Wednesday 7 May 2014

அரசியல் வானிலை..!

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நாள் முதல் தமிழகத்தில் மழை... இதையும் அரசியலாக்கி அரசியல் கட்சிகள் கருத்து கூறினால்... ( ஒரு கற்பனை ) 

அரசியல் வானிலை..!

திமுக : சுட்டெரிக்கும் கோடையின் வெப்பத்தை தாங்க முடியாத எதிரிகள் சூரியனுக்கு பயந்து மழையோடு கூட்டணி வைத்து இருக்கிறார்கள்..! இது தற்காலிகமனதே என்றாலும் இம்மழை சூரியனின் புகழை தடுக்கச் செய்த ஓர் ஆரியச் சதியாக இருக்குமோ..? என்றும் ஓர் ஐயம் எழுகிறது..ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது..மழையை ஏற்காது..!

அதிமுக :புரட்சித் தலைவி அவர்கள் எளிமையாய் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பரம் இல்லாமல் வாக்கு சேகரித்ததை பலர் விமர்சித்ததை நாட்டு மக்கள் அறிவர்..அவ்வாறு அம்மா ஹெலிகாப்டரில் சென்ற போது கலைந்த மேகங்கள் தாம் இன்று... அம்மாவின் ஆணைப்படி ஒன்று கூடி மழையாக பெய்கிறது..அம்மாவின் ஹெலிகாப்டர் பயணம் நாட்டு நன்மைக்கே.! 40ம் நமதே.!

பா.ஜ.க : காங்கிரஸ் ஆட்சியிலே இயற்கையே கோமாளித்தனமாகத் தான் வருமோ என்ற ஐயம் எழுகிறது.. இந்த மழை ஏன் பாகிஸ்தானின் சதியாக இருக்கக்கூடாது..? இதுவரை எல்லையில் இந்தியாவின் இறையாண்மைக்கு விடுத்த சவால்... இப்போது ஏன் இயற்கைக்கு விடுத்த சவாலாக மாறியுள்ளது..? மோடி ஆட்சிக்கு வந்தால் தான் இந்த சவாலுக்கு பதிலடி தரப்படும்..!

காங்கிரஸ் : அக்னி நட்சத்திரம் என்றால் வெயில் தான் அடிக்கும் என்று எதிர்பார்த்து இருக்கும் போது மழை பெய்தது போல்... மோடி அலை தான் என நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் காங் பேரியக்கம் ஆட்சியை பிடிக்கும் என்பது இம்மழை மூலம் நிரூபணமாகிறது.. அடுத்த பிரதமர் ராகுல் தான் என்பதற்கு இந்த கோடை மழையை விட சாட்சி வேறென்ன வேண்டும்..!

தேமுதிக : மக்களே..இந்த மழை ஏன் இதுக்கு முன்னால வரலை..? திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செஞ்சி மழைக்கே அது புடிக்காம தான் கண்ட நேரத்துல பெய்யுது..அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.. இதை அப்படியும் எடுத்துக்கலாம்..இல்ல கேப்டனின் அனல் கக்கும் பிரசாரத்தை தாங்க முடியாமத் தான் குளிர்ச்சியா மழை பெய்யுதுன்னும் எடுத்துக்கலாம்..கரெக்டா மக்களே..!

ஆம் ஆத்மி : நாட்டில் காங் ஆண்டாலும் சரி பாஜக ஆண்டாலும் சரி இது போல் கேலிக் கூத்தாகத்தான் இயற்கை இருக்கும்.. இதற்கு மாற்று ஆம் ஆத்மியே.. ஒரு வாய்ப்பு தாருங்கள் மழைக் காலத்தில் மழையும் வெயில் காலத்தில் வெயிலும் அடிக்க ஆம் ஆத்மி பாடுபடும்... நாங்கள் துடைப்பம் கொண்டு உங்கள் துயர் துடைப்போம்.!

கம்யூனிஸ்ட் : இயற்கையும் உழைக்கும் வர்க்கமும் நினைத்தால் எதையும் மாற்ற முடியும் என்பதை ஓயாது பெய்த இம்மழை உலகுக்கு உணர்த்தியுள்ளது..! கம்யூனிஸ்ட் தனித்து நின்றதை கேலி பேசியவர்கள் இந்த தேர்தலில் நாங்கள் மாபெரும் வெற்றி அடைந்ததும் அதை உணர்வார்கள்..! இந்த மழைக்கு சதி எதுவும் சார்பில்லை ஆனால் மதச்சார்பின்மை தான் தேசத்தின் தேவை .. அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்..!

No comments:

Post a Comment