Monday 24 October 2016

குலோப் ஜாமுன் புராணம்

குலோப் ஜாமுன் மிக்ஸ் என்பது வருவதற்கு முன்னால் ஸ்வீட் கடைகளில் மட்டுமே போய் வாங்க முடியும் இனிப்பு வகை குலோப் ஜாமூன்.. ஆனால் இன்று தீபாவளிக்கு பலர் வீடுகளில் இந்த இனிப்பை சர்வ சாதாரணமாக தயாரிக்கிறார்கள். ஆனால் இது இட்லின்னா சட்னியே நம்பாதுடா என்பது போல சில குலோப் ஜாமூன்களின் லட்சணத்தைப் பார்த்து நான் கண்ணீர் விட்டதுண்டு.

அதென்ன குலோப் ஜாமூன் லட்சணம்.? சொல்றேன்.. முதலில் குலோப் ஜாமூனுக்கு தேவை நிறம்.. பொன்னிற பிரவுன் கலர் பிறகு குஷ்புவுக்கும் ஹன்சிகா மோத்வானிக்கும் இடைப்பட்ட கொழுக் மொழுக் ஸ்பான்ஞ்ச் பதம்... ஸ்பூனில் கத்தி போல அறுத்தாலே இலகுவாக சிலைஸ் போல அறுபட வேண்டும் உள்ளே நெய் நிறத்தில் கொஞ்சம் மினு மினுப்பாக இருக்கவேண்டும்.. இதுதான் ஜாமூன்.!

சில ஜாமூன்களை விண்டால் உள்ளே வெள்ளை நிறம் தெரியும்.. சில வீடுகளில் சீடை போல கெட்டியாக செய்து விடுவார்கள் பாகில் ஊறினால் கூட சாஃப்ட் ஆக மாறாது.. சிலர் ஆப்பாயில் உடைந்தது போல ஜாமூனை சிதைத்து ஊற வைத்து இருப்பார்கள்.. இதெல்லாம் குலோப் ஜாமூனுக்கு நாம் செய்யும் பாவங்கள்.. சரியாக பிசைந்து ஜாமூன் செய்யத் தெரியாதவர்கள் அதை செய்யாமலிருப்பது நலம்.

அடுத்து சர்க்கரை பாகு... நன்னாரி சர்பத் பார்த்து இருக்கிறீர்களா அல்லது செக்கில் ஆட்டி வடிகட்டிய கடலை எண்ணை கலரில் தெளிவாக இருக்கவேண்டும்.. சில வீடுகளில் குலோப் ஜாமூன் மிக்ஸை சரியாக பிசையாததால் பொரித்த ஜாமூனை போட்டவுடன் அதன் பிசிறுகள் உதிர்ந்து துகள் துகளாக மிதக்கும்..ஆற்று நீரில் பாசி படர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி பாகில் பிசிறுகள் மிதக்கும்.

பாகின் நிறத்தை சிலர் அடர் பிரவுனுக்கு மாற்றி பாகை பலியாக்கி இருப்பார்கள்.. சில வீட்டு ஜாமூன்கள் கருகிப் போய் ஜீராவில் மிதப்பது குட்டையில் ஊறும் எருமைகளை நினைவூட்டும். குலோப் ஜாமூனை சாப்பிடுவதே ஒரு கலை  இதை ஸ்பூனால் நசித்து நசித்து ஜீராவில் குழப்பி உண்பது ஜாமூனை கற்பழிப்பதற்குச் சமம்.. இப்படி ஆட்களை கண்டால் எனக்கு அவர்களை ஓங்கி அறையலாம் போல தோன்றும். 

சிலர் இன்னும் பத்து விநாடியில் உலகமே அழிந்து விடும் என்பது போல ஜாமுனை அப்படியே முழுதாக முழுங்கிவிடுவார்கள். கொஞ்சம் இருங்கப்பா என்னா அவசரம்..! குலோப் ஜாமுனை சாப்பிடும் முறை இருக்கு... முதலில் இதை சூடான ஜீரா ஊற்றி சாப்பிட வேண்டும்.. கொதிக்க கொதிக்க சூடோ மிதமான சூடோ இன்றி நடுநிலையான சூடு.. கிண்ணத்தில் இஷ்டத்துக்கு நிறைய ஜீரா இருக்கக் கூடாது.!

இரண்டு குலோப் ஜாமூன்கள் உள்ள ஒரு கிண்ணம் என்றால் பாதி குலோப் ஜாமூன் மூழ்கி இருக்கும் அளவிற்கு ஜீரா இருப்பது நன்று.. ஜாமூனை சாப்பிடும் முன் ஸ்பூனின் பின் புறத்தை தட்டையாக ஜாமூன் மேல் வைத்து மென்மையாக மிக மென்மையாக அழுத்த வேண்டும் உடைத்து விடக் கூடாது.. கொழுக் மொழுக் குழந்தையைக் கண்டால் அதன் புஷ்டியான கன்னத்தை வலிக்காமல் கிள்ளுவோமே அதைப்போல.

இப்போது ஜாமூன் உடையாமல் அமுங்கினால் கடவுள் உங்களுக்கு நல்ல ஜாமூனை சாப்பிடும் பாக்கியத்தை தந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளவும்.. ஜீரா சூடாக இருந்தால் ஸ்பூனில் அதை அள்ளி அபிஷேகம் போல ஜாமூன் மேல் விடுவது சாலச் சிறந்தது.. மெதுவாக ஸ்பூனால் சிலைஸ் இடுங்கள் அத்தோடு கொஞ்சம் ஜீராவும் அள்ளி எடுங்கள் அப்படியே சூடு தணிய ஊதி ஊதி இதழ்களால் பற்றி...

உறிஞ்சுங்கள் நாவிற்குள் ஜீராவும் பற்களுக்கு இடையில் ஜாமூன் துண்டமும் அரைபட வேண்டும்..மெல்ல விழுங்குங்கள் ஒரு விள்ளலுக்கு 10 விநாடிகள் ரசித்து சாப்பிடுங்கள்.. ஆங்.. சொல்ல மறந்துட்டேன் ஜாமூனில் கொஞ்சம் பன்னீர் தெளித்து சாப்பிடுவது  இன்னும் சூப்பர் உங்கள் வாய்க்கு ஒரு மவுத் ஃபிரஷனர்..இதை சாப்பிட்ட பிறகு தரப்படும் முத்தங்கள் திரும்ப எதிர்பார்க்க வைக்கும்.

ஜாமூனை சிதைப்பது ஒரு பாவச்செயல் அதை இனி செய்யாதீர்கள் என் கவலை எல்லாம் குலோப் ஜாமூனை குளோப் ஜான், குலப்புஜான், என ஒழுங்காக அழைக்கத் தெரியாத இந்த சமூகத்தில் குலோப் ஜாமூனின் அருமை பெருமைகளை சொல்ல ஒரு மீட்பர் வேண்டும் அல்லவா.. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.. இதோ பன்னீர் தெளித்து ஜாமூன் சாப்பிடப் போகிறேன். வாங்களேன் என் கூட.. யார் கண்டா உங்கள் முத்தம் யாருக்கோ தேவைப்படலாம்.!

No comments:

Post a Comment