Sunday 8 May 2016

ஜேம்ஸ் நதியின் மிசை..

#ஜேம்ஸ்_நதிக்கரையினிலே

ரிச்மாண்ட்.. வர்ஜினியா மாகாணத்தில் அமைந்துள்ள அழகிய ஊர் அந்த மாநிலத்தின் தலைநகரும் அதுவே.. புகையிலை மற்றும் கோதுமை தொழில்களுக்கு புகழ் பெற்ற ஊர். பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஊர். இது அமெரிக்காவின் நிழல் தலைநகரம் அவசர காலத்தில் அரசாங்கம் ரிச்மாண்ட்டில் நடந்திருக்கிறது. வாஷிங்டனில் இருந்து 2 மணிநேரப் பிரயாணம். இந்த ஊருக்கு பெருமை சேர்ப்பது தான் ஜேம்ஸ் நதி.

கிட்டத்தட்ட கடல் போல இருக்கும் இந்நதி 348 மைல் நீளம் கொண்டது.. உள்நாட்டு போருடன் சம்பந்தப்பட்ட வரலாறு மிக்கது. பொதுவாக அமெரிக்காவில் ஆறுகள் பிரமாண்டமானதாகவே இருக்கும் இதுவும் அப்படியே.. செவ்விந்தியர்கள் காலத்தில் இந்த நதியின் பெயர் பவ்ஹாட்டன் 1861 முதல் 1865 வரை நடந்த உள்நாட்டுப் போரில் இந்த ஆற்றில் உள்ள பாலத்தை தீ வைத்து எரித்து விட்டார்கள் பாதி பாலம் எரிந்துவிட்டது.

ஓகே வரலாறு போதும் என நினைக்கிறேன். நண்பர் வாசுவுடன் நாங்கள் இந்த நதிக்கரைக்கு வந்து காரை நிறுத்திவிட்டு நடந்தோம்.. காலை 11 மணி வெயில் செல்லமாக அடித்துக் கொண்டிருந்தது நதிக்கரை என்பதால் காற்றில் ஈரம் தெரிந்தது ஆற்றோரம் அழகிய புல்தரைப்பாதை இடையிடயே குறுக்கிட்ட பரிசல்துறைகள் அமெரிக்கப் படகோட்டிகள் தங்கள் படகை காரில் ஏற்றிக்கொண்டுவந்து நதியில் இறக்கி விரைந்தார்கள்.

திடீரென வெயில் குறைந்து குளிர் அதிகரித்தது.. நதிக்கரை ஓரத்தில் நடந்து அங்கிருந்த பெரிய பூங்காவிற்கு வந்தோம்.. அழகிய புல்வெளி, ஆங்காங்கே பார்க் பெஞ்சுகள் மலர்த்தோட்டங்கள் சிலைகள் என அழகு படுத்தி இருந்தார்கள் உள்நாட்டுப்போரில் பாதி எரிந்த மரப்பாலம் அப்படியே இருந்தது அதில் ஒரு நடை போனோம்.. இத்தனை ஆண்டுகளுக்கு பின் இப்போது முழுப்பாலத்தையும் கட்ட இருக்கிறார்களாம்.!

இந்த ஆண்டு இறுதிக்குள் அதைக் கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு விட இருப்பதாக வாசு சொன்னார்.. மரப்பாலத்தின் கீழே ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருந்தார் ஜேம்ஸ் நதியார். உள்நாட்டு போரில் சம்பந்தப்பட்ட தலைவர்கள் சொன்ன வாக்கியங்களை இரும்பு தகட்டில் பொறித்து அதை பாலத்தின் நடை பாதை முழுவதும் பதித்து இருந்தார்கள். மீண்டும் பூங்காவிற்கு வந்தோம் இப்போது வெயில் இருந்தது.

சூரியனைக் கண்டதும் அங்கு இருந்த அமெரிக்க யுவதிகள் தங்கள் மேலாடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் புல் தரையில் சன்பாத் எடுத்து எங்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கினார்கள். பார்வையை சிரமப்பட்டு ஆற்றின் பக்கம் திருப்பினோம் அது இன்னமும் சிரமமாக இருக்க மெல்ல அந்தப்பகுதியை கடந்தோம். தூண்டில் வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள் படகில் சென்ற ஒரு ஜோடி கையசைத்தது.

மாலைநேரங்களில் இப்பகுதி இன்னமும் விஸ்கியமாக இருக்குமாம். (ரம்மியம்ன்னு சொல்லி அலுத்துடுச்சு) இந்த நதிக்கரையில் தான் அமெரிக்க ரிசர்வ் பேங்க் இருக்கிறது.. வாசு அங்கு தான் பணிபுரிகிறார். எங்கள் பாஸ்போர்ட்டை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டோம் இருந்திருந்தால் அங்கே போய் பார்க்க அனுமதி கிடைத்திருக்கும். எங்கள் நடை இப்போது சாலைக்குவந்திருந்தது.. எதிரே போர் சம்பந்தமான மியூசியம் இருந்தது.

அமெரிக்கர்களிடம் பிடித்த விஷயம் அவர்கள் எதையும் ஆவணப்படுத்தி வைத்திருப்பது சிறிய வரலாற்று சம்பவத்தை கூட அழகாக கலைநயத்துடன் காட்சிப் படுத்தி வைத்திருப்பார்கள். அந்த வகையில் ஒரு சின்ன ரவுண்ட் அடித்தோம்.. போர் சம்பந்தமான அந்த இடம் லேசாக போர் அடிக்க மீண்டும் நதிக்கரை வழியே நடந்து காருக்குத் திரும்பினோம். இந்த ஒரு 2 மணிநேரத்தில் அங்கு தெரிந்து கொண்டவை...

ஆற்றை சுத்தமாக வைத்திருக்கிறார்கள், நீர் போக்குவரத்தை முறையாக பயன்படுத்துகிறார்கள் வெயிலை அனுபவிக்கிறார்கள் பழமையை போற்றுகிறார்கள் நதியோர பூங்காவினை நன்கு பராமரிக்கிறார்கள்.. நம்ம வைகை நதிக்கரையை அந்நேரம் சிந்தித்தேன்..துணிதுவைத்து கால் கழுவி குப்பைத்தொட்டியாக்கி வெங்காயத்தாமரையை வளரவிட்டு.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் வைகையை சுத்தப்படுத்தவெல்லாம் வேண்டாம்.

இது போல நீர்நிலைகளை பராமரிக்கும் விழிப்புணர்வு மக்கள் குணத்தில் இருக்க வேண்டும்.. ஆனால் நமக்கு யாரும் அதைச் சொல்லித்தரவில்லை அப்படிச் செய்திருந்தால் நம் ஊரிலும் இது சாத்தியமாகி இருக்கும். நம் மக்களுக்கு இதைச் சொல்வதை விட இன்றைய குழந்தைகள் மனதில் அதை விதைக்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்க ஜேம்ஸ் நதிக்கரையில் இருந்து கிளம்பினோம். வரலாறுகள் கண்ட அந்த வற்றாத ஆறைப் போல நம் நாட்டிலும் ஆறுகளைப் பேணிக்காப்போம் நீர்வளத்தை சேமிப்போம்.

No comments:

Post a Comment