Monday 19 December 2016

மாயனை மன்னு 5

இ#எமை_ஆண்டாள்

இன்றைய அரசியல்வாதிகள் படிக்கக் கூடாத பாசுரம் இந்த 5 ஆம் நாள் பாசுரம்.! ஏன் என்று கடைசியில் சொல்கிறேன்.. சீறும் புலியே, எங்கள் அன்னையே, அடுத்த நம்பிக்கையே  எங்கள் குலவிளக்கே, அஞ்சாநெஞ்சரே, இளைய சிங்கமே, புதிய புரட்சியே, என்று அரசியல் தலைவர்களுக்கு அவர்களின் தொண்டர்கள் அடைமொழி கொடுத்து பிளக்ஸ், போஸ்டர், பேனர்கள் வைப்பதை பார்த்து இருப்போம்.

இதன் முன்னோடி ஆண்டாள் தான்.. அவரது மனங்கவர்ந்த தலைவன் கண்ணனுக்கு அவர் தரும் அடை மொழிகளைப் பாருங்கள்.. மாயனே, வடமதுரை மைந்தனே, யமுனைத் துறைவனே, ஆயர்குல அணி விளக்கே, என்றெல்லாம் விளித்து விட்டு முத்தாய்ப்பாக கூறுகிறார்.. தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனே என்று அதாவது கண்ணனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்.! என்ன ஒரு அபாரமான கற்பனை பாருங்கள்.



தற்போதைய தமிழகத்தில் ஆண்டாள் அரசியல்வாதியாக  இருந்து இருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைக்காக அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். அதனால் தான் ஆரம்பத்தில் சொன்னேன் இந்தப் பாசுரம் அரசியல்வாதிகள் கண்ணில் பட்டு விட்டால் தங்கள் தலைவனை/தலைவியை இதே போல தாயைக் குடல் விளக்கம் செய்த குலக்கொழுந்தே என அழைக்கும் அபாயம் இருக்கிறதல்லவா.

எவரும்  தூய மனதோடு மலர் தூவி கண்ணன் பேரைச் சொல்லி பூஜிப்பதே போதும் அப்படிச் செய்தாலே நாம் செய்த செய்ய நினைக்கிற கேடுகள் எல்லாம் தீயினால் தூசாகும் என்கிறார். இந்தத் தீயினால் தூசாகும் என்னும் தொனியில் தன் தலைவனால் நம் பாவங்கள் பஸ்பமாகி பொசுங்கும் என பிறருக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.. அவருக்கு அதுவே போதும் ஏனெனில்.. 

ஆண்டாள் எந்தப் பதவியையும் நலனையும் எதிர்பாராத திருமாலின் அப்பாவித் தொண்டர்.. அவருக்கு மாலவனின் மலரடிகளே போதும்.


மார்கழி 5 ஆம் நாள் பாடல் :

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment