Wednesday 19 November 2014

பந்தி 2

#பந்தி

மதுரையில் வாழ்பவர்களுக்கு இருக்கும் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு சவுராஷ்டிரா சமூகத்து நண்பன் கூட இல்லை என்றால் அந்த நட்புக்கே அர்த்தமில்லை..! அந்தளவுக்கு மதுரையின் சுவாசமாக வாழும் நட்பு மிகுந்தவர்கள்.! கடின உழைப்பாளிகள், சுறுசுறுப்பானவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள்.!

எனது வட்டத்தில் அந்த சமூக நண்பர்கள் மிக மிக அதிகம்.அவ்வப்போது நண்பர்கள் வீட்டில் சாப்பிடப்போகும் போது தான் தெரிந்து கொண்டேன் சிற்றான்னங்கள் எனப்படும் பலவகையான சாதங்களை அவர்கள் செய்வது போல் யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்பதை.! அதற்கு அவர்கள் தரும் காம்பினேஷன் தான் சிறப்பு..!

எங்க வீட்டு சாப்பாடு பத்தி சொல்றியே இதே போல வீட்டு கைமணத்துடன் சூப்பரா சுவையா சாப்பிட ஒரு ஓட்டலே இருக்கு தெரியுமா.? என்று நண்பர் ஒருவர் அழைத்து சென்ற இடம் தான் அன்னபூரணி விலாஸ் பொங்கல் கடை..! மதுரை பழைய தினமணி தியேட்டருக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் ஒரு சிறிய கடை..!

வாசலிலிலேயே பார்சல் பகுதி..! பழைய கால எண்ணெய் வாங்கும் கடை போல சுற்றிலும் சில்வர் போணிகள் நிறைய பலவகை சாதங்கள் வைத்து இருக்க.. 2 தக்காளி 4புளியோதரை,2 தயிர் என கேட்கும் ஆட்களுக்கு கரண்டிகளில் அள்ளி பார்சல் செய்யும் அவரது நேர்த்தி எனக்கு டிரம்ஸ் சிவமணியை ஞாபகப்படுத்தும்.!

எனக்கு நினைவு தெரிந்து எந்த சாதம் எடுத்தாலும் 5 ரூபாய் காலத்தில் அறிமுகமானது இந்தக்கடை.. சர்க்கரைப் பொங்கல் எனது ஃபேவரிட் உணவு..! ஆனால் இந்தக்கடையில் அதை சாப்பிட்டதில் இருந்து நான் அதற்கு அடிமையாகியே போனேன்..! அந்தளவு அற்புதமான சுவை.. கைப்பக்குவம்.!

கொதிக்க கொதிக்க நெய் மணம் கமழ (நோ டால்டா கலப்படம்) வறுத்த முந்திரி திராட்சைகளோடு வெல்லம் சற்று தூக்கலாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் சரியான இனிப்புடன் குழைவாக இலையில் விழும் அந்த பொங்கலை நான் வானுலக தேவராக இருந்திருந்தால் அமிர்தம் என்றிருப்பேன்.!

அடுத்து புளியோதரை..! குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லாவிட்டால் இதை நீங்கள் சாப்பிட முடியாது இதற்கு அவ்வளவு டிமாண்ட்.. சர்க்கரை பொங்கலில் குழைவாக இருந்த அரிசி இதில் விறைப்பாக இருக்கும்.. ஆனால் நன்கு வெந்தும் இருக்கும்.. அள்ளும் போதே நல்லெண்ணெய் மணம் நாசிக்குள் ஏறும்.. பொங்கலுக்கு முந்திரி..

புளியோதரைக்கு வறுத்த நிலக்கடலை..! அளவான புளிப்புடன் ஒவ்வொரு வாய்க்கும் வறுத்த கடலை மெல்லுவதற்கு கிடைக்க.. இதற்கான காம்பினேஷன் அவித்த கருப்பு கொண்டக்கடலை..புதினா சட்னி. சத்தியமாக இந்த காம்பினேஷனில் இன்னொரு புளியோதரை சாப்பிடாதவர்கள் வயிறு சரியில்லாதவர்களே..! அடுத்து...
வெண் பொங்கல்.. இங்கு சாப்பிடும் வெண்பொங்கல் நிச்சயம் உங்களுக்கு புது அனுபவம் மிளகு முந்திரியுடன் நெய்மணக்க குழைவாக சுவையில் ஒரு தனித்துவத்துடன் இருக்கும்..தேங்காய் சட்னி கெட்டியான துவரம்பருப்பு சாம்பாருடன் அளவு தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்க தூண்டும்..

லெமன் பொங்கல்.. வெந்த அரிசியில் புளியோதரையின் இலக்கணம் மிகாது அதே நேரத்தில் எலுமிச்சை மணம் கமழ கிடைக்கும் பருப்பு புளி துவையல் இதற்கான காம்பினேஷன்.. இதற்கும் சுண்டல் வைத்து சாப்பிடலாம் ஆனால் தேங்காய் துவையலும் துவரம் பருப்பு சாம்பாரும் ஒரு பிடி பிடிக்க சொல்லும்.!

