Sunday 23 March 2014

இரவு...!

இரவு நீண்டு கொண்டிருக்கிறது... சில கொசுவர்த்திகளின் ஆயுள் முடிந்து பல கொசுக்களின் ஆயுளை காப்பாற்றிவிட்டது...

காமத்தில் மூழ்கிய நல்ல ஜோடி பரபரப்பில்லாமலும்  கள்ள ஜோடி பரபரப்பாகவும் செயலில் இருந்தார்கள்...

இரவுக்காவலர்கள் விளக்கணைக்கப்பட்ட தெருவோர டீக்கடையில் திருட்டுத் தனமாக தேனீர் அருந்தி கொண்டிருந்தனர்...

ரோந்து வந்த காவல் துறையினர் நல்லவர்களை துருவி துருவி விசாரித்துக் கொண்டு இருந்தனர், அந்த இடைவெளியில் தப்பித்து கொண்டிருந்தனர் திருடர்கள்...

நடைபாதை சாம்ராஜ்ய மன்னர்கள் விளம்பர பேனர் போர்வைகளில் தூங்கிக் கொண்டிருந்தனர்... அகாலவேளையில் வந்திறங்கிய பயணிகளை ஆட்டோ ஓட்டுனர்கள் அநியாய கட்டணம் கேட்டு அவர்கள் தூக்கத்தை போக்கிக் கொண்டிருந்தனர்..

பாலியல் தொழிலாளிகள் மிச்ச ஒப்பனைகளை கொட்டாவிகளில் உதிர்த்து கொண்டிருந்தனர்.. தெருவுக்குள் நுழையும் வாகனத்தை நாய் ஒன்று வீரமாக விரட்டி சென்று தோல்வியுடன் திரும்பி வெற்றிகரமாக குலைத்தது..

இனிப்பு வியாதி காரர்கள் சபித்து கொண்டே 4 வது முறையாக சிறுநீர் கழிக்கப்போனார்கள், அரசு மருத்துவமனைகளில் பிள்ளைகளை பெற்றவர்கள் திடுக்..திடுக்..என விழித்து பிள்ளை அங்கு தான் இருக்கிறதா என்று பார்த்து கொண்டனர்..

வெளி நாட்டில் வாழும் பிள்ளைகளிடமும் / கணவனிடமும் கண்ணில் நீர் வழிய பேசிக் கொண்டிருந்தனர் சிலர்.. சிறைச்சாலைகளில் நிம்மதியாக பல தண்டனை கைதிகள் உறங்க...உறக்கமில்லாமல் தவித்து கொண்டிருந்தனர் சில அரசியல் கைதிகள்....

நட்சத்திர ஓட்டலில் மது விருந்து முடித்தவர்களை அவர்களது டிரைவர்கள் கைத்தாங்கலாக அழைத்து செல்ல...வேறொரு புறத்தில் குடித்துவிட்டு போதையில் விழுந்து கிடந்த ஏழைக் குடிமகன்கள் எழுந்து வாந்தி எடுத்துவிட்டு மீண்டும் அதிலேயே படுத்து கொண்டனர்...

சினிமா கனவுகளில் சென்னை வந்த புது இயக்குனர்கள் பசிக்கு பானை தண்ணீர் குடித்துவிட்டு பாங்காக் படப்பிடிப்புக்கு காட்சி யோசித்து கொண்டிருந்தனர்..

அரசியல்வாதிகள் தூக்கத்தில் பிரச்சாரம் செய்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பது போல் கனவு கண்டு கொண்டிருந்தனர்...

இளையராஜாவின் பாடல்களில் லயித்து இரவு பயணத்திலிருந்தனர் ஓட்டுனர்கள் பலர்...

எங்காவது நகர்ப்புறத்தில் குழந்தைகளின் அழுகுரலும் கிராமப்புறத்தில் ஆந்தைகளின் குரலும். ஒலித்து கொண்டிருந்தன....

நான்கவது முறையாக மின்சாரம் தடைபட்ட எரிச்சலில் எழுந்து வந்து காற்றுக்காக ஜன்னல் திறந்தனர் பலர்...,

இரவுப் பணி முடித்த தொழிலாளர்கள் சோர்வுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்...திடீர் உடல் நலக்குறைவு பட்டோர் வீடுகளில் பரபரப்பாக எழுந்தது...

முகனூலில் நேரம் போவது தெரியாமல் உழைத்து கொண்டிருந்தனர் பலர்..

மீனவர் மீன் பிடிக்கவோ அல்லது தாங்கள் பிடிபடவோ ஆயுத்தமாகிக் கொண்டிருந்தனர்  மயானங்களில் மயான அமைதி..! வெட்டியானின் பீடியில் மட்டும் கொள்ளி தெ(எ)ரிந்தது...

நாளைக்கும் இது போல் தான் இரவா..? சொல்ல முடியாது..! ஒவ்வொரு நாளும் இரவு ஒவ்வொரு மாதிரி... இரவில் விழித்திருப்போருக்கு தான் அதன் அர்த்தம் புரியும்...

#ஏனெனில் இரவுகள் நீளமானவை...!!

No comments:

Post a Comment