Friday 30 December 2016

காட்டுக்குள் கரன்ஸி..

ஆப் கி பார் சிங்கம் சர்க்கார் என முழங்கி காட்டில் ஆட்சியைப் பிடித்து இருந்த சிங்கராஜாவின் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியிருந்தன.. இந்த 2 ஆண்டில் ராஜா செல்லாத வெளிகாடுகளே இல்லை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஏன் அண்டார்டிகா வரை எல்லா கண்டங்களிலும் உள்ள காடுகளுக்கு போய் விட்டு வந்திருந்தது.. அண்டார்டிகாவில் ஏது காடு? என மீடியாக்கள்...



கேள்வி கேட்ட போது காடில்லாத அங்கு பெங்குவின், சீல், வால்ரஸ், பனிக்கரடிகள் எப்படி வாழ்கின்றன என பார்த்து வரவே அங்கு சென்றேன் எனக்கூறி அனைவரது வாயையும் அடைத்தது. சிங்கத்தின் நெருங்கிய நண்பரான கஜேந்திர அதானியும் (யானை) சீட்டா அம்பானியும் எல்லா பயணங்களிலும் உடன் சென்று ஆதாயம் அடைந்தது காட்டில் மற்ற மிருகங்களுக்கு அறவே பிடிக்கவில்லை.

மேலும் "ஸ்வச் கானகா" திட்டத்தில் காட்டை சுத்தமாக்குவேன் என்று கூறியது.. மேக் இன் ஃபாரஸ்ட் என முழங்கியது எல்லாம் அதிருப்தியாளர்களை திருப்தி படுத்தவில்லை.! இந்நிலையில் பக்கத்து காடான பாகிஸ்ஃபாரஸ்ட்டில் இருந்து வரும் ஊடுருவலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் முறியடிக்க அதில் கொஞ்சம் பாராட்டுகள் கிடைக்க இனி அதிரடி தான் என்னும் முடிவுக்கு வந்தது சிங்கம்.!

தற்செயலாக நாட்டில் வரும் செய்தித்தாள்களை படிக்க நாட்டில் பழைய கரன்சிகள் செல்லாது என்றும் கேஷ்லெஸ் எகானாமி வரப்போகிறது என்றும் தெரிந்தது.. சட்டென சிங்கத்திற்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது .. மனிதர்களுக்கு கேஷ்லெஸ் என்னும் போது மிருகங்களுக்கு ஏன் கரன்சி வரக்கூடாது.. இதைச் சொன்னதும் கஜேந்திராவும், சீட்டாவும் ஆஹா பிரமாதம் ஜி என்று ஜிங்ஜாக்கின.

அடுத்த நாள் கானகத்தின் தேசிய நாளிதழான காட்டு முரசு பத்திரிக்கையின் தலைப்பு செய்தி.."காட்டுக்குள் கரன்சி வருகிறது" வரும் ஜனவரி 31 க்குள் எல்லா மிருகங்களும் இனி காட்டில் கரன்சி வைத்து தான் எல்லா காரியங்களும் செய்ய வேண்டும் இதற்காக கானகமெங்கும் கேஷ் வெண்டிங் மெஷின்கள் (ஏடிஎம் போல) அமைக்கப்படும் என அரசர் சிங்கம் அதிகார பூர்வ அறிவிப்பு.. இதை படித்ததும் காடெங்கும் மிருகங்கள் சல சலத்தன.

காட்டுக்குள் கரன்சி புழக்கத்தில் வரும் என சிங்கராஜா அறிவித்து விட்டது.. இதுவரை கரன்சியே வைத்து இருக்காத மிருகங்களுக்கு எந்த வகையில் கரன்சி அளிப்பது.. ஒரு மிருகத்துக்கு எவ்வளவு கரன்சி கொடுப்பது..  அதை வைத்து அவை என்னென்ன செய்யலாம் இதற்கு ஏதேனும் விதிகள்.. சட்டங்கள் உண்டா.? இது போன்ற டிரில்லியன் டாலர் கேள்விகள் எல்லா காட்டு மிருகங்களுக்குள் எழுந்தன.!

காட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களான கஜேந்திர அதானி, சீட்டா அம்பானி, நரி மல்லையா போன்றவர்களும் காட்டின் பொருளாதார மேதைகளும், நிதி அமைச்சர் புலி ஜேட்லி தலைமையில் ஓன்று கூடினர்.. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விதிகள் இதோ..



