Saturday 5 April 2014

கனவில் கடவுள்கள்..!

யார் கனவுல யாரு...!

மதுரை ஆதீனம் கனவில் சிவபெருமான் வந்தது (??!!) போல மற்ற அரசியல் தலைவர்கள் கனவில் படையெடுக்கிறார்கள் பலர் (சும்மா கற்பனையா தான்)


கலைஞர் : இப்போதெல்லாம் பல பிரச்சினைகளால் தூக்கமில்லாமல் தவித்து கொண்டிருக்கும் வேளையில் நேற்று என்னையும் அறியாமல் உறங்கிவிட்டேன்.. அப்போது என் கனவில் ஒரு அம்மையார் வந்தார்.. யார் என்று கேட்டேன் பராசக்தி என்றார்.. 

நான் வசனம் எழுதிய முதல் படத்தின் பெயர் உள்ளவர் என்ற அளவிலே சற்று மகிழ்வுற்று... அம்பாளா பேசுவது என்றேன்... பதிலுக்கு அவர் அம்பாள் எப்போதடா பேசினாள் என்று என் வசனத்தையே பேசாமல் ஆம் என்றார்.. நாத்திகன் என் கனவில் எதற்கு வந்தீர்? என்றேன்... 

அப்போதாவது நான் இருக்கிறேன் என்று சொல்வீரே என பதிலுரைத்தார்..! பெரியார் வழி வந்த நான் சட்டென அதற்கு நீங்கள் நிஜத்தில் அல்லவா வரவேண்டும்..! என்று அவரை மடக்கினேன்... அதற்கு மறுமொழி சொல்ல முடியாமல் அவர் தடுமாறினார்...!

எத்தனையோ சிக்கலான வேளைகளில் உங்கள் கிடுக்கிப்பிடி கேள்விகளால் எதிர் கட்சியினரை மடக்குவது போல எம்மை மடக்கிவிட்டீர் என்றார்..! அந்த புகழுரையில் மயங்கிடாது வந்த காரணமென்ன என்றேன்..உனக்கு என்ன வரம் வேண்டுமென்றார்..! 

கடவுள் மறுப்பு கொள்கையுடைய நம்மை இவர் எள்ளல் செய்கிறாரோ என ஐயமுற்று.. என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்று கேட்டேன்..! அவரும் என்னால் முடியாததில்லை உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் மிகுந்த அகம்பாவத்துடன்.! அவர் கொட்டமடக்க..

நானும் சற்றும் தளராது கேட்டேன், அப்படியா  நீங்கள் நம் அழகிரியை சமாதானப் படுத்துங்கள் என்றேன்..! சட்டென்று மறைந்துவிட்டார் அந்த பராசக்தி..! கழகக் கண்மணிகளே உங்களுக்கு இதிலிருந்தே உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியவில்லையா கடவுள் இல்லையென்று..!


சோனியா : (கனவில் வந்தவர்) அன்னையே இப்படி ஆகிவிட்டதே நீங்கள் அன்று பிறந்திருக்கக்கூடாதா? 

ஹு ஆர் யூ மேன் ? 

நான் தாங்க ராவணன்...  

வேர் ஆர் யூ ப்ரம்?

தாயே நான் இலங்கையிலிருந்து வருகிறேன்..! 

ஓ ராஜபக்ஷே அனுப்பிச்சாரா? 

ஐயோ இல்லிங்க மேடம் அவருக்கு முன்னாடி பல ஆயிரம் வருஷத்துக்கு முன் நான் அங்க ஆட்சிசெய்தவன் இராமாயணம் படிச்சு இருந்தா தெரிஞ்சு இருக்கும்...

ஓஓ... மிஸ்டர் ராவணன் யெஸ் நான் கேள்விபட்டு இருக்கேன்..!

நீங்க மட்டும் என் காலத்துல இருந்து ஆதரவு தந்து இருந்தா அந்த ராமரை நான் ஜெயிச்சு இருப்பேன்..! ஆனா ஒண்ணு இந்த ராமரை ஆதரிக்கற ஆளுங்க அன்னைக்கு எனக்கு எதிரி..! இன்னைக்கு உங்களுக்கு எதிரி..! 

