Thursday 1 May 2014

சினிமா - இனிமா

நமது தமிழ் சினிமாவின் சாகாவரம் பெற்ற காட்சிகள் சில..

க்ளைமாக்ஸ் நம்பர் - 1
அரசியல்வாதி வில்லன் என்றால் கட்டாயம் 50 சுமோக்கள் 20 லாரிகள் 4 பெரிய கண்ட்டெயினர்கள் பறக்கும்..இந்த வண்டிகளுக்கெல்லாம் டீசல் போட்டு ஆட்களுக்கு சம்பளம் போட்டால் பில்கேட்ஸ் கூட ஒரே ஆண்டில் திவாலாகி விடுவார்..! அத்தனை வண்டியும் ஹீரோ காரை ஒன்றும் செய்யாது ஆனால் எல்லா வண்டியையும் ஹீரோ கவிழ்த்து விடுவார்..ஆனால் கடைசியாக வில்லன் வண்டி ஒரு பொட்டல் வெளியில் போய் தான் நிற்கும்..! கண்டிப்பாக அங்கு அய்யனார் சிலை சூலாயுதம், வேலாயுதம் எல்லாம் நட்டு..

இருக்கும் க்ளைமாக்ஸ் சண்டையில் வில்லன் ஹீரோவை உருட்டுக்கட்டை, கடப்பாரை, சம்மட்டி, இரும்புகம்பி இவற்றால் அடித்து துவம்சம் செய்வார்.. கிறிஸ் கெயில் அடித்த சிக்ஸர் போல அவர் அடித்த அடியில் கண்டிப்பாக எலும்புகள் பல்டி அடித்து மல்டி ப்ராக்ஸர் ஆகியிருக்கும் ஆனால் ஹீரோ ரத்தம் சொட்ட சொட்ட மண்ணில் விழுந்து விடுவார்..ஹீரோ வாங்கிய அடிக்கு நகரத்தின் ஸ்டார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலே எழுந்து நிற்க ஆறுமாதம் ஆகும்..! இவ்வளவு அடி வாங்கிய..

ஆள் கோமாவுக்கு கூட போகலாம் ஆனால் கதாநாயகி அப்போதும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று நம்பும் காங்கிரஸ் தலைவர்கள் போல் அதீத நம்பிக்கையுடன் ஹீரோ பெயரை சொல்லி கத்துவார்.. கதாநாயகியின் அவலக்குரல் கேட்டதும் பட்டென்று கண் விழிப்பார்..(விசில் பறக்கும்) எழுந்து வந்து வில்லன் எப்படி எல்லாம் அடித்தாரோ அதே போல் ஹீரோ வில்லனை திருப்பி அடிப்பார்.. இந்த நேரத்தில்..

வானம் இருண்டு மின்னல் வெட்டி இடி இடித்து மழை பெய்யும்.. ஆனால் அதே அடியை வாங்கும் வில்லன் மயங்கிவிடுவார் அல்லது இறந்து விடுவார்... அடி வாங்காது முழு பலத்துடன் வில்லனிடம் அடி வாங்கிய ஹீரோ மட்டும் எழுந்து வருவாராம்..! ஆனால் அடி வாங்கி பலவீனமாக எழுந்து வந்து ஹீரோ அடிக்கும் அடியில் வில்லன் எழுந்து வர மாட்டாராம்..!  (என்னய்யா சொல்ல வரீங்க) இதில் வெட்ட வரும் அருவாளை கையில் தடுப்பது கடப்பாரையை வளைப்பது போன்ற லாஜிக் இல்லா சிரிப்பு மேஜிக்குகள் நடக்கும்.!

க்ளைமாக்ஸ் நம்பர் - 2

தீவிரவாத கும்பல் தலைவன் தான் வில்லன் என்றால் மிகப்பெரிய மலைகளுக்கு நடுவே தான் அவர் இருப்பிடம் இருக்கும்.. வாட்ச் டவரில் எல்லாம் ஆட்கள் இருப்பார்கள்.. ஆனால் இவர்களை பின்னால் வந்து வாயை பொத்தி அவர்கள் தலையை சுளுக்கு எடுப்பது போல ஹீரோ திருப்புவார் அவர்களும் வெறித்த பார்வையோடு அறுந்து விழுந்த கரண்ட் கம்பி போல கீழே விழுவார்கள்..ஹீரோ கையில் ஒரு ரிவால்வர் இருக்கும்.. 

சத்தியமாக அதில் ஆறு குண்டுகள் தான் ஆனால் அந்த ரீல் முழுவதும் அவர் சுட்டுக் கொண்டே இருப்பார்..! (அதான் அதுல ரீல் இருக்கேன்னு சொல்றிங்களா.! அதுவும் சரிதான்) அவர் சுடும் ஒற்றை குண்டு உயரத்தில் இருந்த ஆட்களை எல்லாம் வீழ்த்தும் ஆனால் வில்லன் ஆட்கள் கையில் மெஷின் கன் வைத்து சுடுவார்கள் கரெக்டா போலீஸ் துப்பாக்கி சூடு மாதிரி கால்கிட்ட தான் சுடுவாங்க ஹீரோ ஓடியே தப்பிப்பார்..

