Saturday 31 May 2014

டிவிட்டுறள்கள்...!

பதிவிட்ட டிவிட்டுறள்கள்....

#டிவிட்டுறள் - 1

குடி இனிது புகை இனிது என்பர் குடிமக்கள்

வெகுகாலம் வாழா தவர்.

#டிவிட்டுறள் - 2

கிணற்றில் விழுந்த கல்லைப்போல் மூழ்கடிக்கும்

சினத்தில் உதிர்த்த சொல்.

#டிவிட்டுறள் - 3

முதுகுக்கு பின்நின்று பேசுதல் எந்நாளும்

கொலையினும் கொடிய செயல்.

#டிவிட்டுறள் - 4

ஆத்திரத்தில் எடுக்கும் முடிவது;தந்திடுமே

ஆறாத புண்ணின் வலி.

#டிவிட்டுறள் - 5

நட்புக்கு கடனளித்து செய்கின்ற உதவி

அன்றே மறத்தல் நலம்.

#டிவிட்டுறள் - 6

முன்சென்று கேட்கும் மன்னிப்பு உன்வாழ்வில்

பின்னின்று உயர்த்தி விடும்.

 #டிவிட்டுறள் - 7

பிறர்க்குதவும் நற்குணமும் பெருஞ்செல்வம்;அச்செல்வம்

மானிடர்க்கு எல்லாம் தேவை.

 #டிவிட்டுறள் - 8

பெருங் கள்வனையும் நம்பலாம்; நம்பாதே

துரோகம் செய்த நட்பை.

#டிவிட்டுறள் - 9

கோபம் அடக்கக் கற்பவர் தம்வாழ்வில்

சோகம் விலகிடுமே சிறப்பு.

#டிவிட்டுறள் - 10

விட்டுக் கொடுத்து வாழ்கின்ற தெப்போதும்

கெட்டழிந்து போவ தில்லை.

#டிவிட்டுறள் - 11

பிறர்பற்றி பழிபேசும் குணமிருப்பின்;வெறுத்திடுவாள்

பெற்றத் தாயும் உனை.

#டிவிட்டுறள் - 12

முகத்தில் புன்னகையும் அகத்தில் நற்குணமும்

நிகரில்லா செல்வம் உனக்கு.

#டிவிட்டுறள் - 13

சோம்பலில் தள்ளிவைத்த பணிகள் எப்போதும்

சோகத்தை அள்ளித் தரும்.

#டிவிட்டுறள் - 14

பொருத்தம் இல்லா வார்த்தை உதிர்ப்பின் 

வருத்தம் வாசல் வரும்.

#டிவிட்டுறள் - 15

போதையில் செலுத்திடும் வாகனம்;விரைந்து

சேர்த்திடும் இறைவ னடிக்கு.

#டிவிட்டுறள் -16

பூக்கும் காய்க்கும் செடிகளில் எந்நாளும்

பூக்காதே வெள்ளிப் பணம்.

#டிவிட்டுறள் - 17

சீட்பெல்ட் அணியாது செல்கின்ற பயணம் 

சீட்தருமே எமன் உலகிற்கு.

#டிவிட்டுறள் - 18

பொன்சேமிக்க மறப்பினும் குற்றமில்லை பெருங்குற்றம்

மின்சேமிக்க மறப்பது இன்று.

 #டிவிட்டுறள் - 19

உலகம் தகித்து கொதிப்பது தடுக்க 

மரங்கள் வளர்ப்ப தறிவு.

#டிவிட்டுறள் - 20

நன்னூல்கள் படிக்காது வாழ்கின்ற வாழ்வு

நல்லறிவை மறைத்து விடும்.

#டிவிட்டுறள் - 21

பல்சரோ ஹோண்டாவோ உனதெனினும்;எந்நாளும்

ஹெல்மெட்டே காக்கும் தலை.

#டிவிட்டுறள் - 22

முதலை வாய்க்குள் சென்றார்போல் திரும்பாதே

உறவிற்கு கொடுத்த கடன்.

