Wednesday 26 October 2016

சேலத்து ஸ்வீட்டகம்


#சேலத்து_ஸ்வீட்டகம்

"சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்" என்று சிறுவயதில் படித்து இருப்போம்.. அதே சேலத்தில் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் தித்திக்கும் எங்கள் ஸ்வீட்டகம் பற்றிய பதிவு தான் இது.. அதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.. கொசுவர்த்தி சுருள ஸ்டார்ட் ... 1966 ஆம் ஆண்டில் என் தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ராஜகணபதி ஸ்வீட்ஸ் அப்போது சேலத்தில் மிகப் பிரபலம்..

என் அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டர்.. ஆரியபவன் க்ரூப் தான் அவரது குருகுலம்.. வட இந்தியர்களிடம் பயின்றதால் அப்பாவின் ஸ்வீட்டுகள் சேட்டுகளின் நற்குணங்களோடு தயாராகின.. அப்பா செய்யும் பால் அல்வா மிகப்பிரசித்தம்.. இன்றும் எமது பழைய வாடிக்கையாளர்கள் நினைவில் நீர் ஊற அதை வர்ணிப்பார்கள்.. மைசூர்பாக், சோன் அல்வா, பாதாம் அல்வா, குலாப்ஜாமூன், லட்டு, ஜாங்கிரி எல்லாம்..

எங்கள் கடையில் தனித்துவமாக இருக்கும்.. இன்றைய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா போல இல்லாது மேலும் கீழும் மஞ்சள் நடுவில் பொன்னிறத்தில் கடலை மாவும் நெய்யும் மணக்க வாயில் கரகர மொறு மொறுவெனக் கரையும் மைசூர்பாக்.. ஸ்பெஷல் ஜிலேபி பருப்பில் பக்குவமாக செய்து ஜீரா நன்கு ஊறிய ஜாங்கிரி.. மணக்க மணக்க பாதாம் அல்வா, கொழுக் மொழுக் குலாப்ஜாமூன்.. இப்படி..

எல்லா இனிப்புகள் மட்டுமல்ல வெங்காய பக்கோடா, பாம்பே மிக்சர், ஆந்திரா முறுக்கு, பட்டர் முறுக்கு, மோட்டா மிக்சர், அவல் மிக்சர், முந்திரி பக்கோடா, ரிப்பன் முறுக்கு என காரவகைகளும் தரமாக இருக்கும்.. அதுவும் அப்பா செய்யும் பக்கோடா எல்லாம் மன்னர் காலத்தில் செய்து கொடுத்திருந்தால் அந்த பக்கோடாகளுக்கு ஈடான பரிசாக 24 பர்கானாக்கள் அப்பாவுக்கு கிடைத்திருக்கலாம்.

தீபாவளிக்கு நீண்ட க்யூவில் நின்று ஸ்வீட் வாங்குவார்கள்.. அந்த இடமே பாலும் நெய்யும் மணக்க இனிய களேபரமாக இருக்கும்.. என் அம்மாவின் திடீர் மறைவு அப்பாவை புரட்டிப் போட காலம் எங்களை மதுரைக்கு விரட்டியது.. அப்பாவின் அந்த அற்புத கைப்பக்குவத்தை நான் கற்றுக் கொள்ளாமல் போனாலும்.. அந்தக்கலையை அவர் என் தம்பிக்கு தந்துவிட்டு போயிருக்கிறார் என்பதில் தான் பெருமிதமே.!

ப்ளாஷ் பேக் ஸ்டாப்... இன்று அக்டோபர் 2016...

தற்போது தம்பி அப்பா கோலோச்சிய அதே சேலத்தில் பட்டையை கிளப்பி வருகிறான்.. தம்பி செய்த பால் அல்வாவை சாப்பிட்ட ஒருவர் பழைய எம்.ஜி.ஆர் பட சகோதரர்கள் குடும்ப பாடலில் அடையாளம் தெரிந்து கொள்வதைப் போல தம்பி இது ராஜகணபதி ஸ்வீட் டேஸ்ட் ஆச்சே நீ அவரு மகனா என கண்டுபிடித்த விந்தையும் நடந்துருக்கு.. தற்போது சேலம் அப்ஸரா தியேட்டர் இறக்கம் யானை மண்டபத்தில் என் தம்பி தீபாவளி ஸ்வீட் காரங்கள் தயாரித்து விற்பனை செய்கிறார்.

கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளி சமயத்தில் அவர் இங்கு இந்த விற்பனையை நடத்துகிறார்.. சிறு அளவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய அவரது தயாரிப்பின் தரம் சுவை பெரிய நிறுவனங்களைக் கவர தங்கள் பணியாளர்களுக்கு தீபாவளி இனிப்புகள் தர இனிப்பை மொய்ப்பது போல் இவரை மொய்க்க நுற்றுக்கணக்கான பாக்கெட் ஆயிரக்கணக்கான பாக்கெட் என மெகா மெகா ஆர்டர்கள் பெற்றார்.

பெரிய அளவில் தயாரித்து நிறுவனங்களுக்கு வழங்கும் பிரத்யேக இனிப்புகளை  ஏன் பொது மக்களுக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற எண்ணம் உதிக்க கடந்த ஆண்டு முதல் அங்கேயே பொது மக்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.. மற்ற ஸ்வீட் கடைகளை விட விலையும் குறைவு.. அதிகமாக ஸ்வீட் காரங்கள் தயாரிப்பதால் தரமும் நியாயமான விலையும் சாத்தியமாகிறது.

அசார்ட்டட் சாதா ஸ்வீட்ஸ் கிலோ 200 ரூபாய்க்கும் ஸ்பெஷல் ஸ்வீட்டுகள் கிலோ 350 முதல் 700 ரூபாய் வரைக்கும் உள்ளது.. மிக்சர் மற்றும் கார வகைகள் கிலோ 200 முதல் 300 வரை உள்ளது.. அவரது ஸ்பெஷலாக ஃபைவ் டேஸ்ட் மைசூர்பாக் என ஐந்து சுவைகளில் மைசூர்பாக் சுவைக்கலாம் என்கிறார்... 

பாதாம் மைசூர்பாக், முந்திரி மைசூர்பாக், கேரட் மைசூர்பாக், மில்க் மைசூர்பாக், ஸ்பெஷல் மைசூர்பாக் என் பஞ்ச பாண்டவர்களாக மைசூர்பாக்குகளும் ஹார்லிக்ஸ்பர்பி பூஸ்ட் பர்பி போன்ற வகைகளும் இந்த தீபாவளிக்கு ஸ்பெஷல்.. தீபாவளி முன் தின இரவு வரை விற்பனை உண்டு.. எங்களது பாரம்பரிய சுவையை மீட்டெடுக்கும் இம் முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை..சேலம் மட்டுமல்ல அருகில்...

உள்ள ஊர்களிலும் உள்ளவர்களும் வந்து வாங்கலாம் பல்க் ஆர்டர்கள் என்றால் கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு ஆர்டர் தரலாம் எங்களது தரம் சுவை பற்றி ருசித்த நாவிலிருந்து வரும் அபிப்ராயங்கள் மிக முக்கியம் ப்ரீத்திக்கு எல்லாம் என்னால் காரண்டி தரமுடியாது ஆனால் என் தம்பி செய்யும் இனிப்புகளுக்கு நான் காரண்டி.. இன்றே வருக.. இனிமையைப் பெறுக.. இன்சொல் தருக.. நன்றி..

தொடர்புக்கு










No comments:

Post a Comment