உசேன் போல்ட் ஓடியிருந்தா கூட கட்டாயம் 10 குண்டுகள் பட்டிருக்கும் ஆனா ஹீரோவுக்கு ஒரு குண்டு கூட மேல படாது .. அப்படி ஹீரோ மேல குண்டு பட்டா கை புஜத்தில் தான் குண்டு படும் சுட்டவன் டாக்டருக்கு படிச்சவன் போல ஊசி போட்ட மாதிரி அங்க தான் சுடுவான்... இதைவிட காமெடி வீசியெறியும் வெடிகுண்டை ஜாண்ட்டி ரோட்ஸ் மாதிரி கேட்ச் பிடிச்சி திருப்பி வீசுவாங்க அதை இதுவரை எந்த வில்லனும் 

திருப்பி அதை பிடிச்சதே இல்லை.. ஒரு வேளை அவங்களுக்கு கோச் நம்ம இந்தியாக்காராரா இருந்து இருக்கலாம்..! கடைசியில வில்லன் ஹெலிகாப்டர்ல ஏறி கிளம்ப ஹீரோ பைக் அல்லது குதிரையில போயோ அல்லது தாவி தாவி ஓடியோ ஹெலிகாப்டரோட அடிப்பக்க கம்பிய பாய்ஞ்சு பிடிச்சுடுவாரு.. அந்த கம்பியே ஹீரோ தொங்கதான் அங்க வச்சு இருக்காங்களான்னு ஏரோநாட்டிக்ஸ் படிச்ச யாராவது சொன்னா புண்ணியமா போகும்..!

பார்ட்டி சாங்ஸ் - 1

கதாநாயகி அல்லது இரண்டாவது கதாநாயகி அல்லது அவர்களது தோழி இவங்க யாருக்காவது பிறந்தநாள் பார்ட்டி நடக்கும்... கட்டாயம் அங்கே ஒரு பியானோ இருக்கும்..! நம்ம ஹீரோ வந்தவுடனே அங்க போயி வாசிப்பார்.. ஆனால் படத்துல அவர் மெக்கானிக்.. மெக்கானிக்குக்கு எப்படி பியானோ வாசிக்கத் தெரியும்ன்னு அறிவா யோசிக்கக் கூடாது அவரு மெக்கானிக்கு அப்படிங்கறதாலே எல்லா மெக்கானிசமும் தெரிஞ்சு இருக்கலாம் இல்லியா..! இப்படித்தான் நினைக்கணும்.. ஏன் சில நேரங்களில்..

சாக்ஸபோன், வயலின், கிடார் இதெல்லாம் கூட ஹீரோ வாசிக்கலாம்..இளையராஜா, ரஹ்மானுக்கே இதெல்லாம் வாசிக்க தெரியுமான்னு தெரியலை..ஆனா இது வரை ஹீரோ ஒரு நாதஸ்வரமோ, ஒரு மிருதங்கமோ, ஒரு ஜால்ராவோ வாசிக்கிறா மாதிரி எந்த இயக்குனரும் வித்யாசமா யோசிக்கலை.. பார்ட்டி நடக்கும் ஹாலில் கதாநாயகியின் அப்பா ஹீரோ பாக்கும் போது விறைப்பாவும் அவர் பாக்காத போது சிரிச்சா மாதிரியும் அவரு மூஞ்சியை வச்சுக்குவாரு.. இவன் யாரு எதுக்கு நம்ம பொண்ணு பிறந்த நாளைக்கு வந்து 

பாடுறான் இதெல்லாம் அவரு கேக்கவே மாட்டாரு..பார்ட்டியில் எல்லாரும் காஸ்ட்லியான கிப்ட் தருவாங்க ஹீரோ ஒரு ரோஜா செடியோ ஒத்தை ரோஜாவோ தந்து (செண்ட்டிமெண்ட்டாம்) போனஸா ஒரு அபத்த வசனமும் பேசுவாரு "இந்த ரோஜா அழகு தான் ஆனா அந்த முள்ளு தான் அதை பாதுகாக்குது நான் அந்த முள்ளு நீ தான் அந்த ரோஜா" ஹீரோயினும் கண்ணீர் மல்க (நமக்கும் கண்ணீர் வரும்) அதை வாங்கிக்குவாரு..இதுல 2வது கதாநாயகி இருந்தா அவங்க மட்டும் ஹீரோ ஹீரோயினை சைட் அடிக்கிற இந்த காட்சிய பாத்துடுவாங்க அப்புறம் அதிர்ச்சி அடைவாங்க..வேகமா ஓடிப்போயி பெட்டுல விழுந்து அழுவாங்க..! (நாமும்தான்)

