Saturday 27 September 2014

ஒரு பேருந்தின் குரல்.

#ஒரு_பேருந்தின்_குரல்...

பத்து வருசத்துக்கு முன்னே பளபளன்னு பாடிகட்டி பவிசாக வந்து நின்னோம். உள்ளுக்குள்ள ஏசியும் மெத்து மெத்துன்னு சீட்டும் சொகுசா தான்யா இருந்துச்சி. கம கமன்னு சந்தனம் தெளிச்சு குறுவாழை மரத்தை கட்டி அமைச்சரே ஓட்டுனரா சீட்டுல ஏறி ஆரம்பிச்சு வச்ச எங்க வாழ்க்கை சொகுசாத்தான் துவங்கிச்சு.எங்க பேரும் அது தான்யா சொகுசுப்பேருந்து.! 

நீண்ட தூர பயணத்துல நாங்க போகாத ஊருமில்ல பாக்காதஆளுமில்ல. தேசிய நெடுஞ்சாலையில கத்தி போல ஓடியிருக்கோம் உள்ளூர் சாலையிலும் தத்தி தத்தி நடந்து இருக்கோம் ஆணியோ கல்லோ குத்தி டயர் வெடிச்சி நின்னிருக்கோம் பராமரிப்பு இல்லாம பைய மூச்சிரைத்து பயணத்தில் பல நேரம் பாதியிலே நின்னுடுவோம் வருசம் 5 ஆகி மேனி அழகெல்லாம் அது குலைஞ்சு பணி மனையில் பல நாளா பரிதவிச்சு படுத்திருந்தோம். 

புது உதிரி பாகங்கள் அது கிடைக்க கோப்புகள் அரசு ஆணைக்கு காத்திருக்க ஆப்பசைத்த குரங்காட்டம்அங்கனயே மாட்டிகிட்டோம்.அருமை தெரியா புருசங் கிட்ட வாக்கப்பட்டா பொண்ணு போல அதிகாரிங்க அலட்சியத்தில் ஓய்ஞ்சு போனோம். வருசம் 5 ஆச்சு..ஆட்சி மாறியாச்சுன்னு அதிகாரிங்க திடீர்னு வந்தாக 

எங்களை சுத்தி வந்து பார்த்தாக நமக்கு விடிவு காலம் பொறக்குதுன்னு தப்பா நினைச்சிட்டோம். அடுத்த நாளே ஏசியை கழட்டிபுட்டு இருக்கை எல்லாம் மாத்தி எங்க பழைய பட்டுசேலைக்கு பதிலா ஒரு நூல் சேலையக்கட்டி விட்டாக. ஏன்னா இனி நாங்க டவுன்பஸ்ஸாம்.! நீண்ட தூரம் ஓட எங்களுக்கு வக்கில்லையாம். 

மறுபடி பயணம்.. ஆடு மாடுகோழி முதல் அத்தனையும் ஏத்திக்கிட்டு ஒரு பக்கம் குடை சாய ஊரெல்லாம் சுத்தி வந்தோம் நிறுத்தத்துல பிரேக் போட்டா நிக்க திராணியில்ல கொஞ்சம் தள்ளிதான் போய் நிப்போம். வயசாகி போயிடுச்சு இல்ல..

படியில தொங்கி தொங்கி எங்க படியெல்லாம் பிஞ்சிடுச்சு.. சொறி வந்த நாய் போல எங்க பெயிண்ட்டெல்லாம் உதிர்ந்திருச்சு சீட்டெல்லாம் கிழவன் பல்லாட்டம் ஆடிடுச்சு.. எங்க உடம்பெல்லாம்துரு வந்து செதில் செதிலா மாறிடுச்சு சொகுசு பேருந்து அது எங்க பழைய பேரு..இப்ப எங்க பேரு ரிப்பேரு.!

மறுபடி பணிமனை....மறுபடியும் அதிகாரி..கோப்பு ...கையெழுத்து.! எப்ப மாறும் எங்க தலையெழுத்து.? நல்ல மவராசன் ஒருத்தன் ஒருவழியா வேகமா ஒப்புதல் தந்ததால ரிப்பேரு நடந்து ஓரளவு குணமாகி மறுபடி பயணத்தை ஆரம்பிச்சோம்.. 

தெருவோரம் ஒரு நிறுத்தத்தில் நிக்கையிலே திமு திமுன்னு கும்பலா பல பேரு வந்தாக இருந்த ஆளுங்களை இறங்க சொல்லிபுட்டு என் மேல கேன் கேனா டீசலை ஊத்துனாக.. ஐயோ இதை இங்க ஊத்தக்கூடாது டாங்கில தான் ஊத்தணும்ன்னு சொல்ல ஆசைதான்..ஆனா எனக்கு தான் பேச தெரியாதே.!

யார் யாரோ வாழ்கன்னும் யார் யாரோ ஒழிகன்னும் கத்தி கோஷம் போட்டு கிட்டே என்னை பத்த வச்சுட்டாக.. அடிக்கிற காத்துல வேகமா தீ பரவி நடுத்தெருவில் நின்னு சொக்கப் பனையாட்டம் எரியுறேன்.. எரிச்சிட்டு ஓடுறவங்களே ஒரு நிமிசம் நில்லுங்க.. உங்க கிட்ட கேக்குறேன் வாய் தொறந்து சொல்லுங்க..

உங்களை எல்லாம் நான் ஒரு தாயைப்போல சுமக்கலையா? நான் ஒரு பொது சொத்துன்னு உங்க மனசுல நினைக்கலையா? எரியுறது உங்க பணமய்யா அது இன்னும் விளங்கலையா.?எனக்கு கொள்ளி வச்ச பாவிகளா எதுக்கு என்னை கொளுத்துனிங்க.? நான் என்னா பாவம் செஞ்சேன்.? உங்க கிட்ட பதில் இருக்கா.?யாராச்சும் சொல்லுங்களேன்.?

No comments:

Post a Comment