Friday 23 May 2014

அன்பு சிவனுக்கு..!

ருத்ர தாண்டவம்..

முகநூலில் எவ்வளவோ செய்திகள் நம்பும் படி உலா வந்து பிறகு அது வதந்தி என தெரியும்..! அது போல இந்த செய்தியும் இருக்காதா என்று என் மனம் ஏங்குகிறது... அன்பு சிவம் அண்ணே... நீங்க இதை படிச்சிகிட்டு தானே இருக்கிங்க..? சொல்லுங்கண்ணே...!

முதன் முதலில் கடந்த ஆண்டு சுபஶ்ரீ மோகன் ஏற்பாடு செய்த முகநூல் சந்திப்பில் தான் அறிமுகமானிங்க.. அதன் பிறகு நட்பு அழைப்பு நான் அனுப்பி நட்பானோம்.. பிறகு தமிழ் அரசி புத்தக வெளியீட்டு விழா, புத்தக கண்காட்சி என பல முறை உங்களை சந்தித்ததுண்டு..!

ரொம்ப சோகமான விஷயம் நான் சந்தித்த முகநூல் நண்பர்களில் உங்களுடன் மட்டும் தான் நான் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை... வாங்கண்ணே இப்ப போட்டோ எடுத்துக்கலாம்.. உங்கள் கவிதைகளால் எங்களை பல முறை தாலாட்டியுள்ளீர்கள்...!

இப்போ நீங்க தூங்கிகிட்டு இருக்கிங்க யார் தாலாட்டுவது..! முகநூலில்  ரசனையான கமெண்ட் செல்லமான வம்பிழுப்பு என மிக மிக நாசூக்காக உங்களை வெளிப்படுத்தி கொண்ட நீங்கள் இப்படி நாசூக்காக எங்களை பிரிந்து போனது ஏன்.?

செல்லியின் பதிவு பார்த்து இன்னும் ஒரு அதிர்ச்சி.. அவரைப்போலவே நானும் 3 மணிக்கு எழுந்துவிட்டேன் மெத்தையில் இருந்த செல்போன் கீழே விழ கையில் எடுத்ததும் அனிச்சையாக ஃபேஸ்புக் தேட ஆனந்த் ராமின்  பதிவில் இந்த துயரச் செய்தி..!

நான் கனவா என்றெல்லாம் கூட கிள்ளிப்பார்த்து கொண்டேன்... அப்போது தொலைந்த தூக்கமே.. ஏதோ வெறி பிடித்தது போல உங்கள் டைம் லைனுக்கு போய் உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.. சத்தமில்லாமல் அழுகிறேன் 6 மணி வரை இப்படி ...

என்னையும் அறியாமல் அதற்கு பின் கண்ணயர்ந்து.. 8 மணிக்கு விழித்தேன்.. இந்த விழிப்பு தான் மனிதன் உயிர் வாழ்வதை உணர்த்துவது.. இதையும் கூட ஒரு துயரக் கவிதையாக எழுதி சென்று விட்டு இருக்கிங்கன்னு இப்போ தான் புரியுது..!

குற்றாலம் முகனூல் சந்திப்புக்கு காரில் போகும் போது உள்பெட்டியில் வந்து அடடா நானும் வரமுடியலை ஐ மிஸ் தி ப்ரொக்ராம் என்சாய்ன்னு ஒரு செய்தி.. ஆனா இப்ப நாங்க இல்ல உங்களை மிஸ் பண்ணிட்டோம்.. அன்பு அண்ணே..!

ரத்தமும் சதையுமாக உலக வாழ்வில் உடலாக இருந்த நீங்கள் இன்று காலப் பெரு வெளியில் அரூபமாக கலந்து விட்டீர்கள்.. இது வரை எங்களுக்கு அன்பு சிவனாக மென் கவிதை தந்த நீங்கள்.. இன்று பிரிவு என்ற ருத்ர தாண்டவத்தை ஆடி தந்துள்ளீர்கள்..!


உங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு திராணி இல்லண்ணே.. அந்த கடவுள் அதை தர வேண்டுகிறேன்.. உங்கள் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்..!

நீங்கள் என்றும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள்..! மறக்க முடியாதுண்ணே.. "தம்பி வெங்கடேஷ் ஆறுமுகம் சுவற்றில் (wall) கலகலப்புக்கு பஞ்சமில்லை என்று எழுதினிங்க ஞாபகம் இருக்கா... இன்னிக்கு அது களையிழந்து கிடக்குண்ணே :-(

No comments:

Post a Comment