Saturday 22 October 2016

வெண்மணற் கடற்கரை 3

அபாயச் சங்கொலி அதிர என்னவோ ஏதோ என பதறிப் போக நண்பர் சுந்தர் சொன்னார் பயப்படாதிங்க டிரைன் வரப்போகுது தூக்கி நிறுத்தி இருக்கும் பாலத்தை கீழே இறக்கப் போறாங்க அதுக்கு எச்சரிக்கை மணியாக தான் இந்த அபாயச்சங்கு என்றார். எங்கள் படகும் அந்தபாலத்தை நெருங்கி கரையை ஒட்டி இருந்த ஒரு பூங்கா அருகில் போய் நின்றது படகில் இருந்து இறங்கினோம்.

90 டிகிரியில் வான் நோக்கி செங்குத்தாக நிறுத்தியிருந்த கர்டர் பாலம் குறிப்பிட்ட இடைவெளியில் சைரன் ஒலிக்க ஒலிக்க கீழிறங்கிக் கொண்டிருந்தது.. பொதுவாக அமெரிக்காவில் இரயில் போக்குவரத்து என்பது சிட்டி ரயில் போக்குவரத்து மட்டுமே தவிர தொலைதூர போக்குவரத்து எல்லாம் கொஞ்சமே.. பாலம் மெல்ல மெல்ல இறங்கி தன் ரயில் பாதைக் காதலியை ஆசையுடன் அணைத்துக் கொண்டது.

ரயில் வருவதற்குள் எங்கள் படகு கிளம்ப அதை படம் எடுக்க முடியாமல் படகேறினோம்.. மீண்டும் படகுத் துறை அங்கிருந்த ரெஸ்டாரண்ட் ஒன்றில் மீன் பொரிக்கும் வாசனை நாசி வழியாக எங்களை தூண்டில் போட்டு இழுக்க கடைக்குள் நுழைந்தோம் ஆனால் அங்குள்ள கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கும் விலை சொன்னதால் ச்சீ..ச்சீ.. இந்த மீன் கசக்கும் என திரும்பினோம்.

இந்த இடத்தில் பெரும்பாலான கடைகள் மூடியே கிடந்தன.. காரணம் இது போல விலையினால் தான் என்றார்கள்.. இட வாடகையும் அதிகம் என்பதே முக்கிய காரணம் என்றார்கள்.. பெரும்பாலும் பூட்டிய கடைகளை தாண்டி மெயின் வீதிக்கு வந்தோம். பிரெஞ்சு அமைப்பிலான சாலைகள் கடைகள் விளக்கு கம்பங்கள் அனைவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பசி வயிற்றில் இருந்து நோட்டிபிகேஷன் அனுப்பியது.. நேரம் மாலை 6:40 மணி மதியம் 1 மணிக்கு சாப்பிட்டது ஏனெனில் இங்கு வருவதற்கு முன்பு தான் எவர் க்ளேட் முதலை ஆற்றுப் பயணம் சென்று திரும்பி இருந்தோம்.. கிட்டத்தட்ட 6 மணிநேரம்.. முன் பசிக்கு அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் இருக்கும் ஷாப்பிற்கு சென்று வாழைப் பழங்கள் கோக் மற்றும் கேக்குகள் வாங்கி பசியாறினோம்.

அந்த பங்கில் இருந்து வெளியேறும் போது மேற்கூரை திறக்கப்பட்ட ஆலிவ் பச்சை நிற போர்ஷ் கார் ஒன்று வந்தது அதில் நெடு நெடுவென ஒரு கறுப்பின வாலிபர் சுற்றிலும் 4 இளம் பெண்கள்.. அமெரிக்காவின் புகழ் பெற்ற பேஸ்பால் ப்ளேயராம்.. உல்லாச கப்பலுக்கு போகிறார் போலும்.. வாழ்க்கை வாழத்தான் அதிலும் இது போல சொகுசாக வாழ
வரம் வேண்டும் நாங்கள் விட்ட பெருமூச்சில் அந்தக் கார் மெல்ல 2 இஞ்ச் முன்னால் நகர்ந்தது.. கிளம்பினோம்.. பை பை லாடர்டேல்.!

No comments:

Post a Comment