Thursday 15 December 2016

மார்கழித் திங்கள்...1

#எமை_ஆண்டாள்

பொதுவாக ஆண்டாள் பாசுரங்களில் இயற்கை குறித்த அறிவியல் பார்வை இருப்பது பெரும் வியப்பு.!! அவர் வான சாஸ்திரம் தெரிந்தவரோ என்னும் பிரமிப்பை ஏற்படுத்தும். மார்கழி பிறக்கும் போது பெரும்பாலும் பவுர்ணமி தினமோ அல்லது பவுர்ணமி முடிந்து ஒரிரு தினங்களோ முடிந்திருக்கும் அதைத்தான் முதல் பாடலில் மதி நிறைந்த நன்னாள் எனத் துல்லியமாக குறிப்பிட்டு இருப்பார்..

இன்னொரு பாசுரத்தில் கடல் நீர் ஆவியாகி மழை பொழிவதை ஆண்டாள் எழுதிய விதம் ஆச்சரியம்..அதை அப்பாடல் வரும் நாளில் பிறகு பார்க்கலாம். ஆயர்பாடியின் தலைவனை கூர் வேல் கொடுந் தொழிலன் என விளித்திருக்கிறார்.. அவன் இடையர் குல தலைவன் மாடுகள் வைத்து தொழில் புரிகிறவன் அதே நேரத்தில் தன் இனத்திற்கு ஒரு துயர் வந்தால் வேலெடுத்து போர் புரிபவனும் கூட என்னும் அர்த்தத்தில் கூறியிருப்பது அழகு..

போகிற போக்கில் ஏரார்ந்த கண்ணி என யசோதையை அழகிய கண் உடையவள் என்கிறார்... ஒரு பெண்ணின் அழகை ஒரு பெண்ணே போற்றுதல் அரிது ஆண்டாள் அப்பெருமையையும் பெறுகிறார்... குளிர்மிகு மார்கழியில் அதிகாலைப் பனியில் நீராடச் செல்ல உடல் நடுநடுங்கும் ஆனால் ஆண்டாளின் தமிழ் ஒரு ஹீட்டர்.! அந்தத் தமிழ் வெப்பம் படிப்பவர்க்குள் பரவி ஆயர்குலச் சிறுமிகளோடு சில்லென்ற நீரில் மார்கழிக் குளியல் போட்ட ஒரு பேரானந்த அனுபவத்தை அனைவருக்கும் தந்துவிடுகிறது.. ஆம் அதுதான் ஆண்டாள்..! அவள் தமிழால் நமை ஆண்டாள்..!


மார்கழி 1ஆம் நாள் பாடல்..

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment