Sunday 11 May 2014

குற்றாலக் குளியல் புராணம்..!

குற்றாலக் குளியல் புராணம்...!

குற்றால அருவிகளில் குளிப்பது எப்படி...? ஏய்யா குளிக்கக் கூடவா சொல்லித்தருவாங்கன்னு கேக்குறிங்களா..! ஆமாங்க அருவிகளில் குளிப்பது ஒரு கலை..! ஏதோ இந்த முகநூல் மீட்டுக்கு போய்ட்டு குளிச்சி கண்டுபிடிச்சு பீத்திக்கறதுக்காக சொல்லலை.

எனக்கும் குற்றாலத்திற்கும் 20 ஆண்டுகள் தொடர்பு இதில் கடந்த ஆண்டு சீசனுக்கு மட்டுமே நான் இங்கு வரவில்லை எப்படி பார்த்தாலும் வருடத்திற்கு 5 அல்லது 6 முறை நான் போகும் இடம்.. கிட்டத்தட்ட 100 முறை வந்திருப்பேன் நூற்றுக்கணக்கான முறை எல்லா அருவிகளிலும் குளித்த அனுபவம் எனக்குண்டு..!

குற்றாலக் குளியல் பற்றி முன்பே முகநூலில் எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு.. ஆனால் சந்தர்ப்பம் இப்போது தான் கிடைத்தது.. நான் அருவிக் குளியல் காதலன்.. குறைந்தது 3 மணிநேரம் குளித்து கை கால்கள் வெளுத்து தோல் சுருங்கும் அளவுக்கு குளிப்பவன்.. இங்கு அதுக்கு ஊறல் குளியல் எனப் பெயர்.. 

என் இரு கண்களையும் கட்டிவிட்டு குற்றாலம் அருவிகளில் குளிக்கச் சொன்னால் அங்குள்ள பாறைகளை கைகளால் தொட்டு அது எந்த அருவி என்று என்னால் சொல்லமுடியும் அந்தளவிற்கு ரசித்து குளித்தவன்...! 

இன்றும் நான் சொல்லியபடி போய் குளித்தவர்கள் என்னிடம் அந்த அனுபவம் எவ்வளவு இனிமையானதாக மறக்க முடியாததாக இருந்தது எனக்கூறும்போது மீண்டும் நானே குளித்தது போல இருக்கும்.. அப்படி என்னய்யா இருக்கு அந்த குளியலில்ன்னு கேக்கறிங்களா..? அதுக்கு தான் நான் வழி காட்டப்போறேன்...! 

என்னது வழியா அருவியில எங்கய்யா வழி இருக்குன்னா கேக்குறிங்க..! யெஸ் மெயினருவியில் ஆர்ச் முடியும் இடத்துக்கு பின்னால அருவியில தண்ணிக் கொட்டுற இடத்தில் பின்புறம் நகர்ந்து ஒரு யூ டர்ன் அடித்தா ஒரு குழிவான உள்வாங்கிய பாறைச்சுவர் வரும் அதுக்கிட்ட போகணும்..! அதாவது...

நீங்க அருவிக்கு உள்ள இருப்பிங்க கொஞ்சம் கூட தண்ணி உங்க மேல படாது நீங்க தேவைன்னா தலையை நீட்டி குளிக்கலாம்... இங்கு தான் தண்ணியின் வேகம் மற்ற பகுதிகளை விட அதிகமா விழும்...அதாவது தலையை நீட்டினா தட தட வேகத்தில் அருவித்தண்ணி தலையில விழுகும் ஆசை தீர குளிச்சிட்டு...

தலையை பின்னுக்கு இழுத்துகிட்டா தண்ணியே விழுகாது நீங்க வெளியே உங்களுக்கு முன்னால குளிக்கிறவங்களை பார்க்கலாம் நிறுத்தி நிதானமா மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திகிட்டு குளிக்கலாம்....!

அந்த பாறைகளில் கடவுள் சிற்பங்கள் குட்டி குட்டி சிலைகளாக இருக்கும் அழகையும் காணலாம் கிட்டத்தட்ட 7 சிலைகள் என்பது ஞாபகம்...இங்க போய் குளிக்குறவங்க 10 நிமிசத்துல குளிச்சது போதும்ன்னு வந்துட்டா ஒரு ராஜ்ஜியத்தை எழுதித் தருகிறேன்... 

அது மட்டுமில்ல எந்த அருவியா இருந்தாலும் செய்ய வேண்டியது முடிந்த அளவு தண்ணீர் விழும் இடத்திற்கு பின்புறமுள்ள பாறை அருகில் சென்று குளிப்பது சுகானுபவம்.. 

