Tuesday 2 June 2015

கறார் விலை...

#காசை_வச்சிட்டு_எடுத்துட்டு_போ

"துட்டை வச்சிட்டு அப்பால எட்த்துக்கோ இந்த நாளிக்கு நாளாநாளிக்கு அப்டின்ற பேச்சே வோணாம்" இஸ்டிரிக்ட்டா சொல்றேன் ஆமா... வயதான அந்தக் கிழவியின் ஹை டெசிபல் குரல் என் காதில் வந்து விழுந்தது. கடந்த மாதம் கோடை விடுமுறைக்கு வீட்டில் உறவினர்கள் கூட்டம் வழக்கம் போல மீன் மார்க்கெட்டுக்குப் போகும் இலாகா எனக்கு தரப்பட்டது.

மீன் மார்க்கெட்டில் கேட்டது தான் அந்தக்கிழவியின் குரல்.. எதிரில் நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி சங்கடத்துடன் கெஞ்சிக் கொண்டிருந்தார் "அப்புறமா தந்துடுறேன் ஆயா இனி லேட்டாவாது" சற்றுநேரம் கவனித்ததில் அந்தப்பெண்மணி கையில் 65 ரூபாய் தான் வைத்திருந்தார்  ஆனால் ஒரு கூறு மீன் 80 ரூபாய் மீதி 15 ரூபாய் கடனாக கேட்கிறார் எனப் புரிந்தது.

அந்தப் பெண்மணி அந்தக் கிழவிக்கு பழைய பாக்கி ரூ.300 தர வேண்டுமாம் கிழவி எந்தக் குறிப்புகளும் இல்லாது தேதி வாரியாக அந்தபெண் வாங்கிய கணக்கை சொல்லி குமாரசாமிகளை வெட்கப்பட வைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் வா சாரு என்றவள் "இந்தாமே பெர்ய கஸ்டமரு (என் உருவத்தைபார்த்தல்ல) வந்திருக்காரு போ அப்பால...

என்றுவிட்டு.. இன்னா சாரு வஞ்சிரம் போடவா தேங்கா பத்தை கணக்கா இர்க்கும் இன்னிக்கு கார்த்தால புட்ச்சது தான்.. என அவள் மார்க்கெட்டிங் திறமையை காட்ட ஆரம்பித்தாள்.. எங்கள் வீட்டில் கேட்ட சில மீன்கள் இல்லை.என்ன இருக்கு என்ன இல்லை என்பதை நான் ரன்னிங் கமெண்ட்ரி தந்து கொண்டிருக்க அய்யே இன்னாபா நீ..

இத்த அப்டியே போட்டோ எட்த்து ஏதோ வாச்சுஅப்பாமே அதுல ஊட்டுக்கு அனுப்புவியா எனக்கேட்டு தான் ஒரு அப்டேட்டடு வெர்ஷன் கிழவி என்பதை எனக்கு நிரூபித்தாள்.. ஒருவழியாக முடிந்த எனது பர்ச்சேஸ்2300 ரூபாய்.. நான் கொண்டுபோனது 2000 ரூபாய்..300 ரூபாய் இல்லை ஏற்கனவே கடன் வாங்கிய அந்த பெண்மணியிடம் கிழவி சொன்னது நினைவுக்கு வந்தது..

அடடே இவள் கறார் கிழவியாயிற்றே கடந்த இரண்டு ஆண்டுகளாக இவள் பரிச்சயம் என்றாலும் இதுவரை கடன் சொன்னதில்லை.. ஒரு 300 ரூபாய் மீனை திருப்பி கொடுத்துவிடலாம் என முடிவு செய்து அவளிடம் என் நிலையை சொன்னேன்.. திடுக்கிட்டவள் அய்யே இன்னா ஸார் இது உங்கள தெரியாதா.. ஒன்யும் பிரச்னை இல்ல அடுத்து வரும்போது தா சார் என்றாள்.

இல்ல அவங்க கிட்ட நீங்க பேசினதை கேட்டு.... என்று நான் இழுக்க கிழவி சிரித்தாள் அவளும் நீயும் ஒண்ணா சார்.. நீ கவலைப்படாம ஊட்டுக்கு போ என்றாள். இப்போதும் அந்தப்பெண் சங்கடத்துடன் சற்று தள்ளி நின்று கொண்டிருக்க.. எனக்கு அப்பெண்ணின் வீட்டில் உள்ள குழந்தைகளை நினைத்துப் பார்த்தேன்.. சட்டென ஒரு எண்ணம்...