யெஸ் மிஸ்டர் ராவணன் எக்சாட்லி..! அனேகமா எங்களுக்கு பட்டாபிஷேகமா? பட்டை நாமமான்னு இன்னும் ஒரு மாசத்துல தெரிஞ்சுடும்...!

அன்னையே ஏன் விரக்தியாக பேசுகிறீர்கள் கவலைப்படாதிர்கள் உங்களுக்கு ஜெயம் உண்டு..! 

இப்படி யாராவது பேசினால் தான் கொஞ்சம் ஆறுதலாவது கிடைக்கிறது மிஸ்டர் ராவணன்..! 

நன்றி தாயே எனக்கு நீங்கள் ஏதாவது உதவ முடியுமா?

சாரி மிஸ்டர் ராவணன்..! நம்ம ரொம்ப லேட்டா மீட் பண்ணிட்டோம்.. சரி வந்தது வந்துட்டிங்க உங்களுக்கு பத்து தலை இருக்கும்ன்னு படிச்சிருக்கேன்.! ஆக உங்களுக்கு ஒரு பத்து ஓட்டு கன்பார்ம்.! ரேபரலி தொகுதிக்கு வந்து எனக்கு ஓட்டு போடுறிங்களா.!

(அட ஏன் இவர் 10 தலையும் தெறிக்க ஓடுறாரு...!)

ராகுல் : நேற்று ஒரு குட்டிக்கனவு தமிழகத்தில் நடப்பது போல்..!அதில் கடவுள் யாரும் வரவில்லை... எங்களுக்கு கடவுளாய் தெரியும் தமிழக மக்கள் நிறைய வந்தார்கள்.. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் ஏழ்மையை ஒழிக்காமல் இருக்கும் இயக்கம் எமது காங்கிரஸ் பேரியக்கம்..! 

அந்த இயக்கத்தின் பல ஆணிகளில் ச்சே... ஆணிவேர்களில் ஒருவரான சிதம்பரம்ஜியின் தொகுதிக்குள் நிற்கிறேன்..! சுற்றிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூட்டம் 
(இது கனவு என்பதால் ஏற்றுக்கொள்ளவும்) ஏராளமான மூதாட்டிகள் முகத்தில் மகிழ்ச்சியோடு "கை" அசைத்தார்கள்...! 

நானும் கை அசைத்துக் கொண்டே..கார்த்தி சிதம்பரம்ஜியிடம் யார் இவர்கள் என்றேன்..! இவர்கள் எங்கள் ஊர் ஆச்சிமார்கள் என்றார்.. வழக்கம் போல் பாதுகாப்பு வளையம் தாண்டி அவர்களுடன் கை குலுக்க மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தேன்!

அவர்கள் அனைவரும் சிதறி ஓடிவிட்டனர்.!கனவும் கலைந்தது.!ஒரு உண்மையும் உறைத்தது..! ஒரு ஆச்சியை கூட பிடிக்க முடியாத நம்மால் எப்படி.! ச்சே...அத எப்படிங்க என் வாயால சொல்லுவேன்..!

அத்வானி: நமஸ்தே லால் கிஷன் ஜி..! 

ஹே ராம்... நீங்களா.!!! 

நான் ராமர் தான் அதில் ஏதும் சந்தேகமா லால் ஜி..! 

ஹே ராம் இது என்ன சோதனை ஹே ராம்.. !! 

என்ன லால் ஜி பஞ்சதந்திரம் படத்தில் வரும் தேவயானியை போல அடிக்கடி ஹே ராம் என்கிறீர்கள்? 

பஞ்சதந்திரம் இல்லை ராம பகவானே"பஞ்ச் தந்திரம்"திட்டமிட்டு என்னை குத்திவிட்டார்கள்  என்னை ஓரமாக ஒதுக்கி விட்டார்களே இது என்ன நியாயம்..? 

கவலைப்படாதிர் லால் ஜி எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..! 

அட இது கிருஷ்ணர் சொல்ல வேண்டியதாயிற்றே ராமா! 

ராமரும் நானே..கிருஷ்ணரும் நானே.. ஏன் இதை நான் சொல்வதில் என்ன தப்பு?

