Thursday 9 October 2014

அப்பாவின் சட்டை..

#அப்பாவின்_சட்டை

காற்றில் அசைகிறது ஆணியில் மாட்டியிருந்த அப்பாவின் சட்டை சற்றே பழுப்பேறிய அச்சட்டையில் ஒளிந்திருக்கிறது பல கதைகள் அதன் வலப்பக்க பாக்கெட்டில் சிறு குறிப்பு நோட்டு ஒன்று, ஹீரோ பேனா.. சில நேரங்களில் பாக்கெட்டாகவும் சில நேரங்களில் அதுஇல்லாது உதிரியாகவும் சிகரெட்டுகள்..!

அதிலிருந்து உதிர்ந்த துகள்கள் சிதறிய பாக்குப் பொட்டலம் போல பாக்கெட்டின் அடியில் கொட்டியிருக்கும் சின்னவீடு போல அதற்கு நேர் பின்னே உள் பாக்கெட் சக்களத்தி ஒன்று.! அப்பாவின் பணமெல்லாம் எப்போதும் சின்ன வீட்டில் தான் இருக்கும்..! எத்தனை முறை அதில் பணம் எடுத்திருப்போம்..!

அப்போதெல்லாம் மெளன சாட்சியாக இருந்தும் அமைதி காத்தது அப்பாவை போலவே.! அவரது வியர்வை மணமும் அப்பாவின் சிகரெட் மணமும் கலந்து ஒரு கதம்ப மணத்தை எப்போதும் தந்து கொண்டிருக்கும்.. சில சமயங்களில் பணம் காணாமல் போன போது கூட பதறாத அப்பா பதறியிருக்கிறார்..!

அவரது பையிலுள்ள சிகரெட்டுகள் காணாமல் போன போது..! அதன் அர்த்தம் இப்போது விளங்குகிறது.. பெரியவன் சாப்பிட்டானாடி என்று கேட்டபடியே தான் அந்தச் சட்டையை அவிழ்ப்பார் வீடு திரும்பும் போதெல்லாம்.. வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும் போது அவசர வேலை வந்து விட்டால் அப்பா சட்டையை எடுத்துட்டு வா தம்பி என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்..!

விழுந்தடித்து ஓடி அதை எக்கி எடுத்து தந்ததும் அவசரமாக கை நுழைத்து மாட்டி கிளம்புவார்..செய்தி நல்லதாக இருந்தால் இந்தாடா தம்பி என நாலணா கொடுக்க மறந்ததில்லை.. சலவைக்கு போய் வரும் சட்டை கஞ்சியிடம் வாங்கிய கம்பீரத்தில் விறைப்பாக இருக்கும்..அப்போது அதில் ஒரு புது மணமும் கலந்திருக்கும்..! 

மின் வெட்டில் புழுக்கமான போது அந்த சட்டையைக் கையில் துணி விசிறியாக சுழற்றிக் கொண்டிருப்பார்.. நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்வதுபோல அப்பாவின் எல்லா மணங்களும் கலந்து ஒரு குளிர்க் காற்று சுகமாய் அருகில் படுத்திருக்கும் நமக்கும் வந்து போகும்.. !

அரைக்கைச் சட்டைதான் அணிவார் அவர் முழுக்கை சட்டை அணிந்த தருணம் அவரது திருமணத்தில் தான்.. மருளோடும் நாணத்தோடும் நிற்கும் அம்மாவுடன் கழுத்தில் மாலையோடு இளமை ததும்ப அவர் நிற்கும் புகைப்படம் அதைச் சொல்லும்.. எனக்கென்னவோ அரைக்கைதான் பிடிக்குது என்பார் அடிக்கடி..!

அப்பாவின் சட்டை அணிதல் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.. உமக்கு மட்டும் எப்படிய்யா இந்த ஒரே மாதிரி வெள்ளைச்சட்டை இத்தனை கம்பீரமாயிருக்கு என்பார்கள் அப்பாவின் நண்பர்கள்..கரீம் மாமா ஒருத்தர் தான் அவரது பிரத்யேக டைலர்.. அவரை தவிர்த்து யாரும் அவருக்கு சட்டை தைத்ததில்லை..!

வீட்டிற்கு பின்புறம் அப்பா இருந்தாலும் அவர் வீட்டில் தான் இருக்கிறார் என்பதை ஆணியில் மாட்டப்பட்டிருக்கும் அச்சட்டை கட்டியம் கூறும்.. இதோ இன்றும் ஆணியில் தான் மாட்டியிருக்கிறது அச்சட்டை..அப்பா தான் எதிரே இருந்து சிரித்துக் கொண்டுஇருக்கிறார்.....

எதிர் சுவற்றில் மாலையிடப்பட்டிருக்கும் போட்டோவிலிருந்து..!

1 comment:

  1. ஒரு சட்டையை வைத்துக் கொண்டு எத்தனை பின்னல்? அதுவும் அது அப்பாவின் சட்டையாய் இருப்பதினால் உணர்வு ததும்பும் அனுபவப் பகிர்தலாகி கடைசியில் நெகிழ்ச்சியில் நெகிழச் செய்கிறது. ஆணியில் தொங்கும் சட்டைக்கு அப்பாவின் இருப்பையே நிச்சயப்படுத்தும் உன்னதம் அற்புதம்.

    ReplyDelete