Thursday 20 November 2014

அம்மி மிதித்து....

அம்மி...

இந்தக்கால குழந்தைகளுக்கு மம்மி என்றால் தெரியும் அம்மி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அந்த காலத்தில்  பெரும்பாலும் அடுப்படியை ஒட்டி வீட்டின் பின் புறத்திலும் வாய்ப்பில்லாத வீடுகளில் வாசல் புறத்திலும் பெரிய வீடுகளில் முற்றத்திலும் இடம் பிடித்திருக்கும்..!

அம்மா அதில் அரைக்கும் மசாலாவை வைத்தே வீட்டில் சாம்பாரா புளிக்குழம்பா, கறிக்குழம்பா என அறிந்து கொள்வோம்.. எந்த ப்ரீத்தியும் கேரண்டி தராத காலம் என்பதால் சட்னி அரைப்பதும் அதில் தான்..

அவசரத்திற்கு பழைய சாதத்திற்கு துவையல் அரைத்தும் தருவார்கள் தரையில் அமர்ந்து இரு காலையும் இரு புறம் கலவிக்கு வைப்பது போல் வைத்து சட்னிக்கு இழுத்தரைப்பார்கள்.. இப்போது அந்த பயிற்சியைத் தான் பெரு நகரங்களில் உள்ள ஜிம்முகளில் பயிற்சியாக வைத்து மாதம் 3000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்..!

அப்போதெல்லாம் அது அம்மா படும் கஷ்டம் என்பதறியாமல் அம்மியில் இருந்து எகிறி விழும் தேங்காய் பத்தைகளை கேட்ச் செய்ய எம்.எஸ் டோனியைப் போல அமர்ந்திருப்போம்.!
சில நேரங்களில் தேங்காயை உடைத்த பின் நொறுக்குவதும் அம்மியில் தான்..
வீட்டில் பண்டிகை தினங்கள் வந்துவிட்டால் அம்மாவின் நேரம் பெரும்பாலும் அம்மிக்கல்லுடனே இருக்கும்.. எந்த சக்தி மசாலாவும் இல்லாத காலத்தில் அம்மாவின் சக்தியில் அரைத்த மசாலா அது..!

அந்த சுவைக்கு அம்மாவின் நெற்றியில் இருந்து  தவறி மசாலாவில் விழுந்த சில வியர்வைத்துளிகள் தான் ஒரு அலாதியான சுவைக்கு காரணமாக இருந்திருக்கலாம்.. சில அக்காக்கள் இருக்கும் பக்கத்து வீடுகளில் உள்ள அம்மாக்களுக்கு அந்தளவு சுமை இருந்திருக்காது..அக்கா அரைக்கும் போது ஆண்பிள்ளைகள் வெளியேற வேண்டும் என்ற காரணம் நான் 9 ஆம் வகுப்பு வரும் வரை தெரியாது..!

பொதுவாக அம்மி அரைக்கும் போது தொடை வரை ஆடையை மேலேற்றி குனிந்து அரைக்க வேண்டும் ஆடைகள் விலகும் உடல் குலுங்கும் அது ஆண்பிள்ளைகளை சலனப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான். எனத் தெரிந்தது. தன் அம்மாவிடம் அல்லது அவள் வயதொத்த பிற பெண்களிடம் நமக்கு தெரியாத ஒன்று இளம்பெண்களிடம் தெரிந்துவிடும் என்பதால் அப்படிச் சொன்னார்கள் என்பதும் புரிந்தது..!

சிறுவர்களை அம்மிக்கு அருகே விளையாட அனுப்புவது இல்லை அவர்கள் காலை நசுக்கிக் கொள்வார்கள் அல்லது மழைக் காலங்களில் பூரான், தேள் போன்ற பூச்சிகள் அங்கு அடைக்கலம் ஆகியிருக்கும் அதனிடம் கடிபடக்கூடாது என்ற பாதுகாப்பு கருதி.. சில நேரங்களில் அம்மாவே தேள் கடி பட்டு அதே குழவியில் தேளைக் கொன்றுவிட்டு அதிலேயே மஞ்சள் அரைத்து பற்று போட்டுக் கொள்ளும் மல்டி பர்ப்பஸ் நிகழ்வுகளும் நடப்பதுண்டு..!

மஞ்சள் அரைத்து அம்மியை  செங்குத்தாக நிறுத்தி மஞ்சள் வழிக்கும் போது.. சிவப்பு நிறத்தில் மிளகாய் வழிக்கும் போது.. வெள்ளை நிறத்தில் தேங்காய் வழிக்கும் போது என அவை எல்லாம் எனக்கு கோவிலில் சாமி விக்ரகங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களை நினைவு படுத்தும். அம்மி கொத்துபவர் என்று ஒரு தொழிலும் இருந்தது.. அவரும் கிரைண்டர் காலம் வரை வந்து கொத்துவார்.. இப்போது விஞ்ஞானம் அந்த தொழிலையே கொத்தித் தூக்கிப் போய்விட்டது..!

எங்கோ சில கிராமங்களில் மனிதனின் கோபத்தால் சிலரின் தவறான மோகத்தால் அம்மி கொலைக் கருவியாக சிலர் தலையையும் அரைத்திருக்கிறது..ஆனால் அது அம்மியின் தவறல்ல இப்போதும் அம்மியை சம்பிரதாயங்களுக்கு மட்டும் திருமணங்களில் பயன் படுத்துகிறார்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்க.. நல்லவேளை இப்படி ஒரு சடங்காகவாவது அது இருக்கிறதே! என்று ஒரு சந்தோஷமே!

இருப்பினும் ஒன்று சொல்ல தோன்றுகிறது சம்பிரதாயமாக மட்டுமல்ல நாம் சத்தியமாகவும் #அம்மியை_மிதித்துவிட்டோம்

No comments:

Post a Comment