Sunday 18 December 2016

ஆழி மழைக்கண்ணா 4

#எமை_ஆண்டாள்

வில் வீரர்கள் படை என அக்காலத்தில் எல்லா அரசர்களிடமும் ஒரு படை இருந்தது.. துப்பாக்கிகள் பீரங்கிகள் இவை கண்டுபிடிக்கப்படும் முன் போர் வீரர்கள் அஞ்சியது யானைப் படைக்கு.. மதங் கொண்ட யானை போல அவை நிலம் அதிர ஓடி வரும் காட்சியை பார்த்தாலே பீதியில் ஓடிவிடுவார்களாம்.. அலெக்ஸாண்டர் முதல் ஆங்கிலேயர்கள் வரை அனைவரையும் நடுங்கவைத்தது  நம் நாட்டு யானைப்படை.!

இதெல்லாம் வெளிநாட்டு எதிரிகளுக்கு.. உள்நாட்டில் நமது மன்னர்களுக்குள் போர் நடக்கும் போது அந்த யானைப்படையையும் நடுங்க வைக்க உருவாக்கப்பட்டது தான் வில் வீரர்கள் படை தரையில் அமர்ந்த படி முதல் வரிசை அதன் பின் முழங்காலிட்ட படி 2வது வரிசை பிறகு சராசரி உயரத்தில் நிற்பவர்கள் 3வது வரிசை நெடு நெடுவென உயரம் உள்ளோர் 4 வது வரிசை என 4 நிலைகள்.

விளையாட்டரங்க கேலரி போல முன் நிற்கும் இந்தப் படை பொழியும் அம்பு மழை ஓடி வரும் யானைகளை பதம் பார்க்கும்.. காட்டில் வேட்டையாடும் போது துள்ளி ஓடும் மானின் வேகத்தையும் மீறி அதனை சரியாகப் போய் துளைக்கிறது என்றால் அந்த அம்பின் வேகத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். ஒரு அம்பே அப்படி என்றால் சரம் சரமாக நான்கு வித நிலைகளில் சீறி வரும் அம்புகள்.!!! 

ஆம்..அவை வில்லில் இருந்து விடுபடும் ஓசை ஆலைச் சங்கொலி போல எதிரொலிக்குமாம் அந்த நாண்கள் அதிரும் ஓசை கேட்டாலே யானைகளுக்கு கிலியாகிவிடுமாம்.. இனி பாசுரத்திற்கு வருவோம் இந்த அம்பு பொழிதலை ஆண்டாள் கண்ணனின் சாரங்கத்தை வைத்து வான் மழைக்கு உவமானம் தருகிறார். ரமணனாக அக்காலத்தில் ஆண்டாள் வாசித்த வானிலை அறிக்கை தான் இந்தப் பாசுரம்.



வருண பகவானை ஆழி மழைக் கண்ணா என விளித்து.. நீ கடலுக்குள் நுழைந்து நிறைய நீரை எடுத்துக் கொண்டு பெரும் ஒலியுடன் மேலெழுந்து மேகமாக மாறி மின்னல் ஒளிர அம்பு போல் சரம் சரமாய் மாலவன் அடியவர்களுக்கு  அருள்வது போல மழையை பொழிவாயாக என்கிறார். இதில் பெருமாளின் சங்கினை இடியாகவும் அவரது சக்கரத்தின் ஒளியை மின்னலாகவும் அவரது சாரங்கம் எனும் வில் அம்பை மழையாகவும் ரசனையோடு உவமைப் படுத்துகிறார்.

கடல் நீர் ஆவியாகி மேகத்தில் சேர்ந்து மழையாகப் பொழிகிறது என்பது இன்றைய அறிவியல் மனிதர்களான நமக்கெல்லாம் தெரியும்.. ஆனால் இது அக்காலத்திலேயே ஆண்டாளுக்கும் தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பான செய்தி. அவர் பக்தி மார்க்கத்தை பரப்பிய மெய்ஞானி மட்டுமல்ல இயற்கை அறிவியல் தெரிந்த விஞ்ஞானி. நம் பக்தி இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் ஆராயப்படவேண்டும்.!



மார்கழி 4 ஆம் நாள் பாடல்..

ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.







No comments:

Post a Comment