Tuesday 22 July 2014

ஜூலை - 22

#மனம்_திறக்கிறேன்

ஜூலை 22 என் பிறந்தநாள்.! அதிலும் இந்த 2014 ஜூலை 22 ஐ முகனூல் என் வாழ்நாளின் மறக்க முடியாத நாளாக்கி விட்டது.! 2000க்கும் மேற்பட்ட உள்பெட்டி வாழ்த்துகள்! ஆயிரக்கணக்கில் டைம் லைன் போஸ்ட்டுகள்.! என் புகைப்படத்தோடு ஐநூறுக்கும் அதிகமான பிரத்யேக பதிவுகள், கொலாஜ் செய்யப்பட்ட என் புகைப்பட தொகுப்புகள், ஏராளமான பிறந்தநாள் கேக்குகள், பூங்கொத்துகள், எனது ஓவியங்கள்..! இது மட்டுமா..!

எனக்காக கிராபிக்ஸ் செய்யப்பட்ட பிரத்யேக வீடியோ வாழ்த்து, எனது புகைப்படத்தை கவர் போட்டோவாகவும், புரொஃபைல் போட்டோவாகவும் வைத்துக் கொண்டவர்கள்.. எனது தெரியாத முகத்தை பதிவிட்டவர்கள், பால்ய நண்பர்களின் பதிவு என ஒருபுறமும்.. மறுபுறம் என் அலைபேசி நேற்று முழுவதும் பிசியாகவேஇருந்தது.! அதிலும் நிறைய வாழ்த்துச் செய்திகள்,அழைத்துப் பேசிய பல புதிய பழைய நண்பர்கள்.! (முகநூல் நட்புக்கள் மட்டும்)

குவைத்,ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர்,மலேசியா, அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி, ஸ்விஸ், இலங்கை என கோபால் பல்பொடி விளம்பரத்தை விட அதிக நாடுகளில் இருந்து தொலைபேசி வாழ்த்துக்கள், உள்நாட்டு நண்பர்கள், முகநூல் போனில் அழைத்தவர்கள் கான்பரன்ஸ் காலில் வந்து வாழ்த்திய நண்பர்கள், எனது நட்சத்திரம் கேட்டு எனக்காக கோவிலில் அர்ச்சனை செய்த அன்புள்ளங்கள், வைபர், வாட்ஸ் அப்புகள்.. அப்பப்பா..!

நான் யார்.? மிகச்சிறந்த பிரபலமா.? அரசியல்வாதியா.? புகழ் பெற்ற நடிகனா.? நல்ல எழுத்தாளனா.? விளையாட்டு வீரனா.? அல்லது சிறந்த முகநூல் பதிவனா.? இவை எதுவுமே இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்..!  முகநூலில் நான் வருவதற்கு முன்பிருந்தே இங்கே பல நல்ல பதிவர்கள் இருக்கிறார்கள்.. நான் பெரு வெற்றி பெற்ற நடிகனும் இல்லை.. அரசியல்..!? அதை கலாய்த்து இருக்கிறேனே தவிர வேறில்லை.. 

பிறகு எழுத்தாளனா எனக் கேட்டால் முகனூலில் எழுதுபவர்கள் பலரின் கால் தூசு கூட பெற மாட்டேன், விளையாட்டு! அது கால் நூற்றாண்டாகிவிட்டது, பிறகு ஏன் இந்த அங்கீகாரம்.? பட்டத்துயானை பிச்சைக்காரனின் கழுத்தில் மாலையிட்டு அரசனாக்கியது போல  என்னை திடீரென புகழில் தள்ளி விட்டீர்கள்..! ஒன்று மட்டும் (பு)தெரிகிறது.! நான் எல்லோருக்கும் நல்ல நண்பனாக இருந்திருக்கிறேன் அல்லது எளிமையானவனாக அறியப்பட்டிருக்கிறேன்.!

இந்த ஒரு விஷயம் தான் எனக்கு நீங்கள் அளித்த வாழ்த்திலிருந்து என்னளவில் புரிந்து கொள்ளப்பட்டது..! நாம் நல்ல மனிதனாக நடந்து கொண்டால் உலகம் நம்மை மதிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.. என்னுடன் முரணான கருத்துடையவர்கள், சண்டை போட்டவர்கள் கூட என்னை இங்கு வாழ்த்திய போது எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது.! அடடா தவறு நம் பக்கமும் இருந்திருக்கலாம் அல்லவா என எண்ணத் தோன்றியது..!

இனி எனது முகனூலில் பிளாக் பொத்தானுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்ற வைராக்கியம் ஏற்பட்டுள்ளது.! அன்பை விதைத்து செல்வோம் அது பின் வருபவர்க்கு பலனளிக்கட்டும் என்பார்கள்.. ஆனால் நீங்கள் விளைத்த இவ்வன்பிற்கு ஈடாக நான் என்ன தருவது.? நேற்று (ஜூலை22) மார்க்கின் முகநூல் வெங்கடேஷ் ஆறு"முகநூலாக" மாறியது என்னை நெகிழ வைத்தது, உங்கள் அன்பில் திணற வைத்தது..!

நன்றி நன்றி நன்றி என பல்லாயிரம் முறை எழுதினாலும் பெருகி வரும் ஆனந்தக் கண்ணீர் அதனை அழித்துக் கொண்டே இருக்கிறது.. அல்லது நன்றி என்ற ஒரு சொல் அதற்கு தகுதியற்றதாக இருக்கிறது.. இந்த பாராட்டுதலுக்கான அருகதை எனக்கு உள்ளதா தெரியவில்லை ஆனால் இந்த வாழ்த்துகளை என் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.! நன்றியை விட நல்ல வார்த்தை தேடிப் புறப்படுகிறேன்..

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் நீங்கள் எல்லாம் சேர்ந்து என்னை பெரிய கடன் காரனாக்கி விட்டீர்கள்.. #லவ்_யூ_ஆல்

No comments:

Post a Comment