💵 காட்டுக் கரன்சியின் பெயர் ஜங்கிள் நோட் 💵

💵 ஒரு ஜங்கிள் நோட் இந்திய ரூபாய்க்கு 50 ரூபாய் மதிப்பு 💵

💵 ஒவ்வொரு விலங்கும் எவ்வளவு தாவர / மாமிச உணவுகள் ஒரு வேளைக்கு சாப்பிடுமோ அதன் எடைக்கு தகுந்தபடி 1கிலோ தாவர உணவுக்கு 5 ஜங்கிள் நோட் 1கிலோ மாமிச உணவுக்கு 10 ஜங்கிள் நோட் என விலை நிர்ணயித்து 3 வேளைக்கு எவ்வளவு வருகிறது என கணக்கிட்டு அந்தந்த மிருகங்களுக்கு ஏற்ப 1 மாதத்திற்கு தேவைப் படும் உணவுக்கான கரன்சி இலவசமாக  முதலில் வழங்கப்படும்.💵

💵 மிருகங்கள் மேய்ச்சலுக்கு போகும் இடங்களிலும் வேட்டையாடும் பகுதிகளிலும் நீர் அருந்தும் கரைகளிலும் டோல்கேட் அமைக்கப்படும்  அங்கு நுழையும் மிருகங்கள் உரிய கட்டணம் செலுத்திவிட்டுதான் நீர் அருந்தவோ,வேட்டைக்கோ மேய்ச்சலுக்கோ போக முடியும் 💵

💵 மாத பாஸ் செலுத்தியும் உணவு அருந்தலாம் ஒரே நாளில் மல்டி என்ட்ரி பாஸ் வசதியும் உண்டு 💵

💵 செலுத்தும் தொகைக்கு 20% சேவை வரி உண்டு.. இந்த வரி வசூலித்து அந்த வரிப்பணத்தில் கானகமெங்கும் புல் விளைச்சல் புரதம் மிகுந்த மாமிசத்திற்கான விலங்குகள் வளர்த்தல் ஆகிய பணிகளுக்கு அரசு செலவிடும் 💵

💵 மாமிசம் சாப்பிடும் விலங்குகள் புல் மரம் வளர்க்கும் பணியிலும் தாவரம் சாப்பிடும் விலங்குகள் மாமிசத்திற்கான விலங்குகள் வளர்க்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படும்.. இவை இரண்டும் அரசுப் பணிகளாகும் அதற்கேற்ற ஊதியமும் உண்டு 💵

💵 காடுகள் முழுவதும் டோல்கேட் மற்றும் கேஷ் வெண்டிங் மிஷின்கள் வைக்கும் காண்டிராக்ட் கஜேந்திர அதானிக்கும் புல் வளர்ப்பு மாமிச விலங்குகள் வளர்ப்பு காண்டிராக்ட் சீட்டா அம்பானிக்கும்.. நீர் சப்ளை காண்டிராக்ட்  நரி மல்லையாவுக்கும் வழங்கப்படும் 💵

💵 ஒழுங்காக வரி கட்டும் மிருகங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மற்றும் ஆஃபர் கூப்பன்கள் வழங்கப்படும். 💵

💵 கரன்சிகளை அச்சடிக்கும் உரிமை  ரிசர்வ் பேங்க் ஆப் பாரஸ்ட்டுக்கு வழங்கப்படும் 💵

💵 அந்நியக் காடுகளிலிருந்து வரும் கரன்சி முதலீட்டுக்கும் சலுகைகள் உண்டு 💵

💵 வங்கிகளில் அதானி, அம்பானி, மல்லையாக்களுக்கு மிக மிக மிக தாராளமாகவும் சாதாரண விலங்குகளுக்கு கடும் கெடுபிடியுடனும் லோன்கள் வழங்கப்படும் 💵

💵 மிருகங்கள் அனைத்திற்கும் "காடார்" கார்டு வழங்கப்படும்.. இதற்கான டெண்டரும் அதானி குழுமத்திற்கே 💵

💵 விலங்குகளின் கால் நகங்கள் தோலில் உள்ள புள்ளிகள் வரிகள் பயோ மெட்ரிக் முறையில் சேமிக்கும் டெண்டர் அம்பானிக்கு 💵

💵 மாதந்தோறும் கரன்சி அப்டேட்டுகளை சிங்க ராஜா ஃபாரஸ்ட் எஃப் எம் 456.8 இல் சிங்கி பாத்தில் உரையாடுவார் 💵

💵 ஜங்கிள் நோட் ரோஸ்மில்க் பிங்க் கலரில் அச்சிடப்படும் 1 ரூபாய் முதல் அதிகபட்சம்100 ரூபாய் மதிப்பு வரை ஜங்கிள் நோட் வரும் 💵

அப்போது கரன்சியில் யார் படம் போடுவது என குழப்பம் வந்தது இந்த கொரில்லாவின் படம் போடலாமே என்ற குரல் கூரையிலிருந்து ஒலித்தது.. எல்லாரும் மேலே பார்க்க ரிசர்வ் பேங்க் ஆஃப் பாரஸ்ட்டின் கவர்னர் உராங் படேல் ஒருகையால் தொங்கிக் கொண்டே சொன்னார்.. மீண்டும் மிருகங்கள் மத்தியில் சலசலப்பு.. கவர்னர் உராங் படேல் காட்டுக் கரன்சியான ஜங்கிள் நோட்டில் கொரில்லா படம் போட வேண்டும் என்றதற்கு பலத்த எதிர்ப்பு.. 



