Saturday 5 April 2014

குதிரையும் & காவிரியும்..

கவி காளமேகத்தின் சிலேடை வெள்ள(ல்ல)ம்....

குதிரைக்கும் - காவிரிக்கும்

பாடல் : 

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகும் துன்னலரைச்

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடறியத்

தேடு புகழான் திருமலைரா யன்வரையில்

ஆடுபரி காவிரியா மே.


நாடெங்கும் அறியும் படியாகத் தேடின புகழை உடையவனாகிய திருமலைராயன் இடத்தில் குதிரையும் காவிரியும் ஒன்று... இது கடைசி இரு வரிகளின் அர்த்தம்.! இனி சிலேடை...

குதிரை : ஆடுபரி - ஆட்டக் குதிரையானது, ஓடும் - ஓடிச்செல்லும், சுழி சுத்தம் உண்டாகும் - சுத்தமான சுழிகளை உடையதாக இருக்கும், துன்னலரைச் சாடும் - எதிரிகளை மோதி அழிக்கும், பரிவாய்த் தலைசாய்க்கும் - தன் தலைவனிடம் அன்புடன் தலை சாய்த்து நிற்கும்..!

காவிரி : ஓடும் - ஓட்டத்தை உடையாதிருக்கும், சுழிச் சுத்தம் உண்டாகும் - அப்படிச் செல்கையில் நீர்ச் சுழிகளை கொண்டிருக்கும், தன்னிடம் குளிப்பவரை சுத்தமாக்கும், துன் அலரைச் சாடும் -நெருங்கிய மலர்களை அலைத்து எறியும், பரிவாய்த்த அலை சாய்க்கும் - குதிரை வாய் நுரை போல் அலைகளை மடக்கி வீசும்..

பரிவாய்த் தலை சாய்க்கும்... என்பதற்கு கரையைப் பரித்து அவ்விடத்தின் மேல் மண்ணையும் தன்னுள் சாய்க்கும் எனவும் அர்த்தம் கொள்ளலாம்.! ஆகவே இரண்டும் தம்முள் நிகரானவை..!


எனது பஞ்ச்...

குதிரையும் காவிரியும் ஆசையாய் ஒரிடத்தில் ஓடும் அது என்ன?

விடை :   ..............           "கொள்ளிடத்தில்"

No comments:

Post a Comment