“நாஸா நாடி ஜோதிடர் நார்மன் டேவிட்”
யாரிந்த நார்மன் டேவிட்? இவர் ஒரு அமெரிக்கர்! ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் ‘ஆஸ்ட்ரோனட் சயின்ஸ்’ படித்த போது பண்டைய இந்திய வானவியல் ஆராய்ச்சி அறிஞர்களான ஆரியபட்டர், பாஸ்கரர் பற்றி படித்து வியந்தார்! எந்த ஒரு அறிவியல் சாதனமும் இல்லாமல் அவர்கள் ஆராய்ந்ததை..
இவர் ஆராய இந்தியா வந்து, காசி முதல் இராமேஸ்வரம் வரை சந்நியாசம்.. அடச்சே..’ சரித்திரத்தைத் தேடினார். அப்போது இந்திய ஜோதிடக் கலையைப் பற்றி அறிந்து வியந்து போனார். சூரிய முதலாளியை நவக்கிரகங்களும் நாய்குட்டி போல சுற்றி வரும் சூட்சுமத்தை இந்தியர்கள் கண்டுபிடித்ததை..
அறிந்து வியப்பின் உச்சிக்கே சென்று அங்கிருந்து தவறி விழப் பார்த்து அருகில் இருந்த சேஃப்டி கைப்பிடியைப் பிடித்து விழாமல் தப்பித்தார்.! உடனடியாக அமெரிக்காவில் தான் படித்துக் கொண்டிருந்த அறிவியல் படிப்பை அன்றைக்கே டிஸ்கண்டினியூ செய்து விட்டு இந்தியாவில் ஜோதிடம் படிக்க முடிவெடுத்தார்.
இந்தியாவில் நல்ல முறையில் ஜோதிடம் படிக்க வேண்டும் என்றால் அதனை நாலாந்திர தரத்தில் சொல்லித் தரும் கல்லூரிகள் நாலு திசையிலும் நானுறுக்கும் மேல் இருந்தது! நாலு பக்கமும் பரவியிருந்த நாலாந்திர கல்லூரிகளுக்கு நடுவில் நாளந்தா என்னும் நவரத்தினத்தைக் கண்டார்!
ஆஹா! கிரகங்களும் ஒன்பது! நவரத்தினங்களும் ஒன்பது! நாம் ஜோதிடம் படிக்க நாளந்தாவே சிறந்தது என்று அவருக்கு தோன்றியது. அன்று சுக்ல பட்ச அமாவாசை என்று பண்டிட் ஒருவர் குறித்து கொடுக்க.. நள்ளிரவே நாளந்தாவிற்கு போய் க்யூவில் நின்று அமிட்மிஷனுக்கு அப்ளிகேஷன் போட்டார்.
நாளந்தாவில் அவ்வாண்டின் ஜோதிடப் படிப்புக்கான இடம் ஒன்று கூட இல்லாமல் அட்மிஷன் முடிந்திருந்தது. ஆனால் நார்மன் சற்றும் மனம் தளராமல் அங்கே காத்திருந்தார். ஜோதிட படிப்புக்காக இடம் கிடைத்த ஒரு மாணவர் நாஸாவில் வேலை கிடைத்து சென்றுவிட்டார் என்ற செய்தி வந்தது!
விதியின் விளையாட்டை நினைத்து நார்மன் மெய் மட்டுமல்ல கை,வாய் எல்லாம் சிலிர்த்தார்! நாஸாவே வேண்டாம் என இந்தியா வந்த நார்மனுக்கு வழி விடுவது போல ஒருவனை இங்கிருந்து நாஸாவுக்கு அனுப்பியது ஜோதிடமே என்பது அறிந்து மீண்டும் அரை மணிநேரம் மெய் சிலிர்த்தார்!
நாளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பின்பு, அங்கு ஜோதிட ஆராய்சியில் நாலு இளங் கலை பட்டங்களும், நாலு முதுகலைப் பட்டங்களும், நாலு டாக்ட ரேட்டுகளும் பெற்ற பின்பு, இதுக்கு மேல் கொடுக்க எங்களிடம் பட்டங்கள் இல்லை என நா’லந்தா’ துணைவேந்தர் சொன்ன பிறகே வெளியே வந்தார்!