ராமா நீயே இப்படி சொன்னால் பிறகு அத்வானியாய் இருந்தால் என்ன மோடியாய் இருந்தால் என்ன என என் கட்சிக்குள்ளேயே நினைக்க மாட்டார்களா..! 

நினைக்கட்டுமே... எனக்கே வனவாசம் கிடைத்ததே மறந்து விட்டிரா..! நான் உம்மை ஆறுதல் படுத்தவே வந்தேன்..! 

ராம பிரானே இந்த மரத்தை வளர்த்தவன் நான் கடைசியில் அதன் பலன் எனக்கில்லையே..! 

சரி புலம்ப வேண்டாம்.. உங்களுக்கு என்ன வரம் வேண்டும் லால்ஜி?

(சற்று யோசித்து பிறகு முகம் பிரகாசமாகி) ராமபிரானே தங்கள் காதை கொடுங்கள்..! ஏதாவது ஒரு தொகுதியில் மோடி தோற்கவேண்டும் அது போதும் எனக்கு..! 

ஹே..லால் ஜி ( ராமர் மறைகிறார்)

கேப்டன் : மக்கழே நேத்து என் கனவுல யாரு வந்தான்னு கேட்டா தெகய்ச்சு போய்டுவிங்க..! நம்ம பாண்டி முனி சாமி நேத்து என் கனவுல வந்தாரு.. ஏலே கருப்பு எம்ஜியாரே நீ கலக்குறய்யான்னாரு...நான் ஒண்ணுஞ்சொல்லலை.. 

என்னய மாதிரியே நீயும் நாக்க துருத்தி கண்ணு செவக்க பாத்து எப்பவும் ஆவேசமா பேசிகிட்டு இருக்கறத பாத்தா  அப்படியே என்னய பாக்குற மாதிரியே இருக்குன்னாரு..! அதுக்கும் நான் ஒண்ணுஞ்சொல்லலை..! 

தப்பு நடந்தா பட்டுன்னு அடிச்சுடணும்.. கோவம் வந்தா அடக்க கூடாதுன்னு அப்படியே நம்மளை பாலோ பண்ற நீ அப்படின்னார்.. எல்லாத்தையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசிடுற அப்படின்னாரு..! அது என் குணஞ்சாமின்னேன்..! ரொம்ப சந்தோசப்பட்டாப்டி...!

கொஞ்சம் கோவத்தை கொறச்சா அடுத்த பிரதமர் யாருன்னு கை காட்டுற தகுதி உனக்கு வந்துடும்ன்னாரு..! 14 தொகுதியும் ஜெயிக்க ஆசீர்வாதம் கொடுங்க சாமின்னேன்...சரி செஞ்சா என்ன தருவேன்னாரு.. என்ன வேணும்ன்னு கேட்டேன்.. அதுக்கு அவரு..

எனக்கு படையல் வேணும்ன்னாரு.!என்னா படையல்ன்னேன்?கெடா வெட்டி பொங்க வச்சி ஒரு பீப்பா சாராயம் வேணும்ன்னாரு.!ஓ.!இது தான் படையலா? எனக்கும் அது தான் பிடிக்குமுனு நினைச்சி சிரிச்சிகிட்டே சரின்னுட்டேன்.! ஆமா இப்ப நீங்க ஏன் சிரிக்கிறிங்க..!

ஜெயலலிதா: என் கனவில் நேற்று..! நீங்கள் வருவீர்களா.. வருவீர்களா.. என்ற குரல் கேட்டு யார் எனப்பார்த்தேன்..! ஹெலிகாப்டரே இன்றி வானத்திலிருந்து ஒரு பெண் இறங்கினார்..! அவர் மேரி மாதா போலவும் இருந்தார் ஜெகமாளும் ஆதிசக்தியாகவும் தெரிந்தார்..! 

அன்பில் கருமாரி அன்னை அவள் உருமாறி வந்தது போலவும் தெரிந்தது.. ஆனால் இந்த முகம்..! இந்த முகம்..! எங்கு பார்த்தோம் என நான் வியப்போடு யோசித்தேன்..! அடடா இது நம் முகம் அல்லவா..! நம் முகம் எப்படி? என கொடநாட்டில் ரூம் போடாது யோசித்தேன்..!