உராங் படேல் ரிசர்வ் பேங்க் ஆஃப் ஃபாரஸ்ட்டின் கவர்னர் என்பதால் அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் உறவினர் படத்தை கரன்சியில் போட வேண்டும் எனச் சொல்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என பல மிருகங்கள் கண்டனக் குரல் எழுப்பின.அதற்கு பதில் நம் ராஜா படத்தையே கரன்சியில் போடலாமே என கொழுத்த காண்டிராக்ட் கிடைத்ததற்கு கூலியாய் பிளிறியது அதானி யானை.. கவர்னர் உராங் படேல் உட்பக்கமாக கையை வளைத்து விலாவை சொறிந்து கொண்டே சொன்னது..

நண்பர்களே நான் கரன்சியில் கொரில்லா படம் போடச்சொன்னது அவர் என் உறவினர் என்பதற்காக அல்ல மிருகங்களில் இருந்து பிறந்த மனித இனத்திற்கு
முன்னோடி என்பதாலும் நம் இனத்திலிருந்து உருவாகி ஆறாம் அறிவு பெற்றவன் மனிதன் என்பதை நினைவுறுத்தும் வகையிலும் தான் அதைச் சொன்னேன்.. என்றது.. புலி ஜெட்லி இப்போது பேசியது நண்பர்களே உராங்காரின் எண்ணத்தை சொல்லி விட்டார்., நான் என்ன நினைக்கிறேன் என்றால் மனிதர்கள் பல்வேறு நாடுகளில் உபயோகிக்கும் கரன்சியில் மிருகங்கள் படம் போட்டிருக்கிறார்கள்.

நாம் ஏன் நம் கரன்சியில் ஒரு மனிதனின் படத்தை போடக்கூடாது என்றது.. ஆஹா அற்புதமான யோசனை என கர்ஜித்தது சிங்கம்.. காட்டின் ராஜா சிங்கமே பாராட்டியபின் யாராவது மறுப்பு சொல்வார்களா என்ன.! அனைத்து மிருகங்களும் ராஜாவின் தேர்வு சூப்பர் என கோஷ்டி கானத்தில் ஒப்புதல் அளித்தது.. சரி யாருடைய படம் போடலாம் என கேட்க மகாத்மா காந்தி என்றது மான். ஆங்... ஏற்கனவே நாட்டுக்குள் போட்டாச்சு போட்டாச்சு என வடிவேலு பாணியில் புலி சொல்ல மண்டேலா என்றது கரடி சேகுவாரா என்றது சிறுத்தை நேதாஜி என்றது யானை இப்படி ஆளாளுக்கு ஒருவரின் பேர் சொல்ல கடைசியில் திருவுள சீட்டு போட்டுப் பார்க்க முடிவு செய்தன.. 

அனைவரும் சொன்ன பேர்களை எழுதி சீட்டுக் குலுக்கி.. ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து சீட்டெடுக்க..சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறது அதுவும் கானகத்தில் முதன் முதலில் வரப்போகும் கரன்சியில் இடம் பெறப் போகும் அந்த உன்னத மனிதர் யார் என அனைத்து மிருகங்களும் ஆவலுடனும் பரபரப்புடனும் காத்துக்கொண்டிருக்க சிங்கம் அந்த சீட்டை வாங்கி படித்துவிட்டு மெல்ல புன்னகைத்தபடி.. மாக்களே நம் காட்டுக் கரன்சியில் இடம் பெறப் போகும் அந்த நபர் யார் தெரியுமா.? 

சொல்லுங்கள் ராசாவே என அனைத்து மிருகங்களும் கோரஸாக கேட்க அந்த பெருமைக்குரிய நபர் மோடி தான் என்றது சிங்கம்.. காட்டு விலங்குகள் அனைத்தும் அதிர்ச்சியில் மூர்ச்சையாக கடைசியாக சிங்கமும் மூர்ச்சையடைந்தது.!



நிறைந்தது.


No comments:

Post a Comment