தக்காளி பொங்கல்.. ஒரு இழை பிசகினால் வெஜிடபிள் பிரியாணி ஆகிவிடும் அபாயமில்லாது தயாரிக்கப்பட்டிருக்கும் குழைவாகவும் இல்லாமல் விறைப்பாகவும் இல்லாமல் மீடியமாக இருக்கும் தயிர் வெங்காயம் இதன் காம்பினேஷன் கோடைக் காலங்களில் தயிர் வெள்ளரி மற்றும் காய்கறி குருமாவுடன் ருசிக்கலாம்..!

வெஜிடபிள் பிரியாணி.. தக்காளி சாதத்திற்கும் பிரியாணிக்கும் வித்தியாசம் தந்து விட்டாலே அந்தக்கடை சமையலில் கிங்.. அந்த வகையில் வெளிடபிள்களோடு சோயா பீன்சும் பொரித்த பிரட் துண்டுகளும் இணைந்த கலவையில் கிடைக்கும் மசாலா மணக்க சாப்பிடலாம்..தக்காளிக்கு தரும் காஃம்பினேஷனே இதற்கும்..!

தயிர் சாதம்... தயிரில் மட்டும் புளிப்பு இல்லாமலும் பச்சை பால் மணம் இல்லாமலும் கலவை கிடைத்தாலே முக்கால் வெற்றி.. அதை மிக அழகாக அடைந்திருப்பார்கள். 
சிறு பச்சை மிளகாய் அரித்து போட்ட சின்னவெங்காயம் கடலை பருப்பு போட்டு தாளித்து கொட்டி பச்சைமிளகாய் இஞ்சி சட்னி உறுகாயுடன்..ஸ்ஸ்ஸ் டிவைன்..

முட்டை தோசை.. நல்ல கதையம்சமுள்ள அழகி திரைப்படத்தில் குருவி கொத்துன கொய்யாப் பழம் என்று கமர்ஷியல் குத்துப்பாட்டு வைத்தது போல அசைவ பிரியர்களுக்காக இந்த முட்டை அயிட்டங்களை மட்டும் வைத்துள்ளார்கள்.. அதற்கு தனிக் தோசைக்கல்லும் பயன் படுத்துகிறார்கள் என்பது சிறப்பு..!

சரி முட்டை தோசையில் என்னய்யா சிறப்பு எல்லா ஊரிலும் ஒன்று தானே.. அப்படி சாதாரணமா கேட்காதிங்க பாஸ் சொல்றேன்.. மற்றக்கடை முட்டை தோசைக்கும் இந்தக்கடை தோசைக்கும் உள்ள வித்தியாசம் இது ஆப்பம் போல மொத்தமாக வார்க்கப்படும்.பொதுவாக மாவை கல்லில் உற்றி பிறகு மேலே முட்டை ஊற்றுவர்..!

இங்கு இதற்காகவே கைப்பிடி உள்ள பெரிய அலுமினிய மக் வைத்துள்ளார்கள் அதில் இரண்டுகரண்டி மாவை உற்றி பிறகு முட்டையை உடைத்து ஊற்றி உப்பு தூவி கலக்கி ஊத்தப்பம் போல் ஊற்றுவர்கள் தோசையே மஞ்சள் நிறத்தில் வரும்.. ஹைலைட் தோசை வெந்ததும் மேலே நல்லெண்ணெய் கார எள்ளுப்பொடி தடவி..

தருவார்காள்.. மிளகு பொடியும் தூவுவதுண்டு.. எந்த சைட் டிஷ்ஷும் இல்லாமல் ஹார்லிக்ஸ் குழந்தைகள் போல அப்படியே சாப்பிடலாம்.. இங்கு நான்வெஜ் குழம்புகள் இல்லை சட்னி சாம்பார் தான் பொங்கல் & சாதங்கள் சாப்பிட உகந்த நேரம் காலை12:30 முதல்2:30 வரை அதிர்ஷ்டம் இருந்தால் 3 வரை கிடைக்கும்.!

காலை நேர டிபன் உண்டு முட்டை தோசை எல்லா நேரமும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.. மதுரை வந்தால் தினமும் ஏதாவது 2 சாதம் 1 முட்டை தோசை என முறை வைத்து சாப்பிட்டாலும் 3 நாட்கள் வயிற்றுக்கும் மனதிற்கும் நிறைவு தரும்.! விலைவாசி உயர்வால் தற்போது ஓவ்வொரு சாதமும் 18 ரூபாயாம்..

இரண்டு சாதம் 18x2= 36 ஒரு முட்டை தோசை 25 மொத்தம் 61 ரூபாயில் திருப்தியான சாப்பாடு.. ஒரு ஹலோ சொல்லிட்டு போக நம்பர் கொடுத்து இருக்கேன் 9365881964 சொல்லிட்டு போனா எடுத்து வச்சு இருப்பாங்க சாப்பிட்டு விட்டு சொல்லுங்க..! உலக உணவு தின ஸ்பெஷலுக்காக மதுரையிலிருந்து...

வெங்கடேஷ் ஆறுமுகம்

No comments:

Post a Comment