 #டிவிட்டுறள் - 23

மின்சிக்கனம் என்றும் உடனிருந்தால் மின்வெட்டை

காணலாம் கல் வெட்டில்.

#டிவிட்டுறள் - 24.

சீரியல்பேய் பிடித்தாட்டும் மாந்தர் தம்வாழ்வு

சீரழிந்து சிதறி விடும்.

#டிவிட்டுறள் - 25

பிறர்க்கு கண்மூடி ஜாமீனேற்பின்; நமக்கு

ஜாமீன் நாளை வரும்.

#டிவிட்டுறள் - 26

எல்லா விளக்கும் விளக்கல்ல சிறப்பான

சி.எப்.எல் விளக்கே விளக்கு.

#டிவிட்டுறள் - 27

மரம் வளர்ப்போர் அனைவரும் எதிர்கால

நலம் வளர்ப்போரெனச் சொல்.

#டிவிட்டுறள் - 28

மனைவி சொல்லே நலமென்பார்;அவர்வாழ்வு

சிறக்குமே சிக்கல் இன்றி.

#டிவிட்டுறள் - 29

சிக்னலை மதியாதோர் வாகனம் என்றென்றும்

சிக்கலை சேர்த்து விடும்.

#டிவிட்டுறள் - 30

ஏழையின் பசிதீர்க்க பேசுகின்ற பொய்யுனக்கு

ஏற்றத்தை தந்து விடும்.

#டிவிட்டுறள் - 31

முறையின்றி முளைத்திட்ட முகநூல் நட்பு

துயரத்தில் முடிந்து விடும்.

#டிவிட்டுறள் - 32

வெட்டிச் சாய்த்த மரங்கள் வளமையை

கட்டிப் போட்டு விடும்.

#டிவிட்டுறள் - 33

தாய்மொழியில் படிப்பதன் சிறப்பு எந்நாளும்

தாய்ப்பால் குடிப்பதற்கு இணை.

#டிவிட்டுறள் - 34

சிரித்த முகத்தோடு பழகுவோர் என்றும்

சிறப்பாய் வாழ்வது உறுதி.

#டிவிட்டுறள் - 35

மிஸ்டுகால் தருவது லவ்வரெனில்; விரைந்து

டாப்-அப் செய்யெனப் பொருள்.

#டிவிட்டுறள் - 36

மூத்தோர் சொல்கேட்டு வாழ்கின்ற வாழ்க்கை

முன்னேற்றம் தருமே நமக்கு.

#டிவிட்டுறள் - 37

எறியும் பாலிதீன் குப்பைகள் எரித்திடும்

நிலத்தடி மண் வளத்தை.

#டிவிட்டுறள் - 38

மழையின்றி உழவின்றி உலகம் வாடுதல்

மரங்களை அழிப்பதன் பரிசு.

#டிவிட்டுறள் - 39

உள்ளுக்குள் விஷம் வைத்து;நாவினிக்க

பேசுவார் நட்பை விலக்கு.

#டிவிட்டுறள் - 40

சம்சாரமிழந்த முதியவன் போல் தள்ளாடும்

மின்சாரம் சேமிக்காதோர் வாழ்வு.

#டிவிட்டுறள் - 41

எரிபொருள் சிக்கனம் மறந்தால்;எதிர்காலம்

ஏமாற்றம் தந்து விடும்.

#டிவிட்டுறள் - 42

சாலைவிதி எல்லாம் மதித்திடுவோர் தலைவிதி

இன்பத்தால் எழுதப் படும்.

#டிவிட்டுறள் - 43

ஐந்தறிவு என்பது யாதெனில் ; ஒருவன்

சினத்தோடு செய்யும் செயல்.

#டிவிட்டுறள் - 44

தன்மொழி நேசிக்கா மனிதன் இவ்வுலகில்

கண்விழி அற்றவன் ஆவான்.

#டிவிட்டுறள் - 45

நம்மொழி நலமாய் வெகுகாலம் வாழ்ந்திட

அம்மொழியில் பேசுவ தழகு.