மெயினருவியில் குளிக்க போறவங்க இல்ல இது பத்தி தெரியாதவங்க ஒரு முறை குளிச்சுட்டு வந்து சொல்லுங்க... நான் சொன்னது உண்மையா இல்லியான்னு... ஓகே வாங்க அடுத்து ஐந்தருவிக்கு போகலாம்...

நாளை..ஐந்தருவி


குற்றாலக் குளியல் புராணம்...! Part - 2

Welcome back to ஐந்தருவி...

ஐந்தருவி...பொதிகை மலை மகள் தலைவிரித்து அந்தக் கூந்தல் 5 கிளைகளாக பிரிந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு தோற்றம்.. உலகிலேயே பெண்களுக்கு முதன் முதலாக 60% இடஒதுக்கிடூ தந்தது ஐந்தருவி தான்!!!!! ஆம் 5 கிளைகளில் 3 பெண்கள் குளிக்க..!

4 வது அருவியும் 5 வது அருவியும் ஆண்களுக்கு..! 5 வது அருவியை நம் வீட்டு ஷவர் குளியலுக்கு ஒப்பிடலாம்..! 4 வது அருவி தான் ஆக்ரோஷமானது.. 3 அருவிகள் பெண்களுக்கா.? என்ற ஆதங்கத்தில் பொங்கும் ஆணாதிக்க சிந்தனை அருவி அது..!

ஒரு நேரத்தில் அதிக பட்சமாக 12 பேர் நின்று குளிக்கும் குகை போன்ற அமைப்புள்ள அருவி  இந்த அருவியில் நேராக நின்று குளிப்பதை விட பக்கவாட்டில் நின்று குளிப்பது சுகம்.. நன்கு முன்னேறி ஒரு 2 அடி உயரம் பாறையில் ஏறினால் ஒரு பொந்து போல குழிவு இருக்கும்..!

அங்கு நின்று குளிப்பது மல்டி ஷவர் என்று தற்போது பணக்கார வீடுகளில் பிரபலமாகி இருக்கும் சொகுசான ஒரு ஷவரில் குளிப்பது போன்ற அனுபவத்தை அளிக்கும்.. நம் உடல் மீது தண்ணீர் சிதறல்கள் நாலாபுறமும் பீய்ச்சி அடிக்கும் அந்த சுகம்..அடடா..! 

பெண்கள் பக்கத்து அருவிகளில் ஒரு முறை குளித்ததுண்டு...! தினமலர் வாசகர் சுற்றுலாவில் இரவு 2 மணிக்கு தினமலர் முருகராஜ் சார், நான், பாலா, சிவா,சசி,பாஸ்கர் சகிதம் போய்குளித்தோம்.. இரவு நேரங்களில் பெண்கள் இல்லாத போது அங்கு குளிக்கலாம்..!

சென்னைக்கு போக விமான டிக்கெட் கையில் இருக்க அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுப்பார்களா..! அதே போலத்தான் 4 வது கிளை அருவியின் வேகத்தில் குளித்து விட்டு பெண்கள் பகுதி அருவியில் குளித்தது பூச்செண்டால் அடித்தது போல இருந்தது..!

2 நிமிடம் தான் மீண்டும் ஆண்கள் பகுதிக்கு வந்து விட்டோம்..! மீண்டும் அந்த ஆக்ரோஷத் தாக்குதல் மல்டி ஷவர் என அனுபவித்தோம்..இந்த வேகம் எல்லாம் நன்கு தண்ணீர் வரும் போது மட்டுமே..! குறைவாக தண்ணீர் வரும் காலத்தில் இந்த அனுபவம் கிடைக்காது..!

ஆக்ரோஷமான தண்ணீர் தாக்குதல்,ஷவர் அனுபவம்...இதெல்லாம் சரி.. உருட்டுக்கட்டை தாக்குதல் குளியல் தெரியுமா... அதுக்கு நாம செண்பகா அருவி போகணும், கிட்டத்தட்ட5 கிமீ மலை ஏறணும்.. ரெடியா இருங்க நாளைக்கு அங்கதான் போகப் போறோம்...!

நாளை...செண்பகா அருவி


குற்றாலக் குளியல் புராணம்...! Part - 3

ஓகே செண்பகா அருவி போக ரெடியா.. துண்டு,சோப்பு, ஷாம்பு, வாட்டர் பாட்டில்,ஸ்னாகஸ் எல்லாம் எடுத்துகிட்டிங்களா.! பாலிதீன் பைகள் வேண்டாமே! சிகரெட் குடிக்கிறவங்களே ஒரு அரை நாள் அதை தியாகம் செஞ்சிடுங்க,வாங்க போகலாம் செண்பகா அருவிக்கு..!

