுமே இல்லையா..?

சிகு: இருக்கிறது பிரபு.. அதற்கு முன் இங்கு வந்த மானிடன் ஒருவனின் பாவ புண்ணியக்கணக்கை பார்க்கலாமா..?

எம: வரச்சொல்லுங்கள் அவனை.. (வருகிறார்)

சிகு: பிரபு இவனும் ஒரு முகநூல் பதிவன் தான் இவன் செய்த குற்றம் என்ன தெரியுமா..?

எம: சொல்லுங்கள்...

சிகு: யார் என்ன பதிவு போட்டாலும் போய் காலை வணக்கம் சொல்லியே சாகடிப்பான்..

டங்: ஓ குட்மார்னிங் குமரேசன்..!

சிகு: அதற்கு தண்டனை என்ன பிரபு..?

எம: இங்கேயும் குட்மார்னிங் சொல்ல வேண்டும் சரியா..

மனி : ஹைய்யா ஜாலி ஓகேங்க..

டிங்: யோவ் ஜாலியா... முழுசா கேளுய்யா..! நீங்க சொல்லுங்க பிரபு 

எம: எண்ணைச்சட்டியில் முக்கி எடுக்கையில் குட்மார்னிங் சொல்லவேண்டும்..!

மனி: நான் சொல்லாட்டின்னா..!

எம: சட்டியில் முக்குவதோடு சரி.. எடுக்கவே எடுக்காதிங்க..

மனி: அய்யோ சாமி..!

எம: அடுத்த குற்றம்..?

சிகு: ஆபாசப் படங்களை பதிவிட்டது மற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசியது.. 

எம: என்ன பெண்களிடம் ஆபாசப்பேச்சா..! இழுத்து வைத்து அறுத்தெறியுங்கள்...

மூவரும்: பிரபு.!!!!!!

எம : இவன் நாக்கை.. நாக்கை....ம்ம்ம், இழுத்துச்செல்லுங்கள் இவனை நரகத்திற்கு..

(கிங்கரர்கள் அவனை இழுத்துச் செல்ல எமன் சிகு வைப்பார்த்து) ஏன் சிகு இந்த முகநூலில் பயன் ஏதுமில்லையா..?

சிகு: யார் சொன்னது முகநூல் வந்த பின்பு பலர் நன்கு எழுதுகிறார்கள், விபத்து நேரத்தில் ரத்த தான உதவி, எங்கோ ஒரு நாட்டின் மூலையில் சிரமத்தில் இருக்கும் சக மனிதனை காக்கும் உதவி, அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்தி, மருத்துவ குறிப்பு இப்படி பல நன்மைகள் இருக்கே பிரபு..

எம: சரிதான் முகநூல் கத்தி போன்றது அதில் பழமும் நறுக்கலாம் உயிரையும் எடுக்கலாம் அதை முறையாக பயன் படுத்துங்கள் இனி வரும் காலங்களில் உங்கள் பாவக்கணக்கு புண்ணியக்கணக்கு எல்லாம் சொல்லிடும் உங்கள் முகநூல் கணக்கு..! ஜாக்கிரதை.. சபை கலையலாம்..! (கிளம்புகிறார்)

சுபம்




1 comment:

  1. நன்று!பாமரர்களுக்கும் புரியும்படி விளக்கம்...........நன்று!

    ReplyDelete