#டிவிட்டுறள் - 46

அலுவலில் உறங்கும் ஒருவன் எந்நாளும்

அடைவதில்லை வெற்றிப் படி.

#டிவிட்டுறள் - 47

சிக்னலை மதியாதோர் வாகனம் என்றும்

சிக்கலை சேர்த்து விடும்.

#டிவிட்டுறள் - 48 

புத்தகம் படிப்பது பரவசம் அஃதென்றும்

காட்டிடுமே புது உலகு.

#டிவிட்டுறள் - 49

தேவையின்றி பயன்படுத்தும் மின்சாரம் குறைப்பது

தேனாய் இனித்து விடும்.

#டிவிட்டுறள் - 50

மொழியே தன்னுயிரென வாழ்வோர் என்றென்றும்

இழிவாய் போனது இல்லை.

#டிவிட்டுறள் - 51

பொறாமைக் கண்கொண்டு பார்த்தால் நல்லவை

நான்கும் தெரியா துனக்கு.

#டிவிட்டுறள் - 52

அஞ்சாதவர்க்கு சாவென்பது ஓர்முறை;அஞ்சுவோர்

வாழ்வில் தினந்தினம் சாவு.

#டிவிட்டுறள் - 53

பன்மொழி அறிஞனாய் இருந்தாலும் பழித்திடுவார்

தாய்மொழி தெரியா தவனை.

#டிவிட்டுறள் - 54

பிள்ளையை போற்றி வளர்ப்பதும் மரங்களை

நீருற்றி வளர்ப்பதும் ஒன்று.

#டிவிட்டுறள் - 55

தாய்மொழியில் பிழையாய் எழுதுவது என்றும்

பெற்றத்தாயை உதைப்பது போல்.

#டிவிட்டுறள் - 56

வீழுகின்ற மரங்கள் வேண்டாம்; வேண்டுமே

விழுதுகள் வீழுகின்ற மரம்.

#டிவிட்டுறள் - 57

நூலறிவின்றி பெறுகின்ற பட்டம் எப்போதும்

நூல் அறுந்த பட்டம்.

#டிவிட்டுறள் - 58

கண்கூசும் வாகன விளக்கொளி நம்வாழ்வை

இருளில் தள்ளி விடும்.

#டிவிட்டுறள் - 59

பிறமொழியை கற்பது தவறில்லை எப்போதும்

தாய்மொழியில் கற்பது இனிது.

#டிவிட்டுறள் - 60

மனிதர் நம்கடமை இவ்வுலகில் மரம்

வளர்த்து செழிக்க விடல்.

#டிவிட்டுறள் - 61

முகத்துக்கு நேராக உண்மையைச் சொல்பவர்

முகநூலில் கிடைப்ப தரிது.

#டிவிட்டுறள் - 62

பெரியோர்க்கு தந்திடும் மதிப்பு எந்நாளும்

பெருமையைத் தரும் நமக்கு.

#டிவிட்டுறள் - 63

மிதவேகமாய் செலுத்திடும் வாகனத்தில் எப்போதும்

இதமாக அமைந்திடும் பயணம்.

#டிவிட்டுறள் - 64

பிறமொழி ஆதிக்கம் எந்நாளும் நம்மொழியின்

அழகை அழித்து விடும்.

#டிவிட்டுறள் - 65

மரம்வெட்டி சாய்ப்பதும் மனிதர் உயிர்வெட்டி

சாய்ப்பதும் ஒன்றான செயல்.

#டிவிட்டுறள் - 66

புத்தகமே உயிர்த் தோழன் என்பாருக்கு

புவி எங்குமே சிறப்பு.

#டிவிட்டுறள் -67

மெய்யான காதல் மணக்குமே;நெய்யோடு

சேர்ந்த சோற்றைப் போல்.

#டிவிட்டுறள் - 68

பண்பும் பணிவும் உடனிருந்தால்;எப்போதும்

பறித்திடலாம் வெற்றிக் கனி.