நமது ரத்தத்தின் ரத்தங்கள் பிளக்ஸ் பேனரிலும், போஸ்டரிலும் அவ்வப்போது நம்மை இப்படி புகழ்வதால் கனவில் வந்தவரும் என்னைப்போலவே தோன்றியது காலத்தின் கட்டாயம்..! அடடா வந்தது நானே தான்...! நானே முதல்வர்,நானே பிரதமர்,நானே கடவுள்..! 

ஒரு பெண்ணாக பிறந்து எத்தனை பதவிகள் தான் ஏற்பது என தயங்காமல் அவரை வரவேற்றேன்.! அவரும் என் காலில் விழுந்து நீங்கள் தான் அடுத்த பிரதமர் என பெண் சம்பத் போல் கூறி(வி)னார்..! இது போன்ற புகழுரைகளை கொஞ்சமும் விரும்பாத நான்...

போனால் போகட்டும் என விரும்புவது போல நடித்தேன்..! அடுத்த பிரதமர் நான் தானா என்று அவரிடம் கேட்டேன்..! மதுரை ஆதீனத்தின் கனவில் சிவனே அதை கன்பார்ம் செய்துவிட்டாரே என்பதை எனக்கு இன்பார்ம் செய்தார்..! நீங்கள் ஓடி ஓடி உழைத்தால்.. 

இந்தியாவில் மோடி ஆட்சி வராது என்பதையும் சொன்னார்..! நானும் தர்மத்தின் வாழ்வு தனை விஜய்சேதுபதி படம்..! மீண்டும் ஒரு நாள் தர்மம் கமல் ஆண்ட்ரியா நடித்த படம் என்றேன்..! மகிழ்ந்து போய் பதவியேற்பு விழாவிற்கு வருகிறேன் எனக் கூறி மறைந்தார்..!

மு.க. அழகிரி : கனவில் ஒரு குரல்...

அண்ணனே.. நான் தான் தம்பி வந்திருக்கிறேன்..! 

யாரு ஸ்டாலினா? என்ன தைரியம்..! 

அட இல்லிங்க ப்ரோ.! 

ப்ரோன்னா யாரு நம்ம நடிகர் விஜய்யா? 

அட நாந்தாங்க முழு முதற்கடவுள் முருகன்..! 

ஓ நீங்களா..! நான் கூட எல்லாகட்சிக் காரங்களும் என்னை வந்து சந்திக்கிறாங்க.. இந்த கேப்புல என் தம்பியும் வந்துட்டாரோன்னு பதறிட்டேன்..!

நம் அப்பாக்களின் திருவிளையாடல்களில் பாதிக்கப்பட்டோர் நாமிருவரும் தான் அண்ணா..!

ஆமா முருகா..! உனக்கு உங்க அண்ணன் காரணம்.. எனக்கு என் தம்பி காரணம்..! 

அண்ணா எனக்கு ஞானப்பழம் கிடைக்கவில்லை ஆனால் பழனி மலை கிடைச்சது உங்களுக்கு? 

எனக்கு எதுவும் கிடைக்கலை ஆனா... எல்லா கட்சி ஆட்களையும் சந்திச்சு எங்க கட்சியை பஞ்சாமிர்தமாக்க முடிஞ்சது..! இந்த தேர்தல்ல எனக்கு "வேலை இல்லை ஆனா வினை உண்டு"..! மொத்தத்துல தென்மாவட்டத்து ரிசல்ட்டு மொட்டை தான்..! 

அண்ணா திருமங்கலம் பார்முலா கொண்டுவந்த நீ இப்படிக் கூறலாமா? தென் மாவட்ட அமைப்பு செயலரான நீ இப்படி பேசலாமா? தந்தையை பகைக்கலாமா? தம்பியை எதிர்க்கலாமா? இது நீதியா?

இருப்பா முருகா..! இவ்வளவு சொல்ற நீயும் உங்கப்பா கிட்ட கோவிச்ச ஆளு தானே..!

