Saturday 22 October 2016

வெண்மணற் கடற்கரை 2

வெண்மணல் கடற்கரையில் பந்தாடும் வெண்புறாக்களை பார்ப்பதை விட அந்த குடியிருப்பில் என்ன சுவாரஸ்யம் இருந்து விட முடியும் என்றதற்கு அது ஒரு தனி உலகம் பிரத்யேக வீடுகள், கப்பல்கள், ரெஸ்ட்டாரெண்டுகள், கடைகள், இராமேஸ்வரம் போல கப்பலுக்காக தூக்கி இறக்கும் இரயில் பாலம் முக்கியமாக கோடிஸ்வரர்களின் கேர்ள் ஃபிரெண்டுகளை பிகினியில் பார்க்கலாம் என்றார் நண்பர்.. 

அட இனி இங்கே நிற்போமா... கிளம்பி கடலோரம் இருக்கும் அந்த பணக்காரர்கள் குடியிருப்பை நெருங்கினோம் கடலிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு அதை நகருக்குள் திருப்பிவிட்டு அதில் பல சொகுசுக் கப்பல்கள் நின்று கொண்டிருந்தன.. அருகிலேயே பெரிய பெரிய கெஸ்ட் ஹவுஸ்கள்.! உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களும், ஹாலிவுட் பிரபலங்களும், கோடிகளில் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களும் இங்கு வீடும் கப்பலும் வாங்கிப் போட்டு இருக்கிறார்கள் என்றார் நண்பர்

மும்பை ஜூஹு பீச், ஹைதராபாதின் பஞ்சாரா ஹில்ஸ், சென்னை போட் கிளப் போல அமெரிக்காவில் பெரும் பணக்காரர்கள் வீடு கட்டி இருக்கும் இடம் தான் போர்ட் லாடர்டேல் கடற்கரைப் பகுதி.. கடலில் கப்பலை நிறுத்தி வைக்க முடியாது என்பதால் கடல் நீரை கட்டியிருக்கும் பங்களா வாசலுக்கு கால்வாய் அமைத்து கொண்டு வந்து அவரவர் வீடுகளின் முன் கப்பலை பார்க் செய்திருந்தனர்.

இங்கெல்லாம் வீடுகள் 50 கோடியில் இருந்து தான் ஆரம்பம்.. இங்கு வீடு இருந்தால் கப்பல் நிச்சயம் இருக்கவேண்டும் ஒவ்வொரு கப்பலும் 10 கோடி முதல் என்றபோது நம்மால் பொறாமை தான் படமுடிந்தது. அங்கு இருக்கும் படகு சவாரிக்கு கட்டணம் இல்லை.. விலையில்லா பயணத்தை அந்த ஊர் அம்மாவாக வழங்கிய கோடீஸ்வரர்களுக்கு இந்நேரத்தில் அவர்கள் பொற்பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன். 

படகு கிளம்பியது சுற்றிலும் வானுயர்ந்த கட்டிடங்கள், உணவகங்கள், கடைகள் மெல்ல குடியிருப்பு பகுதிக்கு திரும்பியது படகு... ஆஹா.. அழகிய பூந்தோட்டம் முகப்பில் இருக்க பின்னணியில் சொகுசாக சிரித்துக் கொண்டிருந்தது பங்களாக்கள் சில பங்களாக்கள் பூட்டியிருக்க அதன் வாசலில் கப்பல்கள் அசைந்தாடி நின்று கொண்டிருந்தன... ஒரு நீல நிறகப்பல் விலை 15 கோடிகளாம்..!

அநேக வீட்டு கப்பல்கள் கடலுக்குள் சவாரி கிளம்பி இருந்தன.. ஒரு கப்பலின் மாடியில் அரை டிராயர் அணிந்து தன் பிகினி அணிந்த 5 காதலிகள் புடை சூழ அந்தவூர் மல்லையா ஒருவர் அமர்ந்து பியரை சீப்பிக் கொண்டிருந்தார்.. அவர்கள் எங்களைப் பார்த்து கையசைக்க பதிலுக்கு அசைத்தும் மனதிற்குள் அவரை வசைத்தும் மகிழ்ந்தோம். அப்போது திடீரென அபாயச் சங்கொலி  ஒன்று ஒலித்தது... அது..

(வரும்)

No comments:

Post a Comment