ஆனாலும் அவரது ஜோதிட தாகம் குறையவே இல்லை. கை ஜோதிடம், எண் ஜோதிடம், சுவடி ஜோதிடம், மோடி அடச்சே.. நாடி ஜோதிடம், எலி ஜோதிடம், கிளி ஜோதிடம் வரை தேடித் தேடிப் படித்தார். அப்பரசண்டியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2 வருடம் கிளி ஜோதிடம் பார்த்தார்!
வைத்தீஸ்வரன் கோவிலில் சுவடி ஜோதிடம் படித்த போது தான் மீண்டும் வியப்பின் உச்சிக்..ப்,(ரிபீட்டு) நாடி ஜோதிடத்திலும் நான்கைந்து பட்டங்களைப் பெற்று அந்த ஊரிலேயே “நாடி ஜோதிடர் நார்மன்” என போர்டு மாட்டி கடை போட்டு 9 ஆண்டுகள் அங்கு ஜோதிட சேவை புரிந்து உலகப் புகழடைந்தார்.
நார்மன் இந்தியாவில் படித்து உலகப் புகழ் அடைந்ததை கேள்விப் பட்டது நாஸா! நாஸாவிற்கு ஜோதிடத்தில் துளியும் நம்பிக்கையில்லை. இருந்தாலும் நார்மனை கண்காணிக்க சி.ஐ.ஏவை அனுப்பி உளவு பார்த்தது. இந்நிலையில் கல்பனா சாவ்லா மரணம் அமெரிக்கா ஏவிய ராக்கெட்டுகளின் தொடர் தோல்விகள் என பல்வேறு தோல்விகளை சந்தித்து வந்த நாஸா துவண்டது!
அதே நேரம் இந்தியா நாற்பது கால் பாய்ச்சலில் விண்வெளி ஆராய்ச்சியில் விரைவாக முன்னேறியது! ஒரே ராக்கெட்டில் 120 சாட்டிலைட்டுகளை அனுப்பும் அளவுக்கு திறமை வாய்ந்த நாடாக மாறியிருந்தது இந்தியா! இதற்குக் காரணம் நமது நார்மன் தான்! ஆம்! அவர் குறித்துக் கொடுத்த நேர காலப்படி ராக்கெட்டை அனுப்பி, அவர் குறித்துத் தந்த நல்ல நாட்களில்..
பலவிதமான விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டே இந்த 100 சதவீத வெற்றிகளை இந்தியா பெற்றது எனும் அரிய தகவல்களை அமெரிக்க வாதகோடரிகள் துப்பறிந்து தகவல் அனுப்பினர். நார்மனைப் பரிசோதிக்க, சில ப்ராஜக்டுகளுக்கு நேரம் குறித்துத்தர கேட்டது நாஸா! சோதிடம் பார்க்கும் என்னிடமே சோதனையா என்று தன் ஞானக் கண்ணால் அறிந்து..
அலட்சியப் புன்னகையுடன் அவர் குறித்து கொடுத்த நேரத்தில் நாஸா துவங்கிய எல்லா பரிசோதனைகளும் 100% சதவீத வெற்றியைப் பெற்றன! அகமகிழ்ந்தது நாஸா! உடனடியாக நாஸா நாடி ஜோதிடப் பிரிவு என்ற ஒரு பிரிவை தொடங்கி அதற்கு சேர்மனாக நார்மனை நியமிக்க முடிவெடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதலைக் கூட வாங்கி விட்டனர்.
அந்தோ பரிதாபம் இதை எல்லாம் அவர்கள் முடிவு செய்தது ஒரு ராகு காலத்தில்!! அவர்களுக்கு இதை குறித்துக் கொடுக்க தான் அங்கு நார்மன் போன்ற ஒரு ஜோதிட வல்லுநர் இல்லையே! ஆனால் நார்மன் இதை வேறு விதமாக சமாளித்தார்! தான் ஒரு மாபெரும் நாடி ஜோதிட ஆராய்ச்சிப் புதினம் எழுதும் பணியில் இருப்பதாகக் கூறி அந்தப் பதவியை மறுத்துவிட்டார்.