செண்பகா அருவி மெயினருவியின் தலைக்கு மேலே இருக்கும் அருவி.. செண்பக மரங்கள் அடர்ந்த இடத்தில இருப்பதால் இதற்கு செண்பகா அருவி எனப்பெயர்.. மலை மீது 3 கிமீ தூரம் ஏறவேண்டும்.. சிற்றருவி செல்லும் பாதையில் ஏறி சிற்றருவி கட்டணம் வசூலிக்கும்...

இடத்திற்கு பக்கவாட்டு பாதையில் நுழைந்து செல்ல வேண்டும்..அந்த பாதையின் ஆரம்பத்திலேயே மேலே போக அனுமதி இல்லை என்ற அறிவிப்பு இருக்கும் ஆனால் யாரும் உங்களைத் தடுக்க மாட்டார்கள்... அங்கிருந்துசில இடங்களில் செங்குத்தாகவும் ஏறும் 

சற்று கரடு முரடான பாதை..2 இடங்களில் படிக்கட்டுகள் ஏறவேண்டும் இதெல்லாம் ஒரு கி.மீ தூரத்திற்கு மட்டுமே.!பிறகு சமதளம் தான்..செண்பகாருவியில் இருந்து ஓடி வரும் நீர் ஒரு பெரிய தடாகம் போல் தேங்கி இருக்கும் இங்கு ஆனந்தமாகக் குளிக்கலாம்..!

இந்த தடாகம் தான்...அருவியாக மெயினருவியில் கொட்டுகிறது.. மேலே பாதுகாப்பாக நின்று கீழே மெயினருவியை பார்க்கும் வசதியும் உண்டு.. இதையெல்லாம் தாண்டி தான் செண்பகா அருவி..! 6அடி அகலத்தில் பால் போன்ற நீர் மொத்தமாக விழும் அருவி..!

சுமார் 40 அடி உயரத்தில் இருந்து அவ்வளவு கனத்தில் நீர் விழுவதே எப்படி இருக்கும் என யோசித்து பார்க்கவும்.. அந்த நீரின் வேகம் தாங்க முடியாது தான் அங்கு ஒரு ஆழமான தடாகம் உருவாகி உள்ளது.. நீர் நிறைந்த அந்த தடாகம் மிக அபாயகரமானது.. 

பாறைகள் நிறைந்த ஆழ்பகுதி அது ஒரு பெரிய காட்டெருமையே போய் சொருகிக் கொள்ளும் அளவிற்கு பாறை இடுக்குள் உள்ள தடாகம் அது.. அங்கு அந்த ஊர்க்காரர்கள் அனாசயமாக குதித்து குளிப்பார்கள். அருவியின் பக்கவாட்டு பாறைகளில் ஏறி சுமார்.....

20 அடி உயரத்தில் இருந்து பல்டி அடித்து குளிப்பார்கள் அவர்களுக்கெல்லாம் எங்கு பாறை இருக்கும் எனத் தெரியும் என்னதான் நீச்சல் தெரிந்தாலும் அருவி நீர் விழும் இடத்தில் குதித்து விடக்கூடாது உள்ளே இழுத்துவிட்டுவிடும்.. சரி ரொம்ப பயமுறுத்திவிட்டேன்..

இதெல்லாம் குதித்து குளிப்பவர்களுக்கு தான்.! தலை முழுக்க வழிய வழிய எண்ணெய் தேய்த்து இருந்தாலும் ஒரு நிமிடம் இந்த அருவியில் தலை வைத்தால் விளம்பரங்களில் வரும் பட்டுப்போன்ற கூந்தல் கிடைக்கும்..அவ்வளவு வேகம்.. அலாதி சுகமான குளியல்..

இந்த அருவியில் நீங்கள் தலைநிமிர்ந்து குளிக்க முடியாது.. அம்மா முன் நிற்கும் அமைச்சர்கள் போல் பணிந்து தான் குளிக்க வேண்டும்..அவ்வளவு வேகம் உருட்டுக்கட்டை அடி போல்.. இங்கு 10 நிமிடம் குளித்தால் உடல் வலி நூலாகப் பறந்துவிடும்..!

கவனமாக கம்பியைப்பிடித்து நின்று குளிப்பதும்..இடுப்பாடை இறுக்கமாக இருப்பதும் நல்லது இல்லாவிட்டால் அருவி வில்லன் உருவி விட்டு மானத்தை கப்பலேற்றிவிடுவான்.. ஷார்ட்ஸ் அணிந்தாலும் உள்ளே உள்ளாடை அணிய மறக்க வேண்டாம்..! 

