Sunday 3 May 2015

அமிர்தா தந்த வேலை..

க்கிக்கிக்கிங்..கீங்..கீங்..கீங்.. என்ற விநோதமான ஹாரன் மதுரையில் (கிருஷ்ணாபுரம் காலனி & மகாத்மா காந்தி நகர் பகுதிகளில்) ஒலித்தால் பெண்கள் வீட்டிலிருந்து பாத்திரத்தோடு ஓடி வருகிறார்கள்.அந்த ஒலியெழுப்பியது ஒரு சைக்கிள்!

முன்னொரு காலத்தில் வீட்டுக்கு பால்காரர் மணியடித்தபடி வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் அல்லது நினைவிலிருக்கும்.. அதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணியது போல் இந்த காலத்து வியாபாரம் அதே சைக்கிளில்.!

வீடு வீடாக இட்லி மாவு தருவது தான் இந்த வியாபாரம்.! வினோதமான ஒலியெழுப்பும் அந்த பிளாஸ்டிக் ஹாரன் கிளிப்பச்சை நிறத்தில் மதுரை மீனாட்சியம்மன் கையில் அமர்ந்த கிளி போல சைக்கிள் ஹேண்டில்பாரில் அமர்ந்திருக்கிறது (சைக்கிள் பெல் மாட்டும் இடத்தில்)

பின்னால் கேரியரில் பெரிய சில்வர் அண்டாவில் மாவு அதன் மேல் கயிறுகட்டி ஒரு மூடி.. சைக்கிளின் ஹேண்டில்பாரில் இடது பக்கம் சிறிய வாளியில் நீர் அதில் ஒரு குட்டி எவர்சில்வர் கப்.. ஓட்டலில் பட்டைசாதம் என தருவார்களே அந்த சைசில்.

ஒரு கப் 5 ரூபாய்.. தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம்.. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல இல்லத்தரசிகளுக்கும் அரிசி உளுந்து ஊறவைத்து அதை பவர்கட் வருவதற்குள் ஆட்டி எடுத்து... இப்படி சிரமப்படாமல் எளிதாக வீடு தேடி வரும் மாவு... மகிழ்வோடு வாங்கிக் கொள்வார்கள் அல்லவா.

காலமாற்றத்தில் மக்களது தேவை, அவர்களது தினசரி வேலைச் சுமை, நாட்டிலுள்ள மின் பற்றாக்குறை, வீட்டிலிருந்து மளிகைக் கடை போக விடாத சாமர்த்தியம், அதை விட அன்றாடம் நம் மக்களுக்கு தேவைப்படும் உணவு என இதற்கு ஐடியா பிடித்தவரை மார்க்கெட்டிங் சூரர் எனச் சொல்லலாம்.

காலை மாலை இரு வேளையும் வலம் வருகிறது இந்த மொபைல் இட்லி மாவு வியாபாரம்.. அந்த வியாபாரியிடம் கேட்டேன் நாள் ஒன்றுக்கு காலை மாலை இரு வேளையும் 600 ரூபாய் லாபமாக சம்பாதிக்கிறார்.. இவரது தம்பியும் ஒரு சைக்கிள் அவரது வருமானமும் 600 ரூபாய்..! 

ஆக நாள் ஒன்றுக்கு 1200 ரூபாய் மாதம் 36000 ரூபாய் வீட்டில் நான்கு கிரைண்டர்கள் வைத்திருக்கிறார் அரிசி மில்லில் மொத்தமாக அரிசி வாங்குகிறார்.. உளுந்தும் அப்படியே வீட்டில் பெண்கள் மாவாட்டி வைக்க இவர்கள் அதை எடுத்துப் போய் வியாபாரம் செய்கின்றனர்.

காலை 7மணி முதல் 9:30 வரையும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் தான் வேலை.. பிற நேரங்களில் வடை பஜ்ஜி போண்டா சுட்டு டீக்கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்கிறார்கள் அதில் வரும் வருமானம் தினசரி 1000 ரூபாய்..! என்ன கிரைண்டர் வச்சு இருக்கிங்க அண்ணே அமிர்தா கிரைண்டருங்க என்றார்..!

கூவிக்கூவி வெளிநாட்டு வேலைன்னு அழைக்கும் அமிர்தாவில் படிக்காமலேயே மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கும் அந்த உழைப்புக்கு ஒரு ராயல்சல்யூட்.. நாட்டில் தான் மக்களுக்கு நேர்மையாக பிழைக்க எவ்வளவு வழிகள்.. நேரமாச்சு வரட்டுங்களா கிளம்பி விட்டார்.. காதுகளில் ஒலிக்கிறது அந்த க்கிக்கிக்கிங்..கீங்..கீங்..கீங்.. என்னும் சத்தம்..

#உங்களுக்கும்_கேக்குதா

No comments:

Post a Comment