அப்படி என்ன புத்தகம் அது! தெரிந்தால் நீங்களும் வியப்பின் (அட கீழே விழுந்துடாதிங்கப்பா) முன் ஜென்மங்களில் இந்திய அறிஞர்கள் மற்றும் வரலாற்று தலைவர்கள் தங்களது மறுபிறப்பில் எங்கு பிறந்தார்கள் என்ற அரிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்! அந்த புத்தகத்தின் பெயர் THE 7 BIRTHS.. by NORMON
இந்திய நாட்டில் ஏழேழு ஜென்மங்கள் என்று நாம் சொல்வோம் அல்வா! அதே தான்! அவரது ஆராய்ச்சியில் பல்வேறு கொடும் உண்மைகள் வெளி வரத் துவங்கின! ஆம்! நமது ஆரிய பட்டர் தான் 7வது ஜென்மத்தில் அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிஸனாகப் பிறந்தார் என்று அறிந்தார். வீர சிவாஜி தான் மறு பிறப்பில் ஜார்ஜ் வாஷிங்டன்..
தெனாலி ராமனே மறுப்பிறப்பில் ஹென்றி ஃபோர்டு, வால்மீகி தான் ஐன்ஸ்டீன் போன்ற அரிய உணமைகளை கண்டு அறிந்தார். இவை யாவுமே டிரம்புக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்நிலையில் செங்கிஸ்கான் தான் இந்த ஜென்மத்தில் டிரம்ப்பாக பிறந்துள்ளார் என்னும் அப்பட்டமான உண்மையையும் கண்டறிந்தார்!
நார்மனுக்கு இந்தியாவில் உயர் பதவி தந்தவர் ஒரு கர்ம வீரர், வாழும் வீர சிவாஜி என மக்கள் போற்றும் தலை சிறந்தப் பிதாமகர் என்றறிந்து நாஸாவும் வியப்பின் உச்சி.. (யெஸ் அதே தான்) ஆகவே தான் டிரம்ப் உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார். திறமை வாய்ந்த ஒரு அமெரிக்கரை அழைத்து பதவி தந்த அந்த மாவீரரின் பண்பு உலகில் யாருக்கு வரும்! நார்மனுக்கு இவ்வளவு அழுத்தம் தந்தும்..
அவர் அமெரிக்காவுக்கு நேரம் குறித்து தருவதில் நேர்மையாக செயல்பட்டார். தற்போது கூட சுனிதா வில்லியம்ஸ் சென்ற பயணம், அதில் ஏற்பட்ட சிக்கல் அனைத்தையும் களைந்தது அய்யா நார்மன் அவர்களே! மீண்டும் அவரை நாஸாவுக்கு வந்து பொறுப்பேற்கச் சொல்லி தினமும் 30 நிமிடங்கள்..
நார்மன் காலில் விழுந்து கெஞ்சுகிறது அமெரிக்கா! ஆனால் நார்மன் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்தியா தான் எனக்கு வாய்ப்பளித்தது! என்னால் இனி அமெரிக்கா வரமுடியாது! இனி இந்தியா தான் எனது தேசம், இது எனக்கு ஞானமளித்த மெய்ஞான பூமி, தெய்வீகம் நிறைந்த திருநாடு.
அறநெறிகள் வழுவாது ஆன்மீக வழி செல்லும் அற்புத மாமனிதர் ஒருவரின் ஆசியுடன் இங்கு நான் வாழ்கிறேன். உங்கள் சலுகைக்காக நான் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் ஆம் பின்னால் இருந்து குத்தும் பழக்கம் பிதாமகர் வளர்ப்பிலேயே கிடையாது. எங்களுக்கு சண்டை வராது..
சண்டை போடவும் தெரியாது.. நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் மீறி எங்களிடம் திரும்பத் திரும்ப மோதினால் உங்கள் டிரம்ப் என்ற முன்ஜென்ம செங்கிஸ்கானிடம் போய்ச் சொல்லுங்கள் அணு ஆயுதங்களை நீங்கள் குவித்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் செய்வினை வைத்தால்..
அமெரிக்கா உலக வரைபடத்தில் இருக்காது! இந்த நார்மன் நாள் குறித்துவிட்டான் என்றால் அந்த அமெரிக்க கண்டமே கண்ட மேனிக்கு கண்டமாகும்.! கன்னா பின்னான்னு சின்னாபின்னமாகும் இது என் மாமியா டென்வர் டெய்ஸி மீது சத்தியம் என்று ஆக்ரோஷ ஆவேசத்துடன் தெரிவித்தார்.
❌ நார்மனின் இந்த அப்நார்மல் அறிவிப்பால் ஐநா & நாஸா மட்டுமின்றி பெண்டகனும் அரண்டு போய் உள்ளது!! ❌