பெண்கள் குளிக்க தனிப்பகுதி இருக்கின்றது ஆனால் பெண்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும்.. பெண்களை அழைத்துச் செல்பவர்கள் ஒரு குழுவாக இருப்பது நலம்.. ஆணும் பெண்ணும் மட்டும் செல்வது.... நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்கவும்..!

அரைமணிநேரக் குளியலுக்கு பின் செண்பகா தேவி அம்மனை தரிசித்துவிட்டு திரும்பலாம் காலை 7 மணிக்குள் கிளம்பிப் போய் மதிய உணவுக்கு திரும்புதல் நல்லது.. மதியம் கிளம்பாதீர்கள் இந்த ஆனந்தம் கிடைக்காது.. ஆபத்தானதும் கூட..!

வழியெங்கும் கொய்யாப்பழம், மாங்காய், கடலை, ஏன் ஆம்லெட்டுகள் கூட கிடைக்கும் கையில் உணவு எடுத்து செல்வது தான் சிறந்தது..தயவு செய்து காகிதத்தில் கட்டி எடுத்து செல்லவும் அல்லது கொண்டு செல்லும் ஸ்னாக்ஸ் கவர்களை திரும்ப எடுத்து வந்துவிடவும்..

இறங்குவதற்குள் களைத்து விட்டால் அப்படியே சிற்றருவியில் ஒரு குளியல் போட்டு ஃபிரெஷ்ஷாக இறங்கிவிடலாம்.. ஆனால் சிற்றருவி குளியல் எல்லாம் அருவிக் குளியலில் சேராது..அது பம்பு செட்டில் குளித்தது போலத்தான்.. ஆனால் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

சிற்றருவியில் குளிக்கமட்டும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. கட்டண குளியலறையில் குளித்தது போல இருக்கும்..புலியருவியும் இப்படித்தான்.. பாருங்க பேசிகிட்டே கீழே வந்துட்டோம்.. போய் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்க நாளைக்கு..

பழைய குற்றாலம் போகலாம்...


குற்றாலக் குளியல் புராணம்...! Part - 4

பழைய குற்றாலம் குற்றாலத்திலிருந்து பாபநாசம் போகும் வழியில் இருக்கிறது..! இது தான் தற்போதுள்ள மெயின் அருவிக்கு முன்பு இருந்த குற்றாலம்.. பழைய சிவாஜி படம் ஒன்றில் இதன் அழகை காணலாம்... காமராஜர் ஆட்சிக்காலத்தில் சீசன் இல்லாத போது..

பாறைகளை தகர்த்து சமமாக்கி இந்த அருவியை பின்னுக்கு தள்ளிவிட்டார்கள்.. நல்ல சீசனில் தண்ணீர் வரத்து இருக்கும் போது மட்டுமே இங்கு ஆனந்தமாக குளிக்க முடியும்.. சுளீர்,சுளீர் என சாட்டை அடி விழுந்தது போல தண்ணீர் விழும்..! 

மெயினருவி செண்பகா அருவியில் குளிப்பதற்கும் இங்கு குளிப்பதற்கும் வேறுபாடு உண்டு.. வயதானவர்கள் குளிக்க ஏற்ற இடம்..அருவிக் குளியல் ரசிகர்கள் ஒரு முறை குளிக்கலாம்.. இங்கும் பாறை அருகில் நின்று குளித்தால் சுகமாக இருக்கும்.. சரி நண்பர்களே..

இன்னும் தேனருவி, பேயருவி, புது அருவி, கும்பாருட்டி அருவி, அகத்தியர் அருவி, பால் அருவி, பாணதீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவி எனப்பல அருவிகள் இங்கு உண்டு.. ஆனால் குற்றாலம் என்றால் 6 அருவிகள் முக்கியம் அவை....

மெயினருவி,ஐந்தருவி,செண்பகா அருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி இந்த 6 தான் நீங்கள் முதலில் போக வேண்டிய அருவிகள்... இதில் சற்று அபாயகரமானது செண்பகா அருவி..மற்றவற்றில் எந்த பயமும் இல்லை.. இனி குளிப்பவர்களுக்கு சில டிப்ஸ்..

எந்த அருவியிலும் உணவு உண்டவுடன் குளிக்கக்கூடாது.. அதற்காக பட்டினி கிடக்கவும் வேண்டாம் மயக்கம் வரும்.. முதல் குளியலே எண்ணை தேய்த்து குளித்துவிடவும்... அல்லது கடைசி நாள் எண்ணை தேய்க்கலாம்... அடிக்கடி எண்ணை தேய்த்து குளிக்கக் கூடாது..!