#டிவிட்டுறள் - 69

பண்டிதனாக படிப்பது நன்று அதனினும்

பண்படப் படித்தல் நன்று.

#டிவிட்டுறள் - 70

சாட்டிலே செய்கின்ற சேட்டைகள் பின்னாளில்

சாட்டையாய் மாறி விடும்.

#டிவிட்டுறள் - 71

நண்பனின் துன்பத்தில் நாம்செய்யும் உதவி

நட்பை செழிக்க விடும்.

#டிவிட்டுறள் - 72

பிறர்க்குதவ பணமில்லாத போதும் உதவுகின்ற

மனம் இருப்பது சிறப்பு.

#டிவிட்டுறள் - 73

வருங்காலம் உணராது வீணாக்கும் தண்ணீர்

உலகுக்கு செய்யும் துரோகம்.

#டிவிட்டுறள் - 74

புத்தகம் படிப்பது அருந்தவம் படிக்காதோர்

உயிர் வாழும் சவம்.

#டிவிட்டுறள் - 75

குண்டுபல்பு எரிகின்ற வீடு உலகத்தின்

பசுமையை எரித்து விடும்.


#டிவிட்டுறள் -76

பள்ளியிலும் கற்காத நற்பாடங்கள் பல

புத்தக வாசிப்பு தரும்.

#டிவிட்டுறள் -77

குறைவாய் பயன்படுத்தும் மின்சாரம் நாட்டிற்கு

நிறைவாய் வளத்தை தரும்.

#டிவிட்டுறள் - 78

ஈசிஆர் செல்கின்ற காதலெல்லாம் சிலநாளில்

ஈசியாய் கழன்று விடும்.

#டிவிட்டுறள் -79

லைக்குக்கு எழுதும் பதிவெல்லாம் முகநூலில் 

வெகுகாலம் நிலைக் காது.

#டிவிட்டுறள் - 80

பிறரை எழுதத்தூண்டும் எழுத்தே முகனூலில்

நல் எழுத்து ஆகும்.

#டிவிட்டுறள் - 81

தாய்மொழியை பாதுகாத்து வைப்பதே எதிர்கால

தலைமுறைக்குச் செய்யும் சேவை.

#டிவிட்டுறள் -82

நன்னூல்கள் நம் வாழ்வில் என்றென்றும்

கற்றதை மெருகு ஏற்றும்.

#டிவிட்டுறள் - 83

துளித்துளியாய் சேமிக்கும் தண்ணீரும் பின்னாளில்

துடைத்திடும் நம் கண்ணீர்.

#டிவிட்டுறள் -84

மழைநீர் சேமிக்கா மனிதவாழ்வு எப்போதும்

மகிழ்வாய் இருப்ப தில்லை.

#டிவிட்டுறள் - 85

மழைநீர் சேமிப்பு தொட்டியில்லா இல்லம்

மண்ணுள்ள பாலை நிலம்.

#டிவிட்டுறள் - 86

நீருக்கு விலைவைத்த உலகம் பின்னாளில்

போர் வந்தே கெடும்.

#டிவிட்டுறள் - 87

நுகத்தடியில்லா வண்டி போலாகும் வாழ்வு

நிலத்தடி நீர்வளம் இன்றி.

#டிவிட்டுறள் - 88

ஆற்றில் அள்ளும் மணல் பின்னாளில்

சோற்றில் வந்து விழும்.

#டிவிட்டுறள் - 89

அரிசி விளைந்த நிலமெல்லாம் வீடானாலங்கு 

அழிவு வந்து தங்கும்.

#டிவிட்டுறள் - 90

வறுமையிலும் வற்றாத நேர்மை உள்ளோருக்கு

வாழ்வினில் சேரும் பெருமை.

#டிவிட்டுறள் - 91

மெய்யை எளிதில் நம்பா உலகமிது

பொய்யை எளிதில் நம்பும்.

#டிவிட்டுறள் - 92

கல்வியை விற்பவர் இவ்வுலகின் அறிவுப்

பயிரிடை விளைந்த களைகள்.