பார்ட்டி சாங்ஸ் - 2

பணக்கார அப்பா அனேகமா அவர் தான் வில்லன் தன் ஒரே செல்ல மகளுக்கு தன் பார்ட்னரோட மகனை மாப்பிள்ளையா பாத்து நிச்சயம் பண்ணியிருப்பாரு அனேகமா இவரும் ஒரு வில்லன்.. (நான் கேக்குறேன் அந்த பார்ட்னருக்கும் பெண்குழந்தை இருந்தா என்ன பண்ணி இருப்பாங்க..!)அதை மகள் பிறந்தநாள் பார்ட்டியில சர்ப்ரைசா சொல்ல நினைச்சு இருப்பாரு ஹீரோயினும் இதே பார்ட்டியில தான் தன்

காதலனை அப்பா கிட்ட அறிமுகப் படுத்தலாம்னு நினைச்சு அவரை வரச் சொல்லி இருப்பாங்க.. ஹீரோவும் வருவாரு..இந்த பார்ட்டி வாஸ்துப்படி ஒரு பெரிய புல்வெளில சீரியல் செட் விளக்கெல்லாம் மாட்டி தான் நடக்கும்.. சர்வர்கள் கையில் டிரே ஏந்தி குறுக்கே மறுக்கே நடந்து கொண்டிருப்பார்கள் கேக் வெட்ட போகும்போது "டியர் பிரண்ட்ஸ்ன்னு"ஓசியில சரக்கடிக்க வந்தவங்களை எல்லாம் கூப்புட்டு.. 

விஷயத்தை சொல்வாரு.. ஹீரோ ஹீரோயின் இருவரும் ஷாக்காவாங்க..!எல்லாரும் கைத்தட்டுவாங்க ஹீரோயின் இது எனக்கு தெரியாதுன்றா மாதிரி ஹீரோவை பாக்க அவரும் கண்ணாலேயே புரிஞ்சுகிட்டேன்ன்னு ஜாடை காட்டுவது.. இப்படியே பேசிக்கிட்டு இருந்தா சரக்கு அடிக்க முடியாதுன்னு பொறுக்க மாட்டாத ஒருத்தர் இந்த சந்தோசத்தை கொண்டாட யாராவது பாடலாமேன்னு ஒரு..

பிட்டப் போட கரெக்டா மைக்கு நம்ம ஹீரோ கைக்கு வரும்.. எல்லா சோகத்தையும் எலுமிச்சம் பழமா புழிஞ்சு ஹீரோ பாட பார்ட்டியில எல்லாம் ஜோடி ஜோடியா ஆடுவாங்க.. அப்ப நிச்சயம் பண்ண மாப்பிள்ளை ஹீரோயினை ஆடக் கூப்பிடுவாரு.. (ஏய்யா ஹீரோ நீதானே பாடுற யாரும் ஆட முடியாத படி கஷ்டமா பாடலாமில்ல) ஹீரோயினும் அம்மாவை கண்ட அமைச்சர் போல பம்மி பம்மி போய் அவருடன் ஆடுவார் 

கண்களில் நீர் துளிக்கும்.. ஹீரோ அந்த பாட்டுல இவதான் என் காதலி காத்திருந்தவன் நானு கொண்டு போறது நீ அப்படின்னு அர்த்தம் வர்ற மாதிரி எல்லாம் பாடுவாரு படம் பாக்குற பச்ச புள்ளைக்கு கூட இது தெரியும்.. ஆனா பார்ட்டியில இது ஹீரோ ஹீரோயின் இருவருக்கு மட்டும் தான் புரியும்..! அமெரிக்க ரிடன் மாப்பிள்ளைக்கு கூட தெரியாது...அது சரி எல்லோரும் மது மயக்கத்தில் இருக்க எப்படி புரியும் என்கிறீர்களா அதுவும் சரிதான்..!

சினிமா - இனிமா (PART 2)

பில்டப் வசனங்கள்..

இது பெரிய ஹீரோ படங்களில் மட்டுமே இருக்கும்.. இந்த வசனத்தை ஹீரோவோட அப்பா அம்மாவோ அல்லது அவரது வளர்ப்பு தந்தையோ இல்ல அந்த ஊர் பெரியவரோ பேசுறா மாதிரி வரும்... அப்படி பேசுறவரு முன்னாள் கதாநாயகனா இருந்து தற்போதைய குணச்சித்திர நடிகரா இருப்பது இன்னும் பெட்டர்.. 