அண்ணா நான் அப்பனிடம் கோபித்தேன்.! ஆனால் அவருக்கு பாடம் சொன்ன சுப்பன் அல்லவா நான்.! 

ஹஹ்ஹா நானும் உன்னைப் போல் என் அப்பாவுக்கு பாடம் கற்பிக்கிறேன் இன்று.! பொறுத்து இருந்து பாரு இந்த சூரனின் சம்ஹாரத்தை.! (முருகன் மறைகிறார்)

மன்மோகன்: (கனவில் வந்தவர் சண்டிகேஸ்வரர்... கைத்தட்டி கும்பிடும் சாமி)  சண்டிகேஸ்வரர் கைத்தட்டுகிறார்.. பதிலில்லை.. மீண்டும் தட்டுகிறார் அப்போதும் பதிலில்லை (அவர் தனக்குள்) அட நாம் தான் எப்போதும் சிவனை நினைத்து பிரமையில் இருப்போம்..அனைவரும் நம்மை கைத்தட்டி கும்பிடுவார்கள்..!

ஆனால் இவர் நம்மைக் காட்டிலும் பெரிய ஆள் போலே...என்ன நடந்தாலும் சிவனே என்று இருக்கிறாரே..! மீண்டும் கைத்தட்ட மன்மோகன் திரும்புகிறார்..! ஐயா வணக்கம் நான் தான் சண்டிகேஸ்வரர்.. (மன்மோகன் லேசாக புன்னகைக்கிறார்) இதற்கும் சிரிப்பு தானா..! தெய்வீக சிரிப்பய்யா உமக்கு..! மன்மோகன் மீண்டும் மெளனநிலைக்கு போக..!

சரிதான் இவரிடம் பேசுவதும் தனியாக பேசிக் கொள்வதும் ஒன்று தான் போல.. இவர் யாராக இருக்கும்? (பக்கத்தில் போனவரை அழைத்து) 

அய்யா இவர் யார்? 

இவரு தாங்க எங்க பிரதமரு10 வருஷமா ஆட்சியில இருக்காரு வாயில்லா பூச்சி..இவரை மிக்சர்ன்னு எங்க ஃபேஸ்புக்குல கூட பேசிக்குவாங்க.! 

பேசாத இவரு... பிரதமரா!! அதுஎப்படி அய்யா? 

அதாங்க உலக அதிசயத்துல எட்டாவது அதிசயம்..! இப்ப அடுத்த தேர்தல் கூட வந்திருச்சு.!

அப்படியா இவர் சின்னம் என்ன? 

கைச் சின்னம் தாங்க சாமி..!

 கைதட்டிக் கூப்பிட்டும் கேக்காத இவரின் "கையை"தட்டி விடுதலே இந்த தேர்தலில் மக்களுக்கு நலம்..! 

அதற்கும் மன்மோகன் மெளனமாக இருக்க (மறைகிறார் சண்டிகேஸ்வரர்!)


கடவுள் என் முன் வந்தார் என்னை திணற அடிக்கும் படி இரண்டு கேள்வி கேள் ஆனால் நான் ஒரு பதில் தான் அளிப்பேன் என்றார்..! நானும் அவர் சொன்னதன் படி 2 கேள்விகள் கேட்டேன்..

கேள்வி 1: தமிழகத்தின் மின் தட்டுப்பாடு எப்போது தீரும்?

(கடவுள் சற்று திகைத்து அடுத்த கேள்வி என சைகை செய்தார்)

கேள்வி 2 : இந்தியாவில் ஊழல் இல்லாத அரசாட்சி அமையுமா?

கடவுள்: மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் உடனடி தீர்வு கிடைக்கும் நீர்,அனல்,காற்று, அணு மட்டுமின்றி சூரிய ஒளியிலும் மின் உற்பத்தி தொடங்க வேண்டும்
தற்போது உள்ள தட்டுப்பாடு போதிய அளவு மின்உற்பத்தி இல்லாததே மின்ுற்பத்தியை அதிகரித்தால் மின் தட்டுப்பாடு தீர்ந்துவிடும்... (மறைந்து விட்டார்)

No comments:

Post a Comment