#டிவிட்டுறள் - 93

விலைக்கு கல்வியை விற்பது கொலைக்கு

ஈடான செயல் ஆகும்.


#டிவிட்டுறள் - 94

துயரில் உதவும் நண்பன் உனக்கு

நேரில் வந்த தெய்வம்.


#டிவிட்டுறள் - 95

காட்டைக் காடாய் கருதாது வாழ்ந்தால் 

வீட்டுக்கு வரும் விலங்கு.


 #டிவிட்டுறள் - 96

போனால் வராத காலத்தை போற்றிப்

பேணுதல் நல் அறிவு.


#டிவிட்டுறள் - 97

கோபத்தால் நன்மை ஏதுமில்லை படுவோர்க்கு

பாபமே தொடர்ந்து வரும்.


#டிவிட்டுறள் - 98

இடவலமாய் தலையாட்டா தலைவன் வாழ்வு

தடம்மாறி போவது இல்லை.


#டிவிட்டுறள் - 99

இல்லறத்தில் நல்ல புரிதல் இருந்தாலது

கல்லறை வரை இனிது.


#டிவிட்டுறள் - 100

உணவளித்த நிலத்தில் கட்டிடும் வீடென்றும்

உலகை ஆக்கிடும் சுடுகாடு.


#டிவிட்டுறள் - 101

காட்டு விலங்கின் வாழ்விடமழிப்பது நாட்டு

மக்களின் நற்செயல் இல்லை.


#டிவிட்டுறள் -102

ஆராய்ந்து எடுக்கும் முடிவானது ஆதாய

வெற்றி தரும் நமக்கு.


#டிவிட்டுறள் - 103

சுற்றம் சுட்டிக்காட்டா குற்றத்தை தயங்காது

சுட்டுவது நல் நட்பு.


#டிவிட்டுறள் - 104

போராசை மிகுந்தவர் எந்நாளும் இவ்வுலகில்

பேராசை மிக்கவர் ஆவார்.


#டிவிட்டுறள் -105

உள்ளத்தில் நல்லெண்ணம் இருப்பின் வாழ்க்கை

பள்ளத்தில் என்றும் விழாது.


#டிவிட்டுறள் - 106

உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் பேசுபவர்

உலகத்தின் பேரழகர் ஆவர்.


#டிவிட்டுறள் - 107

இறப்பிற்குப்பின் தரும் கண்தானம் நம்முடைய

பிறப்பிற்கு தரும் சிறப்பு.


#டிவிட்டுறள் - 108

உடல்தானம் தந்து உதவுவோர் எல்லாம்

உலகில் பிறந்த தெய்வம்.


#டிவிட்டுறள் - 109

கடையேழு வள்ளல்களும் ஈடில்லை ; குருதியைக்

கொடை தரும் நபர்க்கு.


#டிவிட்டுறள் - 110

மாற்று எரிபொருளுக்கு மாறாத வாழ்வு

தோற்று அழிந்து விடும்.


#டிவிட்டுறள் - 111

வறியவர் கல்விக்கு செய்கின்ற உதவி

நம்மை பெரியவர் ஆக்கிவிடும்.


#டிவிட்டுறள் - 112

மரங்கள் நட்டு வளர்ப்போரே இப்புவிக்கு

அறங்கள் செய்யும் மனிதர்.


#டிவிட்டுறள் - 113

பெருநகர் வாழ்வில் கரைந்து போனது

பெருமை குணங்கள் பல.


#டிவிட்டுறள் - 114

உறவுகள் எதிர்பார்த்து உதவும்  எந்நாளும்

எதிர்பாராது உதவுவது நட்பு.


#டிவிட்டுறள் - 115

மாறிவரும் உலகிற்கேற்ப மாறாத வணிகம்

தேறி விடுதல் அரிது.


#டிவிட்டுறள் - 116

பொருளுக்குத் தக்க விலைவைக்கும் வணிகம்

அருள் பெற்று வளரும்.