வில்லனுக்கு முன்னாடியோ அல்லது அவனது ஆட்களுக்கு மத்தியிலோ 

"அவன் ஒண்ணும் வீட்டுல இருக்குற எலி இல்லடா.. காட்டுல இருக்குற புலி"  

"அவன் யாரு தெரியுமாடா...! நீங்க செஞ்சா தகராறு.. அவன் செஞ்சா அது வரலாறு" 

"நிச்சயமா அவன் வருவாண்டா இதுக்கெல்லாம் லட்சியமா பதில் தருவாண்டா"

இந்த டயலாக்கை எல்லாம் நல்லா உத்து கவனிச்சா இது ஹீரோ பேசுற பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கும் பேசுறது ஒரு பெருசு அப்படிங்கறதால இது பில்டப் வகையில சேரும்..! இதுல பெரிய விஷயம் இதை அவர் பேசப்பேச ஹீரோவை வித விதமான ஆங்கிளில் 48 பிரேமில் ஸ்லோமோஷனாக நடந்து வர விட்டு.. தலையை கோதவிட்டு.. 

கூலிங்கிளாசை மாட்டவிட்டு.. காட்டுவார்கள்.. கட்டாயம் பின்னணி இசையாக காது கிழியும்படி கொம்பு ஊதும் சத்தமோ கேரளா ஜெண்டா மேளமோ ஒலிக்கும்..வந்த பின்னாடி இதே மாதிரி அவரு பஞ்ச் பேசுவாரு.. என்ன நமக்கு தான் காது பஞ்சராகும்..(அதான் ஆயிடுச்சேன்றிங்களா)

ஏலம் எடுக்க வாறீகளா..

அதாவது ஏலம் எடுக்கும் காட்சி.. இதுல ஹீரோ ஏலம் எடுக்கறாருன்னா ஏலம் எடுக்குற நேரத்துக்குள்ள அவரை அங்க வரவிடாம வழியில தடுத்து நிறுத்து சண்டையெல்லாம் நடக்கும்..ஆனா ஹீரோ சார்பா ஒருத்தரு அங்க ஏற்கனவே இருப்பாரு..அது கட்டாயம் அந்த பட காமெடியனாக இருப்பாரு..ஏல அதிகாரிகள் அடிக்கடி வாட்ச்சை பார்க்க.. 

கட் பண்ணா அங்க ஹீரோ சண்டை போட மாறி மாறி இத காமிச்சது பாத்து அலுத்து போயி வில்லனே ஆபிசர்சை பாத்து  என்னா சார் நேரம் முடிய இன்ன்னும் 10 வினாடி தானே இருக்கு ஏலத்தை எனக்கே கொடுங்கன்னு கேக்க.. காமெடியன் அந்த 10 வினாடி முடியணும்ன்னு சொல்ல ஏல அதிகாரிங்க வாட்சை பாத்துகிட்டே மணியை எடுக்கப் போக 

1..2..3..4..5..6..7..8..9.. கரெக்டா 9 வினாடி 60வது மைக்ரோசெகண்டில் ஹீரோ எண்ட் ரி ஆகி மீதி 40 மைக்ரோ செகண்டில் கையெழுத்து போட ஏலம் அவருக்கு போக கரெக்டா காமிரா சரியான நேரத்தை காட்டும் கடிகாரத்தை ப்ரேமில் காட்டும்.. இதுல சில படத்துல 2 லட்ச ரூபா இடத்தை வில்லன் 10 லட்சம்ன்னு கேக்க ஏலம் எடுக்க வந்தவங்க..

வாயடைச்சு போக ஏல அதிகாரி 10 லட்சம் ஒரு தரம்... 10 லட்சம் ரெண்டுதரம்.. எனச்சொல்ல ஆரம்பிக்க இந்த ரெண்டுதரம் சொன்னவுடனே... ஒரு குரல் "இருபது லட்சம்" என்று வர அனைவரும் திரும்பிப் பார்க்க ஹீரோ ஆய்..ஊய்..ஹேய் .. ஹேய்...அப்படின்னு பேக்கிரவுண்ட் மியூசிக்கில் நடந்துவந்து ஏலத்தை வெல்வார்.. 

என்னாங்க இது 2 லட்சம் இடத்தை 20 லட்சம் கொடுத்து வாங்கிட்டிங்க அப்படின்னு காமெடியன் கேக்க அது என் பூர்விக வீடு அதான் பணம் பிரச்சனை இல்லை என்பார்.. ஆனா இவரே இன்னொரு படத்தில் வில்லன் ஏலம் எடுக்கும் போது அதிக விலைக்கு ஏற்றிவிட்டு விட்டு ஒரு கட்டத்தில் ஏலம் கேட்பதை நிறுத்திவிடுவார்..!

ஆனா அப்ப வில்லனுக்கு நஷ்டம்ன்னு காட்டுவாங்க.. ஒரே கஷ்டமப்பா...

No comments:

Post a Comment