பாட்டி அந்தம்மா தரவேண்டிய 15 ரூபாயும் என் கணக்கில சேர்த்துக்க.. அவங்களுக்கு கேட்ட மீனை தந்துடு என்றேன்...ஒரு நிமிடம் என்னை பார்த்தவள்.. புன்னகைத்தபடி அடிக்குரலில் அட நீ போ அது அப்படித்தான் கேக்கும் நானும் இல்லேன்னுவேன்.. அப்புறம் தந்துடுவேன் 3புள்ளக்காரி.. கறாரா நட்ந்துகுற மேறி நட்ந்துகிட்ட தான் நமக்கு மதிப்பு அக்காங்..

என்றுவிட்டு.. அந்தப் பெண்ணிடம் திரும்பி இந்தா இதான் கடசி தரம்.. இனி கடன் கேட்டா அவ்ளோதான் என்றபடி கூறு மீனை அள்ள அந்தப்பெண் மலர்ந்த் முகத்துடன் அதை வாங்கிக்கொள்ள.. இப்ப பாக்கி 315 என மறுபடியும் குமாரசாமிகளை வெட்கப்பட வைத்தாள் கிழவி. அப்படியே ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல இந்த சம்பவத்திலிருந்து தாவுவோம்..

இது இதற்கும் ஒரு வருடம் முன்பு.. என் மகளை பள்ளியில் சேர்க்கப் போயிருந்தேன்.. +1 லிருந்து +2.... இடம் கிடைப்பது கடினம்.. எனக்கு தெரிந்த பெரிய சிபாரிசுகளைப் பிடித்து இடம் வாங்கிவிட்டேன்.. பீஸ் கட்டியும் முடித்துவிட்டேன்.. பள்ளிக்கு நன்கொடை கேட்டார்கள்.. எவ்வளவு எனக் கேட்டேன் உங்கள் பிரியம் என்றார்கள். நான் 25ஆயிரம் என்றேன்.

கரஸ்பாண்டடிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்றார்கள்.. சரி என்று வந்து விட்டேன்.. மறுநாள் பள்ளியிலிருந்து போன் கரஸ்பாண்டண்ட் 50 ஆயிரம் கேட்கிறார் இல்லாவிட்டால் இடம் இல்லை என்றார்கள்.. நானும் சரி நேரில் போய் பேசலாம் என சொல்லி அவரை போய் பார்த்தேன்.. நரசிம்மராவை விட சிடுசிடுப்பாக மூஞ்சியை வைத்துக் கொண்டிருந்தார்..

40ஆயிரம் ரூபாய் வரை பேசினேன் மசியவே இல்லை.. கடைசியில் கையில் இருந்த பணமெல்லாம் போட்டு 47 ஆயிரம் தந்தேன்.. சற்று அலட்சியமாக பார்த்துவிட்டு மணியடித்தார் பள்ளிக் கணக்காளர் வர அவரிடம் 47 ஆயிரத்தை தந்துவிட்டு ஒரு வார்த்தை சொன்னார் பாருங்கள்.. சார் நாளைக்கு வருவாரு மிச்சம் 3 ஆயிரம் வாங்கினதுக்கு பின்னாடி...

இவர் பொண்ணுக்கு சீட்டு தாங்க என்றவர்.. கண்ணாலேயே என்னை வெளியே போடா என்றார்.. இப்போது யோசித்துப் பார்க்கிறேன்..கடன் வைத்தவருக்கே கறார் போல நடித்து பின் மனிதாபிமானத்துடன் அவளிடம் நடந்து கொண்ட மீன்காரக் கிழவி அந்த கறார் சிடுமூஞ்சி கரஸ்பாண்டண்ட்டை விட மிக மிக உயர்ந்த மனுஷியாக தெரிந்தாள். 

இன்று கல்வி தான் கறார் வியாபாரம்..அதை விற்பவர்கள் தான் கறார் வியாபாரிகள். இப்போது அந்த கரஸ்பாண்டண்ட் தான் பொருத்தமாக இருக்கிறார் இந்தக் குரலுக்கு...

#காசை_வச்சிட்டு_எடுத்துட்டுபோ

No comments:

Post a Comment