#டிவிட்டுறள் - 117

சொன்ன சொல் தவறாத மனிதர்க்கெல்லாம்

சொர்க்கத்து வாழ்வு கிட்டும்.


 #டிவிட்டுறள் - 118

உழைப்பால் சேர்த்த பணம் உனக்கு

என்றும் உயர்வைத் தரும்.


#டிவிட்டுறள் - 119

பணத்தால் வாங்க முடியாத பொருளையும்

குணத்தால் வாங்க முடியும்.


#டிவிட்டுறள் - 120

பொறுமையாய் செய்யும் செயல் எல்லாம்

பெருமை தரும் நமக்கு.


#டிவிட்டுறள் - 121

அனுபவங்கள் கற்பிக்கும் பாடம் போல்

ஆசானும் கற்பிப்பது இல்லை.


#டிவிட்டுறள் - 122

குழந்தைகள் முன்நாம் செய்யும் தவறுகள்

பிழையாய் அவரினை வளர்க்கும்.


#டிவிட்டுறள் - 123

கோபத்தின் உச்சத்தில் உதிர்க்கும் வார்த்தை

பாவத்தின் வாசலில் விடும்.


#டிவிட்டுறள் - 124

காதலில் களவென்பது உள்ளத்தை கவர்வதேயன்றி

உடலைக் கவர்வது இல்லை.


#டிவிட்டுறள் - 125

பதறாது செய்கின்ற செயலெல்லாம் நமக்கு

சிதறாது வெற்றியைத் தரும்.


#டிவிட்டுறள் - 126

துணிவோடு வாழ்வது பெரிதெனினும் வாழ்க்கை

பணிவோடு வாழ்வது நலம்.


#டிவிட்டுறள் - 127

உள்ளத்தை மகிழ்வாய் வைத்துக் கொள்வதே

உலகத்தில் இன்ப வாழ்வு.


#டிவிட்டுறள் - 128

போதுமென்ற மனமிருக்கும் மனித வாழ்வு

போற்றி புகழப் படும்.


#டிவிட்டுறள் - 129

அஞ்சாது பொய்யுரைத்து வாழ்பவர் நெஞ்சம்

அஞ்சியஞ்சி சாகும் தினம்.


#டிவிட்டுறள் - 130

நம்பியவர்க்கு செய்யும் துரோகம் நம்வாழ்வில்

நன்மையை நீக்கி விடும்.


#டிவிட்டுறள் - 131

ஆடைக்குள் புகுந்த தேளாய் உறுத்தட்டும்

அடுத்தவர் பொருள் நமக்கு.


#டிவிட்டுறள் - 132

மனிதன் நற்பெயர் எடுப்பதொன்றே இவ்வுலகில்

மங்காது இருக்கும் செல்வம்.


#டிவிட்டுறள் - 133

பணிந்து வாழ்வோர்க்கு துன்பம் இல்லையென

துணிந்து சொல்லி விடு.


#டிவிட்டுறள் - 134

தன்னைப் பற்றியே சிந்திக்கும் மனிதன்

தனித்து விடப் படுவான்.


#டிவிட்டுறள் - 135

செய்த உதவியை பிறரிடம் சொல்லாது

மனதிற்குள் வைப்பது அழகு.


#டிவிட்டுறள் - 136

பெண்ணைச் சமமாய் நடத்தி மதிப்போரே

அழகில் சிறந்த ஆண்.


#டிவிட்டுறள் - 137

பொய்யைக் காக்கும் செயலுன்னை பெரும் 

பொய்யர் ஆக்கி விடும்.


#டிவிட்டுறள் - 138

ஏற்றத் தாழ்வு பார்த்திட்ட நட்பென்றும்

ஏற்றம் பெற்றது இல்லை.


#டிவிட்டுறள் - 139

விலை கொடுத்து வாங்கிய புகழுனக்கு 

விரைந்து மறைந்து விடும்.


#டிவிட்டுறள் - 140

நண்பனின் தவறினை சொல்லாத நட்பு

நலங்கள் புரிவது இல்லை.



No comments:

Post a Comment