Saturday 17 December 2016

ஓங்கி உலகளந்த 3

#எமை_ஆண்டாள்

தேசம் சுபிட்சம் பெற என்ன செய்யவேண்டும்.? திடீரென கரன்சி செல்லாது என அறிவித்து கேஷ்லெஸ் எகானமி, டிஜிட்டல் பரிவர்த்தனை, கருப்புப்பணம் ஒழிப்பு, டிமோனிடேஷன் என்றெல்லாம் அறிவித்தால் சுபிட்சம் கிடைக்குமா? ஆண்டாள் இப்படிக் கண் "மோடி" த்தனமாக சிந்திக்காமல் ஒரு நாடு சுபிட்சம் பெற ஒரு பட்டியல் தருகிறார்.. எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளும்படி!

இதோ ஆண்டாளின் சுபிட்சப் பட்டியல்... நாட்டில் தீயவை அழிய வேண்டும், பின்பு மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டும், அதனால் நெல்கள் செழிப்பாக வளரவேண்டும் அந்த வயல்களின் ஊடே ஓடும் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாட வேண்டும் அந்த கரைகளில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களில் பொறி வண்டுகள் தேன் குடிக்க வேண்டும்.. இதெல்லாம் வெளியே.!

அடுத்து வீட்டின் உள்ளே.! வள்ளல்கள் மட்டுமே தன்னிடம் பொருள் பெற வந்திருப்பவரின் முகக்குறிப்பை வைத்தே அவரது தேவைகளை அறிந்து உதவுவார்களாம்.. அதே போல நாம் கறப்பதற்குள் தானாகவே மடியிலிருந்து பாலைப் பொழியும் பால் வளம்மிக்க வீட்டுப் பசுக்களை வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள் என்று வள்ளல்களுக்கு நிகராக கூறியிருக்கும் அவரது உவமை அழகியல் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

மாதம் மும்மாரி மழை, அதனால் செழிக்கும் வேளாண்மை, மீன் வளம் இருப்பதால் மீன்பிடி தொழில், வண்டுகள் தேன் உண்பதால் ஏற்படும் மகரந்த சேர்க்கை, விவசாயம் தொழில் என்பதால் அதற்குதவும் கால்நடைகள், அவற்றால் கிடைக்கும் பால் பொருட்கள் இவை அனைத்துமே செழிப்பாக இருந்தால் எந்நாடும் செழிக்கும். இவை எல்லாம் அடிப்படைத் தொழில்கள் என்பது தேசப் பொருளாதாரம்.

பக்தி பாசுரம் தான் என்றாலும் ஆண்டாளின் தொழில் சார்ந்த பொருளாதார அறிவு நம்மை வியக்கவைக்கிறது. இவை எல்லாம் ஒரு நாட்டில் நடந்திட பொருளாதார நிபுணர்கள் திட்ட அறிக்கை தருவார்கள்.. ஆண்டாள் என்ன அறிக்கை தருகிறார் தெரியுமா! இவையெல்லாம் நாம் பெற அதிகாலையில் எழுந்து குளித்து நோன்பிருந்து உலகளந்த பெருமாளின் பேரை பாடிக் கொண்டு இருந்தாலே போதுமாம்.. அதன்பிறகு எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் எழுந்து வாருங்கள் என்கிறார்...

 சி.எம் யார்.? சின்னம்மா யார்.? என ஆண்டாளுக்குத் தெரியாதா என்ன.!

மார்கழி 3 ஆம் நாள் பாடல்...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.

No comments:

Post a Comment