தயவு செய்து மசாஜ் செய்யாதீர்கள்.. அங்கு செய்யப்படும் மசாஜ் முறையானது அல்ல நரம்புகள் சுருண்டு கொள்ள வாய்ப்பு உண்டு...அருவியே நமக்கு மசாஜ் செய்து விட்டுவிடும்.. கையில் பாலிதீன் ஜிப் லாக் பைகள் வைத்துக்கொள்ளவும்.. உங்கள் மொபைல், கேமிரா, பணம் போன்றவற்றை நனையாமல் அது பாதுகாக்கும்... 

யாராவது ஒருவர் உடமைகளை காத்து இருக்க மற்றவர்கள் போய் குளித்து வருதல் நலம்... வெறும் துண்டு உடைகள் என்றால் பிரச்சனை இல்லை.. அருவியில் குளிக்கும் போது மூச்சு விட சிரமப் பட்டால் இரு கைகளையும் நல்ல வெயில் நேரத்தில் கண் கூசாது இருக்க வைப்பது போல நெற்றியில் வைத்துக் கொள்ளவும்... இப்படி நின்றால் 3 மணிநேரம் கூட நிற்கலாம்...!

எக்காரணம் கொண்டும் மது அருந்தி குளிக்கக் கூடாது..மது நரம்பை முறுக்கேற்றி இருக்கும் அச்சமயம் குளிப்பது மிக மிக ஆபத்தானது.. மூச்சுத் திணறல் கழுத்து எலும்பு உடைதல் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்பு அதிகம்... ஆனால் நிறைய பேர் மது அருந்திவிட்டு தான் குளிக்கிறார்கள்.. அப்படி குளிப்பதாக இருந்தால்...

வேகம் அதிகமான நீரில் தலை வைக்க வேண்டாம்..அல்லது இப்படி செய்யுங்கள் நன்கு 1 மணி நேரம் குளித்த பின்பு மது அருந்தவும் பிறகு உணவு அதன் பிறகு 3 மணி நேர ஓய்வு பின் மீண்டும் இதேபோல தொடருங்கள்... எனவே மது அருந்தாமல் ஒரு முறை குளித்து பார்க்கவும்..!

நிறைய துண்டுகள் ஷார்ட்ஸ் எடுத்து வைத்து கொள்ளுங்கள், பெண்களுக்கு நைட்டிகள் மிகச்சிறந்தது.. தற்போது உள்ள நைட் பேண்ட் டாப்ஸும் கூட பெஸ்ட் தான்.. அருவியில் குளிக்கும் போது கொஞ்சம் அருவித் தண்ணீரை குடித்து விடுங்கள் ஜுரம் வராது..!

குளித்தவுடன் கப கப என பசிக்கும் பாருங்கள்..அப்போது சாப்பிட வேண்டும்.. குற்றாலத்தில் நல்ல உணவகங்கள் ஏதுமில்லை.. குறிஞ்சி ஓட்டல் எதிரில் உடுப்பி அக்ஷயா கொஞ்சம் நன்றாக இருக்கும்.. பெரிய உணவகங்களில் விலை அதிகம் சுவையும் இருக்காது..!

முடிந்தால் செங்கோட்டை அருகே பார்டர் கடையில் நாட்டுக்கோழி, காடைரோஸ்ட் பரோட்டா பிரமாதமாக இருக்கும் ஒரு பிடி பிடிக்கலாம்..சைவப்பிரியர்கள் தென்காசி விஸ்வனாதரை தரிசித்து விட்டு தென்காசியில் நல்ல உணவு சாப்பிடலாம்.. அங்கு நல்ல கடைகள் உண்டு..!

தென்காசி வெறும் 6 கி.மீ தான் குற்றாலத்திலிருந்து.. நல்ல சமையல்காரர் கிடைத்தால் கூட்டிச்செல்வது நல்லது.. அதுதான் மிகச்சிறந்தது..ஒரு சனி ஞாயிறு இரு தினங்கள் போதும் இவையெல்லாம் சுற்றிப்பார்க்க.. ஆனால் வார நாட்களில் செல்வது பெஸ்ட்.. வார இறுதியில் கூட்டம் அதிகம்..!

முடிந்தால் மெயினருவியிலும், ஐந்தருவியிலும் இரவு நேரக் குளியல் ஒன்று போடுங்கள் திவ்யமாக இருக்கும்..! குடும்பத்தோடு ஒரு குதுகல குளியலுக்கு குற்றாலம் வாருங்கள் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கிடைத்ததை உணர்வீர்கள்...!

நிறைந்தது...

No comments:

Post a Comment