Tuesday 20 December 2016

புள்ளும் சிலம்பின 6

#எமை_ஆண்டாள்

பெருமாளுக்கு சங்கு ஓர் ஆயுதம் ஓர் அடையாளம். நமது நாஸ்டால்ஜியா நினைவுகளில் இளம் பிராயத்தில் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6மணி சங்கு என குறிப்பிட்ட நேரங்களில் சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்.. இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு.. சங்கொலி என்பது எந்த நல்லவை தொடங்கும் போதும் கெட்டவை முடியும் போதும் ஒலிக்கும் சப்தம்.! 

பிறப்பு, இறப்பு, ஆலயம், போர் என வாழ்வில் சங்கொலிக்காத இடமே இல்லை.. கண்ணனால் அது பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை இங்கு நினைவு கூர்வோம்.. அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலிலிருந்து பேரொலியாய் ஒலிக்கிறது.. அது அந்நாளின் நல்ல தொடக்கமாக அமைய ஒலிக்கிறதே அந்த சப்தம் உங்கள் காதுகளில் விழவில்லையா?எனக் கேட்டு ஆரம்பிக்கிறார் ஆண்டாள்..



அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார்.இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம்.. இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.ஒரு விஷயத்தில் இன்றைய தமிழக அமைச்சர்களுக்கு ஆண்டாள் முன்னோடி... அவர்களுக்கு சின்னம்மா புகழ்.. 

ஆண்டாளுக்கு ஶ்ரீகிருஷ்ணன் புகழ்.. அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது.. பறவைகள் சிலம்ப சங்கதிர ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா.. உங்களுக்கு தெரியுமா..? நம் பெருமான் பூதகியிடம் பால் குடித்து கொன்றது, சகடனை காலால் நிறுத்திக்கொன்றது, பாம்பின் மேல் உறங்கியது என.. அவர் காலத்து மாண்பு மிகு இதய தெய்வம் தங்கத்தாரகை போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்...

மனதில் நாரணனை நினைத்து முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம் அதை கேட்பதற்காக வாவது எழுந்து வாருங்கள் என்கிறார். பொதுவாக அதிகாலையில் அரி என உச்சரிப்பது நலம் விளைவிக்கும் என்பார்கள். ஆனால் அரி என்னும் சப்தம் நம் காதுகளில் விழுந்தாலே போதும் என்கிறார் 
கண்ணனின் மீது காதலில் விழுந்த ஆண்டாள்.!



மார்கழி 6ம் நாள் பாடல்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

No comments:

Post a Comment